பெண்களுக்கு எதிரான யுத்தம்…..

படம்

ஆக….

கள்ளம் கபடமற்ற இரு உள்ளங்களின் காதல் இரு ஊர்களையே கருக்குவதில் போய் முடிந்திருக்கிறது. ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு பதிவுத் திருமணமும் செய்து கொண்ட திவ்யா – இளவரசன் இணையைப் பிரித்தே தீருவது என்பதில் தொடங்கிய சாதி வெறியாட்டம் நூற்றுகணக்கான தலித் மக்களது வீடுகளைக் கொளுத்தி….. அவர்களது வாழ்வாதாரங்களை நிர்மூலமாக்கி….. சொந்த மண்ணிலேயே அந்நியராக்கி….. கையறு நிலையில் கையேந்தி நிற்க வைத்திருக்கிறது.

காரணம் திவ்யா ”உயர்ந்த” சாதியாம்.

இந்த உயர்ந்தது…. தாழ்ந்தது…. இவர்கள் மேலானோர்…. இவர்கள் கீழானோர்…. என்கிற கருமாந்திரங்களையெல்லாம் காறி உமிழ்ந்துவிட்டு கண்ணியமாகக் கரம் கோர்த்த இவர்களது வாழ்வைப் பிரிக்க இங்கு எவனுக்கு யோக்யதை இருக்கிறது? அல்லது உரிமை இருக்கிறது?

கேட்டால்….. இப்படித்தான் ஒவ்வொரு ஊரிலும் செய்கிறார்களாம்…. தங்கள் சாதிப் பெண்ணை மயக்கி திருமணமும் செய்து கொண்டு பின்பு நட்டாற்றில் கழற்றி விட்டு விடுவார்களாம்….. இது நாடகக் காதலாம்….. தர்மபுரிப் பக்கம் வன்னியர்களில் சிலர் இப்படித் திருவாய்மலர்ந்தால்…. கொங்குநாட்டுப் பகுதியில் உள்ள கவுண்டர்களில் சிலரும் இப்படித் திருவாய் மலர்ந்தருளுகிறார்கள்.

பெண்களை இதைவிட யாரும் இவ்வளவு இழிவாகக் கொச்சைப்படுத்த முடியாது. தங்கள் வீட்டில் பிறந்த…. தங்களோடு வளர்ந்த பெண்களையே சுய அறிவற்றவர்களாக…. பகுத்தறியும் திறன் இல்லாதவர்களாக…. பார்க்கும் இவர்கள் மொத்தமாகப் பெண்ணினத்தையே எப்படிப் பார்ப்பார்கள் என்பதுதான் நம்முன் உள்ள கேள்வி.

சரி “தங்கள் சாதிப் பெண்களை” மயக்கி…. திருமணம் செய்து கொண்டு ஏமாற்றி விடுகிறார்கள் தங்களுக்குக் ”கீழ்” உள்ளவர்கள்” என்று குமுறுகிறார்களே…. அப்படியானால் இவர்களை விட ”உயர்ந்ததாக”ச் சொல்லிக் கொள்ளும் ஆற்காட்டு வெள்ளாளர் வீட்டிலோ அல்லது சைவப் பிள்ளைமார் வீட்டிலோ பிறந்த பெண்களை இவர்களது ஆண்கள்  காதலித்தால் அதை என்னவென்று அழைப்பார்கள்? முன்னது ”நாடகக் காதல்” என்றால் இதை காவியக் காதல் என்றழைக்கலாமோ…..?

ஒவ்வொரு சாதியும் தனக்குக் கீழாக ஒரு சாதி இருப்பதை எண்ணிப் பெருமிதம் கொள்ளும் அதே வேளையில் தனக்கு மேலாகவும் ஒரு சாதி ஆதிக்கம் ஒளிந்திருக்கிறது என்பதை வசதியாக மறந்து விடுகின்றன. இப்படிப்  பெருமிதம் கொள்ள இயலாத சாதியாக….. சாதி மூட்டைகளிலேயே அடிமூட்டையாக அல்லல்பட்டுக் கொண்டிருக்கும் சாதி அருந்ததியர் சாதி மட்டும்தான்.

இன்று இறுமாப்போடும் கர்வத்தோடும் நெஞ்சை நிமிர்த்திக் கொள்கிற பல பிற்பட்ட சாதிகள் ஐம்பது, அறுபது வருடங்களுக்கு முன்னர் தங்கள் சாதி பெயரை சொல்லக்கூட வெட்கப்பட்டுக் கொண்டு கூனிக் குறுகி நின்ற சாதிகள்தான். இன்றைக்கு இவர்கள் ஒடுக்கப்பட்ட மக்களைப் பார்த்து என்னென்ன இழிவுகளையும், குறைகளையும் சொல்கிறார்களோ….. அதே இழிவுகளை…. அதே குற்றச்சாட்டுகளைச் ஐம்பது வருடங்களுக்கு முன்னர் இவர்களும் சுமந்து நின்றவர்கள்தான். அன்று ஒடுக்கப்பட்டவர்களும், பிற்படுத்தப்பட்டவர்களும் சுமந்து நின்ற சமூக இழிவை கண்டு மனம் குமைந்து…… பொங்கி எழுந்து…… அவர்களுக்கான சமூக நீதியை சகல துறைகளிலும்  பெற்றுத்தந்தவர்கள் சாதியாளர்கள் அல்ல.

சாதி மறுப்பாளர்கள்.

ஆம் ஒவ்வொரு சமூக மாற்றத்திற்குப் பின்னாலும் ஒரு சுயமரியாதைக்காரனின் ரத்தம் ஒளிந்திருக்கிறது.

ஆக….. இதில் நாம் யார் என்பதைக் காட்டிலும்…. நாம் யாருக்காக நிற்க வேண்டும் என்பதுதான் மிக முக்கியமானது.

கலப்பு மணத்திற்கு அரசு ஊக்கம் அளிப்பதை விடவும்…… ”யாரேனும் இனி ”சொந்த” சாதியில்… ”சொந்த” மதத்தில் திருமணம் செய்தால் பத்தாண்டு கடுங்காவல் சிறைத் தண்டனை” என்றொரு சட்டம் கொண்டு வர வேண்டும்.

பச்சையாகச் சொன்னால் இந்த சாதி… மதம்….. போன்ற கண்றாவிகளுக்கெல்லாம் அப்பாற்பட்டவர்கள் உண்மையிலேயே பெண்கள்தான். பெண்களைப் போன்ற ஜனநாயகப் பூர்வமான உயிரினம் உலகில் வேறெதுவும் இல்லை. மதத்தின் பேரால்…..சாதியின் பேரால்…. இனத்தின் பேரால்… என சகலத்தின் பேராலும் நடத்தப்படும் யுத்தங்களால் மூர்க்கமாகப் பாதிக்கப்படுபவள் பெண் மட்டும்தான்.

சாதியும்…. மதமும்…. ஆண்களுக்கானவை. இம் மண்ணில் பிறந்த எந்தப் பெண்ணும் தன் பெயருக்குப் பின்னால் செட்டியார் என்றோ….. முதலியார் என்றோ…. கவுண்டர் என்றோ போட்டுக் கொல்வதில்லை. தன் வீட்டில் தன்னை அடக்கி ஒடுக்கும் ஆண் என்ன நினைத்துக் கொள்வானோ என்கிற சூழலிலேயே  பெண்ணும் சாதியை…. மதத்தை நம்புபவராக நடிக்கிறார். உண்மையில் எவ்விதப் பாகுபாடும் அற்று மனித குலத்தை அணு அணுவாய் நேசிக்கும் உள்ளம் ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் ஒளிந்திருக்கிறது. ஒவ்வொரு சாதிக்காரனும் பெண்ணை தன் வீட்டில் வளரும் ஒரு கால்நடையாகவே கருதிக் கொள்கிறான். சுருக்கமாகச் சொன்னால் அவனுக்கு பெண் ஒரு அஃறிணைப் பொருள் அவ்வளவே.

இந்த வரலாறு மாற்றி எழுதப்பட்டேயாக வேண்டும். தங்களுக்கு எதிராக இந்தச் சகல சாதி ஆண்களும் தொடுக்கும் யுத்தத்தை முறியடித்து வருங்கால வரலாற்றை எழுதப் போவது நமது பெண் இனமாகத்தான் இருக்க வேண்டும்.

ஏனெனில் இதுவரை எழுதப்பட்ட வரலாறெல்லாம் ஆண்களால்…. ஆண்களுக்காக…..ஆண்களே எழுதிய வரலாறு.

படம்

நன்றி : “அந்திமழை” மாத இதழ்

கிழக்கிந்தியக் கம்பெனி பார்ட் II

”நீர்தான் கட்டபொம்மன் என்பவரோ?”

”நீர்தான் ஜாக்ஸன் துரை என்பவரோ?”

என எங்கேயோ கேட்ட குரல்கள் மீண்டும் இனி பத்துப் பதினைந்து ஆண்டுகளுக்குள் ஒலிக்கத் துவங்கினால் ஆச்சர்யப்படுவதற்கில்லை யாரும். சினிமாவில்தான் பார்ட் 2 சீசன் வரவேண்டுமா என்ன? இந்திய அரசியலிலும் இது பார்ட் 2 சீசன்தான். என்ன அன்றைக்கு ஒரு கிழக்கிந்தியக் கம்பெனி…. இன்றைக்கோ கிழக்கு…மேற்கு….தெற்கு எனச் சகல திசைகளிலும் நம்மை ஆப்படிக்க வரும் வால்மார்ட், டெஸ்கோ எனும் இத்யாதிகள்.

டீசல் விலை ஏற்றம் ஏன்? மண்ணெண்னை விலை ஏற்றம் ஏன்? அத்யாவசியப் பண்டங்களின்  விலை ஏற்றம் ஏன்? என்றெல்லாம் கேட்டால் “எலே கச்சா எண்ணெய்க்கு அவன் வெல ஏத்தீட்டானில்ல….பொறவு என்ன செய்ய?” என்கிறது அது. இதுக்குப் பேசாமல் ஒரு மளிகைக் கடைக்காரரையே பிரதமராக ஆக்கியிருக்கலாம்.(அவர் இவரை விடவும் நிச்சயம் சிறப்பாக இருப்பார் என்பது வேறு விஷயம்) போதாதற்கு ”வளமான எதிர்காலத்திற்காக கசப்பான முடிவுகளை ஏற்றுக் கொள்ளுங்கள்” என்கிற ”அருள்வாக்கு” வேறு.

வளம் யாருக்கு?

கசப்பு யாருக்கு? என்பதுதான் கேள்வியே.

அமெரிக்காவின் வால்மார்ட் எத்தனை விவசாயிகளை ஓட்டாண்டிகளாக்கியது….

எத்தனை வணிகர்களை தெருவில் நிறுத்தியது….

எத்தனை சிறு முதலாளிகளை தலையில் துண்டைப் போட வைத்தது….

என்பதெல்லாம் இந்தப் பொருளாதார மேதைக்குத் தெரியாது என்று நினைத்தால் நம்மை விட சுப்ரமண்யன்சாமி வேறு யாரும் இருக்க முடியாது.

தெரியும்.

ஆனால் இதுகளையெல்லாம் முன்னேற்றவா அவர் ஆக்ஸ்போர்டிலும், கேம்பிரிட்ஜிலும் படித்து குப்பை கொட்டிவிட்டு வந்தார்? போங்கப்பு.

வால்மார்ட் உள்ளே வருகிறது என்றால் பல்லாயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பறிபோகப் போகிறது என்று அர்த்தம்.

வால்மார்ட் உள்ளே வருகிறது என்றால் அதைச் சுற்றிலும் உள்ள ஆயிரக்கணக்கான சிறு வியாபாரிகளின் வாழ்க்கை கேள்விக்குறியாக ஆகப்போகிறது என்று அர்த்தம்.

வால்மார்ட் உள்ளே வருகிறது என்றால் அதைச் சுற்றிலும் உள்ள நிலங்கள் மத்தியதர வர்க்கம் கற்பனை செய்தாலும் வாங்கிவிட முடியாத அளவுக்கு உச்சத்தில் போய் நிற்கப்போகிறது என்று அர்த்தம்.

அவ்வளவு ஏன்….  ’மீதி அஞ்சு ரூபா நாளைக்குத் தர்றேன் அண்ணாச்சி….’ என்கிற உரிமையோடு வீடு திரும்பி மறுநாள் உறவோடு திருப்பித் தரும் வாழ்க்கை முறை மாறி பிளாஸ்டிக் டப்பாக்களில் இரசாயணங்களால் பதப்படுத்தப்பட்ட பண்டங்களை சொன்ன விலைக்கு வாங்கவும் முடியாமல்…. வாங்கினால் உண்ணவும் முடியாமல்…. உண்டது  செரிக்கவும் செய்யாமல்… சீரழியப்போகும் வாழ்க்கை முறை வருவதற்கான அறிகுறிதான் இந்த வால்மார்ட்.

ஆக….

ஏறக்குறைய எல்லாவற்றிலும் அந்நிய முதலீட்டிற்கான அச்சாரம் போட்டாயிற்று. ஒன்றிரண்டைத் தவிர. அதில் ஒன்றுதான் பத்திரிக்கைத் துறை. தமது துறையைத் தவிர பிறவற்றில் அந்நிய முதலீட்டை ஊக்குவிக்கும் பத்திரிக்கைகள் இதில் மட்டும் ஏன் அந்நியத் தலையீட்டை  எதிர்க்கிறார்கள்? அவர்கள் வந்தால் நமது கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் அடியோடு சீரழித்து விடுவார்களாம்….. ஒரு முறை நீதியரசர் கிருஷ்ணய்யர் சொன்னதுதான் இப்போது நினைவுக்கு வருகிறது. ”அவர்கள் சொல்வதும் சரிதான். நமது பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் அந்நியர்கள் சீரழிப்பதற்கு நாம் ஒரு போதும் அனுமதிக்கவே முடியாது. ஏனென்றால் அந்த உரிமை நமக்கு மட்டும்தான் இருக்கிறது.”

இதெப்பிடி இருக்கு?

 

 நன்றி : ”அந்திமழை” மாத இதழ்

மத்தியதர வர்க்க மகான்களுக்கு…….

படம்

னாலும் இந்தக் குசும்பு கூடாது இந்த அந்திமழை ஆட்களுக்கு. யார் எதைப் பற்றி எழுதுவது என்கிற விவஸ்தை வேண்டாமா? உழைப்பைப் பற்றி….. அதுவும் நான்….. எழுதினால் அவனவன் நிச்சயம் வாயில் சிரிக்க மாட்டான் என்பது மட்டும் உறுதி. எழுதப் போற தலைப்பைப் பற்றிச் சொன்னதுமே ஏற இறங்கப் பார்த்தார்கள் நண்பர்கள். ”எழுத்தாளா…. இந்தாய்யா டீ….. குடிச்சுட்டு உழைப்பைப் பத்தி எழுது…” என இரண்டு மணி நேரமாய் துணைவி எழுப்பிய பிற்பாடு எழுத உட்கார்ந்திருக்கிறேன் நான்.

உண்மையிலேயே இந்த உழைப்பு யாருக்குத் தேவைப்படுகிறது? அதுவும் கடும் உழைப்பு.? உழைப்புக்கேற்ற ஊதியம்… ஊதியத்துக்கேற்ற உழைப்பு….இது பலமுறை பலபக்கம் கேட்ட தாரக மந்திரம்  உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்கிற இடத்தில் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் வேலை செய்யலாம்தான். ஆனால் ஊதியம் இவ்வளவுதான் என ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்டு விட்ட இடங்களில் கை ஊணி கரணம் போட்டாலும் கிடைப்பதுதானே கிடைக்கும்.

இந்த முதல்வகை மனிதர்கள்தான் சகலருக்குமான டார்கெட். கழுதைக்கு முன்னால் குச்சியில் தொங்கவிடப்பட்ட கேரட் கணக்காய் மத்திய தர வர்க்கத்துக்கும்…. உயர் மத்தியதர வர்க்கத்துக்கும் முன்னே தொங்க விடப்பட்டுள்ள கேரட்டுகள் ஏராளம். அவைகள் அதைப் பிடிக்க பாயும் பாய்ச்சல்தான் இன்றைய வாழ்க்கை(?) முறை. ”பணத்தில் பல்லு விளக்குவது எப்படி?” “பணத்திலேயே பாடை கட்டலாம் வாங்க” என பப்பல பக்கமும் ஏகப்பட்ட லேகிய வியாபாரிகள்.(பாஸ்…இதுல எதுவும் உள்குத்து இல்ல)

ஒரு மாநகரத்துத் தூய்மைத் தொழிலாளி பொருள் சேர்க்க படாதபாடு பட்டால் அதில் ஒரு நியாயம் இருக்கிறது. நிலையங்களில் நிற்கும் ரயில்களில் ”இருந்துவிட்டு”ப் போகும் “பண்பாளர்களது” மலத்தின் மீது நீரைப் பீய்ச்சி அடித்து துப்புரவு பணி மேற்கொள்ளும் ஒரு தாய் பொருளாதார மேம்பாட்டுக்காய் நாய்பட்ட பாடுபட்டால் ஒரு நியாயம் இருக்கிறது. வாழும் காலத்திலேயே நரகத்தைப் பார்த்துவிட்ட அவர்கள் 24 மணி நேரம் அல்ல 30 மணி நேரம் உழைத்தாலும் அவர்கள் மீள வழி கிடைக்குமா? கிடைக்காது ஏனெனில் அவர்களுக்கு விதிக்கப்பட்டது ஊதியத்திற்கான உழைப்பு. மகனுக்கோ மகளுக்கோ வந்த காய்ச்சலுக்காக கந்துவட்டிக்கு வாங்கிய மூன்றாயிரம் ரூபாயை அடைப்பதற்குள் அவர்களுக்கு மூன்று யுகங்கள் கடந்து போகும். ஆனால் மேற்கத்திய நாடுகளில் இருந்து  இந்தியா போன்ற நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்ளுபவர்கள் இயற்கை உபாதைகளை தீர்த்துவிட்டு பணம் செலுத்தாமல் வர ஒரு சாப்ட்வேர் கண்டுபிடித்து வைத்திருக்கிறார்கள். அந்த சாப்ட்வேர் என்ஜினீயருக்கான ஊதியமோ உழைப்புக்கேற்றது.

எமது நண்பர் சதீஷ் டேவிட் ஒருமுறை கேட்டார்….”ஏன் நம்ம நண்பர்கள் எல்லாம் இப்படியே இருக்கீங்க?” என்று. எங்கள் மீதும் சமூகத்தின் மீதும் அக்கறை கொண்ட மிக நல்ல மனிதர்தான் அவர். ஒருவேளை ஜிப்பை சரியாகப் போடவில்லையோ என்கிற சந்தேகத்தில்  ஒரு முறை சரிபார்த்து விட்டு… ”ஏன் எங்களுக்கென்ன?” என்றேன்.

”இல்ல நாம நெனச்சா நல்லா மேல வரலாமில்ல….”

புரியல…நல்லான்னா என்ன?ன்னு என்றேன்.

“இப்ப நீங்க எல்லாம் டூ வீலர்தான் வெச்சிருக்கீங்க…. ஏதாவது பிசினஸ் செய்தா ஒரு கார் வாங்கலாம் இல்லியா…..”

அதான் நீங்க வெச்சிருக்கீங்களே… என்றேன்.

”இருந்தாலும் உங்களுக்கூன்னு ஒண்ணு இருந்தா நல்லா இருக்குமில்ல” இது சதீஷ்.

அப்புறம்…?

“அப்புறமென்ன சின்னதா ஒரு சொந்த வீடு…..”

சரி வாங்கீரலாம்….அதுக்கப்புறம் என்றேன்.

“பியூச்சர்ல்ல ஏதாவது நோய் நொடின்னா பாத்துக்கறதுக்கு பேங்க் பேலன்ஸ்….”

ஓகே வெச்சுக்கலாம் அப்புறம் என்றேன் மீண்டும்…..

மீண்டும் ஏதேதோ சொல்லிக் கொண்டே போனார். ஒருகட்டத்தில் இடைமறித்து சதீஷ் வெறும் கமாவாவே போட்டுட்டுப் போறீங்களே….. எப்ப புள்ளி வைக்கப் போறீங்க? என்றேன். அவருக்குத் தலை சுற்றி விட்டது.

“ச்சே….உங்க கூட பேசீட்டு இருந்தா நானும் உங்க மாதிரி ஆயிருவேன்” எனக் கிளம்பிவிட்டார் நண்பர்.

எனக்கு பார்த்ததுமே சிரிப்பு வருவது இந்த “சொந்த” வீட்டுக்காரர்களைப் பார்த்துத்தான். மத்தியதர வர்க்கத்தின் ஒரே இலக்கு இதுதான். இதை அடைய வங்கி வங்கியாய் அலைந்து கண்டவர்களிடம் பல்லிளித்து முதலில் பேஸ்மெண்ட்க்கு முதல் தவணை….. கதவு, ஜன்னல் வைத்த பிற்பாடு இரண்டாவது…. எனக் கடன் வாங்கிக் கட்டி…. முப்பது வருட இன்ஸ்டால்மெண்ட்டில் மொத்தத்தையும் வாங்கி…. கட்டி முடித்த பிற்பாடாவது  ஓய்வார்கள் எனப் பார்த்தால் அதுதான் அவர்களது அகராதியிலேயே இல்லாத விஷயம் ஆயிற்றே…. புது மனை புகு விழா வைக்காவிட்டால் சொந்தபந்தங்கள் என்ன சொல்லும்? வாங்கு அதற்கும் ஒரு கடன். அதுக்கப்பறம் வெறும் ஊறுகாயை நக்கீட்டு உட்கார்ந்திருக்க வேண்டியதுதான்.

சொந்த வீடு…. சொந்த வாகனம்…. என லட்சிய வெறி பிடித்து அலைகின்றவர்களைப் பார்க்கும்போதெல்லாம் ”அண்ணே! இந்த உலகமே ஒரு வாடகை வீடு. இது புரியாம ”சொந்த” வீட்டுக்கான ஓட்டம் வேறு” என்று தம்பி நா.முத்துக்குமார் சொன்னதுதான் நினைவுக்கு வருகிறது.

அப்பா பல்கலைக் கழகத்தின் கணக்கு அலுவலர் ஆன போதும் அவரது 24 இஞ்ச் சைக்கிளில்தான் இறுதிவரை சென்று வந்தார். அவர் பயணப்படும் வரை சொந்த வீட்டில்தான் சாக வேண்டும் என்கிற வெறியெல்லாம் ஒருபோதும் அவருக்கு இருந்த்தில்லை. வாடகை வீட்டில் இருந்துதான் அவரைத் தூக்கிக் கொண்டு போனோம். ஆனால் அவர் வாழ வேண்டிய வாழ்க்கையை வாழ்ந்தார். பிழைப்பின் நிமித்தம் வாழ்க்கையைத் தொலைக்கவில்லை. அத்தியாவசியம் எது? ஆடம்பரம் எது என்கிற துல்லிய வேறுபாடு அவருக்குத் தெரிந்திருந்தது. அதனால்தான் அவரது வாழ்க்கை நதியில் விழுந்த இலையைப் போல இலகுவாக இருந்தது. நானோ வேலைக்குப் போன முதல் மாதத்திலேயே பைக் இருந்தால்தான் ஆயிற்று கடனில் துவங்கினேன் எனது ஈனப்பிழைப்பை. அஞ்சு ரூபா வட்டியில் ஆரம்பித்து…. கிரெடிட் கார்டில் பயணித்து…. கார்டுக்குப் பணம் கட்ட மீண்டும் கடன் வாங்கிக் கழித்து… வீட்டில் வைத்திருந்த பாட்டி காலத்து வெள்ளி டம்ளர்களை சத்தமில்லாமல் விலைக்கு விற்று எனத் தொடர்ந்து கடைசியில் ஐம்பது பைசா பிராங்கோடேப் மாத்திரையைக் கூட கடன் கொடுக்க முடியாது என மருந்துக்கடைக்காரர் சொன்னபோது புரிந்தது அப்பாவின் எளிய வாழ்க்கை. அவ்வேளைகளில் கள்ளம் கபடமற்ற என் நண்பர்கள் மட்டும் இல்லாது போயிருந்தால் என்றோ செத்திருப்பேன் நான்.

எப்படி வாழக்கூடாது என்பதை நான் என்னில் இருந்துதான் கற்றுக் கொண்டேன். “ஒருவன் தனது திருமணத்துக்கு வாங்கிய கடன் அவனது மூன்றாவது பிள்ளை பிறக்கும்போது கூட தீராமல் இருக்கும்” என்றார் தந்தை பெரியார். இன்றைய மத்திய தர வர்க்கம் செலவளிப்பது எல்லாமே இந்த ரகம்தான். மொட்டைக்கு…. காதுகுத்துக்கு… ஞானஸ்தானத்துக்கு ….பூப்பு நன்னீராட்டுக்கு….. கல்யாணத்துக்கு…. கருமாதிக்கு என எல்லாமே ஆடம்பரமாயிற்று இங்கே. அதனால்தான் மீண்டும் மீண்டும் பணத்தைத் தேடி ஓட வேண்டியிருக்கிறது. உழைக்கும் நேரம் போதாது போகிறது.

எல்லாவற்றுக்கும் மேலாக ஒருபக்கம் செல்வச் செழிப்பு….. மறுபக்கம் இல்லாமை….. என்பவற்றுக்கெல்லாம்  பிரதான காரணம் இந்த நாட்டின் அமைப்புமுறை. அதை அடியோடு தகர்க்க வேண்டும் என்கிற அரசியல் அரிச்சுவடி நம் முன்னே நிற்கிறது. அதற்கு ஊடான பயணத்திற்கு இடையேயும் அத்தியாவசியம் எது? ஆடம்பரம் எது ? எனப் பிரித்துப் பார்த்து தீர்மானிக்கும் புத்தியும் நமக்குத் தேவையாய் இருக்கிறது. விலை குறைவாகக் கிடைக்கிறது என்பதற்காக எதையும் வாங்கிக் குவிக்க வேண்டியதில்லை. பாதிப்பணத்துக்குக் கிடைக்கிறது என்பதற்காக ”அந்தப் பத்து யானையையும் பந்தல்காலில் கட்டி வைத்து விட்டுப் போ” என்கிற டாம்பீகமும் அவசியமில்லை. வாழ்க்கை முறை எளிதாகும்போது தேவைகள் குறையும். தேவைகள் குறையும் போதுதான் பிழைப்புக்கான ஓட்டம் குறைந்து நமக்கான வாழ்க்கையை வாழத்துவங்குவோம் நாம்.

அந்த வாழ்க்கையை வாழத் துவங்குவதற்கு…….

24 செக் லீப்…..

ரெண்டு சாட்சிக் கையெழுத்து……

ரெண்டு சூரிட்டி என எதுவும் தேவையில்லை.

ஒரே தேவை :  “போதும்” என்கிற மனசு.

ஐம்பெரும் ஐடியாக்கள்….

பொதுக்குழு பரபரப்பு

தி….க்கு            மு…..க்காடும்           க…..ட்சி?

திமுக இப்போது  செய்யவேண்டிய முக்கிய ஐந்து சீர்திருத்தங்கள் என்ன? என்று அரசியல் சமூக விமர்சகர்கள், எழுத்தாளர்கள் சிலரிடம் கேட்டோம். சில தீவிரமான, உபயோகமான, கிண்டலான யோசனைகள் கிடைத்தன.

ஞாநி,  விமர்சகர்

  
1  திமுக தலைவர் கருணாநிதியின் குடும்பத்தினரை கட்சியிலிருந்து நீக்குவது. அதாவது மு.க.ஸ்டாலின் நீங்கலாக மற்றவர்களை கட்சியிலிருந்து நீக்கவேண்டும்.

2  ஒவ்வொரு மாவட்டத்திலும் கட்சியில் குடும்ப ஆதிக்கத்தைத் தடுப்பது. தந்தை மாவட்டச் செயலாளர் என்றால் மகனும் பொறுப்பில் இருப்பதை தடை செய்ய வேண்டும். அவர்களை கட்சியிலிருந்து நீக்கவேண்டும்.

3 ஒரு முறையான உட்கட்சித் தேர்தலை நடத்தவேண்டும். அந்தத் தேர்தலை தேர்தல் ஆணைய அதிகாரிகளின் முன்னிலையில் நடத்தலாம்.

4  கட்சித் தொண்டர்களுக்கு ஐம்பதுகளில் நடத்தியதுபோல வாசக சாலைகள் ஏற்படுத்தவேண்டும். திராவிட இயக்கம் மற்றும் திராவிட இயக்கத் தலைவர்களின் வரலாறு பற்றிய வகுப்புகளை நடத்தவேண்டும்.

5  கட்சியில் யார் எந்தப் பொறுப்புக்கு வந்தாலும், அவர்கள் ஓர் ஆண்டுக்கு ஒருமுறை தங்கள் சொத்துக்கணக்கைக் காட்டவேண்டும்.

 

 

 

 

 

பாமரன்,  விமர்சகர்

1   திராவிடர்களுக்கான சகல தேவைகளையும் கழகம் பூர்த்தி செய்துவிட்டபடியால் திமுக என்கிற அதன் பெயரை சோமுக என்று மாற்றம் செய்யவேண்டும். (அதாகப்பட்டது சோனியா முன்னேற்றக் கழகம்)

 2   பேரன் பேத்தி, மாமன் மச்சான், கொழுந்தனார் நாத்தனார் தவிர வேறுயாரும் எம்.எல்.ஏ., எம்.பி. பதவிக்குப் போட்டியிடக்கூடாது.

3 சினிமா எடுப்பது, பத்திரிகை நடத்துவது, டிவி காட்டுவது தொடங்கி, ஆணுறைக்கான கம்பெனி வரைக்கும் குடும்ப உறுப்பினர்களே நிர்வாக இயக்குனர்களாக இருந்து தமிழ்ப்பண்பாட்டை  மானாட மயிலாட பாணியில் காப்பாற்ற வேண்டும்.

4  உண்மை அறியும் சோதனைக் கருவியை பொதுக்குழு வாசலில் பொருத்தி மாநில சுயாட்சி, ஈழ விடுதலை, மீனவர் பிரச்னை, மொழிப் பிரச்னை, இடஒதுக்கீடு பிரச்னை என ‘கண்றாவி’ பிரச்னைகள் குறித்தெல்லாம் இன்னமும் யாரேனும் யோசித்துக் கொண்டிருக்கிறார்களா என்பதைக் கண்டறிந்து அவர்களை கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளவேண்டும்.

5  மேற்கண்ட நான்கு தீர்மானத்தையும் எதிர்ப்பவர் எவராக  இருந்தாலும் அவர்கள் இனத்துரோகிகள், குடிகெடுக்க வந்த கோடாரிக்காம்புகள் எனத் தீர்மானம் நிறைவேற்றி தமிழகத்தை விட்டு பார்வதியம்மாள் பாணியில் நாடுகடத்தப்பட வேண்டும்.

 

 

 

 

நாஞ்சில் நாடன், எழுத்தாளர்

 

 1  திராவிட இயக்கத்தின் அடிப் படைக் கோட்பாடுகளை மீண்டும் கடைப்பிடிக்க முயலவேண்டும். திமுக என்ற இயக்கத்திற்காக ரத்தமும், வியர்வையும் சிந்தியவர்களின் தியாகத்தை பரிசீலனை செய்யவேண்டும்.

2  ஒரு கார்ப்பரேட் நிறுவனமாகத் தோற்றமளிக்கும் திமுகவை மறுபடியும் மக்கள் நலன் சார்ந்த இயக்கமாக உருவாக்க முயற்சிக்க வேண்டும்.

3  எல்லா அரசியல் தலைவர்
களுக்கும் குடும்பங்கள் உள்ளன. ஆனால் குடும்ப நலன்களை மட்டுமே முன்னிறுத்தாமல் தமிழ்நாடும், தமிழ் மக்களும்தான் தமது குடும்பம் என்பதை திமுகவின் கட்சித்தலைமை உணரவேண்டும்.

4  ஈழம் சார்ந்த திமுகவின் அணுகுமுறையை முற்றிலும் மாற்றிக்கொள்ள வேண்டும்

5 வெறுமனே மேடைப்பேச்சு, கோஷங்கள் ஆகியவற்றைவிட்டு தமிழ் மொழி, பண்பாட்டுத் துறையில் உண்மையான வளர்ச்சிக் கொள்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

 

 

 

 

இமையம், எழுத்தாளர்

 

   1  திமுக படிப்படியாக தன்னுடைய அடிப்படைக் கொள்கைகளிலிருந்து விலகிவந்திருக்கிறது. அக்கட்சி மீண்டும் தன்னுடைய வேர்களை மீட்டெடுக்க வேண்டும்.

2 மாவட்டச் செயலாளர்கள் ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை கட்டாயமாக மாற்றப்பட வேண்டும்.

3  அமைச்சர்களாக இருப்பவர்கள் கட்சியில் முக்கிய பதவியோ, மாவட்டச் செயலாளர் பதவியோ வகிக்கக்கூடாது.

4  மாவட்டச் செயலாளர்களின் மகன்கள், மனைவிகளின் புகைப்படம் போட்டு சுவரொட்டிகள் ஒட்டுவதைக் கட்டுப்படுத்த வேண்டும்.

5  யார் வேண்டுமானாலும் எந்தப் பதவிக்கு வேண்டுமானாலும் வரலாம் என்ற சூழ்நிலை திமுகவில் உருவாகவேண்டும்.

 

 

 

 

 

கலாப்ரியா, கவிஞர்

1  எங்கள் பதின் பருவத்தில், எங்களைப் போன்றவர்களை, திராவிட இயக்கம் ஈர்த்தது போன்ற சூழலை, இன்றைய இளைஞர்கள் மத்தியில் உருவாக்க வேண்டும்.அவர்கள் இன்று அடைந்துள்ள பல சமூக நீதிகளுக்கு தி.மு.க முக்கிய காரணம் என்று அவர்கள் உணராதிருக்கிறார்கள். அதற்கு தொண்டனை வைத்துதான் கட்சி என்ற ஆதி மனோபாவம் பலப்பட வேண்டும்.

2  மாநில சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி என்ற கோஷம் ஒரு நிகழ்வாய் உருப்பெறத் தொடங்கி கிட்டத்தட்ட இருபது ஆண்டுகள் ஆகப்போகிறது.  உண்மையான ஒரு ஃபெடரல் அமைப்பை உருவாக்கத் தவறியதாகவே உணர்கிறேன். அதற்கு இப்போதும் வாய்ப்பு உள்ளது .

3  ஊடகங்கள் சித்தரிக்கிற, பொதுப்புத்தி சார்ந்த ‘குடும்ப அரசியல்’ குறித்த எதிர்மறைக் கருத்துகள் பற்றி உள்ளபடியே ஆராயவேண்டும்

4   ஈழப்பிரச்சினையில் மத்திய அரசின் (அது காங்கிரஸ் ஆனாலும் சரி வேறு எந்த ‘தேசியக் கட்சி ஆனாலும் சரி) அணுகுமுறைகள் முற்றிலும் தவறானது என்று  மத்திய அரசுடன் எந்த சமரசமும் இன்றி உணர்த்தவேண்டும்.

5  ‘வீழ்வது நாமாக இருந்தாலும்.வாழ்வது தமிழாக இருக்கட்டும்’ என்ற கோஷத்தை அதே அக்கறையுடன் இனி யார் காப்பாற்றப்போகிறார்கள், என்ற கவலை பரவலாக உள்ளது. இதற்காக அறிவார்ந்த தளத்தில் அடுத்த தலைமுறைத் தலைவர்கள் தங்களைப் புதுப்பித்துக் கொள்ளத் தயாராக வேண்டும்.   

நன்றி : சண்டே இந்தியன் இதழ் (ஜூலை 12, 2011)

திக்கெட்டும் திட்டுக்கள்…


 ”உனக்கு எழுதறத விட வேறென்னய்யா வெட்டி முறிக்கிற வேலை? ஒவ்வொரு தடவையும் உன் வலைப்பக்கமா வந்து வெறுப்பேறிப் போறதுதான் கடுப்பா இருக்கு” என ஏகப்பட்ட “பாராட்டுரைகள்” எல்லா பக்கமிருந்தும்.

 

எல்லாம் சரி பண்ணீர்லாம் நண்பா… ஜூன் ரெண்டாவது வாரத்துல இருந்து நமது வலைக்கென்றே ஒரு புதிய தொடர் தொடங்கீட்டாப் போகுது. அதுக்கு பட்டாசா ஒரு தலைப்ப மட்டும் அனுப்பி வையுங்க.

 

அதுக்கு இடைல மனச நெருடுன “மாற்றான் தோட்டத்து கனகாம்பரங்களில்” இருந்து கொஞ்சம்…

 

முதலாவதாக…..

 

நீதியின் கண்களை திறக்க முற்படும் நம் அன்புத் தம்பி பேரறிவாளனின் நியாயக்குரல்……

 

என் குரலைக் கேளுங்கள்

பேரறிவாளன்


அனைவருமே எதிர்த்து நின்றாலும்
சரியானவை சரியானவையே; அனைவருமே ஆதரித்து நின்றாலும் பிழையானவை பிழையானவையே”

உண்மை வெல்ல வேண்டுமென போராடி நான் தோல்வியுற்று விழும் ஒவ்வொரு முறையும் வில்லியம் பென்னின் இந்தச் சொற்களை நினைத்தே மீண்டு எழுவதுண்டு. அதேநேரம் நான் எப்போதுமே உண்மையின் பக்கம் இருக்கிறேன் என்ற பெருமிதம் உண்டு.

அன்புமிக்க மனிதநேய மாந்தரே! முதலில் உங்களிடம் என்னை நான் அறிமுகம் செய்து கொள்ளவேண்டும். எவ்வாறு அறிமுகம் செய்ய? பலநூறு பண்புமிக்க மாணவர்களை உருவாக்கிய ஓய்வுபெற்ற ஏழை பள்ளி தமிழாசிரியரின் ஒரே புதல்வன் என அறிமுகம் செய்து கொள்வதா அல்லது ஒழுக்கமும் மனிதநேயமும் வாழ்வின் இரு கண்கள் என அறிமுகம் செய்துகொள்வதா எனத் தெரியவில்லை. இவ்வாறெல்லாம் அறிமுகம் செய்துகொள்ள எனக்கு விருப்பம் இருந்தாலும் எனது விருப்பத்திற்கு மாறான அறிமுகம் ஒன்று என்மீது திணிக்கப்பட்டுள்ளது. அதுவே, ராஜிவ் காந்தி கொலை வழக்கின் தூக்குத் தண்டனை கைதி அ.ஞா. பேரறிவாளன். ஆம். இதுவே எனது இன்றைய தவிர்க்கமுடியாத அடையாளம்.
20 ஆண்டுகளுக்கு முன்பு வரை உங்களைப்போலவே தெருக்களில் திரிந்த சாதாரண மனிதனை திடீரென பயங்கரவாதியாக, கொடூர கொலைகாரனாக சித்தரித்தது பேரவலமாகும். ஒரு தமிழனாகக் கூட அல்ல; ஒரு மனிதனாக சக மனிதர்கள் துன்பத்தில் உழல்வது கண்டு துடித்தெழுவதும் கொலைக்குற்றமாகிவிடும் என ஒரு நாளும் நான் எண்ணியதில்லை.

உங்களுக்கு ஒன்றை வெளிப்படையாக நான் சொல்ல விரும்புகின்றேன். எனது வாழ்வின் எந்த நிலையிலும் ராஜிவ் காந்தியை மட்டுமல்ல; எந்த மனிதரையுமே கொல்ல கடமையாற்றியதும் இல்லை. அதுகுறித்து மனதளவில் கருதிப் பார்த்ததும் இல்லை. நான் நேசித்து ஏற்றுக்கொண்ட தந்தை பெரியார் தந்த சுயமரியாதை கொள்கையும் பார்ப்பன எதிர்ப்பும் என்னை கொலைகாரனாக சித்தரிக்க ஆதிக்கச் சக்திகளுக்குக் கிடைத்த முதல் ஆயுதம் எனில் தொப்புள் கொடி உறவாம் ஈழத்தமிழினம் மேற்கொண்ட தற்காப்புப் போர்மீது கொண்ட  என் தீராப்பற்று அடுத்த காரணமாயிற்று.

மின்னணுவியல்  மற்றும்  தகவல் தொடர்பியலில் பட்டயக்கல்வி ( Diploma in Electronics and Communication ) முடித்திருந்தேன் என்ற ஒரே காரணத்தால் புலனாய்வுத் துறையினரின் நெருக்கடிக்கு ஆட்பட்டு 19 வயதில் நான் ஒரு வெடிகுண்டு நிபுணராக செய்தி ஊடகங்களால் சித்திரிக்கப்பட்டேன். ஆனால் அந்த வெடிகுண்டு குறித்து இன்றுவரை புலனாய்வு செய்யவே முடியவில்லை என்கிறார் வழக்கின் தலைமைப் புலனாய்வு அதிகாரியாக இருந்து  ஓய்வுபெற்ற சிபிஐ அதிகாரி கே. ரகோத்தமன்.

ராஜிவ் கொலையில் கைது செய்யப்பட்ட 26 நபர்களில் 17 பேருக்கு ‘தடா’ சட்டத்தின்கீழ் ஒப்புதல் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. அந்த 17 ஒப்புதல் வாக்குமூலங்களையும் பதிவு செய்தவர் அப்போது நடுவண் புலனாய்வுத் துறையின் கொச்சி பிரிவு காவல் கண்காணிப்பாளர் தியாகராஜன். இவரது நம்பகத்தன்மையை விளக்க கேரளாவைச் சேர்ந்த அருட்சகோதரி அபயா கொலையுண்ட வழக்கு போதுமானது. 1993 ஆம் ஆண்டு நடந்த அபயா கொலையினை ‘தற்கொலை’  என முடிக்கச் சொல்லி கட்டாயப்படுத்தியதால், அவருக்குக் கீழ் பணிபுரிந்த துணை காவல் கண்காணிப்பாளர் தாமஸ்வர்கிஸ் தனது பதவியையே துறந்தார். 16 ஆண்டுகள் கழித்து 2009 ஆம் ஆண்டு அக்கொலை வழக்கு துப்பறியப்பட்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒரு அருட்சகோதரியின் வழக்கிலேயே சிலரைக் காப்பாற்ற பொய்யான ஆவணங்களை தயார் செய்துள்ளார் எனில், ராஜிவ் கொலை போன்ற பெரிய வழக்கில் எவ்வாறெல்லாம் ஒப்புதல் வாக்குமூலம் என்ற ஆவணத்தை இவர் தயார் செய்திருப்பார் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.

20 ஆண்டுகளுக்கு முன்னர் என்மீது பூசப்பட்ட கொலைகார சாயம் இன்று மெல்ல மெல்ல வெளுத்து வருகிறது. ஜெயின் கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் அமைக்கப்பட்ட பல்நோக்கு கண்காணிப்புக்குழு மேற்கொள்ளும் விசாரணையின் முடிவில் இன்னும் பல உண்மைகள் வெளிச்சத்திற்கு வரக்கூடும். விடுதலை பெற்ற இந்தியாவிலும் சரி, அதற்கு முன்னர்  அடிமைப்பட்டு கிடந்த இந்தியாவிலும் சரி, இதைவிட மனிதநேயத்திற்கு ஒவ்வாத சட்டமே இல்லை எனக் கூறும் அளவிற்கு கொண்டு வரப்பட்ட தடா எனும் கொடூரச் சட்டத்தின் துணைகொண்டு ஒரு பெருங்கதை என் போன்ற அப்பாவிகளுக்கு எதிராக புனையப்பட்டது. இறுதியில் ராஜிவ் காந்தி கொலை வழக்கிற்கு தடா சட்டம் பொருந்தாது என உச்சநீதிமன்றம் முடிவுக்கு வந்த பின்னர், அச்சட்டத்தின் கொடிய பிரிவுகளை மட்டும் பயன்படுத்தி என்னை தண்டித்துவிட்டது. தனக்கு ‘மாமூல்’ தரவில்லை என்ற ஒரே காரணத்தால் நடைபாதை கடை வியாபாரி ஒருவனை பயங்கரவாதி யென அறிவித்து ‘தடா’ சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்த கொடுமை வடமாநிலம் ஒன்றில் நடந்தேறியதை நீங்கள் மறந்திருக்கமாட்டீர்கள்.

சாதாரண பெட்டிக் கடையில் கிடைக்கும் 13 ரூபாய் மதிப்பிலான பேட்டரி செல் இரண்டு வாங்கித் தந்ததற்காக ஒரு மனிதனுக்கு தூக்கு வழங்கப்படுமெனின், அவனது 20 ஆண்டுகால இளமை வாழ்வைப் பறிக்க முடியுமெனின் இவ்வுலகில் நீதியின் ஆட்சி குடிகொண்டிருக்கிறதா என்ற ஐயப்பாடு எழுகிறது. ஆம். அரசியல் சதுரங்கத்தில்    அரண்மனை  கோமான்களைக் காக்க வெட்டுப்பட்ட சிப்பாயாக வீழ்ந்து கிடக்கிறேன்.

எனது வழக்கில் மூடிமறைக்கப் பட்ட உண்மைகளை விளக்கி நான் எழுதிய கடிதங்கள் “தூக்குக் கொட்டடியிலிருந்து ஒரு முறையீட்டு மடல்”  என்ற பெயரில் நூல் வடிவில் வெளியிடப்பட்டு துவரை தமிழில் மட்டும் 6 பதிப்புகளாக 11,700 பிரதிகள் விற்றுத் தீர்ந்துள்ளது. தற்போது மே 18 அன்று வேலூரில் ஏழாம் பதிப்பு வெளிவரவுள்ளது. ஆங்கில மொழி யில் 3500 பிரதிகள் அச்சிடப்பட்டுள்ளன. மேலும் அதன் இந்திப் பதிப்பு மிக அண்மையில் வெளிவர உள்ளது. இவையெல்லாம் மிக தாமதமாகவேனும் உண்மைக்குக் கிடைத்த அங்கீகாரமாக நான் கருதுகிறேன்.

உச்சநீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதியரசரும் மனித உரிமைப் போராளியுமான நீதியரசர் வி.ஆர். கிருட்டிண அய்யர், எனது குற்றமற்ற தன்மையைப் புரிந்து கொண்டு மேதகு குடியரசுத் தலைவர் அவர் களுக்கும் மாண்புமிகு தலைமை அமைச்சருக்கும், மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கும், திருமதி சோனியா அவர்களுக்கும் எழுதிய கடிதங்கள் எனது நீண்ட வலிமிகுந்த போராட்டத்திற்கான வெற்றிகளாகும். மும்பை உயர்நீதி மன்றத்தின் ஓய்வு பெற்ற நீதியரசர் எச். சுரேஷ் அவர்களின் கடிதமும் எனது ஊர் சட்டமன்ற உறுப்பினரின் கடிதமும் எனது பள்ளி ஆசிரியர், எனது ஊர் பொதுமக்களின் ஆதரவான செயல்பாடுகளும் உடைந்துபோன என் உள்ளத்திற்குக் கிடைத்த அருமருந்தாகும்.

எனது வேண்டுகோளெல்லாம் ஒன்றே ஒன்றுதான். ராஜிவ் காந்தியை அரசியல்வாதியாக விமர்சனம் செய்கிறவர்களை மட்டுமல்ல; அவரை மிக ஆழமாக நேசிக்கும் மனிதர்களையும் நான் கேட்க விரும்புவதெல்லாம் ராஜிவ் காந்தி யின் உயிர்ப் பலிக்கு ஈடாக அக் குற்றத்தில் எப்பங்கும் வகிக்காத குற்றமற்ற ஒரு மனிதனின் உயிர் பலியிடப்பட வேண்டுமா? அவ்வாறான அநீதிக்கு மனித நேயமிக்க நீதிமான்களான நீங்கள் உடன்படமாட்டீர்கள் என நம்புகிறேன்.

அன்பிற்குரியோரே! அரசியல் செல்வாக்கும், பணபலமுமற்ற இந்த சாமானிய மனிதனின் உண்மைக் குரலின் பக்கம் சற்று உங்கள் செவிகளைத் திருப்புங்கள். என் தரப்பு உண்மைகள் உங்கள் உள்ளத்தின் ஆழத்தைத் தொடுமெனில், எனது விடுதலைக்காக உங்கள் வலிமை யான குரல்கள் எழட்டும். குற்றமற்ற கடைக்கோடி மனிதனின் உள்ளக் குமுறலை உலகம் புரிந்து கொண்டது என வரலாறு குறிக் கட்டும்.

நீதி வெல்லட்டும்.

 நன்றி : சண்டே இந்தியன் – மே 18 – 2011


http://www.thesundayindian.com/ta/story/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AF%81%EF%BF%BD%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/60/552/

யுத்த தந்திரம்…

”தோழரே!” என்றுதான் எல்லோரையும் இன்று வரை அழைப்பது எனது வழக்கம். அதைக்கேட்டதும் நெகிழ்ந்து பார்ப்போரும் உண்டு. நமட்டுச் சிரிப்பு சிரிப்போரும் உண்டு.

சிலர் நேரடியாகவே “நீங்க கம்யூனிஸ்டா?” என்று கேட்ட பிறகுதான் என் அடிவயறு கலக்க ஆரம்பிக்கும். கேட்பவர் எந்தக் ”கம்யூனிஸ்ட்டை” மனதில் வைத்துக் கொண்டு இப்படிக் கேட்கிறார்….? அப்படியானால் இனி இவர் நம்மை எப்படிப் பார்ப்பார்….? என்றெல்லாம் மனசுக்குள் கேள்விகள் ஓடத் துவங்கும்.

அந்த நேரம் பார்த்து….. தகரம் கண்டுபிடிக்கும் முன்பே உண்டியலைக் கண்டுபிடித்த உள்ளூர் ”கம்யூனிஸ்டுகள்” நினைவுக்கு வர….. ஐய்யய்யோ நான் அந்தக் கம்யூனிஸ்ட் இல்லீங்க…. நான் வேற… அந்தத் தத்துவம் பிடிக்கும்…. அதைச் செதுக்கிய மார்க்சைப் பிடிக்கும்…. அதனை செயல்படுத்திய லெனினைப் பிடிக்கும்….. ஆனால் இவுங்களைப் பிடிக்காதுங்க….. என ஒப்புதல் வாக்குமூலம் அளிக்க ஆரம்பித்து விடுவேன்.

எப்படி ஏற்பட்டது இந்த நிலை? மார்க்சிம் கார்க்கியின் ”தாய்” படித்து…. ஜூலியஸ் பூசிக்கின் “தூக்குமேடைக் குறிப்புகள்” வாசித்து…. நிரஞ்சனாவின் “நினைவுகள் அழிவதில்லை”யை சிலாகித்து…. ராகுல்ஜியின் “பொதுவுடைமை என்றால் என்ன?” நூலை மனப்பாடம் செய்து….. மூலதனம்…. உற்பத்தி….. உழைப்பின் பாத்திரம் என ஒவ்வொன்றுக்காய் அர்த்தம் தேடி ஓடி வளர்ந்த நான் அப்படி இவர்களை மறுக்க வேண்டிய நிலை ஏன் ஏற்பட்டது?

அதற்குப் பின்னணியில் “ஏகாதிபத்திய சதி” ”குட்டி முதலாளித்துவ சக்திகளின் தூண்டுதல்” என ஏதுமில்லை.

அதற்குக் காரணமே அவர்கள்தான். அதாவது உள்ளூர் ”கம்யூனிஸ்டுகள்”. அல்லது மார்க்சிய லெனினியர் பார்வையிலோ…. மாவோவினர் பார்வையிலோ பச்சையாகச் சொன்னால் போலிக் கம்யூனிஸ்டுகள்.

மாமேதை லெனினோடு தங்களை ஒப்பிட்டு கற்பனை செய்து கொண்டு… அவர்  ”டூமா”வைக் கைப்பற்றியது போல் தாங்களும் பாராளுமன்றத்தைக் கைப்பற்றி அதை அம்பலப்படுத்தப் போகிறோம் என ஆரம்பத்தில் ”போர்க்களம்” புகுந்தவர்கள்தான் இவர்கள். பாராளுமன்றத்தை இவர்கள் அம்பலப்படுத்தினார்களோ இல்லையோ ஆனால் பாராளுமன்றம் இவர்களை அம்பலப்படுத்தி விட்டது.

77 பாராளுமன்றத் தேர்தலில் இடதுகள் தி.மு.க.வோடு. காரணம் காங்கிரஸ் எதிர்ப்பு. காங்கிரசின் அப்போதைய வளர்ப்பு மகன் வலதோ தாயோடு. பிற்பாடு வந்த சட்டமன்றத் தேர்தலில் எமர்ஜென்சியை ஆதரித்த எம்.ஜி.ஆரோடு இடது இணைந்து கொள்ள… வழக்கம்போல் வலது காங்கிரசோடு பிணைந்து நின்றது.

அடுத்து வந்த இரண்டரை ஆண்டுகளிலேயே(1980) எமர்ஜென்சி சிறைக் கொடுமையால் இறந்து போன சிட்டிபாபு…. சாத்தூர் பாலகிருஷ்ணன் என சகலமும் டோட்டல் அம்னீஷியாவில் தகர்ந்து போக நேருவின் மகளோடு ”நிலையான ஆட்சி”க்காக கை நீட்டினார் ”அடக்குமுறை எதிர்ப்பாளர்” எம்பெருமான் கலைஞர். இடதுசாரி ஒற்றுமையை உலகுக்கு ஓங்கி ஒலித்திட வலது இடதும் இப்போது எம்.ஜி.ஆர்.அணியில்.

நகர்ந்து போன நான்காண்டுகளில் 1984ம் வந்து சேர நடந்த சட்டமன்றத் தேர்தலில் இடதும் வலதும் தி.மு.க. அணியில். வாத்தியார் இறந்த பிறகு வந்த குடுமிபிடி தேர்தலில்(1989) சேவலோடு சேர்ந்திசை பாடிய ஜெ.வோடு வலது. திண்ணை காலியாகிய திருப்தியில் இருந்த தி.மு.க.வோடு இடது காம்ரேடுகள்.

1989 பாராளுமன்றத் தேர்தலில் ஜெ.வுக்கு டாட்டா காட்டிவிட்டு வலதுகள் தி.மு.க.வுக்கு பொட்டி தூக்க…. இடதோ அணி மாற முடியாத களைப்பில் அதே அணியில்.

இதுக்கு மேலயும் நடந்த எழுபத்தியெட்டாயிரம் தேர்தல்களில் யாரு எந்தப் பக்கம் சாய்ஞ்சாங்க…. அதுக்கு என்ன வியாக்கியானம் குடுத்தாங்க என்றெல்லாம் எழுதிக்கொண்டே போனால் அப்புறம் நான் 108 இல் போக வேண்டியதுதான்.

ஆனால் உங்களுக்குள் எழும் கேள்வி என்னவென்று புரிகிறது.

ஈழத்தில் இனப்படுகொலையே வெறித் தாண்டவமாடினாலும்….. ”முதல்ல எங்க கிளை முடிவு பண்ணனும் தோழர்…. அப்புறம் மாவட்ட தப்பு தப்பு ஜில்லா கமிட்டி முடிவு பண்ணனும்….. அதற்கப்புறம் மாநிலக் கமிட்டி முடிவெடுக்கும்….. பிற்பாடு அதை மையக்கமிட்டி அலசி ஆராஞ்சு முடிவு சொல்லும்” என ஆற அமர வெத்திலை பாக்கு போட்டுக் கொண்டு பேசிய காம்ரேடுகள்(வலது அப்போது கொஞ்சம் விதிவிலக்கு) புர்ர்ச்சித்தலைவி தன்னிச்சையாக வேட்பாளர் பட்டியலை அறிவித்து ஒரு எத்து எத்தியதும் எந்தக் கமிட்டியைக் கூட்டி முடிவு பண்ணிவிட்டு விஜயகாந்த் ஆபீசில் போய் அடைக்கலம் ஆனார்கள்? செங்கோவணம் காற்றில் சிதறடிக்க விஜய்காந்த் அலுவலகம் நோக்கி காவடி தூக்கியபடி ஆலாய்ப் பறந்து போனார்களே அது எந்த சித்தாந்தத்தின் அடிப்படையில்?

ஜெயலலிதாவோ…. கருணாநிதியோ….. விஜயகாந்தோ….. குறைந்தபட்சம் தங்கள் ஈகோவுக்காக ஆவது உறுதியாக நிற்பார்கள். ஆனால் பெரிய்ய்ய்ய்ய்ய பெரிய்ய்ய்ய்ய புத்தகங்களையும்…… தத்துவங்களையும் கரைத்துக் குடித்தவர்கள் கேவலம் பத்துப் பதினைந்து சீட்டுகளுக்காக எவரிடம் வேண்டுமானாலும் கையேந்துவதா?

இதுதானே ஜெண்டில்மேன் நீங்கள் கேட்க நினைக்கும் கேள்வி?

தப்பு கண்ணியவான்களே தப்பு.

மூன்றாவது அணிக்காக விஜயகாந்திடம் மட்டுமல்ல…..

நான்காவது அணியாக ஒன்றை சிம்பு என்கிற சிலம்பரசன் அறிவித்தாலும் ”பட்டினிக் கொடுஞ்சிறைக்குள் பதறுகின்ற மனிதர்களை மீட்பதற்காக” அவரோடும் அணி சேர்வார்கள் அவர்கள்.

அவ்வளவு ஏன் ஐந்தாவது அணியாக அனுஷ்க்கா ஒன்றை அறிவித்தாலும் அதிலும் அணி சேர அவர்கள் தயார்.

அதுதான் யுத்த தந்திரம்.

லால்சலாம் சகாக்களே.

நன்றி: சண்டே இந்தியன் இதழ்

சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்?

போனமுறை புத்தகக் கண்காட்சியில் வாங்கிய புத்தகங்களையே புரட்டிக்கூட பார்க்காவிட்டாலும், இந்தமுறையும் போயிருந்தேன் புத்தகக் கண்காட்சிக்கு. எல்லாம் ஒரு அரிப்புதான். புத்தகக் கண்காட்சிக்குப் போகாவிட்டால் எங்கே நம்மை “அறிவுஜீவி இல்லை” என்று அறிவித்து விடுவார்களோ என்கிற பயத்திலேயே பலபேர் போகிறார்கள் போலிருக்கிறது.

இலவசக் கடலையோடு சில புத்தகங்களையும் இலவசமாக வாசலிலேயே கொடுத்துக் கொண்டிருந்தார்கள். திலகவதி புண்ணியத்தில் அடியேன் திருமுகத்துக்கும் ஒதுக்கீடு வழங்கியிருந்தார்கள் அம்ருதா பதிப்பகத்தினுடைய பேனரில்.

புத்தகக் கண்காட்சிக்கு வெளியே இருக்கிற கேண்டீனில் வயிறு புடைக்கத் தின்றது போதாதென்று உள்ளேயும் தர்ப்பூசினி…… வடை…… டீ…… என்று பலபேர் வெளுத்துக் கட்டிக் கொண்டு இருந்தார்கள். பல ஜென்மங்கள் சாப்பிடுவதற்காகவே வந்திருப்பது அப்பட்டமாகத் தெரிந்தது.

புத்தகக் கண்காட்சி உண்மையிலேயே உருப்பட வேண்டுமென்றால் அதைச் சுற்றி பத்து கிலோமீட்டர் பரப்பளவுக்கு ஓட்டல்களே இல்லாமல் இருப்பது நல்லது.

கீழைக்காற்று…… தமிழினி…… திராவிடன்…… உட்பட பல பதிப்பகங்களில் கையிலிருந்த காசுக்கு கொஞ்சம் புத்தகங்கள் வாங்கிவிட்டு வெளியில் வர…… எங்கோ

பராக்குப் பார்த்தபடி வந்த ஒருவர் ஆளை குப்புறத் தள்ளுகிற அளவுக்கு மோதி விட்டு…… “அட நீங்களா?” என்றார். ஏதோ பிக்பாக்கெட்டைப் பார்த்ததைப் போல. “ஆமாம்…… நானேதான்.” என்றேன்.

அடுத்து ஒரு பத்திரிக்கையின் பெயரைக் குறிப்பிட்டு “நீங்கள் ஏன் அதில் எழுதுவதேயில்லை?” என்றார். “அவங்க கேட்கல…… அதனால எழுதலீங்க” என்றேன். ஆசாமி

அத்தோடு விடுவதாயில்லை. இன்னொரு பத்திரிக்கையைக் குறிப்பிட்டு “இதில் ஏன் எழுதுனீங்க……?” என்றார். “எழுதச் சொன்னதால் எழுதினேன்” என்றேன். வேறென்ன சொல்ல?

இந்தக் குழப்பம் “நண்பர்கள்” சிலருக்கும் உண்டு. என்னைப் பொறுத்தவரை எதில் எழுதுகிறேன் என்பதை விடவும்…… என்ன எழுதுகிறேன் என்பதில்தான் எனது கூடுதல் கவனம் இருக்கும். எனது எந்தவொரு வார்த்தையோ…… வாக்கியமோ…… நான் நேசிக்கும் பெரியார் – அம்பேத்கரிய தத்துவங்களுக்கோ…… பொதுவுடமை சித்தாந்தங்களுக்கோ…… இம்மியளவு கூட குந்தகம் விளைவித்துவிடக் கூடாது என்கிற அக்கறையிலேயே பயணப்படும்.

நான் எழுதிக் கிழித்ததெல்லாம் கிடக்கட்டும் ஒருபுறம்…… ஆனால் என்னை எழுத வைப்பதற்குள் அந்தந்த பத்திரிகை நண்பர்கள் படும்பாடுதான் பெரும்பாடு. உலகமகா சோம்பேறிக்கான பட்டம் யாருக்காவது கொடுக்கலாம் என்றால்…… நிச்சயம் எனது பெயரைத்தான் பரிந்துரைப்பார்கள் பத்திரிகை உலக நண்பர்கள்.

எப்படித்தான் மற்றவர்கள் மூனே மாசத்தில் எட்டு புத்தகம்…… பத்து புத்தகம்…… என்று போட்டுத் தள்ளுகிறார்களோ……? அவர்களெல்லாம் எழுத்தாளர்களா? அல்லது ஏதாவது காபி போடும் மெஷினா? என்கிற சந்தேகம் அடிக்கடி வரும். அதுசரி…… சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்? நமக்குத்தான் மண்டையில் இருக்கவேண்டிய சமாச்சாரம் சுத்தமாய் இல்லையே…… என்று என்னை நானே சமாதானப்படுத்திக் கொள்வேன்.

கட்சிதாவலுக்கு பல அரசியல்வாதிகள் சொல்லும் பல சமாளிப்புகளைப் போல……

பத்திரிகை தாவலுக்கும்

 “சொந்த வீடு……”

“வாடகை வீடு……”

“ஒத்திக்கு எடுத்தது……” என்றெல்லாம் புலம்பித்தள்ளும் எழுத்தாளர்களும் உண்டு. என்னைப் பொறுத்தவரை எந்தப் பத்திரிகையோடும் எந்தப் பகையும் இல்லை. ஏனென்றால் உறவு இருந்தால்தானே பகையைப் பற்றி சிந்திக்க.

 வர்த்தக இதழ்களைத் தாண்டி சமூக மாற்றத்திற்காக தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்களது இதழ்களில் எழுத வேண்டும் என்கிற ஆசை அவ்வப்போது எழும். ஆனால் வெகுஜன தளத்தில் வெறுமனே ஜல்லியடித்துக் கொண்டிருக்கும் எனது எழுத்துக்களால் அந்த இதழ்களின் பக்கங்கள் விரையமாகிவிடக் கூடாதே என்கிற அக்கறையில் அந்த ஆசையை அப்போதே புதைத்து விடுவேன்.

“சண்டே இந்தியன்” பத்திரிகையின் அரிந்தம் செளத்ரி “ஈழக் கோரிக்கை சரியில்லை” என்கிறாரா……

அதிலேயே “ஈழம் காலத்தின் கட்டாயம்” என்றுதான் எழுதுவேன்.

அவ்வளவு ஏன்……? இதே தமிழக அரசியல் இதழில் “சீனியர்” “பொருளாதார ரீதியான இட ஒதுக்கீடுதான் சரியானது” என்கிறாரா……

அதற்கு நேரெதிரான கருத்துத்தான் என்னுடையது என்பதனை எழுதத் தயங்க மாட்டேன். “குமுதம்” தொடங்கி “தமிழக அரசியல்” வரைக்கும் அதனதன் ஆசிரியர்கள் சமூகநீதி…… சமயமறுப்பு உட்பட எனது பல்வேறு எண்ணங்களை அறிந்தேதான் எழுத அழைக்கிறார்கள்.

மாற்றுக் கருத்துக்களுக்கான இடம் என்பது இதழியலின் மிக முக்கியமான அங்கம் என்பதை உணர்பவர்களோடு தொடர்கிறது எனது எழுத்து. அது இல்லாத இடங்களில் “உனக்கொரு கும்பிடு…… உன் பத்திரிகைக்கு ஒரு கும்பிடு” என்று நடையைக் கட்டி விடுவேன்.

இந்தக் குழப்பங்களுக்கெல்லாம் முடிவு கட்ட வேண்டுமானால் ஒன்று செய்யலாம்……

“இந்த இதழில் வெளிவரும் எந்தவொரு கதையையோ, கட்டுரையையோ ஏற்கவோ, மறுக்கவோ, சுருக்கவோ, நீட்டவோ ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.” என பல பத்திரிகைகள் கட்டம் கட்டி கடைசி பக்கத்தில் வெளியிடுவதைப் போல……

எனது கட்டுரை இடம்பெறும் பத்திரிக்கைகளில்…… “ இந்த இதழின் பிற பக்கங்களில் இடம்பெறும் எந்தவொரு கதைக்கோ…… கட்டுரைக்கோ…… நான் எந்தவிதத்திலும் பொறுப்பல்ல. எனது பக்கங்களில் இடம்பெறும் எழுத்துக்களுக்கு நான் மட்டுமே பொறுப்பு.” என்று கட்டம் கட்டிப் போடச் சொல்லலாம்.

ஆக……

எழுதுகிற இதழ்களெல்லாம்

எனக்கானவையும் அல்ல.

எழுதாத இதழ்களெல்லாம்

எனது எண்ணங்களுக்கு எதிரானவையும் அல்ல.

நன்றி : தமிழக அரசியல் வார இதழ்.

எங்கே செல்லும் இந்தப் பாதை?

இன்றைக்கு இந்தியாவிலேயே தலையாய பிரச்சனை என்று எதைக் கருதுகிறீர்கள் நீங்கள்….?

திசை மாறிப் போன விவசாயக் கொள்கைகளால் கூட்டம் கூட்டமாகத் தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகளின் நிலையா?

“சுதந்திரம்” பெற்று 59 ஆண்டுகளாகியும் உயர்கல்வி நிறுவனங்களில் இன்னும் முழுமையாக நிறைவேறாமல் இழுத்துக்கொண்டு கிடக்கும் சமூக நீதி குறித்தா?

உள் நாட்டு வர்த்தகங்களுக்கு மூடுவிழா நடத்திவிட்டு புதிய கிழக்கிந்தியக் கம்பெனிகளுக்கு மகுடம் சூட்டுகின்ற “தாராள”தொழிற் கொள்கைகள் பற்றியா?

இப்படித் தேவையற்ற சாதாரணச் சிக்கல்கள் குறித்தெல்லாம் நீங்கள் சிந்தித்துக் கொண்டிருந்தால் நிச்சயம் நீங்கள் ஒரு “தேசத்துரோகி”யாகத்தான் இருக்க முடியும். இன்றைக்கு இதுவா பிரச்சனை?

மேற்கத்திய நாடுகள்…குறிப்பாக அமெரிக்கர்கள் தூங்கும் நேரத்தில் தாமும் உறங்கி….அவர்கள் விழிக்கும் நேரத்தில் தாமும் எழுந்து…அவர்கள் காலால் இட்ட பணியை தலையால் செய்து முடிக்கும் நம் தகவல் தொழில் நுட்பத் துறையினர் படும் இன்னல்களை விடவா அதி முக்கியமானவை இந்த விவசாயிகள், தொழிலாளர்கள் படும்பாடுகள்?

8 மணி நேரம் உழைப்பு – 8 மணி நேரம் ஓய்வு – 8 மணி நேரம் உறக்கம் என்பதெல்லாம் நம்மைப் போன்ற படு சோம்பேறிகளுக்குத்தான். இந்தக் கணிப்பொறி மேதைகள் “சமூக முன்னேற்றத்திற்காக” ஓய்வும் உறக்கமுமின்றி ஓடாய் உழைக்கும் பொழுதுகள் ஒரு நாளைக்கு எத்தனை மணி நேரம் தெரியுமா? அதிகமில்லை கனவான்களே.. ஏறக்குறைய இருபது மணி நேரம்தான்.

இப்படிப் படாத பாடுபட்டு பணி முடிந்து வீடு திரும்பும்போது நேரம் நள்ளிரவைத் தாண்டிவிடுவது முதல் பிரச்சனை.

இக்கண்ணியவான்கள் சாதாரண உழைக்கும் மக்களோடு சேர்ந்து டாஸ்மாக்கில் குடிக்க முடியாது என்பது இரண்டாவது பிரச்சனை.

அந்த டாஸ்மாக்கும் இரவு 11 மணிக்கு மேல் திறந்திருப்பதில்லை என்பது மூன்றாவது பிரச்சனை.

நெற்றி வியர்வை நிலத்தில் சிந்த உழைத்துத் திரும்பும் இந்த நடுநிசி நாயகர்களுக்குக் காத்திராமல் PUBS களை ஒரு மணிக்கே மூடி விடுவது நான்காம் பிரச்சனை.

அப்படியே கிடைத்தாலும் அருந்திவிட்டு வருபவர்களை சர்வ பாதுகாப்பாக வீட்டில் கொண்டு போய் சேர்க்காமல் வழி மறித்துக் கேள்விகள் வேறு கேட்கிறதே காவல்துறை என்பது ஐந்தாவது பிரச்சனை.
இப்படி ஒன்றா இரண்டா இச்”சமூக சேவகர்கள்” சந்திக்கும் இன்னல்கள்?
எதற்காக? காசய்யா காசு. நீங்கள் முப்பதாண்டுகள் முட்டி தேய உழைத்த பிறகு எண்ணிப் பார்க்கும் மொத்த காசையும் மூன்றே மாதத்தில் சுளையாக எண்ணிப் பார்ப்பதென்றால்…
இரவாவது பகலாவது?
சுதேசியாவது விதேசியாவது?
தான் சீரழிந்தால் என்ன சமூகம் சீரழிந்தால் என்ன?
அப்பன் சாவைக்கூட சி.டி.யில் பார்த்தால் போயிற்று.
சம்பளத்தை விடவா சமூகம்?

இப்படி பிற துறையினர் சம்பாதிக்கவே இல்லையா?
இவர்கள் மட்டும்தானா?
உங்கள் கேள்வி நியாயம்தான்.

உண்மை.
ஆனால் அவர்கள் எவரும் விடிய விடிய மதுபானக் கடைகளை தங்கள் “தியாகங்களுக்கு” ஈடாக திறந்து வைக்கச் சொல்லவில்லை.
” ‘இரவு வாழ்க்கை’ குறித்து அரசு கவனம் செலுத்த வேண்டும்” எனக் கோரிக்கை வைக்கவில்லை.
நடு இரவு வரை தார்ச் சாலை போட்டு விட்டு ஓரத்தில் உறங்கும் பணியாளர்கள் மீது காரை ஏற்றிக் கொல்லவில்லை.

நம்மைப் பொறுத்தவரை ….
நாள் முழுக்க ஓடாய்த் தேய்ந்து பிய்ந்த செருப்புக்களைத் தைத்துக் கொடுக்கும் ஒரு உழைப்பாளியை விட…
பிறரது மலத்தைச் சட்டியில் சுமந்து சென்று தனது பாழாய்ப்போன வயிற்றைக் கழுவிக் கொண்டிருக்கிற ஒரு துப்புரவுத் தோழனைவிட ….
இவர்கள் எந்த விதத்திலும் உயர்ந்தவர்களில்லை என்பதுதான்.

ஏற்கெனவே இந்த மேதைகளுக்காக புகைக்கும் அறைகளைக் கட்டிக் கொடுத்துள்ள நிறுவனங்கள் அடுத்ததாக குடிக்கும் கூடங்களையும்(PUBS) கட்டிக்கொடுக்க இருப்பதாகத் தகவல்.
சபாஷ்.
ஊழியர்கள் கண்ணில் நீர் வழிந்தால்
எஜமானர்களுக்கு உதிரம் கொட்டாமலா இருக்கும்?

இக் கணிப்பொறி மேதைகளுக்கு இந்தியப் பொருளாதாரம் குறித்துத்
தெரிந்திருக்கிறதோ இல்லையோ…
ஆனால் அமெரிக்கப் பொருளாதாரம் அத்துப்படி.
உள்ளூர்ச் சேரிகளில் உயிரோடு கொளுத்தப்படுவது தெரிகிறதோ இல்லையோ….
ஐரோப்பிய நாடுகளது பிரச்சனைகளை அலசி ஆராய்வதில் அசகாய சூரர்கள்.

வெளியில்தான் ஆட்டம் என்றில்லை. உள்ளுக்குள்ளும் அப்படித்தான் என்பதைப் பறைசாற்ற பாலியல் வன்முறைகளை விசாரிக்கவென்றே இருக்கின்ற REDRESSEL….மற்றும் OMS BUD போன்ற குழுக்கள்.

இறுதியாக ஒன்றே ஒன்றுதான் சொல்ல இருக்கிறது.
குடிக்கட்டும்…
கும்மாளமிடட்டும்…
இரவு பகல் பொழுதுகள் புரிபடாமல் உடற்கூறின் தன்மைகள் சிதைந்து
கடவுள் பாதி – மிருகம் பாதி ஆளவந்தான்களாய் அலையட்டும்.
அது ஒரு கட்டம் வரை அவர்களது பிரச்சனை.
ஆனால் அவர்களது வளாகத்தைத் தாண்டி வீதிக்கு வரும்போது அது சமூகத்தின் பிரச்சனை.

மேற்கத்திய நாடுகளின் மனிதர்கள் எந்தெந்த வேளைகளில் கழிப்பறைக்குச்
செல்கிறார்கள்…..
வெளிநாட்டுப் பயணங்களின் போது வெளியே தள்ளும் கழிவுகளுக்கான பணத்தை எப்படி முன் கூட்டியே செலுத்துவது…
போன்றவற்றிற்குக் கூட Pரொக்ரம்மிங் செய்து கொடுக்கும் நம் கணிப்பொறி மேதைகளுக்குச் சொல்ல வேண்டிய செய்திகளும் சிலதுண்டு.

அதுதான்:
முதலில் சகல துறைகளிலும் உள்ள உழைப்பாளிகள் எவரை விடவும் தாங்கள் உயர்ந்தவர்களில்லை என்பதை உணரட்டும்.

அடுத்து சம்பளம் மட்டுமே சமூக மரியாதைக்கான தகுதிகளில் தலையாயது என்கிற மூட நம்பிக்கைகளிலிருந்து விடுபடட்டும்.

சமூகத்தின் சகல மனிதர்களையும் தங்களது சக மனிதர்களாய் நேசிக்கக் கற்றுக்
கொள்ளட்டும்.

சுதந்திரம் என்பது பிற மனிதரது மூக்கின் நுனியைத் தொடாத வரைதான் என்பதைப் புரிந்து கொள்ளட்டும்.

இப்படி மக்களிடம் கற்றுக்கொள்ள அநேகம் இருக்கிறது அவர்களுக்கு.
கற்றுக் கொள்ள மறுத்து அடம் பிடிக்கிறபோது
மிகச் சரியானதொரு சந்தர்ப்பத்தில்
சமூகமே கற்பிக்கும்.

நன்றி: த சண்டே இந்தியன்

நிபந்தனைகளுக்கு உட்பட்டது….*

பாலாவையே பிதாமகன் என்று சொல்லலாம் 2000 ல் எழுந்த புதிய அலைக்கு. “சேது”வில் துணிச்சலாக முன்னெடுக்கப்பட்ட முயற்சி இன்று “கற்றது தமிழ்” வரை கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது.

 

                மகேந்திரன்களாலும்……..பாலுமகேந்திராக்களாலும்……..                                     துளிர்த்திருந்த திரைத்துறை சகலகலாவல்லவன்களால் சகதியில் அமிழ்த்தப்பட்டது. அதற்கும் முன்னர் நாடகபாணிப் படங்களுக்கு ஆப்படித்து ஸ்டுடியோக்களுக்குள் மட்டுமே சுழன்று கொண்டிருந்த காமிராவை வயல்வெளிகளுக்கும்……..புழுதிக்காட்டுக்கும் சுமந்து சென்றதில் பாரதிராஜாவுக்கு பிரதான பங்கிருந்தது. மெல்லிய -நுண்ணிய உணர்வுகளைப் பிரதிபலித்த தமிழ்த் திரையுலகம் மசாலாக்களில் மூழ்கடிக்கப்பட்டது. அதன் பின்னர் உருவான மிக நீண்ட இடைவெளிக்கு முற்றுப்புள்ளி வைத்தவர்தான் பாலா.

தங்கர்பச்சானின் “அழகி”யோ ஒவ்வொருவரையும் தத்தமது பால்யத்துக்கே இழுத்துப் போய் நோஸ்டால்ஜியாக்களில் கிறங்கடித்தது. தனலட்சுமியும்……..சண்முகமும் ஓசைப்படாமல் மனதுக்குள் வந்து அமர்ந்து கொண்டார்கள்.

 

 

 

அண்ணன் மனைவியை அடைவது எப்படி? தம்பி மனைவியை தட்டிக் கொண்டு போவது எப்படி? என்று பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருந்த “வாலி”கள் லிங்குசாமியின் “ஆனந்த(ம்)”த்தின் முன்னே காணாமல் போனார்கள்.

 

“இயற்கை”யில் கால் பதித்த ஜனநாதனின் பயணம் “ஈ” யில் மற்றொரு பரிமாணத்தையும் காட்டியபடி தொடர்கிறது. “ஈ” சாதாரண படமல்ல. மருத்துவர் புகழேந்தி எழுதிய “எய்ட்ஸ் : ஓர் உயிரியல் ஆயுதப் போர்” (AIDS : A Biological Warfare) என்கிற நூலின் காட்சி வடிவம்தான் என்பது வெகு சிலருக்கு மட்டுமே புரிந்த உண்மை.

 

‘வால மீனுக்கும்……..விலங்கு மீனுக்கும்’ நடந்த கல்யாணக் கச்சேரியில் கண்ணில் பட்டவர்தான் மிஷ்கின். இந்த மனிதருக்குள் சொல்ல வேண்டிய சேதிகள் அநேகம் இருக்கக்கூடும் என்கிற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியதுதான் “சித்திரம் பேசுதடி”.

 

பசும்பொன்……..பாஞ்சாலங்குறிச்சி என்று வேறு பாதையில் பயணித்துக் கொண்டிருந்த சீமானை ‘தம்பி வா……..தலைமை ஏற்க வா……..” என மறுபடியும் அழைத்து வந்ததுதான் “தம்பி”. சமூக அவலங்களைச் சாடித் தீர்ப்பதில் எவனுக்கும் சளைத்தவனில்லை இந்தத் தம்பி என்று நிரூபித்த படம்.

 

இவற்றுள் ராதா மோகனின் உலகம் கொஞ்சம் வேறு வகையான உலகம். மேல்தட்டு மாந்தர்களது உலகைச் சுற்றி நிகழும் உணர்வலைகளைப் பதிவு செய்வதில் “மொழி” வகித்த பங்கு பிரதானமானது. மொழியை மொழியால் விளக்க முயற்சிக்காமல் உணர்வால் உணரவைக்க முற்பட்ட படம் எனலாம்.

‘காதலே கூடாது……..காதலிச்சா ஒவ்வொருவருக்கும் இதுதாண்டா கதி…….. என அச்சுறுத்துகிறார்’  என்கிற குரல்களுக்கு இடையில் அறிமுகமானவர்தான் பாலாஜி சக்திவேல். தென் மாவட்டங்களில் ஒளிந்திருக்கும் சாதீய முகத்தை அப்பட்டமாகச் சொன்னது “காதல்”. படம் பார்த்தவர்களில் சிலரை அது பயமுறுத்தியதும் உண்மைதான்.

அதைப்போலவே அதை எப்படி முறியடிப்பது என்கிற சிந்தனையையும் நிச்சயம் விதைக்கும் காதல்.

 

அண்ணன்……..தம்பியின் நேசம் ததும்பும் உறவை……..தோல்வியைத் தவிர வேறெதையுமே அனுபவித்திராதவன் வலியை……..இவ்வளவு தத்ரூபமாகச் சொல்லமுடியுமா? என்கிற கேள்வியை எழுப்பியது வசந்தபாலனின் “வெயில்”.

‘நானிருக்கிறேன்’ என தமிழ்த் திரைக்கு நம்பிக்கையூட்டும் நாயகனாய் முருகேசனாய் வரும் பசுபதி.

பெரும்பாலும் தமிழ்ப் படங்கள் சாதீயத்தை சொல்வதோடு நின்றுவிடும்…….. ஆனால் சொன்னதோடு நிற்காமல் அதன் மீதான சிறு விமர்சனத்தையாவது சுமந்து வந்த படம்தான் அமீரின் பருத்தி வீரன்.(திருநங்கையர் எனும் மனிதர்களை கொச்சைப் படுத்தியதை தவிர்த்துவிட்டுப் பார்த்தால்……..)

தகவல் தொழில் நுட்பத் துறையினர்…….. அதுவல்லாத துறைகளில் பயின்றவர்கள்……..பீட்ஸா கார்னர்களில் ஒதுங்குபவர்கள்……..ATM செண்டருக்கு உள்ளிருப்பவர்கள்……..அதற்கு வெளியே இருப்பவர்கள்……..எனச் சகலரையும் அசைத்துப் பார்த்த படம்தான் ராமின் “கற்றது தமிழ்”.

உலக மயமாக்கல் என்றால் என்ன? தாராளமயம் நம்மை எங்கு கொண்டுபோய் நிறுத்தும்? என்பதையெல்லாம் மூன்றாம் உலக நாடுகள் உணர்வதற்குள்ளாகவே மொத்த கோவணமும் உருவப்பட்டு விடக் கூடிய எதார்த்த நிலையில் அப்பட்டமாக அதை நெற்றியிலடித்து காட்சிப்படுத்தியது கற்றது தமிழ்.

சொல்ல வந்ததில் கொஞ்சம் மிச்ச சொச்சம் இருந்தாலும்……..இன்னும் கொஞ்சம் கூடுதல் பயிற்சியும், முயற்சியும் இருந்தால் இவர்களோடு சேரக்கூடியவர்தான் சமூக அக்கறையோடு “ராமேஸ்வர(ம்)”த்தை இயக்கிய செல்வம்.

இவர்களுக்கிடையில் அவ்வப்போது எதையாவது சொல்லியாக வேண்டும் என்கிற அக்கரையில் உள்ளவர்கள்தான் பார்த்திபனும், சேரனும்.

ஆக……..சொல்லிய படங்கள் அனைத்துமே நூற்றுக்கு நூறு சரியானவைகள் என்பதோ……..விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவைகள் என்பதோ அல்ல. யாவும் நிபந்தனைகளுக்கு உட்பட்டது. ஒப்பீட்டளவில் எழுந்த பார்வையே இது.

ஏனெனில் எஸ்.ஜெ.சூர்யா,

ஷங்கர்,

செல்வராகவன்,

சிம்பு

போன்ற “மகத்தான கலைஞர்களை” கணக்கில் கொண்டே எழுதப்பட்டது இது என்பதை இங்கு யாவரும் கவனத்தில் கொள்வது சாலச் சிறந்தது.

ஓ.கே. ……..
லைட்ஸ் ஆன்.

 

 

நன்றி : சண்டே இந்தியன்

(“கோடம்பாக்கத்தில் புதிய அலை” சிறப்பிதழ் – பிப்ரவரி 2008)

அப்பாலே போ சாத்தானே……

ஒரு முன் குறிப்பு:
வெள்ளைக்கார துரைகள் கணக்காய் படங்களுக்கு இங்கிலீஷ் பெயர் வைத்துக் கொண்டிருந்தவர்கள்  தமிழுக்கு இறங்கி வர….இந்த நேரம் பார்த்து “அகம் பிரம்மஸ்ய” என்று சமஸ்கிருதத்தில் துணைத் தலைப்பை வைத்திருக்கிறார் பாலா. சமஸ்கிருதத்துக்கும் தமிழக அரசின் வரி விலக்கு உண்டா என்ன?

“நான் கடவுள்” படத்திற்காக ஏகப்பட்ட பிச்சைக்காரர்களை திரட்டி படப்பிடிப்பு நடத்திக் கொண்டிருப்பதாகச் செய்தி.

இதைக் கேள்விப்பட்டதும் சட்டென்று ஒரு பொறி தட்டியது. ஏற்கெனவே ஆசிய வங்கி, ஐ.எம்.எப், உலக வங்கி, பரலோக வங்கி என ஒவ்வொரு வங்கிகளாய் படியேறி தலையைச் சொறிந்து, பல்லை இளித்துக் காசு வாங்கி வந்த அனுபவம் கை கொடுக்கும் என்பதால் இந்தியா முழுவதும் உள்ள மாநில நிதியமைச்சர்கள்… மத்திய நிதியமைச்சர் என அனைவரையும் திரட்டிக் கொண்டு வந்து இவர்களோடு நடிக்க வைத்தால் தத்ரூபமாக இருக்குமே படம் என்பதுதான் அந்தப் பொறி. சிறந்த நடிப்பிற்கான தேசிய விருதுக்குக் கூட வாய்ப்பிருக்கிறது. எதற்கும் அதைக் கொஞ்சம் பரீட்சித்துப் பாருங்களேன் பாலா….

 

##########

“இதெல்லாம் ஒரு பிரச்சனையா…வெறும் குப்பை மேட்டர்ப்பா…” என்று இனி யாரும் அசட்டையாகச் சொல்லிவிட முடியாது. அதுவும் சிங்காரச் சென்னையில் மூக்கைப் பிடித்துக் கொண்டு நடந்தவர்கள்.கடந்து போகிறவர்களுக்கே இப்படி என்றால் அதை சுமந்து செல்பவர்களுக்கு எத்தனை வலி இருக்கும் என்பதை ஒரு நொடியாவது சிந்திக்க வேண்டிய வேளையிது.

ஏழேகால் வருடக் காண்ட்ராக்ட்டில் வந்த ஓனிக்ஸ் கம்பெனி அதற்கு முன்னரே ஓட்டம் பிடிக்க….வந்தது வேட்டு சென்னைவாசிகளுக்கு. குவிந்த குப்பையைப் பொறுக்காததோடு இருக்கிற குப்பைத் தொட்டிகளையும் உடைத்துப் போட்டுவிட்டு ஓடியிருக்கிறது அந்த சிங்கப்பூர் நிறுவனம்.

நல்லவேளை அவர்கள் நாட்டிலிருந்து கொண்டுவந்து கொட்டிவிட்டுப் போகாமலிருந்தார்களே அதற்காக நிம்மதிப் பெருமூச்சு விடலாம்.

பொறுப்பற்று நடந்த அந்த நிறுவனத்தை கூண்டில் ஏற்றி குமுறி எடுக்கச் சொல்லாமல்….”மாநகராட்சி ஊழியர்களைக் கூட்டி வந்து சுத்தம் செய்வதற்கு என்ன?” என்று ஊளையிடுகின்றன சில பத்திரிக்கைகள்.

சென்னையின் நிலை இப்படி என்றால் கோயம்புத்தூர்வாசிகளின் நிலையோ சிறப்போ சிறப்பு.

வீட்டுக்கு வீடு இலவச டி.வி. தருவதைப் போல இனி வீட்டுக்கு வீடு இரண்டு குப்பைத் தொட்டிகளைத் தரப் போகிறது மாநகராட்சி.

ஒன்று : மக்கும் குப்பைக்கு
மற்றொன்று: மக்காத குப்பைக்கு.

கோவை நகர மக்கள் இனி குப்பையைக் கொடுக்கும் போது கூடவே 30 ரூபாயையும் கொட்டி அழ வேண்டும்.

கோவை மக்கள் கொடுக்கும் வீட்டுக் குப்பைகளை மறு சுழற்சி செய்து உரமாக்கினால் மாதம் 60 லட்சம் ரூபாய் லாபம் கிடைக்கும். ஆனால் மாநகராட்சியோ இந்தக் குப்பைகளை வெறும் 24 ஆயிரம் ரூபாய்க்கு தனியார் நிறுவனத்துக்குத் தாரை வார்க்க தருணம் பார்த்துக் கொண்டிருக்கிறது என்கிறார்கள் நகர மேம்பாட்டுக்கான கண்காணிப்புக் குழுவினர்.

குறைந்தபட்ச அறிவுள்ளவர்கள்  வருகின்ற 60 லட்சம் லாபத்தை நோக்கி நடப்பார்களா?
அல்லது வெறும் 24 ஆயிரம் “லாபத்தை” (?) நோக்கிப் போவார்களா?

யாராவது ஆறறிவு உள்ளவர்கள் இவர்களுக்கு அறிவுறுத்தினால் நல்லது.

ஆக….
குப்பை வரி….
இன்று கோவை.
நாளை சென்னை?

##########

அவசர அவசரமாக ரேஷன் கடையை நோக்கி ஓடிக் கொண்டிருந்தவனைப் பிடித்து நிறுத்தி கையில் ஒரு நோட்டீசைத் திணித்தார் ஒரு ஆசாமி.
இருந்த அவசரத்தில் படிக்காமலேயே….என்ன? என்றேன்.

“கர்த்தராகிய இயேசு மீண்டும் வருகிறார் சகோதரா” என்றார்.

நான் ரேஷன் வாங்கிய பிறகா…இல்லை அதற்கு முன்னமேவா? என்றேன்.
“அதற்கு முன்னால் நீங்கள் தேவ ஊழியர்களின் கைகளால் ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ள வேண்டும்.” என்றார்.

நான் ஸ்நானமே வாரத்துக்கு ஒரு தடவைதான்….அதென்ன ஞானம்? என்றேன்.

“அதற்குப் பிறகு நீங்கள் ஜீவியம்….தெய்வீக சுகத்துக்குக் கீழ்படிந்து அனுபவங்களைப் பெற்றுக்கொள்ள வேண்டும்” என்றார் மறுபடியும்.

சாதாரண சுகத்துக்கே கீழ்படிபவன்….தெய்வீக சுகம்ன்னா சும்மாவா இருக்கப் போறேன்? சீக்கரம் மேட்டருக்கு வாங்க என்றேன்.

அப்படியே இயேசு வந்தாலும் ஏழு வருட காலம் வெயிட்டிங் லிஸ்ட்டில் இருப்பாராம்…அப்போது இன்னொரு டூப்ளிகேட் இயேசு மீசைக்கு மேலே ஒரு மச்ச அடையாளத்தோடு பயங்கர ஆட்சி நடத்துவாராம். ஏழு முடிந்த பிறகு இயேசுவின் ஏழரை அடச்சே….ஆயிரம் வருட ஆட்சி நடக்குமாம்….

அப்புறம் ஆஸ்த்துமா ரட்சிப்பைப் பெற்ற என்னைப் போன்ற “பரிசுத்தவான்கள்” த்ரிஷா, பாவ்னா போன்ற தேவதைகளோடு சூப்பரான வாசஸ்தலங்களுக்கும்….

உங்களைப் போன்ற ஆஸ்த்துமா ரட்சிப்பைப் பெறாதவர்கள் சுப்ரமண்யசாமி போன்றவர்களோடு அக்கினிக் கடலுக்கும் போவீர்களாம்….
உளறிக்கொண்டே போனது அது……

அது சரி நீங்க எந்த டாக்டர் கிட்ட டிரீட்மெண்ட் எடுத்துக்கறீங்க? என்றேன் சன்னமாக.

“அப்பாலே போ சாத்தானே” என்றபடி கையில் எதையோ அடிக்க எடுக்க..

உடு ஜூட் என்றபடி பின்னங்கால் பிடறியில் பட ரேஷன் கடை நோக்கிப் பறந்தேன்.

 

 

 

Follow

Get every new post delivered to your Inbox.

Join 127 other followers