அப்பா என்றழைக்காத உயிரில்லையே….

Balan1
கோவை நகரவாசிகளுக்கு பாலனைத் தெரியாமல் இருக்காது.
அவ்வளவு பிரபலம்.
.
உடனே அவர் எம்.எல்.ஏ.வா? மேயரா? கவுன்சிலரா ?
என்றெல்லாம் முடியைப் பிய்த்துக்
கொள்ள வேண்டியதில்லை.
.
எங்கெங்கெல்லாம் மக்கள்
கூட்டம் கூட்டமாக இருக்கிறார்களோ….
அங்கெல்லாம் பாலன் இருப்பான்.
அதுதான் அவனது அறுவடைக்கான இடங்கள்.

பாலனது தொழிலைப் பற்றி
இலக்கிய நயத்தோடு சொல்வதானால்
“இரந்துண்டு வாழ்தல்” என்றும் சொல்லலாம்.

கொச்சையாகச் சொல்வதானால்
பிச்சை எடுத்தல் என்றும் சொல்லலாம்.

இத்தனைக்கும் அவன் என் பால்யகாலத் தோழன்.
எங்கள் வீட்டுக்கு நேர் எதிர்வீடு பாலனுடையது.
சிறுவயதில் அவனோடுதான் குண்டு விளையாடுவேன்.
விளையாடும்போது யாராவது “கிழவா!” என்று
சொல்லிவிட்டால் பாலனுக்குக் கோபம் வந்துவிடும்.
பெருவிரலை மடக்கி வைத்து விலாப் பகுதியில் குத்துவான்.
.
ஏதோ ஹார்மோன் குறைபாடால்
அவனுக்கு சிறுவயதிலேயே
வயதுக்கு மீறிய முதிர்ச்சி.
பதினைந்து வயதிலேயே முப்பது வயதுத்
தோற்றத்தோடு இருப்பான்.
இத்தனைக்கும் அவன் குடும்பம் வசதியான குடும்பம்.
.
அவன் வீட்டை விட்டு வெளியேறியதற்கு
அல்லது வெளியேற்றப்பட்டதற்கு
அவனது முகத்தோற்றம் காரணமா?
அல்லது வேறு ஏதேனும் காரணமா?
யாருக்கும் தெரியாது.

காலை தொடங்கி இரவு வரைக்கும்
தொடரும் அவனது பிச்சை எடுக்கும் பயணம்.
.
பூமார்கெட் பக்கம் கடை வைத்திருக்கும்
ஏதோ ஒரு புண்ணியவான் ஒரு மொட்டை மாடியில்
படுத்துக் கொள்ள அடைக்கலம் கொடுத்திருக்கிறார்.

மழை பலமாக அடிக்கும் காலங்களில்
பாலன் என்ன செய்கிறானோ என்கிற நினைவாக இருக்கும்.
.
பாலனுக்கு என் இயற்பெயரும் தெரியாது.
புனைப்பெயரும் தெரியாது.

ஒன்று சின்ன வயதில் என்னைத் திட்டக் கூப்பிடும்
”டேய் ஜொள்ளு” என்கிற பட்டப்பெயர் தெரியும்.
அல்லது வீட்டில் அப்பா செல்லமாகக் கூப்பிடும் ”ராஜா”
என்கிற பெயர் தெரியும்.

பாமரன்னு சொன்னா யாருடா அது?
என்று கேட்பான்.
.
ஊருக்கே உபதேசம் செய்யும். எனக்கு
நண்பன் பாலனுக்கு என்ன வழி செய்வது
என்பது மட்டும் இன்னமும் புரிபடவில்லை.

எத்தனையோ பிரபலங்களைத் தெரிந்து வைத்து என்ன பயன்?
அவனை வீட்டில் கொண்டுபோய் சேர்க்க முடியுமா?
அவர்கள் இவனை ஏற்றுக் கொள்வார்களா?
அல்லது வேறு ஏதாவது வகையில் உதவ முடியுமா?
என்பது எதுவும் இன்றுவரை புரிபடவில்லை எனக்கு.
.
அவனுக்கும் நம்மைப்போல வாழத்தான் ஆசை.
ஆனால் அவனது முகத்தோற்றத்துக்கு
யாரும் அவனை வேலையில்
வைத்துக் கொள்ளத் தயங்குவார்கள்.
.
இந்த உலகில் அவன் போன் செய்யக்கூடிய
ஒரே நண்பன் நான் மட்டும்தான்.
எங்காவது ஒரு ரூபாய் பூத்தில் நின்றுகொண்டு
எனக்குப் போன் போடுவான் தினமும்.
.
”யோவ்…. ராஜாண்ணா… எங்கிருக்கற?” என்று.
இன்னைக்கு எவ்வளவுடா வசூலு? என்றால்…
”கம்மிதான்…. எண்பதுதான் கெடச்சுது….” என்பான்.
.
போனவாரம்கூட
”எனக்கு இன்னைக்கு பொறந்தநாளு ராஜாண்ணா…” என்று
யாரோ ஒரு நல்ல உள்ளம் எடுத்துக் கொடுத்த
பேண்ட்…ஷர்ட்டில் வந்து நின்றான்.

சட்டையின் உள் பாக்கெட்டில்
அவன் இன்னும் உயிராய் நேசித்துக் கொண்டிருக்கும்
தன் அப்பாவின் படத்தை ஒரு சிறிய நோட்டுப் புத்தகத்துக்குள்
பத்திரமாக வைத்திருக்கிறான் பாலன்.
.
“அப்பா என்றழைக்காத உயிரில்லையே” என்பதுதான்
அவனைப் பொறுத்தவரை பிடித்தவரிகள்.
அவனது அந்த அப்பாவும் போய்ச் சேர்ந்து
இருபது வருடங்களாகி விட்டது.
.
பாலனை எங்காவது வழியில் பார்த்தால்
”உன் ஃப்ரெண்டு ராஜா…
உன்னப் பத்தி எழுதீருக்கிறதப் படிச்சேன்…”ன்னு
சொல்லீட்டு அவனுக்கு ஏதாவது
வயிராற வாங்கிக் குடுத்துட்டு வாங்க பிரதர்.
.
எனக்கும் பாலனுக்கு அடிப்படையில் ஒரே ஒரு வித்தியாசம்தான்.

அவன் பிச்சை எடுப்பதைக் கொள்கையா வெச்சிருக்கான்.

நானோ கொள்கை பேசி நாசூக்கா பிச்சை எடுக்கிறேன்.

அவ்வளவுதான் வித்தியாசம்.
.
.
Balan2
(“டுபாக்கூர் பக்கங்கள்.” குமுதம் வார இதழ் )

ஹலோ…. பிரபா ஒயின்ஸ் ஓனருங்களா?

Soodhu2
சென்னையிலுள்ள காவல் நிலையத்தில் இருந்து திடீரென ஒரு அழைப்பு.
.
என்னடா இது….
நாம ஏதும் சமீபத்தில் எந்தக் கேசிலும் மாட்டவில்லையே….
குறைந்தபட்சம் செவண்டி பைவ் கேஸ்கூட பெண்டிங் இல்லையே….
.
என்னவாக இருக்கும்?
.
ஒருவேளை சுவிஸ் வங்கியில் பதுக்கி இருக்கும் கருப்புப்பண விவகாரமா இருக்குமோ?
.
வெங்காயம்….
வெள்ளைப்பணத்துக்கே வக்கில்லாத என்னைமாதிரி ஆளுங்க கருப்புப்பண கேசில் மாட்டினால்….
காசுள்ள கபோதியெல்லாம் அப்புறம் நாண்டுகிட்டுச் சாக வேண்டீதுதான் என்று யோசித்துக் கொண்டே……
.
ஹலோ…. பிரபா ஒயின்ஸ் ஓனருங்களா? என்றேன்.
.
”நான் இன்ஸ்பெக்டர் ராஜு பேசறேன்” என்றது மறுமுனை.
.
அய்யோ சாரிங்க ஆபீசர்….. நான் என்னாவது ஹெல்ப் பண்ணனுமா?
.
”இல்ல பாஸ்…. நீங்க தொ.பரமசிவன் பத்தி ஒரு பத்திரிக்கைல எழுதீருந்த கட்டுரை படிச்சேன்…… சூப்பர் பாஸ்.
இந்தப் புத்தகக் காட்சிலகூட அவரோட “மானுட வாசிப்பு” புத்தகம் வாங்கினேன்….. அட்டகாசம் சார்….
அப்புறம் நம்ம அழகிய பெரியவனோட சிறுகதைகள்…..” என பேசிக் கொண்டே போனார் இன்ஸ்பெக்டர் ராஜு.
.
நான் தலை சுற்றிக் கீழே விழாதது ஒன்றுதான் பாக்கி.
.
என்னாது…. போலீஸ் டிப்பார்ட்மெண்ட்ல படிக்குற ஆளும் இருக்கா? அதுவும் இந்த மாதிரி புத்தகம் எல்லாம் படிக்கிற ஆளா?

”இந்தப் பஞ்சப்படி பாக்கிய எப்பக் குடுப்பாங்க.? ”
.
”ஏழாவது சம்பளக்கமிஷன் சமாச்சாரத்த மாநில அரசு எப்ப சார் நடைமுறைப்படுத்தும்?”
.
”அர்ரிர்யர்ஸ் பணத்தை ரொக்கமா குடுப்பாங்களா இல்ல…. பிராவிடண்ட் பண்டுல சேர்த்தீருவாங்களா? ”
.
”திடீன்னு மண்டையப் போட்டா வர்ற கிராஜுட்டி பணத்தை கூட்டிக் குடுப்பாங்களா இல்லையா?”
.
”ரிட்டையர்மெண்ட் வயச 98 ஆ உயர்த்துவாங்களா…மாட்டாங்களா.?”
.
அப்புடீங்குற உலகமகா மேட்டரெல்லாம் பேசாம….. தொ.ப.வாம்….. இலக்கியமாம்….?
.
அய்யோ…. இது ரொம்ப ரொம்ப மோசமான விஷயமாச்சே.
.
ச்சே… காவல்துறைலயும் இந்தமாதிரி கருப்பு ஆடுகளா?
.
நோ திஸ் ஈஸ் டூ Bad.
.
.
(”ஒரு தற்குறியின் நாட்குறிப்புகள்” ஜனனம் வார இதழ்)

இருந்தா நல்லாயிருக்குமேன்னுதான் சொன்னேன்…

கமலின் தசாவதாரத்தில் வரும்
Tho.Pa3“நான் கடவுள் இல்லேன்னு எங்கீங்க சொன்னேன்?
இருந்தா நல்லாயிருக்குமேன்னுதான் சொன்னேன்….”
என்கிற வசனம் உலகபிரசித்தம்.
.
ஆனால் இந்த வரிகளுக்குச் சொந்தக்காரர்
தொ.ப என்றழைக்கப்படும் தொ.பரமசிவன்.
இந்தத் தொ.ப கமலுக்கும் நண்பர்.
அவர் சொன்னதைத்தான் கமல் உரிமையோடு
தன் திரைப்படத்தில் பதிவு செய்திருப்பார்.
.
தமிழ் மக்களது பழக்கவழக்கங்கள்
அவர்களது பண்பாட்டு கூறுகள் பற்றியெல்லாம்
பல்கலைக் கழக ஏ.சி.அறைகளில் உட்கார்ந்து
ஆராய்ச்சி செய்யாமல் மூலை முடுக்கில் இருக்கும்Tho.Pa. in Field
குக்கிராமங்களுக்கு எல்லாம் நடையாய் நடந்து
மக்களோடு மக்களாய் இருந்து
அநேக நூல்கள் வெளியிட்டவர்தான் இந்தத் தொ.ப.
.
ஆன்மீகத்தில் நம்பிக்கை உள்ள்வர்கள்தான்
புண்ணியத்தலங்களைத் தேடிப்போவது வழக்கம்.
ஆனால் எனக்கும் எனது தோழர்களுக்கும்
புண்ணியத்தலம் ஒன்று உண்டென்றால்
அது பாளையங்கோட்டைதான்.
எங்கள் பேட்டரிக்கு சார்ஜ் குறையும்போதெல்லாம்
சார்ஜ் ஏற்றிக்கொள்ள பயணப்படும்
ஒரே இடம் தொ.பரமசிவன் இருக்கும் பாளையங்கோட்டைதான்.
.
மூன்று மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டால் போதும்.
ஒன்று நாங்கள் நண்பர்கள் படையோடு போய் அங்கு நிற்போம்.
அல்லது தொ.ப.வின் தோழர்களிடம் இருந்தோ
அல்லது அவரிடமிருந்தோ அலைபேசி அழைப்பு வரும்….
”என்ன…. இன்னும் வரலை?” என்று.
அப்புறம் என்ன பாளையங்கோட்டை நோக்கி பயணம்தான்.
.
பெரிய்ய்ய்ய்ய பிரபலத்தைப் பார்க்கப் போகிறோம்
என்கிற கற்பனையோடெல்லாம்
கிளம்பிப் போனால் தொலைந்தோம்.

அவரோ தெற்கு பஜாரில் உள்ள
ஏதோ ஒரு கடைத் திண்ணையில் உட்கார்ந்து
டீ குடித்துக் கொண்டிருப்பார்.
எப்போதும் அவரைச் சுற்றி நண்பர்கள் கூட்டம்
கலகலத்துக் கொண்டிருக்கும்.
.
அவரைச் சுற்றி ஞானிகளும் உண்டு.
என்னைப் போன்ற பேமானிகளும் உண்டு.
சகலருக்கும் ஒரே மாதிரி மரியாதைதான்.
.
போய் இறங்கிய கொஞ்ச நேரத்தில்
அவரோடு எங்கள் பயணம் தொடங்கும்.

அது தமிழர் நாகரீகம் வெளிவந்துவிடக்கூடாதே
என்கிற அச்சத்தில் கால்வாசி ஆராய்ச்சியோடு
கால்பரப்பிக் கிடக்கும் ஆதிச்சநல்லூருக்கோ
Tho.Pa Scootterஅல்லது சமணச் சிற்பங்கள் குவிந்திருக்கும்
கழுகுமலைக்கோ போய் இறங்கும் எங்கள் குழு.
ஒவ்வொன்றுக்கும் பின்னணியில் புதைந்து கிடக்கும்
உண்மைகளை வரலாற்று ஆதாரங்களோடு
விளக்கிக்கொண்டே வருவார் தொ.ப.
.
ஒருமுறை உக்கிரங்கோட்டையில் உள்ள
ஒரு புராதன கோயிலுக்குள் அழைத்துச் சென்றவர்
அங்குள்ள ஒரு சிற்பத்தைக் காட்டி

“அதப் பாருங்க…. அந்த முகத்தில் தெரியும்
புன்னகைக்கு முன்னால் மோனாலிசாகூட
பக்கத்தில் நிற்க முடியாது….” என்றார்.

அது பல நூற்றாண்டுகளுக்கு முன்னரான
வாமதேவி சிலை. உண்மைதான்.
அதன் புன்சிரிப்பில் அத்தனைபேரும் கிறங்கிப் போனோம்.
.
சிற்பங்கள் என்றில்லை.
நாம் உண்ணும் உணவில்…
கற்கும்கல்வியில்…
அர்த்தம் புரியாமல் வாழும் வாழ்வில்….
நமக்குத் தெரியாத எத்தனை பண்பாட்டுக்கூறுகள்
ஒளிந்து கொண்டிருக்கின்றன என்பதை
மழலைக்கும் புரியும் மொழியில் சொல்பவர்தான் தொ.பரமசிவன்.
.
பள்ளி என்கிற சொல்லே
சமணத் துறவிகளிடம் இருந்து வந்ததுதான் என்பார்.
.
கள்ளுண்ணாமை…
புலால் மறுத்தல்….
துறவு….
இம்மூன்றிலும் தமிழர்களிடம்
தோற்றுப் போனார் திருவள்ளுவர் என்று விளக்குவார்.
.
கீரையை ஏன் நாம் வீட்டிற்கு வந்த
விருந்தினர்களுக்கு கொடுப்பதில்லை என்கிற
கேள்வியை வீசி..

”ஏன்னா கீரை என்பது ஏழ்மையின் சின்னம்… அதான்”
என்கிற பதிலையும் கொடுப்பார் தொ.ப.
.
அரசியலும் அத்துப்படி அவருக்கு.

பெரியாரின் இந்தி எதிர்ப்புத் தளபதிகளில்
ஒருவராய் இருந்த பரவஸ்து ராஜகோபாலாச்சாரி அய்யங்கார் குறித்து….
.
“பிள்ளைமார்” சமூகத்தில் இருந்து இஸ்லாத்துக்கு மாறி
“கிருஸ்தவ” மங்கையை மணந்து வீரப்போர் புரிந்த
மருதநாயகம் என்றழைக்கப்பட்ட கான்சாகிப் குறித்து….
.
கடந்த நூற்றாண்டின் தொடக்கத்தில்
வகுப்புவாரி உரிமைக்காகக் குரல் கொடுத்து
லண்டன் சென்று உயிர்நீத்த டி.எம்.நாயர் குறித்து….
.
அவருக்கும் ஹோம்ரூல் அன்னிபெசண்ட் அம்மையாருக்கும்
நிகழ்ந்த செம ஃபைட் குறித்து….
.
அன்னிபெசண்ட்டுக்கும் பெர்னாட்ஷாவுக்கும்
இருந்ததாகச் சொல்லப்பட்ட காதலின் முறிவு குறித்து……

இப்படி ஏகப்பட்ட குறித்து…. குறித்து போட்டுக்கொண்டே போகலாம்
தொ.ப.. குறித்து பேசினால்.

எல்லாவற்றையும் சுவாரசியமாகச் சொல்லுவார்
அந்த மனோன்மணியம் பல்கலைக் கழகத்தின்
முன்னாள் தமிழ்த்துறைத் தலைவர் தொ.பரமசிவன்.
.
போனமாதம் அவரைப் பார்க்கப் போயிருந்தபோது
கண்பார்வையற்றோருக்காக
தமிழில் பிரெய்லி கொண்டுவந்த Anne Askwith பற்றிச் சொல்லிவிட்டு…

”பார்வையற்ற நம் மக்களுக்காக
போன நூற்றாண்டுலயே ப்ரெய்லி கல்வியைக் கொடுத்த
அந்த அம்மையாரை நாம கண்ணம்மைன்னுதான் அழைக்கனும்” Tho.Pa Single
என்றார் மனம் நெகிழ.
.
தொ.ப.வின் எண்ணற்ற ஆதங்கங்களில் இன்னொன்று
நரசிம்மலு நாயுடு குறித்ததுதான்.
கோவையில் அவர் பெயரில் ஒரு பள்ளி இன்றும் உள்ளது.
.
1900 லேயே வேளாண்மை குறித்து அற்புதமான
நூலை எழுதியவர் நரசிம்மலு நாயுடு.

”அவர் எழுதிய “விவசாயம் அல்லது கிருஷி
சாஸ்திர சாரசங்கியம்” என்கிற நூல் தமிழில்
முதன்முதலில் வந்த வேளாண்மை குறித்த அருமையான நூல்.

ஆனால் அவரைப் பற்றி இன்னும் ஒரு பல்கலைக் கழகத்துலகூட
யாரும் ஆராய்ச்சிப்படிப்புக்காக இதுவரைக்கும் தொடக்கூட இல்லை……

அருமையான மனிதர்ங்க அவர்.
நீங்க இதப் பத்தி எங்கியாவது எழுதுங்க…” என்றார்
மிகுந்த ஆதங்கத்தோடு.
.
அதான் எழுதீட்டமில்ல….
ஊதற சங்க ஊதியாச்சு.
இது விழுகுற காதில விழுந்தா சரி.
.
ஆனா இதப் படிக்கிற நீங்க செய்யறதுக்கும் ஒன்னு இருக்கு.
.
.
.
அதுதான்….
.
.

நீங்க திருநெல்வேலிக்கு அல்வா வாங்கறதுக்கோ….

தொப்பைக்கு எண்ணை தடவி
குற்றாலத்துல குளிக்கறதுக்கோ போறப்போ…

அப்படியே பாளையங்கோட்டைக்கும்
ஒரு விசிட் அடிச்சு நம்ம தொ.ப.வை ஒரு பார்வை பார்த்துட்டு வாங்க.

உங்குளுக்கும் உற்சாகமா இருக்கும்.
தலைவன் தொ.ப.வுக்கும் அது படு உற்சாகமா இருக்கும் மக்கழே……!
.
.

ஏன்னா… அவரோட பேசறதுங்குறதே….
ஒரு பிரம்மாண்டமான நூலகத்துக்குள்ள நுழைஞ்சு வர்ற மாதிரிதான்.
.
.
( “டுபாக்கூர் பக்கங்கள்” – குமுதம் வார இதழ்.)

Tho.Pa4

மருத்துவத்துக்கு மட்டும் எதற்கு அரசு கல்லூரி?


ஒருவழியாக எப்படியோ நுழைவுத் தேர்வு பூதம்
இந்த ஆண்டுக்கு இல்லை என்றாகிவிட்டது. .
.
Pre K.G தொடங்கி +2 வரைக்கும் பதினைந்து வருடங்கள்
பள்ளி… பெற்றோர்…. என கண்டபக்கமெல்லாம்
படி…படி..ன்னு டார்ச்சருக்கு ஆளாகி
+2 எழுதி முடிச்சு ”அப்பாடா” என்று வந்து உட்கார்ந்தால்…
பொறுக்குமா?
.
.
நீ +2 வுல 200 க்கு 200 ஏ எடுத்தாலும் சரி…
நாங்கதான் உன் தகுதிய ஒரசிப் பாத்து
சொல்லுவோம்ங்குது NEET.

அப்ப இங்க உள்ளவங்க பரிட்சை பேப்பரையெல்லாம்
பாகிஸ்தான் கல்வித்துறையா திருத்தி மார்க் போடுது?
.
இவை எல்லாவற்றையும்விட
நம்மிடம் வேறு ஒரு கேள்வியும் உண்டு.

அதுதான்:
.
ஒன்றாம் வகுப்பில் இருந்து பனிரெண்டாம் வகுப்பு வரை
அரசை நம்பி….
தனியார் பள்ளிப் பக்கம் தலை வைத்துக் கூட படுக்காமல்
அரசு பள்ளி அல்லது அரசு உதவி பெறும் பள்ளிகளிலேயே
பயின்று வெளியே வரும் மாணவர்களுக்கு
நாம் என்ன கைமாறு செய்திருக்கிறோம்?
.
.
அரசையே நம்பி இருந்ததற்கான பிரதிபலனாக
அரசு மருத்துவக் கல்லூரிகளில் அவர்களுக்கு
குறைந்தபட்சம் முன்னுரிமையாவது கொடுத்திருக்கிறோமா?
என்பதுதான்.
.
ஆனால் பனிரெண்டு ஆண்டுகள்
அரசு பள்ளிகளை நிராகரித்து…
தனியார் பள்ளிகளில் படித்து….
சகலத்தையும் கரைத்துக் குடித்து….
கரை கண்டு நுரை தள்ளிய மேதைகளுக்கு……
.
.
மருத்துவத்துக்கு மட்டும் எதற்கு அரசு கல்லூரி?
.
.

( “டுபாக்கூர் பக்கங்கள்” – குமுதம்)

CBSE

அம்மா என்றழைக்காத உயிரில்லையே….

Crow

காலையில் ஒரு துயர சம்பவம்.

அம்மா எந்த சடங்கை செய்யச் சொன்னாலும்
இரக்கமில்லாமல் மறுத்துவிடுவது
என் வழக்கம்.

அப்பாவின் நினைவு தினச் சங்கதிகள் உட்பட.

ஆனாலும் கிழவி விடுவதேயில்லை.

ஏதோ இன்றுதான் என்னைப் பார்த்ததுபோல
எதையாவது சொல்லும்.
நான் வழக்கம்போல ரெண்டு கடியைப் போட்டவுடன்
அமைதியாகி விடும்.

அதைவிட அம்மாவின் சமையல் சுவை
சர்வதேச அளவில் பிரசித்தி பெற்றது.
அப்பா நாற்பத்தி எட்டே வயதில் “விடைபெற”
அதுவும் ஒரு காரணமாக இருந்திருக்கக்கூடும்.

“பொங்கல் சாப்புடு…”ன்னு நீட்டினால்
அதை எடுத்துச் சாப்பிட ஏலாது.

நக்கித்தான் சாப்பிட முடியும்.

பாயாசம் என்கிற பெயரில் வந்திறங்கும் வஸ்துவோ
வெட்டிச் சாப்பிட வேண்டிய வகையறாவாகக்
காட்சி அளிக்கும்.

சிறுவயதில் அம்மா சமைக்கச் சமைக்க
எழுந்து ஓடியவன் வீட்டின் முன்புறம் இருந்த
பெரிய தண்ணீர்த் தொட்டியில் குப்புற விழுந்து
கை காலெல்லாம் செம அடி….

ஆறுதல் சொல்ல வீட்டுக்கு வந்த என் மச்சான்கள்….
” அக்கா கேசரி செய்யறேன்….னு சொல்லீருக்கும்….
அதான் அதுக்குத் தப்பிச்சுப் போயி தொட்டீல விழுந்துட்டான்…”
என்று கவலையோடு என்னைப் பார்த்தார்கள்.

ஆனாலும் அம்மாவிடம்
என்றும் மாறாத குணம் ஒன்று உண்டு.
அதுதான் அதன் இரக்க குணம்..

அது பார்சல் சோறோ…
அல்லது பத்து நாளாய் “பதப்படுத்தி” வைத்திருந்த
தன் சொந்த தயாரிப்போ….
காக்காய்க்கு வைத்து விட்டுத்தான் சாப்பிடும்.

யாராவது கல்யாணத்துக்குப் போயிருந்தாலும் சரி.
பந்தியில் வைத்ததில் எல்லாவற்றிலும்
கொஞ்சம் கொஞ்சம் பிச்சு எடுத்து
கையில் ஏந்திக் கொண்டு மண்டப
காம்பவுண்ட் சுவரை நோக்கிச் செல்லும்.

காக்காய்க்கு வைக்கும் மேட்டர் தெரியாதவர்கள்
இது ஏதோ பிச்சை எடுக்கத்தான்
உள்ளே வந்துவிட்டதோ என்று சந்தேகப்படவும்
சாத்தியப்பாடுகள் உண்டு.

என் அம்மாவின் சமையலுக்கு பயந்து…
வானத்தில் வரவரவே எங்கள் வீட்டைக் கண்டதும்
அப்படியே நெட்டுக்குத்தலாய் மேலே போய்
அடுத்த தெருவில் லாவகமாய் இறங்கி விடும் காக்கைகள்.

இது அந்த வட்டாரக் காக்கைகள்
ஒன்றுகூடி போட்ட தீர்மானம்….
அதை இன்றுவரை செயல்படுத்தி வருகின்றன.

அப்படி தப்பித் தவறி வந்து உட்காரும்
காக்கைகளும் அநேகமாக வெளியூர்
காக்கைகளாகவே இருக்க வாய்ப்பு.

காக்காய்களின் மீதான கரிசனத்திற்குக் காரணம்
அவைகளின் மீதான ஜீவகாருண்யம் அன்று.

என் அப்பாவை காக்காயின் ரூபத்தில்
காண்கிற “மாளாக் காதல்” அது.

அப்பா “காக்காய் ஆவதற்கே”
தான் பரிமாறிய பண்டம்தான்
பிரதான காரணம் என்பதை அறியாத அப்பாவி அவள்.
(அதைப்பற்றி பிறகு ஒரு நாவலே எழுதலாம்)

இன்றைக்கும் அதுதான் நடந்தது.

ராஜன் கடையில் வாங்கிப்போன இட்லியிலும்…
ஆப்பத்திலும் கொஞ்சம் கொஞ்சம் பிய்த்து…
செய்து இரண்டே வாரங்கள் மட்டும்
ஆகியிருந்த தனது பதார்த்தத்திலும் கொஞ்சம் பிய்த்து

“டேய்… கொஞ்சம் காக்காய்க்கு
வெச்சிட்டுப் போயிருடா….” என்றது.

உனக்கு வேற வேல வெங்காயம் இல்லையா
என்றேன் கனிவோடு.

“நடக்க முடியலடா அதுதான்…. “என்று கெஞ்ச….
அந்த நேரம் பார்த்து எனக்குள் இருந்த
வள்ளலார் கொஞ்சம் வெளியே எட்டிப்பார்க்க….

சரி…. சரி…. ஏதாவது கப்புல போட்டுக் குடுத்துத் தொலை….
என்று கடுப்போடு வாங்கி வந்து
வீட்டு காம்பவுண்ட் சுவரில் வைத்ததுதான் தாமதம்.<img
எங்கிருந்தோ எகிறிக் குதித்து வந்து சேர்ந்தது
ஒரு அண்டங்காக்கா.

அவ்வளவுதான்….
கதவருகில் நின்ற அம்மா கண்ணில்
தாரை தாரையாய் கண்ணீர்….

"உங்கப்பாடா"…. "உங்கப்பாடா…. "என்று.

எனக்கும் என்னையறியாமல்
கண்ணீர் பொத்துக் கொண்டு வந்தது.

இன்னும் சில மணி நேரத்தில்
உசுரை விடப் போகும் அந்தக் காக்கையை நினைத்து.

ஓ… வாட் எ பிட்டி சரவணன் இது?

kaadu wrapper1a copy
ச்சே… இந்த அரசியல் கட்சிகளைப் பற்றி வெட்டியா
ஜல்லியடிப்பதை விட்டு விட்டு
உருப்படியாக எதையாவது படிப்போம் என்று உட்கார்ந்தேன்.

கையில் “காடு” என்கிற இதழ் கிடைத்தது.
படிக்கப் படிக்க காட்டினுள்ளே நாமே இருப்பது
போன்ற உணர்வு.
வன உயிரினங்களைப் பற்றியும்
அரிய வகை தாவரங்களைப் பற்றியும் அற்புதமான தகவல்கள்.
.
நமக்கு நம்மூரின் அருமை தெரிகிறதோ இல்லையோ…
ஆனால் பிரிட்டிஷ்காரர்களுக்கு தெரிந்திருக்கிறது.
அதனால்தான் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள
பொதிகை மலையை பல்லுயிர்ப் பெருக்கத்தின்
உச்சாணிக் கொம்பு என்று 1800 ஆம் ஆண்டே சொல்லியிருக்கிறார்கள்.
.
பொதிகை மலையில் வாழும் காணி மக்கள் பற்றி
மருத்துவர் மைக்கேல் செயராசு
சொல்லியிருப்பவற்றைப் பார்த்து ஆச்சர்யத்தில் அதிர்ந்து போனேன்.
.
அந்த மருத்துவர் சொல்வது நம் வயிற்றைப் புரட்டும் சமாச்சாரங்கள்.
”நாம் மருத்துவ குணங்கள் கொண்ட தாவர வகைகளை
பொறுப்பற்று தவற விட்டுக் கொண்டிருக்கிறோம்….

இன்னும் அடையாளப்படுத்தப்பட வேண்டிய தாவரங்கள்
பொதிகை மலையில் ஏராளம் இருக்கிறது…
அதைப் பற்றிய சகல விவரமும் அறிந்தவர்கள்
அங்குள்ள மூத்தகுடிகள்தான்….
விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில் இருக்கும்
அவர்களது எஞ்சிய வாழ்நாளும்
இன்னும் பத்து அல்லது இருபது வருடங்கள்தான்…..
அதற்குள் நாம் விழித்துக் கொண்டு செயல்பட்டால் உண்டு” என்று
அபாயமணியை ஒலிக்க விடுகிறார் மருத்துவர் மைக்கேல் செயராசு.
.
(பச்சையாகச் சொன்னால்…
அந்த மூத்தகுடிகள் “போய்ச் சேர்வதற்குள்ளாவது”
அந்த அரிய வகைத் தாவரங்களைப் பற்றியும்
அதனது மருத்துவ குணங்களைப் பற்றியும்
நாம் உடனடியாக அறிந்து கொண்டேயாக வேண்டும் என்பதுதான்….)
.
அங்குள்ள மூத்தகுடிகள் சங்க இலக்கிய வார்த்தைகளை
சர்வசாதாரணமாகப் புழங்குகிறார்களாம்.

நாம் ”பிரம்பு” என்று சொல்வதை
அவர்கள் “சூறல்” என்கிறார்கள்.
சங்க இலக்கியத்திலும் பிரம்புக்குப் பெயர் “சூறல்”தானாம்.

மலையாளத்திலும் அதே சங்க இலக்கியப் பெயர்தான்.

பொதிகையில் இருக்கும்”உழிஞை” என்கிற
தாவர வகையைப் பற்றி இங்கு யாருக்கும் தெரியாது.
ஆனால் கேரளா முழுக்க இதற்குப் பெயர் ”உழிஞை”தான்.
இதுவும் நம் சங்க இலக்கியப் பெயர்தான்.
.
மலையாளத்திலுள்ள சமஸ்கிருத வார்த்தைகளைப்
பூரா தூக்கி எறிஞ்சிட்டுப் பாத்தா
பூராவுமே சங்க இலக்கிய வார்த்தைகள்தான்.
.
எல்லாவற்றையும் சொல்லி முடித்துவிட்டு
கடைசியாய் அந்த மருத்துவர் சொல்லும்
வார்த்தைகளைக் கேட்டால்
நாம் நாக்கைப் பிடுங்கிக் கொண்டு
சாக வேண்டியதுதான்.
ஆனால் அந்த வார்த்தைகள்தான் உண்மையும்கூட.
.
“இன்னைக்கு இருக்குற தமிழப் பார்க்கையில் வேதனையா இருக்குது.
இவ்வளவு பெரிய அறிவியல,
ஒரு பாரம்பரியத்த தொலைச்சுட்டு நிக்கிறமே….
அப்ப இன்னைக்கு அந்த அறிவு….
மெய்மைக் கோட்பாடு எல்லாமே
எங்க இருக்குன்னு பாத்தோம்னா
கேரளாவில உயிர்ப்போட இருக்கு.
அவந்தான் இன்னைக்குப் பாக்கப்போனா
உண்மையான தமிழன்.”
.
.
இதற்கு எங்கே போய் முட்டிக் கொள்வது?
.
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா
என்கிற நாம் தமிழைத் தொலைச்சுட்டு உட்கார்ந்திருக்கோம்.
.
கேரளாவில் இருக்கும் மலையாளியோ
தமிழைத் தற்காத்துகிட்டு இருக்கான்…
.
.
ஓ வாட் எ பிட்டி சரவணன் இது?
Dr.Michael (1)
.
.
( “டுபாக்கூர் பக்கங்கள்” – குமுதம் )

(புத்தகம் வேணும்ன்னு நெனைக்கிறவங்க
போட்டுத் தாக்க வேண்டிய அலைபேசி எண்:9092901393)

அகில உலக யுத்த வரலாற்றிலேயே முதல் முறையாக…

Karnan
வாசன் மீது வருத்தம் இருக்க வேண்டியதுதான் வைகோவுக்கு. அதற்காக இப்படியா பலபேருக்கு மத்தியில் இப்படிப் போட்டுடைப்பது.
.
ம.ந.கூ கூட்டணிக்கு வந்து சேருவதற்கு முப்பது நிமிஷம் முன்னாடி வரைக்கும் போயஸ் தோட்டத்தில் இருந்து புறா வராதா என்று வானத்தையே வெறித்துப் பார்த்தபடி இருந்திருக்கலாம் வாசன்.
ஆனால் ஒருவழியாக வந்து சேர்ந்து வீரமுழக்கமிட்ட பிறகும் அவர்மீது காண்டில் இருப்பது கரெக்ட் அல்லவே பிரபு!.

ஏற்கெனவே இருக்கும் அஞ்சு அபலைகளுக்கு மேல இனி யார் உள்ளே வரப்போகிறார்கள் என்கிற அசைக்கமுடியாத ”தன்னம்பிக்கை”யில் ”பஞ்சபாண்டவர் அணி” என அறிவித்து ஆளாளுக்கு டிபார்ட்மெண்ட்டையும் பிரித்துக் கொடுத்தாயிற்று.
.
அதற்கப்புறமும் ”ஏதாவது தர்மம் பண்ணுங்க சாமீ..”ன்னு வாசன் வந்து நிற்பார் என்று யார் கண்டது?
.
சரி அப்படித்தான் சார்ட் போட்டபிறகு வந்து நிற்கும் பயணி போல வந்தது வந்தார் வாசன்….
அவருக்குத் தகுந்த வேலை ஏதாவது ஒதுக்க வேண்டியதுதானே.?

இந்த குருச்சேத்திர யுத்த களத்தில் அர்ஜுனனுக்கு அம்பெடுத்துக் குடுக்க வேண்டீது உங்களோட வேலை….
.
.
பீமனுக்கு பேக் சப்போர்ட் நீங்கதான்….
.
.
தேரோட சாரதி war zone ல டயர்ட் ஆகும்போது நீங்கதான் ஓட்டணும் ரதத்தை….
.
.
சகாதேவனும், மகாதேவனும் குருச்சேத்திரத்தை மறந்து ருஷ்யப் போர்க்களம் பற்றிய பழைய ஞாபகங்கங்களில் கண்ணயரும்போது கிள்ளிவைக்க வேண்டியது உங்க பொறுப்பு….
.
.
இப்படி ஏராளப் பணிகள் யுத்த களத்தில் இருக்கும் போது….
போட்டீங்களே ஒரு போடு. அதுதான் தாங்க முடியல.
Vaiko
“நாங்கள் இணைந்தபோது பஞ்ச பாண்டவர்கள் என்றோம். இப்போது வாசன் எங்கள் அணிக்கு வந்துள்ளார். இந்த குருச்சேத்திரத்தில் வாசன் என்னும் கர்ணனும் பஞ்ச பாண்டவர்களுடன் இணைந்துள்ளார். எனவே நாங்கள் வெல்வோம்.”
.
அப்படீங்குறீங்களே வைகோ….
.
இங்கதாங்க ஒதைக்குது.
.
எனக்குத் தெரிஞ்ச மகாபாரதத்துல கடைசியில கர்ணனோட கதைய முடிக்கிறவங்களே பஞ்சபாண்டவர்கள்தானே…
.
நம்ம சிவாஜியோட கர்ணன் படத்துல கூட குத்துப்பட்டுக் கெடக்குற கர்ணனோட கடைசி கவசத்தையும் லவட்டீட்டுப் போக ”வஞ்சகன் கண்ணனடா…”ன்னு என்.டி.ராமாராவ் பாட்டுப் பாடீட்டு வருவாரே….
..
ஆனா…. நீங்க சொல்றது புதுக்கதையா இல்ல இருக்குது.
.
ஆக………
.
.
”அகில உலக யுத்த வரலாற்றிலேயே முதல் முறையாக…” ”பாண்டவர்களும் கெளரவர்களும் இணைந்து வழங்கும்”ன்னு கூட்டணி வெச்ச முதல் அணி நிச்சயம் நம்ம அணிதான்.
.
ஆனாலும் புயலே! கர்ணனை நெனச்சாத்தான் கொஞ்சம் கவலையாக் கீது.
.
.
(”டுபாக்கூர் பக்கங்கள்” – குமுதம்)
Vasan