உன்னைப் போல் ஒருவன்:கமலுக்கு பகிரங்கக் கடிதம் 3

ஆசுபத்திரில இருந்து வந்ததுல இருந்தே பலமாசமா மனசு செரியில்ல. ஈழத்துல நம்ம சனங்கள அந்த நாசமாப் போறவனுக கொத்துக் கொத்தா குண்டப் போட்டுக் கொல்றாங்கன்னு வர்ற சேதிகளக் கேட்டா சோறு கூட உள்ள எறங்க மாட்டேங்குது. யாரு கூட எதப் பத்திப் பேசிகிட்டு இருந்தாலும் நெனப்பு அங்க கொண்டு போயி உட்டுருது.

இதுக்கெடையில எவனாவது அந்தப் படம் பாத்தியா? இந்தப் படம் பாத்தியா?ன்னு கேட்டா…… கால்ல இருக்குறத கழட்டி அடிக்கலாமான்னு கோபம் கோபமா வருது.

அவ்வளவு ஏன்….. எனக்கு உங்க படம் பாக்கக்கூட மனசு வர்லேன்னா பாத்துக்கங்களேன். ஆனா இந்த மனித உரிமை மார்த்தாண்டன்தான் “இப்புடியே ஊட்டுக்குள்ள கெடந்தா எப்படி? வா உங்காளு தமிழர்களோட அருமை பெருமைகளப் பத்தி  புர்ர்ர்ர்ட்சிகரமா ஒரு படம் தயாரிச்சு அதுல நடிச்சும் இருக்காரு பாக்கலாம்”ன்னு கூட்டிகிட்டு வந்தான்.

”உன்னைப் போல் ஒருவன்”ன்னு பேரே வித்தியாசமா இருந்துச்சு. ச்சே….. என்னதான் சொன்னாலும் நம்மாளு நம்மாளுதாண்டான்னு மனசுக்கு அப்பவே பட்டுச்சு.

அதைவிடவும் போலீசுக்கே உரிய தொப்பையும் தொந்தியுமா நம்ம மோகன்லாலு வேற ’உனிக்கு என்ன வேணம்’, ’எனிக்கு இப்புவே தெரிஞ்ஞ்ஞ்சாகணும்’ ’எண்ட பணி நான் செய்யும்’ன்னு வசனம் பேசப் பேச தியேட்டர்ல விசிலும் கைதட்டலும் காதைப் பொளக்குது. இதென்னடாது நாம கோயம்புத்தூர்ல இருக்கமா? இல்ல கோழிக்கோட்டுல இருக்கமா…… ன்னு சந்தேகம் வந்து சுத்தியும் முத்தியும் பாத்தா எல்லாம் நம்ம கேரளத்து சேட்டன்மார் கூட்டம்.

ஏற்கெனவே முல்லைப் பெரியாறு அணைல தண்ணி பிரச்சனை……. அது போதாதுன்னு இந்த மோகன்லால் வேற “Not only Kerala……. திஸ் ஈஸ் மை நாடு ஆல்சோ”ன்னு வசனம் பேசறதக் கேட்டதும் திக்குன்னு ஆயிருச்சு. நம்ம தமிழ்நாட்ட இன்னும் தனியாத்தான் உட்டுவெச்சிருக்கானுகளா இல்ல மொத்தமா கேரளாவோட சேத்தீட்டானுகளான்னு ஊட்டுக்குப் போனதும் மொதல்ல மேப்ப எடுத்துப் பாக்கணும்ன்னு முடிவுபண்ணீட்டு அப்புடியே படத்துல மூழ்கீட்டேன்.

ஒரு குத்துப்பாட்டு….. ஒரு பைட்டு….ன்னு இல்லாம இந்த நாட்டை சூறையாடுற தீவிரவாதிகள நீங்க போட்டுத் தள்றதப் பாத்ததும் அப்படியே மயிர்க்காலெல்லாம் சிலிர்த்துகிச்சு. அதுலயும் ”காலேஜு டீனேஜு பெண்கள்….. எல்லோர்க்கும் என் மீது கண்கள்”ன்னு அரை டவுசரோட ஆடாம கூடை நெறையா தக்காளிப்பழம், மொழகா, கொத்தவரங்கான்னு ஊட்டுக்கு வாங்கீட்டுப் போற காமன்மேனா வர்றீங்களே அதுக்கே குடுக்கனும்ங்க ஒரு ஆஸ்கார்.

ஆனா மனித உரிமை மார்த்தாண்டன்தான் கடுப்போட படத்தப் பாத்துகிட்டு இருந்தான். படம் உட்டதும் மனசே பாரமாப் போச்சு. என்ன ”மனித உரிமை” நம்மாளு நல்ல மெசேஜ்தான சொல்லீருக்காரு……. இதுலயும் என்னாவது கொறை கண்டுபுடுச்சுருக்கியா?ன்னேன்.

“வெங்காயம்……. அழுத்தக்காரன் சந்தைக்குப் போனா புழுத்த கத்தரிக்காங்குற மாதிரி…… இந்தில இருந்து ஒரு புழுத்தத் தூக்கீட்டு வந்திருக்காரு உங்க ஆஸ்கார் ப்ரியன்….. வழக்கம்போல குண்டு வெக்கறவன் எல்லாம் பாயு……. தாடி வெச்சவன் எல்லாம் தீவிரவாதி…..ங்குற வழக்கமான பல்லவிதான் இதுலயும்”ங்குறான் எரிச்சலோட.

”ஏம்ப்பா….. ஒரு இந்துவும்தான தப்புப் பண்ணுறதா காட்டீருக்காரு நம்ம காமன்மேன்?”ன்னான் பக்கத்துல இருந்த அறிவொளி அப்பாசு.

”அப்பாசு……… இந்த ஆளவந்தான்கூட சேர்ந்து நீயும் அதே மாதிரி ஆனதுதான் மிச்சம். ஒரு தீவிரவாதத்தை இன்னொரு தீவிரவாதத்தாலதான் தீர்க்கணும்ங்குற ’ மாபெரும் தத்துவத்தை’  சொல்றதுக்கு இம்மாம் பெரிய ’மேதை’ தேவையில்ல…… அதுக்கு பொட்டிகடை முன்னாடி பேப்பர் படிக்கறவங்க போதும். உண்மையா சமுதாயத்த நேசிக்கறவன் தீவிரவாதத்துக்கான காரணம் எங்கிருந்து கெளம்புது…… அதை எப்படி முதல்ல சரி பண்ணுறதுன்னுதான் யோசிப்பான்.

கொசுவ ஒழிக்கணும்ன்னா டார்டாய்ஸ் கொளுத்துன்னு சொல்றது புத்திசாலித்தனமில்ல……. சாக்கடைய மூடச் சொல்றதுதான் சரியான தீர்வு.

இதத்தான் எங்கூர்ல தும்பை விட்டுட்டு வாலைப் புடிக்கறதுன்னு சொல்லுவாங்க புரியுதா?”ன்னு பட்டையக் கெளப்பறான்.

அப்ப தீவிரவாதம் சரிதான்னு சொல்ல வர்றியா?ன்னேன் கடுப்பு தாங்காம.

“யோவ் அரை லூசு ஆனைக்கு அர்றம்ன்னா……. குதிரைக்கு குர்றம்ன்னு சொல்லக் கூடாது. இஸ்லாமிய தீவிரவாதம் பத்தி நீட்டி முழங்குறவங்க இந்துத் தீவிரவாதம் பத்தி வாயே திறக்கறதில்லையேங்கறதுதான் நம்ம கேள்வி. கோயம்புத்தூர் குண்டு வெடிப்பப் பத்தி பேசறவங்க அதுக்கு மூணு மாசம் முன்னாடி நடந்த பதினேழு அப்பாவி இஸ்லாமியர்க படுகொலைகளப் பத்தி பேசறதில்ல…… மும்பை குண்டுவெடிப்புகளப் பத்தி பேசறவங்க அதுக்கு முன்னால பாபர் மசூதி இடிச்சப்ப நடந்த மும்பை படுகொலைகளப் பத்தி வாயே திறக்கறதில்ல.

அந்த மசூதிய இடிச்சு வருசம் பதினேழாச்சு. இன்னும் அதுக்குக் காரணமானவங்க தண்டிக்கப் படலை. பத்தாதுக்கு அந்தப் புண்ணியவானுக இன்னைக்கும் முதலமைச்சரா இருக்காங்க……  முன்னாடி மத்திய அமைச்சர்களாகவே இருந்திருக்காங்க.

மக்களைப் பலியாக்குற எந்தத் தீவிரவாதமா இருந்தாலும் கண்டிக்கணும் அது இந்துத் தீவிரவாதமா இருந்தாலும் சரி…. அது இஸ்லாமிய தீவிரவாதமா இருந்தாலும் சரி.”ன்னு பெரிய கதாகாலட்சேபமே நடத்தீட்டான் அந்த உருப்படாதவன்.

கண்டிக்கறது இருக்கட்டும்……. கோர்ட்டு கேசுன்னு அலைஞ்சு தண்டிக்கிறது எப்போ?ங்குறதுதான் நம்ம காமன்மேன் கேக்குற கேள்வி….ன்னேன் பொட்டுல அடிச்சாப்புல.

”இப்படிப்பட்ட அபத்தமான கேள்விய எந்தக் காமன்மேனும் கேட்கமாட்டான். காமன்சென்சே இல்லாதவன்தான் கேட்பான். இப்படித்தான் முதலமைச்சர் மோடியக் கொல்லவந்தவங்கன்னு சொல்லி ’இர்ஷத்’ அப்படீங்குற காலேஜ் படிக்குற 19 வயசு புள்ளைய 2004லுல அநியாயமா சுட்டுக் கொன்னாங்க குஜராத்துல. ஆனா அது மோடிகிட்ட நல்ல பேரும்…… பிரமோசனும் வாங்குறதுக்காக குஜராத் போலீஸ்காரங்க நடத்துன பச்சைப் படுகொலைன்னு அஞ்சு வருசத்துக்குப் பிறகு உண்மையக் கண்டறிஞ்சு 2009ல அறிக்கை குடுத்திருக்காரு மாஜிஸ்ட்ரேட் ”தமங்”. அவரும் ஒரு நேர்மையான இந்துதான். இப்புடித்தான்….. எப்பவுமே ஒங்க ஒலகநாயகன் உப்பு விக்கப் போனா மழையடிக்குது……. உமி விக்கப் போனா காத்தடிக்குது என்ன செய்ய?.”ன்னு நக்கலாச் சிரிக்கிறான் மார்த்தாண்டன்.

இவனுக பேசறதக் கேட்டா எனக்கு என்ன பண்ணுறதுன்னே தெரியல குருவே. நீங்க எம்மாம் பெரிய படிப்பாளி….. நீங்க போயி இப்புடி ஒரு ஊத்தைக் கதைய வடநாட்டுல இருந்து தூக்கிக்கிட்டு வரலாமா? ஏதோ கேக்கணும்ன்னு தோணுச்சு கேட்டுட்டேன். மனசுல எதுவும் வெச்சுக்காதீங்க துர்நாதரே….. அடச்சே…… வாயு கொளறுது……… சாரி……குருநாதரே.

நல்லவேளை நம்ம கலாரசனையத்த கந்தன்தான் நான் முழிச்சுகிட்டு நின்ன நேரமாப் பாத்து உள்ளாற புகுந்து பேச்சோட ரூட்டையே மாத்துனான்.

”அதுசரி நம்மாளோட கனவுத்திட்டமான “மருதநாயகம்” எப்ப வெளிவரும்?”ன்னான் கந்தன்.

எது அந்த வரலாறு படைக்கப் போற வரலாற்றுப் படமா? வரும்….. ஆனா வராதுகிற கதைதான் அது….ன்னேன்.

”என்னது……..? வரலாற்று சம்பவத்தைப் பத்துன படமா? அதுவும் உங்காளு எடுக்குறாரா? கிழிஞ்சது கிருஷ்ணகிரி.” ன்னான் ம.உ.மார்த்தாண்டன்.

ஏன் எடுக்கக் கூடாதா?ன்னேன் கோபமா.

”உ.போ.ஒருவன்லயே தெரிஞ்சுதே உங்காளுக்கு இருக்குற வரலாற்று ”ஞானம்”………. அதுல இது வேறயா? 2002ல குஜராத் பெஸ்ட் பேக்கரில மூணாவது பொஞ்சாதியக் கொன்னதுக்கு பழிவாங்க 1998ல கோவைல குண்டுவெச்சேன்….ன்னு சொல்ற வரலாற்றுச் சிரிப்பு மிக்க தீவிரவாதிய உங்காளு படத்துலதான் பார்க்க முடியும். அதைவிட ரெண்டாவது பீவி…… மூணாவது பீவீன்னு உங்காளு படத்துல பேசறதக் கேட்டாத்தான் சிரிப்பா இருக்கு”ன்னு எகத்தாளமாப் பேசறான் அந்த வெத்து வேட்டு. எனக்கே வெக்கமாப் போச்சு அவன் பேசுனதக் கேட்டு. நீங்குளும் இனியாவது கொஞ்சம் வெவரமாப் பேசணும் குருவே.

ஏம்ப்பா கந்தா!…… நான் உண்மையிலேயே தெரியாமத்தான் கேக்குறேன். அவுரு  வெறும் நடிகர் மட்டும்தான். டைரக்டர் என்ன சொல்றாரோ அத அப்படியே செய்யறதுதான் அவுரோட வேலை. டைரக்டர் பண்ணுன தப்புக்கு அந்தக் கதாபாத்துரத்துல நடிச்சவரை குத்தம் சொல்றது சரியான்னு நீயே யோசிச்சுப் பாரு….ன்னேன் உருக்கமா.

Kamal Hassan Unnai Pol Oruvan

“நீ சொல்றதும் ஓரளவு உண்மைதான்.

ஆனா……உங்காளு நடிச்ச படங்க நல்லா பேசப்பட்டுச்சுன்னா……. அதை இயக்குன டைரக்டர்க சுனாமீல சிக்குன சூட்கேஸ் மாதிரி காணாமப் போயிர்றதும்……..

படம் சந்தி சிரிச்சுதுன்னா…… அதுக்குக் காரணம் டைரக்சன்தான்னு நழுவுறதும்தானே இதுவரைக்கும் நடந்துகிட்டு இருக்கு.

நானும் தெரியாமத்தான் கேக்கறேன்…. ராஜபார்வையைப் பத்தி பேசும்போது அதோட டைரக்டர் சிங்கீதம் சீனிவாச ராவ் பத்தி யாராவது எங்கியாவது பேசி கேட்டியா?

”மகாநதி”ய மனசத் தொட வெச்சதுல அதோட இயக்குனர் சந்தானபாரதிக்கும் பங்குண்டுன்னு யாராவது முணுமுணுத்ததையாவது கேட்டியா?

”அன்பே சிவம்” படம் பெரிய அளவில் பேசப்பட்டபோது அதனோட உருவாக்கத்துல சுந்தர்.சி யோட உழைப்பும் ஒளிஞ்சிருக்குன்னு யாராவது சொல்லிக் கேட்டியா?

அவ்வளவு எதுக்கு இந்த உ.போ.ஒருவனோட டைரடக்கரு டெக்கால்ட்டியோ…… டக்கால்ட்டியோ அவுரோட போட்டோவையாவது எங்கியாவது பாத்தியா நீ?

படம் ஓடுச்சுன்னா அது கமல்னாலதான்னும்…… படம் ஊத்திகிச்சுன்னா அது டைரக்டர்னாலதான்னும் நடந்துக்குறது மத்தவங்க உழைப்பைக் கொச்சைப் படுத்தறவிசயம். நான் சொல்றது சரியா?இல்லையான்னு நீயும் யோசிச்சுப் பாரு”ங்குறான் அவனும் பதிலுக்கு உருக்கமா.

யோவ் எங்காளு எவ்வளவு பெரிய மேதை……. கோட்சே……. காந்தி…… ப்ராய்டு……..பெரியாரு….ன்னு பல பேரப் பத்தி கரைச்சுக் குடிச்சவரு….. எங்காளப் போயி குத்தம் சொல்றியே…….. இதே எங்காளு ’தேவர்மகன்’ல வர்ற பாட்டுல ”தமிழச்சி பால் குடிச்சவண்டா”ன்னு பாடுனப்ப மட்டும் வாயப் பொளந்துகிட்டு விசில் அடிச்சீங்கல்ல….. அப்ப எங்க போச்சு புத்தி?ன்னு போட்டேன் ஒரு போடு. ஆனா அதுவே வாயக் குடுத்து வம்புல மாட்டுன  மாதிரி ஆயிடுச்சு.

”இங்கபாரு ஞானசூனியம்…….. பெரியார ஏத்துக்கறவன் சாதிய ஏத்துக்க மாட்டான்……. சாதிய ஏத்துக்கறவன் பெரியார ஏத்துக்க மாட்டான். ரெண்டையும் ஏத்துக்கறேன்னு சொன்னா அவனுக்கு தலைக்குள்ள எங்கியோ கோளாறு இருக்குன்னு அர்த்தம். இத உங்க கோமானுக்கு மட்டும் சொல்லல….. பல சீமானுகளுக்கும் சேர்த்துத்தான் சொல்றேன். உங்காளு திடீர்ன்னு தேவர்மகனா வருவாரு……… அப்புறம் தமிழச்சி பால் குடிச்சவன்பாரு…….. திடுதிப்புன்னு நான் இந்தியண்டான்னு சாமியாடுவாரு. இந்தக் கடவுள்பாதி….. மிருகம்பாதி பிசினெஸ் எல்லாம் எங்க கிட்ட செல்லுபடியாகாது அதுக்கு வேற ஆளப்பாக்கச் சொல்லு உங்காள……”ன்னு போட்டுப் பொளக்குறான் கலாரசனையத்த கந்தன்.

கலைமாமணியே!……… இவனுக கிட்ட போயி இப்புடி எக்குத்தப்பா மாட்டிகிட்டமேன்னு மனசுக்குக் கஸ்டமாப் போச்சு.

ஆனா……. உங்க உன்னைப் போல் ஒருவன் படத்தப் பாத்து நமக்கே கோபம் வந்துச்சுன்னா பாத்துக்கங்களேன்.

”எது?”ங்கறீங்களா?

அதுதான் ஐம்பது வருசமா உங்களத் தூக்கிச் சொமக்கிற நம்ம தமிழனுகளுக்கே பல இடங்கள்ல உள்குத்து விடறீங்களே அதுதான்.

தமிழ்நாட்டுல தலைமைச் செயலாளர்ல இருந்து பஸ் கண்டக்டர் வரைக்கும் எல்லாரும் பிரச்சனைக்கு பயந்தவங்க……. அல்லது பொறுப்பில்லாதவங்க…… மலையாள மாறார் மட்டும்தான் ஒரே நேர்மையான அதிகாரி. ஆனா அவுரும் தன் கடமையச் செய்த பாவத்துக்காக கமிசனர் பதவியப் பறிகொடுப்பவரு……ன்னு மொத்த தமிழ்நாட்டையும் கேவலப்படுத்தி இருக்கீங்களே அதை நெனச்சாத்தான் மனசுக்கு கஸ்டமா இருக்கு.

அதைவிட நீங்க தமிழனுகளுக்கு அறிவுரை சொல்றேன்னு அவுத்து உடற வஜனங்கள் இருக்கே….. அதக் கேட்டா பின்னால பிளேடுலயும் கீறி மிளகாயவும் தேய்ச்ச மாதிரி இருக்கு.

“மும்பைல குண்டு வெடிச்சா அதப் பத்தி நமக்கென்ன? நம்ம வேற ஊரு….. பாம் மேல பாம் வெடிச்சா நம்ம டீ.வி.ல போட்டுக்கூட காட்டமாட்டோம். நமக்கு நடந்தா அது நாசம். அவனுக்கு நடந்தா அது நியூஸ். நம்ம தமிழ்நாடு….. அமைதிப் பூங்கா. பாம்பேல நெஞ்சுல ஈட்டி பாஞ்சா நமக்கென்ன? கன்யாகுமரில கால் ஊணி நாமதான் நிம்மதியா நின்னுகிட்டு இருக்கோமே……”ன்னு போட்டிருக்கீங்களே பெரிய போடு….. அதக் கேட்டதும்தான் எதுல  சிரிக்கறதுன்னே தெரியல.

பாம்பேலயாவது நெஞ்சுல ஈட்டி பாஞ்சுது…… ஆனா ”கன்யாகுமரியும் எங்குளுக்குத்தான்”னு பட்டக்சுலயே ஈட்டிய உட்டானுக உங்க மாறார் தேசத்துக்காரனுக…… நம்ம மார்ஷல் நேசமணி மாதிரி பல நல்ல மனுசனுக போராடுலேன்னா கன்யாகுமரியும் திருப்பதி மாதிரி……. நம்ம சாரி…. எங்க கைய விட்டுப் போயிருக்கும்.

மும்பைல குண்டுவெடிச்சதக்கூட தமிழ்நாட்டு டீ.வீ .ல காட்டமாட்டேங்கராங்க….ன்னு கொந்தளிக்குறீங்களே…….. மாசத்துக்கு நாலு  தடவையாவது சுட்டுக்கொல்லப் படறாங்களே நம்ம தமிழக மீனவருக….. அதை எந்த வட இந்தியாக்காரன் போட்டுப் போட்டு காட்டுனான்.?

மே மாசம் ஈழத்துல எங்க உறவுக ஆயிரக்கணக்குல கொத்துக் கொத்தா செத்து உளுந்தாங்களே அதை எந்தப் புடுங்கி கவலையோட போட்டுக் காமிச்சான்? அவ்வளவு எதுக்கு……. நீங்க தனிப்பட்ட விதத்துல மனம் துடிச்சுப் போயி என்னத்தைக் கிழிச்சீங்க?

வேணாங்க மாஜி தலைவரே…… ஏற்கெனவே நாங்க நொந்து போயி இருக்கோம். எங்க உணர்வுகளோட விளையாடாதீங்க. காமன்மேன்….. காமன்மேன்…..ன்னு கதை அளக்குறீங்களே உங்க பாணீலயே சொல்றேன்…. கேரளத்துக் காமன்மேன முல்லைப் பெரியாறுல புது அணை கட்டாம நிறுத்தச் சொல் நானும் காமன்மேனா ரோட்டுக்கு வர்றேன்.

காவிரில ”சண்டியர்த்தனம்” பண்ணாம ஒழுங்கா தண்ணி விடச் சொல் நானும் காமன்மேனா கவலைப்படுறேன்.

மும்பைக்குப் போனா ஓட ஓட வெரட்டுரானே ”அந்த சேட் கம்மனாட்டி”(உங்க நாயகன் வஜனம்தான்) அவன நிறுத்தச் சொல் நான் நிறுத்தறேன்.

இந்த லட்சணத்துல …… ”மறதீங்குறது ஒரு தேசிய வியாதி” ன்னு வஜனம் வேற…… இங்க தேசியமே ஒரு பெரும் வியாதியாத்தான் இருக்கு அதைப் புரிஞ்சுக்கங்க மொதல்ல.

தமிழ்நாட்டுல எந்த ஊருக்குள்ள நொழஞ்சாலும்……

அங்க ”பட்டேல்” ரோடு இருக்கும்……

”சாஸ்திரி” நகர் இருக்கும்…..

”காந்தி” புரம் இருக்கும்…….

”நேரு” சிலை இருக்கும்.

அதைப் போல நீங்க தலைல தூக்கிவெச்சுகிட்டு கூத்தாடுகிற மத்த மாநிலங்கள்ல எங்கியாவது

காமராசர் சாலையையும்……

செக்கிழுத்த சிதம்பரனார் நகரையும்……

கொடி புடிச்சு அடிவாங்கியே இறந்த குமரன் புரத்தையும்…..

கட்டபொம்மன் சிலையையும் காட்டுங்க…..

அப்ப ஒத்துக்கறோம் நாங்களும் இந்தியன்…… அவனுகளும் இந்தியன்னு.

எல்லாத்தை விடவும் நீங்க கமலஹாசனா இருந்து கமல் ஹாசனாப் போனாலும் உங்க அற்புதமான நடிப்ப வடக்கத்தியான் ஏத்துக்கல. எங்க இளையராஜாவ ஒத்துக்கல. சிறந்த பாடகர் ஜேசுதாச கண்டுக்கல.

இங்க பாரம் தூக்கிப் பொழைக்கறவங்ககூட ”தேசிய பாரம் தூக்குவோர் சங்கம்”ன்னுதான் வெச்சுருக்காங்க. ஆனா இந்தத் தேசியமே பெரும் பாரம்தானோ?ங்குற சந்தேகம் நாளுக்கு நாள் வலுத்துகிட்டே வருது அதப் புரிஞ்சுக்கங்க.

உங்களக் கெஞ்சிக் கேக்கறதெல்லாம் ஒண்ணே ஒண்ணுதான்……களத்தூர் கண்ணம்மாவுல இருந்து இன்னைக்கு வரைக்கும் ஐம்பது வருசமா உங்க நடிப்பை மனசார மதிக்கற…… உங்க கட் அவுட்டுகளுக்கு பாலாபிசேகமும் பண்ணுற தமிழனுகள கொச்சைப் படுத்தறத விடுங்க.

அதுதான் நீங்க  சோத்துல போட்டு சாப்புடுற உப்புக்கு குடுக்குற உண்மையான மரியாதை.

தமிழ்நாட்டப் பொறுத்தவரை இந்துவோ முஸ்லிமோ கால்வயிறு கஞ்சியாவது நெரைஞ்சா போதும்டா சாமின்னு ஒருத்தருக்கு ஒருத்தர் பழசெல்லாம் மறந்து தாயா, புள்ளையா பழகிக்கிட்டு இருக்காங்க. நீங்க இந்த நேரத்துல உங்க வட நாட்டு சரக்க இங்க இறக்குமதி பண்ணி அவுங்க பொழப்பக் கெடுத்தறாதீங்க.

ஏன்னா சகலகலா வல்லவனா இருந்தாலும் சரி……

அது உன்னைப் போல் ஒருவனா இருந்தாலும் சரி………

சினிமாங்குறது உங்குளுக்குக் காசு.

எங்குளுக்கு வாழ்க்கை.

அதுல மட்டும் மண்ணள்ளிப் போட்டுறாதீங்க.

உங்கள் இரக்கத்தை நாடும்,

பாமரன்.

”உலக நாயகன்” கமலுக்கு பகிரங்கக் கடிதம்-2

bush

நெசமாவே தசாவதாரம் மாதிரி ஒரு படத்தை என் வாழ்நாளுல பார்த்ததேயில்லீங்க….

அதுவும் ராமசாமி, பூவராகவன், நாயுடு, சிங்கு, புஸ்சு, அப்பறம் ….. அதென்ன புளிச்சரோ…….பிளிச்சரோ…… ன்னு நீங்க பத்து வேசத்துல கலக்குன கலக்கு இருக்குதே அதப் பாக்க கண் கோடி போதாதுங்க.

அதுவும் ஆராய்ச்சி பண்ணுற எடத்துல அநியாயத்துக்குச் சாகிற அந்தக் கொரங்கப் பாத்து கூட நீங்க படுற பாடு இருக்கே….. அடடா அதப் பாத்ததும் கண்ணுல தளுக்குன்னு தண்ணீ வந்துடுச்சுங்க. நீங்க வெறும் அந்தக் கதாபாத்திரம் மட்டுமில்ல……. நீங்க ஒரு வாழும் வள்ளலார்ன்னு அப்பவே புரிஞ்சு போச்சு.

ஆனா என்ன புரிஞ்சு என்ன பண்ண? வேட்டிக்குள்ள வீச்சருவாள சொருகுன மாதிரி ”மனித உரிமை” மார்த்தாண்டனும்….. ”அறிவொளி” அப்பாசும் நம்ம கூடவே இருக்கானுகளே….. படம் உட்ட உடனே இவனுக கிட்ட இருந்து எப்புடிடா தப்பிக்கறதுன்னு ஒரே கவலையாயிடுச்சு. எப்படியோ ஒருவழியா தப்பிச்சோம் பொழச்சோம்ன்னு எஸ்கேப் ஆகி சைக்கிள் பூட்டைத் தொறந்தா……. டோக்கனக் காணோம்.

”என்ன அரைவேக்காடு டோக்கனத் தேடுறாப்பல போலிருக்கு…..?”ன்னு அசரீரி மாதிரி பின்னால சத்தம் கேட்குது. திரும்பிப் பாத்தா அந்த ரெண்டு ஜென்மங்களும் பல்லை இளிச்சுகிட்டு நிக்குதுக.

“இடைவேளைல நீ வாயப் பொளந்துகிட்டு உங்காளு புராணம் பாடீட்டு இருந்தியே……. அப்ப நீ கீழ போட்டது……….. இந்தா”ன்னு டோக்கன நீட்டறானுக. சரி நாயோட படுத்தா உண்ணியோடதான் எந்திரிக்கணும்……ன்னு நெனச்சுகிட்டே அவனுகளோட வெளீல வந்தேன். வேற வழி?

“அப்பாசு எனக்கென்னமோ அந்த பல்ராம் நாயுடு கேரக்டர்தான் புடிச்சுது. நீ என்னாங்கற?” ன்னு ஆரம்பிச்சான் மனித உரிமை.

”இல்லப்பா எனக்கு அந்த பூவராகவன் கேரக்டர்தான் புடிச்சுது”ன்னான் “அறிவொளி”. இதென்னடாது ரெண்டுபேரும் கட்சி கிட்சி என்னாவது மாறீட்டானுகளான்னு நமக்கு சந்தேகமே வந்துடுச்சு.

”நெஜமாத்தான் சொல்றீங்களா?”ன்னு ”கற்றது தமிழ்” கதாநாயகி கணக்கா ஆச்சர்யத்தோட கேட்க…….

”இதிலென்ன சந்தேகம்? உங்க ஒலகநாயகன் மேல சத்தியமா”ன்னு என் தலைல கைய வெக்கறானுக ரெண்டு பேரும். அப்பவாவது நான் சும்மா இருந்திருக்கலாம். நமக்குத்தான் நாக்குல நர்த்தனம் ஆடுதே ”சனி”…… உடுமா?

’எனக்கென்னவோ அந்த புஸ்சு கேரக்டர்தான் புடிச்சுது’ன்னேன்.

”நெசந்தான் ஆப்பாயில்…… அந்த ”ஒலக மகா யோக்கியன” உங்க ஒலகநாயகனத் தவுற வேற யாரும் இப்படி நல்லபடியா காட்டுனதில்ல….. அதுக்கே உங்காளுக்கு நோபல் பரிசு குடுக்கலாம்.” ன்னான் மார்த்தாண்டன்.

நெஜமாத்தான் சொல்றியா?ன்னேன்.

“வெங்காயம்……. மொதல்ல உன் வாய ஆசிட் உட்டு அலசு. ஒலகத்துல ஒரு நாடு மிச்சம் இல்லாம அட்டூழியம் பண்ணுற புஷ்சு யோக்கியனாம்….. ஒலகத்த அழிவுல இருந்து காப்பாத்த படத்துல படாத பாடு படறாராம். பத்தாததுக்கு படத்தோட கடைசீ காட்சில புஸ்சே தமிழோட அருமை பெருமைகளையெல்லாம் அவுத்து உடறாராம். இத விட அயோக்கியத்தனம் வேற இருக்க முடியுமா?

கேட்கறவன் காமன்மேன்னா…… கழுதை கூட கப்பல் ஓட்டுதூம்பாரு உங்க கமலகாசன்”ங்குறான் மனித உரிமை மார்த்தாண்டன்.

”ச்சே…. என்னப்பா இப்புடி அமெரிக்காவத் திட்டுற.? அது எல்லா நாட்டு மேலயும் குண்டு போட்டதா சொல்றதெல்லாம் பச்சப் பொய்யு. அது குண்டு வீசாத நாடும் இருக்குது தெரியுமா?”ங்குறான் அறிவொளி அப்பாஸ்.

“எது?”ன்னான் கடுப்போட மார்த்தாண்டன்.

“எதுவா…… அமெரிக்காதான்”ன்னு சொல்லீட்டு சிரிக்கிறான் அறிவொளி.

“அப்பு அது ரொம்பத் தப்பு. வெளீல செய்யுற வேலைய சொந்த நாட்டுலயும் காமிச்சிட்டான் அமெரிக்காக்காரன். யோக்கியர் புஸ்சோட காலத்துல ரெட்டைக் கோபுரத்த தகர்த்தது அல்கொய்தாவுமில்ல அனகொண்டாவுமில்ல……. செஞ்சது எல்லாமே புஸ்ஸோட ஆளுகதான்ன்னு ஒரு கலக்கல் படம் புள்ளி விவரத்தோட வந்திருக்கு தெரியுமா உனக்கு?”ன்னு ஒரு பெரிய்ய குண்டாத் தூக்கிப் போடுறான் மனித உரிமை மார்த்தாண்டன்.

“என்னது அது அமெரிக்காவே சொந்த செலவுல வெச்சுகிட்ட சூனியமா? உன் கப்சாவுக்கு ஒரு எல்லையே இல்லையா?”ன்னு இணைந்த கைகள் மாதிரி ரெண்டு பேரும் கோரசா கேட்க……..

“அவந்தான் அரைவேக்காடுன்னா…… அப்பாசு உனக்குமா அறிவில்ல? உண்மையிலேயே லூஸ் சேஞ்ச்(Loose Change) ன்னு ஒரு சூப்பர் படம்

அவங்களே விமானம் மோதறதுக்கு முன்னாடி எப்படியெப்படி டுவின் டவர்ல பாம் செட் பண்ணுனாங்க……

அதுக்கு முன்னால எத்தனை கோடி டாலருக்கு அந்தக் கட்டடத்தை இன்சூரன்ஸ் பண்ணுனாங்க……

கீழ் தளத்துல டன் கணக்குல இருந்த தங்கம் எங்க போச்சு……

இதுக்கான திட்டம் எந்த வருசத்துல தயாராச்சு?ன்னு புட்டுப் புட்டு வெக்குது அந்த டாக்குமெண்டரி”.ன்னு பின்னிப் பெடல் எடுக்குறான் மனித உரிமை மார்த்தாண்டன்.

“மார்த்தாண்டா……. நல்ல காலத்துலயே நீ பேசுனா புரியாது. நீ ஆள் பேரச் சொல்றியா……? இல்ல ஊர் பேரச் சொல்றியா…..?ன்னு புரியறதுக்குள்ளயே பொறந்தநாள் கண்டுரும். எல்லாம் தெரிஞ்ச பண்டிதரு எங்காளு…… அவுருகிட்ட என்ன கொறை கண்டே அதச் சொல்லு மொதல்ல….ன்னேன் பொறுக்க முடியாம.

”அட கமல்பித்தா……… கொஞ்சம் பொறு….. நடக்கக் கையாலாகாதவன் எங்கியோ பொண்ணு கேட்கப் போன மாதிரி ஏன் பறக்குற? சரி உன் ஆளு விசயத்துக்கே வருவோம். பத்து அவதாரத்துல ஒரு அவதாரமா “பிளிச்சர்”ன்னு வர்றாரே உன் ஆளு…….

அந்த ஆளை மட்டும் ”எக்ஸ் சி.ஐ.ஏ” ன்னு சொல்றாரே உங்காளு Why?”ங்குறான் திடீர்ன்னு.

வொய்?ன்னா என்ன சொல்றது.? ”எக்ஸ்”ன்னா அந்த அக்குறும்பு புடிச்ச பிளீச்சர் முன்னாள் சி.ஐ.ஏ,ன்னு அர்த்தம்……ன்னேன்.

“அப்ப இந்நாள் சி.ஐ.ஏ. எல்லாம் கையுல ராட்டையையும் காதுல பஞ்சையும் வெச்சுகிட்டு ’ரகுபதி ராகவ ராசாராம்’ன்னு அகிம்சா ராகம் பாடிகிட்டா இருக்காங்க? ஆனா……. அதில்ல பிரச்சனை இந்நாள் சி.ஐ.ஏ.ன்னு படத்துல சொன்னா அப்புறம் உங்காளுக்கு அடுத்த தடவை அமெரிக்கா போறதுக்கு விசா கெடைக்காதுன்னுதான் வெவரமா ”எக்ஸ் சி.ஐ.ஏ”.ன்னு அவுத்து உடறாரு.

போதாததுக்கு……. படத்தோட ஆரம்பத்துல வருதே உங்காளு வாயாலயே ஒரு வஜனம்……… “செப்டம்பர் 11 (தாக்குதல்)க்குப் பிறகு அமெரிக்கா தன்னை பயோ ஆயுதத் தற்காப்பிற்கு தயார்படுத்திக் கொள்கிற மும்முரத்தில் இருந்தது”ன்னு இது எப்படி இருக்கு?”ன்னு சொல்லீட்டு மொறைக்கிறான்.

ஏம்ப்பா……. அப்ப…….. அமெரிக்க மாமா நல்லவரா……. இல்ல கெட்டவரா? புரியலயேப்பா”ன்னேன் உங்க ’நாயகன்’ ஸ்டைலுலயே.

“எந்தக் கர்மம்தான் புரிஞ்சுது உனக்கு.? என்னமோ அமெரிக்கா ரெட்டைக் கோபுர தாக்குதலுக்கு முன்னாடியெல்லாம் ரொம்ப யோக்கியமா இருந்த மாதிரியும்……. அதுக்கப்புறம்தான்…… அதுவும் “தற்காப்புக்காக” மட்டும் ஆயுதம் தயாரிச்ச மாதிரியும் உங்காளு அளக்குறதக் கேட்டா அமெரிக்காக்காரனே அதுல சிரிப்பான். அமெரிக்கா எப்படிப்பட்ட நாடு…… அதோட ஜனாதிபதிக இதுவரைக்கும் பண்ணுன அட்டூழியங்க என்னென்ன ங்குறதெல்லாம் பச்சக் குழந்தையக் கேட்டாக் கூட சொல்லும்……அடச்சே…….ஆள உடுறா சாமி…… நீயாச்சு….. உன் ஆளாச்சு…… நான் கெளம்பறே”ன்னு சைக்கிள்ல ஏறி உட்கார்ந்துட்டான்.

ஆனா…… இந்த அப்பாசுதான் சும்மா இருக்காம போனவன தடுத்து நிறுத்தி “நீ பாட்டுக்கு சும்மா திட்டிகிட்டே போனா எப்படி? என்ன இருந்தாலும் நம்மாளு அவதார் சிங்கா வந்து கலக்குறாரே…… அதுகூடவா உனக்குப் புடிக்கல?”ன்னு நச்சுன்னு கேட்டான் ஒரு கேள்வி.

“யப்பா…… அவுரோட நடிப்ப யாரும் கொறை சொல்லுல…….. உண்மையிலேயே மகா தெறமைசாலிதான். அவுருக்கு வேணும்னாலும் அவுரோட நடிப்பு மேல சந்தேகம் இருக்கலாம். ஆனா நமக்கு இல்ல. நம்ம ஆசையெல்லாம் இப்படிப்பட்ட கலைஞருக சொல்ற கதையுலயும் கொஞ்சமாவது உண்மையா இருக்கணும். வரலாற்றை திரிக்கற மாதிரி இருந்தறக் கூடாதுங்குறதுதான் நம்ம ஆதங்கம்” ன்னு சொல்லீட்டு பெருமூச்சு விடறான் ”மனித உரிமை”

சரி இதுதான் நாலு வார்த்தையாவது இவன் நல்லா பேச கிடைச்ச ஒரே சந்தர்ப்பம்…….ன்னு நெனச்சுகிட்டு…….. அது சரி மார்த்தாண்டா நம்ம அப்பாஸ் கேட்ட அவதார்சிங் கேரக்டரு எப்புடீ? ன்னேன்.

”கேரக்டர் என்னமோ நல்ல கேரக்டர்தான். உங்காளு நடிப்பும் வழக்கம் போல சூப்பர்தான்…… ஆனா……”ன்னு இழுக்குறான் ம.உ.மார்த்தாண்டன்.

ஏம்ப்பா…… உன்னால இந்த “ஆனா” போடாம பேசவே முடியாதா?ன்னேன் எரிச்சல் தாங்காம.

”நானா வெச்சுகிட்டே வஞ்சகம் பண்ணுறேன். அதுவா வருது என்ன பண்ண? உங்காளு படத்துல “அவதார் கண்ணத் தெறந்து பாருங்க. நீங்க நல்லாயிட்டீங்க…… நாங்க சர்ஜரி பண்ணீருந்தாகூட இவ்வளவு பர்பெக்ட்டா பண்ணீருக்க முடியாது . அந்த புல்லட்டு உங்க குரல உட்டுட்டு அந்த கேன்சர எடுத்துட்டுப் போயிருச்சு”ன்னு டாக்டர் சொல்லுறதக் கேட்டாத்தான் கொடுமையா இருக்கு. இப்புடி ஒரு ஐடியா இருக்குறது தெரிஞ்சிருந்தா இருபத்தி அஞ்சு வருசத்துக்கு முன்னாடி சுட்டாவது எங்கப்பனைக் கேன்சர்ல இருந்து காப்பாத்தீருப்பேன்”ங்குறான் அந்த வெவகாரம் புடிச்சவன்.

கொழப்பாதே…….. கடைசியா என்ன சொல்ல வர்றே……….

தசாவதாரம் நல்லா இருக்குன்னு சொல்ல வர்றியா……..இல்ல நல்லா இல்லேன்னு சொல்ல வர்றியா……..ன்னேன் மண்டை காஞ்சுபோயி.

”படம் நல்லா இல்லன்னு சொல்ல வர்ல.

ஆனா இன்னும் கொஞ்சம் நல்லா இருந்திருந்தா நல்லாயிருந்திருக்குமேன்னுதான் சொல்ல வர்றேன்.” ன்னு அவன் சொல்லச் சொல்ல தலை சுத்துற மாதிரி இருந்துச்சு. கண்ண இருட்டிகிட்டு வர்றமாதிரி ஒரு ஒணர்வு. அவ்வளவுதான் தெரியும். முழிச்சுப் பாத்தா ஆசுபத்திரி பெட்டுல என்னச் சுத்தி ஒண்ணுக்கு ரெண்டு உபத்திரவத்துக்கு மூணூங்குற கதையா இவனுகளோட கலாரசனையத்த கந்தனும் பல்லக் காட்டீட்டு நிக்குறான்.

இதென்னடாது……

ஆசைக்கு அவளக் கட்டி…….

கூடிப் பொழைக்கலாம்ன்னு கொளுந்தியாளக் கட்டி…..

சேர்ந்து பொழைக்கலாம்ன்னு சின்னாயாளைக் கட்டி…….

கடைசீல மூணும் கடைநாசமாப் போன மாதிரி இவனுக வேறையான்னு பயந்து மிரண்டவனப் பாத்து

“பயப்படாதே நானும் உன்னைப் போல ஒருவன்தான்”ன்னு பொடி வெச்சுப் பேசறான் கந்தன்.

(மிச்சம் சொச்சம் எல்லாம் அடுத்த வாரம்)

Loose

கலை ஒலக மாமேதை ஒலகநாயகன் அய்யா சமூகத்துக்கு…..

kuruthi

 கண்மணி….. வம்போட…. பாமரன்

நான்…. நான்…. எழுதும் கடிதம்…..

இல்ல லெட்டர்ன்னு வெச்சுக்கலாமா……

வேணாம் கடுதாசியே இருக்கட்டும்…..

ஊடால…… ஊடால….. ஆஸ்கர்…… ஐ.நா…….. சாக்ரடீஸ்…..

நீட்ஷே…… கிரகாம்பெல்…. சீமைக்கருவ….. அய்யனாரு…… எல்லாம் சேர்த்திக்குங்க…….

அய்யோ……. உண்மையச் சொல்லீர்றன் சாமீ…….. உங்கள மாதிரி எல்லாம் யோசிக்க நம்மால செத்தாலும் முடியாது. ஆனா….. சின்ன வயசுல இருந்தே உங்க படம் பார்த்துப் பாத்து வளந்த ஒடம்புங்க இது.

நீங்க சிகரெட் புடிச்சுகிட்டே சுமித்ராவோட திமிர அடக்குற ஸ்டைலுக்காக ”நெழல் நெசமாகிறது” படத்த பதினேழு தடவை பாத்திருக்கேன்…..

சொல்லாம கட் அடிச்சுட்டு மன்மதலீலை போயி ஊட்ல செருப்படி வாங்கீருக்கேன்…..

மாமன் கல்யாணத்துக்கு சிகப்பு ரோஜாக்கள் கண்ணாடியும் தொப்பியும் இருந்தாத்தான் வருவேன்னு ஊரையே கூட்டி அழும்பு பண்ணீருக்கேன்….

இளமை ஊஞ்சலாடறதப் பாத்துட்டு ’வெச்சா முன்னாடி முப்பது இஞ்ச் நீளத்துக்கு வெச்சாத்தான் போடுவேன்’ன்னு பெல்ஸ் பேண்ட்டுக்காகவே பெருஞ்சண்டை போட்டிருக்கேன்னா பாத்துக்கங்களேன்.. எப்படி நீங்க நம்ம ஊனோடயும்…. உசுரோடையும் கலந்து இருந்திருக்கீங்கன்னு…….

மனசார சொல்லணும்ன்னா உங்க ”மகாநதி” பாத்து தேம்பித் தேம்பி அழுதிருக்கேன்.

ஆனா……. உங்களத் திட்டறதுக்குன்னும் ஊருக்குள்ள நாலஞ்சு அனாமத்துக இருக்குதுக. நாம எதைச் சொன்னாலும் அதுக்கு ஒரு நொள்ளையச் சொல்றதே அவனுக பொழப்பு. இவனுக இருக்குறதே பூமிக்கு பாரம்ன்னு சொல்லி வோட்டர் லிஸ்ட்டுல கூட இவனுக பேரச் சேத்தாம விட்டிருக்காங்கன்னா பாருங்களேன்..

                                           நம்மளோட “குருதிப்புனல்” வந்த சமயம் இப்படித்தான் ஒருநாள் அதுக கிட்ட எக்குத்தப்பா மாட்டிகிட்டேன். உங்கள மாதிரியே…… இருக்குற மீசையையும் வழிச்சுகிட்டு வெறைப்பா நடக்கணும்ன்னு “அன்பு முடி திருத்தகம்” உள்ள நொழைஞ்சா……..

”வாப்பா பித்துக்குளி கமல் தாசா” ன்னு சத்தம் கேட்குது. பாத்தா….. நம்ம ”கலாரசனையத்த கந்தன்” பல்லுகூட வெளக்காம இழிச்சுகிட்டு உக்காந்திருக்கான் ஏற்கெனவே. என்னடாது ஏழரை எதுக்காலயே உட்காந்திருக்கேன்னு நெனச்சுகிட்டே…..

என்னப்பா கந்தா சேவிங்கா?….ன்னேன்.

”இல்ல…. மொட்டை” ன்னான்.

ஏன் திடீர்ன்னு மொட்டை?ன்னு கேட்க……..

 ”தங்கப்பதக்கம் எஸ்.பி.செளத்ரிக்கு அப்புறம் இருந்த ஒரே நேர்மையான போலீஸ் அதிகாரியும் போய்ச் சேர்ந்துட்டாரேன்னுதான் மொட்டை” ங்குறான் எகத்தாளமா.

இந்தக் கலாரசனையத்த கந்தன் எப்பவுமே இப்புடித்தான். எதச் சொல்ல வர்றான்னு லேசுல புரியாது. புரிஞ்சாலும் அதுக்குள்ள ஒரு உள்குத்து இருக்கும். என்ன பண்ணித் தொலைக்க….. நாயுக்கு வாக்கப்பட்டா கொலைச்சுதானே தீறனும்?

“யார் அந்த நேர்மையான அதிகாரி?”ன்னேன் புரியாம.

“யாரா……. நம்ம ’ஆதி நாராயணன்’தான்” ன்னு குருதிப்புனல்ல வர்ற உங்க கேரக்டர் பேரச் சொல்லீட்டு எளக்காரமா சிரிக்கிறான் கந்தன்.

ஏன் கந்தா அப்புடிப்பட்ட அதிகாரிகளே இல்லையா?ன்னேன்.

”அட கமல்தாசா……. இருக்காங்களோ இல்லியோ….. ஆனா உங்காளு மக்களுக்காக தீவிரமா போராட வர்றவங்க எல்லாம் கொடூரமா இருப்பாங்க….. அதிகாரி வீட்டு நாயக் கூட விட்டு வைக்க மாட்டாங்க…. அவுங்க ஊட்ல இருக்குற பொண்ணு…. பொண்டாட்டியக் கூட பாலியல் பலாத்காரம் பண்ணத் தயங்கமாட்டாங்க…..ன்னு அவுத்து உடறாரே சரக்க அத நெனச்சாத்தான் எரிச்சல் எரிச்சலா வருது”ங்குறான் கலாரசனை.

எரிச்சல் வந்தா என்னாவது சாம்பல் மேட்டுல உளுந்து படுத்துப் பொறளு…. ஆனா எங்காள அனாவசியமா வம்புக்கு இழுக்காதே. அது சரி….. அவுரு சொன்னதுல என்ன தப்பு?ன்னேன் கோபத்தோட…..

”சொன்ன நேரம்தான் மகாதப்பு……. அதுவும் தர்மபுரி பக்கம் இருக்குற வாச்சாத்தில பழங்குடி மக்களோட வீடுகள சூறையாடி, அப்பாவி ஆதிவாசிப் பெண்கள் 18 பேரை சூறையாடுன 108 போலீஸ்காரங்க மீதான வழக்கும்……

கோவைப் பக்கம் சின்னாம்பதீல பழங்குடிப் பெண்களை போலீஸ்காரங்க சீரழிச்ச வழக்கும்……. சந்தி சிரிச்சுகிட்டு இருக்கற நேரமாப் பார்த்து வந்திருக்கே உங்காளோட ”குர்ர்ர்ர்திப்புனல்” அத நெனச்சாத்தான் எதுல சிரிக்கறதுன்னே தெரியல. இத விடக் கேவலமான ஒரு போலீஸ் டாக்குமெண்ட்ரிய போலீசே நெனச்சாலும் எடுக்க முடியாது. அந்தத் ’ தெறமை ’ உங்க இன்பார்மருக்குத்தான் இருக்கு”.

ஒரு உண்மையான தேசபக்தர் எங்காளு….. அவுரப் போயி ஒரு போலீஸ் இன்பார்மர்ன்னு சொல்றியே கந்தா இது நியாமா?ன்னு கவலையோட கேட்டேன். ஆனா ஆளுதான் அசர மாட்டேங்கறான்.

தேசபக்தர்க லிஸ்ட்டுல உங்காளே மொதலா நிக்கட்டும் அதுல எனக்கு ஒண்ணும் பிரச்சனையில்ல. ஆனா அதுக்கு மொதல்ல……..

பயங்கரவாதின்னா யாரு?

தீவிரவாதின்னா யாரு?

போராளின்னா யாரு?

ஒவ்வொருத்தருக்குள்ளயும் என்ன வேறுபாடு? ங்குற அடிப்படை வித்தியாசங்களை தெரிஞ்சுக்கச் சொல்லு. எதுவும் தெரியாம சும்மா சொதப்பக் கூடாது…… புரிஞ்சுதா?” ன்னு பொழந்து கட்டுறான்.

காதல் இளவரசரே……. நான் என்ன உங்கள மாதிரி பெரிய்ய்ய்ய்ய பெரிய்ய்ய்ய தலகாணி சைஸ் புஸ்தகமெல்லாம் படிக்குற ஆளா? நானே தற்குறி. ஆனா நம்ம கந்தன் சொன்னதை எல்லாம் எந்தக் கேணையனாவது கேட்டான்னா நீங்க நியூஸ் பேப்பர் கூட ஒழுங்காப் படிக்காத ஆளுன்னு தப்பாப் புரிஞ்சுக்குவானுக. என்ன இருந்தாலும் நீங்க ”நம்மவரு” நான் அப்புடி நெனைக்க முடியும்களா?

”என்ன கமல்பித்தா பலத்த யோசனை? உன் கண்கள்ல ஒரு கலாச்சார பயம் தெரியுதே?” ன்னு தறிகெட்டு ஓடற நம்ம சிந்தனைக் குதிரையத் தடுத்து நிறுத்தீட்டான் கந்தன்.

இனியும் இவன்கிட்ட இருந்தா பொழப்பு நாறீடும்ன்னுட்டு……. சரி கந்தா பையனப் பள்ளிகூடத்துல இருந்து கூட்டீட்டு வரணும்ன்னு சொல்லி எஸ்கேப் ஆயிட்டேன்.

கலைஞானியே ! உங்களோட எந்தப் படமா இருந்தாலும் மொதல் நாள் மொதல் ஷோ பாக்குற காலம் எல்லாம் மலையேறிப் போச்சேங்கறத நெனச்சாலே வருத்தமாத்தான் இருக்கு. இடைல வேற ஈழப்பிரச்னை…. இட ஒதுக்கீட்டுப் பிரச்னைன்னு ஏகப்பட்ட பிரச்னைக. முன்ன மாதிரியெல்லாம் படம் பாக்கவா முடியுது.?

                                திடீர்ன்னு ஒரு நாள் நீங்க பத்து வேசத்துல நடிச்சிருக்கிற படம் ஒண்ணு வந்திருக்குன்னு சொன்னாங்க. அட நம்ம சிவாஜி ஒம்பது வேசங்கள்ல நடிச்சதயே பீட் பண்ணி நம்மாளு பத்து வேசத்துல நடிச்சிருக்காரான்னு அடிச்சுப் புடிச்சு ஓடியாந்து பிளாக்குல டிக்கெட் வாங்கி ஒரு வழியா உள்ளாற பூந்திட்டேன்.

படம் ஆரம்பிச்சு கொஞ்ச நேரம் கொழப்பமா இருந்தாலும்… அடுத்த கமல் எப்ப வருவாருன்னு ஒரே குஷியாயிடுச்சு. படம் போட்டு கொஞ்சம் லேட்டா வந்த பக்கத்து சீட் ஆசாமி “படம் இப்பதான் போட்டாங்களா”ன்னு கேட்க…..

அட பக்கத்துல ஒரு கமல்…

ச்சே… வெறும் பிரமை. கொஞ்சம் தலை சுத்தற மாதிரி இருந்தாலும்….. நீங்க ஒவ்வொரு சீன்லயும் தெறையில தோன்றி ”என்னப் பாரு…” ”என்னப் பாரு…”.ன்னு நடிச்ச நடிப்புல ஆடியே போயிட்டேன்.

ஒருவழியா இடைவேளை விட…… ஒரு டீயும் பப்சும் சாப்பிடலாமேன்னு வெளிய வந்தா……. கண்ணத் தின்ன நாயு எதையோ தின்ன மாதிரி….. நேரா வந்து மோதறானுக நம்ம ”மனித உரிமை மார்த்தாண்டனும்”, ”அறிவொளி அப்பாசும்”.

”என்ன அரைவேக்காடு……. எப்படி உங்காளு சர்க்கஸ்?” ங்குறானுக கர்மம் புடிச்சவனுக. கரூர் போனாலும் கருமம் தொலையாதுங்கறது இதுதானோன்னு தோணுச்சு.

ஏன்யா எங்காளு மாத்தி மாத்தி பத்து வேசத்துல கலக்குறாரு…… உங்குளுக்கெல்லாம் பாராட்டவே மனசு வராதா?ன்னு கோபமா கேட்டேன். ”பத்தென்ன பதினொன்னா இன்னொரு வேசம் கூட சேர்த்துப் போட்டிருக்கலாம் உங்க ஒலகம்.” ங்குறான் மனித உரிமை.

பதினொன்னாவதா…. அது என்ன வேசம்? ன்னேன்.

”ரெண்டே ரெண்டு தொட்டாங்குச்சி இருந்திருந்தா அசினாவும் அவரே வந்திருக்கலாம்….”ன்னு சொல்லீட்டு விழுந்து விழுந்து சிரிக்கிறானுக பண்ணாடைக.

”சார் பப்ஸ் வேணுமா?”ன்னு கேட்ட குரலைத் திரும்பிப் பார்த்தா நீங்க நிக்கறீங்க……. அடச்சே இதுவும் பிரமைதான். என்ன பண்ண…….. தியேட்டர்ல வடை போண்டா விக்கறவன் கூட உங்கள மாதிரியே தெரியறான் எல்லாம் படத்தோட பாதிப்பு……

( மத்த பாதிப்புகள் அடுத்த வாரம் )

கம்பீரமாக விடைபெற்ற பிரேமானந்த்….

225px-Basava_Premanand

அந்த மனிதர் கம்பீரமாகக் கிடத்தப்பட்டிருந்தார்.

ஒரு ஒப்பாரி…. அழுகை…. ஏன் சின்ன விசும்பல் கூட இல்லை அந்த இடத்தில். வந்திருந்த நண்பர்கள் அந்த மனிதரது கடந்த கால சாதனைகளை….. ஓயாது உழைத்த உழைப்பை… ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டபடி இருந்தனர். முதலில் உடலைப் பார்க்க வேண்டும் என்ற போது ”செருப்பைப் போட்டுக் கொண்டே போங்க” என்றனர் அங்கிருந்த நண்பர்கள். கோயம்புத்தூரின் தெற்குக் கோடியில் இருக்கும் போத்தனூரில் வைக்கப்பட்டிருந்த அந்த மனிதனுக்குத்தான் எத்தனை நண்பர்கள்……  தமிழகம் மட்டுமில்லை….. இந்தியாவில் மட்டுமில்லை…… உலகம் முழுக்க அந்த மனிதனுக்கு நண்பர்கள் பரந்து விரிந்திருந்தனர்.

ஆம் அந்த மனிதனின் பெயர் பிரேமானந்த்.

உலகெங்கிலும் உள்ள பகுத்தறிவாளர்கள் அனைவருக்கும் மிகப் பரிச்சயமான பெயர்.

     நாட்டின் ஏதோ ஒரு மூலையில் உள்ள அந்த கிராமத்திற்கு திடீரென தாடி வைத்த சாமியார் ஒருவர் வருவார். கிராமமக்கள் உடனே சூழ்ந்து கொள்ள ஆரம்பமாகும் அவரது ”பூஜைகள்”. அருகில் உள்ள அந்த ஊர்க்காரரை அழைத்து “வா வந்து இந்தத் தேங்காயை உடை” என்பார். ஊர்க்காரர் ஓங்கி உடைத்த மறுநொடியே ஆச்சர்யத்தால் அதிர்ந்து போவார். உடைந்த தேங்காய்க்குள் இருந்து மல்லிகைப்பூக்கள் சிதறும்.

“சாமி” என்று காலில் விழுவார்கள் மக்கள்.

”சரி….. சரி…. நீ வா…… நீ அதே மாதிரி இந்தத் தேங்காயை ஓங்கி உடை” என்று மற்றொன்றைக் கொடுப்பார். அந்த ஆள் உடைத்த மறுநொடியே அதிர்ச்சியில் உறைந்து போவார். தேங்காய்க்குள் இருந்து ரத்தம் தெறிக்கும்.

மக்கள் மிரண்டுபோய் காலில் விழுந்து கும்பிட ஆரம்பிப்பார்கள்.

“மக்களே பொறுங்கள். நான் சாமியாருமில்லை. எந்த வித அற்புத சக்தியும் கொண்டவனுமில்லை. உங்களைப் போலவே மிகச் சாதாரண மனிதன். நம்புங்கள்” என்பார்.

வியந்து நிற்கும் மக்களிடம் தேங்காயின் குடுமியைப் பிய்த்து அதில் துளை போட்டு உள்ளே இருக்கும் நீரை எடுத்துவிட்டு மல்லிகைப் பூவை சொருகிய விதத்தையும், ரத்தத்தை செலுத்திய விதத்தையும் விளக்கிக் காட்டுவார்.

“நான் செய்ததெல்லாம் வெறும் மேஜிக்தான். இப்படித்தான் நாட்டில் பலபேர் இந்த மேஜிக்கை மந்திரசக்தி என்றும்….. இறைவனிடம் இருந்து பெற்ற அற்புதங்கள் என்றும் கூறி உங்களை ஏமாற்றிப் பிழைக்கிறார்கள். அவர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள்.” என அறிவுறுத்திவிட்டு அடுத்த கிராமம் நோக்கி நகர்வார் அந்தப் பெரியவர்.

அந்தப் பெரியவர்தான் பிரேமானந்த்.

தான் சந்தித்த மக்களையெல்லாம் விழிப்படைய வைத்துவிட்டு இப்போது மீளாத் தூக்கத்தில் ஆழ்ந்திருந்தார்.

அக்டோபர் 4 ஆம் தேதி தனது இறுதிமூச்சை நிறுத்திக் கொண்ட பிரேமானந்துக்கு வயது 79. புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர் தனக்கு நெருக்கமான நண்பர்களிடம் சொன்னது : ” நான் இறந்த ஒரு மணி நேரத்திற்குள் எனது உடலை அரசு மருத்துவமனையில் ஒப்படைத்து விடுங்கள். எனது உடல் மருத்துவ மாணவர்களது ஆராய்ச்சிக்காகப் பயன்படட்டும். எனது உடலை வைத்து எந்தவொரு சாதிச் சடங்கோ….மதச் சடங்கோ நடத்த அனுமதித்து விடாதீர்கள். ”

அதன்படியே அரங்கேறியது அந்த எளிய மனிதனது இறுதி ஊர்வலம். இப்போது அவர் மருத்துவ மாணவர்களின் ஆராய்ச்சிக்கான மேசையின் மீது கிடத்தப்பட்டிருக்கிறார் வெகு கம்பீரமாக.

பிரேமானந்த் என்றழைக்கப்படும் “பசவ பிரேமானந்த்”  பிறந்தது கோழிக்கோட்டில் என்றாலும் இருந்தது இறந்தது எல்லாமே கோயம்புத்தூரில்தான். வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கு கொண்டு பள்ளியைத் துறந்தவர் பகுத்தறிவின்பால் நாட்டம் கொண்டு நாற்பத்தி ஒன்பது நாடுகளைச் சுற்றி வந்தார்.

எண்பதுகளில் கோவையில் அவரின் பகுத்தறிவுப் பணிக்கு தோள் கொடுத்தவர்கள் பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளராக இருக்கும் கு.ராமகிருஷ்ணனும், தலைமை நிலையச் செயலாளர் வெ. ஆறுச்சாமி போன்றவர்களும்தான்.

அதிலும் விபூதி வரவழைப்பது, லிங்கம் வரவழைப்பது, முதுகில் அலகு குத்தி காரை இழுப்பது, அந்தரத்தில் மிதப்பது, தகதகக்கும் தீ குழிக்குள் நிதானமாக நடந்து செல்வது போன்ற மூட நம்பிக்கை ஒழிப்புப் பணிகளுக்கு கூப்பிட்டதும் தயாராய் நின்றவர்கள் ஆறுச்சாமியும், ”தோழர்” அறக்கட்டளை என்கிற மனித நேய அமைப்பை நடத்தி வரும் சாந்தகுமாரும்தான்,

”படிக்காத மேதை” ஜி.டி.நாயுடுவின் மிக நெருங்கிய நண்பர் பிரேமானந்த். எல்லாவற்றை விடவும் தங்கத்தைத் தயாரிப்பவர்கள் அதற்கான லைசன்சைப் பெற்றிருக்க வேண்டும் என்கிற விதியைச் சுட்டிக்காட்டி லைசன்ஸ் இல்லாமல் தங்கம் எடுத்துக் கொடுக்கும் சாய் பாபாவை தங்கக் கட்டுப்பாடு சட்டத்தின் கீழ் கைது செய்யவேண்டும் என இவர் போட்ட வழக்கு உலகப்பிரசித்தி பெற்ற வழக்கு. பி,பி.சி., டிஸ்கவரி சேனல் என பலவற்றில் இவரது பேட்டிகள் ஒளிபரப்பப் பட்டிருக்கின்றன.

இந்த மக்களின் அறிவியல் அறிவைப் பெருக்குவதற்காக அவர் விட்டு சென்றிருக்கும் சொத்து ஏறக்குறைய ஒன்றரை லட்சம் புத்தகங்களும் ஒரு அறிவியல் விளக்கக் கூடமும்தான்.

”கடவுளின் பெயரால் அற்புதங்கள் நிகழ்த்துபவர்கள் அதனை அறிவியல்பூர்வமாக நிரூபித்துக் காட்டினால் அதற்கு ஒரு லட்ச ரூபாய் பரிசு” என பிரேமானந்த் விடுத்த அறைகூவல் அவரைப் போலவே வெல்லப்பட முடியாமல் இன்னமும் சவால் விட்டபடி காத்துக்கொண்டு இருக்கிறது.

**********

நடிகை புவனேஸ்வரி விபச்சாரத் தடுப்புப் பிரிவின் கீழ் கைது செய்யப்பட்டிருப்பதுதான் தமிழகத்தின் லேட்டஸ்ட் சமாச்சாரம். பாலியல் தொழிலை சட்டபூர்வமாக்க வேண்டும்….. ஆக்கக் கூடாது என்கிற வாதங்களைத் தாண்டி நமக்கு வருகின்ற கோபமெல்லாம் பத்திரிக்கை தொலைக்காட்சிகள் மீதுதான். ஆடம்பரங்களுக்காக இப்படிப் போனவர்கள் ஒருபுறம் இருந்தாலும் பிழைக்க வேறு வழியே கிடைக்காமல் வயிற்றுப் பிழைப்புக்காக இதைத் தேர்ந்தெடுத்து உயிர்வாழும் பெண்களைப் படம் பிடித்து “பிடிபட்ட விபச்சார அழகி இவள்தான்” என வெளியிடுவது எந்த விதத்தில் நியாயம் என்பதுதான் நமது கோபம். அப்படிப் படம் போடும் பத்திரிக்கைகள் அவர்களோடு உறவு கொண்ட பெரிய மனிதர்களைப் படம்பிடித்துப் போட்டிருக்கிறதா? என்பதுதான் நமது கேள்வியே. பல ஆண்களோடு உறவு கொள்ளும் பெண்ணுக்குப் பெயர் விபச்சாரி என்றால்…. பல பெண்களோடு உறவு கொள்ளும் ஆணுக்கு என்ன பெயர்?

 

”பிடிபட்ட அப்பெண்ணுக்கும் ஒரு குடும்பம் இருக்கும்…அவருக்கு பள்ளிக்குச் செல்லும் மகனோ அல்லது மகளோ இருக்கக்கூடும்….. புகைப்படம் போட்டால் அவரது குடும்பமே துயரத்துக்கு உள்ளாகும்” என்கிற குறைந்தபட்ச மனிதநேயம் கூட இந்த நான்காவது தூணுக்கு இல்லாமல் போனது வெட்ககரமான விஷயம்.

நடிகர் ஜெமினி கணேசன் பலதார மணம்  செய்தால் அவருக்குப் பெயர் காதல் மன்னன்.  அதே வேலையை ஜெயலட்சுமி செய்தால் வேறு பெயரா?

ஜெமினி செய்தால் தொலைக்காட்சியில் “ஸ்டாருடன் ஒரு நாள்” என ஒளிபரப்பாகும்……

அதையே ஜெயலட்சுமி செய்தால் “குற்றம் நடந்தது என்ன?” என்று ஒளிபரப்பாகும்……..

என்ன நீதி இது?

யோசிக்கட்டும் ஊடகங்கள்.

ஆத்திகர்களுக்கும் அவர்தான் தலைவர்….

இதை விட தமிழுக்கும், தமிழருக்கும் யார் முதல் மரியாதை தந்துவிட முடியும்? நம் தமிழக அரசைத் தவிர?

முல்லைக்குத் தேர் தந்த பாரியின் மகள்களான அங்கவை, சங்கவை இருவரையும் கொச்சைப் படுத்திய சிவாஜி சிறந்த படமாம். இதற்கு விருது வேறு. தொல்காப்பியத்திற்கு உரையும், குறளுக்கு ஓவியமும் தீட்டியவரின் அரசு அறிவித்திருக்கிறது.

பேத்தி வயதில் உள்ள சிறுமிகளைப் பார்த்து ரஜினி ”வாங்க பழகலாம்” எனப் பல்லிளிப்பதும்……

அழகுமிகு தமிழ்ப் பெயர்களைக் கொண்ட அச்சிறுமிகளை கேடுகெட்ட முறையில் விவேக் கிண்டல் செய்வதும்……..

அப்பா பொறுப்பில் இருக்க வேண்டிய பாப்பையா ”அத்தையின் கணவர்” வேலை பார்ப்பதும்….

கண்டு காறித் துப்பாத தமிழ் உணர்வாளர்களோ பெண்ணியவாதிகளோ இல்லை.(இயக்குநர் ஷங்கர்….. வசனகர்த்தா சுஜாதா போன்ற இத்யாதிகளை ஏற்கெனவே நான் பலமுறை திட்டித் தீர்த்தாயிற்று) பெண் இனத்தைக் கொச்சைப் படுத்தியது  போதாதென்று அப்பெண்களுக்கு முகத்தில் கருப்புச் சாயம் பூசி கருப்பினத்தையும் கொச்சைப்படுத்தியது கண்டு குமுறியவர்கள் அநேகம் பேர்.

இந்த லட்சணத்தில்தான் இதற்குக் கிடைத்திருக்கிறது ”சிறந்த” படத்திற்கான விருது.

அருமையோ அருமைன்னேன்.

இவர்களைத் தவிர உலகத் தமிழ் மாநாட்டை நடத்தும் தகுதி வேறு எவருக்கு இருக்க முடியும்ன்னேன்?

**********

காலையில் எழுந்ததில் இருந்தே அதிர்ச்சி மேல் அதிர்ச்சி. வந்த ஒவ்வொரு தொலைபேசி அழைப்பும் ஒவ்வொரு ரகம். அதிலும் சென்னையில் இருந்து அழைத்த ஒரு நண்பர் இதுவரையிலும் யாருமே கேள்விப்பட்டிராத “புதிய” ”புதிய” தகவல்களாகச் சொன்னார். நான் தலை சுற்றிக் கீழே விழாதது ஒன்றுதான் பாக்கி.

”வணக்கங்க தோழர்…. நலமா இருக்கீங்களா?”

ரொம்ப நல்லா இருக்கேன் தோழர். நீங்க எப்படி?

”நலம். அப்புறம் ஒரு மிக முக்கியமான விஷயம் உங்ககிட்ட சொல்லலாம்ன்னுதான் கூப்பிட்டேன்.”

சொல்லுங்க தலைவா…. என்ன விஷயம்?

“தமிழக அரசியல்”ன்னு ஒரு பத்திரிக்கை வந்துகிட்டு இருக்கு தெரியுமா உங்களுக்கு?” (இதுல முப்பதாவது வாரமா எழுதும் எனக்கு இது தேவைதான்)

அடடே…… அப்படியா? தெரியாதே எனக்கு….. என்றேன்.

”அதுல என்னோட புத்தகம் பத்தி ஒரு செய்தி வந்திருக்கு. வாங்கிப் பாருங்க.” (அடப்பாவி மத்த பக்கங்களை புரட்டிக்கூட பார்க்கலியா….)

அவசியம் பார்க்கிறேன் தோழர்

”அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம்…… நாங்க மறுபடியும் எங்க பத்திரிக்கையை அக்டோபர்ல இருந்து கொண்டு வர்றோம். அதுக்கு உங்க கட்டுரை வேணும்.”

கட்டாயம் குடுக்கிறேன் தலைவா…..

”இன்னொரு மிக முக்கியமான மேட்டர்…. ”

சொல்லுங்க தோழர்……..

”தமிழ்நாட்டுல “தினத்தந்தீ”ன்னு ஒரு பத்திரிக்கை வந்துகிட்டு இருக்கு……..”

அய்யய்யோ…….. என்னது காந்திய சுட்டுட்டாங்களா……..? எப்ப……?

**********

தமிழக அரசியலில் பதில் சொல்லும் சீனியர் உண்மையிலேயே சீனியர்தான் என்பதை நிரூபித்துக் காட்டி விட்டார். அவர் வெறுமனே பதில் அளிப்பதில் மட்டுமல்ல, வயதிலும் அனுபவத்திலும் சீனியர்தான் என்பதை ஒரே ஒரு பதிலில் உணர்த்திவிட்டார்.

போன வாரம் “தமிழகத்தில் பெரியார் பிறந்திருக்காவிட்டால்….?” என்கிற கேள்விக்கு “ஆத்திகம் இந்த அளவிற்கு வளர்ந்திருக்காது.” என்று பதிலளித்ததைக் கண்டு மெய்சிலிர்த்துப் போனேன்,

கடந்த தலைமுறையில் நடந்த பல சமாச்சாரங்கள் இன்றைய தலைமுறையினருக்குத் தெரியவில்லையே என்கிற ஆதங்கத்தை அவர் நாசூக்காக வெளிப்படுத்திய விதம் என்னை மிகவும் கவர்ந்தது.

நேற்று சிறு கூட்டத்தவர்களிடம் மட்டும் ஆலயங்கள் இருந்த நிலை மாறி, இன்று பெரும் கூட்டம் அங்கு கூடுகிறதே ஏன்? என்பதற்கான விடையை அதன் வரலாற்றுப் பின்னணியை அறிந்தவர்களால் மட்டுமே சொல்ல இயலும். அந்த வகையில் என்ன சொன்னாலும் சீனியர் சீனியர்தான். ஜூனியர் ஜூனியர்தான்.

உண்மைதான்.

தந்தை பெரியார் இங்கு பிறந்திருக்காவிட்டால் ஆத்திகம் இந்த அளவிற்கு வளர்ந்திருக்காதுதான்.

கோயிலைச் சுற்றி உள்ள தெருக்களில்  கால் பட்டால் கூட தீட்டாகி விடுமென்று சொன்னதை நம்பி ஒரு பெரும் கூட்டம் ஊரைச் சுற்றி வலம் வர…..

”கோபுர தரிசனமே கோடி புண்ணியம்” என்று அளந்ததைக் கேட்டு இன்னொரு கூட்டம் கோயிலுக்கு வெளியே வாயைப் பிளந்து பார்த்துக் கொண்டிருக்க…….

”ஆகமத்துக்கு ஆகாது. அப்படியே நில்” என்றதை ஏற்று கருவறைக்கு வெளியே மற்றொரு கூட்டம் காத்துக் கிடந்த வேளையில்தான் அந்தக் குரல் ஒலித்தது……..

“ஆண்டவன் படைப்பில் அனைவரும் சமம் என்றால் இறைத் தலங்களில் மட்டும் ஏனடா இந்தப் பாகுபாடு?” என்று பெரியாரிடமிருந்து ஓங்கி ஒலித்தது அந்தக் குரல்.

நட்ட கல்லைத் தெய்வமென்று நாலுபுட்பம் சாற்றியேசுற்றிவந்து முணுமுணென்று சொல்லும் மந்திரம் ஏதடாநட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ”

 

 

 

 

என்று சிவவாக்கியர்கள் கரடியாய் கத்தியும் விழித்தெழாத இந்த சமுதாயம்…….

அந்த ஈரோட்டுக் கிழவன் போட்ட போட்டில்தான் விழித்துக் கொண்டது. அவன் ஆத்திகர்களுக்கும் சேர்த்துப் போராடினான். சமத்துவமற்ற சமயத் தலங்களை சனநாயகப் படுத்துவதில் முன்னணி வீரனாய் நின்றான்.

 

ஆம் தந்தை பெரியார் மட்டும் இல்லாவிட்டால்……..

வைக்கம் நகரத்து வீதிகளில் ஒடுக்கப்பட்ட ஆத்திகர்கள் நடமாடியிருக்கவே முடியாது.

 

ஆம் தந்தை பெரியார் மட்டும் இல்லாவிட்டால்……..

கோபுரத்தை மட்டுமே கும்பிட்டுச் சென்றவர்கள் கோயிலுக்குள் கால் வைத்திருக்க முடியாது.

 

ஆம் தந்தை பெரியார் மட்டும் இல்லாவிட்டால்……..

”ஆலயங்களில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்” என்கிற குரல் உரக்க எழுந்திருக்க முடியாது.

 

ஆம் தந்தை பெரியார் மட்டும் இல்லாவிட்டால்……..

பெண்கள் வழிபடுவதற்கே பிரஸ்னம் பார்த்து குறி சொல்லிக் கொண்டிருக்கும் ”கேரள ஏட்டன்மார்களுக்கு” நடுவே வழிபடுவது மட்டுமல்ல….. பெண்கள் வழிபாடே நடத்தலாம் என்கிற நெத்தியடி மேல்மருவத்தூர் வழிமுறைகள் தோன்றியிருக்க முடியாது.

 

தெருநுழைவுப் போராட்டம்……

கோயில் நுழைவுப் போராட்டம்…..

கருவறை நுழைவுப் போராட்டம்……

சாதிபேதமற்ற வழிபாட்டு உரிமைக்கான போராட்டம்………

என எண்ணற்ற போராட்டங்களை இம்மண்ணில் அவர் நடத்தியிருக்காவிட்டால்

“போங்கப்பா நீங்களும்….. உங்க ஆத்திகமும்” என்று துண்டை உதறித் தோளில் போட்டு விட்டுப் போயிருப்பார்கள் பலர்.

எனது முப்பாட்டன் கோயிலுக்குள் நுழைய முடியாமல் இருந்த நிலை மா(ற்)றி

இன்று எனது தலைமுறை நுழைகிறதென்றால் அதற்குக் காரணம் அந்தப் பெரியார்தான்.

 

ஆம்.

பெரியார் நாத்திகர்களுக்கு  மட்டுமில்லை

ஆத்திகர்களுக்கும் அவர்தான் தலைவர்.

இந்த வாரம்……… காங்கிரஸ் வாரம்………

tblArasiyalnews_70975893736

காங்கிரஸ் தலைகளைக் கண்டாலே பின்னங்கால் பிடறியில்பட ஓடுகிறார்கள் கோடம்பாக்கத்துக்காரர்கள். பின்னே வேலியில் போகிற டைனோசரை எடுத்து வேட்டியில் விடுவதற்கு அவர்களுக்கு என்ன பைத்தியமா பிடித்திருக்கிறது? ஏனெனில் காங்கிரசுக்கும் கலை உலகுக்குமான ”லட்சிய உறவு” அப்படிப்பட்டது. அதில் சேர்ந்த நடிகர்களில் ஒருவர் கூட ”வாழ்ந்ததாக” வரலாறு கிடையாது.

ஒருகாலத்தில் காங்கிரசில் சேர்ந்து ”தேசபக்த”த் தொண்டாற்றப் போன ”தேசிய நடிகை” மாயா கூட பொதுக்குழுவிலோ செயற்குழுவிலோ சிக்கி சின்னாபின்னமாகி உதைபட்டு கடிபட்டு கடைசியில் ”நடிகை மாயா கடிபட்ட இடம் இதுதான்” என்று பத்திரிகைகளில் முதுகில் அம்புக்குறி போட்டு வந்த படங்களை லேசில் மறந்திருக்க மாட்டார்கள் பலரும்.

இந்த லட்சணத்தில் ரஜினியோ…… விஜய்யோ….. சூர்யாவோ போய் மாட்டித் தொலைத்தால் நாளை எந்த இடத்தில் அம்புக்குறி போட்டுப் படங்கள் போட வேண்டி வருமோ நமது பத்திரிக்கைகளுக்கு……. அது காங்கிரசுக்கே வெளிச்சம்.

ராகுலின் தமிழ் நாட்டுப் பயணத்தை ஒட்டி உள்ளூர் காங்கிரஸ் ஆசாமிகள் கொடுத்த விளம்பரங்களைப் பார்த்த உடனேயே தெரிந்து விட்டது. நிச்சயம் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்கத்தான் போகிறது என்பது. ஆனால் இங்கல்ல பிரிட்டனில் என்று. காரணம் : ஏறக்குறைய அத்தனை விளம்பரங்களுமே ஆங்கிலத்தில் இருந்ததுதான். இதில் ராகுல் அடித்த கூத்துகள் தனி ரகம். ஏற்கெனவே கோமா ஸ்டேஜில் கிடக்கும் காங்கிரசை தூக்கி நிறுத்த என்னென்ன வழிகள் என்று அவர் ஊர் ஊருக்கு ஆலோசித்த காட்சிகள்தான் அற்புதத்திலும் அற்புதம்.

வாரிசின் அடிப்படையிலேயே உலா வந்திருக்கும் ராகுல்…..

அதே வாரிசு அடிப்படையில் வந்திருக்கும் கார்த்திக் சிதம்பரத்தைப் பக்கத்தில் வைத்துக் கொண்டு வாரிசு அரசியல் ஒருபோதும் கூடாது என்று முழங்கிய முழக்கமென்ன……..

இன்னமும் இருபத்து மூன்று ஆண்டுகளுக்கு மேலாகியும் போபர்ஸ் ஊழலின் பிதா யாருடைய பிதா எனக் கண்டுபிடிக்கக் கையாலாகாத நிலையில் “ஊழலை ஒழிப்பேன்” என கர்ஜித்த கர்ஜனையென்ன…….

அடடா…… எல்லாம் கண்கொள்ளாக் காட்சிகள்தான்.

சத்தியமூர்த்தி பவனில் பீட்டர் அல்போன்சை ”பேசாதே உட்காரு” என ஒரு கோஷ்டி சொல்ல…..

”பேசு தலைவா”ன்னு இன்னொரு கோஷ்டி திருப்பிச் சொல்ல…..

ரெண்டு கோஷ்டியையும் சேராத இன்னொரு கோஷ்டி மைக்கைப் பிடிக்க…….

மற்றொரு கோஷ்டி மைக்கை ஆப் செய்ய…….

இத்தனைக்கும் நடுவே ”கோஷ்டி பூசலை ஒழிப்பதுதான் என் லட்சியம்” என ராகுல் சத்தியப்பிரமாணம் எடுத்துக் கொண்டாராம்…….

ஆக இருக்கிற கோஷ்டிகள் போதாதென்று கடைசியில் காங்கிரசுக்குள் ”கோஷ்டியை ஒழிக்கும் கோஷ்டி” என்று புதிதாக ஒரு கோஷ்டி உருவானதுதான் மிச்சம்.

குடிசைக்குள்ளே திடீரென்று நுழைவது……

குழந்தைப் பசங்களோடு கோலி குண்டு விளையாடுவது……

தேர்தல் நேரத்தில் “வண்க்க்கம்” என்று பல்லிளிப்பது…….

போன்ற பல ஸ்டண்ட்டுகளை அப்பா ராஜீவ்….. பாட்டி இந்திரா…… கொள்ளுத் தாத்தா நேரு….. காலத்திலிருந்து பரம்பரை பரம்பரையாகப் பார்த்த மாநிலம்தான் தமிழகம் என்கிற வரலாற்றையும் யாராவது சொல்லிக் கொடுத்து கூட்டி வந்திருந்தால் தேவலை.

எல்லாவற்றுக்கும் மேலாக…….

”ஊழலை ஒழிப்பேன்….”

”கோஷ்டி அரசியலை ஒழிப்பேன்…..”

”வாரிசு அரசியலை ஒழிப்பேன்….. ”

என்றெல்லாம் இப்படித் தனித்தனியாக தலையைச் சுற்றி மூக்கைத் தொடுவதற்கு பதிலாக பேசாமல் பெரியார் சொன்ன மாதிரி ”காங்கிரசை ஒழிப்பேன்” என ஒரே வரியில் சொல்லிவிட்டுப் போயிருக்கலாம் ராகுல்.

                                                                           **********

 

நாட்டில் தலை விரித்தாடும் வறட்சியைப் போக்க சிக்கனத் திட்டங்களை அறிவித்துள்ளாராம் மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி. அதில் ஒன்றுதான் மத்திய அமைச்சர்களும் எம்.பி.களும் இனி விமானப் பயணத்தின் போது முதல்வகுப்பில் பயணம் செய்யக் கூடாது. சாதாரண வகுப்பில்தால் பயணம் செய்ய வேண்டும் என்பது.

சொல்லி வாய் மூடுவதற்குள்ளாகவே “நானோ குண்டு. நானெப்படி சாதாரண வகுப்பில் பயணம் செய்ய முடியும்?” என்று விவசாய அமைச்சர் புலம்ப……

“நான் எக்கச்சக்க உயரம் என்னால் எப்படி வர முடியும் சாதாரண வகுப்பில்?” என்று அமைச்சர் அப்துல்லா அலற…..

“வெளிநாட்டுப் பயணத்தில் சாதாரண வகுப்பில் வந்தால் பெண்டு கழண்டுவிடும்” என்று வர்த்தக அமைச்சர் ஆனந்த் சர்மா அங்கலாய்க்க…..

சந்தி சிரிக்கிறது காந்தீய வழியில் நடக்கும் காங்கிரசின் லட்சணம்.

நட்சத்திர ஓட்டல்களில் இனி கருத்தரங்குகளை நடத்தக்கூடாது என்று சொன்னால்…… ”விருந்துகளை மட்டுமாவது வைத்துக் கொள்ளலாமா?” என்கிறார் எஸ்.எம்.கிருஷ்ணா.

”வெளிநாட்டுப் பயணத்தின்போது எங்கள் தினப்படியைக் கூட்டிக் கொடுக்க வேண்டும்” என்று சோத்துக்கு வழியில்லாமல் வயிற்றில் ஈரத்துணியைக் கட்டிக்கொண்டு கிடக்கும் பரம ஏழையைப்போல் பரிதவிக்கிறார் மற்றொரு அமைச்சர்.

நம்மைப் பொறுத்தவரை இந்த விமானப் பயணச் சிக்கனம்….. ஆடம்பர ஓட்டல் சிக்கனம்…. போன்ற டுபாக்கூர் சிக்கன நடவடிக்கைகளுக்கு பதில்…..

ஆண் அமைச்சர்கள் இனி காந்தியைப் போல மேல்சட்டை அணியாமல் வெறும் வேட்டியை மட்டும்தான் கட்டிக்கொண்டு வர வேண்டும்……

பெண் பிரமுகர்கள் நூல் புடவைதான் கட்ட வேண்டும்…..

விமானத்தில் கூட நுழைய முடியாமல் தவிக்கிற அமைச்சர்கள் இனி காந்தியைப் போல ஆட்டுப்பாலும், வேர்க்கடலையும்தான் சாப்பிட வேண்டும்……

அல்லது உடம்பு இளைக்கும்வரை வீட்டிலிருந்து பாராளுமன்றத்துக்கு ஓடித்தான் வரவேண்டும்…..

சம்பளத்தில் 20 சதவீதத்தை வறட்சிக்குக் கொடுப்பதற்கு பதில் சேர்த்துள்ள சொத்தில் 20 சதவீதத்தைக் கொடுக்க வேண்டும்…..

என்பது போன்ற உருப்படியான உத்தரவுகளைப் போட்டால்தான் நாட்டில் உள்ள பணவீக்கம் குறைவதோடு அவர்கள் உடலில் உள்ள வீக்கமும் குறையும்.

இது போக இன்னும் என்னென்ன சிக்கன நடவடிக்கையில் ஈடுபட்டால் நாட்டை முன்னேற்றலாம் என்பதற்கு அரிய ஆலோசனைகள் தேவைப்படுபவர்கள் அணுக வேண்டிய முகவரி:

காங்கிரஸ் கட்சி அலுவலகம்

சத்தியமூர்த்தி பவன்

சென்னை.

ஏனெனில் இந்தியாவிலேயே இங்குதான்

கோட்டு சூட்டுடனோ…….

வேட்டி சட்டையுடனோ உள்ளே நுழைபவர்கள் வெறும் கோவணத்தோடு வெளியில் வருகிற ”உச்சகட்ட சிக்கன நடவடிக்கை முகாம்கள்” அடிக்கடி அரங்கேறிக் கொண்டிருக்கிறது.

இந்த வாரம் அம்புட்டுதானுங்கோ.

சொந்த மண்ணிலேயே அந்நியராகினோம்……..

 

கடந்த வாரம் தனியார் தொலைக்காட்சியில் இருந்து நேர்காணலுக்காக வந்திருந்தார்கள். அவர்கள் கேட்கவந்த சேதி இன்றைக்குப் பலரையும் பீதிக்கு உள்ளாக்கியிருக்கும் பன்றிக் காய்ச்சல் பற்றித்தான்.

ஏற்கெனவே மக்கள் மிரண்டு போயிருக்கும் சூழலில் ஆக்கபூர்வமாக எதை சொல்வது என்பதுதான் எனது யோசனையாக இருந்தது.

”இத்தகைய தொற்று நோய்க் கிருமிகளையும், உயிருக்கே உலை வைக்கும் வைரஸ்கள் பற்றியும் ஆராய்வதற்கென்றே ஒரு நிறுவனம் அமெரிக்காவில் இருக்கிறது. அதைப் பற்றியும் விசாரித்துவிட்டு பேட்டி கொடுங்கள்” என்றார் டாக்டர்.ரமேஷ்.

அவர் சொன்னபடி விசாரணையில் இறங்கிய எனக்குக் காத்திருந்ததோ அதிர்ச்சி மேல் அதிர்ச்சிதான். அதிர்ச்சிக்குரிய அந்த நிறுவனத்தின் பெயர்தான் : தொற்று நோய்க்கான அமெரிக்க ராணுவ மருத்துவ ஆராய்ச்சி நிலையம். (United States Army Research Institute of Infectious Diseases – USAMRIID)

ராணுவ மருத்துவ ஆராய்ச்சி என்றவுடன் ஏதோ காய்ச்சல் இருமலுக்கு மருந்து கொடுக்கும் ’ஆஸ்பத்திரி’ என்று தப்புக் கணக்கு போட்டுவிட வேண்டாம் யாரும். மற்ற நாடுகளுடன் போர் தொடுக்கும் போது எத்தகைய கிருமிகளை ஏவிவிட்டு ”எமலோகமோ”….அல்லது ”பரலோகமோ” அனுப்பலாம் என்பதற்கான ஆராய்ச்சி நிலையம் அது.

அதாவது நோய் தீர்க்கும் நிறுவனமல்ல. 

நோய்க்கிருமி உற்பத்தி நிறுவனம்.

உயிரியல் போரில் பெரும் பங்காற்றும் அப்பேர்ப்பட்ட “புகழ் வாய்ந்த” அந்த ஆராய்ச்சி நிலையத்தின் அட்டவணையிலேயே இன்னும் 9220 வகை நோய்க் கிருமிகள்  சேர்க்கப்படாமல் இருக்கின்றது என்பதுதான் நம்மைக் குலை நடுங்க வைக்கும் விஷயம்.

இவை இந்த ரகத்தில் இருக்க அயல் நாட்டு சீதனமாய் வந்துள்ள பன்றிக்காய்ச்சலை எப்படி எதிர்கொள்வது என்பதுதான் இன்று அரசுகளுக்கு முன் உள்ள பிரதான கேள்வி. 

முதலில் ஒருவருக்கு அந்தக் கிருமி தொற்றியுள்ளதா இல்லையா என்பதைக் கண்டறிந்து தெளிவுபடக் கூறிவிட்டாலே பாதி பீதி அகன்றுவிடும். அப்படிக் கண்டறிவதை எங்கே சென்று கண்டறிவது என்பதில்தான் குழப்பம்.

அரசு மருத்துவமனையா?

அல்லது தனியார் மருத்துவமனையா? இத்தகைய தொற்று நோய்க்கெல்லாம் தனியார் மருத்துவமனைகளை அணுகுவதை விட அரசு மருத்துமனைகள்தான் சரியானவை என்பது பல்வேறு நிபுணர்களின் கருத்து.

இதையே சாக்காக வைத்து எரிகிற வீட்டில் பிடுங்குவது லாபம் என்று தனியார் மருத்துவமனைகள் கொழுக்கின்றன என்பது ஒரு புறம் இருந்தாலும் ஆண்டுக்கு ஒரு தொற்றுநோய் தென்படத் துவங்கிவிட்ட இத்தருணங்களில் கடந்த முறை எந்த நோய்க்கு எத்தகைய சிகிச்சை அளிக்கப்பட்டது என்கிற புள்ளிவிவரங்கள் அரசிடம் இருப்பது எதிர்கால நடவடிக்கைகளுக்கு பெருமளவுக்கு நல்லது.

ஆனால் அவ்வளவு பேரும் ஒட்டுமொத்தமாகப் போய் சிகிச்சை பெறக் கூடிய வசதி அரசிடம் இருக்கிறதா? என்பதுதான் எல்லோருக்குள்ளும் எழும் எண்ணம்.

ஆனால் இத்தகைய எண்ணங்களை அரசு நினைத்தால் ஒரே நாளில் மாற்றிவிட முடியும் என்பதுதான் எதார்த்தம். சென்னையில் ஏறக்குறைய 150 வார்டுகள் இருக்கிறது என்று வைத்துக் கொண்டால் ஒவ்வொரு வார்டிலும் ஒரு நோய் பரிசோதனை ஆய்வகத்தை நிறுவி ஒரு மருத்துவரை நியமித்தாலே போதுமானது. அதற்கொன்றும் கோடிக்கணக்கில் கொட்டி செலவழிக்க வேண்டியதில்லை.

மாணவர்கள் காப்பி அடிக்கிறார்களா இல்லையா என்பதை கண்காணிப்பதற்கெல்லாம் பறக்கும்படையை வைத்திருக்கிற அரசு இதற்கென மருத்துவர்கள் கொண்ட பறக்கும்படைகளை அமைத்து கண்காணிக்கலாம்.

இத்தகைய ஆய்வகங்களை பன்றிக்காய்ச்சலுக்கு மட்டும் பயன்படுத்தலாம் என்றில்லை.

நேற்று : சிக்கன் குனியா.

இன்று : பன்றிக்காய்ச்சல் என்றிருக்கும் நிலையில்

நாளை: வேறு ஏதேனும் தொற்றுநோய் தென்பட்டால்கூட இத்தகைய ஆய்வகங்கள் அதற்கும் பயன்படும்.

இதற்கெல்லாம் துட்டுக்கு எங்கே போவது என்று நம் அரசாங்கம் ஒரு போதும் கூறாது என்று அடித்துக் கூறலாம் நாம்.

ஒரு ரூபாய்க்கு அரிசியும்…. வீட்டுக்கு வீடு இலவச டீ.வி.யும் வழங்குபவர்கள் வார்டுக்கு வார்டு ஒரு ஆய்வகம் வைக்கமாட்டார்களா என்ன?

**********

 

சட்டக்கல்லூரி மாணவர்கள் சாதிச் சண்டை போட்டுக்கொண்டார்கள் என்பதை மட்டும் ஓங்கிக் குரல் DSC05428கொடுத்துச் சொன்ன மீடியாக்கள்…. அவர்கள் அற்புதமான செயல்களில் ஈடுபடும்போது ஓசைப்ப்டாமல் ஒதுங்கிக் கொள்வது எந்தவிதத்திலும் சரியாகாது.

ஏறக்குறைய சகல தலைவர்களும் ஈழப் பிரச்சனையில் குறட்டை விட்டுக் கொண்டிருக்க ஆர்ப்பாட்டமில்லாமல் ஒரு கையெழுத்து இயக்கத்தில் இறங்கியிருக்கிறார்கள் சட்டக்கல்லூரி மாணவர்கள்.

சொந்த நாட்டிற்குள்ளேயே மூன்று லட்சம் மக்கள் அகதிகளாக்கப்பட்டு ஹிட்லரது வதை முகாம்களை மிஞ்சுகின்ற வகையில் அமைக்கப்படுள்ள முகாம்களில் அல்லல்படுவதை தடுத்து நிறுத்தி உடனடியாக அவர்களது வாழ்விடங்களில் மீளக்குடியமர்த்தி நீதி வழங்கக் கோரியும்…..

தங்களின் சொந்த நாட்டு மக்களின் மீதே மனிதகுலம் வெட்கித் தலை குனியும் அளவிற்கு முப்படைத் தாக்குதல்களை நடத்தி பல்லாயிரம் தமிழ் மக்களைக் கொன்று குவித்த இலங்கை அரசின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சே மற்றும் அவரது சகோதரர்களைக் கைது செய்து சர்வதேச DSC05397குற்றவியல் வழக்கு மன்றத்தின் முன்பாக நிறுத்தக் கோரியும் ஐ.நா.சபையை வலியுறுத்தி இக்கையெழுத்து இயக்கத்தை தமிழகமெங்கும் தொடங்கியுள்ளார்கள் மரியாதைக்குரிய இம்மாணவர்கள். .

”இதை நீங்கள் மட்டும்தான் செய்ய வேண்டுமா? நாங்கள் எந்தவிதத்தில் குறைந்து போனோம்?” என்கிற கேள்வியை வீசியபோது…… ”நாங்க மட்டுமில்லை இந்த அவலங்களைக் கண்டித்து மனிதநேயமுள்ள எவர் குரல் கொடுத்தாலும்…. இதற்காக யார் கையெழுத்து வாங்கி அனுப்பினாலும் பெரும் நிம்மதிதான் எங்களுக்கு.” என்கிறார்கள் ஒட்டுமொத்தமாய்.

அந்த மாணவர்களுக்கு நிம்மதியோ இல்லையோ துயரின் விளிம்பில் உயிர்வாழும் அம்மக்களுக்கு உங்களது கையெழுத்தும் ஒருவேளை உதவக்கூடும். அதற்கான கையெழுத்துப் படிவமோ அல்லது விளக்கமோ வேணும்கிற மகராசருக 9865417418 ங்குற நம்பருக்கு நட்டநடு ராத்திரில கூப்பிடாம பட்டப்பகல்ல கூப்பிடுங்கப்பா. அப்புறம் உங்கபாடு அவுங்கபாடு.

DSC05414
DSC05458நன்றி: தமிழக அரசியல் வார இதழ்.

விளையாட்டு : வெறும் விளையாட்டல்ல…..

சர்வகட்சிப் பிரமுகர்கள், இடதுசாரிகள், தமிழ்த்தேசியவாதிகள், திரையுலகினர் என அத்திருமண மண்டபமே களைகட்டியிருந்தது. இப்படி சகல முகாம்களில் இருப்பவர்களும் ஒரே இடத்தில் கூடும் நிகழ்வு எப்போதாவதுதான் வாய்க்கிறது. இந்தமுறை அதற்கான வாய்ப்பை வழங்கியவர் தோழர்.மணிவண்ணன். அவரது மகள் ஜோதி திருமணத்தில்தான் இப்படி சகலரும் கூடி அசத்திக் கொண்டிருந்தார்கள்.

காலையில் ஏறக்குறைய இரண்டுமணி நேரம் பல்வேறு இயக்கப் பிரமுகர்களும், திரையுலகினரும் மணமக்களை வாழ்த்திப் பேச….. அனைவரது பேச்சையும் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தார்கள் திருமணத்திற்கு வந்திருந்தவர்கள். மேடையில் பெண்விடுதலை…… பெரியார் சிந்தனைகள்…… என ஆளாளுக்கு அசத்திக் கொண்டிருந்தார்கள். நண்பர் சத்யராஜ் மேடைக்கு அழைத்தார். நாம் போய் சொதப்புவதை விட அந்தப் பத்து நிமிடத்தை மற்றவர்கள் எடுத்துக் கொண்டால்  பயனுள்ளதாக இருக்குமே என்கிற யோசனையில்……. அவருக்கும், மணிவண்ணனுக்கும் ஒரு பெரிய கும்பிடாய் போட்டுவிட்டு கீழேயே இருந்துவிட்டேன்.

அனைவரது பேச்சையும் பொறுமையாகக் கேட்டுக் கொண்டு இறுதியாகப் பேச வந்த ரஜினி இன்றைக்கும் கூட பலருக்கும் தெரியாத ஒரு வரலாற்று உண்மையை சத்தமில்லாமல் போட்டு உடைத்ததைக் கண்டு ஆடிப் போனேன் நான் . பெரியாரிடம் இருந்து பிய்த்துக் கொண்டுபோய் தி.மு.க வை ஆரம்பித்ததற்கான உண்மையான காரணங்கள் என்னென்ன? இந்திய சுதந்திரத்தை ஏற்றுக் கொள்வதில் பெரியாருக்கும் அண்ணாவுக்கும் இருந்த முரண்பாடுகள்…..  என்பவற்றையெல்லாம் அக்குவேறு ஆணிவேறாக அலசும் புத்தகங்களை தனக்கு மணிவண்ணன்தான் படிக்கக் கொடுத்ததாக மனம்விட்டுப் பேசினார் ரஜினி. என்னைப் போன்றவர்களுக்கு ரஜினியுடன் எண்ணற்ற விசயங்களில் முரண்பாடுகள் இருந்தாலும் அன்றைக்கு அவர் பேசிய பேச்சு மனதுக்கு ஆறுதலாக இருந்தது மறுக்க முடியாத உண்மை.

”கல்யாணம்தான் பிரச்சனை” என்று வெளியில் புரளி கிளப்பினாலும் இன்றைக்கும் நாறிக் கொண்டிருக்கும் சுதத்திரத்தை ஏற்றுக் கொள்வதில் பெரியாருக்கும் அண்ணாவுக்கும்  இருந்த அடிப்படை முரண்பாடுகள் என்ன? ”ஒன்றே குலம் ஒருவனே தேவன்” என்பதில் தொடங்கி….. ஓட்டு அரசியலுக்காக அடித்த பல்வேறு பல்டிகள் வரைக்கும் அநேக விசயங்களில் பெரியாரிடம் இருந்து அண்ணா எப்படி அடிப்படையிலேயே மாறுபட்டார் என்பது தி.மு.க.வின் நதிமூலத்தை அறிந்தவர்களுக்கு தெளிவாகத் தெரியும்.

மேடையில் பேசிய ரஜினி குறிப்பிட மறந்த அந்த புத்தகத்தின் பெயர் :  ”ஆகஸ்ட் 15 – இன்பநாள் – துக்க நாள்” என்பதுதான். என்னை மலைக்க வைத்த எண்ணற்ற நூல்களில் அதுவும் ஒன்று.

எது எப்படியோ வெகு சிலருக்கு மட்டுமே தெரிந்த ஒரு வரலாற்று உண்மையை பலருக்கும் கொண்டுபோகும் வகையில் பேசிய ரஜினியை கஞ்சத்தனம் இல்லாமல் பாராட்டித்தான் தீர வேண்டும்.

**********

(ஒரு முன்குறிப்பு: கீழுள்ள பகுதியினை அப்படியே இங்கிலீஷில் மொழிபெயர்த்து நந்திதாதாஸ், அருந்ததிராய் உட்பட பிற கலைஞர்களது பார்வைக்கும் அனுப்பி வைத்தால் நமது கூட்டு முயற்சிக்கு ஒருவேளை பயன்கிடைக்க வாய்ப்பு உண்டு என்பது எனது நம்பிக்கை. அப்படி அனுப்புகின்ற நல்ல உள்ளங்கள் அதன் ஒரு பிரதியினை எனக்கும் அனுப்பி வைப்பின் மிக நிறைவு கொள்வேன்.)

 

சச்சின் டெண்டுல்கர் ஏலத்திற்கு விட்டிருக்கிறார் தன்னையே. அதுவும் செப்டெம்பர் 27 தொடங்கி அக்டோபர் 3 ஆம் தேதி வரையிலும் ஒரு வாரத்திற்கு. கொஞ்சம் பொறுங்கள்….. அவசரப்பட்டு முடியைப் பிய்த்துக் கொள்ள வேண்டாம் யாரும்.

அதாகப்பட்டது…… சச்சின் சகலருக்கும் தெரிவிப்பது யாதெனில்…… இவர் தன்னையே ஏலம்  அறிவித்திருக்கிறார். அந்த ஏலத்தில் யார் அதிக விலைக்கு தன்னை ஏலம் எடுக்கிறார்களோ…… அவருடனேயே ஒருவாரம் தங்கியிருந்து கிரிக்கெட் விளையாடுவதில் இருந்து காய்கறி நறுக்குவது வரைக்கும் சகலத்தையும் கற்றுத் தரப் போகிறார். அப்படி ஏலமாகக் கிடைக்கும் பனத்தை வைத்து sachinஏழை எளியவர்களுக்கு உதவப்போகிறாராம் அவர். “பிறருக்கு கொடுப்பதில் இருக்கும் பேரானந்ததிற்கான வாரம்” (JOY OF GIVING WEEK) என அறிவித்திருக்கிறார். இந்த அற்புதமான ஆலோசனையை அவருக்கு வழங்கியவர் சச்சினின் பத்து வயது மகள் சாரா.

பிறருக்கு ஈதலில் இருக்கும் பேரானந்தம் புரிகிறது நமக்கு. ஆனால் அதற்கு முன்னதாக அவர் செய்யத் துணிந்திருக்கும் செயல்தான் நம்மை பெரும் துயரில் தள்ளியிருக்கிறது.

நாடே சுடுகாடாக…..

மனித உயிர்களை பிய்த்துக் குதறி நாய்கள்கூட கவ்விக் கொண்டு ஓடும் புதைமேடாக……

தமிழர்கள் மரண ஓலத்தில் அபயக்குரல் எழுப்பிக் கொண்டிருக்கும் இலங்கையோடு கிரிக்கெட் விளையாடப் போயிருக்கும் செயல்தான் அது.

மனித குலத்தின் மீது அக்கறை கொண்ட எவரும் இச்செயலை செய்யத் துணிய மாட்டார்கள். அதுவும் பிறருக்கு கருணையை  அள்ளிக்கொடுப்பதில் பேரானந்தத்தை அடையத் துடிக்கும் சச்சின் போன்றவர்கள் எந்த முகத்தோடு இலங்கையில் கால் வைக்கத் துணிகிறார்கள் என்பதுதான் நமக்குள் எழும் கேள்வியே.

விளையாட்டை வெறும் விளையாட்டாகப் பாருங்கள். அதை அரசியல் ஆக்காதீர்கள் என்று முணுமுணுப்பவர்கள் ஒருமுறை வரலாற்றைத் திரும்பிப் பார்த்தால் போதும் பல உண்மைகள் புரிபடும். அதுவும் இன்னொரு விளையாட்டு வீரரிடம் இருந்தே ஒலித்த அந்த மனிதநேயம் மிக்க குரலை இன்னொரு முறை கேட்டுவிடுவது எல்லோருக்கும் நல்லது. அதுதான் விளையாட்டு வீரர் விஜய் அமிர்தராஜின் குரல். அதுவும் ஐ.நா.சபையிலேயே ஓங்கி ஒலித்த குரல் இதுதான்:

விளையாட்டை வெறும் விளையாட்டாகப் பார். அரசியலை அதனுடன் கலக்காதே’ என்கிற வியாக்கியானம் எல்லா சமயங்களிலுமே சாத்தியமில்லை. அதில் பல சமயங்களில் நாம் எதிர்க்க வேண்டியோ அல்லது ஆதரிக்க வேண்டியோ வரலாம். ஏனெனில் நாம் முதலில் மனிதர்கள். அதன்பின்புதான் நாம் விளையாட்டு வீரர்கள். தென் ஆப்பிரிக்கா என்னைப் பலமுறை விளையாட 14742172_VijayAmritrajஅழைத்தும் நான் மறுத்ததிற்கான காரணம் அதனது நிறவெறிக் கொள்கைதான். நாம் மனிதர்கள் என்பதால் நம் ஒவ்வொருவருக்கும் ஆற்றியாக வேண்டிய மகத்தான கடமை இருக்கிறது. இப்பூவுலகம் அனைவருக்கும் பொதுவானது என்கிற சமூக அக்கறை அனைவருக்குள்ளும் இருந்தாக வேண்டிய அவசியம் இருக்கிறது.”

என்று எளிய மனிதர்கள் சார்பாக 1988 இல் குரல் கொடுத்தார் விஜய் அமிர்தராஜ்.

 

 

 

நிறவெறி ஆப்பிரிக்காவோடு விளையாடக் கூடாது என்கிற நியாயம்……

சிங்கள இனவெறி தலைவிரித்தாடும் இலங்கைக்குப் பொருந்தாதா?

 

ஏறக்குறைய 2270 ஆண்டுகளுக்கு முன்பு பல்லாயிரம் மக்களை கொன்றுகுவித்து….. எண்ணற்றவர்களை ஊனமாக்கி கலிங்கபோர்க் களத்தில் வெற்றி இறுமாப்போடு நின்ற அசோகச் சக்ரவrahmanர்த்தியிடம்…….

“எண்ணற்றவர்கள் உன் வாளில் வீழ்ந்தார்கள்  சரி. ஆனால் இறுதியில் நீ அடைந்திருப்பது என்ன?” என்கிற கேள்வியை எளிமையின் இலக்கணமாய்த் திகழ்ந்த புத்த பிக்குகள் எழுப்பினார்கள்  கொல்லாமையைப் போதித்து பிறருக்கு கருணையை அள்ளி வழங்குவதன் தத்துவத்தை உணர்த்தினார்கள் அன்று..

மனித உயிர்களின் மகத்துவத்தை உணராமல் நர வேட்டையாடி வரும்  நவீன மன்னன் ராஜபக்சேவிடம் ”இதை எப்போது நிறுத்தப்போகிறீர்கள்?” என்ற கேள்வியை யார் கேட்பது என்பதுதான் நமது கேள்வி.

அலறித் துடிக்கும் மானுடத்தின் இக்கேள்வியை ஆஸ்கார் விருதை வென்றும் ஈழத் துயரால் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க மறுத்த தம்பி ஏ.ஆர்.ரகுமான் கேட்கலாம்……

குஜராத் படுகொலைகளை தனது “பரூக்” படத்தின் மூலமாகப் பதிவு செய்த தோழி நந்திதாதாஸ் கேட்கலாம்…..

உலகில் அவலங்கள் நேரும் போதெல்லாம் தன் சுட்டு விரலை நீட்டிக் குரல் கொடுக்கிற அnandita_dasருந்ததிராய் கேட்கலாம்…….

இவர்களைப் போன்ற மனித நேயம்மிக்க கலைஞர்கள் எவரும் கேட்கலாம்……

அதுவும் அசோகனுக்கு போதித்த அந்த மகத்தான புத்த துறவிகள் விட்டுச் சென்ற இடத்தில் நின்று.

முதலில் மரணத்தின் விளையாட்டுக்கு வையுங்கள் முற்றுப்புள்ளி.

பிற்பாடு ஆடலாம் மனிதர்களது எந்த விளையாட்டையும்.

 

 

 

2000_0510_Arundhati_Roy_1232-6-5நன்றி : தமிழக அரசியல்

சோறா?…. மானமா?….

 

இந்தக் கதி ஏற்பட்டிருக்க வேண்டாம்……… உலகப் பொதுமறையைத் தந்த வள்ளுவருக்கு.

கடைசியில் பண்டமாற்று முறையில் திறக்கப்பட இருக்கிறது வள்ளுவரது சிலை. கடந்த 18 ஆண்டுகளாய் முக்காடிட்டு மூடி வைக்கப்பட்டிருந்த திருவள்ளுவர் சிலையை ஒருவழியாக திறக்க இருப்பது ஆறுதல் அளிக்கும் செய்திதான். ஆனால் அதுவும் எந்த அடிப்படையில் என்பதுதான் சற்று மனதை நெருடும் விசயம்.

நாம் வேண்டுமானால் வள்ளுவரை எந்த சமயத்துக்கும், எந்த இனத்துக்கும் ஏன் எந்த ஒரு தேசத்துக்கும்கூட‌ சாராத மனித குலத்தின் பிரதிநிதி் என பெருமிதத்துடன் சொல்லிக் கொள்ளலாம் ஆனால் இதுவெல்லாம் கன்னட வெறியர்களுக்கு உரைத்தால்தானே? கன்னட கவிஞர் சர்வக்ஞர் சிலையத் திறக்க விட்டால்தான் திருவள்ளுவரை விடுவிப்போம் என்பது ஆறறிவு உள்ள எவரையுமே ஆச்சர்யப்படத்தான் வைக்கும். சிங்களர்களுக்கு கோபம் வராமல் அப்ளிகேஷன் போடச் சொன்ன முதல்வர்  இந்த விஷயத்தில் கன்னடர்களுக்குக் கோபம் வராமல் இருக்க சர்வக்ஞர் சிலை திறப்புக்கு பச்சைக்கொடி காட்டியிருக்கிறார்.

கன்னட வெறியர்களைப் போல  ”மொழி பார்த்துத்தான் சிலைகளை வைப்போம்” என தமிழர்களும் முடிவெடுத்து விட்டால் தமிழகத்தில் கணிசமான அள‌வுக்கு சிலைகள் காணாமல் போக நேரிடும். ஆனால் நாம்தான் எப்போதும் வந்தாரை வாழ வைப்பதில் பெருமை கொள்ளும் உலக மகா இளிச்சவாயர்களாயிற்றே. ஆக அப்படி எதுவும் இங்கு நடந்துவிடப் போவதில்லை.

எது எப்படி இருப்பினும் கர்நாடகத்தில் வள்ளுவருக்கு விழா எடுக்கட்டும் அவரது சிலைகளைத் திறக்கட்டும். அதில் ஒன்றும் முரணில்லை நமக்கு. ஆனால் அவை எல்லாவற்றையும்  விட முக்கியமாக மனித குலத்திற்கே பொதுவான மறையைத் தந்தவரின்  அந்த ஒப்பற்ற குறள்களை கன்னடத்தில் வரிக்கு வரி மொழிபெயர்த்து வீட்டுக்கு வீடு விநியோகிப்பதுதான் உண்மையில்   “அவர் நாண நன்னயம்” செய்யும் செயல்.

**********

தமிழ்த் திரைப்படங்களுக்கு தமிழில் பேர் வையுங்கள் எனக் கரடியாகக் கத்தி….

பல போராட்டங்கள் அறிவித்து……

பிறகு தமிழில் பெயர் வைப்பவர்களுக்கு வரிச் சலுகை என்கிற எலும்புத் துண்டை காட்டி….

ஒரு வழியாக வழிக்கு வந்திருக்கிறது கோடம்பாக்கம். ஆனால் அண்மையில் ஒரு விளம்பரத்தைப் பார்த்து அசந்து போனேன். இங்கு தமிழ்ப்படங்களுக்கு தமிழில் பேர் வைப்பதற்கே பெரும்பாடு பட்ட நிலையில் ஒரு இங்கிலீஷ் படத்திற்கு ”தூயதமிழ்ப் பெயர்” வைத்திருக்கும் எட்டாவது அதிசயத்தை என்னவென்பது?

இதற்காகவே  ”என் ஜன்னலுக்கு வெளியே…”            என்கிற அந்தப் படத்தை எடுக்கும் புண்ணியவானை ”பலமாகப் பாராட்டலாம்”.

ஆக….

தமிழில் பெயர் வைக்கும் தமிழ்த் திரைப்படங்களுக்கு வரிச்சலுகை அளிக்கும் தமிழக அரசு…..

இங்கிலீஷ் படமாகவே  இருந்தாலும் தமிழில் பெயர் சூட்டியிருக்கும் அந்தப் படத்துக்கு என்ன ”பரிசை” வழங்கப் போகிறது என்பதை சீக்கிரமே சொன்னால் நல்லது.

**********

MS

எழுதுனவன் ஏட்டைக் கெடுத்தான்

பாடுனவன் பாட்டைக் கெடுத்தான்

என்பதெல்லாம் நமக்குத் தெரிந்த பழமொழி. ஆனால் எம்.எஸ்.சுவாமிநாதன் போன்ற விஞ்ஞானிகள் வந்துவிட்ட பிறகு

”விஞ்ஞானி விவசாயத்தைக் கெடுத்தான்”

என்கிற புது மொழியையும் சேர்த்துக் கொள்ள வேண்டியதுதான். ஏற்கெனவே இந்திய விவசாயத்தை ”ஓகோ” என்று கொண்டுவந்து விட்டாயிற்று. இனி இலங்கை ஒன்றுதான் பாக்கி. விட்டேனா பார் என்று களத்தில் குதித்திருக்கிறார் வேளாண் ”விஞ்ஞானி” எம்.எஸ்.சுவாமிநாதன்.  1980 களில் மத்திய அமைச்சரவையின் அறிவியல் ஆலோசனைக் குழுவின் தலைவராகவும், திட்டக்குழுவின் துணைத் தலைவராகவும் இருந்தபொழுதே அவைகளை அம்போவென விட்டு விட்டு பிலிப்பைன்ஸ் நாட்டில்  இருக்கிற சர்வதேச நெல் ஆராய்ச்சி நிலையத்திற்கு ஓடிப்போனார்.

”வேலை கெடைச்சா….. யார் எங்க வேணும்ன்னாலும் போலாம்…. இதெலென்ன தப்பு?” எனக் கேட்கலாம் நீங்கள்.

ஆனால் அவர் இருந்தது நீங்களும் நானும் இருப்பதைப் போல லேசுப்பட்ட வேலை இல்லை கண்ணியவான்களே. அவர் அப்போது வகித்து வந்த வேலையின் தன்மை அதிமுக்கியமானது என்பதுதான் விஷயம்.

நாட்டினுடைய  விஞ்ஞான ரகசியங்களை அறிந்திருந்த, தந்திராபோயம் மிக்க, குறிப்பாக உணவுப் பிரச்சனைகளை அறிந்து வைத்திருந்த முக்கியப் பதவி அது. அப்படிப்பட்ட பொறுப்புமிக்க அரசு பதவியை உதறிவிட்டு அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கைகளுக்கு ஏற்ப செயல்படும் அந்த நிறுவனத்துக்கு ஊழியராகப் போய் சேர்ந்ததில் பல மர்மங்கள் இருப்பதாக இன்னுமும்  ஊருக்குள் ஒரு முணுமுணுப்பு உண்டு.  அரிசி திங்காத அமெரிக்காக்காரனுக்கு அரிசியில் என்ன ஆராய்ச்சி என்கிற அரசியல் எல்லாம் நமக்கு எதற்கு?.

ஆனால் ஏற்கெனவே இந்தியாவில் பிழைக்க வழியில்லாமல் பல்லாயிரம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதும்….

(விஞ்ஞானிகள் தயவால்) போய்ச்சேர்ந்தது போக மீதம் இருப்பவர்களுக்கு 11000 கோடி மகான் மன்மோகன் நிதி ஒதுக்கியதும்……

நிதி போக திதிக்கு ஆளொன்றுக்கு லட்ச ரூபாய் ”அள்ளிக் கொடுத்ததும்” .. உலகறிந்த ”ரகசியங்கள்”.

இந்த லட்சணத்தில் மாடி ஏறி ஆண்டெனாவைக் கட்டக் கையாலாகாதவன் வானம் ஏறி சாட்டிலைட்டை சரி பண்ணப்போன கதையாய்…..வவுனியா போய் விவசாயம் பண்ணப் போறாராம் இந்த சாமிநாதன்.

அதுவும் எப்பேர்ப்பட்ட வேளையில்? ஆண்கள் முழுக்க சித்ரவதை முகாம்களிலும், முள்வேலிகளுக்கிடையே துப்பாக்கி முனையிலும் முடக்கி வைக்கப்பட்டிருக்க….. முகாம்களில் இருந்து பெண்களை மட்டும் தனியே பிரித்தெடுத்து ஊர்களுக்குள் அழைத்துப் போய் சிங்களச் சிப்பாய்களுக்கு மத்தியில் விவசாயம் செய்ய வைக்கப் போகிறாராம் இந்த விஞ்ஞானி.

சரி….அப்பெண்களது பாதுகாப்புக்கு யார் பொறுப்பு? என்று கேட்டால்….”வலுக்கட்டாயமாக மீளக்குடியமர்த்தப் படப் போகின்ற இந்தப் பெண்களால் சிங்களமயமாக்கப்பட்டுள்ள வன்னியில்  மானத்துடன் வாழ முடியுமா என்ற கேள்வி பற்றி சிந்திக்க வேண்டியது என்னைப் போன்ற வேளாண் விஞ்ஞானிகளின் வேலையல்ல. அவர்களின் பசித்த வயிறுக்கு நிரந்தரமாக சோறு கிடைக்க என்ன செய்ய வேண்டும் என்று இலங்கை  அரசு என்னைக் கேட்டுக் கொண்டிருக்கிறது. அதை நிறைவேற்றுவது மட்டுமே என் வேலை. அதனை நடைமுறைப்படுத்த வேண்டுமென்றால், விதைப்புக் காலம் தொடங்கும் அக்டோபருக்கு முன்பு அவர்களைக் குடியமர்த்தி, பயிற்சிகளை அளித்தாக வேண்டும்” என ” பொறுப்போடு ” பதில் சொல்கிறது இந்த ஜென்மம். இத்தனைக்கும் இதற்கு மூன்று பெண்பிள்ளைகள் வேறு.

சாமிநாதன்களது தலைமுறைகளைப் பொறுத்தவரை சோறா? மானமா? என்பதில் எதை வேண்டுமானாலும் தேர்வு செய்துகொள்ளட்டும். அது அவர்களது உரிமை சம்பந்தப்பட்ட விஷயம்.

ஆனால் தமிழ் மக்களைப் பொறுத்தவரை

“ சோறா? ”

”மானமா? ”

என்றால் எதைத் தேர்வு செய்வார்கள் என்பதற்கு அவர்களது தீரமிக்க போராட்டங்களே பதில்கூறும்.

மானத்தை இழந்து மகசூல் எடுக்கக் காத்திருக்கும் இந்தத் திட்டத்திற்கு பெயர் வடக்கின் வசந்தமாம்.

உண்மையில் வசந்தமில்லை அது.

வடக்கின் மக்களுக்கான வாய்க்கரிசி.

( நன்றி : ”தமிழக அரசியல்” வார இதழ் )

ஒரு சிறிய விளம்பர இடைவேளை…

மனதைப் பிசையும் நூல் ஒன்றினை அனுப்பியிருந்தார் நண்பர் வைகறை. பிரான்ஸ் நாட்டில் அகதியாய் உழலும் நண்பர் கி.பி.அரவிந்தன் எழுதிய “இருப்பும் விருப்பும்” என்கிற நூல்தான் அது. ”பாட்ஷா” படத்தில்…..….. ” அண்ணே எனக்கு இன்னொரு பேர் இருக்குண்ணே” என வருவதைப்போல கி.பி.அரவிந்தனுக்கு பல பெயர்கள். அன்றைக்கு போராட்ட உலகில் Ori.ki.piசுந்தர் ஆக அறியப்பட்ட எமது தோழரேதான் பிற்பாடு கி.பி.அரவிந்தனாக இலக்கிய உலகிற்கு அறிமுகம் ஆனவர்.. கி.பி.அரவிந்தனாக அவரைத் தெரிந்த பலருக்கு அவர் ”:போராளி சுந்தராக” ஆற்றிய பல பணிகள் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

ஈழத்தில் முதல் களப்பலி சிவகுமாரனோடு தோளோடு தோள் நின்ற இளைஞனாக…..…..

ஈழப் புரட்சி அமைப்பின் போராளியாக…..…..

வாழ்வின் வலிகளை உணர்த்தும் இலக்கியவாதியாக…..…..

மனச் சுமைகளை சுமந்து திரியும் அகதியாக…..…..

என அம்மனிதனுக்கு ஏகப்பட்ட முகங்கள்.

அப்படிப்பட்டவரின் நூலுக்கு அணிந்துரை ஒன்றினை நான் எழுத வேண்டும் என்பது நண்பர் வைத்த வேண்டுகோள். நூலை வாசிக்க வாசிக்க என்னால் கண்ணீரைக் கட்டுப்படுத்த இயலவேயில்லை. மனம் வெகுவாகக் கனத்துப் போனது. அப்படியே பழைய நினைவுகளில் மூழ்கிப் போனேன் நான்.  பிற்பாடு என்னை நானே சரிப்படுத்திக் கொண்டு எழுதத் தொடங்கிய அந்த “அணிந்துரையை” மீண்டும் உங்களோடு பகிர்ந்துகொள்வது ஒன்றும் படுபாதகச் செயல் ஆகிவிடாது என்பதால் அப்படியே அதனை உங்கள் பார்வைக்குப் பணையம் வைக்கிறேன்.

“இது அணிந்துரை அல்ல தோழர்களே…..

ஈழத்து உறவுகளோடு நகர்ந்த என் நாட்களைப் பற்றிய நினைவுகள்.

உண்மையைச் சொன்னால்…..அப்போது கி.பி.அரவிந்தனைத் தெரியாது எமக்கு. அதைப் போலவே அவருக்கு பாமரனையும்.

இருபத்தி நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் எமக்குத் தெரிந்ததெல்லாம் தோழர் சுந்தரைத்தான். “பூவுலகின் நண்பர்கள்” நெடுஞ்செழியன்தான் ஈரோஸ் (ஈழப் புரட்சி அமைப்பு) அமைப்பை எனக்கு அறிமுகம் செய்து வைத்தவர்.

அந்த அறிமுகம் மட்டும் நிகழாமல் இருந்திருந்தால் இன்றைக்கும் நான் ஒரு தறுதலையாக…… உதவாக்கரையாக…… இருந்திருப்பேன். அல்லது குறைந்தபட்சம் ஒரு எம்.எல்.ஏ.வாகவோ அல்லது எம்.பி.ஆகவோ ஆகியிருப்பேன். தமிழ் மக்களை அந்தத் துயரில் இருந்து காப்பாற்றிய பெருமை ஈரோசையும், நெடுஞ்செழியனையுமே சாரும்.

அப்போது சென்னையில் எனக்குத் தெரிந்ததெல்லாம் கோடம்பாக்கத்தில் பெஸ்ட் மருத்துவமனை அருகில் இருந்த ஈ.என்.எல்.எப் (ஈழத் தேசிய விடுதலை முன்னணி) அலுவலகம்…… யுனைடெட் காலனியில் இருந்த ஈரோஸ் நண்பர்களது அறை…… அண்ணாநகரில் இருந்த B செல்…… இதுதான் எனது உலகம். சுந்தரைக் கண்டாலேயே ‘பாலஸ்தீன இயக்க பயிற்சி பெற்றவர்’ என்கிற பெரிய  பிரமிப்பு எமக்கு. ஆனால் மனுசன் ஒரு நாள் கூட அதை சொல்லிக் கொண்டதில்லை.

”தோழர்….. இப்ப பிரச்னை எப்படி இருக்கு?” என்றால்…..

“பிரச்ச்ச்ச்ச்ச்சனை இருக்கு” என்பார்

“பிரச்னையையே பிரச்ச்ச்ச்சனையாகச் சொல்லக்கூடியவர் தோழர் சுந்தர்தான்” என நக்கலடிப்பார் செழியன்.

தோழர்களோடு உணவு உண்ணும்போது ஈழப் பிரச்சனையை நினைத்துக் கண்ணீர் விடுகிறோமா இல்லையோ….. ஆனால் ஒரு கவளம் வாயில் வைத்ததுமே கண்களில் நீர் தழும்பி நிற்கும். அவ்வளவு காரம். ”தோழர் உங்களுக்காக இன்னைக்கு உறைப்பு கொஞ்சம் குறைவா போட்டிருக்கு” என்கிற விளக்கம் வேறு தருவார்கள்.

சென்னையில் தங்கி இருக்கும் பொழுதுகள் தோழர்கள் பாலகுமார்….. சுந்தர்….. ராஜா….. பார்த்திபன்….. அன்னலிங்கம்….. என எண்ணற்றவர்களோடு நகரும்.

ஈழம் குறித்த கனவுகளோடு…..

எதிர்ப்படும் எதார்த்தங்களை எவ்விதம் எதிர்கொள்வது என்கிற விவாதங்களோடு பொழுதுகள் விடியும். இத்தனைக்கும் கத்துக்குட்டி நான். இவனுக்கெல்லாம் என்ன தெரியும் என்று தோழர். சுந்தரோ, பாலாவோ ஒருபோதும் எண்ணியதில்லை. அபத்தமாக என்னால் கேட்கப்படும் கேள்விகளுக்கெல்லாம் மிக நிதானத்துடன் விளக்கிச் சொல்வார்கள். அந்தப் சகிப்புத்தன்மையும், பண்பும், அன்பும் இன்றைய வரைக்கும் எனக்குள் முளைவிடாத ஒன்று. ஈரோசின் நிறுவனர்களில் ஒருவரான தோழர்.ரத்னாவும் அவ்வப்போது எம்முள் பல கேள்விகளை கிளப்பி விட்டுவிட்டு கிளம்பிச் செல்வார்.

Mr.Balakumar meets PM today என்று செய்தித்தாளில் முந்தைய நாள்தான் பார்த்திருப்போம். ஆனால் மறுநாளே balkumar“தோழர்” எனக் கை அசைத்தவாறு தனது சைக்கிளில் கோடம்பாக்கம் மேம்பாலத்தில் இருந்து இறங்கிக் கொண்டிருப்பார் பாலா. அநியாயத்துக்கு எளிமையானது ஈரோஸ் என்கிற மொச்சைக்கொட்டை பட்டாளம்.

சுந்தர் சென்னைப் பொறுப்பாளராக இருந்தபோது வெளிக்கொண்டு வந்த ”இந்த மண்ணும் எங்கள் நாட்களும்” நூலையும், “பொதுமை” இதழ்களையும் இன்னமும் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன்.

சென்னையில்தான் இப்படிப்பட்ட உறவுகள் என்றால்….. கோவைக்கு திரும்பினாலோ ஈரோஸின் கோவைப் பொறுப்பாளர்களோடுதான் போகும் பொழுது. கோவையை சுற்றியுள்ள குக்கிராமங்களுக்கெல்லாம் தோழர்களைக் கூட்டிக் கொண்டு போகவேண்டும். கரும்பலகைகளை வைத்து வகுப்பெடுப்பார்கள் தோழர்கள். ”சித்திரையில் ஈழம் மலரும்….. தை யில் கொடியேற்றுவோம்….. என்றெல்லாம் உங்களை ஏமாற்றத் தயாராயில்லை நாங்கள். இந்த விடுதலைப் போராட்டத்திற்கு காலக்கெடுவெல்லாம் விதிக்க முடியாது. உங்கள் அடுத்த தலை முறை கூட போராட வேண்டி வரலாம்” என்று தொடரும் வகுப்பு. மக்கள் ஆழமாக அவதானித்துக் கொண்டிருப்பார்கள் அதை.

பல நாட்கள் விடிந்தும் தூங்கிக் கொண்டிருப்பேன்.  என்னை எழுப்பிவிட வேண்டும் என்றால் “தோழர் ஈழம் கிடைச்சுடுச்சு தோழர். எழும்புங்க…..” என்றுதான் எழுப்புவார்கள் குட்டியும், மெல்ட்டசும். அவர்களுக்கு வழிகாட்ட அனுப்பி வைக்கப்பட்டிருந்தார் சுந்தரின் மச்சான் முகிலன்.

1986 ஜூலை 23 ஆம் தேதி ஈழ நண்பர்கள் கழகத்தின் சார்பாக சுந்தரின் கருத்தரங்கம் கோவையில். ஜூலைப் படுகொலைகள் நினைவு தினத்திற்காக. எதிர்பாராத கூட்டம் அன்று. ஜெ.ஆர்.ஜெயவர்த்தனா ஆட்சியின் அவலங்களையும், திம்பு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததற்கான காரணங்களையும், ஈழத்தின் தேவைகளையும் எடுத்துரைக்கிறார் சுந்தர். இரவு நெடுநேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு மறுநாள் ரயில் ஏற்றி அனுப்பி வைக்கிறோம்.

அதற்கிடையில் ஈழ இயக்கங்களை அணுகும் போக்கில் இந்திய அரசிடம்  எண்ணற்ற மாற்றங்கள். ”இலங்கை அரசுக்கு இந்தியா எச்சரிக்கை”, ”இந்திய விமானங்கள் வடக்கில் உணவுப் பொட்டலங்கள் வீச்சு” போன்ற அநேக நாடகங்கள். அதை அடுத்து வந்த ஒப்பந்தக் காட்சிகள். ஒவ்வாத ஒப்பந்தத்தை ஒப்புக்கொள்ளச் சொல்லி இந்திய அரசின் வற்புறுத்தல்கள்….. இல்லையில்லை அச்சுறுத்தல்கள்.

உங்களுக்காக சோறெல்லாம் போட்டோமே….. ஏன் ஒத்துக் கொள்ளக்கூடாது ஒப்பந்தத்தை? என்கிற அரைவேக்காட்டுத்தனமான உளறல்கள். மனம் நொறுங்கிப் போயினர் போராளிகள். எரிச்சலும்,அவமானமும் தாள முடியாமல் அப்போது சுந்தர்தான் ஒரு மேடையில் கேட்டார்: ”சொல்லிக்காட்டவா சோறு போட்டீர்கள்?” என்று. அதைத்தான் நான் 21 ஆண்டுகள் கழித்து ஈழ இன்னல்கள் குறித்து ஒரு வார இதழுக்கு எழுதும்போது தலைப்பாக்கினேன். உண்மையில் அந்தத் தலைப்புக்குச் சொந்தக்காரர் சுந்தர்தான்.

ஒப்பந்தத்தை ஏற்காத போராளிகளை ஒப்புக்கொள்ளுமா மத்திய அரசு?. அந்த வேளையில் அவர்கள் வேண்டா விருந்தாளிகள். மனம் நொந்து கப்பல் ஏறுகிறார் சுந்தர். கப்பல் ஏறும் முன் அவர் கி.பி.அரவிந்தனாக பாலம் இதழுக்கு அனுப்பிருந்த ”எங்கள் நினைவுகளை உங்களிடம் கையளித்துள்ளோம்” என்கிற கடிதம் ஈழத்தை நேசித்த ஒவ்வொரு உயிரையும் என்ன பாடுபடுத்தி இருக்கும் என்பதை வரிகளால் வர்ணித்து விட முடியாது. இன்னமும் தோழர்களும் நானும் தோன்றும்போதெல்லாம் எடுத்து வாசிக்கும் ஒரு உன்னதம் அது. அதில் உள்ள வரிகளை வாசித்தால் புரியாது. அவர்களுடன் வாழ்ந்திருந்தால் மட்டுமே புரியும்.

எல்லாம் முடிந்தது. காலை தொடங்கி நடுச்சாமம்  வரைக்கும் எனது உலகமாக இருந்த தோழர்கள் எல்லாம் புறப்பட்டாயிற்று. பாலா, சுந்தர் தொடங்கி….. குட்டி மெல்ட்டஸ் வரையிலும் எல்லோரும் கிளம்பியாயிற்று.

நான் மட்டும் தனியே கரையில் நின்றபடி.

எனக்கு இங்கு எவரைத் தெரியும்? தெரிந்தாலும் அவர்களோடு என்ன பேசுவது? குறைந்தபட்சம் ஏதாவது கட்சியில் இருந்திருந்தாலாவது நேரத்தை ஓட்டி விடலாம். ஏதாவது ரசிகர் மன்றத்தில் இருந்திருந்தாலாவது எங்காவது மன்றத்தில் உட்கார்ந்து கேரம் போர்டு விளையாடிக் கொண்டிருந்திருக்கலாம்.

என்ன செய்யப்போகிறேன் இனி?

”ஈழம் கிடைச்சிடுச்சு தோழர்….. எழும்புங்க.” என எவர் எழுப்பப் போகிறார்கள் என்னை?

”எங்கிருந்தோ வந்தான்….. இடைச்சாதி நான் என்றான்.” என்பதைப் போல எங்கிருந்தோ வந்தார்கள். அரைவேக்காடாய்த் திரிந்த என்னைப் போன்றவர்களுக்கு மானுடத்தை நேசிக்கக் கற்றுக் கொடுத்தார்கள். மனிதனாக்கினார்கள். திடுதிப்பென ஒரு பொழுதில் புறப்பட்டு விட்டார்கள். எனது உலகம் தொலைந்து போயிற்று.

இனி நான் இந்த மண்ணில் வாழப் பழக வேண்டும்.

“ஓடம் நதியினிலே…..” என்கிற பாடல் வரிகள் என்னுள்ளே கேட்கிறது.

முதலிலேயே சொன்னதைப் போல இது அணிந்துரை அல்ல நண்பர்களே. எப்படி எழுத முடியும் என்னால்? ஈழத்தின் முதல் தற்கொடைப் போராளி சிவகுமாரனோடு எழுபதுகளில் களமாடிய தோழனின் நூலுக்கு…..

ori.wrapper -eelamஈழத்தின் விடிவுக்காய் பாலஸ்தீனப் பயிற்சி பெற்று போராளியாய்ப் படைக்கருவிகளை பாவித்தவன் படைப்புக்கு…..

”விண்ணப்பித்தால் ஈழக் குடியுரிமைக்கே விண்ணப்பிப்பேன். அதுவரை அகதியாகவே வாழ்ந்துவிட்டுப் போகிறேன். அல்லது அகதியாகவே செத்துப் போகிறேன்…..” என்று பிரான்ஸ் குடியுரிமைக்கு விண்ணப்பிக்காது நிற்கும் ஒரு சுயமரியாதைக்காரனின் நினைவலைகளுக்கு…..

எப்படி எழுத முடியும் என்னால்.

இதில் இருப்பவையெல்லாம் வெறும் எழுத்துக்கள்….. வார்த்தைகள்….. வாக்கியங்களாகப் படவில்லையே எனக்கு. வலிகளாக இருக்கிறதே. என்ன செய்வேன் நான்?

அம்மாவின் இறுதிப் பயணத்தைப் பற்றி வாசிக்க வாசிக்கவே கண்ணீரைக் கட்டுப்படுத்த இயலவில்லை. என்ன செய்வதென்று புரிபடாமல் இணையதளத்தைத் திறந்து இப்படி ஒரு மின்னஞ்சலை அனுப்பி வைத்தேன் பிரான்ஸிஸ் ஆகவும்….. சுந்தராகவும்….. அறியப்பட்ட கி.பி.அரவிந்தனுக்கு :

சுந்தர்……

இப்போது நான் உங்களுடன் இருக்கிறேன்.

அம்மாவின் தலைமாட்டிற்கு அருகே ஐயா, தம்பியரோடு நானும்…..

உங்கள்,
பாமரன்.

இதை வாசிக்க வாசிக்க

யாழ்

லெபனான்

கொழும்பு

வெலிக்கடை சிறை

தமிழகம்

பிரான்ஸ் என இப்படி ஒவ்வொரு இடமும் நீங்களும் அரவிந்தனோடுதான் இருந்து கொண்டு இருப்பீர்கள்.

இனி, அவருடனான உங்கள் பயணம் தொடங்க நான் விடைபெறுகிறேன் இப்போதைக்கு.

தோழமையுடன்,

பாமரன்.  “

இப்படித்தான் எழுதியிருந்தேன் அதில்.

இந்நூலில் எனக்குப் பிடித்த விசயமே…..…..

”நான் எவ்வளவு பெரிய ஜாம்பவான் தெரியுமா?

ஈழப்போராட்டமே எனது தலையில்தான் நடந்தது…..…..” என்றெல்லாம் பீற்றிக்கொள்ளாமல்…..…..

பலத்தையும், பலவீனத்தையும் சமமாய் பாவித்து…..…..

இன்றைக்கு ஈழப்போராட்டம் வேறொரு முக்கிய கால கட்டத்தில் வந்து நிற்கும் நிலையில் புலம்பெயர்ந்து வாழும் நம் மக்கள் நிதானித்து தேர்வு செய்ய வேண்டிய வழி எது என்பதைச் சொல்வதுதான்.

இதில் முரண்படவும் உண்டு சில விசயங்கள். ஆனால் அம்முரணும் பல ஓடுகாலிகளது விமர்சனங்களைப் போல் பகை முரணாய் இன்றி நட்பு முரணாய் இருப்பது மனதுக்கு பெரும் ஆறுதல் அளிக்கும் விசயம்.

ஈழப்போரின் பல்வேறு காலகட்டங்களை…..…..

அது கடந்து வந்த பாதையை…..…..

அது சென்றடைய வேண்டிய திசையை…..…..

ஓரளவுக்காவது உணர்த்தும் இந்த நூலைப் பெற…..…..

வழக்கம்போல் நாம் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான் 09445182142 என்கிற எண்ணுக்கு அழைத்து நூலின் விலையையும் அதை வாங்கும் வழிமுறையையும்  விசாரிக்க வேண்டியதுதான்.

மொத்தத்தில்…..…..

மனித உயிர்களை கிள்ளுக்கீரைகளாக…..…..

ஆயுதங்கள் ஏதுமற்ற அப்பாவி உயிர்களை காலில் தேய்க்கும் கரப்பான்பூச்சிகளாக…..…..

தேய்த்து அழித்திருக்கிறது ஒரு நேர்மையற்ற யுத்தம்.

மானுட தர்மங்களை மீறிய யுத்த வெறியைக் கண்டு விக்கித்துப் போனவர்கள் மக்களுக்காக தங்கள் ஆயுதங்களை மெளனித்து ஒதுங்கி நிற்கிறார்கள்.…..…..

“மக்களுக்காக ஆயுதம் ஏந்தியது மாபாதகச் செயல்” எனக் குற்றம் சுமத்திய சர்வதேச சமூகம் இனி அந்த மக்களைக் காப்பாற்ற என்ன செய்யப் போகிறது? என்கிற வினாவோடு ஆயுதங்களை மெளனித்து ஒதுங்கி நிற்கிறார்கள்.…..…..

“உங்கள் வழிமுறைகள் தவறானவை” எனச் சகட்டுமேனிக்கு பழித்தவர்கள் அநாதரவாய் முகாம்களில் முடங்கிக் கிடக்கும் அந்த மூன்று லட்சம் மக்களுக்காக தம் சுட்டு விரலையாவது அசைக்கிறார்களா? என்கிற வினாவோடு ஆயுதங்களை மெளனித்து ஒதுங்கி நிற்கிறார்கள்.…..…..

இந்த உலகத்தின் மெளனத்தைக் கலைக்க

ஆயுதங்கள் மெளனமாக்கப்பட்டிருக்கிறதே தவிர

அவைகளுக்கு முற்றாக விடை கொடுக்கப்படவில்லை.

இதையே மாவோவின் வார்த்தைகளில் சொல்வதானால்.…..…..

”அரசியல் என்பது ரத்தம் சிந்தா யுத்தம்.

யுத்தம் என்பது ரத்தம் சிந்தும் அரசியல்.”

ஆம்.

முன்னதான அந்த ரத்தம் சிந்தா யுத்தத்தினை உலகம் முழுக்கக் கொண்டுபோகும் பணி பரந்து விரிந்திருக்கிற நம் தமிழ் மக்களின் கைகளில் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.

அதுவரை பின்னதற்கான ஒரு சிறிய விளம்பர இடைவேளை இப்போது.