பகிரங்கக் கடிதங்கள் – இயக்குநர் எவரெஸ்ட் – ஆல்ப்ஸ் – தொட்டபெட்டா கே.பாலசந்தர் அய்யா அவர்களுக்கு…!

kb

கும்புடறன் சாமி…

சின்ன வயசுல இருந்தே உங்க படம் பாக்குறதுக்குத் தவியா தவிச்சிருக்கேன். ஆனா…எங்க ஊட்லதான் உடமாட்டேன்னு 144 தடை உத்தரவு போட்ருவாங்க.

“அதெல்லாம் நீ பாக்கக் கூடாது. வேணும்ன்னா ‘பட்டணத்தில் பூதம்’ போ, பணம் தர்றேன்னு சொல்லீட்டு அவுங்க ‘அரங்கேத்தம்’ போயிடுவாங்க. எனக்கு எரிச்சல் எரிச்சலா வரும். ஊருக்குள்ள பலபேரு புதுமை புதுமைன்னு சொல்றாங்களே…அப்படி அதுல என்னதான் இருக்குன்னு ஒரே ஆசையா இருக்கும். அப்புறம் எட்டாங்கிளாசோ ஒன்பதாம் கிளாசோ படிக்கறப்போ உங்களோட ‘அபூர்வ ராகங்கள்’ பாத்து புல்லரிச்சுப் போயிட்டேன் எவ்ளோ பெரிய சிக்கலையும் நீங்க எவ்ளோ ஈஜியா தீக்கறீங்கன்னு பாத்து புளகாங்கிதம் அடைஞ்சேன். அப்பன் புள்ளைய லவ் பண்றான். மகன் அவளோட ஆத்தாள லவ் பண்றான்.

இல்லயில்ல…..

அந்தப் புள்ளதான் லவ் பண்ணுது…ஆனா அவளோட அம்மாக்காரிய இந்த அப்பனோட பையன் லவ் பண்றான்…பாத்தீங்களா….இதச் சொல்றதுக்குள்ளயே நாக்கு கொழறுது. ஆனா நீங்க ….எவ்ளோ பெரிய சிக்கலை இந்த மக்களுக்குக் குடுத்து அத எவ்வளவு ஈஜியாத் தீக்கறதுன்னும் ‘தீர்வு’ குடுக்கறீங்களே….
இதுதாங்க கே.பி.டச்சு….

இருந்தாலும் பாருங்க….இந்த எழவுகளுக்குப் புரியுதா…?

இந்தத் ‘தரை டிக்கட்டுக’ இருக்கானுகளே….அதுகளுக்கெல்லாம் உங்க படம்ன்னாலே ரொம்ப எளக்காரங்க….

“வித்தியாசமா இருக்கிறதுங்கிறது வேற, வித்தியாசமா இருந்தே தீரணும்கிறதுக்காக வித்தியாசமா காட்டிகறது வேற. உங்காளு இது ரெண்டாவது ரகம்….இந்தாளு புருசம் பொண்டாட்டி உறவத் தவிர ஊருல எத்தனை விதமான கேடு கெட்ட உறவெல்லாம் இருக்கோ….அத்தனையையும் படமா எடுக்கறதுதான் இந்தாளு வேல.
பாட்டி பேரனக் காதலிக்கறது, மருமகன் மாமியாரக் காதலிக்கறதுன்னு எடுக்கறதத் தவிர வேறெதாச்சும் தெரியுமா? இங்க அவனவன் சோத்துக்கே வக்கில்லாமச் சாகறப்போ சக்கரப் பொங்கல் சாப்புடுங்கற கதையா இந்தாளு படமெடுக்க அத இந்த வெவஸ்தை கெட்ட வெட்டிப் பசங்க கே.பி.டச்சு…. கே.பி.டச்சு….ன்னு வேற புலம்பிச் சுத்துதுக”ன்னு நொன நாயம் பேசறானுக.

ஏன் நம்ம பாலச்சந்தர் இத மட்டுமா எடுக்குறாரு? ‘தண்ணீர் தண்ணீர்’ எடுக்கலியா, அவ்வளவு அருமையான படம். அதுல சொல்லாத பிரச்சனையா மத்தவங்க சொல்லிட்டாங்க….அந்த மாதிரி ஒரு புரட்சிப் படம் இதுவரைக்கும் வந்திருக்கா…பாலச்சந்தர் படம் பாக்கரதுக்கெல்லாம் சாதாரண அறிவு பத்தாது. உங்கள மாதிரி ரசனை கெட்ட ஜென்மங்களுக்கெல்லாம் அது எங்க வெளங்கப் போகுது…ன்னு திருப்பி நானும் குடுத்தேன் ஒரு சூடு. ஒரு பய வாயத் தொறக்கல.

“அது சரி…’சிந்து பைரவி’ பாத்தியா?”ன்னாங்க. ஒருதடவையில்ல மூணு தடவ பாத்தேன் சாமி. நம்ம ரஜினிசாமி கூட பாம்ப கையிலெடுத்துட்டு சுத்துவாரே…அதுதானே சாமின்னேன். ” கருமம்… கருமம் அது பைரவிய்யா. நாங்க சொன்னது சிந்து பைரவி”ன்னாங்க நம்ம கே.பி.படமா சாமி….பாக்காம இருப்பனா? கே.ஜி.ல பிளாக்குல வாங்கிப் பார்த்தது சாமி….

“மொதல்ல பாக்கறவனையெல்லாம் சாமின்னு சொல்றத நிறுத்து….படம் எப்படி….?”

எப்படியா…? ஒரு இசை மேதை தன்னோட அறிவுக்கும், தெறமைக்கும் பொருத்தமா சம்சாரம் கெடைக்கலியேன்னு வருத்தப்பட்டு பாரம் சுமக்கறப்போ…நானும் கொஞ்சம் சொமக்கறேன்னு ஒரு பொண்ணு வர்றா….மேதையும் மேதையும் சேந்து இன்னொரு மேதைய இந்த நாட்டுக்கு அர்ப்பணிக்கறாங்க…ஏன் இதுல என்ன சிக்கல்…? இதுலயும் ஏதாவது நொன சொல்றதுக்கு இருக்கான்னேன்.

“கே.பி.ப்ப்ப்ரியா! நீ சொல்றதையே….இப்படிக் கொஞ்சம் மாத்தி யோசிச்சுப்பாரு…உங்க மேதைக்கு இன்னொரு மேதை கெடைக்கலியேங்கற கவலைல ‘குவாட்டர்’ அடிச்சுட்டுக் குப்புறக் கெடந்த மாதிரி….ஜே.கே.பொண்டாட்டி…அதான் அந்த சுலக்சணா…அந்தப் பேதையும் உலகம் புரியாத ஒரு அப்பவிப் புருசன் வேணும்ன்னு ‘முக்கால்’ அடிச்சுட்டு சுத்தறமாதிரி எடுத்திருக்கலாமில்ல. மேதைக்கு மேதை. போதைக்குப்….ச்சே பேதைக்குப் பேதை…அப்படி எடுத்திருக்கலாமில்ல. ஆம்பளேன்னா மட்டும் அறிவுக்குப் பொருத்தமா இல்லேன்னா எத்தனை வேணும்ன்னாலும் வெச்சுக்கலாம்…பெத்துக்கலாம்ன்னு சொல்றது கடைஞ்செடுத்த பைத்தியக்காரத்தனம்…இதுல வேற பெண்ணினத்த நான் தான் தூக்கி நிறுத்தறேன்னு பெனாத்தல் வேற….”
நான் மட்டும் அன்னைக்கு ‘மால’ போட்ருக்கலேன்னா…அந்த அய்யப்பனே வந்திருந்தாலும் தடுத்திருக்க முடியாது…மகனுகள கீசியிருப்பேன் கீசி. மனசுக்குள்ள கெட்ட கெட்ட வார்த்தையா வந்தாலும் வாயில வந்தா சாமி குத்தமாச்சேன்னு வாய மூடிக்கிட்டேன்.

இடைல நம்ம தலைவர் வேற…”இதோ வர்றேன்….அதோ வர்றேன்”னு சொல்லீட்டு இருந்ததால போஸ்டர் ஒட்டற வேலையும் இல்லாமப் போயிடுமோங்கற பயத்துல அந்தப் பண்ணாடைக(ஹி…ஹி…உங்க வஜனந்தாங்க) பக்கமே திரும்பிக்கூட பாக்கலே.

எனக்கு மனசே சரியில்லே. இதென்னடாது நம்ம சிகரத்தப் பத்தியே இவ்வளவு தரக்குறைவா பேசறானுகன்னு வெசனமாப் போச்சு.

அப்புறம் தேர்தல் களேபரத்துல சினிமாப் பாக்கவே சந்தர்ப்பம் இல்லாமப் போச்சுங்க. தேர்தல் சமயத்துல கூட உங்க ஞாபகம்தான். ‘கையில காசு…வாயுல தோசை’ன்னு தேர்தலப் பத்தி நீங்க எடுத்த ‘அச்சமில்லை அச்சமில்லை’ படம்தான் ஞாபகத்துக்கு வந்துச்சு. பழைய மந்திரிமாருக எல்லாம் வரிசையா ஒவ்வொருத்தரா ‘களி திங்கப்’ போறதைப் பாக்குறதே ஒரு சினிமா பாத்த மாதிரி இருக்குதுங்க.

சரி….சம்சாரம் நச்சறாளேன்னு எதாவது படத்துக்குப் போலாம்ன்னு பாத்தா..அட…உங்க படமே ரிலீசாயிடுச்சுன்னு சொன்னாங்க. இதுவும் பொம்பளங்க விடுதலையப் பத்திதான்னு சொன்னாங்க.

வழக்கம்போல ‘தரை டிக்கட்டுக’ எல்லாம் காலி. ரசனை கெட்ட ஜென்மங்க…படம் பாக்கப் பாக்க எனக்குக் கோபம் கோபமா வருது. இப்படி ஒரு புருசன் இருப்பானான்ன்னு…சொடுக்குப் போட்டு சித்ரவதை பண்றது….பொண்டாட்டி கையில துப்பறது….இப்படிப்பட்ட ஆம்பளைக உருப்படுவானுகளான்னு ஆத்தரமாயிடுச்சு.

இடை வேளைல ஒரு காப்பியும், தம்மும் அடிச்சிட்டு உள்ள போயி உக்காந்தா…என்னடாது தியேட்டர் என்னாவது மாறி கீறி வந்துட்டமான்னு சந்தேகம்…கதையே சுத்தமா மாறிப் போச்சு. அந்த வெறி புடுச்ச ரெண்டு பெண்டாட்டிக்காரன திருத்தறதுக்காக அந்த சின்னப் பொண்ணே அவ்ங்கூடப் போயி…அவன மயக்கி…திருத்தறதுக்காகவே ஒரு புள்ளையும் பெத்து…அட…அட…இப்படியெல்லாம் யோசிக்க உங்க ஒருத்தராலதான் முடியும். சிகரம்ன்னா சும்மாவா?

பெண் விடுதலைக்கு இப்படி ஒரு வழி உங்க ஒருத்தராலதான் சொல்ல முடியும்.

அதப் பாத்த உடனே எனக்கும் ஒரு யோசனை தோணுதுங்க…ஒவ்வொரு ஊர்லயும் உள்ள இந்தக் கோர்ட்டுக்கெல்லாம் போயி….எந்தெந்த ஆம்பளை ‘விவாகரத்து’ வாங்கீருக்கான்னு அட்ரஸு வாங்கீட்டு வந்து….

அதென்ன…அந்தக் குமுதமோ….கல்கியோ…அது மாதிரி பொண்ணுங்கள மாவட்டத்துக்குப் பத்து பேரோ…பதினைஞ்சு பேரோ தயார் பண்ணி….”நீங்களும் அந்தக் கல்கி மாதிரி புரட்சிப் பெண்ணா இந்திந்த அட்ரஸுக்குப் போங்க….போயி மயக்குங்க….
அப்புறம்….
சொடுக்கு போடற புருசன்னா நீங்களும் சொடுக்கு போடுங்க… கையில துப்பற புருசன்னா நீங்களும் துப்புங்க… நிதானமா ஒரு புள்ளையப் பெத்து மொதல் சம்சாரத்துக்கிட்ட குடுத்துட்டு அடுத்த ஊருக்குப் புறப்படுங்க…’ஒழிஞ்சது ஆணாதிக்கம்! அடைஞ்சாச்சு பெண்விடுதலை!’ன்னு ஏற்பாடு ப்ண்ணா எப்படி இருக்கும்…? எப்படி நம்ம ஐடியா…?

“பொம்பளைங்க வெறும் புள்ள பெக்கற மெஷின் இல்லய்யா… அவுளும் நம்மள மாதிரி மனுசிதான். முடிஞ்சளவுக்கு பெண்கள் பிள்ளை பெற்றுக் கொள்ளும் தொல்லையிலிருந்து விடுபட்டாதான் அவுங்களுக்கு நிம்மதி”ன்னு நாப்பது அம்பது வருசத்துக்கு முன்னாடியே பெரியார் சொன்னா…நீங்க என்னடான்னா…இந்த நாட்டுல ஒரு ‘மேதை’க்குக் கவலைன்னா அவங்கூட சேர்ந்து ஒரு புள்ளய பெத்துக் குடுக்கறது….கொடுமைக்காரப் புருசன்னா அவங்கூடயும் சேர்ந்து ஒரு புள்ளய பெத்துக் குடுக்கறதுன்னு வழி காட்டுறீங்களே…உருப்பட்டாப்பலதான்.
மார்கெட்ல தகராறு பண்ற ஆசாமிய சரிகட்டீட்டு…உங்க ‘கல்கி’ பேசறாளே ஒரு டயலாக்…

“உனக்கெதுக்குய்யா மீசை…பேசாம போய் ஒரு பொடவையைக் கட்டிக்கோ’ன்னு…இது டயலாக். கை தட்டல் தியேட்டரே அதிருதுங்க. அதுசரி கே.பி….மீசைங்கறது ‘ஆண்மை’யின் சின்னம்னு எந்த ‘அறிவாளி’ சொன்னான் உங்களுக்கு?

மீசைக்கும், வீரத்துக்கும் சம்பந்தம் கிடையாது…அது பதினேழாம் நூற்றாண்டு சமாச்சாரம்னு பொறந்த குழந்தைகூட சொல்லுமே…”பொடவையைக் கட்டிக்கோ”ங்கிற மாதிரி கேணத்தனமான ‘புரட்சிகர’ வசனத்த உங்க கதாநாயகிதான் பேச முடியும்.

எல்லாப் படத்துலயும் ஒரு சங்கீதக்காரன் இல்லாட்டி ஒரு சங்கீதக்காரி. இருகோடுகள்ல இருந்து இப்பத்த எழவு வரைக்கும் ஒருத்தி கூட ஒரு பாட்ட முழுசாப் பாடுனதில்ல….
“பாடுவேனடி”ன்னு ஒருத்தி இழுக்க…இன்னொருத்தி முடிப்பா….”கேள்வியின் நாயகனே”ன்னு ஒருத்தி ஆரம்பிக்க…”பதிலேதய்யா”ன்னு இன்னொருத்தி முடிப்பா….

இந்தக் கல்கிலயும் “எழுதுகிறேன் ஒரு கடிதம்”னு முதல் சம்சாரம் ஆரம்பிக்க மூணாவது சம்சாரம் முடிச்சு வைப்பா….படத்துல வர்ற எல்லாப் பாத்திரமும் பக்கம் பக்கமா நாடகம் மாதிரி வசனம் பேசறதையும், அரைச்ச மாவையே அரைக்கறதையும் பாத்து பாத்து சலிச்சுப் போச்சு.

இந்த நாட்டுல எத எதத்தான் ‘புரட்சி’ங்கிறதுன்னே விவஸ்தையில்லாமப் போச்சு…..துணி விக்கறவன் கூட….”புரட்சிகர துணி விற்பனை”ங்கிறான். நாளைக்கு “புரட்சிகர சிரிப்பு நடிகர் லூஸ்மோகன்”
“புரட்சிகர கவர்ச்சி நடிகை ஜோதி மீனா”ன்னு சொல்ல ஆரம்பிச்சா எங்க கதி….?

உங்க மூளையை இனியாவது இந்தச் சமூகத்துக்குப் பயன்படுத்துற எண்ணம் இருந்தா….

ஒரே ஒரு கேள்வி….

கோபிக்க வேண்டாம்….

இதுவரைக்கும் நான் பேசுனது உங்க நாடகங்களைப் பத்திதான்.

அதுசரி….

‘சினிமா’ எடுக்கறதப்பத்தி எப்ப கத்துக்கப் போறீங்க….?

அதுவும்

வீடு….

உதிரிப்பூக்கள் மாதிரி.

கவலையுடன்,
பாமரன்

24 thoughts on “பகிரங்கக் கடிதங்கள் – இயக்குநர் எவரெஸ்ட் – ஆல்ப்ஸ் – தொட்டபெட்டா கே.பாலசந்தர் அய்யா அவர்களுக்கு…!

  1. அவர் படத்தின் மெயின் ஹைலைட் மேட்டரான தாலியை கழட்டி எறியும் புதுமை பெண்களை விட்டுட்டீங்களே பாமரன்!

  2. வானமே எல்லை போன்ற படங்களும் கே.பி படங்கள் தானே! எனக்கு அடிக்கடி சந்தேகம் வந்து விடும், இவர் தானா அவருனு… அதிலும் அவர் டச் இருக்கும் விசாலி மூலமாக….

  3. கிட்டத்தட்ட ஒரு பத்து வருடங்களுக்கு முன்பு இந்த கட்டுரையை நான் வாசித்ததாக ஞாபகம். இது வெளிவந்தது ‘குமுதம் ஷ்பெஷல்’ என்று நினைக்கிறேன்.

    சினிமாவை வெறும் பொழுதுபோக்கு விசயமாக நினைத்த எனக்கு, அது மறைமுகமாகவோ நேரடியாகவோ ஏற்படுத்தும் கருத்தியல் தாக்கத்தை புரியவைத்தது இந்தக் கட்டுரைதான்.

    பாமரனின் பகிரங்கக்கடிதங்கள் பலரையும் அதிரவைத்தது என்பதுதான் உண்மை.
    இந்த கடிததைக் கண்டித்து, தமிழ் சினிமாவின் பதினைந்திற்கும் மேற்பட்ட முக்கிய(?) இயக்குனர்கள் (பாரதிராஜா உட்பட) குமுதம் அலுவலகத்திற்கு படையெடுத்து அவர்களது பதற்றத்தை/பயத்தை பதிவு செய்தனர்.

    ….

    வாருங்கள் பாமரன் !!!
    முன்னெப்போதையும்விட இப்போது
    உங்கள் எழுத்திற்கு நிறையவே தேவை இருக்கிறது.

  4. :-)))
    பாமரன்,
    இத இப்பயும் மறு பதிப்பு செய்யலாம். இன்னும் கொஞ்சம் வீரியத்துடன்.இப்போது நடக்கும் மெகா-சீரியல் கூத்துகளுக்காக.

  5. நல்ல கட்டுரை. ஆனா மெகா சீரியலுக்காக கட்டுரை எழுத ஆரம்பிச்சா நிக்காது… போயிட்டே இருக்கும் !!!

  6. நூல்வேலி என்று ஒரு படம். பெண்டாட்டியுடன் சண்டை
    வந்தால் பக்கத்து வீட்டு பெண்ணை கற்பழிக்கலாம் என்ற
    அறிய கருத்து சொல்வார்.

  7. தொடர்ச்சியாக நமது சமுதாயத்தின் மீது நடத்தப்படும் ஊடக வன்முறையின் சங்கிலிக் கொத்தாக கேபியின் பல படங்கள் அமைந்தது துரதிர்ஷ்டம்! கேபி அவரது இயக்குநர் திறமையை இம்மாதிரி கதைகளைப் படமெடுப்பதிலா காட்டவேண்டும் என்று எத்தனையோ முறை தோன்றியிருக்கிறது – அபூர்வமாய் வந்த அன்றைய தண்ணீர் தண்ணீரையும், பிந்தைய உன்னால் முடியும் தம்பியையும் தவிர்த்துப் பார்த்தால்!

    இப்போது அந்த வன்முறை தொலைக்காட்சி சீரியல்கள் மூலமாக உச்சக்கட்டத்தினை அடைந்திருக்கின்றன என்றுதான் சொல்லவேண்டும்.
    பாமரன் அவர்கள் இச்சீரழிவினைக் குறித்தும் எழுதவேண்டும் என வேண்டுகிறேன்.

    நன்றி.

  8. இந்த கட்டுரையை அல்லது இதே கருத்துடைய கட்டுரையை குமுதம் ஸ்பெஷலில் நானும் படித்திருக்கிறேன், மட்டமான உறவுகளை மையமாக வைத்து அவருடைய பெரும்பாலான படங்கள் இருந்தாலும் எனக்கு பிடித்த விதிவிலக்கான படங்கள், எதிர்நீச்சல், பாமா விஜயம், அழகன், இரயில் சிநேகம் என்ற சின்னத்திரை படம். இவை தரமான படங்கள் என்பது எனது கருத்து. எதிர் நீச்சல் படத்தில் நாகேஷ் கோலாலம்பூர் செல்வந்தனின் மகன் என்று தெரிந்தவுடன் அது வரை அவரிடம் வேலை வாங்கி வந்தவர்கள் அவருக்கு அவர்களிடத்தில் இருந்த விலையுயர்ந்த பொருள்கள் எல்லாம் கொண்டு வந்து கொடுப்பார்கள், மீண்டும் கோலாலம்பூர் விஷயம் ஒரு பொய்யான ஏற்பாடு என்று தெரிந்தவுடன் கொடுத்த பொருள்களை எல்லாம் திரும்ப வாங்கி விடுவார்கள், அப்பொழுது மேஜர் சுந்தராஜனிடம் நாகேஷ் சொல்வார், “வந்த போது சந்தோஷப் படல இப்ப போகும் போது வருதமுமில்லை” என்று – இந்த வசனம் எனக்கு மிகவும் பிடித்த வசனம் – தங்களின் மேலான கருத்து? – நாகூர் இஸ்மாயில்

  9. //அந்தப் பேதையும் உலகம் புரியாத ஒரு அப்பவிப் புருசன் வேணும்ன்னு ‘முக்கால்’ அடிச்சுட்டு சுத்தறமாதிரி எடுத்திருக்கலாமில்ல. மேதைக்கு மேதை. போதைக்குப்….ச்சே பேதைக்குப் பேதை…அப்படி எடுத்திருக்கலாமில்ல. ஆம்பளேன்னா மட்டும் அறிவுக்குப் பொருத்தமா இல்லேன்னா எத்தனை வேணும்ன்னாலும் வெச்சுக்கலாம்…//

    பாமரன் சார், அதான் சிந்து’ வா ஒரு பெண்ணை தன் ஆறிவுக்கு பொருத்தமான.. ஆளை தேர்ந்தெடுக்க வச்சிட்டாரே.. அப்புறம் என்ன.. பெண்ணுக்கும் சம உரிமை கொடுத்து விட்டார் அல்லவா..

    சிவா சொன்ன மாதிரி, வானமே எல்லை, தண்ணீர் தண்ணிர், உன்னால் முடியும் தம்பி போன்ற படங்கள் நிச்சயம் நல்ல படங்கள்.. தவிர அனைத்துமே பொருத்தமில்லாத உறுவுகளை சரி என்று சொல்லி புதுமை என்ற பெயரில், அந்த கருத்துடைய, ஆழ்மன வக்கிரமுடைய ஆண்களுக்கும் பெண்களுகும் தீனி போடப்பட்டது என்று சொல்லலாம்.

  10. இனிய கார்த்திக்… அதே பாமரன் தான். நேரம் கிடைக்கும் பொழுது நிச்சயம் பதிலளிப்பேன்! மிக்க நன்றி

    அன்புடன்
    பாமரன்

  11. அன்புமிக்க கவிதா அவர்களுக்கு,

    உங்கள் கருத்துக்களுக்கு எனது நன்றி.

    இன்னும் இந்தத் தொழில் நுட்பம் எனக்கு வசப்படவில்லை.
    எனவே இந்த தாமதமான பதில்.
    அன்புடன்,
    பாமரன்.

  12. pamaran avarkale, anegamaga anaithu tamil channelkalum nam makkalai moolaichalavai seikindranave.idharku theervu alladhu matru unda endru kavalai enakku undu. eththanai kodi makkalin ponnana neram veenil pogirathe. arivu jeevigal yarum kavalaippattathaga theriyavillaiye.idhil ungal pangalippu vendum.

  13. இக் கட்டுரையை நான் ஏற்கெனவே தமிழக வார இதழ் ஒன்றில் வாசித்திருக்கிறேன். இது போன்று பிரசுரமான உங்கள் அனைத்து கட்டுரைகளையும் இப் பக்கத்தில் வாசிக்க விரும்புகிறேன்.

    எம். ரீஷான் ஷெரீஃப் ,
    இலங்கை

  14. இதேபோல இன்றைய அரசியல் அசிங்கங்களுக்கும் (ஓட்டு கட்சிகள்) தங்கள் பகிரஙக கடிதம் வந்தால் சிறப்பாக இருக்கும்.

  15. என் ரௌத்திரத்தை அப்படியே வார்த்தைகளில் வடித்திருக்கிறீர்கள்! ‘ரயில் சிநேகம்’ போன்ற தொலைதொடர்களை விட்டுவிட்டீர்கள்!
    ‘புன்னகை’,’உன்னால் முடியும் தம்பி’, ‘மனதில் உறுதி வேண்டும்’ இதையெல்லாம் நினைத்து பெருமூச்சு வருகிறது மனுஷனுக்கு ஏன் இப்படி இருக்கவிடாமல் வக்கிரபுத்தியென்று! கடைசியாய் ‘பார்த்தாலே பரவசம்’ பார்த்து எனக்கு வந்த ஆவேசத்தை என்ன சொல்வேன்!

  16. அருமை நண்பர் பாமரனுக்கு,
    ஒரு கணவனுக்கு [ ஆணுக்கு] ஒன்றுக்கு மேற்பட்ட மனைவிகள் – காதலிகள்
    (கல்கி, பார்த்தாலே பரவசம், சிந்துபைரவி… மற்றும் பல)

    ஒரு மனைவிக்கு [ பெண்ணுக்கு ] ஒன்றுக்கு மேற்பட்ட கணவர்கள் – காதலர்கள்
    (டூயட், அபூர்வராகங்கள்)
    இந்த ஆளுக்கு இந்தக் கதையைத் தவிர வேறு எதையுமே சிந்திக்கத் தெரியாதா?

    இதுதான் உலகத்தரமா?
    கருத்துக்களைப் பகிர்ந்தமைக்கு நன்றிகளுடன்

    ஷாரா @ சங்கரநாராயணன்

  17. அன்பு பாமரன்,

    உங்கள் அதிரடி எழுத்துக்களை மார்பு பிதுங்கும் நடிகைகளின் படத்தை நடுப்பக்கத்தில் போட்டு மக்கள் சேவை புரியும் ” குமுதம் ” போன்ற பத்திரிக்கைகளில் படித்திருக்கிறேன். சும்மா சொல்ல கூடாது….. படிக்கும்போதே நாடி நரம்பெல்லாம் முருக்கேறும்..

    ஆனா விமர்சனம் மட்டும் பண்ணிட்ட்டு தீர்வு சொல்ல வேண்டிய இடத்துல ” இப்படிக்கு ” போட்டு முடிச்சிடுறீங்க.
    ஒரு கம்பூட்டரும் இலவசமாக ” ப்ளாக் ” – கும் கிடைத்தால் யார் வேண்டுமானாலும் யாரையும் விமர்சிக்கலாம்

    மோசமான படங்களை எடுத்தவர்களை விலாவரியாக வறுத்தெடுத்தால்
    கூவத்துக்கு பக்கத்திலேயே குடும்பம் நடத்திக்கொண்டிருப்பவனுக்கு
    விடிந்து விடுமா என்ன ?

    உங்க சமுக அக்கறையை செயல் காட்டுங்கப்பா…..

  18. //அந்தப் பேதையும் உலகம் புரியாத ஒரு அப்பவிப் புருசன் வேணும்ன்னு ‘முக்கால்’ அடிச்சுட்டு சுத்தறமாதிரி எடுத்திருக்கலாமில்ல. மேதைக்கு மேதை. போதைக்குப்….ச்சே பேதைக்குப் பேதை…அப்படி எடுத்திருக்கலாமில்ல. ஆம்பளேன்னா மட்டும் அறிவுக்குப் பொருத்தமா இல்லேன்னா எத்தனை வேணும்ன்னாலும் வெச்சுக்கலாம்…//

    இது சேரனின் ஆட்டோகிராப் க்கும் பொருந்தும்…

Leave a reply to Pavalamani Pragasam Cancel reply