தலைப்புகளைத் தாண்டி…

பாமரன்

‘தொட்டால் பூ மலரும்’ என்று பாடியபடியே அய்யப்பனைத் தொட்டுவிட்ட ஜெயமாலா பட்டபாடு பெரும்பாடாகி விட்டது. ‘தொடாமல் நான் மலர்ந்தேன்’ என்று பதிலுக்கு பாட்டு வந்ததா இல்லையா என்பதை உண்ணிக் கிருஷ்ண பணிக்கன்தான் சொல்ல வேண்டும்.

மொத்தத்தில் “ஹண்ட்ரட் பர்செண்ட் லிட்ரசியாக்கும்….”(அதாவது நூறு சதவீத எழுத்தறிவு) என்று பீற்றிக்கொண்டிருந்த மொத்த கேரளாவும் சோளி குலுக்கிப் போட்டு….
சாமி சிரிக்கிறதா….?
குளிக்கிறதா….?
குஷியாக இருக்கிறதா…? என்றெல்லாம் ‘பிரஸ்னம்’ பார்த்துக் கொண்டிருப்பதைப் பார்த்தால் ஒரு உண்மை விளங்குகிறது.

எழுத்தறிவு என்பது வேறு.
பகுத்தறிவு என்பது வேறு என்கிற உண்மைதான் அது.

இந்த இரண்டாவது விஷயத்தில் ஈ சேட்டன்கள் நம்மட பாண்டிமார் பக்கத்தில்கூட நெருங்க முடியாது கேட்டோ…? பட்சே……..

மாத்ருபூதத்தின் கலையுலக வாரிசு குஷ்பு எக்குத்தப்பாய் உளறிக் கொட்டிய போது அவருடன் கூடி நின்று கும்மி அடித்தவர்கள்……
Freedom of Expression என்று தொண்டை கிழியக் கத்தியவர்கள்….
“பெரியார் சொல்லாததையா குஷ்பு சொல்லிவிட்டார்?” என எடுத்துக் கொடுத்தவர்கள்…..
கருத்துச் சுதந்திரத்தின் ஒட்டு மொத்த குத்தகைதாரர்கள்…
கொம்பு ஆராய்ச்சியாளர்கள்….
வால் ஆராய்ச்சியாளர்கள்….
எல்லாம் ஜெயமாலா பிரச்சனையில் சிக்கிக்கொண்டு தவித்த வேளையில் எங்கே போய்த் தொலைந்தார்கள் என்பதுதான் புரியாத புதிராய் இருக்கிறது.

கருத்துச் சுதந்திரப் போரில் காணாமல் போன இந்த வெண்ணை வெட்டி சிப்பாய்கள் படங்களை காவல்துறை வசம் ஒப்படைத்தால் அரசு மருத்துவமனை பிரேதக் கிடங்குகளில் அடையாளம் காணப் பயன்படக் கூடும்.(ஒருவேளை நேரக்கூடாத ஏதேனும் நேர்ந்து விட்டதோ என்கிற கவலைதான் வேறென்ன…)

“கற்பு” பிரச்சனையில் பெரியாரைத் துணைக்கு அழைத்தவர்களுக்கு… குறைந்தபட்சம் பெண்கள் வழிபடும் உரிமைகளுக்காக பெரியார் என்னென்ன பேசியிருக்கிறார் என்று புட்டுப் புட்டு எடுத்து வைப்பதில் என்ன சிக்கல் வந்து விட்டது?

தமிழக ஆதிபராசக்தி கோவில்களில் பெண்கள் வழிபாடே நடத்திக் கொண்டிருக்கும்போது அய்யப்பன் கோயிலில் வழிபடக்கூட உரிமையில்லை என்கிற அயோக்கியத்தனம் இந்த ‘யோக்கியர்களுக்கு’ ஏன் உரைக்கவில்லை என்பதுதான் நமது கேள்வி.

ஜெயமாலா என்கிற பெண் ஒட்டு மொத்த ஒரு மாநில அரசால் பந்தாடப்படும்போது எங்கே போய்த் தொலைந்தார்கள் இந்தக் கருத்துச் சுதந்திரப் பேர்வழிகள்?

கேரள மந்திரி தொடங்கி தந்திரி வரைக்கும் ஜெயமாலா மீது
விசாரணை…..
குற்றப்பத்திரிக்கை…..
எச்சரிக்கை….
என அடுக்கடுக்காகத் தாக்குதல் நடத்தியபோது சகலத்தையும் பொத்திக்கொண்டு இருப்பதற்குப் பெயர்தான் கருத்துச் சுதந்திரமா?.
பஞ்சமர்கள்….
சூத்திரர்கள்….
பெண்கள்…
கோயில்களில் வழிபடுவது குறித்து….
வழிபாடு நடத்துவது குறித்து….
பெரியார் எதுவுமே பேசவில்லையா?

பேசினார்….
பேசினார்….
மூச்சு அடங்குவதற்கு முந்தைய நொடிவரை கூட பேசினார்.
அவை எல்லாம் இவர்களுக்குத் தெரியும்.அப்புறம் இவர்கள் தப்பித் தவறிக் கூட இவை பற்றியெல்லாம் முணுமுணுக்கக்கூட இல்லையே ஏன்?

காரணம் என்னவாக இருக்கும்?

இதிலெல்லாம் எக்குத்தப்பாக பெரியாரை இழுத்துத் தொலைத்தால் அப்புறம் கோயில்களில் இருக்கும் அவர்களது பரம்பரைகளுக்கு வருங்காலத்தில் வருமானம் இல்லாமல் போய்விடும் என்கிற ‘ரத்தபாசம்’ தவிர வேறென்ன காரணம் இவர்களைத் தடுத்திருக்க முடியும்?
சாமியேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் சரணமய்ய்ய்ய்யப்ப்ப்பா.

******
(முன் குறிப்பு: இது கொழும்பிலும்….பலாலியிலும் “வாணவேடிக்கை” நடக்கும் முன்னர் எழுதப்பட்டது. போற போக்கைப் பார்த்தால் பேசாமல் நானும் உண்ணிக் கிருஷ்ண பணிக்கனைப் போல் “பிரஸ்னம்” பார்க்கப் போலாம் போலிருக்கிறதே….?)

நம்ம தமிழ் நாட்டு அரசியல் தலைகளுக்குக் கொஞ்சம்கூட விவஸ்தையே கிடையாது. “இலங்கை அரசுக்கு உதவாதே…ரேடார் கொடுக்காதே..” என இவர்கள் போடும் கூப்பாடு காதைக் கிழிக்கிறது. ஒரு பக்கத்து நாடு உதை தாங்க முடியாமல் அலறுகிறது. வெறுமனே பார்த்துக் கொண்டிருந்தால் எப்படி? பக்கத்து வீடாய் இருந்தால் உதவ மாட்டோமா? அப்படித்தான் பக்கத்து நாடும்.

என்னைக் கேட்டால் ரேடார் மட்டுமல்ல…
ராக்கெட் லாஞ்ச்சர்கள் கொடுக்கலாம்….
கடலில் விடுவதற்காகவே தயாரிக்கப்படும் ராக்கெட்டுகளைக் கொடுக்கலாம்…
சுவீடனிலிருந்து வாங்கிய சுடாத பீரங்கிகளைக் கொடுக்கலாம்….
இன்னும்கூட உலக சந்தையில் நவீன ஆயுதங்களை ஹோல்சேலாய் கொள்முதல் செய்து “இந்தா பிடி” என்று உதயா டி.வி. சீரியல் நடிகரைப் போலிருக்கிற ராஜபக்சேவுக்குக் கொட்டி அழலாம். (எதைக் கொடுத்தாலும் அப்படியென்ன கிழித்துவிடப் போகிறது இலங்கை ராணுவம்….?)

எத்தனை நவீன ஆயுதமாய் இருந்தாலும் பத்து நாளைக்குப் பிற்பாடு அது தானாகவே போராளிகள் கைக்கு வந்து விடப் போகிறது. வேண்டுமானால் ஒன்று செய்யலாம்… ஈழம் காலத்தின் கட்டாயம் என்று நம்புகிற நம்மைப் போன்றவர்கள் “இந்திய அரசே! உடனடியாக நவீன ஆயுதங்களை இலங்கைக்கு வழங்கு” என்று பெரும் போராட்டம் நடத்தலாம்.

எவ்வளவுக்கெவ்வளவு அதி நவீன ஆயுதங்கள் இலங்கைக்குக் கிடைக்கிறதோ…
அவ்வளவுக்கவ்வளவு ஈழம் அடையும் நாள் நெருங்கிக் கொண்டிருக்கிறது என்பதுதானே எதார்த்தம்?

எப்படி எங்கட கதையில் பிழையொண்டும் இல்லைதானே?

******

இந்த கௌதம் மேனனுக்கு திடீரென்று என்னவாயிற்று என்று புரிபடவில்லை. எங்கேயோ வேட்டையாடட்டும் விளையாடட்டும் நமக்குக் கவலையில்லை. ஆனால் யாரும் தமிழர்களை வேட்டையாடுவதைத்தான் சகித்துக் கொள்ள முடியாது.

அவரது வே.வி.யில் வரும் இரு வில்லன்களது பெயருமே அழகிய தமிழ்ப் பெயர்கள்.
ஒன்று: இளமாறன்
மற்றொன்று: அமுதன்

படம் பார்க்கப் பார்க்க எழுந்த எரிச்சலுக்கு அளவேயில்லை. திட்டமிடாமல் இந்தப் பெயர்களை வைத்திருக்க முடியாது என்பதை அடித்துச் சொல்லலாம். ஆக இளமாறன் – அமுதன் போன்ற அழகிய தமிழ்ப் பெயர் சுமக்கும் இளைஞன்களெல்லாம் சைக்கோ – ஓரினப்புணர்ச்சியாளர்கள் வரிசையில் சேர்த்துப் பார்க்கப்பட வேண்டியவர்கள் என்கிற சேதியை மறைமுகமாக அல்ல நேரடியாகவே சொல்லியிருப்பதற்காக பலமாகத்தான் பாராட்டியாக வேண்டும் கௌதமை. இத்தனைக்கும் தனது முந்தைய படத்தில் அன்புச்செல்வன் – இளமாறன் போன்ற பெயர்களை கதாநாயகன் வகையறாக்களுக்குச் சூட்டியிருந்தவர்தான் இந்தக் கௌதம். சரி…தமிழ் மீது கொண்ட காதலின் விளைவாகக் கூட இருக்கலாம் என்று நம்மை நாமே தேற்றிக் கொண்டு படம் பார்க்கலாம் என்றால் ராகவனாக வந்து நிற்கிறார் கமல்ஹாசன்.

ராகவன்: பொட்டில் அடித்த மாதிரி சாதியைச் சொல்லும் பெயர்.

அதுவும் பச்சையாகச் சொன்னால் அய்யங்கார் வீட்டு ‘அழகன்’களின் பெயர். ராகவன்களின் பெயரை பிற சாதியினர் வேண்டுமானாலும் வைத்துத் தொலைக்கலாமே ஒழிய ஒருபோதும் இளமாறன்களின் பெயரை அந்த வீட்டு ‘அழகன்’கள் சுமக்க மாட்டார்கள் என்பதுதான் எதார்த்தம்.

இந்த சந்தேகம் படம் பார்ப்பவர்களுக்கு வந்துவிடக் கூடாது என்பதற்காகவே ராகவன் வீட்டு டைனிங் டேபிளில் ஒரு வஜனம்: ” இனிமே சண்டேல மட்டுந்தான் நம்ம வீட்டுல நான்வெஜ்”. அட…அட…

(போதாக்குறைக்கு அரவாணிகளையும் விட்டு வைக்கவில்லை கௌதம். மனிதப் பிறப்பில் அச்சுப்பிழையாகிப் போய் அவலம் சுமக்கும் இந்த மாறிய பாலினத்தவர்களை சக மனிதர்களாகப் பார்க்கும் காலம் வரும் வரைக்கும் நாம் நாகரீகமானவர்கள் என்று சொல்லிக் கொள்வதில் அர்த்தமே இருக்க முடியாது. தெருவில் நடக்கையில் “ஒம்போது” என்று கத்துகின்ற தெருப் பொறுக்கிகளுக்கும் இந்த கௌதம்…சுப்ரமண்யசிவா…எழில் போன்றவர்களுக்கும் வித்தியாசம் இருப்பதாய்த் தெரியவில்லை எனக்கு)

மீண்டும் பெயர்ப் பிரச்சனைக்கு வருவோம். எதேச்சையாக அப்படிப்பட்ட பெயர்கள் அமைந்துவிட்டது என்கிற குரல் எங்கிருந்தாவது எழுமானால் அவர்களுக்கு ஒரே ஒரு கேள்வி:
இப்படி என்றைக்காவது வில்லன்களின் பெயராக
ஒரு சர்மாவோ….
சாஸ்திரியோ…
அல்லது ஜெயேந்திரனோ…
விஜயேந்திரனோ எதேச்சையாக வைக்கப்பட்டிருக்கிறதா என்பதே அது.

அறிவழகன் – அன்பரசன் போன்ற தமிழ்ப்பெயர்களை தொடர்ந்து வில்லன்களுக்கு சூட்டி வருவதற்கு இனியாவது தமிழ் சினிமாக்காரர்கள் முற்றுப்புள்ளி வைப்பது நல்லது.
இல்லாவிட்டால்…
விளையாட்டாய் இருக்கும் தமிழர்கள் இப்பிரச்சனைகளை
வேட்டையாடித்தான் தீர்க்க வேண்டும் என முடிவு செய்துவிட்டால்
அப்புறம் உங்க கதை கந்தல்தான்.

******

7 thoughts on “தலைப்புகளைத் தாண்டி…

 1. //அவரது வே.வி.யில் வரும் இரு வில்லன்களது பெயருமே அழகிய தமிழ்ப் பெயர்கள்.ஒன்று: இளமாறன் மற்றொன்று: அமுதன். திட்டமிடாமல் இந்தப் பெயர்களை வைத்திருக்க முடியாது என்பதை அடித்துச் சொல்லலாம்.//

  இதைச் சரியென்று சொன்னால்

  //தனது முந்தைய படத்தில் அன்புச்செல்வன் – இளமாறன் போன்ற பெயர்களை கதாநாயகன் வகையறாக்களுக்குச் சூட்டியிருந்தவர்தான் இந்தக் கௌதம்.//

  இதை மட்டும் செளகரியமாக ‘கெளதம் திட்டமிடாமல் செய்தது’ என்று சொல்லிவிடலாமா?

  அல்லது அவரது எதிர்காலப் படங்களில் ‘ராகவன்’ அல்லது ‘சர்மா’ என்று வில்லனுக்குப் பெயர் வைத்தால் உங்கள் எண்ணம் மாறிவிடுமா?

  ‘ராம், ரஹீம், ராபர்ட்’ என்ற ‘பொதுப் பெயர்களில்’ (?) வில்லன்களைக் கொண்டு எத்தனை மொக்கைத் தமிழ்ப் படங்கள் முன்பு வந்துகொண்டிருந்தன என்று நீங்கள் அறிவீர்கள்.

  இம்மாதிரி படங்களில் வரும் பாத்திரப் பெயர்களையெல்லாம் சாதிக் கண்ணோட்டத்தில் அலசுவது சரியல்ல என்பது என் கருத்து.

  நன்றி.

 2. ///// (போதாக்குறைக்கு அரவாணிகளையும் விட்டு வைக்கவில்லை கௌதம். மனிதப் பிறப்பில் அச்சுப்பிழையாகிப் போய் அவலம் சுமக்கும் இந்த மாறிய பாலினத்தவர்களை சக மனிதர்களாகப் பார்க்கும் காலம் வரும் வரைக்கும் நாம் நாகரீகமானவர்கள் என்று சொல்லிக் கொள்வதில் அர்த்தமே இருக்க முடியாது. தெருவில் நடக்கையில் “ஒம்போது” என்று கத்துகின்ற தெருப் பொறுக்கிகளுக்கும் இந்த கௌதம்…சுப்ரமண்யசிவா…எழில் போன்றவர்களுக்கும் வித்தியாசம் இருப்பதாய்த் தெரியவில்லை ////

  இது குறித்த எனது பதிவு இங்கே.

  http://livingsmile.blogspot.com/2006/09/are-you-bastard-director-gautham.html

 3. anpu thampi muththukirushnan. maalai vannakkam. ungkal kaddurai arumaiyaaka ullathu. vaalththukkal. keep it up.

 4. இனிய வற்றாயிருப்பு சுந்தர்…

  நன்றி. நீங்கள் குறிப்பிட்டுள்ள அந்த மொக்கைப் படங்களையும் சேர்த்துதான் சொல்கிறேன்.எனக்கு நினைவு தெரிந்து காபரே டேன்சர்கள் என்றால் லில்லி – ரோஸி – ரீட்டா என்று பார்த்த்தாகவே நினைவு….ஒரு போதும் காயத்ரி…கெளரி…தனலட்சுமிகள் ஆடியதாக நினைவில்லை. முஸ்தபா…மார்க் ஆண்டனி….பிரான்ஸிஸ் அற்புதராஜ்(விக்ரம்)..என சிறுபான்மையினரும் பலிகடாக்கள்தான்.
  அன்புடன்,
  பாமரன்.
  (இது குறித்து பலமுறை எழுதியிருக்கிறேன்)

 5. அன்பு பாமரன்,
  உங்களை போன்ற ஒரு சிலரது பார்வைகளாவது நேராக இருக்கட்டும்.
  “எப்படி எங்கட கதையில் பிழையொண்டும் இல்லைதானே?”-
  நக்கலா இருக்கு என்ன எங்கள் உச்சரிப்பு.

  பணிவுடன்,
  திருமதி. அனுபமா ஜெயகுமர். ஈழம்

 6. எழுத்தறிவு என்பது வேறு.
  பகுத்தறிவு என்பது வேறு ,எப்படி பாமரன் ?இப்படி நெத்தி அடி அடிக்கிறீங்க ? யாரோ சொன்னது நினைவுக்கு வருது
  “ஒருவனை படிப்பாளி ஆக்க முடியும் அறிவாளி ஆக்க முடியாது” என்று
  B.M.Ahamed Jan

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s