சி.பி.எம்-FM… பேசுங்க பேசுங்க பேசிக்கிட்டே இருங்க

(தமிழக இளைஞர்கள் சிலரால் நடத்தப்படும் “விழிப்புணர்வு” என்கிற மாத இதழில் வெளிவந்த எனது கட்டுரை இது. மார்க்சிஸ்டு தலைவர் ஒருவர் எப்படி தப்பும் தவறுமாக திராவிட இயக்க வரலாற்றை எழுதினார் என்பதற்காக எழுதப்பட்ட இந்தக் கட்டுரை அச்சாகி வெளிவந்தபோது நான் மயக்கம் போட்டு விழாதது ஒன்றுதான் மிச்சம். மூன்று பக்கமே வந்திருந்த அக்கட்டுரையில் முப்பத்தி ஒன்பது எழுத்துப் பிழைகள். ஒருவேளை அந்தத் தலைவரின் புத்தகத்துக்குப் புரூப் பார்த்தவர்தான் இதற்கும் பார்த்தாரோ என்று கூட சந்தேகம் ஏற்பட்டுவிட்டது. எனவே யான் பெற்ற துன்பம் இவ்வையகம் பெறக்கூடாது என்பதற்காக இங்கே மறுபதிப்பு செய்யப்படுகிறது.)

சி.பி. எம் – F.M
பேசுங்க…பேசுங்க….பேசிகிட்டே இருங்க.

எனது நண்பர்கள் சிலர் மீது அளவிடற்கரிய கோபம் சமீப காலமாய் இருக்கிறது. கோபம் என்றால் சாதாரண கோபமில்லை. சொல்லி மாளாத கோபம்.
அதுவும் அவர்கள் இந்த ‘இடதுசாரிகளைப்’ பார்க்கும் பார்வை இருக்கிறதே…அதுதான் என்னை எரிச்சலின் எல்லைக்கே கொண்டுபோய் நிறுத்துகிறது.

குறிப்பாக ‘இடதுசாரிகள்’…அதிலும் சிறப்பாக சி.பி.எம். குறித்த இவர்களது விமர்சனங்கள் எனக்கு மட்டுமில்லை எவருக்கும் எரிச்சலை ஏற்படுத்தாது இருக்காது.
எந்தவித வரலாற்றுப் பார்வையுமற்ற இவர்களது விமர்சனங்கள்தான் இவர்களது அரைவேக்காட்டுத்தனத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.

“முல்லைப் பெரியாறு பிரச்சனையில்
மார்க்ஸிஸ்டுகள் மெளனம் சாதிக்கிறார்கள்….”

“காவிரி நீர் பிரச்சனையில்
குட்டிக்கர்ணம் போடுகிறார்கள்….”

“கடல் சார் பல்கலைக் கழக பிரச்சனையில் கேவலமாக நடந்து கொள்கிறார்கள்…”

என்கிற கூப்பாடுகள் காதைக் கிழிக்கின்றன.
“மார்க்சிஸ்டுகள் மாறிவிட்டார்கள்” என்கிற கூடுதல் வியாக்கியானங்களுக்கும் பஞ்சமில்லை.

அட மூடர்களே….
மார்க்சிஸ்டுகளாவது மாறுவதாவது.
உங்கள் புத்தியைக் கொண்டுபோய் எங்காவது சாணை பிடியுங்கள்.

எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும்
எதிர்நீச்சல் போடுவார்களே ஒழிய
மாறுவது என்ற மறுபேச்சுக்கே இடமற்ற மாசற்ற மாணிக்கங்கள்.

“மாறாது என்ற சொல்லைத்தவிர அனைத்தும் மாறிக்கொண்டே இருக்கும்” என்று பொட்டில் அடித்துச் சொன்ன பேராசான் மார்க்ஸே வந்தாலும் “மார்க்ஸிஸ்டுகளை”ப் பார்த்து தனது கருத்தை மாற்றிக் கொள்ள வேண்டுமே தவிர நமது “மார்க்சிஸ்டுகள்” ஒரு போதும் மாறுவது என்கிற பேச்சுக்கே இடம் தந்துவிட மாட்டார்கள்.

நிகழ்காலச் சம்பவங்கள் கிடக்கட்டும்.
கடந்தகால வரலாற்று ஏடுகளைப் புரட்டிப் பார்த்து விட்டுப் பிறகு சொல்லுங்கள்…

அவர்கள் என்றைக்காவது சரியாக இருந்திருந்தால் அல்லவா இன்றைக்கு மாறுவதற்கு?

ஒரு சின்ன பிளாஷ்பேக்……

“20, 30 ஆண்டு காலம் இந்த நாட்டின் முயற்சிகளை எல்லாம் வீணாக்கிக் கொண்டிருக்கிறீர்கள்.
யாரை ஆதரிக்க வேண்டுமோ அவர்களை ஆதரிக்காமல் விட்டது மட்டுமல்ல, குறுக்கே படுத்து ஒவ்வொரு வேளையிலும் வீணாகப் போய்க் கொண்டிருக்கிறீர்கள்”

– 1983 ல் “மார்க்சிஸ்டு” பி.ராமமூர்த்தியின் நூலை வெளியிட்டு தமிழறிஞர் நெ.து.சுந்தரவடிவேலு அவர்கள் ஆற்றிய உரை.

ஏறக்குறைய 24 வருடங்களுக்கு முன்பு……
“மார்க்சிஸ்ட்” கம்யூனிஸ்டு கட்சித் தலைவர் ஒரு புத்தகம் எழுதினார்.
“ஆரிய மாயையா? திராவிட மாயையா? – விடுதலைப் போரும் திராவிட இயக்கமும்” என்பது அதன் திருநாமம்.

சில வருடங்கள் முன்பு “வெறுக்கத்தக்கதா பிராமணீயம்?” என்று துக்ளக் சோ எழுதினாரே அதற்கெல்லாம் முன்னோடி இந்த நூல்தான்.

‘குரோர்பதி’ நிகழ்ச்சியில் தோழர் ராமமூர்த்தியின் நூலைக் கொடுத்து இதில் எத்தனை இமாலயத் தவறுகள் இருக்கிறது என்று சரியாகக் கண்டுபிடித்துச் சொல்பவர்களுக்குதான் பரிசு என்று அறிவித்தால் போதும்.
அவ்வளவுதான் போட்டிக்குப் போன அனைவரும் மண்ணைக் கவ்வ வேண்டியதுதான். ஒரு நூலில் தவறுகள் ஏற்படுவதென்பது இயல்புதான்.
ஆனால் தவறுகளே ஒரு நூலானால் எப்படி இருக்கும்?
ராமமூர்த்தியின் நூலைப் போல இருக்கும்.

“1921 ல் வைக்கம் ஊரில் இருந்த கோவிலுக்குள் ஹரிஜனங்களை அழைத்துச் செல்லும் போராட்டம் நடத்தினார் பெரியார்” என்கிறார் பி.ராமமூர்த்தி.

தந்தை பெரியார் வைக்கத்தில் நடத்தியது கோயில் நுழைவுப் போராட்டமல்ல…
தெரு நுழைவுப் போராட்டம் என்பதுகூட காம்ரேட் ராமமூர்த்திக்குப் புலப்படவில்லை. அதுவும் அப்போராட்டம் நிகழ்ந்தது 1924 ல் தானேயன்றி 1921 ல் அல்ல.

“இன்னொரு மதத்தவனாக இருந்தால் தெருவிலே நடக்கலாம்.
மிருகங்கள் கூடத் தெருவிலே நடக்கலாம். ஆனால் உன்னுடைய இந்து மதத்திலே இருக்கிற ஒருவன் கீழ்ச் சாதியாக இருந்தால் அவன் தெருவிலே நடக்கக்கூட உரிமை அற்றவன் என்றால் இதைவிடக் கொடுமை வேறு என்ன இருக்க முடியும்?”
என்ற பெரியாரின் முழக்கங்கள் வைக்கத்தை மட்டுமல்ல மொத்த மாநிலத்தையும் கிடுகிடுக்க வைத்தது.
ஆனால் தெரு நுழைவுப் போராட்டம் “வரலாற்று அறிஞர்” ராமமூர்த்தியின் கண்களுக்கு கோயில் நுழைவுப் போராட்டமாகப் பட்டிருக்கிறது.

அடுத்து அண்ணா காலத்தில் நடைமுறைக்கு வந்த சுயமரியாதைத் திருமண சட்டம் காங்கிரஸ் காலத்தில் வந்ததாக புதிய வரலாறு படைக்கிறார் ராமமூர்த்தி.

ஒரு பக்கம் ‘ஒத்துழையாமை’ இயக்கமும்
மறுபக்கம் சுயராஜ்ஜியக் கட்சி போர்வையில்
சட்ட மன்றப் பதவிகளைப் பங்கு போடும் இயக்கமும் நடத்திய காங்கிரஸ் கட்சியைக் கண்டு கொள்ளாமல்
நீதிக்கட்சி வெள்ளையருக்கு வால் பிடித்தது என்கிறார்.

“1934 ஆம் ஆண்டு அரசாங்கம் கம்யூனிஸ்ட் கட்சிக்குத் தடை விதித்தது.
பெரியார் பயந்து போய்ச் சமதர்மப் பிரச்சாரத்தைக் கைவிட்டு விட்டார்” என்று கொழுப்பின் உச்சத்திற்கே போய் எழுதினார் ராமமூர்த்தி.

சரி கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டவுடன் ராமமூர்த்தியும் அவரது சகாக்களும் பிரிட்டிஷ் அரசையே கிடுகிடுக்க வைக்க நடத்திய போராட்டம் என்ன தெரியுமா?

கொழும்பில் வான் படைத் தாக்குதலையே வெற்றிகரமாக நடத்தி விட்டார்கள் என்கிற செய்தி தேனாய்ப் பாய்கிற இந்த வேளையில் உங்கள் கற்பனை சற்று ஓவராகத்தான் இருக்கக்கூடும்.

ஆனால் ராமமூர்த்திகள் நடத்திக் காட்டிய வீர தீர சாகசப் போராட்டம் எது தெரியுமா? சத்தம் போடாமல் இரவோடு இரவாக காங்கிரஸ் கட்சியில் போய் சரணாகதி அடைந்து “நாங்கள் சோசலிஸ்டுகள் ஆகிவிட்டோம்” என்று அறிவித்ததுதான்.

அரசனே கெளரவித்தாலும் வைக்கம் தலித்துகளின் வாழ்வுரிமை எனக்கு முக்கியம் என்று கடுங்காவல் தண்டனை பெற்ற பெரியார் எங்கே?
மார்க்சிஸ்ட் ராமமூர்த்தி எங்கே?

ஒன்றல்ல… இரண்டல்ல இருபத்தியோரு தடவை சிறைத் தண்டனை அனுபவித்த தந்தை பெரியாரை…

தன்னோடு நிற்காமல் துணைவி நாகம்மையாரையும், தங்கை கண்ணம்மாளையும் பொது வாழ்வுக்கு அழைத்து வந்து போராட்டங்கள் பல நடத்த வைத்த பெரியாரை….
கம்யூனிஸ்ட் தலைவர்கள் தலைமறைவு வாழ்க்கை மேற்கொண்டிருந்த காலத்தில் .எஸ்.கே., ப.ஜீவானந்தம், எம்.ஆர்.வெங்கட்ராமன் உட்பட பலருக்கும் அடைக்கலம் தந்து பாதுகாத்து வைத்திருந்த பெரியாரை…..

காம்ரேட் ராமமூர்த்தி ‘பயந்து விட்டார்’ என்று உளறிக் கொட்டியிருந்தார்.

இதுதான்….
இவர்களது கடந்தகால யோக்யதை…
லட்சணம்…
யுக்தி….
தந்திரோபாயம்….
எல்லாம்.

மத வெறியர்களுக்கும், சாதி வெறியர்களுக்கும் எதிராக போர்க்குரல் கொடுத்ததைவிடவும் சமூக நீதிக்காக உழைத்த இயக்கத்தவர்கள் மீதுதான் அதிக தாக்குதல் தொடுத்தனர் இந்த “மார்க்சிஸ்டுகள்”.

சரி இப்போது எப்படி?
ஒரு ராஜபுத்ர வம்சத்தைச் சேர்ந்த விஸ்வநாத் பிரதாப் சிங் வந்து
சமூக நீதித் தத்துவத்தை விளக்கும் வரைக்கும் மேற்கு வங்கத்தில் எட்டிக் கூடப் பார்க்கவில்லை இட ஒதுக்கீட்டுத் தத்துவம்.

“வர்க்க விடுதலை வந்துட்டா போதும் தோழர்…எல்லாம் சரியாயிடும்.” என்கிற பல்லவியிலேயே ஓடிப் போயிற்று அவர்களது காலங்கள்.

அடுத்து ஈழத் தமிழர் சமாச்சாரம். உலகளாவிய மனித உரிமை அமைப்புகள் தொடங்கி உள்ளூர் அமைப்புகள் வரைக்கும் ஈழத்தில் நடந்து கொண்டிருந்த படுகொலைகளுக்கு எதிராகக் குரல் கொடுத்துக் கொண்டிருந்த வேளையில்
நிலைமையை நேரில் அறிந்து வர இதே ராமமூர்த்தியை இலங்கைக்கு அனுப்பி வைக்க….
போய்ப் பார்த்துவிட்டு வந்த ‘மகான்’ ராமமூர்த்தி உதிர்த்த முத்து எது தெரியுமா?

“தமிழ் நாட்டிலே தமிழர்களுக்கு உள்ள நிலையைக் காட்டிலும்
அங்குள்ள தமிழர்கள் மிக நல்ல முறையில் பண்டாரநாயகா அவர்களால் நடத்தப்படுகிறார்கள்.”

கம்யூனிஸ்ட் கட்சியும் சொன்னது:
சிங்களர்களும் – தமிழர்களும் உட்கார்ந்து பேச வேண்டும்.
பேசுங்க…..
பேசுங்க…..
பேசிக்கிட்டே இருங்க.

பிறகு வந்த 1977 படுகொலைகளாகட்டும்….
83 ல் நடந்த இனப்படுகொலைச் சம்பவங்களாகட்டும்….
85 ல் நடந்த முப்படைத் தாக்குதல்களாகட்டும்….
எதுவாகட்டும்….
மார்க்சிஸ்ட்டுகளின் ஒரே தாரக மந்திரம்
பேசுங்க…..
பேசுங்க…..
பேசிக்கிட்டே இருங்க என்பதுதான்.

குஷ்பு பிரச்சனைக்கு வரிந்து கட்டிக் கொண்டு கூடிய தமிழ் மாநில அவசர செயற்குழுக் கூட்டம் கூட ஈழத் தமிழர்களுக்காகக் கூட்டப்பட்டதில்லை.

தொண்ணூறுகளில் காவிரி நடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்பு வந்தபோது 205 டி.எம்.சி. நீர் விடச் சொன்னது நடுவர் மன்றம். கர்நாடகத் தெருக்கள்தோறும் பந்தாடப்பட்டனர் தமிழர்கள். அகதிகளாக வந்தனர் ஆயிரக்கணக்கானோர். அப்போதும் நெற்றியடியாகச் சொல்லவில்லை இவர்களது தேசியத் தலைமை.
கர்நாடக அரசும் – தமிழக அரசும் உட்கார்ந்து பேச வேண்டும்.
பேசுங்க…..
பேசுங்க…..
பேசிக்கிட்டே இருங்க என்றது அது.

1979 ல் முல்லைப் பெரியாறு அணையில் ஏற்பட்ட லேசான நில அதிர்வைத் தொடர்ந்து 145 அடிக்கு மேல் நீர் மட்டம் உயரும் போது சில பகுதிகளில் அழுத்தம் ஏற்படுகிறது.
அணையை பலப்படுத்தினால் போதும் என்றது மைய நீர் வள ஆணையம்.
அணையை பலப்படுத்தப் போன தமிழக அதிகாரிகளுக்கோ அடி உதை.
பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் அணையை பலப்படுத்திய பின்னர் வல்லுநர் குழு அறிவித்தது:
“அணையின் நீர் மட்டத்தை இப்போது 142 அடிக்கு உயர்த்திக் கொள்ளலாம்” என்று.

எல்லாவற்றிலுமே எதிரும் புதிருமாக இருக்கும் காங்கிரசோடு கைகோர்த்துக் கொண்டு எதிர்த்தார்கள் காம்ரேடுகள். தமிழ் மாநிலத் தலைமையும் தேசியத் தலைமையும் திரு திரு வென விழித்தது.
(அவர்கள் தமிழ்நாடு என்று ஒருபோதும் உச்சரிக்கக்கூட மாட்டார்கள்….தமிழ் மாநிலம் என்றுதான் சொல்வார்கள் என்பது வேறு கதை….)
2006 பிப்ரவரியில் கேரளாவின் சகல இழுத்தடிப்புகளையும் தாண்டி உச்சநீதி மன்றத் தீர்ப்பு தமிழகத்துக்கு சாதகமாக வந்து தொலைக்க…
போதாக்குறைக்கு காங்கிரஸ் ஆட்சி போய் காம்ரேடுகள் ஆட்சி வேறு ‘மலர’……
சர்வதேசியக் கொள்கையிலிருந்து
தேசியத்திற்கு கீழிறங்கி….
பிறகு தேசியத்திலிருந்தும் பல்டியடித்து “மலையாளிகளின் நலனே முக்கியம்” எனக் கும்மியடிக்க வேண்டிய நிலை காம்ரேடுகளுக்கு.

சிவப்புச் சாயம் வெளுத்துப் போச்சு
டும் டும் டும்.
காம்ரேடு வேஷம் கலைஞ்சு போச்சு
டும் டும் டும்.
என்று பலர் நித்திரையிலிருந்து எழுந்து தொலைக்க…. தேசியத் தலைமையோ
“தமிழக அரசும் – கேரள அரசும் உட்கார்ந்து பேச வேண்டும்….
பேசுங்க…..
பேசுங்க…..
பேசிக்கிட்டே இருங்க” என்கிறது.

அதே கதைதான் சேலம் ரயில்வே கோட்டம் அமைவதிலும்.
பெருமளவு வருமானத்தைக் கேரளாவுக்குக் கொட்டிக் கொடுக்கும் தமிழகம் சேலம் ரயில்வே கோட்டத்திற்குக் குரல் கொடுத்தால்….
“சர்வதேசியவாதிகள்” சத்தமில்லாமல் மலையாள முக்காட்டை எடுத்துப் போர்த்திக் கொள்கிறாரகள்.

நல்லவேளையாக காம்ரேடு அச்சுதானந்தன் தான் தமிழகத்திற்கும் முதலமைச்சர் எனச் சொல்லாமல் விட்டதால் பிழைத்தோம் நாம்.

மொத்தத்தில் “மார்க்சிஸ்டுகள்” வர்க்க விடுதலைப் போராளிகளுமல்ல.
சமூக நீதிக் காவலர்களுமல்ல.
“மதம் மக்களுக்கு அபின்” என காரல் மார்க்ஸ் பொட்டில் அடித்தது போல கூறியிருந்தாலும்
இவர்கள் அபின்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தையே வலியுறுத்துவார்கள்.

கடவுள் மறுப்பாளர்களை “வறட்டு நாத்திகவாதிகள்” என விமர்சிக்கும் இந்த விஞ்ஞான சோசலிசத்தின் வழித் தோன்றல்கள்
மாரியாத்தா தொடங்கி மேரியாத்தா வரைக்கும் சப்பரம் தூக்குவார்கள்.
போதாக்குறைக்கு இத்திருவிழாக்களுக்கு “புரட்சிகர வாழ்த்துக்களை”யும் சுவரொட்டிகள் மூலம் தெரிவிக்கத் தயங்க மாட்டார்கள்.

இவர்களது “வர்க்க விடுதலைப் போரின்” உச்சகட்டமாக
இப்போது மேற்கு வங்கத்தின் சிங்கூரிலும், நந்திகிராமிலும் டாட்டாக்கள் நிலம் கிடைக்காமல் “தவிக்கிறார்கள்.”

விவசாயம் வர்த்தகமல்ல.
வாழ்க்கை முறை என்கிற அரிச்சுவடி கூடப் புரியாது விவசாயிகளுக்கு துப்பாக்கிக் குண்டுகளைக் காணிக்கையாக்குகிறார்கள்.

மத்திய அரசுக்கு இவர்களது கருத்துக்களை ஆணித்தரமாகக் கூறி “வென்றெடுப்பதை” விட்டுவிட்டு…
மத்திய அரசு மீண்டும் ஆய்வில் இறங்கி அறிவிக்கும் வரைக்கும் “சிறப்புப்” பொருளாதார மண்டலங்களுக்கு சிறு ஓய்வு கொடுத்திருக்கிறார்கள் காம்ரேடுகள்.

ஆபத்து மிக்க அணுமின் நிலையங்களுக்கு
கண்ணைத் திறந்து கொண்டே
ஆதரவளிப்பதில் ஆகட்டும்….

மனித குலமே காறி உமிழும் சிங்களப் பேரினவாதச் செயல்களுக்கு
“இறையாண்மையின்” பெயரால்
ஒத்தூதுவதில் ஆகட்டும்….

தேர்தல்களின் போது மட்டும் வசதியாக மறந்துவிடுகிற
திராவிட கட்சிகளின் “இனவாத அரசியல்” பற்றிய புலம்பல்கள் ஆகட்டும்….

இந்திய ஒருமைப்பாட்டு பஜனையில்
ஓங்கிக் குரல் கொடுப்பதில் ஆகட்டும்….

மாநில மக்களது நியாயமான மொழி உணர்வுகள் வெளிப்படும் வேளைகளில்
சாதிக்கின்ற கள்ள மெளனங்களில் ஆகட்டும்….

பி.ஜே.பி.க்கும் – இந்த “மார்க்சிஸ்டுகளுக்கும்” ஏதேனும் ஆறு வித்தியாசங்களைக் கண்டு பிடித்துச் சொல்பவர்களுக்கு
குலுக்கல் முறையில் பரிசுகளை அள்ளிக் கொடுக்கலாம் தவறில்லை.

“பட்டினிக் கொடுஞ்சிறைக்குள்
பதறுகின்ற மனிதர்காள்
பாரிற்கடையரே எழுங்கள்
வீறு கொண்டே தோழர்காள்”

ஆக…….
இந்திய “மார்க்சிஸ்டுகளைப்” பொறுத்தவரை
பட்டினிக் கொடுஞ்சிறைக்குள் பதறுகின்ற மனிதர்கள்….

முல்லை பெரியாறை நம்பியிருக்கும்
தென் மாவட்ட விவசாயிகளும் அல்லர்.

சேலம் ரயில்வே கோட்டத்தை நம்பியிருக்கும்
தமிழர்களும் அல்லர்.

நந்திகிராமிலும், சிங்கூரிலும் பலியாகிக் கொண்டிருக்கிற
சிறு விவசாயிகளும் அல்லர்.

இந்தோனேசியாவின் சலீம் அலிகளும்
இந்தியாவின் டாட்டாக்களும்தான்.

லால் சலாம் சகாக்களே.