சி.பி.எம்-FM… பேசுங்க பேசுங்க பேசிக்கிட்டே இருங்க

(தமிழக இளைஞர்கள் சிலரால் நடத்தப்படும் “விழிப்புணர்வு” என்கிற மாத இதழில் வெளிவந்த எனது கட்டுரை இது. மார்க்சிஸ்டு தலைவர் ஒருவர் எப்படி தப்பும் தவறுமாக திராவிட இயக்க வரலாற்றை எழுதினார் என்பதற்காக எழுதப்பட்ட இந்தக் கட்டுரை அச்சாகி வெளிவந்தபோது நான் மயக்கம் போட்டு விழாதது ஒன்றுதான் மிச்சம். மூன்று பக்கமே வந்திருந்த அக்கட்டுரையில் முப்பத்தி ஒன்பது எழுத்துப் பிழைகள். ஒருவேளை அந்தத் தலைவரின் புத்தகத்துக்குப் புரூப் பார்த்தவர்தான் இதற்கும் பார்த்தாரோ என்று கூட சந்தேகம் ஏற்பட்டுவிட்டது. எனவே யான் பெற்ற துன்பம் இவ்வையகம் பெறக்கூடாது என்பதற்காக இங்கே மறுபதிப்பு செய்யப்படுகிறது.)

சி.பி. எம் – F.M
பேசுங்க…பேசுங்க….பேசிகிட்டே இருங்க.

எனது நண்பர்கள் சிலர் மீது அளவிடற்கரிய கோபம் சமீப காலமாய் இருக்கிறது. கோபம் என்றால் சாதாரண கோபமில்லை. சொல்லி மாளாத கோபம்.
அதுவும் அவர்கள் இந்த ‘இடதுசாரிகளைப்’ பார்க்கும் பார்வை இருக்கிறதே…அதுதான் என்னை எரிச்சலின் எல்லைக்கே கொண்டுபோய் நிறுத்துகிறது.

குறிப்பாக ‘இடதுசாரிகள்’…அதிலும் சிறப்பாக சி.பி.எம். குறித்த இவர்களது விமர்சனங்கள் எனக்கு மட்டுமில்லை எவருக்கும் எரிச்சலை ஏற்படுத்தாது இருக்காது.
எந்தவித வரலாற்றுப் பார்வையுமற்ற இவர்களது விமர்சனங்கள்தான் இவர்களது அரைவேக்காட்டுத்தனத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.

“முல்லைப் பெரியாறு பிரச்சனையில்
மார்க்ஸிஸ்டுகள் மெளனம் சாதிக்கிறார்கள்….”

“காவிரி நீர் பிரச்சனையில்
குட்டிக்கர்ணம் போடுகிறார்கள்….”

“கடல் சார் பல்கலைக் கழக பிரச்சனையில் கேவலமாக நடந்து கொள்கிறார்கள்…”

என்கிற கூப்பாடுகள் காதைக் கிழிக்கின்றன.
“மார்க்சிஸ்டுகள் மாறிவிட்டார்கள்” என்கிற கூடுதல் வியாக்கியானங்களுக்கும் பஞ்சமில்லை.

அட மூடர்களே….
மார்க்சிஸ்டுகளாவது மாறுவதாவது.
உங்கள் புத்தியைக் கொண்டுபோய் எங்காவது சாணை பிடியுங்கள்.

எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும்
எதிர்நீச்சல் போடுவார்களே ஒழிய
மாறுவது என்ற மறுபேச்சுக்கே இடமற்ற மாசற்ற மாணிக்கங்கள்.

“மாறாது என்ற சொல்லைத்தவிர அனைத்தும் மாறிக்கொண்டே இருக்கும்” என்று பொட்டில் அடித்துச் சொன்ன பேராசான் மார்க்ஸே வந்தாலும் “மார்க்ஸிஸ்டுகளை”ப் பார்த்து தனது கருத்தை மாற்றிக் கொள்ள வேண்டுமே தவிர நமது “மார்க்சிஸ்டுகள்” ஒரு போதும் மாறுவது என்கிற பேச்சுக்கே இடம் தந்துவிட மாட்டார்கள்.

நிகழ்காலச் சம்பவங்கள் கிடக்கட்டும்.
கடந்தகால வரலாற்று ஏடுகளைப் புரட்டிப் பார்த்து விட்டுப் பிறகு சொல்லுங்கள்…

அவர்கள் என்றைக்காவது சரியாக இருந்திருந்தால் அல்லவா இன்றைக்கு மாறுவதற்கு?

ஒரு சின்ன பிளாஷ்பேக்……

“20, 30 ஆண்டு காலம் இந்த நாட்டின் முயற்சிகளை எல்லாம் வீணாக்கிக் கொண்டிருக்கிறீர்கள்.
யாரை ஆதரிக்க வேண்டுமோ அவர்களை ஆதரிக்காமல் விட்டது மட்டுமல்ல, குறுக்கே படுத்து ஒவ்வொரு வேளையிலும் வீணாகப் போய்க் கொண்டிருக்கிறீர்கள்”

– 1983 ல் “மார்க்சிஸ்டு” பி.ராமமூர்த்தியின் நூலை வெளியிட்டு தமிழறிஞர் நெ.து.சுந்தரவடிவேலு அவர்கள் ஆற்றிய உரை.

ஏறக்குறைய 24 வருடங்களுக்கு முன்பு……
“மார்க்சிஸ்ட்” கம்யூனிஸ்டு கட்சித் தலைவர் ஒரு புத்தகம் எழுதினார்.
“ஆரிய மாயையா? திராவிட மாயையா? – விடுதலைப் போரும் திராவிட இயக்கமும்” என்பது அதன் திருநாமம்.

சில வருடங்கள் முன்பு “வெறுக்கத்தக்கதா பிராமணீயம்?” என்று துக்ளக் சோ எழுதினாரே அதற்கெல்லாம் முன்னோடி இந்த நூல்தான்.

‘குரோர்பதி’ நிகழ்ச்சியில் தோழர் ராமமூர்த்தியின் நூலைக் கொடுத்து இதில் எத்தனை இமாலயத் தவறுகள் இருக்கிறது என்று சரியாகக் கண்டுபிடித்துச் சொல்பவர்களுக்குதான் பரிசு என்று அறிவித்தால் போதும்.
அவ்வளவுதான் போட்டிக்குப் போன அனைவரும் மண்ணைக் கவ்வ வேண்டியதுதான். ஒரு நூலில் தவறுகள் ஏற்படுவதென்பது இயல்புதான்.
ஆனால் தவறுகளே ஒரு நூலானால் எப்படி இருக்கும்?
ராமமூர்த்தியின் நூலைப் போல இருக்கும்.

“1921 ல் வைக்கம் ஊரில் இருந்த கோவிலுக்குள் ஹரிஜனங்களை அழைத்துச் செல்லும் போராட்டம் நடத்தினார் பெரியார்” என்கிறார் பி.ராமமூர்த்தி.

தந்தை பெரியார் வைக்கத்தில் நடத்தியது கோயில் நுழைவுப் போராட்டமல்ல…
தெரு நுழைவுப் போராட்டம் என்பதுகூட காம்ரேட் ராமமூர்த்திக்குப் புலப்படவில்லை. அதுவும் அப்போராட்டம் நிகழ்ந்தது 1924 ல் தானேயன்றி 1921 ல் அல்ல.

“இன்னொரு மதத்தவனாக இருந்தால் தெருவிலே நடக்கலாம்.
மிருகங்கள் கூடத் தெருவிலே நடக்கலாம். ஆனால் உன்னுடைய இந்து மதத்திலே இருக்கிற ஒருவன் கீழ்ச் சாதியாக இருந்தால் அவன் தெருவிலே நடக்கக்கூட உரிமை அற்றவன் என்றால் இதைவிடக் கொடுமை வேறு என்ன இருக்க முடியும்?”
என்ற பெரியாரின் முழக்கங்கள் வைக்கத்தை மட்டுமல்ல மொத்த மாநிலத்தையும் கிடுகிடுக்க வைத்தது.
ஆனால் தெரு நுழைவுப் போராட்டம் “வரலாற்று அறிஞர்” ராமமூர்த்தியின் கண்களுக்கு கோயில் நுழைவுப் போராட்டமாகப் பட்டிருக்கிறது.

அடுத்து அண்ணா காலத்தில் நடைமுறைக்கு வந்த சுயமரியாதைத் திருமண சட்டம் காங்கிரஸ் காலத்தில் வந்ததாக புதிய வரலாறு படைக்கிறார் ராமமூர்த்தி.

ஒரு பக்கம் ‘ஒத்துழையாமை’ இயக்கமும்
மறுபக்கம் சுயராஜ்ஜியக் கட்சி போர்வையில்
சட்ட மன்றப் பதவிகளைப் பங்கு போடும் இயக்கமும் நடத்திய காங்கிரஸ் கட்சியைக் கண்டு கொள்ளாமல்
நீதிக்கட்சி வெள்ளையருக்கு வால் பிடித்தது என்கிறார்.

“1934 ஆம் ஆண்டு அரசாங்கம் கம்யூனிஸ்ட் கட்சிக்குத் தடை விதித்தது.
பெரியார் பயந்து போய்ச் சமதர்மப் பிரச்சாரத்தைக் கைவிட்டு விட்டார்” என்று கொழுப்பின் உச்சத்திற்கே போய் எழுதினார் ராமமூர்த்தி.

சரி கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டவுடன் ராமமூர்த்தியும் அவரது சகாக்களும் பிரிட்டிஷ் அரசையே கிடுகிடுக்க வைக்க நடத்திய போராட்டம் என்ன தெரியுமா?

கொழும்பில் வான் படைத் தாக்குதலையே வெற்றிகரமாக நடத்தி விட்டார்கள் என்கிற செய்தி தேனாய்ப் பாய்கிற இந்த வேளையில் உங்கள் கற்பனை சற்று ஓவராகத்தான் இருக்கக்கூடும்.

ஆனால் ராமமூர்த்திகள் நடத்திக் காட்டிய வீர தீர சாகசப் போராட்டம் எது தெரியுமா? சத்தம் போடாமல் இரவோடு இரவாக காங்கிரஸ் கட்சியில் போய் சரணாகதி அடைந்து “நாங்கள் சோசலிஸ்டுகள் ஆகிவிட்டோம்” என்று அறிவித்ததுதான்.

அரசனே கெளரவித்தாலும் வைக்கம் தலித்துகளின் வாழ்வுரிமை எனக்கு முக்கியம் என்று கடுங்காவல் தண்டனை பெற்ற பெரியார் எங்கே?
மார்க்சிஸ்ட் ராமமூர்த்தி எங்கே?

ஒன்றல்ல… இரண்டல்ல இருபத்தியோரு தடவை சிறைத் தண்டனை அனுபவித்த தந்தை பெரியாரை…

தன்னோடு நிற்காமல் துணைவி நாகம்மையாரையும், தங்கை கண்ணம்மாளையும் பொது வாழ்வுக்கு அழைத்து வந்து போராட்டங்கள் பல நடத்த வைத்த பெரியாரை….
கம்யூனிஸ்ட் தலைவர்கள் தலைமறைவு வாழ்க்கை மேற்கொண்டிருந்த காலத்தில் .எஸ்.கே., ப.ஜீவானந்தம், எம்.ஆர்.வெங்கட்ராமன் உட்பட பலருக்கும் அடைக்கலம் தந்து பாதுகாத்து வைத்திருந்த பெரியாரை…..

காம்ரேட் ராமமூர்த்தி ‘பயந்து விட்டார்’ என்று உளறிக் கொட்டியிருந்தார்.

இதுதான்….
இவர்களது கடந்தகால யோக்யதை…
லட்சணம்…
யுக்தி….
தந்திரோபாயம்….
எல்லாம்.

மத வெறியர்களுக்கும், சாதி வெறியர்களுக்கும் எதிராக போர்க்குரல் கொடுத்ததைவிடவும் சமூக நீதிக்காக உழைத்த இயக்கத்தவர்கள் மீதுதான் அதிக தாக்குதல் தொடுத்தனர் இந்த “மார்க்சிஸ்டுகள்”.

சரி இப்போது எப்படி?
ஒரு ராஜபுத்ர வம்சத்தைச் சேர்ந்த விஸ்வநாத் பிரதாப் சிங் வந்து
சமூக நீதித் தத்துவத்தை விளக்கும் வரைக்கும் மேற்கு வங்கத்தில் எட்டிக் கூடப் பார்க்கவில்லை இட ஒதுக்கீட்டுத் தத்துவம்.

“வர்க்க விடுதலை வந்துட்டா போதும் தோழர்…எல்லாம் சரியாயிடும்.” என்கிற பல்லவியிலேயே ஓடிப் போயிற்று அவர்களது காலங்கள்.

அடுத்து ஈழத் தமிழர் சமாச்சாரம். உலகளாவிய மனித உரிமை அமைப்புகள் தொடங்கி உள்ளூர் அமைப்புகள் வரைக்கும் ஈழத்தில் நடந்து கொண்டிருந்த படுகொலைகளுக்கு எதிராகக் குரல் கொடுத்துக் கொண்டிருந்த வேளையில்
நிலைமையை நேரில் அறிந்து வர இதே ராமமூர்த்தியை இலங்கைக்கு அனுப்பி வைக்க….
போய்ப் பார்த்துவிட்டு வந்த ‘மகான்’ ராமமூர்த்தி உதிர்த்த முத்து எது தெரியுமா?

“தமிழ் நாட்டிலே தமிழர்களுக்கு உள்ள நிலையைக் காட்டிலும்
அங்குள்ள தமிழர்கள் மிக நல்ல முறையில் பண்டாரநாயகா அவர்களால் நடத்தப்படுகிறார்கள்.”

கம்யூனிஸ்ட் கட்சியும் சொன்னது:
சிங்களர்களும் – தமிழர்களும் உட்கார்ந்து பேச வேண்டும்.
பேசுங்க…..
பேசுங்க…..
பேசிக்கிட்டே இருங்க.

பிறகு வந்த 1977 படுகொலைகளாகட்டும்….
83 ல் நடந்த இனப்படுகொலைச் சம்பவங்களாகட்டும்….
85 ல் நடந்த முப்படைத் தாக்குதல்களாகட்டும்….
எதுவாகட்டும்….
மார்க்சிஸ்ட்டுகளின் ஒரே தாரக மந்திரம்
பேசுங்க…..
பேசுங்க…..
பேசிக்கிட்டே இருங்க என்பதுதான்.

குஷ்பு பிரச்சனைக்கு வரிந்து கட்டிக் கொண்டு கூடிய தமிழ் மாநில அவசர செயற்குழுக் கூட்டம் கூட ஈழத் தமிழர்களுக்காகக் கூட்டப்பட்டதில்லை.

தொண்ணூறுகளில் காவிரி நடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்பு வந்தபோது 205 டி.எம்.சி. நீர் விடச் சொன்னது நடுவர் மன்றம். கர்நாடகத் தெருக்கள்தோறும் பந்தாடப்பட்டனர் தமிழர்கள். அகதிகளாக வந்தனர் ஆயிரக்கணக்கானோர். அப்போதும் நெற்றியடியாகச் சொல்லவில்லை இவர்களது தேசியத் தலைமை.
கர்நாடக அரசும் – தமிழக அரசும் உட்கார்ந்து பேச வேண்டும்.
பேசுங்க…..
பேசுங்க…..
பேசிக்கிட்டே இருங்க என்றது அது.

1979 ல் முல்லைப் பெரியாறு அணையில் ஏற்பட்ட லேசான நில அதிர்வைத் தொடர்ந்து 145 அடிக்கு மேல் நீர் மட்டம் உயரும் போது சில பகுதிகளில் அழுத்தம் ஏற்படுகிறது.
அணையை பலப்படுத்தினால் போதும் என்றது மைய நீர் வள ஆணையம்.
அணையை பலப்படுத்தப் போன தமிழக அதிகாரிகளுக்கோ அடி உதை.
பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் அணையை பலப்படுத்திய பின்னர் வல்லுநர் குழு அறிவித்தது:
“அணையின் நீர் மட்டத்தை இப்போது 142 அடிக்கு உயர்த்திக் கொள்ளலாம்” என்று.

எல்லாவற்றிலுமே எதிரும் புதிருமாக இருக்கும் காங்கிரசோடு கைகோர்த்துக் கொண்டு எதிர்த்தார்கள் காம்ரேடுகள். தமிழ் மாநிலத் தலைமையும் தேசியத் தலைமையும் திரு திரு வென விழித்தது.
(அவர்கள் தமிழ்நாடு என்று ஒருபோதும் உச்சரிக்கக்கூட மாட்டார்கள்….தமிழ் மாநிலம் என்றுதான் சொல்வார்கள் என்பது வேறு கதை….)
2006 பிப்ரவரியில் கேரளாவின் சகல இழுத்தடிப்புகளையும் தாண்டி உச்சநீதி மன்றத் தீர்ப்பு தமிழகத்துக்கு சாதகமாக வந்து தொலைக்க…
போதாக்குறைக்கு காங்கிரஸ் ஆட்சி போய் காம்ரேடுகள் ஆட்சி வேறு ‘மலர’……
சர்வதேசியக் கொள்கையிலிருந்து
தேசியத்திற்கு கீழிறங்கி….
பிறகு தேசியத்திலிருந்தும் பல்டியடித்து “மலையாளிகளின் நலனே முக்கியம்” எனக் கும்மியடிக்க வேண்டிய நிலை காம்ரேடுகளுக்கு.

சிவப்புச் சாயம் வெளுத்துப் போச்சு
டும் டும் டும்.
காம்ரேடு வேஷம் கலைஞ்சு போச்சு
டும் டும் டும்.
என்று பலர் நித்திரையிலிருந்து எழுந்து தொலைக்க…. தேசியத் தலைமையோ
“தமிழக அரசும் – கேரள அரசும் உட்கார்ந்து பேச வேண்டும்….
பேசுங்க…..
பேசுங்க…..
பேசிக்கிட்டே இருங்க” என்கிறது.

அதே கதைதான் சேலம் ரயில்வே கோட்டம் அமைவதிலும்.
பெருமளவு வருமானத்தைக் கேரளாவுக்குக் கொட்டிக் கொடுக்கும் தமிழகம் சேலம் ரயில்வே கோட்டத்திற்குக் குரல் கொடுத்தால்….
“சர்வதேசியவாதிகள்” சத்தமில்லாமல் மலையாள முக்காட்டை எடுத்துப் போர்த்திக் கொள்கிறாரகள்.

நல்லவேளையாக காம்ரேடு அச்சுதானந்தன் தான் தமிழகத்திற்கும் முதலமைச்சர் எனச் சொல்லாமல் விட்டதால் பிழைத்தோம் நாம்.

மொத்தத்தில் “மார்க்சிஸ்டுகள்” வர்க்க விடுதலைப் போராளிகளுமல்ல.
சமூக நீதிக் காவலர்களுமல்ல.
“மதம் மக்களுக்கு அபின்” என காரல் மார்க்ஸ் பொட்டில் அடித்தது போல கூறியிருந்தாலும்
இவர்கள் அபின்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தையே வலியுறுத்துவார்கள்.

கடவுள் மறுப்பாளர்களை “வறட்டு நாத்திகவாதிகள்” என விமர்சிக்கும் இந்த விஞ்ஞான சோசலிசத்தின் வழித் தோன்றல்கள்
மாரியாத்தா தொடங்கி மேரியாத்தா வரைக்கும் சப்பரம் தூக்குவார்கள்.
போதாக்குறைக்கு இத்திருவிழாக்களுக்கு “புரட்சிகர வாழ்த்துக்களை”யும் சுவரொட்டிகள் மூலம் தெரிவிக்கத் தயங்க மாட்டார்கள்.

இவர்களது “வர்க்க விடுதலைப் போரின்” உச்சகட்டமாக
இப்போது மேற்கு வங்கத்தின் சிங்கூரிலும், நந்திகிராமிலும் டாட்டாக்கள் நிலம் கிடைக்காமல் “தவிக்கிறார்கள்.”

விவசாயம் வர்த்தகமல்ல.
வாழ்க்கை முறை என்கிற அரிச்சுவடி கூடப் புரியாது விவசாயிகளுக்கு துப்பாக்கிக் குண்டுகளைக் காணிக்கையாக்குகிறார்கள்.

மத்திய அரசுக்கு இவர்களது கருத்துக்களை ஆணித்தரமாகக் கூறி “வென்றெடுப்பதை” விட்டுவிட்டு…
மத்திய அரசு மீண்டும் ஆய்வில் இறங்கி அறிவிக்கும் வரைக்கும் “சிறப்புப்” பொருளாதார மண்டலங்களுக்கு சிறு ஓய்வு கொடுத்திருக்கிறார்கள் காம்ரேடுகள்.

ஆபத்து மிக்க அணுமின் நிலையங்களுக்கு
கண்ணைத் திறந்து கொண்டே
ஆதரவளிப்பதில் ஆகட்டும்….

மனித குலமே காறி உமிழும் சிங்களப் பேரினவாதச் செயல்களுக்கு
“இறையாண்மையின்” பெயரால்
ஒத்தூதுவதில் ஆகட்டும்….

தேர்தல்களின் போது மட்டும் வசதியாக மறந்துவிடுகிற
திராவிட கட்சிகளின் “இனவாத அரசியல்” பற்றிய புலம்பல்கள் ஆகட்டும்….

இந்திய ஒருமைப்பாட்டு பஜனையில்
ஓங்கிக் குரல் கொடுப்பதில் ஆகட்டும்….

மாநில மக்களது நியாயமான மொழி உணர்வுகள் வெளிப்படும் வேளைகளில்
சாதிக்கின்ற கள்ள மெளனங்களில் ஆகட்டும்….

பி.ஜே.பி.க்கும் – இந்த “மார்க்சிஸ்டுகளுக்கும்” ஏதேனும் ஆறு வித்தியாசங்களைக் கண்டு பிடித்துச் சொல்பவர்களுக்கு
குலுக்கல் முறையில் பரிசுகளை அள்ளிக் கொடுக்கலாம் தவறில்லை.

“பட்டினிக் கொடுஞ்சிறைக்குள்
பதறுகின்ற மனிதர்காள்
பாரிற்கடையரே எழுங்கள்
வீறு கொண்டே தோழர்காள்”

ஆக…….
இந்திய “மார்க்சிஸ்டுகளைப்” பொறுத்தவரை
பட்டினிக் கொடுஞ்சிறைக்குள் பதறுகின்ற மனிதர்கள்….

முல்லை பெரியாறை நம்பியிருக்கும்
தென் மாவட்ட விவசாயிகளும் அல்லர்.

சேலம் ரயில்வே கோட்டத்தை நம்பியிருக்கும்
தமிழர்களும் அல்லர்.

நந்திகிராமிலும், சிங்கூரிலும் பலியாகிக் கொண்டிருக்கிற
சிறு விவசாயிகளும் அல்லர்.

இந்தோனேசியாவின் சலீம் அலிகளும்
இந்தியாவின் டாட்டாக்களும்தான்.

லால் சலாம் சகாக்களே.

தலைப்புகளைத் தாண்டி…

பாமரன்

‘தொட்டால் பூ மலரும்’ என்று பாடியபடியே அய்யப்பனைத் தொட்டுவிட்ட ஜெயமாலா பட்டபாடு பெரும்பாடாகி விட்டது. ‘தொடாமல் நான் மலர்ந்தேன்’ என்று பதிலுக்கு பாட்டு வந்ததா இல்லையா என்பதை உண்ணிக் கிருஷ்ண பணிக்கன்தான் சொல்ல வேண்டும்.

மொத்தத்தில் “ஹண்ட்ரட் பர்செண்ட் லிட்ரசியாக்கும்….”(அதாவது நூறு சதவீத எழுத்தறிவு) என்று பீற்றிக்கொண்டிருந்த மொத்த கேரளாவும் சோளி குலுக்கிப் போட்டு….
சாமி சிரிக்கிறதா….?
குளிக்கிறதா….?
குஷியாக இருக்கிறதா…? என்றெல்லாம் ‘பிரஸ்னம்’ பார்த்துக் கொண்டிருப்பதைப் பார்த்தால் ஒரு உண்மை விளங்குகிறது.

எழுத்தறிவு என்பது வேறு.
பகுத்தறிவு என்பது வேறு என்கிற உண்மைதான் அது.

இந்த இரண்டாவது விஷயத்தில் ஈ சேட்டன்கள் நம்மட பாண்டிமார் பக்கத்தில்கூட நெருங்க முடியாது கேட்டோ…? பட்சே……..

மாத்ருபூதத்தின் கலையுலக வாரிசு குஷ்பு எக்குத்தப்பாய் உளறிக் கொட்டிய போது அவருடன் கூடி நின்று கும்மி அடித்தவர்கள்……
Freedom of Expression என்று தொண்டை கிழியக் கத்தியவர்கள்….
“பெரியார் சொல்லாததையா குஷ்பு சொல்லிவிட்டார்?” என எடுத்துக் கொடுத்தவர்கள்…..
கருத்துச் சுதந்திரத்தின் ஒட்டு மொத்த குத்தகைதாரர்கள்…
கொம்பு ஆராய்ச்சியாளர்கள்….
வால் ஆராய்ச்சியாளர்கள்….
எல்லாம் ஜெயமாலா பிரச்சனையில் சிக்கிக்கொண்டு தவித்த வேளையில் எங்கே போய்த் தொலைந்தார்கள் என்பதுதான் புரியாத புதிராய் இருக்கிறது.

கருத்துச் சுதந்திரப் போரில் காணாமல் போன இந்த வெண்ணை வெட்டி சிப்பாய்கள் படங்களை காவல்துறை வசம் ஒப்படைத்தால் அரசு மருத்துவமனை பிரேதக் கிடங்குகளில் அடையாளம் காணப் பயன்படக் கூடும்.(ஒருவேளை நேரக்கூடாத ஏதேனும் நேர்ந்து விட்டதோ என்கிற கவலைதான் வேறென்ன…)

“கற்பு” பிரச்சனையில் பெரியாரைத் துணைக்கு அழைத்தவர்களுக்கு… குறைந்தபட்சம் பெண்கள் வழிபடும் உரிமைகளுக்காக பெரியார் என்னென்ன பேசியிருக்கிறார் என்று புட்டுப் புட்டு எடுத்து வைப்பதில் என்ன சிக்கல் வந்து விட்டது?

தமிழக ஆதிபராசக்தி கோவில்களில் பெண்கள் வழிபாடே நடத்திக் கொண்டிருக்கும்போது அய்யப்பன் கோயிலில் வழிபடக்கூட உரிமையில்லை என்கிற அயோக்கியத்தனம் இந்த ‘யோக்கியர்களுக்கு’ ஏன் உரைக்கவில்லை என்பதுதான் நமது கேள்வி.

ஜெயமாலா என்கிற பெண் ஒட்டு மொத்த ஒரு மாநில அரசால் பந்தாடப்படும்போது எங்கே போய்த் தொலைந்தார்கள் இந்தக் கருத்துச் சுதந்திரப் பேர்வழிகள்?

கேரள மந்திரி தொடங்கி தந்திரி வரைக்கும் ஜெயமாலா மீது
விசாரணை…..
குற்றப்பத்திரிக்கை…..
எச்சரிக்கை….
என அடுக்கடுக்காகத் தாக்குதல் நடத்தியபோது சகலத்தையும் பொத்திக்கொண்டு இருப்பதற்குப் பெயர்தான் கருத்துச் சுதந்திரமா?.
பஞ்சமர்கள்….
சூத்திரர்கள்….
பெண்கள்…
கோயில்களில் வழிபடுவது குறித்து….
வழிபாடு நடத்துவது குறித்து….
பெரியார் எதுவுமே பேசவில்லையா?

பேசினார்….
பேசினார்….
மூச்சு அடங்குவதற்கு முந்தைய நொடிவரை கூட பேசினார்.
அவை எல்லாம் இவர்களுக்குத் தெரியும்.அப்புறம் இவர்கள் தப்பித் தவறிக் கூட இவை பற்றியெல்லாம் முணுமுணுக்கக்கூட இல்லையே ஏன்?

காரணம் என்னவாக இருக்கும்?

இதிலெல்லாம் எக்குத்தப்பாக பெரியாரை இழுத்துத் தொலைத்தால் அப்புறம் கோயில்களில் இருக்கும் அவர்களது பரம்பரைகளுக்கு வருங்காலத்தில் வருமானம் இல்லாமல் போய்விடும் என்கிற ‘ரத்தபாசம்’ தவிர வேறென்ன காரணம் இவர்களைத் தடுத்திருக்க முடியும்?
சாமியேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் சரணமய்ய்ய்ய்யப்ப்ப்பா.

******
(முன் குறிப்பு: இது கொழும்பிலும்….பலாலியிலும் “வாணவேடிக்கை” நடக்கும் முன்னர் எழுதப்பட்டது. போற போக்கைப் பார்த்தால் பேசாமல் நானும் உண்ணிக் கிருஷ்ண பணிக்கனைப் போல் “பிரஸ்னம்” பார்க்கப் போலாம் போலிருக்கிறதே….?)

நம்ம தமிழ் நாட்டு அரசியல் தலைகளுக்குக் கொஞ்சம்கூட விவஸ்தையே கிடையாது. “இலங்கை அரசுக்கு உதவாதே…ரேடார் கொடுக்காதே..” என இவர்கள் போடும் கூப்பாடு காதைக் கிழிக்கிறது. ஒரு பக்கத்து நாடு உதை தாங்க முடியாமல் அலறுகிறது. வெறுமனே பார்த்துக் கொண்டிருந்தால் எப்படி? பக்கத்து வீடாய் இருந்தால் உதவ மாட்டோமா? அப்படித்தான் பக்கத்து நாடும்.

என்னைக் கேட்டால் ரேடார் மட்டுமல்ல…
ராக்கெட் லாஞ்ச்சர்கள் கொடுக்கலாம்….
கடலில் விடுவதற்காகவே தயாரிக்கப்படும் ராக்கெட்டுகளைக் கொடுக்கலாம்…
சுவீடனிலிருந்து வாங்கிய சுடாத பீரங்கிகளைக் கொடுக்கலாம்….
இன்னும்கூட உலக சந்தையில் நவீன ஆயுதங்களை ஹோல்சேலாய் கொள்முதல் செய்து “இந்தா பிடி” என்று உதயா டி.வி. சீரியல் நடிகரைப் போலிருக்கிற ராஜபக்சேவுக்குக் கொட்டி அழலாம். (எதைக் கொடுத்தாலும் அப்படியென்ன கிழித்துவிடப் போகிறது இலங்கை ராணுவம்….?)

எத்தனை நவீன ஆயுதமாய் இருந்தாலும் பத்து நாளைக்குப் பிற்பாடு அது தானாகவே போராளிகள் கைக்கு வந்து விடப் போகிறது. வேண்டுமானால் ஒன்று செய்யலாம்… ஈழம் காலத்தின் கட்டாயம் என்று நம்புகிற நம்மைப் போன்றவர்கள் “இந்திய அரசே! உடனடியாக நவீன ஆயுதங்களை இலங்கைக்கு வழங்கு” என்று பெரும் போராட்டம் நடத்தலாம்.

எவ்வளவுக்கெவ்வளவு அதி நவீன ஆயுதங்கள் இலங்கைக்குக் கிடைக்கிறதோ…
அவ்வளவுக்கவ்வளவு ஈழம் அடையும் நாள் நெருங்கிக் கொண்டிருக்கிறது என்பதுதானே எதார்த்தம்?

எப்படி எங்கட கதையில் பிழையொண்டும் இல்லைதானே?

******

இந்த கௌதம் மேனனுக்கு திடீரென்று என்னவாயிற்று என்று புரிபடவில்லை. எங்கேயோ வேட்டையாடட்டும் விளையாடட்டும் நமக்குக் கவலையில்லை. ஆனால் யாரும் தமிழர்களை வேட்டையாடுவதைத்தான் சகித்துக் கொள்ள முடியாது.

அவரது வே.வி.யில் வரும் இரு வில்லன்களது பெயருமே அழகிய தமிழ்ப் பெயர்கள்.
ஒன்று: இளமாறன்
மற்றொன்று: அமுதன்

படம் பார்க்கப் பார்க்க எழுந்த எரிச்சலுக்கு அளவேயில்லை. திட்டமிடாமல் இந்தப் பெயர்களை வைத்திருக்க முடியாது என்பதை அடித்துச் சொல்லலாம். ஆக இளமாறன் – அமுதன் போன்ற அழகிய தமிழ்ப் பெயர் சுமக்கும் இளைஞன்களெல்லாம் சைக்கோ – ஓரினப்புணர்ச்சியாளர்கள் வரிசையில் சேர்த்துப் பார்க்கப்பட வேண்டியவர்கள் என்கிற சேதியை மறைமுகமாக அல்ல நேரடியாகவே சொல்லியிருப்பதற்காக பலமாகத்தான் பாராட்டியாக வேண்டும் கௌதமை. இத்தனைக்கும் தனது முந்தைய படத்தில் அன்புச்செல்வன் – இளமாறன் போன்ற பெயர்களை கதாநாயகன் வகையறாக்களுக்குச் சூட்டியிருந்தவர்தான் இந்தக் கௌதம். சரி…தமிழ் மீது கொண்ட காதலின் விளைவாகக் கூட இருக்கலாம் என்று நம்மை நாமே தேற்றிக் கொண்டு படம் பார்க்கலாம் என்றால் ராகவனாக வந்து நிற்கிறார் கமல்ஹாசன்.

ராகவன்: பொட்டில் அடித்த மாதிரி சாதியைச் சொல்லும் பெயர்.

அதுவும் பச்சையாகச் சொன்னால் அய்யங்கார் வீட்டு ‘அழகன்’களின் பெயர். ராகவன்களின் பெயரை பிற சாதியினர் வேண்டுமானாலும் வைத்துத் தொலைக்கலாமே ஒழிய ஒருபோதும் இளமாறன்களின் பெயரை அந்த வீட்டு ‘அழகன்’கள் சுமக்க மாட்டார்கள் என்பதுதான் எதார்த்தம்.

இந்த சந்தேகம் படம் பார்ப்பவர்களுக்கு வந்துவிடக் கூடாது என்பதற்காகவே ராகவன் வீட்டு டைனிங் டேபிளில் ஒரு வஜனம்: ” இனிமே சண்டேல மட்டுந்தான் நம்ம வீட்டுல நான்வெஜ்”. அட…அட…

(போதாக்குறைக்கு அரவாணிகளையும் விட்டு வைக்கவில்லை கௌதம். மனிதப் பிறப்பில் அச்சுப்பிழையாகிப் போய் அவலம் சுமக்கும் இந்த மாறிய பாலினத்தவர்களை சக மனிதர்களாகப் பார்க்கும் காலம் வரும் வரைக்கும் நாம் நாகரீகமானவர்கள் என்று சொல்லிக் கொள்வதில் அர்த்தமே இருக்க முடியாது. தெருவில் நடக்கையில் “ஒம்போது” என்று கத்துகின்ற தெருப் பொறுக்கிகளுக்கும் இந்த கௌதம்…சுப்ரமண்யசிவா…எழில் போன்றவர்களுக்கும் வித்தியாசம் இருப்பதாய்த் தெரியவில்லை எனக்கு)

மீண்டும் பெயர்ப் பிரச்சனைக்கு வருவோம். எதேச்சையாக அப்படிப்பட்ட பெயர்கள் அமைந்துவிட்டது என்கிற குரல் எங்கிருந்தாவது எழுமானால் அவர்களுக்கு ஒரே ஒரு கேள்வி:
இப்படி என்றைக்காவது வில்லன்களின் பெயராக
ஒரு சர்மாவோ….
சாஸ்திரியோ…
அல்லது ஜெயேந்திரனோ…
விஜயேந்திரனோ எதேச்சையாக வைக்கப்பட்டிருக்கிறதா என்பதே அது.

அறிவழகன் – அன்பரசன் போன்ற தமிழ்ப்பெயர்களை தொடர்ந்து வில்லன்களுக்கு சூட்டி வருவதற்கு இனியாவது தமிழ் சினிமாக்காரர்கள் முற்றுப்புள்ளி வைப்பது நல்லது.
இல்லாவிட்டால்…
விளையாட்டாய் இருக்கும் தமிழர்கள் இப்பிரச்சனைகளை
வேட்டையாடித்தான் தீர்க்க வேண்டும் என முடிவு செய்துவிட்டால்
அப்புறம் உங்க கதை கந்தல்தான்.

******

பகிரங்கக் கடிதங்கள் – இயக்குநர் எவரெஸ்ட் – ஆல்ப்ஸ் – தொட்டபெட்டா கே.பாலசந்தர் அய்யா அவர்களுக்கு…!

kb

கும்புடறன் சாமி…

சின்ன வயசுல இருந்தே உங்க படம் பாக்குறதுக்குத் தவியா தவிச்சிருக்கேன். ஆனா…எங்க ஊட்லதான் உடமாட்டேன்னு 144 தடை உத்தரவு போட்ருவாங்க.

“அதெல்லாம் நீ பாக்கக் கூடாது. வேணும்ன்னா ‘பட்டணத்தில் பூதம்’ போ, பணம் தர்றேன்னு சொல்லீட்டு அவுங்க ‘அரங்கேத்தம்’ போயிடுவாங்க. எனக்கு எரிச்சல் எரிச்சலா வரும். ஊருக்குள்ள பலபேரு புதுமை புதுமைன்னு சொல்றாங்களே…அப்படி அதுல என்னதான் இருக்குன்னு ஒரே ஆசையா இருக்கும். அப்புறம் எட்டாங்கிளாசோ ஒன்பதாம் கிளாசோ படிக்கறப்போ உங்களோட ‘அபூர்வ ராகங்கள்’ பாத்து புல்லரிச்சுப் போயிட்டேன் எவ்ளோ பெரிய சிக்கலையும் நீங்க எவ்ளோ ஈஜியா தீக்கறீங்கன்னு பாத்து புளகாங்கிதம் அடைஞ்சேன். அப்பன் புள்ளைய லவ் பண்றான். மகன் அவளோட ஆத்தாள லவ் பண்றான்.

இல்லயில்ல…..

அந்தப் புள்ளதான் லவ் பண்ணுது…ஆனா அவளோட அம்மாக்காரிய இந்த அப்பனோட பையன் லவ் பண்றான்…பாத்தீங்களா….இதச் சொல்றதுக்குள்ளயே நாக்கு கொழறுது. ஆனா நீங்க ….எவ்ளோ பெரிய சிக்கலை இந்த மக்களுக்குக் குடுத்து அத எவ்வளவு ஈஜியாத் தீக்கறதுன்னும் ‘தீர்வு’ குடுக்கறீங்களே….
இதுதாங்க கே.பி.டச்சு….

இருந்தாலும் பாருங்க….இந்த எழவுகளுக்குப் புரியுதா…?

இந்தத் ‘தரை டிக்கட்டுக’ இருக்கானுகளே….அதுகளுக்கெல்லாம் உங்க படம்ன்னாலே ரொம்ப எளக்காரங்க….

“வித்தியாசமா இருக்கிறதுங்கிறது வேற, வித்தியாசமா இருந்தே தீரணும்கிறதுக்காக வித்தியாசமா காட்டிகறது வேற. உங்காளு இது ரெண்டாவது ரகம்….இந்தாளு புருசம் பொண்டாட்டி உறவத் தவிர ஊருல எத்தனை விதமான கேடு கெட்ட உறவெல்லாம் இருக்கோ….அத்தனையையும் படமா எடுக்கறதுதான் இந்தாளு வேல.
பாட்டி பேரனக் காதலிக்கறது, மருமகன் மாமியாரக் காதலிக்கறதுன்னு எடுக்கறதத் தவிர வேறெதாச்சும் தெரியுமா? இங்க அவனவன் சோத்துக்கே வக்கில்லாமச் சாகறப்போ சக்கரப் பொங்கல் சாப்புடுங்கற கதையா இந்தாளு படமெடுக்க அத இந்த வெவஸ்தை கெட்ட வெட்டிப் பசங்க கே.பி.டச்சு…. கே.பி.டச்சு….ன்னு வேற புலம்பிச் சுத்துதுக”ன்னு நொன நாயம் பேசறானுக.

ஏன் நம்ம பாலச்சந்தர் இத மட்டுமா எடுக்குறாரு? ‘தண்ணீர் தண்ணீர்’ எடுக்கலியா, அவ்வளவு அருமையான படம். அதுல சொல்லாத பிரச்சனையா மத்தவங்க சொல்லிட்டாங்க….அந்த மாதிரி ஒரு புரட்சிப் படம் இதுவரைக்கும் வந்திருக்கா…பாலச்சந்தர் படம் பாக்கரதுக்கெல்லாம் சாதாரண அறிவு பத்தாது. உங்கள மாதிரி ரசனை கெட்ட ஜென்மங்களுக்கெல்லாம் அது எங்க வெளங்கப் போகுது…ன்னு திருப்பி நானும் குடுத்தேன் ஒரு சூடு. ஒரு பய வாயத் தொறக்கல.

“அது சரி…’சிந்து பைரவி’ பாத்தியா?”ன்னாங்க. ஒருதடவையில்ல மூணு தடவ பாத்தேன் சாமி. நம்ம ரஜினிசாமி கூட பாம்ப கையிலெடுத்துட்டு சுத்துவாரே…அதுதானே சாமின்னேன். ” கருமம்… கருமம் அது பைரவிய்யா. நாங்க சொன்னது சிந்து பைரவி”ன்னாங்க நம்ம கே.பி.படமா சாமி….பாக்காம இருப்பனா? கே.ஜி.ல பிளாக்குல வாங்கிப் பார்த்தது சாமி….

“மொதல்ல பாக்கறவனையெல்லாம் சாமின்னு சொல்றத நிறுத்து….படம் எப்படி….?”

எப்படியா…? ஒரு இசை மேதை தன்னோட அறிவுக்கும், தெறமைக்கும் பொருத்தமா சம்சாரம் கெடைக்கலியேன்னு வருத்தப்பட்டு பாரம் சுமக்கறப்போ…நானும் கொஞ்சம் சொமக்கறேன்னு ஒரு பொண்ணு வர்றா….மேதையும் மேதையும் சேந்து இன்னொரு மேதைய இந்த நாட்டுக்கு அர்ப்பணிக்கறாங்க…ஏன் இதுல என்ன சிக்கல்…? இதுலயும் ஏதாவது நொன சொல்றதுக்கு இருக்கான்னேன்.

“கே.பி.ப்ப்ப்ரியா! நீ சொல்றதையே….இப்படிக் கொஞ்சம் மாத்தி யோசிச்சுப்பாரு…உங்க மேதைக்கு இன்னொரு மேதை கெடைக்கலியேங்கற கவலைல ‘குவாட்டர்’ அடிச்சுட்டுக் குப்புறக் கெடந்த மாதிரி….ஜே.கே.பொண்டாட்டி…அதான் அந்த சுலக்சணா…அந்தப் பேதையும் உலகம் புரியாத ஒரு அப்பவிப் புருசன் வேணும்ன்னு ‘முக்கால்’ அடிச்சுட்டு சுத்தறமாதிரி எடுத்திருக்கலாமில்ல. மேதைக்கு மேதை. போதைக்குப்….ச்சே பேதைக்குப் பேதை…அப்படி எடுத்திருக்கலாமில்ல. ஆம்பளேன்னா மட்டும் அறிவுக்குப் பொருத்தமா இல்லேன்னா எத்தனை வேணும்ன்னாலும் வெச்சுக்கலாம்…பெத்துக்கலாம்ன்னு சொல்றது கடைஞ்செடுத்த பைத்தியக்காரத்தனம்…இதுல வேற பெண்ணினத்த நான் தான் தூக்கி நிறுத்தறேன்னு பெனாத்தல் வேற….”
நான் மட்டும் அன்னைக்கு ‘மால’ போட்ருக்கலேன்னா…அந்த அய்யப்பனே வந்திருந்தாலும் தடுத்திருக்க முடியாது…மகனுகள கீசியிருப்பேன் கீசி. மனசுக்குள்ள கெட்ட கெட்ட வார்த்தையா வந்தாலும் வாயில வந்தா சாமி குத்தமாச்சேன்னு வாய மூடிக்கிட்டேன்.

இடைல நம்ம தலைவர் வேற…”இதோ வர்றேன்….அதோ வர்றேன்”னு சொல்லீட்டு இருந்ததால போஸ்டர் ஒட்டற வேலையும் இல்லாமப் போயிடுமோங்கற பயத்துல அந்தப் பண்ணாடைக(ஹி…ஹி…உங்க வஜனந்தாங்க) பக்கமே திரும்பிக்கூட பாக்கலே.

எனக்கு மனசே சரியில்லே. இதென்னடாது நம்ம சிகரத்தப் பத்தியே இவ்வளவு தரக்குறைவா பேசறானுகன்னு வெசனமாப் போச்சு.

அப்புறம் தேர்தல் களேபரத்துல சினிமாப் பாக்கவே சந்தர்ப்பம் இல்லாமப் போச்சுங்க. தேர்தல் சமயத்துல கூட உங்க ஞாபகம்தான். ‘கையில காசு…வாயுல தோசை’ன்னு தேர்தலப் பத்தி நீங்க எடுத்த ‘அச்சமில்லை அச்சமில்லை’ படம்தான் ஞாபகத்துக்கு வந்துச்சு. பழைய மந்திரிமாருக எல்லாம் வரிசையா ஒவ்வொருத்தரா ‘களி திங்கப்’ போறதைப் பாக்குறதே ஒரு சினிமா பாத்த மாதிரி இருக்குதுங்க.

சரி….சம்சாரம் நச்சறாளேன்னு எதாவது படத்துக்குப் போலாம்ன்னு பாத்தா..அட…உங்க படமே ரிலீசாயிடுச்சுன்னு சொன்னாங்க. இதுவும் பொம்பளங்க விடுதலையப் பத்திதான்னு சொன்னாங்க.

வழக்கம்போல ‘தரை டிக்கட்டுக’ எல்லாம் காலி. ரசனை கெட்ட ஜென்மங்க…படம் பாக்கப் பாக்க எனக்குக் கோபம் கோபமா வருது. இப்படி ஒரு புருசன் இருப்பானான்ன்னு…சொடுக்குப் போட்டு சித்ரவதை பண்றது….பொண்டாட்டி கையில துப்பறது….இப்படிப்பட்ட ஆம்பளைக உருப்படுவானுகளான்னு ஆத்தரமாயிடுச்சு.

இடை வேளைல ஒரு காப்பியும், தம்மும் அடிச்சிட்டு உள்ள போயி உக்காந்தா…என்னடாது தியேட்டர் என்னாவது மாறி கீறி வந்துட்டமான்னு சந்தேகம்…கதையே சுத்தமா மாறிப் போச்சு. அந்த வெறி புடுச்ச ரெண்டு பெண்டாட்டிக்காரன திருத்தறதுக்காக அந்த சின்னப் பொண்ணே அவ்ங்கூடப் போயி…அவன மயக்கி…திருத்தறதுக்காகவே ஒரு புள்ளையும் பெத்து…அட…அட…இப்படியெல்லாம் யோசிக்க உங்க ஒருத்தராலதான் முடியும். சிகரம்ன்னா சும்மாவா?

பெண் விடுதலைக்கு இப்படி ஒரு வழி உங்க ஒருத்தராலதான் சொல்ல முடியும்.

அதப் பாத்த உடனே எனக்கும் ஒரு யோசனை தோணுதுங்க…ஒவ்வொரு ஊர்லயும் உள்ள இந்தக் கோர்ட்டுக்கெல்லாம் போயி….எந்தெந்த ஆம்பளை ‘விவாகரத்து’ வாங்கீருக்கான்னு அட்ரஸு வாங்கீட்டு வந்து….

அதென்ன…அந்தக் குமுதமோ….கல்கியோ…அது மாதிரி பொண்ணுங்கள மாவட்டத்துக்குப் பத்து பேரோ…பதினைஞ்சு பேரோ தயார் பண்ணி….”நீங்களும் அந்தக் கல்கி மாதிரி புரட்சிப் பெண்ணா இந்திந்த அட்ரஸுக்குப் போங்க….போயி மயக்குங்க….
அப்புறம்….
சொடுக்கு போடற புருசன்னா நீங்களும் சொடுக்கு போடுங்க… கையில துப்பற புருசன்னா நீங்களும் துப்புங்க… நிதானமா ஒரு புள்ளையப் பெத்து மொதல் சம்சாரத்துக்கிட்ட குடுத்துட்டு அடுத்த ஊருக்குப் புறப்படுங்க…’ஒழிஞ்சது ஆணாதிக்கம்! அடைஞ்சாச்சு பெண்விடுதலை!’ன்னு ஏற்பாடு ப்ண்ணா எப்படி இருக்கும்…? எப்படி நம்ம ஐடியா…?

“பொம்பளைங்க வெறும் புள்ள பெக்கற மெஷின் இல்லய்யா… அவுளும் நம்மள மாதிரி மனுசிதான். முடிஞ்சளவுக்கு பெண்கள் பிள்ளை பெற்றுக் கொள்ளும் தொல்லையிலிருந்து விடுபட்டாதான் அவுங்களுக்கு நிம்மதி”ன்னு நாப்பது அம்பது வருசத்துக்கு முன்னாடியே பெரியார் சொன்னா…நீங்க என்னடான்னா…இந்த நாட்டுல ஒரு ‘மேதை’க்குக் கவலைன்னா அவங்கூட சேர்ந்து ஒரு புள்ளய பெத்துக் குடுக்கறது….கொடுமைக்காரப் புருசன்னா அவங்கூடயும் சேர்ந்து ஒரு புள்ளய பெத்துக் குடுக்கறதுன்னு வழி காட்டுறீங்களே…உருப்பட்டாப்பலதான்.
மார்கெட்ல தகராறு பண்ற ஆசாமிய சரிகட்டீட்டு…உங்க ‘கல்கி’ பேசறாளே ஒரு டயலாக்…

“உனக்கெதுக்குய்யா மீசை…பேசாம போய் ஒரு பொடவையைக் கட்டிக்கோ’ன்னு…இது டயலாக். கை தட்டல் தியேட்டரே அதிருதுங்க. அதுசரி கே.பி….மீசைங்கறது ‘ஆண்மை’யின் சின்னம்னு எந்த ‘அறிவாளி’ சொன்னான் உங்களுக்கு?

மீசைக்கும், வீரத்துக்கும் சம்பந்தம் கிடையாது…அது பதினேழாம் நூற்றாண்டு சமாச்சாரம்னு பொறந்த குழந்தைகூட சொல்லுமே…”பொடவையைக் கட்டிக்கோ”ங்கிற மாதிரி கேணத்தனமான ‘புரட்சிகர’ வசனத்த உங்க கதாநாயகிதான் பேச முடியும்.

எல்லாப் படத்துலயும் ஒரு சங்கீதக்காரன் இல்லாட்டி ஒரு சங்கீதக்காரி. இருகோடுகள்ல இருந்து இப்பத்த எழவு வரைக்கும் ஒருத்தி கூட ஒரு பாட்ட முழுசாப் பாடுனதில்ல….
“பாடுவேனடி”ன்னு ஒருத்தி இழுக்க…இன்னொருத்தி முடிப்பா….”கேள்வியின் நாயகனே”ன்னு ஒருத்தி ஆரம்பிக்க…”பதிலேதய்யா”ன்னு இன்னொருத்தி முடிப்பா….

இந்தக் கல்கிலயும் “எழுதுகிறேன் ஒரு கடிதம்”னு முதல் சம்சாரம் ஆரம்பிக்க மூணாவது சம்சாரம் முடிச்சு வைப்பா….படத்துல வர்ற எல்லாப் பாத்திரமும் பக்கம் பக்கமா நாடகம் மாதிரி வசனம் பேசறதையும், அரைச்ச மாவையே அரைக்கறதையும் பாத்து பாத்து சலிச்சுப் போச்சு.

இந்த நாட்டுல எத எதத்தான் ‘புரட்சி’ங்கிறதுன்னே விவஸ்தையில்லாமப் போச்சு…..துணி விக்கறவன் கூட….”புரட்சிகர துணி விற்பனை”ங்கிறான். நாளைக்கு “புரட்சிகர சிரிப்பு நடிகர் லூஸ்மோகன்”
“புரட்சிகர கவர்ச்சி நடிகை ஜோதி மீனா”ன்னு சொல்ல ஆரம்பிச்சா எங்க கதி….?

உங்க மூளையை இனியாவது இந்தச் சமூகத்துக்குப் பயன்படுத்துற எண்ணம் இருந்தா….

ஒரே ஒரு கேள்வி….

கோபிக்க வேண்டாம்….

இதுவரைக்கும் நான் பேசுனது உங்க நாடகங்களைப் பத்திதான்.

அதுசரி….

‘சினிமா’ எடுக்கறதப்பத்தி எப்ப கத்துக்கப் போறீங்க….?

அதுவும்

வீடு….

உதிரிப்பூக்கள் மாதிரி.

கவலையுடன்,
பாமரன்

தெருவோரக் குறிப்புகள்.

கொஞ்சம் கேப்ஸிகா சாஸை எடுத்துக் கொள்ளுங்கள்….
பக்கத்திலேயே ஆலிவ் ஆயிலும் அவசியம்.
தேன் இல்லாவிட்டால் சரியாகாது….
எப்படியாவது ரோஸ் வாட்டர் அதி முக்கியம்….
இதையெல்லாம் சட்டீல உட்டு நல்லா ஒரு ஆட்டு ஆட்டுங்க.
ஒரே நிமிசத்துல ரெடி….
நம்ம பப்பாயா தாய் சாலேட்…..
ஹலோ…என்ன சொல்ல சொல்ல சட்டையப் புடிக்கிறீங்க…?
என்ன ரேஷன் அரிசிக்கே திண்டாட்டமா?
ஊகூம்…இதெல்லாம் ரேஷன்ல போட மாட்டாங்க….
என்ன மூடணுமா?
ஐய்யய்யோ இதெல்லாம் நான் சொல்லுலீங்க. நாம எப்படி சோறு சாப்புடறதுன்னு டீ.வீ.ல சொல்லிக் குடுத்தத திருப்பிச் சொன்னேன்… அவ்வளவுதான்….

தாயோ தகப்பனோ ஊட்டுல தறுதலையா இருந்தா, நாமெல்லாம் இப்புடி பப்பாயா தாய் சாலேட்டோ…தகப்பன் சாலேட்டோ சாப்பிட வேண்டீதுதான்.

= = = = = = = = = = = =

மேலை நாட்டு மேதை இங்கர்சால் எழுதிய ஒரு நூலைப் படிக்க நேரிட்டது. ஏறக்குறைய ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் வெ.சாமிநாதசர்மாவால் மொழிபெயர்க்கப்பட்ட ‘மக்கள் உரிமை’ என்கிற அந்த நூல் என்னுள் எண்ணற்ற ஆச்சர்யங்களை ஏற்படுத்தியது. தத்துபித்தென்று குழந்தையை வளர்க்கும் முட்டாள் பெற்றோர்களையும், மதவாதிகளையும் தூக்கிப்போட்டு மிதிக்கின்றன இங்கர்சாலின் வரிகள்.

வாயைத் திறக்காமல் சாப்பிடு.

கண்ணுல தண்ணி வராம அழு.

தூக்கம் வருலேன்னாலும் படு.

என்று ஹிட்லர்களாய் மாறி விடுகிற பெற்றோர்களைப் பின்னி எடுக்கிறார் இங்கர்சால். சிறு வயதிலேயே சொர்க்கம், நரகம் என்று பிஞ்சுகளுக்குப் போதித்து அவர்களை துன்பத்திற்கு உட்படுத்துகிற பரமபிதாவான ஒரு கடவுள் இருப்பாரேயானால் அந்தக் கடவுளோடு நான் சொர்க்கத்தில் இருப்பதைக் காட்டிலும் நரகத்திலேயே வசிக்க விரும்புகிறேன் என்று நேற்று இன்றல்ல நூற்றிப் பத்து வருடங்களுக்கு முன்பே சாடி இருப்பது பார்த்து ஆச்சர்யப்பட்டுப் போனேன்.

எட்டு பதிப்புகள் வந்துவிட்ட அந்த நூலில் ஒன்பதாவது பதிப்பில் சேர்க்க வேண்டிய செய்தி ஒன்றும் உண்டு.

பல்வேறு தத்துவங்களை அலசி ஆராய்ந்த இங்கர்சாலே ஏற்றுக்கொண்டு புகழ்ந்து தள்ளியிருக்கிற ஒரு நூல்…நம்மவர் எழுதியது என்பதுதான் அந்த செய்தி.

‘அவனது குழந்தைகள் தகப்பன் இல்லாமல் போகட்டும். அவனது மனைவி விதவையாகட்டும். அவனது குழந்தைகள் பிச்சை எடுத்தும் நாடோடிகளாகவும் திரியட்டும்’ என்று குழந்தைகளைக்கூட சப்பிக்கிற ஒரு ‘கடவுளை’ இங்கர்சால் குறிப்பிட்டு “ஆனால் அந்தக் கடவுள் தென்னிந்திய மண்ணில் உதித்த ஒருவரது இனிய மொழிகளைக் கேட்டிருக்க மாட்டார். இசையாய் எனது காதுகளைத் தொட்ட அந்த வரிகள்:

குழல் இனிது யாழ் இனிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளாதவர்.”

என திருக்குறளைச் சொல்கிறார் இங்கர்சால்.

நம்மவர் பெருமை பிற மேதைகளுக்குப் புரிகிறது. ஆனால் இங்குள்ள பல போதைகளுக்கு அது புரிவதேயில்லை. அது ஏனுங்க?

= = = = = = = = = = = =

ஆடத் தெரியாத எவரோ மேடை சரியில்லை….ன்னாராமா. அப்படி இந்த பயாலஜி, சோஷியாலஜி மாதிரி நியூமராலஜி…நேமாலஜி…வந்தாலும் வந்தது…பலருக்குக் கிறுக்கு மண்டைக்கு ஏறிவிட்டது.
அடங்கப்பா பேரை மாத்தறேன்….ஸ்பெல்லிங்க மாத்தறேன்னு சொல்லி இன்ஷியல என்னாவது மாத்தீராதீங்கப்பா. குடும்பத்துக்குள்ள கொழப்பம் என்னாவது ஏற்பட்டறப் போகுது.

= = = = = = = = = = = =

கடந்த வாரம் சென்னை ஔகிலுள்ள ஒரு முதியோர் இல்லத்திற்குச் சென்றிருந்தேன். அறுபதைக் கடந்தவர்கள் அடைக்கலமாகியிருந்தனர் அதில். பிள்ளைகளால் நிராகரிக்கப்பட்டு சிலர். கணவனால் கைவிடப்பட்டு சிலர். விரும்பி ஏற்றுக் கொண்டு வந்தவர் சிலர்.

இளையராஜா ஒருமுறை இங்கு வந்து போனால் ‘ அம்மா என்றழைக்கின்ற உயிரில்லையே’ என்று தனது பாட்டை மாற்றிப் பாட வேண்டியிருக்கும். அங்கு உள்ளோரது துயரை மனதில் சுமந்தபடி இருள் கவியத் துவங்கிய வேளையில் வெளியேறினேன். இயந்திரமயமாகிக் கொண்டிருக்கிற உலகில் இனி இது அதிகரிக்கவும் கூடும்.

‘குடும்பம்தான் எல்லாம். குடும்பம்தான் பாதுகாப்பு’ என்று நம்பியவர்களின் நிலையை எண்ணும்போது மனது வலித்தது.

குடும்ப உறவு உண்மையில் எப்படி உள்ளது என்பதைக் கிண்டலடித்து ஓஷோ ஒருமுறை சொன்ன கதை நினைவுக்கு வந்தது.

லட்சியத் தம்பதிகளுக்கு அவர்களது துணிச்சலை சோதித்துப் பார்க்க போட்டி வைத்தார் ஒருவர். மூவர் மட்டுமே அமரக்கூடிய அவரது குட்டி விமானத்தில் ஏறி தைரியமாகப் பயணம் செய்யும் தம்பதிகளுக்கு பத்து லட்சம் பரிசு. ஆனால் ஒரு நிபந்தனை. பறக்கும் நேரத்தில் அந்த இருவரில் ஒருவர்கூட பயத்தில் சின்ன முணுமுணுப்பு செய்தாலும் பரிசு அம்போ.
போதாக்குறைக்கு ஒரு லட்சம் அபராதம் வேறு. மூவர் மட்டுமே அமர வசதி உள்ள விமானத்தில் ஒரே ஒரு சிக்கல். அதற்கு மேல் மூடி கிடையாது. உட்காருபவர்கள் கம்பியை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டு உட்காரவேண்டும் அவ்வளவுதான். ஒவ்வொரு தம்பதியாக விமானத்தில் ஏறுகிறார்கள். வழியில் பயந்து போய் ‘அய்யோ’ என்றோ ‘அம்மா’ என்றோ கத்தினால் போதும். உடனே விமானம் கீழே இறக்கப்பட்டு விமானி அபராதத் தொகை ஒரு லட்சத்தை வாங்கி பெட்டியில் போட்டுக் கொள்வார்.
கடைசியாக ஒரு தம்பதியினர் ஏறி அமர்கிறார்கள். பறக்கத் தொடங்கி பல நிமிடமாகியும் தைரியமாக அம்ர்ந்திருக்கிறார்கள் அவர்கள் இருவரும். விமானி மலையின் மீது மோதுவது போல் போகிறார்…. சத்தம் போடுவதில்லை இருவரும்.அப்படியே கீழே கொண்டு வருகிறார்…. சத்தம் போடுவதில்லை இருவரும். தலைகீழாக திருப்பி ஓட்டுகிறார்….சத்தம் போடுவதில்லை இருவரும். கடைசியில் விமானியே களைத்துப் போய் வேறு வழியின்றி தரை இறக்குகிறார். ஆச்சர்யம் தாங்காமல் கணவனின் கையைப் பிடித்து “உங்களைப் போல தைரியசாலி தம்பதியைப் பார்த்ததே இல்லை இதுவரை. ஆனால் உங்களிடம் ஒரே ஒரு கேள்வி. உண்மையாகவே நீங்கள் ஒரு முறைகூட பயப்படவில்லையா…” என்று கேட்க…”ஒரே ஒருமுறைதான் பயந்தேன். ஆனால் லட்ச ரூபாய் போய்விடுமே என்ற பதட்டத்தில் கத்தவில்லை அவ்வளவுதான்” என்றார் கணவர்.

“எந்த இடத்தில் கத்த நினைத்தீர்கள்? நான் நேராக அந்த மலைமீது மோதுவது போல் சென்ற போதா….?”

“இல்லை.”

“சரி நான் விமானத்தைத் தரை மீது மோதுவது போல் சென்று திருப்பினேனே அப்போதா…?”

“கிடையாது” என்றார் கணவர்.

“ஆங் இப்போது தெரிந்து விட்டது. நான் தலைகீழாக விமானத்தைத் திருப்பி ஓட்டினேனே அப்போதுதானே….?”

“ஊகூம்.”

“சரி எப்பதான் கூச்சல் போட நினைத்தீர்கள்? அதையாவது சொல்லித் தொலையுங்கள்” என்றார் விமானி ஆத்திரமாக.

“பத்து நிமிடத்துக்கு முன்பு என் மனைவி மேலிருந்து விழுந்தாளே அப்போதுதான்” என்றார் வெகு அமைதியாக.