புதுப் புது “அர்த்தங்கள்”…

பத்தாம் தேதி இரவு பத்தரை மணிவரைக்கும் எழுத

எண்ணியிருந்த கட்டுரை வேறு.

அதற்கான ‘தயாரிப்புகள்’ வேறு.

ஆனால் எதிரேயிருந்த நண்பன் கேட்ட கேள்வியில்

எழுத இருந்த கட்டுரையே திசைமாறிப் போனது.

தீவிரவாதிகள் – அகிம்சாவாதிகள் – தியாகிகள் – துரோகிகள் –

என்கிறார்களே அது யார் யார்? என்றான் அப்பாவியாக.

கொஞ்சம் யோசித்தால் தலை சுற்றுகிறது நமக்கு.

இந்தக் குழப்பம் குருதிப்புனல் எடுத்த கமலகாசனுக்கே..

மன்னிக்க…கமல் ஹாஸனுக்கே இருந்தால்

இந்தச் சிறுவனுக்கு எப்படி இல்லாது போகும்?

உண்மைதான்…

தீவிரவாதிகள் யார்?

அடிப்படைவாதிகள் யார்?

போராளிகள் யார்?

பயங்கரவாதிகள் யார்?

இவர்களுக்குள் என்ன அடிப்படை வேறுபாடு?

அதைக் காட்டிலும் இவர்கள் எதன் பொருட்டு…?

ஏன் உருவாகிறார்கள் என்பது அடிப்படையிலும் அடிப்படையான கேள்வி.

நமக்கு எப்போதுமே ‘விளைவுகள்’தானே முக்கியம்…

அடிப்படைக் காரணங்கள் ஆயிரம் இருந்தாலென்ன?

வரலாற்று ரீதியாகப் பார்த்தால்

இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி அந்நியரோடு போர் தொடுத்த

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ‘தீவிரவாதி’.

ஆனால் இந்திய கப்பற்படை எழுச்சியை எதிர்த்த

மோகன் தாஸ் கரம்சந்த் காந்தி ‘அகிம்சாவாதி’.

பாரத் நவ ஜவான் சபாவை கட்டமைத்து

அப்பாவிகள் யாரும் சாகாது குண்டு வீசிய பகத்சிங் ‘அதி பயங்கரவாதி’.

பகத்சிங்கை தூக்கிலேற்றிய ஆங்கிலேய அரசு ‘மிதவாதி’.

ஆகஸ்டுப் ‘புரட்சி’யில் தந்திக் கம்பங்களைச் சாய்த்து

தபாலாபீசுகளைக் கொளுத்திய காங்கிரஸ்காரர்கள்

பிரிட்டிஷ் கணக்குப்படி பார்த்தால் ‘பயங்கரவாதிகள்’.

சுதந்திர இந்தியாவின் கணக்குப்படி தேசத் தியாகிகள்

இந்தக் குழப்பம் ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்தவர்களூக்கு

மட்டும்தான் என்றில்லை,

தத்துவப் போராட்டத்தை முன்னெடுத்தவர்களுக்கும் நீடிக்கத்தான் செய்தது.

சாதியை அடிப்படையாகக் கொண்ட வர்ணாசிரம முறையை

ஏற்றுக்கொண்ட எம்.கே.காந்தி அகிம்சாவாதியாகவும்…

சாதீய அமைப்பையே தகர்த்தெறிய வேண்டும் என்று போராடிய

பி.ஆர்.அம்பேத்கர் தீவிரவாதியாகவும் சித்தரிக்கப் பட்டது வரலாற்றுச் சோகம்.

எண்ணக் குதிரையை எண்பதுகளில் நிறுத்தினால்

ஸ்வீடனிலிருந்து ‘அதி நவீன’ ஆயுதங்கள் வாங்கிக் குவித்த

ராஜீவ்காந்தி ‘தேச பக்தர்’.

அந்த பணத்தில் ஒரு லட்சம் ஓராசிரியர் பள்ளிகளுக்கு

ஓடாவது போட்டிருக்கலாமே என்றவர்கள் ‘தேசத்துரோகிகள்’.

சர்வதேச அரசியல் அரங்கில் இந்தியாவின் ‘முற்போக்கு’க் கணக்குப்படி…

திம்புவில் நடந்த பேச்சுவார்த்தைக்கு சொன்னவுடன் வந்தால் போராளிகள்.

பிற்பாடு வந்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ள மறுத்தால் ‘தீவிரவாதிகள்’.

‘அறவழியில்’ கருப்புக்கொடி காட்டிய தி.மு.க.வினரிடமிருந்து

இந்திராவைக் காப்பாற்றிய நொடிவரையில்

காங்கிரஸ்காரர்களுக்கு நெடுமாறன் ஒரு தேசபக்தர்.

பிற்பாடு ‘தேசத்துரோகி’.

நல்லவேளையாக இவர்கள் ‘இந்திராவைக் காப்பாற்றியதே

மிகப்பெரிய தேசத்துரோகம்’ என்று சொல்லாமல் விட்டார்களே

என்கிற அளவில் மற்றவர்கள் மகிழ்ச்சி அடையலாம்.

சர்வதேச அளவிலாகட்டும் – இந்திய அளவிளாகட்டும் –

அவரவர்களுக்கென்று தனித்தனி அகராதிகள்.

அவைகளுக்கே உரித்தான புதுப் புது அர்த்தங்கள்

மத சம்பந்தமான விஷயங்களும் இதற்கு விதிவிலக்கல்ல.

பாபர் மசூதியை இடிப்பவன் ‘மிதவாதி’.

இடிப்பைக் கண்டிப்பவன் ‘முஸ்லிம் தீவிரவாதி’…

(உலகளாவிய ‘பார்வையில்’

இந்து – கிருஸ்துவ – யூதத் தீவிரவாதிகள் என்று யாருமே கிடையாது

என்பது சுவாரசியமான விஷயம்.)

பாலஸ்தீனியர்களை சொந்த மண்ணை விட்டு

விரட்டியடிப்பது ‘அகிம்சாவாதம்’.

நாடற்றவர்கள் அவலக் குரல் எழுப்புவது ‘பயங்கரவாதம்’.

மான்கடா படைத் தாக்குதலில் விசாரிக்கப்பட்டபோது

பிடல் காஸ்ட்ரோ ஒரு ‘பயங்கரவாதி’.

மக்கள் அலையில் பாடிஸ்டா மூழ்கடிக்கப்பட்டபோது

பிடல் காஸ்ட்ரோ புரட்சியின் நாயகன்.

தங்கத் தமிழ் மண்ணைப் பொறுத்தவரையும் ஒரு அகராதி உண்டு.

அதுதான் தமிழில் கல்வியும் – வழிபாடும் – குடமுழுக்கும் – ஒதுக்கப்பட்டோருக்கு உரிமையும்

வேண்டும் என்பவர்கள் ‘தமிழ்த் தீவிரவாதிகள்’.

“தாழ்த்தப்பட்ட மக்கள் பியூட்டி பார்லருக்குப் போய்

‘பேசியல்’ செய்து கொண்டு…

‘ஹெட்ஸ் அண்ட் ஷோல்டர்ஸ்’ ஷாம்ப்போடு

‘லக்ஸ்’ போட்டுக் குளித்து…

யார்ட்லி செண்ட்டோடுதான் கோயிலுக்குள் வரவேண்டும்” என்கிற

மடச் சாமியார் ‘மிதவாதி’.

(தேசம் தழுவிய பார்வையில்

மலையாள – கன்னட – குஜராத்தி தீவிரவாதிகள்

என்று யாருமே கிடையாது என்பதும் சுவாரசியமான விஷயம்தான்.)

எது எவ்விதமோ…

ஆனால் காலச்சக்கரம் மட்டும் சுழலாமல் நிற்பதில்லை.

வரலாறுகள் மாறும்போது…

இன்றைய “துரோகிகள்”….

நாளைய தியாகிகள்.

ஆனால்….

இன்றைய “தியாகிகள்….?

நான் தேசபக்தன் அல்ல…

“ஏன் ஒதுங்கியே நிற்கிறீர்கள்…? கொண்டாட மாட்டீர்களா…?” என்றது தொலைபேசிக்குரல்.
அதுவும் ஒரு பத்திரிகையாளருடையது.

எதற்காகக் கொண்டாட வேண்டும்…? என்றேன்.

“இந்தியா கிரிக்கெட்டில் ஜெயித்ததை…” என்றார்.

ஜெயித்தால் தலையில் தூக்கிவைத்துக்கொண்டு கொண்டாடுவதுமில்லை.
தோற்றால் செருப்பாலடித்து இழிவு படுத்துவதுமில்லை.
இரண்டுமே எனது வேலையில்லை…” என்றேன்

“இந்திய ராணுவத் தளபதி என்.சி.விஜ் கூட ‘இது இந்தியாவுக்கே கெளரவத்தை தேடித் தந்திருக்கிறது…’ என்று வாழ்த்தி இருக்கிறாரே…?”

அப்படியானால்…
ஆஸ்திரேலியாவிடம் தோற்றதற்கு ‘இது இந்தியாவுக்கே அவமானம்’
என்று கண்டனம் தெரிவிக்கவில்லையே ஏன்…? என்றேன்.

“என்ன இருந்தாலும் பாகிஸ்தானை ஜெயித்திருக்கிறோம்…
இனி உலகக் கோப்பையே கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை…”என்று
தனது அறியாமையை அள்ளிக் கொட்டினார் அந்தப் பத்திரிகையாளர்.

இதற்கு எங்கள் ஊரில் வேறு பழமொழி இருக்கிறது என்றேன்.

“என்ன பழமொழி…?”

“மகன் செத்தாலும் சரி… மருமக தாலி அறுக்கணும்…”

“ச்சே… தேசபக்தியே கிடையாதா…?” எரிச்சலின் உச்சத்தில் இருந்தது குரல்.

நிச்சயமாகக் கிடையாது.
ஆனால்… தேசங்களில் உள்ள மக்களின் மீது மாளாக் காதல் உண்டு.
எம்மைப் போலவே பசியிலும்… பட்டினியிலும் உயிரை விடுகிற…
தள்ளாத வயதிலும் ஊதுபத்திகளையும்… தீப்பெட்டிகளையும்
வீடு வீடாகச் சுமந்துசென்று விற்று வயிறு வளர்க்கிற…
நிலங்களை இழந்து…
வாழ்க்கையை இழந்து…
விமானங்கள்வீசும் உணவுப் பொட்டலங்களுக்காக
வானத்தை அண்ணாந்து பார்த்துக் காத்திருக்கிற…
சோமாலியா மக்கள்மீது காதல் உண்டு…
பாகிஸ்தான் மக்கள்மீது காதல் உண்டு…
இலங்கை மக்கள் மீது காதல் உண்டு…
நிகரகுவா மக்கள்மீது காதல் உண்டு…
இவர்களைப் போன்றே இன்னமும் ஒடுக்கப்படுகின்ற
ஒவ்வோரு மூன்றாம் உலக நாடுகள்மீதும் எமக்கு காதல் உண்டு.

ஆனால் உங்களைப் போல கேவலம் ஒரு கிரிக்கெட்டிற்காக ஆர்ப்பரிக்கும் போலி தேசபக்தி மட்டும் நிச்சயம் இல்லை எமக்கு.

விளையாட்டை விளையாட்டாகப் பார்க்காமல்,
இந்தியாதான் ஜெயிக்கணும்… பாகிஸ்தான் தோற்கணும்… என்கிற
ரசிகர் மன்ற மனோபாவத்தோடுதான் பார்க்கவேண்டும் என்றால்…
மன்னித்து விடுங்கள் என்னை. நானிந்த ‘விளையாட்டிற்கு’ வரவில்லை.
அப்படி பார்த்தால் ஜாக்கிசான் ,அர்னால்டு படங்களைக்கூட பார்க்கக்கூடாது நீங்கள்…என்றேன்.

போனை வைத்து விட்டார் நண்பர்.

இந்த நவீன நீரோக்களை நினைத்தால்
எரிச்சலைக் காட்டிலும் பரிதாபமே மேலிடுகிறது.
அண்டை நாட்டிடம் தேற்றால் கேவலம்
வெள்ளைத் தோலர்களிடம் தோற்றால் கெளரவம் என்று கருதுகிற
அடிமை மனோபாவம் எப்போது தொலையும் இந்த இரு நாட்டுக்கும்…?

இந்துஸ்தானோ…
பாகிஸ்தானோ…
இறுதியில் மண்டியிட்டுக் கிடப்பது அமெரிக்காஸ்தானிடம்தான்.
அதில் மட்டும் சுயமரியாதையைத் தொலைத்துவிட்டுத் திரிவார்கள் இவர்கள்.

கொஞ்சம் யோசித்துப்பார்த்தால் ஐயப்பன் கோயிலுக்கு மாலை போடுவது மாதிரிதான் கிரிக்கெட்டும்.

மாலைக்கு மாலை போட்டிருக்கும் துப்புரவுத் தொழிலாளியோ…
விவசாயக் கூலியோ…
மலை ஏறி முடிக்கிற வரைக்கும் ராஜ மரியாதைதான்.

வரப்பில் நிற்கும் பண்ணையார்…’சாமி! மலைக்கு போயிட்டு எப்பத் திரும்புவீங்க…?’ என்பான்.
கடன் கொடுத்த மீட்டர் வட்டிக்காரன்….”சாமிக்கு இது எத்தனாவது வருசம்…?” என்பான்.
எங்கு திரும்பினாலும் ஏக மரியாதைதான்.

ஆனால் ‘சாமி’ மலை இறங்கியது தெரிந்த மறு நிமிடத்திலிருந்து ‘முதல் மரியாதை’தான்.
அப்படிதான் கிரிக்கெட்டும்.

மேட்ச் முடிகிறவரைக்கும் எம்.டி.யிடம் பியூன் ஸ்கோர் கேட்கலாம்.

“கும்ப்ளே அந்த கேட்ச்சை விட்டிருக்கக் கூடாதுங்க…” என்று
கடை முதலாளியிடம் சரக்கு சுமக்கிற பையன் அளவளாவலாம்.

ஆனால் மேட்ச் முடிந்த மறு நொடியே… 
“…யோளி… அங்க என்ன பராக்கு பார்த்திட்டு இருக்கே…?”
என்று குரல் வரும், ‘மாலை’யைக் கழட்டிய மாதிரி….

அதுவரை டீக்கடை தொடங்கி
பெரும் தொழில் நிறுவனங்கள் வரைக்கும்
கிரிக்கெட்டை அக்குவேறு ஆணிவேறாக அலசுவதென்ன…?

அரிய பல ஆலோசனைகளை அள்ளி வீசுவதென்ன…?

சூப்பர்தான் போங்கள்.

ஆனால் பந்தயம் முடிந்த மறு கணத்திலேயே
இவர்களுக்குள் பதுங்கிக் கிடக்கும் வக்கிரங்கள் விழித்துக் கொள்ளும்.

அதுவரையில் ‘வேற்றுமையில் ஒற்றுமை’ கண்டவர்கள்
பிறகு ஒற்றுமையில் வேற்றுமையைத் தேடிக் கிளம்புவார்கள்.

அது உட்சாதிச் சண்டையாக…
சாதிச் சண்டையாக …
மதச் சண்டையாக…
மாநிலச் சண்டையாக…
உருவெடுத்து தற்காலிகமாக
இவர்களது தேசபக்தி மூட்டை கட்டி பரணில் போடப்படும்.

அப்புறமென்ன…
வழக்கமான தலைப்புச் செய்திகளுக்குள் மூழ்கிப் போகும் தேசம்.

இவர்களது தேசபக்தியை வெளிச்சம் போட்டுக் காட்ட
பிறகொரு சந்தர்ப்பம் வராமலா போகும்…?
அதுவும் வரும்.

ஒரு விளம்பர இடைவேளைக்குப் பிறகு.

இன்னொரு கிரிக்கெட் பந்தய ரூபத்தில்

நாட்டை அடகு வைக்கிற உலக வர்த்தக நிறுவனம் குறித்துக்
கூட்டமாகக் கூடி குரல் எழுப்பமாட்டார்கள் இவர்கள்…

பட்டினிச் சாவுகள் குறித்து கூட்டமாகக் கூடி விவாதிக்க மாட்டார்கள் இவர்கள்…

உலகில் யுத்த மேகங்கள் சூழ்ந்தால் நமது நிலை என்ன என்பதற்கு
கூட்டமாகக் கூடி குரல் கொடுக்க மாட்டார்கள் இவர்கள்…

ஆனால் தெருக்களிலும்…
தேநீர்க் கடைகளிலும்…
திரையரங்குகளிலும் கூடுகிற கூட்டம் கிரிக்கெட் மேட்சிற்காம்.
என்னே தேசபக்தி…?

பாவம்…
இவர்கள் விளையாட்டை
போராகப் பார்க்கிறார்கள்
போரையோ விளையாட்டாகப் பார்க்கிறார்கள்.

இவர்கள் மத்தியில் வாழ்வதைவிடவும்
தண்டனை நம்மைப் போன்ற
‘தேசத்துரோகி’களுக்கு அப்புறம் வேறென்ன இருக்கிறது…?
 

வயாகரா வேண்டாம்… பாடலாசிரியர்களே போதும்!

தமிழ் இலக்கியத்தில் நாவல், சிறுகதை, கவிதை, கட்டுரை என்று பல தளங்களில் இயங்குபவர்கள் பலர் உண்டு. ஆனால் பாமரன் இத்தளங்களிலிருந்து விலகி கடித வடிவில் pamaran_cover_top.jpgஎழுதினார். சினிமா, அரசியல் என்று இவர் எழுதிய பாமரனின் பகிரங்கக் கடிதங்களால் எரிச்சலுற்றவர்கள் பலருண்டு. ஒருமுறை இயக்குனர் கே.பாலசந்தர் படங்களைப் பற்றி குமுதத்தில் இவர் எழுதிய கடிதம் தமிழ் சினிமா உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. வெகுண்டெழுந்த திரையுலகம் ‘குமுதம்’ பத்திரிகை அலுவலகத்தை முற்றுகையிட்டு பாமரனை மன்னிப்புக் கேட்கச் சொன்னது. இப்படி இவர் எழுத்து எப்போதுமே ஒரு பரபரப்பை உண்டு பண்ணும். பெரும்பாலும் இவருடைய எழுத்து சமூகத்தில் ஒடுக்கப்பட்டவர்கள், விளிம்புநிலை மனிதர்கள், சமூக அவலங்கள், மனித உரிமை மீறல்களைப் பற்றியதாகவே இருக்கும்.

“அன்புத் தோழிக்கு”, “புத்தர் சிரித்தார்”, “வாலி + வைரமுத்து = ஆபாசம்”, “பகிரங்கக் கடிதங்கள்”, “தெருவோரக் குறிப்புகள்”, “சாட்டிலைட் சனியன்களுக்கு”, “அகிம்சாமூர்த்தி அமெரிக்கா”, “ஆரிய உதடுகள் உன்னது” ஆகிய தலைப்புகளில் இவருடைய புத்தகங்கள் வெளிவந்துள்ளன.
கோவையில் வசிக்கும் இவரை “இனிய உதய”த்திற்காகச் சந்தித்து உரையாடினோம். எழுத்தைப்போலவே இவரது பதில்களிலும் கிண்டல், கேலி, எகத்தாளம் எல்லாம் இருந்தது. அதிலிருந்து…

எந்த நிகழ்வு உங்களை எழுதத் தூண்டியது?

ஆரம்பத்தில் காதல் கவிதைகள் எழுதி சமூகத்தைச் சீரழிக்கும் பணியில் நானும் ஒருவனாக இருந்தேன். அதன் பிறகு “நீ” என்ற பெயரில் மாதம் இருமுறை வரும் ஒரு பத்திரிகை ஆரம்பித்தேன். அது மூன்று இதழ்களோடு ஊத்தி மூடப்பட்டது. அதெல்லாம் என் சொந்த அரிப்புக்காக எழுதப்பட்டதுதான். இதனால் சமூகத்துக்கு பயன் எதுவுமில்லை என்று உணர்ந்தேன். அப்புறம் எழுதணும் என்ற நோக்கத்திற்காக எழுதக்கூடாது. நம்ம எழுத்து எதற்காக எழுதப்படுகிறது, யாருக்காக எழுதுகிறோம் என்ற சிந்தனையைத் தூண்டிவிட்டது ஈழப்போராட்டம்தான்.
83 ல் இலங்கையில் நடந்த இனப்படுகொலை என்னை நிலைகுலைய வைத்தது. இதற்குப் பிறகுதான் நான் மக்களுக்கான எழுத்தை நோக்கி நகர ஆரம்பித்தேன்.

பாமரன் என்று பெயர் வைக்க என்ன காரணம்?

நான் ஞானி அல்ல என்பதுதான் காரணம். இது அவை அடக்கத்துக்காக வைத்துக் கொண்டதுமில்லை. உண்மையிலேயே உலகத்தில் எல்லாம் தெரிந்தவர்கள் என்று எவரும் இல்லை. ஏதோ ஒரு விதத்தில் நாம் எல்லோருமே பாமரர்கள்தான்.

நாவல், சிறுகதை, கவிதை, கட்டுரை என்ற தளத்திலிருந்து விலகி, கடித வடிவத்தைத் தேர்வு செய்ய என்ன காரணம்?

கடித வடிவத்திற்கு நான்தான் புதுசே தவிர, கடித வடிவ இலக்கியம் தமிழுக்குப் புதுசு இல்லை. முப்பது நாற்பது வருடங்களுக்கு முன்பே செ.கணேசலிங்கம் எழுதிய ‘மான்விழிக்குக் கடிதங்கள்’, புதுமைப்பித்தன் ‘கண்மணி கமலாவுக்கு’ என்ற தலைப்பில் எழுதியது…இதுபோல ஏகப்பட்ட முன்னோடிகள் இருக்கிறார்கள்.

எழுத்தாளன் என்பவன் மலை மேல் உட்கார்ந்து பிரசங்கம் செய்பவன் அல்ல. எனக்கு எது எதெல்லாம் தெரியும் என்பதைக் காட்டிலும், நான் வாழுகின்ற சமூகத்தோடு நெருக்கமாக இருப்பதற்கு அவர்கள் மொழியிலே எழுதுவதுதான் சரியா இருக்கும் என்று முடிவெடுத்தேன். அதன் விளைவே இந்தக் கடித வடிவக் கண்றாவிகள்.

தமிழ் சினிமாவைப் பற்றிய உங்களுடைய எழுத்தின் குரல் ஒரு தோல்வியுற்ற உதவி இயக்குனரின் குரலாக ஒலிக்கிறதே.
நீங்கள் திரைப்படத்தில் முயற்சி செய்து தோல்வியுற்றவரா?

நான் அதுபோன்ற தற்கொலை முயற்சியில் ஈடுபட்டவன் அல்ல.
தற்போதைய தமிழ் சினிமாவின் ஆகச் சிறந்த இயக்குனர்கள் இன்றும் எனக்கு நெருக்கமான குடும்ப நண்பர்களாக இருக்கிறார்கள். நான் விருப்பப்பட்டால் இவர்கள் எடுக்கும் சினிமாவில் இணை இயக்குனராகவோ, வசனகர்த்தாவாகவோ, ஏன் நடிகராகவோ கூட என்னால் ஆக முடியும். ஆனால், நான் இயங்கும் தளம் முற்றிலும் வேறுபட்டது.
ஏற்கெனவே அவல நிலையிலுள்ள தமிழ் சினிமாவை நானும் சேர்ந்து துன்புறுத்த விரும்பவில்லை.

நீங்கள் தீவிர பெரியார்வாதி. பெரியார் கடவுள் மறுப்புக் கொள்கையைக் கையாண்டார். நிறுவனமயமாக்கப்பட்ட பெருந்தெய்வங்களை எதிர்த்ததில் நியாயம் இருக்கிறது. மக்களோடு மக்களாக வாழும் சிறுதெய்வ வழிபாட்டையும் அவர் சேர்த்தே எதிர்த்தது நியாயமா?

பெரியார் என்பது ஒரு பேரலை.
இந்தச் சமூகத்தின் எந்தத் தரப்பு மக்களாக இருந்தாலும், அவர்களுடைய உழைப்பும் அதன் மூலமாக சிறுகச் சிறுக சேர்த்த வருமானமும்
எக்காரணம் கொண்டும் மூட நம்பிக்கைகளின் பெயரால் வீணாகிப் போய் விடக் கூடாது என்பதில் மிகுந்த அக்கறை கொண்டவர். அதன் பொருட்டே அவர் ஒடுக்கப்பட்ட மக்கள் எங்கிருந்தாலும் அவர்களுக்காக ஓங்கிக் குரல் கொடுத்தவர்.

இதைப் புரிந்து கொண்ட குன்றக்குடி அடிகளார் போன்ற உண்மையான ஆன்மீகவாதிகள் பெரியாரோடு நெருக்கமாகவே இருந்தார்கள்.
இப்படிப்பட்ட பெரியார்தான் கோவில் நுழைவுப் போராட்டங்களுக்கும்
அனைத்து சாதியினரும் அர்ச்சகர்களாக வேண்டும் என்பதற்காகவும்
இறுதி மூச்சு வரை போராடி வந்தார். கடவுள் இல்லை என்பதுதான் பெரியாரின் ஆணித்தரமான கருத்து.

ஆனால் இறைத் தலங்களில் சமத்துவமின்மை நிலவும் போது
வாய் மூடி மவுனம் காத்தவர் இல்லை பெரியார். அவருடைய கருத்து எதுவாக இருந்தாலும் மனித உரிமைகள் எதன் பெயரால் மீறப்படுகிறதோ
அங்கெல்லாம் அதற்கு எதிராகக் குரல் கொடுக்கத் தயங்காத மனித உரிமைப் போராளி. தெய்வமே இல்லையென்று சொல்லும்போது அதில் சின்ன தெய்வம், பெரிய தெய்வம் என்று என்ன வேண்டிக் கிடக்கு? என்றிருப்பார் பெரியார்.

pamaran_cover_middle.jpg

“அகிம்சாமூர்த்தி அமெரிக்கா” என்ற புத்தகத்தில் உலக நாடுகளில் அமெரிக்கா செய்து வரும் அயோக்கியத் தனங்களை
வெட்ட வெளிச்சமாக எழுதியிருந்தீர்கள். அந்த அமெரிக்காவுக்கு நீங்கள் செல்ல வேண்டிய சூழல் வந்தால் போவீர்களா?

நிச்சயமாகப் போவேன். இந்தப் பூமிப் பந்தை எவனும் எவனுக்கும்
பட்டா போட்டுக் கொடுக்கவில்லை. அமெரிக்க அரசின் பிணம் தின்னும் போக்கைத்தான் எதிர்க்கிறோமேயன்றி, ஒட்டு மொத்த அமெரிக்க மக்களை அல்ல.

வாய்ப்புகள் அதிகமிருந்தும் நான் பக்கத்திலுள்ள கச்சத் தீவிற்குக்கூடப் போனதில்லை.

‘வாலி + வைரமுத்து = ஆபாசம்’ என்றொரு புத்தகத்தில் நீங்கள்
வாலி, வைரமுத்துவின் ஆபாச வரிகளைக் கடுமையாக விமர்சித்திருக்கிறீர்கள். ஆனால் இன்றுள்ள இளம் திரைப்படப் பாடலாசிரியர்களின் பாடல்களிலும் ஆபாசமான வரிகள் அதிகமாக இருக்கிறதே. இதைப் பற்றி தங்களின் கருத்தென்ன?

இன்றைய திரைப்படப் பாடலாசிரியர்கள் வாலியையும், வைரமுத்துவையுமே நல்லவர்களாக்கி விட்டார்கள். விரசத்தில் வாலியையும், வைரமுத்துவையும் விட நாங்கள் எந்த விதத்திலும் சளைத்தவர்கள் அல்ல என்று நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள். இது எல்லா திரைப்படப் பாடலாசிரியர்களுக்கான பொத்தாம் பொதுவான மதிப்பீடுகள் இல்லை. இதில் சில விதிவிலக்குகளுமுண்டு.

தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர்கள் தங்களின் வரிகளால் வயாக்கராக்களுக்கு வேலை இல்லாமல் செய்து விட்டார்கள்.

சினிமா என்பதே பொழுது போக்கிற்குத்தான் அதில் எல்லா படங்களிலும் பண்பாடு, கலாச்சாரம், ஒழுக்கம் இருக்க வேண்டும் என்பது நியாயமா? அதுவுமில்லாமல் நீங்கள் தமிழ் சினிமா மீது கடுமையான விமர்சனங்கள் வைக்கிறீர்கள். மற்ற மொழிகளிலும் இது போலத்தானே படங்கள் வந்து கொண்டிருக்கின்றன?

எல்லோரும் கள்ளச் சாராயம் காய்ச்சுகிறார்கள் என்பதற்காக
நானும் எனது இனமும் கள்ளச் சாராயம் காய்ச்ச முடியாது.
எல்லோரும் பிக்பாக்கெட் அடிக்கிறார்கள் என்பதற்காக
நாங்களும் பிக்பாக்கெட் அடிக்க முடியாது.
நீங்கள் தவறானவற்றை உதாரணம் காட்டுகிறீர்கள்.

அதற்கு பதிலாக நீங்கள் ஏன் அகிரா குரோசுவாவைப் போல படம் எடுக்கவில்லை?

நீங்கள் ஏன் ஒரு அடூர் கோபாலகிருஷ்ணனைப் போல படம் எடுக்கவில்லை? என்று உதாரணம் காட்டியிருந்தால் சரியாக இருந்திருக்கும்.

இன்றைக்குப் பல கேணையர்கள் கிளம்பியிருக்கிறார்கள். தமிழ் சினிமாவை உலகத் தரத்திற்கு உயர்த்திக் காட்டுவோம் என்று. ஆனால் உலகத் தரம் என்று ஒரு வெங்காயமும் கிடையாது. இங்குள்ள எம் மக்களின் யதார்த்தமான வாழ்க்கையைச் சித்தரிக்கும் படங்கள் வரும் போது,
உலகமே இதுதான் தரம் என்று உச்சரிக்கும் காலம் வந்தே தீரும்.
அதற்கான வல்லமை நம்மவர்களிடம் உண்டு.

நீங்கள் சொல்லும் பொழுது போக்கு என்பது போக்கிரிகளின் பொழுதுபோக்காகிவிடக் கூடாது.

தற்போது இலக்கியப் படைப்பாளிகள் அரசியலுக்குள்ளும்,
திரைப்படங்களுக்குள்ளும் வரத் துவங்கியுள்ளார்கள்.
இது அந்தத் துறைகளுக்குப் பெருமை சேர்க்குமா?

பெரியார் சொன்ன ஐந்து தீமைகளில் ஒன்று சினிமா.
இன்னொன்று ஓட்டுப் பொறுக்கும் அரசியல்.

ஒருவேளை நமது இலக்கியப் படைப்பாளிகள் சினிமாவுக்குள்ளும்,
சினிமாக்காரர்கள் அரசியலுக்குள்ளும் நுழைவது
பெரியாரின் கனவை நிறைவேற்றுவதற்காகக்கூட இருக்கக்கூடும்.
இதில் எது நடந்தாலும் எமக்கு மகிழ்ச்சியே.

ஈழப் பிரச்சினையைப் பற்றி அதிகம் பேசியும் எழுதியும் வருகிறீர்கள்.
ஈழத்தில் அமைதி திரும்புமா? அம்மக்கள் எப்போது நிம்மதியாக வாழ்வார்கள்?

இது ஒரு கிராம நிர்வாக அதிகாரி தேர்வுக்குப் போட்ட விண்ணப்பம் அன்று.
அல்லது ஒரு அரசு ஊழியன் தனது வருகைப் பதிவேட்டில் போட்ட கையெழுத்தும் அன்று. மாலையில் போகும்போது வாங்கிக் கொண்டு போகலாம் என்பதற்கு.

ஒரு விடுதலைப் போரின் காலகட்டத்தை எவனாலும் கணிக்க முடியாது.
தயவு செய்து இது போன்ற இந்தியத்தனமான கேள்விகளைத் தவிருங்கள்.

Freedom not to be given.

It should be taken…

ஆக விடுதலை என்பது பிச்சை கேட்டுப் பெறுவதல்ல.
போராடிப் பறித்தெடுப்பது.

உங்களின் இந்தியத்தனமான இந்தக் கேள்விக்கு நான் மிகவும் வருந்துகிறேன்.

சென்னை சங்கமம் நிகழ்ச்சி பற்றிய தங்களின் கருத்தென்ன?

சென்னை சங்கமம் நிகழ்ச்சியைப் பொறுத்தமட்டில்
நின்று கொண்டிருப்பதை விட சென்று கொண்டிருப்பது மேல்
என்பது எவ்வளவு சரியோ அப்படித்தான் நான் அதைப் பார்க்கிறேன்.
ஒன்றுமே இல்லாமல் இருந்த இடத்தில் நானூறு, ஐந்நூறு கலைஞர்களை
அழைத்து வந்து, அதுவும் சமூகத்தில் அங்கீகரிக்கப்படாத,
ஒதுக்கி வைக்கப்பட்ட அவர்களை வைத்து நடத்திய நிகழ்ச்சியை நிச்சயமாக வரவேற்க வேண்டும்.

சிலருக்கு இது எரிச்சலை உண்டு பண்ணியிருக்கு.
என்ன எரிச்சல் என்று எனக்குத் தெரியவில்லை.

குறிப்பாக ஞாநி போன்ற ஆசாமிகள் எதிர்ப்பது உண்மையிலே அவர்களுக்கு இன்னமும் சி.பி.எம் டோன் போகவில்லையோன்னு சந்தேகம் வலுக்கிறது.

அவருடைய உளறல்களில் சமீபத்திய பெரிய உளறல் 27 சதவிகித இட ஒதுக்கீட்டிற்காக நடந்த முழு அடைப்பைப் பற்றியது. முழு அடைப்பை ஞாநி கண்டிக்கிறார்.

தமிழ் நாட்டு மக்களின் ஒட்டுமொத்த எதிர்ப்பை முழு அடைப்பு நடத்தித்தான் காட்ட முடியும். இந்தக் கடையடைப்பில் யார் யார் பாதிக்கப்பட்டார்கள் என்று ஞாநி தேடிப் பிடிக்கிறார்.
27 சதவிகித இட ஒதுக்கீடு இல்லாமல் எத்தனை கோடி இளைஞர்கள்
பாதிக்கப்படுகிறார்கள் என்பதைப் பற்றி இவருக்குக் கவலை இல்லை.
ரஷ்யாவிலும், கியூபாவிலும் புரட்சி பண்ணியதால்தான் அங்கு விடிவு பிறந்தது. அகிம்சையை காங்கிரஸ்காரர்கள் கடைபிடிக்கிறார்களோ இல்லையோ ஆனால் இந்த So Called கம்யூனிஸ்டுகள் கடைபிடிக்கிறார்கள்.

பின் நவீனத்துவப் படைப்புகளைப் படித்திருக்கிறீர்களா?
அதைப்பற்றி உங்கள் கருத்தென்ன?

அதில் நான் ஒரு எல்.கே.ஜி.

ஏனென்றால் எனக்கு முன்னும் தெரியாது.
பின்னும் தெரியாது.

ஆனால் மண் தெரியும்.

தற்போதைய தமிழ் இலக்கியப் போக்கு எவ்வாறு உள்ளது?

தமிழகத்தில் பிள்ளைமார் ஜாதி, தேவர் ஜாதி, கவுண்டர் ஜாதி, முதலியார் ஜாதி எனச் சொரி பிடித்து அலைவது போல இலக்கியவியாதிகளுக்குள்ளும்
சுந்தரராமசாமி ஜாதி, மனுஷ்யபுத்திரன் ஜாதி எனப் பல ஜாதிகள் இருக்கின்றன.

என்னைப் போன்ற அனாதைகள் முதலில் சொன்ன ஜாதிகளிடமிருந்து தப்பிக்கலாமே ஒழிய, இரண்டாவது வகை ஜாதிகளிடமிருந்து தப்பித்துக் கொள்ள வழி தேடிக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.

இன்றைய தமிழ் சினிமாவின் போக்கு குறித்து…?

இன்றைய தமிழ் சினிமா
நேற்று….
கொழுந்தியாளைக் கைப்பற்றுவது எப்படி?
இப்படித்தான் என்பதற்கொரு ‘ஆசை’.
சகோதரன் மனைவியை அடைவது எப்படி?
என்பதற்கொரு ‘வாலி’.

இன்று….
இதிலெல்லாம் ஆணாதிக்கம்தான் தலை தூக்கி நிற்கிறது…
இதற்கு மரண அடி கொடுக்க வேண்டாமா பெண்ணியம்?
என்று எடுத்துத் தொலைத்ததுதான் மயிர்…சாரி ‘உயிர்’.

கொஞ்ச நாளில்
“கடைசிவரை தன் காதலியைக் கைப்பற்றுவதற்காகவே
உயிர்வாழ்ந்த ஒரு இளைஞனின் கதை” என்றொரு படம் வரக்கூடும்….
அந்தக் காதலியை அடைவதற்காக அவன் பட்ட பிரயத்தனங்கள்தான்
அதன் முக்கியமான கட்டங்கள்….
அது நிறைவேறக்கூடாது என்று அவன் தந்தையே
தடுப்பதுதான் அதன் திருப்பங்கள்….

இறுதியில்தான் தெரிகிறது…..
தான் காதலித்தது தனது அம்மாவை என்று.
இதற்கு இவர்கள்
“தமிழ் சினிமாவில் இதுவரை எதிலும் கண்டிராத ஒரு கிளைமேக்ஸ்”
என்று அறிவிக்கவும் கூடும்.
அந்தத் திரைப்படத்தின் பெயர் ஒருவேளை “இடிபஸ்” ஆகவும் இருக்கக்கூடும்.

நல்லவேளை இவர்களுக்கு இன்னும் இடிபஸ்ஸைத் தெரியவில்லை.

இன்று மக்களிடையே ஆங்கில மோகம் அதிகரித்து வருவது பற்றி….?

ஆங்கில மோகம் என்பதை விட,
ஆங்கில வெறி என்று சொல்லலாம்.
ஒரு மொழி என்பது அறிவாகாது.
இவர்களுடைய போக்குகளைப் பார்க்கும்போது
இவர்கள் தமிழர்கள்தானா என்ற சந்தேகம் வருகிறது.
இவனுக்கும் ஜனவரி 1 க்கும் என்ன சம்பந்தம்?
டிசம்பர் 31 ஆம் தேதி இரவு நல்லா தண்ணி போட்டுட்டு
‘ஹேப்பி நியூ இயர்’ங்கிறான்.

தமிழர் திருநாளான பொங்கல் அன்று
ஏதோ இழவு விழுந்தது மாதிரி இருக்கிறான்.
சித்திரை 1 ஆம் தேதி தமிழ் வருடப் பிறப்புங்கறான்.
சித்திரை ஒன்று ஒருபோதும் தமிழ் வருடப் பிறப்பாகாது.

குழந்தைகளைப் பள்ளியில் சேர்க்கும் போது இங்கிலீஸ் மீடியத்தில்தான் சேர்க்கிறான்.வேலை பார்க்கிற இடங்களில் ஆங்கிலத்தில்தான் பேசுகிறான்.
இவனுக மனசுல தான் ஒரு பிரிட்டிஷ்காரன் பேரன் என்று நினைக்கிறான்.

ஆங்கிலம் ஒரு நல்ல மொழிதான்.
அதைப் படிக்க வேண்டாம் என்று சொல்லுவதும் தப்புதான்.
அதற்காகத் தாய் மொழியைப் புறக்கணிக்கக் கூடாது.

கோவிலுக்குப் போனால் “இங்கு தமிழிலும் அர்ச்சனை செய்யப்படும்”
என்று போர்டு போட்டிருக்கிறார்கள்.
வெளி மாநிலத்திலோ, வெளிநாட்டிலோ இந்த மாதிரி போர்டு
மாட்டியிருந்தா சரிங்கலாம்.

தமிழ் நாட்டுல உள்ள கோவில்களில் “இங்கு தமிழிலும் அர்ச்சனை செய்யப்படும்” என்று போர்டு போட்டிருப்பது அவமானம் என்பது அவனுக்குப் புரியவில்லையே என்பதுதான் நமக்கு வருத்தமா இருக்கு.

உங்கள் மகனுக்கு சேகுவேரா என்று பெயர் வைத்திருக்கிறீர்கள் என்ன காரணம்?

1989 ஆம் வருடம் என் மகனுக்கு சேகுவேரா என்று பெயர் வைத்தோம்.
அப்போது இந்தப் பெயரைக் கேட்டு கிண்டல் பண்ணியவர்கள் அதிகம்.
சேகுவேரா என்பது எந்த சாதிக்குள்ளும், எந்த மதத்துக்குள்ளும் அடங்காது .
ஒரு நாட்டின் மாபெரும் விடுதலைப் போராட்டத் தியாகியின் பெயர்.
நானும் எனது தோழர்களும், துணைவியாரும் கலந்தாலோசித்துதான்
எங்கள் மகனுக்கு சேகுவேரா என்று பெயர் வைத்தோம்.

தொலைக்காட்சி ஊடகங்களின் செயல்பாட்டைப் பற்றித் தங்கள் பார்வை என்ன?

எமது மூதாதையர்களை சாதியின் பெயரால் அன்று கல்வி கற்க விடவில்லை.
போராடிப் படித்தார்கள்.
டாக்டர் அம்பேத்கரும் தந்தை பெரியாரும் போராட்டங்கள் நடத்தி
அனைவருக்கும் கல்வி பொது என்றாக்கினார்கள்.

ஆனால் இன்று சமூகத்தை ஒட்டுமொத்தமாக எப்படி நவீன முறையில் சீரழிக்கலாம் என்பதில் இவர்கள் கோடம்பாக்க சினிமாக்காரர்களுக்குச் சளைத்தவர்கள் அல்ல என்பது தெளிவாகத் தெரிகிறது.

டெலிபோன் மனித வாழ்வுக்கு அத்தியாவசியமானது.
ஆனால் அது இன்றைக்கு எதற்காகப் பயன்படுகிறது என்றால்..
இங்கிருந்து சென்னையில் உள்ள ஏதோ ஒரு தொலைக்காட்சி சேனலுக்கு
போன் போட்டு ‘எனக்கு அந்தப் படத்திலிருந்து இந்தப் பாடலை போடு’ என்று கேட்டு..
‘நான் இந்தப் பாடலை என் கொழுந்தியாளுக்கு டெடிகேட் பண்ணுறேன்’ என்கிறான்.
சினிமாப் பாடலை எழுதியது ஒருவன்…இசையமைத்தது ஒருவன்….
ஆனால் அந்தப் பாடலோடு எந்த விதத்திலும் சம்பந்தப்படாத இவன்
கொழுந்தியாளுக்கு ‘டெடிகேட்’ பண்ணுவானாம்…என்ன கண்றாவி இது….

வீட்டுக்குள்ளிருந்து படிக்கிறாயா?
நான் இருபத்தி நாலு மணிநேரமும்
தொலைக்காட்சி ஊடகம் வழியாக உன் வீட்டுக்குள் வருவேன்…
முடிந்தால் படி.

வெளியில் வந்தால்…
கோடம்பாக்கத்துக்காரர்கள்
‘நான் இப்படித்தான் தரங்கெட்ட படங்களை எடுத்துத் திரையிடுவேன்.
தப்பித்துக் கொண்டு படிக்க முடிந்தால் படி.’

‘இதையெல்லாம் வேண்டாமென்று நீ சுடுகாட்டுக்கே போனாலும்
அங்கேயும் ஒரு எப்.எம் ரேடியோ வழியாக வந்து
உன் படிப்பைக் கெடுப்பேன்’ என்கிறார்கள்.

தமிழர்களே இவர்களைப் பற்றித் தெளிவாகப் புரிந்து
சற்று விலகியே இருக்கக் கற்றுக் கொண்டு
உங்கள் குழந்தைகளுக்குக் கல்வி அறிவு புகட்டுங்கள்.

தற்போது என்ன படித்துக் கொண்டிருக்கிறீர்கள்?
அடுத்து என்ன புத்தகம் வெளிவர உள்ளது?

தமிழர்களுக்குத் தெரியாத ஒருவருடைய பெயரைச் சொல்லி…
‘அவருடைய நாவலைத்தான் நான் மறுவாசிப்பு பண்ணிக் கொண்டிருக்கிறேன்’ என்றெல்லாம் நான் பொய் சொல்ல விரும்பவில்லை.
நான் சின்ன வயதில் படித்த முத்து காமிக்ஸ்,
இரும்புக்கை மாயாவி…
இது போன்ற புத்தகங்களைத்தான் படித்துக் கொண்டிருக்கிறேன்.

அடுத்து “பெண்ணொன்று கண்டேன்” என்கிற புத்தகம் வெளிவரவுள்ளது.

பெண் கவிஞர்கள் எழுதும் உடல்மொழிக் கவிதைகள் பற்றி உங்கள் பார்வை என்ன?

பெண்ணியக் கவிஞர்களின் கவிதைகள் குறித்து ஆணாகிய நான் சொல்வதற்கு அருகதையோ, உரிமையோ கிடையாது.
அது அவர்களது உரிமை.

அதேபோல ஆண் கவிஞர்கள் உடல் குறித்தும்,
அவர்களது சுயசரிதம் குறித்தும்
எனக்கு எந்தவித மறுப்புகளும் இல்லை.
அதுவும் அவர்களது உரிமை.

ஆனால்….
தங்களது உடல் இன்ப துன்பங்கள் தாண்டி
மலம் வழித்துக் கொண்டிருக்கிறது ஒரு இனம்.
அது பற்றித்தான் எனது அக்கறை…எனது கவலை.

நன்றி: நக்கீரனின் “இனிய உதயம்.” மே 2007. சந்திப்பு: சிவதாணு.

திரை – புலம்பல் பக்கம்

thirai1.jpg திரை

Perfection is Death – ஓஷோ.

அப்போது எனக்குத் தெரியாது,இன்னொரு சக உயிரை இழிவுபடுத்துகிறேன் என்பது… என்னைச் சுற்றியிருந்த சகல சூழலும் அதை நியாயமெனவே கூறின. அத்தகைய பாடல்களை அவர்களை நோக்கிப் பாடுவதற்காக அவமானப்பட்டதில்லை நான். அவர்கள் அனைவருமே அவமானப்படுத்துதல்களுக்கும்,இழிவுகளுக்கும் பொருத்தமானவர்கள்தான் என்கிற வகையில் அமைதி காத்தது சுற்றுப்புறம்.

கல்லூரி நாட்களில் அவர்களை போலவே பேசுவது…

‘பொழுதோட கோழி கூவுற வேளை’ என்று பாடுவது…

சில அடிகள் நகர்ந்ததும் ‘ஒம்போது’ என்று குரல் கொடுப்பது…

ஆனால் நாய்களோடு மல்லுக்கு நிற்பதை எப்போதும் விரும்பியதில்லை அந்த மனிதர்கள். உடல் ரீதியாக உருக்குலைந்து போன அந்த மனிதர்களைக் கண்ணியக்குறைவாகவும், மனித நாகரீகமற்றும் நடத்த என்னைத் தூண்டியது எது என எண்ணிப் பார்க்கிறேன். நான் பார்த்த திரைப்படங்கள்… படித்த பத்திரிகைகள்… பழகிய ‘மனிதர்கள்’…என எல்லாவற்றுக்குள்ளும் அந்தக்கேவலம் ஒளிந்து கொண்டிருந்தது.

இவற்றில் முதலாவதாக முன் நிற்பது சினிமாதான் . அது மட்டும் அன்றிலிருந்து இன்றுவரை மாறவேயில்லை. பழைய பாலாபிஷேகம்,ஒரு தலை ராகத்திலிருந்து நேற்றைய விவேக் படம் வரைக்கும் இந்த ஜென்மங்கள் திருந்தவேயில்லை. மனிதத் திரளில் ஆண்பாலுக்கும் பெண்பாலுக்கும் அடுத்ததாய் மூன்றாவது பாலான அவர்கள் குறித்து அக்கறை இல்லாவிடினும் அவமானப்படுத்தாமலாவது இருக்கலாம் இவர்கள்.

‘மதம் குறித்தோ,சாதி குறித்தோ வசனங்கள் வந்துவிடக் கூடாது… ஆபாசக் காட்சிகள் இடம் பெற்றுவிடக் கூடாது…’ என்பதற்காகக் கண்களில் விளக்கெண்ணெய் விட்டுக்கொண்டு கத்தரிக்கோலுடன் சுற்றுவதாக நம்பப்படும் தணிக்கைக் குழு,அலிகள் இடம்பெறும் காட்சிகளின் போது மட்டும் ஒட்டுமொத்தமாய்த் தற்கொலை செய்து கொள்கிறது.

அநேக விஷயங்களில் மாறுபாடுகள் இருப்பினும், அலிகளை மனிதநேயம் மிக்கவர்களாகவும் கண்ணியமானவர்களாகவும் காட்டியிருந்தார் மணிரத்னம் தனது பம்பாயில்.

பெண்களுக்கான இட ஒதுக்கீடு குறித்த விவாதங்கள் நாடெங்கும் நடந்த வேளையில்… ‘ஆசியாவின் அறிவு ஜீவி’யான ஒரு ‘பத்திரிக்கையாளர்’ திருவாய் மலர்ந்தார்… ‘கொஞ்சம் விட்டால் அலிகளுக்கும்கூட இட ஒதுக்கீடு கேட்பீர்கள் போலிருக்கிறதே?’ என்று. மிக புத்திசாலித்தனமாகக் கேட்பதாகக் கருதிக் கொண்டு கேணத்தனமாகக் கேட்ட கேள்வி அது என்பது இருக்கட்டும் ஒரு புறம். ஆனால்,உண்மையிலேயே இந்த அரசு அதிகாரத்தில் அலிகளுக்கும் இடஒதுக்கீடு இருந்தே தீர வேண்டும் என்பதுதான் சரி. சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் பின்னுக்கு தள்ளப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் ஒதுக்கீடு இவர்களுக்கும் அளிக்கப்பட்டேயாகவேண்டும் என்பதுதான் நியாயமானது. அரசுத் துறையிலும், தனியார் துறையிலும் மூன்றாம் பாலருக்கான ஒதுக்கீடு அளிப்பதுதான் நாமும் மனிதர்கள் என்பதை ஊருக்குச் சொல்லக் கிடைத்த ஒரே வாய்ப்பு.

மனித இனத்தின் மற்றொரு பிரிவினரான இவர்கள் ரேஷன் கார்டு தொடங்கி, எந்த விண்ணப்பப் படிவத்தையும் இட்டு நிரப்ப அனுமதி மறுக்கப்பட்டவர்கள். ஆண்பால்-பெண்பால் இவற்றுக்கு அடுத்தாக மூன்றாம் பால் என இடம் ஒதுக்கப்பட வேண்டும் விண்ணப்பப் படிவங்களில்.

அதிலும் படிவங்களுக்கு முன்னதாக நமது இதயங்களில்.

இந்த விஷயத்தில் தென்னகத்தை விடவும், வடக்கு ஓரளவு இம்மக்களைப் பண்போடு நடத்துவதாகவே தோன்றுகிறது எனக்கு. அவர்களது வீட்டு விருந்துகளில் பங்கேற்கச் செய்வதிலிருந்து, மாநகராட்சித் தலைவராகத் தேர்ந்தெடுப்பது வரைக்கும் மூன்றாம் பாலரை ஓரளவுக்குப் புரிந்து கொண்டிருக்கிறார்கள் அவர்கள்.

மதத்தால் ஒடுக்கப்பட்டவர்கள்-நாடு கோருகிறார்கள்….

மொழியால் ஒடுக்கப்பட்டவர்கள்-நாடு கோருகிறார்கள்….

சாதியால் ஒடுக்கப்பட்டவர்கள்-மாநிலம் கோருகிறார்கள்….

ஆனால் இந்த மனிதர்கள் கோருவது நாடோ…

மாநிலமோ…

மாவட்டமோ அல்ல…

மனிதம்.

அலிகள் என்னும் மனிதர் குறித்து ‘நிறப்பிரிகை’ இதழ் முன்பொரு முறை தனது கவலையையும், அக்கறையையும் பதிவு செய்திருந்தது. அதிலொருவர் இப்படிச் சொல்லியிருந்தார். ‘வாழ்க்கைல நாங்க காண்ற சுகமே ஒண்ணே ஒண்ணுதான். நாங்க ஆடறோம், பாடறோம், எவ்வளவோ பேரு எங்களை ரசிக்கிறாங்க. ஒரு தியேட்டர்ல படம் பார்க்கப் போறாங்க. ஃபிலிம் ஓடற வரைக்கும் படத்தப் பார்க்குறாங்க. படம் ஓடி முடிந்த பிறகு வெறும் திரையை யாராவது பார்க்குறாங்களா? அந்தத் திரைதான் நாங்க.”

திரை.

ஆம்.

‘வெறும் திரை’.

ஆனால் அந்த வெறும் திரையையும் அர்த்தமுள்ளதாக்க முடியும்…

நாம் மனதுவைத்தால்……

தே.தி.சேரன் ஐயா சமூகத்துக்கு- கிளைமேக்ஸ்

சரி சரி நீ தண்ணீ குடி..ன்னேன்.

“தண்ணியும் வேண்டாம்… ஒரு மண்ணும் வேண்டாம். உன்ன ஒரே ஒரு கேள்வி கேட்கிறேன். அதுக்கு மட்டும் பதில் சொல்லு”ன்னான்

கேளுன்னேன்.

“பள்ளிக்கூடத்துல எதுக்காக சாதி கேக்கறாங்க? அதுக்குக் காரணத்த சொல்லு.”

எதுக்கோ…அதெல்லாந் தெரியாது எனக்கு. நாம ஜாதி இல்லேன்னுதானே சொல்றோம்…அப்புறம் எதுக்கு பள்ளிகோடத்துல மட்டும் ஜாதி கேக்கறாங்க…?ன்னேன்.

“முட்டாளே…ஒண்ணே ஒண்ணப் புரிஞ்சுக்க. எல்லாரும் ஒளர்ற மாதிரி நீயும் ஒளறாதே….
பள்ளிக்கூடத்துல சாதி கேக்கறதுக்குக் காரணம்…சாதிச் சங்கம் வெச்சுக் குடுக்கறதுக்காக இல்ல.

பத்துப் புள்ளைக கவுண்டர்ல சேந்தாச்சு…
நீங்க கவுண்டர் சங்கம் ஆரம்பீங்க…

பதினேழு புள்ளைக தேவேந்திரர்கள்ல சேந்தாச்சு…
நீங்க தேவேந்திர சங்கம் வையுங்கன்னு….
சாதிச் சங்கம் வெச்சுக் குடுக்கறதுக்காக கேக்கல….”

அப்பறம் எதுக்கு வீணா சாதி….

“நிறுத்து…கொஞ்சம் பேச விடு. பள்ளிகூடத்துல சேர்றப்ப மட்டும் சாதி கேக்கறதுக்குக் காரணம்…
நீ மத்தவங்களால ஒடுக்கப்பட்ட சாதியா….
இல்ல மத்தவங்கள ஒடுக்கற சாதியான்னு பிரிச்சுப் பார்த்து இட ஒதுக்கீடு செய்யறதுக்குத்தான்.

அம்பது அறுபது வருசத்துக்கு முன்னால 97 சதவீதம் பேர் இருந்த நம்ம தாத்தனும் பாட்டனும் மூணு சதவீதத்து ஆளுககிட்ட ‘சாதி வேண்டாஞ்சாமி…எங்க கொளந்தைகளை படிக்க உடுங்க’ன்னு கால்ல உழுந்து கெஞ்சுனாங்க….
அப்ப அவங்க…’ஜாதி இருக்குடா…போயி உன் குலத் தொழில பாரு’ன்னு தெனாவெட்டாச் சொன்னாங்க.
எப்படியோ நம்ம பெருசுக கெஞ்சிக் கூத்தாடி….
அதுவும் முடியாம வாதாடி….
அப்புறம் அதுவும் முடியாம போராடி….
இட ஒதுக்கீடு வாங்கி நம்ம புள்ளைகள பள்ளிக்கூடம் அனுப்ப ஆரம்பிச்சாங்க.
இப்பத்தான் நம்மளோட மொதல் தலமுறையே காலேஜ்ஜப் பாத்திருக்கு.
அத பொறுத்துக்க முடியாம அன்னிக்கு ‘ஜாதி இருக்குடா’னு சண்டித்தனம் பண்ணுன அதே ஆளுங்கதான் இன்னைக்கு ‘ஜாதியே இல்லே’ங்கறாங்க”.

அவங்களே திருந்தி வந்திருக்காங்க. அது நல்லதுதானே. அப்ப நாமளும் இல்லேன்னுட்டு கை கோத்துகிட்டுப் போக வேண்டீதுதானே…?

“திருந்துனா சந்தோசந்தான் புண்ணாக்கு…. ஆனா நடவடிக்கைகளப் பாத்தா அப்படித் தெரியலயே…”ங்கறான் த.தி.த.

எப்புடீன்னேன்.

“கல்வியிலும், வேலையிலும் ஜாதி வேண்டாங்கற இவுங்க இன்னும் கோயில்ல அவுங்க மட்டும்தான் குருக்களா இருக்கணும்….
சங்கராச்சாரியாரா அவுங்க மட்டும்தான் வரணும்…இதுகள்ல மட்டும் அவுங்களுக்கு தனீ இடஒதுக்கீடு இருக்கணும்கறாங்களே…
இது மட்டும் எந்த விதத்துல நியாயம்….?”ன்னு உருக்கமாக் கேட்டான்.

“ஆமா நீ பரிட்சை எழுதுனப்ப ‘தமிழ்நாட்டோட முதல்வர் அலாவுதீன் கில்ஜி’ன்னா எழுதுனே…?”ன்னான்.

இதென்னடாது வம்பாயிருக்கு. நான் கலைஞர்னுதானே எழுதுனேன்.

“அப்புறம் என்னடா தகுதி திறமை….?
பிற்படுத்தப்பட்டவனா இருந்தாலும் சரி….
தாழ்த்தப்பட்டவனா இருந்தாலும் சரி….
சரியா பதிலெழுதினாத்தான் மார்க்கு.

என்னமோ நீங்க எல்லாம் ‘இந்தியாவின் தலைநகர் எது?’ங்கறதுக்கு
‘கஜகஜஸ்தான்’ன்னு எழுதுன மாதிரியும்…
அவுங்க மட்டும் சரியா ‘டில்லி’ன்னு எழுதீட்டு வேலை இல்லாமப் போயிட்ட மாதிரியும் கதை திரிக்கறாங்களே…
உங்குளுக்கெல்லாம் ஒறைக்குதா புத்திக்கு?

மொத்தத்தில் எங்களுக்கும் சாதி கெடையாது.
மொதல்ல கோயில்ல சாதி கேக்கறத நிறுத்தச் சொல்.
நான் நிறுத்தறேன்….

மொதல்ல சங்கரமடத்துல சாதி கேக்கறத நிறுத்தச் சொல்.
நான் நிறுத்தறேன்….”னு நாயகன் கமல் மாதிரி அவதாரம் எடுத்துட்டான் நம்ம தகுதி திறமையத்த தண்டபாணி.

அட இதுவும் நியாயந்தானேன்னு படுதுங்க  சேரன்.
ஆனாலும் நீங்க சொன்ன பொருளாதார ரீதீல ஒதுக்கீடு குடுத்தா நல்லதுதானே?ன்னு கேட்டேன்.

ஆனா அதையும் அவன் விட்டுவைக்கல.
“யோவ் இட ஒதுக்கீடுங்கறது பொருளாதாரத்த வெச்சு கணிக்கறதில்ல…
சமூக இழிவை கணக்குல வெச்சு கணிக்கறது. பொருளாதாரம்கறதே நெலையத்தது. .
இன்னைக்கு ஓட்டாண்டியா இருக்கறவன் நாளைக்கு ஒசரத்துக்குப் போயிடுவான்.
நாளைக்கு… ஒசரத்துல இருக்கறவன் அடுத்த நாள் தெருவுல நிற்பான்.
எப்படி நின்னாலும் சமூக ரீதியா அவன் மதிக்கப்படறானா இல்லையாங்கறதுதான் ரொம்பவும் முக்கியம்.

ஆந்திராவுல ஆறு மாசத்துக்கு முன்னாடி ஓகோன்னு இருந்த விவசாயிக ‘ஹீலியோத்தீஸ்’ன்னு
ஒரு புழு பயிர்களத் தாக்குனதால தற்கொலையே பண்ணிகிட்டாங்கய்யா.
நேற்று லட்சாதிபதியா இருந்தவன் இன்னைக்கு பிச்சாதிபதியாக்கூட இல்ல…
‘மேலயே’ டிக்கட் வாங்கீட்டு போய் சேர்ந்துட்டாங்க….
இப்ப புரியுதா…பொருளாதாரம்கறதே நிலையத்ததுன்னு நாங்க சொல்றது.

இந்த நாட்டோட சனாதிபதியா நாராயணன் வந்ததும் திருப்பதி தேவஸ்தானத்துல ஒரு தீர்மானம் போட்டாங்களே அது பத்தி தெரியுமா…?”ன்னான்.

வழக்கம் போலத் தெரியாதுன்னேன்.

” ‘இனிமேல் சனாதிபதியோ யாரோ…யாரா இருந்தாலும் இனி தேவஸ்தானம் முடிவு பண்றவங்களுக்கு மட்டும்தான்
பூரண கும்ப மரியாதை….சனாதிபதிங்கறதுக்காக எல்லாம் பூரண கும்ப மரியாதை குடுக்க முடியாது’ன்னு…சொல்லுது அந்தத் தீர்மானம்.

இப்பப் புரியுதா உனக்கு சமூக ரீதியான இழிவுன்னா என்னான்னு….?”

இதெல்லாம் எனக்கு இதுவரைக்கும் தெரியலயேன்னு தலையச் சொறிஞ்சேன்.

“உன்னமாதிரி ஆளுகளுக்கெல்லாம் புரிஞ்சிருந்தா…அவுங்க இப்படி தெனாவெட்டாப் படமெடுப்பாங்களா…
எல்லாம் நேரம்.

இந்த வருசம் உங்க சேரனுக்கு இட ஒதுக்கீடு இல்லன்னு வெச்சுக்க…
அடுத்த ஆறு மாசத்துல இதே மாதிரி ஒரு படம் எடுத்து டப்பாக்குள்ள போச்சுன்னா கேர் ஆப் பிளாட்பாரம்ன்னு அவுரே இட ஒதுக்கீடுக்கு அப்ளிக்கேசன் போட வேண்டியதுதான் ஞாபகம் வெச்சுக்கோ.”

முடிவா என்னதான் சொல்றே…

“மொதல்ல அறிவழகன், தமிழரசன்னு பேர் வெச்சவன் எல்லாம் கடத்தல்காரன், கொலகாரன்னு படம் எடுத்து தமிழர்கள இழிவு படுத்தறத கோடம்பாக்கத்துக்காரனுக நிறுத்தணும். இல்லேன்னா எவனாவது நெஜமாவே உங்களக் கடத்தீறப்போறான்…..

புண்ணாக்கு…. வட இந்திய தரம்சந்த் லுங்கட் குடுத்த பணத்துல தமிழர்களுக்கு எதிரா குரைச்சிருக்காரே உங்க சேரன்…
அத நெனச்சாத்தான் மனசுக்கு கஷ்டமாயிருக்கு.

அடுத்தது நீ இந்தியனோ…ஆப்பிரிக்கனோ எக்கேடோ கெட்டுப்போ…
ஆனா தமிழனுகள இளிச்சவாயனுகளா சித்தரிக்கறத நிறுத்தணும்.
இந்தியாவையே தூக்கி நிறுத்தறோம்கற போர்வையில
தமிழையும்…தமிழ்நாட்டையும்…தமிழர்களையும் கேவலப்படுத்தறத கைவிடணும்.

சாதிய எந்த அயோக்கியனுக இந்த மண்ணுல உருவாக்குனாங்க என்கிற உண்மை புரியாம எங்க சனங்களே சின்ன மீனை பெரிய மீனு முழுங்கற கதையா…ஒருத்தனை ஒருத்தன் வெட்டிகிட்டு செத்துகிட்டு இருக்காங்களேன்னு ரத்தக் கண்ணீர் வடிச்சுகிட்டு இருக்கோம்.
இந்த நேரத்துல எரியற ஊட்டுல புடுங்கறது லாபம்கற மாதிரி இட ஒதுக்கீடே வேண்டாங்கறீங்க.

இதுக்கு நீங்க மட்டுமில்ல உங்களோட இந்த முட்டாத்தனத்துக்கு முட்டுக் குடுக்கற அத்தனை பேரும் ஒரு நாளு பதில் சொல்லித்தான் தீரணும்.

வந்தே மாதரம்னு சொல்லி…வந்தே ஏமாத்தற வேலை எல்லாம் தமிழர்ககிட்ட வெச்சுக்க வேண்டாம்.

பகல்லயே பசுமாடு தெரியாதவன்
இருட்டுல எருமையைத் தேடுன மாதிரி….
திராவிடர்களோட வரலாறே தெரியாம
இந்திய ‘விடுதலை’ய ஆராய்ச்சி பண்றது நல்ல தமாசு.

சேரன் மாதிரி ஆளுங்க
வரலாறு படைக்கட்டும் தப்பில்ல….
ஆனா அதுக்கு முன்னால
வரலாற்றைப் படிக்கட்டும்.

எச்சரிக்கையுடன்,
பாமரன்.

தேசபக்தத் திலகம் சேரன் ஐயா சமூகத்துக்கு -3

சென்ற கட்டுரையின் தொடர்ச்சி

திடீன்னு கேட்டதால தடுமாறிட்டேன். புரியலையேன்னேன்.

“சும்மா சொல்லு…சிவப்புச் சாயம் வெளுத்துப் போனா…எந்த நெறத்துல இருக்கும்…..?”

யோசிச்சு…யோசிச்சு….
‘காவி’தான் தண்டபாணீன்னேன்.

“கரெக்ட் புண்ணாக்கு…அதுதான் உங்க சேரன் நேசிக்கிற நிறம். அந்தக் காவிக் கொடிக்காரர்களோட பிரதிநிதிதான் சேரன்.
படத்துல ‘கோட்டையூர்’ல குண்டுவெடிப்புகளுக்கு முன்னமே கத்திக் குத்துல பலியான பத்தொன்பது
அப்பாவி உயிர்களப் பத்தி வாயே திறக்காமல் இருப்பதும்…
குங்குமத்த கீழிருந்து மேலா நெத்தீல வெச்சுகிட்டு முதல்வர கடத்தப் போறதும்….
தாடி வெச்ச ஆள கூண்டுக்குள்ள வெச்சு காவி டிரஸ் போட்டுட்டு ‘கனவினைக் கேளம்மா’ன்னு பாடறாங்களே…
அப்ப வெளுக்குது உங்காளோட சாயம். உன்னிப்பா பாத்தீன்னா புரியும் உனக்கு”ங்கறான் த.தி.தண்டபாணி.

ஏனுங்க ‘புரட்சித் தளபதி’ இது நீங்க உங்கள அறியாமச் செஞ்ச தவறா…இல்ல எதேச்சையா நடந்துட்டுதா…?
மக்களோட கவலைகள படமா எடுத்துத் தர்ற நீங்க இப்படி ஒரு பேர வாங்கலாமா?

“சரி புண்ணாக்கு…இவங்க ஒரு முதல்வர சொட்டையாக காட்டறதும்…
‘உன் தலை மாதிரி வறண்டு கிடக்கு’ன்னு வசனம் பேசறதும்….
தமிழக முன்னேற்றக் கழகம்னு…அதான் இங்கிலீசுல T.M.K னு சொல்றதும்…
யாரைச் சொல்றாங்கன்னு பால் குடிக்கற கொழந்தை கூட  சொல்லும்.
இது மாதிரி கடைஞ்செடுத்த அறிவு நாணயக் குறைவான விசயம் வேற எதுவும் இருக்க முடியாது.”

அது சரி தண்டபாணி…இதுக்கு இப்படி கோபப்படறீயே அப்ப நீயும் T.M.K வா?ன்னேன்.

“நான் எந்த எழவும் இல்ல. நீ சொல்ற கட்சி கிட்டயும் அதன் தலைவர் கிட்டயும் அநேக கருத்து மாறுபாடுக எனக்கும் இருக்கு. ஓட்டு அரசியலுக்கும் எனக்கும் ஒட்டும் இல்ல,  உறவும் இல்ல.  ஆனா அவங்களைப் பத்தி திட்டறதுக்கு இந்தக் கோடம்பாக்கத்துக்காரனுகளுக்கு
யோக்கியதை கிடையாதுன்னுதான் சொல்ல வர்றேன்…..”ன்னான் தகுதி திறமையத்த தண்டபாணி.

ஏன் அவுங்களும் இந்த நாட்டு குடிமகனுகதானே தண்டபாணி…?ன்னதுதான் தாமதம். கடுப்பாயிட்டான் த.தி.த.

“யோவ் புண்ணாக்கு இவுங்க பேங்குல பணம் வாங்கி ஏப்பம் உட்டா அத்தனை கோடியையும் தள்ளுபடி பண்ண அதே முதல்வர் வேணும்….
இவனுகளப் பத்தி நடிகன் கதை…நடிகை கதைன்னு எவனாவது எழுதுனா அதத் தடை பண்றதுக்கு அதே முதல்வர் வேணும்….
நடிகர் சங்கக் கடனை மாநில அரசு தள்ளுபடி பண்ணுனது போக
மிச்சமுள்ள கடனையும் மத்திய அரசுகிட்ட சொல்லி தள்ளுபடி பண்ண அதே முதல்வர் வேணும்…
இதுக்கெல்லாம் அவுங்க வேணும்…ஆனா இந்தக் கோடம்பாக்கத்து இந்தியனுக மட்டும்
“எங்கியோ போற மாரியாத்தா…எம்மேல வந்து ஏறாத்தா”ங்கிற கதையா
தமிழ் நாட்டு முதல்வர ‘வறண்டு கிடக்கு’…அது இதுன்னு அளப்பானுக அதக் கேட்டுட்டு இருக்கணுமா…?
சோத்துக்கில்லாத சனங்க விமர்சிக்கட்டும். சரின்னு ஒத்துக்கலாம்.
ஆனா…துரோகிகள தியாகிகள்னு காட்டுற சோரம் போற சேரன்கள் சொல்லக்கூடாது அத. புரியுதா…?

முதல்வரக் கிண்டல் பண்ற மாதிரி நாலு வருசத்துக்கு முந்தி படம் எடுத்திருந்தா…
இல்லயில்ல… எடுக்கற மாதிரி யோசிச்சிருந்தாக்கூட அவுங்க வீட்டுக்கு ஆட்டோ உட்ருப்பானுக.”

ரொம்ப படபடப்பாயிட்டான் த.தி.தண்டபாணி.

சரி கொஞ்சம் பேச்ச மாத்தலாம்னு …சூடா என்னாவது சாப்பிடலாமா?ன்னேன்.

“நான் ஏற்கனவே சூடா இருக்கேன்…வேண்ணா ஒரு இளநீ சாப்புடலாம் வா”ன்னு வெளியே கூட்டீட்டு வந்தான்.

இங்க பாரு தண்டபாணி…எனக்கு உன்ன மாதிரி எல்லாம் யோசிக்கத் தெரியாது.
நான் சினிமாவ சினிமாவாப் பாப்பேன்…அவ்வளவுதான்.
உன்ன மாதிரி அக்கு வேறா ஆணி வேறா அலசுறதெல்லாம் எனக்குப் புரிபடாத விஷயங்க.
அந்தளவுக்குத் தகுதி, திறமையெல்லாம் எனக்குக் கெடையாதுன்னு சொன்னதுதான் தாமதம்….

‘ஆகா வந்திருச்சு ஆசையில் ஓடி வந்தேன்’னு குதிக்க ஆரம்பிச்சுட்டான் த.தி.தண்டபாணி.

“கடைசியா என்ன சொன்னே….அதத் திருப்பிச் சொல்லு…”ன்னான் படு குஷியா.

இப்ப எதுக்கு அது?ன்னேன்

“சும்மா சொல்லு..கடைசியா என்ன சொன்னே சொல்லு கமான்”ன்னான்.

‘அந்தளவுக்கு தகுதி திறமை எல்லாம் எனக்குக் கெடையாது’ன்னு சொன்னேன்.

“அப்புடிப் போடு அருவாள. தேசிய கீதத்துல அந்த முதலமைச்சர் ‘திருந்தி ‘ கார்ல வர்றப்போ….
அவர் மேடை ஏறிப் பேசற மாதிரி நெனச்சுப் பாக்கறாரே…அது உனக்கு ஞாபகம் இருக்கா…?”ன்னான்.

ஓ நல்லா ஞாபகம் இருக்கே. அதான் படத்துலயே உருப்படியா  இருந்த நல்ல விஷயம்ன்னேன்.

“வெங்காயம்…படத்துலயே வெச்சு படு கேவலமான இடமே அதுதான்”னான் த.தி.த.

நான் தான் ஏற்கெனவே சொன்னனில்ல. நாம ஒண்ணச் சொன்னா தண்டபாணி வேறொண்ணச் சொல்லுவான்னு.
இதேதான் அவங்கூடப் பிரச்சனை.

என்ன தண்டபாணி அதுலயும் ஏதாவது கொறை இருக்குன்னு ரீல் உடப் போறியான்னேன்.

“புண்ணாக்கு உங்காளு உட்ட ரீலெல்லாம் இந்த எடத்துலதான் அம்பலமாகுது.
சினிமா பாசைல சொன்னா…படத்தோட ‘நாட்டே’ அங்கதான் இருக்கு.
அந்த முடிச்ச அவுத்தாலே போதும்…உங்க சேரன் அம்மணமா நிப்பாரு…
சரி நீ மொதல்ல…’திருந்துன’ மொதலமைச்சர் பேசற கடைசி வரிகளைச் சொல்லு…கமான்…கமான்…”கறான்.

‘உழைக்காத மந்திரிகளை வீட்டுக்கு அனுப்புவோம்’.

“சரி அடுத்து….”

‘மந்திரிகள் மட்டுமில்லே முதல்வரும் சொத்துக் கணக்கை காட்டணும்’

“ரொம்பச் சரி அடுத்தது….”

‘சொந்தத் தொகுதியில தங்கியிருந்து வேல செய்யணும்’

“அடுத்தது…”

‘கல்லூரிகளில் நன்கொடை வாங்கத் தடை’

“ரொம்ப ரொம்பச் சரி. அதுக்கடுத்தது….”

‘பள்ளிகளில் சாதிச் சான்றிதழ் கேட்பதைத் தடை செ…ய்…வோ…ம்…’

“நிறுத்து…நிறுத்து…இங்கதான் உங்க சேரனோட சாயம் வெளுக்குது…
எப்படி…எப்படி…பள்ளிகள்ல சாதிச் சான்றிதழ் கேட்பதைத் தடை செய்வாங்களாமா….
சபாஷ் இத விட கேணத்தனமும், அயோக்கியத்தனமும் வேற இருக்கவே முடியாது புண்ணாக்கு”ன்னான்.

இதுவரைக்கும் பொறுமையாய் இருந்தேன் தண்டபாணி. ஆனா இத மட்டும் என்னால சகிச்சுக்க முடியாது.
ஏதோ இதுவரைக்கும் சொன்னே…அதுல ஓரளவுக்காவது நாயம் இருந்துச்சு.
அவனவன் சாதி வெறில அடிச்சுகிட்டு சாகறான். நீ என்னடான்னா பள்ளிக்கூடத்துல சாதி கேட்கக் கூடாதுங்கறதையே தப்புங்கறயா…?
நீயெல்லாம் ஒரு தேசத் துரோகிடா….’அகிம்சாமூர்த்தி காந்தி வாழ்க’ன்னு சொல்லீட்டே….உட்டேன் ஒரு குத்து மூஞ்சில…
உட்ட குத்துல அப்புடியே டீக்கடை பெஞ்சுல சாய்ஞ்சுட்டான் த.தி.தண்டபாணி.
நீரும் நெருப்பும் எம்.ஜி.ஆர். படத்துல வர்ற மாதிரி உதட்டோரத்துல லேசா ரத்தம்.
அதப்பாத்ததும் எனக்கே கொஞ்சம் வெசனமாப் போச்சு. முருகன் பேக்கரி மாணிக்கத்துகிட்ட கொஞ்சம் தண்ணி வாங்கிக் குடுத்து…
குடி தண்டபாணின்னேன்.

குடிச்சுகிட்டே சொன்னான் “இதத்தான்யா செஞ்சிருக்காரு உங்க சேரன். நம்ம கைய வெச்சே நம்ம கண்ணக் குத்தற வேலைய…..”ன்னான்.

(கிளைமேக்ஸ்……… நாளை)

தேசபக்தத் திலகம் சேரன் ஐயா சமூகத்துக்கு -2

முதல் பாகத்தின் தொடர்ச்சி…

நீங்க ரசிகர் மன்றமே வேண்டாம்னு சொல்லீட்டு ‘காந்தி, காமராசருக்கு அடுத்தபடி ரஜினிதான்’ன்னு சொன்னமாதிரி…
“போயி உங்க அப்பன் ஆத்தாவப் பாருங்கடா”ன்னு முரளி வசனம் பேசறப்ப பாத்து ஒரு இந்தியன் ‘இளம் புயல் முரளி வாழ்க’ன்னு தியேட்டர்ல கத்தறான். எனக்கு மகா கடுப்பாயிடுச்சு.

சரியான ஆசுபத்திரி இல்லாம சனங்க அலையறதும்…நெற மாச புள்ளத்தாச்சி பஸ்சுலயே உசுர உடறதும்… பாக்கறப்ப உண்மையிலேயே உங்களுக்கு உள்ள நல்ல மனசு புரியுதுங்க. அதுக்குக் காரணமான
அரசாங்கத்தைத் தட்டிக் கேக்கணும்னு இளைஞர்கள் பொங்கி எழறதும் இந்தக் காலத்துக்குத் தேவையான ஒன்ணுங்க.

ஆனா…அதுக்காக நீங்க சொல்ற ‘தீர்வு’ இருக்கே…அதுதாங்க கொஞ்சம் ஒதைக்குது. படத்துல பத்து வெள்ளக்காரன “அகிம்சையாச்” சுட்ட தியாகி எத்திராசு…அதான் நாகேசு…கொழப்புன மாதிரி உங்க கதைய வெவாதிக்கறப்போ உங்கள எவனோ கொழப்பீட்டான் போலிருக்கு.

ஏனுங்க சேரன்…ஒரு எம்.எல்.ஏ.வைக் கடத்துனா ஒரு ஊரு செரியாகும்…
ஒரு எம்.பி.யைக் கடத்துனா ஒரு மாவட்டம் செரியாகும்… ஒரு முதல்வரக் கடத்துனா ஒரு மாநிலம் செரியாகும்…னு சொல்றீங்களே ரொம்ப சரி… அதே மாதிரி…ஒரு பிரதமரக் கடத்துனா ஒரு நாடே செரியாகும்… அதென்னமோ யு.நா…இல்லயில்ல….ஐ.என்… அடச்சே ரெண்டுமில்ல…அதான் ஐ.நா. சபைத் தலைவரு கோபி அண்ணனோ… சத்தியமங்கல தம்பியோ இருக்காராமா… அவுரக் கடத்துனா இந்த உலகமே செரியாகும்களே…

இந்தத் தமிழ்நாட்டு சனங்க இப்ப உங்கள கையெடுத்துக் கும்படற மாதிரி
இந்த உலகத்து சனமே உங்களக் கும்பிட்டிருக்குமேன்னு சொல்ல வந்தேன்.

உங்குளுக்கு எந்தச் சாயமும் வந்தரக் கூடாதேங்கற கவலைல நீங்களே எல்லாச் சாயத்தையும் எடுத்து உங்க மேல பூசிக்கிட்டிருக்கறதுதான் சகிக்கல.

ஊர்ப்பெருசு மூவர்ணக் கொடிய ஏத்தி, வந்தே மாதரம் சொல்றப்போ….
சனங்க மாதிரியே…நானும் நீங்க காங்கிரசுதான்னு நெனைக்க…

அடுத்த சீன்லயே…
‘தேசியக் கொடிக்கும் காங்கிரஸ் கொடிக்கும் வித்தியாசம் தெரியாதவங்க’ன்னு நீங்க ஆப்படிக்க…

காந்தி வாங்கிக் குடுத்த சொதந்திரம் படாதபாடு படுதுன்னு தியாகி பொலம்ப….
அட நீங்க காந்தி ஆளுதான்னு நாங்க நெனைக்க…

அடுத்த சீன்லயே…
‘உசிரே போனாலும் ‘அந்தாளு’ செலைய நான் தெறக்க மாட்டேன்’னு காந்தி துண்டு போட்டுத் தாண்டுன பகத்சிங் படத்தைக் காட்டி தியாகி நெஞ்சை நிமித்த….
அட…இவுரு பகத்சிங் ஆளுதான்னு நாங்க நெனைக்க…

அடுத்த சீன்லயே…
காந்தியும் பகத்சிங்கும் உசுரோட இருந்தாலே ஒத்துக் கொள்ளாத…இ.எம்.சங்கரன்…அதாங்க…’நம்பூதிரிபாடு’ படம் போட்ட புஸ்தகத்தக் காமிச்ச ‘இருந்தா இவுரு மாதிரி இருக்கோணும்’…னு கதாநாயகன் பேச…
அட…இவுரு சுத்தி அருவாள் ஆளுதான்னு நாங்க நெனைக்க…

அடுத்த சீன்லயே…
காந்தி…நம்பூதிரி ரெண்டு பேருக்குமே ஒத்து வராத நக்சலைட்டுகளைப் பத்தி புகழ….
அட…இவுரு நம்ம நக்சல்பாரி ஆளுதான்னு போலிருக்குதுன்னு நாங்க நெனைக்க….

அடுத்த சீன்லயே….
காந்தி- பகத்சிங் – நம்பூதிரி – நக்சலைட்டு..ன்னு இவுங்க யாருமே ஒத்துக்காத ஆர்.எஸ்.எஸ்.காரனுக கணக்கா நெட்டுக்குத்தலா குங்குமத்த நெத்தில வெச்சுகிட்டு முதல்வரக் கடத்தப்போக…
அட…இந்தாளு ஆர்.எஸ்.எஸ்.காரன் போலிருக்குன்னு நாங்க நெனைக்க….
தல கிறுகிறுன்னு சுத்தீருச்சுங்க சேரன்.

பீசுக்குள்ள என் தலை தெரிஞ்சதுமே த.தி.தண்டபாணி வெவகாரமா ஒரு இளிப்பு இளிச்சான். இந்தத் தடவை கோபம் வர்றதுக்கு பதிலா வெக்கம் வந்துச்சு எனக்கு.

“வாங்க வந்தே மாதரம்…படம் எப்படி?”ன்னான்.

ம்ம்…பரவால்லே…ன்னேன்.

“இழுக்காதே…சும்மா சொல்லு”ன்னான்.

சனங்க சோத்துகில்லாம சாகறாங்களேன்னு நம்மாளுக்குக் கவலை இருக்கு.
ஆனா அத எப்படிச் சொல்றதுங்கறதுலதான் கொழப்பம். எடைல எவனோ பூந்து கொழப்பீட்டான் நம்மாளன்னேன்.

“உங்க பார்ட்டி கொழம்பவுமில்லே..எவனும் கொழப்பவுமில்ல…உங்காளு தெளிவாத்தான் இருக்காரு”ன்னான் த.தி.தண்டபாணி.

எப்பவுமே இவன் இப்படித்தான்.
நாம ஆணைக்கு அர்றம்ன்னா…இவன் குதிரைக்கு குர்றம்பான்.
நாம எந்தப் படம் நல்லாருக்குன்னு சொல்றமோ அது சகிக்கலைம்பான்.
எத நாம சகிக்கலைன்னு சொல்றமோ அதுதான் சூப்பரும்பான்.
நான் கொழம்பிப்போன விசயங்களைச் சொன்னேன்.

“இதுல என்ன கொழப்பம்? உன் ஆளு மட்டுமில்ல…இந்தியாவே கொழம்பித்தான் கெடக்கு….
தமிழ்நாட்டு இந்தியன் தண்ணி கேட்டா…கர்நாடக இந்தியன் பின்னி எடுப்பான்.
பம்பாய்ல பிச்சை எடுத்தாக் கூட….பம்பாய் இந்தியன் தொரத்தித் தொரத்தி அடிப்பான்.
இருக்கற கோவணத்தையும் உட்டுட்டு ஓடியாற நெலமைல வந்தேமாதரம் பாடறதாவது…பாரத மாதாவுக்கு ச்சே போடறதாவது…
எனக்கு அதெல்லாம் பெரிய பிரச்சனையே இல்ல….
இவுங்கதான் நொடிக்கு நூறு தரம் ‘இந்தியன்’ ‘இந்தியன்’கறவுங்க ஆச்சே..
அப்புறம் எதுக்காக ஒரு தமிழனக் கடத்தணும்? இவுங்க கொள்கைப்படி ஒரு இந்தியன…
அதான் பிரதமரக் கடத்தறதுதான? அதைவிட முக்கியமா பரமக்குடில உள்ள பகத்சிங் சாலைல இருந்து வர்றாரே தியாகி எத்திராசு…
அவுரு போட்டாக்களைக் காட்டி பெருமைப்படற காட்சி இருக்கே…அது கண்கொள்ளாக் காட்சி.

இந்த நாட்டுல சரியா அரசியல் தெரிஞ்ச எவனும் பகத்சிங்கை ஒத்துக்கறவன் காந்திய ஒத்துக்க மாட்டான்.
காந்திய ஒத்துக்கறவன் பகத்சிங்கை ஒத்துக்க மாட்டான்.
ஏன்னா ரெண்டு பேருமே எதிரெதிர் முனைக.
காந்திய சாகற வரைக்கும் பகத்சிங் ஒத்துக்கல.
பகத்சிங்கை செத்த பிறகும்கூட காந்தி ஒத்துக்கல.

அதுக்கு முன்னதா உங்க தியாகி புல்லரிச்சுப் போயி ஒரு படத்தக் காமிச்சு சொல்றாரே…
“கொடிப் போராட்டம் சத்தியமூர்த்தி ஐயா”ன்னு….அப்ப எனக்கு நெசமாவே புல்லரிச்சுடுச்சு.
அந்த சத்தியமூர்த்தி ஐயாவோட வண்டவாளம் தெரியுமா உனக்கு?

இந்தத் தமிழ் மண்ணுல ஒரு குறிப்பிட்ட சாதிப் பெண்கள் மட்டும்
‘பொட்டுக்கட்டுதல்’ங்கிற பேரால தேவதாசிகளா ஆக்கப்பட்டு செத்துகிட்டு இருந்தப்ப….
அத எதுத்துப் போராடுனாங்க ஆயிரக்கணக்கான தமிழ்நாட்டு இளைஞர்கள்…சாரி…தமிழ்நாட்டு இந்தியர்கள்.

அப்போ “தேவதாசி முறைங்கிறது எங்க இந்து மதத்தோட ஒரு அம்சம்.
அதத்தடை பண்ணக்கூடாது. தடை பண்ணுனா கலைகள் அழிஞ்சு போயிடும்”ன்னு அடாவடித்தனம் பண்ணுனாரு சத்தியமூர்த்தி ‘ஐயா’.

இதக்கேட்டதும் தமிழ்நாட்டோட மொதல் பெண் டாக்டர்.முத்துலட்சுமி அம்மா எந்திரிச்சு “கலைகள் அழியுதுங்கிற கவலை அவருக்கு இருந்தா….அவரு வீட்டுப் பொண்ணுகள வேணும்ணா தேவதாசிகளாக்கி
‘கலையை’ வளர்க்கட்டும்…இனிமேல் எங்க வீட்டுப் பொண்ணுக இதுக்குத் தயாரா இல்ல”ன்னு பொட்டுல அடிச்ச மாதிரி உட்ட உடனதான் அடங்குனாரு ‘கொடிப்போராட்டம் சத்தியமூர்த்தி’.

அப்பேர்ப்பட்ட ‘தேசத் தியாகியே’ இந்த லட்சணத்துல இருந்திருந்தா
மத்தவங்க எப்படி இருந்திருப்பாங்கன்னு யோசிச்சுப்பாரு”ன்னான் த.தி.தண்டபாணி.

“கக்கன்….கக்கன்ங்கிறாங்களே அவுரு உண்மைலயே எளிமையா வாழ்ந்து அனாதையா இறந்தவரு.அவுரோட கடைசிக் காலத்துல நீங்க சொல்ற அந்த மிட்டா மிராசு தேசபக்த பரம்பரைக யாரும் அவர சீந்தல. அந்த வேளையிலும் ஓடிபோயி பார்த்தவங்க சேரன் கரிச்சுக் கொட்டற திராவிட இயக்கத் தலைவருகதான்.

39 ஆம் வருசம் கக்கன் போன்றவர்கள கோயிலுக்குள்ள அனுமதிச்சதால தீட்டுப் பட்டிருச்சுன்னு கருவறையைப் பூட்டீட்டுப் போன பட்டர்களைப் பின்னி எடுத்து…பூட்டை ஒடச்சு…அவுங்கள சஸ்பெண்ட் பண்ணி…
புதுப் பட்டர்கள நியமிச்சார் ஒருத்தர். அதுனால வந்த கிரிமினல் வழக்குகளையும் துணிச்சலா சந்தித்தார் அவர்.
அவரு யாரு தெரியுமா….? அவர்தான் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நிர்வாக அதிகாரியா இருந்த ஆர்.எஸ்.நாயுடு.
அவுரு இந்த நாட்டு மக்களுக்கே குல்லாப் போட்டு அல்வாக் குடுத்த கட்சிக்காரரு இல்ல…அவரும் திராவிடக் கட்சிக்காரருதான்.

தேசபக்தர் ராஜாஜி கட்சிக்குள்ள இருந்துகிட்டே காமராசருக்குக் குழி வெட்டின கதைகளையும்…
அதுக்கு மகா ஆத்மா காந்தி ராஜாஜிக்கு கொம்பு சீவி விட்ட கதைகளையும்…
கதர்சட்டைக்காரர்களாலும் காந்தியாலும் காமராசர் பலமுறை அவமானப்படுத்தப்பட்ட சம்பவங்களையும்
எடுத்து உட்டா கதர்க் குல்லாக்காரங்க பொழப்பு நாறிப் போயிடும்.”

எனக்கு இந்தமாதிரி சமாச்சாரமெல்லாம் தெரிஞ்சா நான் ஏன் இப்படி இருக்கேன்? நானே வந்தேமாதரம் பாடீட்டு வவுத்துல ஈரத் துணியக் கட்டீட்டு படுக்கற நெலமைல இருக்கேன். என்னப் போயி திட்டறயே…ன்னேன்.

“கோவிச்சுக்காத புண்ணாக்கு…நான் உன்னச் சொல்லல. சமீபத்துல ‘தேசபக்திக்கு’ டீலர் ஆகியிருக்காரே உங்க சேரன் அந்த ஆளச் சொல்றேன்.

மக்களோட அடிப்படைப் பிரச்சனைகளை கொந்தளிக்கிற மாதிரி சொல்லியிருக்கறதுனால உங்காளு சேரனோட சிந்தனை சிவப்புச் சிந்தனைன்னு முடிவு பண்ணீராதே.

ஆமா செகப்புக் கொடி மழைல நனைஞ்சு நனைஞ்சு நாள்பட ஆனா என்ன நெறத்துக்கு வரும்?”ன்னு திடீர்ன்னு ஒரு கேள்வியத் தூக்கிப் போட்டான் த.தி.தண்டபாணி.

(மிகுதி நாளை…..)

தேசபக்தத் திலகம் சேரன் ஐயா சமூகத்துக்கு

“நீங்கள் அனாவசியமாக கூச்சல் போட்டு அமளி செய்தால், மேலும் சில உண்மைகளை வெளியிட வேண்டியிருக்கும். அது உங்களுக்கு சாதகமாக இருக்காது.

நமது நாட்டில் நாள் ஒன்றுக்கு மூன்று அணா (18 பைசா) வருமானத்தில் காலந்தள்ளுபவர்களின் எண்ணிக்கை 27 கோடி. மொத்த ஜனத்தொகையில் 30 சதவிகிதம் வறுமைக் கோட்டிற்குக் கீழே இருக்கிறது. இது ஒரு பக்கம். மறுபடியும் குறிப்பிட்ட ஒரு முதலாளியின் குடும்ப வருமானம் நாள்
ஒன்றுக்கு மூன்று லட்ச ரூபாய். பிரதம மந்திரி நேருவுக்காக ஒவ்வொரு நாளும் ரூ.25,000 செலவழிக்கப்படுகிறது. நாடா இது?

நாட்டில் இப்போது 17 அல்லது 18 கோடி ஏக்கர் நிலம் தரிசாகக் கிடக்கிறது. அதை சாகுபடிக்குக் கொண்டுவர இந்த அரசாங்கத்திற்கு வக்கில்லை. திறந்த மாடியிலும், பூந்தோட்டங்களிலும் உணவு பயிரிடச் சொல்லுகிறார் நமது பிரதமர் நேரு. எப்படி இருக்கிறது கதை…?

பாராளுமன்றத்தில் நேரு மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் போது டாக்டர் லோகியாவின் பேச்சு.

தேசபக்தத் திலகம் சேரன் ஐயா சமூகத்துக்கு,

கும்படறஞ்சாமி.

அசோக வனத்து சீதை கணக்கா இந்தத் திரையுலகம் உங்கள மாதிரி ஒரு ஆளுக்காகத்தான் இத்தன காலமும் தவம் கெடந்துச்சுன்னு சொன்னா தப்பே இல்லீங்க. உங்க மொதோப்படமே படு சூப்பருங்க. சாதிச் சண்டைல சாகாதீங்கடான்னு நீங்க சாடுனசாடு இருக்கே…யப்பா…
சின்னச் சின்ன குத்தம் கொறை இருந்தாலும் இந்த அளவுக்காவது சொல்ல முடிஞ்சதேன்னு நாங்க சந்தோசப்பட்ட படமுங்க ‘பாரதி கண்ணம்மா’. ரெண்டாவதா வந்த பொற்காலமும் உடல் ஊனம் ஊனமே இல்லன்னு உறுதியாச் சொல்லுச்சுங்க. இது ரெண்டையும் பாத்தப்புறம் தளபதி சேரன் தலைமை ரசிகர் மன்றத்துக்கு முகூர்த்தக்கால் போட்ற வேண்டியதுதான்னு
முடிவே பண்ணீட்டன்னா பாத்துக்குங்களேன். சரி…நம்ம மன்றத்த எப்புடியாவது ஆரம்பிச்சரலாம்னு பசங்ககிட்டே கேட்டப்ப….”அதெல்லாம் நீ நெனச்ச மாதிரி பண்ணீர முடியாது. அதுக்கு மொதல்ல நம்ம மன்றத்த மொறையாப் பதிவு பண்ணனும்…கொறைஞ்சது ஏழு பேராவது வேணும்…பீடி குடிக்க மாட்டேன்… ரோட்டுல வம்பு பண்ன மாட்டேன்னு விதிமுறைகளெல்லாம் எழுதிக் குடுத்தாத்தான் பதிவு பண்ண முடியும்…”னாங்க.

இந்த எழவெல்லாம் நமக்குத் தெரியாதே. இப்ப என்ன பண்றதுன்னேன்.

“உனக்கென்ன உன்னோட புரட்சித் தளபதி சேரன் மன்றத்தப் பதிவு பண்ணனும் அவ்வளவுதானே… நாளைக்குக் காத்தால நேரா பத்தர ஆபீசுக்குப் போ…போயி நம்ம ‘தகுதி திறமையத்த தண்டபாணி’ சீட்டு எங்கேன்னு கேளு. யாரக் கேட்டாலும் டக்குன்னு சொல்லுவாங்க. அவன் பாத்துக்குவான் மத்தத’ன்னு சொன்னானுக.

அதே மாதிரி பத்தர ஆபீசுக்குள்ள நொழஞ்சதுமே “வாடா புண்ணாக்கு…எங்க இந்தப்பக்கம்”ன்னான் ‘தகுதி திறமையத்த தண்டபாணி’. எங்கப்பன் புண்ணாக்கு வியாபாரம் பண்ணப்போயி வருமானம் வந்துச்சோ இல்லியோ
ஆனா..எனக்கு இந்தப் பேரு வந்ததுதான் மிச்சம்.

வந்த விசயத்தச் சொன்னதுதான் தாமதம்.

திடீர்ன்னு வெறிகெளம்புனவன் கணக்கா ‘பாரத் மாதாக்கீ ச்சே’ன்னு கத்த…
சொட்டைத் தல ஹெட்கிளார்க் என்னவோ ஏதோன்னு நிமிர்ந்து பார்க்க…
சுத்தியிருந்த மத்தவங்க என்னையும் அவனையும் ஒரு மாதிரியா பார்க்க…
காக்கி வெள்ள யூனிபார்ம் போட்ட பியூனு “என்ன சார் டாக்டர்கிட்ட கூட்டிட்டுப் போகவா வந்தீங்க…?”ன்னு என்னக் கேக்க…ஒரே களேபரம்….

“ஒண்ணுமில்ல கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டுட்டேன்…அவ்வளவுதான்…வா டீ சாப்பிடலாம்”ன்னு  வெளியே கூட்டீட்டு வந்துட்டான்….நம்ம ‘தகுதி திறமையத்த தண்டபாணி’.

வந்த விசயத்த மறுபடியும் ஞாபகப்படுத்த….

“அதுசரி உங்க புரட்சித் தளபதியோட லேட்டஸ்ட் படத்தை பார்த்துட்டியா…?”ன்னான்.

இப்பதான வந்திருக்கு அதுவுமில்லாம கையில வேறு ஏழு ரூபா முப்பத்தஞ்சு காசுதான் இருக்கு. எப்படி இருந்தாலும் சனிக்கெழமைக்குள்ள பாத்துருவேன்னேன்.

என்ன நெனச்சானோ என்னவோ உடனே ஜோப்புக்குள்ளே கைய உட்டு பத்து ரூபா எடுத்து நீட்டுனான்…

“நீ இப்ப என்ன பண்றே…முதல்ல கவிதா தியேட்டர் போற….போயி உங்காளோட மூணாவது புரட்சித் தயாரிப்பான தேசியகீதம் பாக்கறே…அப்புறம் நேரா ரெண்டு மணிக்கு என் சீட்டுக்கு வர்ர…
நான் அதுக்குள்ள உனக்கு வேண்டிய பாரமெல்லாம் ரெடி பண்ணி வெச்சிருக்கேன்…கெளம்பு…”ன்னு சொல்லீட்டு தலைய அந்தப் பக்கமாத் திருப்பி நக்கலா ஒரு சிரிப்பு சிரிச்சான்.

நம்ம தகுதி திறமையத்த தண்டபாணி இருக்கானே கொஞ்சம் வில்லங்கமான ஆளுதான். அவன் வெசமமா சிரிச்சதுல ஏதாவது வெவகாரம் இருக்குமோன்னு தோணுச்சு மனசுக்குள்ள.  இருந்தாலும் உங்க படத்துக்கு ஒருத்தன் காசையும் குடுத்து பாருடா படத்தேன்னு சொன்னா…மாட்டேன்னு சொல்ல எனக்கென்ன மண்டைல மசாலாவா இருக்கு? எல்லாம் ரெடி பண்ணி வையு வந்தர்றேன்னுட்டு கிளம்பினேன்.

மறுபடியும் அதே சிரிப்பு. எரிச்சல் எரிச்சலா வந்தது . என்ன பண்றது…நம்ம மன்றத்த பதிவு பண்ணனுமேன்னு யோசிச்சுகிட்டே சைக்கிள மிதிக்க ஆரம்பிச்சேன்.

உள்ளே போகவும் டைட்டில் போடவும் செரியா இருந்துச்சுங்க. மொதல் சீன்லயே அந்தக் கதர் சட்டை,  கதர் வேட்டி கட்டுன பெரியவரு தேசியக் கொடியை ஏத்தி ‘வந்தே மாதரம்’ன்னு முழங்கறப்போ என்னோட மயிர்க்காலெல்லாம் அப்படியே குத்திகிட்டு நின்னுடுச்சுங்க. ரொம்ப நாள் கழிச்சு சரியான படத்துக்குத்தான் வந்திருக்கம்னு அப்பவே புரிஞ்சு போச்சு. சீட்டுல நிமிர்ந்து உட்கார்ந்து படம் பார்க்க ஆரம்பிச்சிட்டேன். நடிகனுக்காக  பேனர் கட்டறவனையும்…போஸ்டர் ஒட்டறவனையும்…
நடிகனுக்காக ரசிகர் மன்றம் வெக்கறவனையும்…நீங்க புடுச்சு வாங்கு வாங்குன்னு வாங்கறப்போ விசில் சத்தம் தியேட்டர்ல காதப் பொளக்குதுங்க.

இதுதான்…இதேதான்… நாம எதிர்பார்த்த படம்னு ரொம்ப சந்தோசமாயிடுச்சுங்க.
கொஞ்ச காலமா இந்த நாட்டு மக்களுக்கு இந்தியன்கிற உணர்வே இல்லாமப் போச்சு.
அந்தக் கவலை தாங்காமத்தான் இப்படிப்பட்ட தேசபக்திப் படத்தக் குடுத்திருக்கீங்க….

அந்தக் கிராமத்துக்காரங்க தண்ணியில்லாம கஷ்டப்படுறதும், தண்ணீருக்காக பல மைலு நடந்தே போயி புடுச்சுகிட்டு வர்றதையும் தத்ரூபமா எடுத்திருக்கீங்க. கெடச்சுகிட்டு இருந்த ஒரு குடம் தண்ணியையும் ‘பக்கத்து ஊர்க்காரனே’ குடுக்க மாட்டேன்னு சொல்றப்ப அவுங்க படற பாடு இருக்கே…சொல்லி மாளாதுங்க.

கெரகம்… அந்த நேரம் பார்த்துத்தானா காவிரில தண்ணி உடமாட்டேன்னு 1924லுல இருந்து தகராறு பண்ணீட்டிருக்கிற கர்நாடக இந்தியன் ஞாபகத்துக்கு வரணும்? ஆனா அந்த ஞாபகம்
யாருக்கும் வந்தறக்கூடாதுங்கிற கவலை ஒரிஜினல் இந்தியனான உங்களுக்கு இருக்காதுங்களா….?

“பாவம் அவுங்களுந்தா என்ன பண்ணுவாங்க…இருக்கறதே மொழங்கால் அளவுத் தண்ணி..
அதையும் குடுத்துட்டு அவுங்க எங்க போவாங்க”ன்னு நீங்க கர்நாடக இந்தியனுக்காக…
இல்லயில்ல பக்கத்து கிராம இந்தியனுக்காக பரிஞ்சு பேசற இடமிருக்கே…இந்த இடம் ரொம்ப டச்சிங்குங்க.

இதுக்காகவே உங்களுக்கு கர்நாடக அரசோட மாநில விருது கெடைச்சாலும் ஆச்சர்யப்படறதுக்கில்ல.

‘ரெண்டு கிராமத்துக்கு தண்ணியில்லன்னா ரெண்டு கிராமமும் சேர்ந்து மாநில அரசுக்கெதிரா போராடோணும்….
பத்து பஸ்ஸக் கொளுத்தோணும்…எம்.எல்.ஏ.வக் கொண்டாந்து கட்டி வச்சு ஒதைக்கோணும்’னு நீங்க சொல்ற வீரமிருக்கே வீரம்…அதுக்கே குடுக்கோணும் அவார்டு.
ரெண்டு கிராமத்துக்குள்ள தண்ணீர்ப் பஞ்சம்ன்னா இதப் பண்ணலாம்….
ரெண்டு மாநிலத்துக்குள்ள தண்ணீர்ப் பஞ்சம்னா…யாரக் கடத்தலாம்னும் நீங்க சொல்லீருந்தா இன்னும் டச்சிங்கா இருந்திருக்கும்.

ரோடே இல்ல..ரோடிருந்தா சரியா இல்ல…சரியா இருந்தா பஸ்சு வராது…பஸ்சு வந்தாலும் ஒழுங்கா ஓடாது…
ஒழுங்கா ஓடுனாலும் டிரைவர் செரியில்ல…இதெல்லாம் உண்மைலயே  நியாயமான பிரச்சனைகதாங்க.
நீங்க ஒரு பேட்டில சொல்லியிருந்த மாதிரி இந்தப் படமே ஒரு ‘மனு’ மாதிரிதாங்க.

மக்களோட இந்தமாதிரி அடிப்படைப் பிரச்சனைகளப் பத்தி பேசற படங்கள் ரொம்ப ரொம்பக் குறைவுங்க….

இருந்தாலும் பாருங்க…
இது இந்த சனங்களுக்குப் புரியவே மாட்டேங்குது.

 (மிகுதி நாளை….)

இது முன்னுரை அல்ல…

appa_final.gif

15 வேலம்பாளையம்.

இதுதான் அவனது ஊர். தமிழக வரைபடத்தில் தேடிப்பார்த்தாலும்
தென்பட்டுவிடாத கிராமம் அது. எண்ணி எழுபதே வீடுகள். ஆறேழு
கிலோ மீட்டர்கள் நடந்தேதான் போக வேண்டும் அவனது ஊருக்கு.

அவனது அப்பன் செங்கோடன், தானே நெய்த துணிகளைத்
தலையில் சுமந்து ஊர் ஊராய் விற்று வயிறு வளர்த்து வந்தவன்.
கணக்கய்யர் பையனும், மணியகாரர் மகளும் வண்டி கட்டிக் கொண்டு
போய் படித்து வர – அவனோ அந்த ஆறேழு கிலோ மீட்டரும்
நடையாய் நடந்து டவுனிலுள்ள பிஷப் ஸ்கூலுக்குப் படிக்கப் போனான்.

அப்போதுதான் திராவிட இயக்கங்கள் திரைப்படத் துறையில் தூள்
கிளப்பிக் கொண்டிருந்த நேரம்.

“தென்றலைத் தீண்டியதில்லை, ஆனால்
தீயைத் தாண்டியிருக்கிறேன்”

‘கருணாநிதின்னு உங்கள மாதிரி ஒரு பையன் எப்புடி எழுதீருக்கான்
பாருடா’ என்று அவனது தமிழாசிரியர் ஊட்டிய உணர்வுகளினூடே
அவன் வளர்ந்தான்.

அதுதான் அன்றைக்கு அவனுக்கு ஊட்டப்பட்ட அடிப்படை
அரசியல். காவிக்கு கறுப்பு காவடி தூக்காத காலம் அது.

தேர்வு முடிவுகள் வந்தபோது அந்தக் கூட்டத்துக்கே பெருங்கொண்டாட்டம்.

15 – வேலம்பாளையத்தில் பத்தாவது பாஸென்பது
லேசுப்பட்ட விஷயமா என்ன? ராசுக்குட்டி பாசானது அந்த கிராமத்துக்கே
‘கலேக்கட்டரு’ பதவி கெடைச்சாப்பல. “வள்ளியம்மா பையன்
பத்தாவது பாசாயிட்டானாமா….” செங்கோடம் பையன் பாசானது
தெரியுமா உனக்கு?”

அவனது நெருங்கிய உறவுகளில் சிலர் சாராயம் குடிப்பவர்களல்ல –
காய்ச்சுபவர்கள். சோறில்லாவிட்டாலும் சுயமரியாதையையே
சொத்தாகக் கொண்டிருந்தவர்கள் பலர்.

“……புள்ளைக்கு படிப்பெதுக்கு?” என்ற காலத்தில் பத்தாவது
பாசானவனாயிற்றே…உச்சி முகர்ந்தது ஊர். பத்தாதற்கு விவசாய
டிப்போவில் வேலைக்கும் போய்ச்சேர…தேடி வந்தது ‘பெரிய’ இடத்து
சம்பந்தம். திருப்பூரின் திசையை மாற்றி கொத்திக் கொண்டது கோவை
அவனை.

திருமணத்திற்குப் பிற்பாடு புகுமுக வகுப்புத் தேர்ச்சியும், பி.காம்
பட்டமும் அவனது துணிச்சலுக்கு முன்னே தூசாயிற்று. விவசாய
டிப்போவிலிருந்த அவனை விவசாய பல்கலைக் கழகம் தனது
ஊழியனாக வரித்துக் கொண்டது. பின்னர் அப்பல்கலையின் முதல்
கணக்கு அலுவலர்களுக்கான பட்டியலில் அவனது பெயரும் இடம்
பெறுவது தவிர்க்க முடியாததாயிற்று அன்றைக்கு.

ஆனால்…’ரைஸ்மில்காரரின் மச்சினன்’ என்பதோ…’அக்ரி
காலேஜின் கணக்கதிகாரி’ என்பதோ…எதுவும் ஏற்புடையதில்லை
அவனுக்கு. சுள்ளி பொறுக்கியும், சாராயம் காய்ச்சியும் வாழ்க்கையை
ஓட்டி வந்த தனது உறவுகளும், உற்றார்களும் உயர வேண்டுமே என்ற
உறுத்தல்தான் அவனுக்குள் என்றும் இருந்தது.

அநேக கனவுகளினூடே கல்யாணம் பண்ணிக் கொண்டவனுக்கு
மகன் பிறந்தபோது மட்டும் தலைகால் புரியவில்லை. பேர்
வைப்பதற்குக் கூட பெரும்பொழுது ஆயிற்று. சுத்தமான தமிழ்ப்
பெயராய்…அதுவும்…இதுவரை எவரும் வைக்காத தமிழ்ப் பெயராய்…
கவுந்தப்பாடி தமிழாசிரியர் குழந்தைசாமியும், அவனும் யோசித்து
யோசித்து பெயரிடுவதற்குள் நான்கு 365 நாட்கள் நகர்ந்து போயிற்று.

தனது தந்தை செங்கோடனைத் ‘தூக்கிக் கொண்டு’ போன போதுகூட
அழுகை வரவில்லை அவனுக்கு. ஆனால், அண்ணாதுரை இறந்தபோது
வீட்டிலிருக்கிற ‘மர்பி ரேடியோ’ முன்பு அவன் குலுங்கிக் குலுங்கி
குமுறியது அவன் மகனுக்கு இன்னமும் நினைவிலிருக்கிறது.

மனைவியோடு கோயிலுக்குப் போனாலும் வாசற்படியோடு
நின்றுவிடுவான் அவன். கோயில் திண்ணையிலும் ‘முரசொலி’ விரித்து
அமருவதுதான் அவனுக்கு அலாதி சுகம். நூர்தீன் பெரியப்பாதான்
அம்மாவை கோயிலினுள்ளே கூட்டிப்போய் ஒவ்வொன்றாக
விளக்குவார். அவன் தனது தலைமுறைக்கு சாதி கடந்தும், மதம் கடந்தும்
மனிதர்களை நேசிக்கக் கற்றுக் கொடுத்தான்.

அவன் தனது மகனை நூர்தீனைப் பெரியப்பா என்றும், தலித் பாலசுந்தரத்தை சித்தப்பா என்றும்
அக்கிரகாரத்து முத்துராமனையும், ஆலிவரையும் மாமாவென்றும் அழைக்கப் பழக்கப்படுத்தினான்.

ஆனால் சொந்தங்களை சார் என்று அழைத்தான் அவனது மகன். “என்னடா சம்பு இப்புடி உன் பையனை வளத்திருக்கே?” என்பவர்களது கேள்விக்கு ஒரு நமட்டுச் சிரிப்புதான் அவனது பதிலாக இருக்கும். சிறுபான்மையினர் மீதான நேசம்…தலித்துகளுடனான தோழமை….பிற்படுத்தப்ட்டவர்களுடனான பாசம் என வளர்ந்தவன் அதன்படியே அவனது வாரிசையும் வளர்த்தான்.

ஆயினும் அவனது பொறுமைக்கு நேரெதிராய் ஆத்திரமும், ஆவேசமும் கொண்ட அவனது மகன்.
அவனது அமைதிக்கு நேரெதிராய் ஆர்ப்பாட்டத்தைத் தவிர வேறெதுவுமறியாத அவனது மகன்.
இருப்பினும் எல்லாவற்றையும் அனுமதித்தான் அவன். கருத்துச் சுதந்திரத்திற்கு கடிவாளமிடவில்லை
அவன். மகனைத் தோழனாய்ப் பார்த்தான் அவன்.

மகனது கல்லூரி லீலைகளையும், கலாட்டாக்களையும்கூட சுற்றுப்புறத்தில் சீரழிந்திருந்த
கலாச்சாரச் சூழலினையும் கவனத்தில் கொண்டே கண்டித்தான் அவன்.
மகனது கிறுக்குத்தனங்களையும், குறும்புகளையும் களையச் சொன்னான் கனிவோடு.

மகனும் பிற்பாடு தமிழ் மீதும் , திராவிடத்தின் மீதும் தனது பார்வையைத் தழையவிட….அவனுக்குள் ஒரு பெருமிதம்.

‘ஆறுமுறை மின்சாரம் தாக்கியும் உயிரிழக்காத அர்ஜன்டைனா மனிதர் அலெக்ஸ் இவர்தான்’ என
அவனது மகன் எழுதிய அபத்தத் துணுக்குகள் அவனுக்கு ஏற்புடையதில்லையாயினும்….
துவக்கம் துவண்டாலும் தொடரத் தொடர துளிர் விடக்கூடும் எனத் தெரிந்து வைத்திருந்தான் அவன்.

நேரடியாக ஊக்குவிக்காவிடினும் மறைமுகமாக மனதுக்குள் ரசித்தான் அவன்.
மகன் எழும் முன்னரே வாசகர் கடிதத்தில் அவனது பெயர் தென்படுகிறதா எனத் தேடிப்பார்த்த பின்னரே தேநீர் அருந்தினான்.

அவன் தன் மகனுக்கு விட்டுச் சென்றதெல்லாம்…சாதி…மத…மொழி…இனம்…நிலம் கடந்து மனிதர்களை நேசிக்கக் கற்றுக் கொடுத்ததுதான்.
அவன் போய்ச் சேர்ந்த பிறகு அந்த வேலம்பாளைய வீட்டை பதினேழாயிரத்துக்கு விற்றுவிட்டு
ஊர் வந்து சேர்ந்தார்கள் அவனது மனைவியும் மகனும்.

“வெல்டன் Mr. கோமல், தூள் கிளப்பிவிட்டீர்கள்” என வாசகர் கடிதம் எழுதுபவனாய்….
பூவாளிக்கும், முத்தாரத்திற்கும் துணுக்கு எழுதுபவனாய்….
‘தனிச் சுற்றுக்கு மட்டும்’ என்று அச்சடித்து பத்திரிக்கை நடத்துபவனாய்….
பிராவிடண்ட் பண்டில் லோன் போட்டு சிறுசிறு புத்தகங்கள் வெளியிடுபவனாய்….
வளர்ந்த மகன் பிற்பாடு வெகுஜனப் பத்திரிக்கைகளால் ஈர்க்கப்பட்டு சினிமா, அரசியல் விமர்சகனாய்
“வளர்ந்த” போது சூட்டிக் கொண்ட பெயர் பாமரன்.

மகனுக்குள் துருத்திக் கொண்டிருக்கும் துயரமெல்லாம் தனது எழுத்தை மறைந்திருந்தாவது படிக்க…

அந்த 15 – வேலம்பாளையத்து

‘ராசுக்குட்டி’ என்கிற

‘சம்பு’ என்கிற

செ.சண்முகசுந்தரம், பி.காம்., இல்லையே என்பதுதான்.

காதலர் தினம்.. சில்பா ஷெட்டி …

pamaran_recent.jpg

மொத்தத்தில் “காதலர் தினம்” வந்தாலும் வந்தது…..யாருக்கு எந்த நிலைப்பாட்டை எடுப்பது என்பதில் குழப்பமோ குழப்பம். கலாச்சாரக் காவலர்கள் “கூடவே கூடாது” என்று நின்றால்…… கட்டுடைப்பாளர்களோ “கொண்டாடியே தீருவோம்” எனக் கும்மி அடிக்கிறார்கள். எதிர்ப்பவர்களாகட்டும்…. ஏற்றுக்கொள்பவர்களாகட்டும் ஒத்துக் கொள்ளக்கூடிய ஒரே விசயம் கார்ப்பரேட் கம்பெனிகளால் ஊதிப் பெருக்கப்பட்ட இக் கொண்டாட்டம் அவர்களது கல்லாப் பெட்டியை நிச்சயம் நிரப்பும் என்பதே. காதல்..கீதல் செய்து தொலைத்தால் நம்ம சாதிக்கும்-மதத்துக்கும் சிக்கல் வந்து சேருமே…அப்புறம் நம் பிழைப்பு என்னாவது என்கிற கவலையில் பா.ஜ.க, சிவசேனா,பஜ்ரங்தள் போன்ற கும்பல்கள் ஒரு புறம்….
இதுகளெல்லாம் எதிர்க்கும் போது சும்மாயிருந்துவிட்டால் மதவெறி ஜோதியில் நாமும் சங்கமமாகி விட்டதாக அர்த்தமாகி விடுமே என்கிற பதைபதைப்பில் வாலண்டைனின் வாரிசுதாரர்களாகிவிட்ட நம்மவர்கள் மறுபுறம்.

நமது கேள்வியெல்லாம் பிப்ரவரி 14 “காதலர் தினம்” என்றால், வருடத்தின் மற்ற நாட்களெல்லாம் என்ன தினம்?
நம்மைப் பொறுத்தவரை வருடத்தின் 365 நாட்களும் காதலர் தினம்தான்.
லீப்வருடமெனில் 366.

அம்மா… அப்பா… சித்தப்பா… அப்பப்பா… அம்மம்மா… மச்சினி… மாமனார் என சகலருக்கும் ஒரு தினம் ஒதுக்கீடு செய்திருக்கின்றன மேற்கத்திய நாடுகள்.
மேற்கத்திய உலகு சொல்கின்ற யாவற்றையும் கண்ணை மூடிக் கொண்டு ஏற்றுக் கொள்வதும் அல்லது எதிர்ப்பதும் அபத்தத்தில்தான் போய் முடியும்.
மே 1,
மார்ச் 8,
டிசம்பர் 10
என இவற்றை ஏகபோகமாகக் கொண்டாடலாம் சரி.
ஆனால் தப்பித் தவறிக்கூட நமக்கு ஹிரோசிமா – நாகசாகி மீது அமெரிக்கா நடத்திய நாசகாரத் தாக்குதல்கள் நம் நினைவுக்கு வந்து விடக்கூடாது என்பதற்காகவே மிகத் தந்திரமாக ஆகஸ்ட் 6 ஐ “நண்பர்கள் தினம்” என திசை திருப்பினால் எங்கே போய் முட்டிக் கொள்வது?
நாளை மற்றுமொரு நாளே.

***************

இந்த “தகுதி”, “திறமை”க்கான ஒட்டுமொத்த பட்டாதாரர்களின் கூப்பாடு ஓரளவிற்கு ஓய்ந்த மாதிரித் தெரிந்தாலும் மறுபடி எப்பக் கிளம்பும் என்பது தெரியவில்லை. உயர் கல்வி நிறுவனங்களில் ஒதுக்கப்பட்ட 27 சதவீத ஒதுக்கீட்டையும் இவர்கள் இஷ்டப்பட்டபடி பிரித்துக் கொடுக்கலாம் என்கிற ஒரு அம்சம் வெகு வெகு வசதியாகப் போய் விட்டது இந்த ஜென்மங்களுக்கு.

வரும்…வரும்…வரும்…வரும்…வரும்…வரும்…வரும்…வரும்… என்று குணா கமல் கணக்காய் கூறிக்கொண்டிருந்தவர்கள் ஆடி அசைந்து 69 வருடம் கழித்து ஒரு வழியாய் ஒதுக்கிய அந்த 27 சதவீதத்தையும் குரங்கு ஆப்பம் பிய்த்த கதையாக ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த ஆண்டு
ஆமதாபாத் ஐ.ஐ.எம்…ல் வெறும் 6 சதவீதம்….
பெங்களூர் ஐ.ஐ.எம்…ல் 10 சதவீதம்….
வர்க்க “விடுதலைக்கான” பாதையில் வெற்றி நடை போடும் “காம்ரேடு”களது மே.வங்கத்தில் 0 சதவீதம்…
என “தாராளமாய்” ஒதுக்கியிருப்பதைப் பார்த்தால் எப்படியோ கிருஸ்து பிறப்பு 3047 க்குள் நிரப்பப்பட்டு விடும் என நம்பலாம். (இப்போது அதுவும் நட்டுகிட்டுப் போயிடுச்சு “உச்சா நீதி” மன்றத்தால்….)

ஏனுங்க நமக்கொரு சந்தேகம்….
இந்தத் தகுதி….தெறம….தெறம…. ங்கறாங்களே….நம்முளுக்குத் தெரிஞ்சு ISRO வுல சுத்தமா சாதியே “பார்க்காம” அக்மார்க் “தெறமய” வெச்சுத்தான் ஆளெடுக்கறாங்க….
நம்ம சிவகாசி ராக்கெட் கூட வானத்துல போகுது.
ஆனா பல நூறு கோடி செலவு பண்ணி நம்ம விஞ்ஞானிக உடற ராக்கெட்டுக பெரும்பாலும் கடலுக்குள்ளதான போகுது….?

ஒருவேள இதுதான் தகுதி…. தெறம….ங்கறதுங்களா?

***************

ஆசிரியர் : உலகில் இனவெறிக்கு எதிராகப் போரிட்டவர்கள் யார்…யார்…?

மாணவன் :

1. நெல்சன் மாண்டேலா

2. மகாத்மா காந்தி.

3. ஷில்பா ஷெட்டி.

நண்பர் செந்தமிழ்ச்செல்வன் சொன்னாரே என்று தமிழகத்தின் குக்கிராமம் ஒன்றில் போய் முடங்கிக்கொண்டது எவ்வளவு பெரிய இமாலயத் தவறு என்பது பின்னர்தான் புரிந்தது. தகவல் தொழில் நுட்பத் தொந்தரவுகள் எதுவுமின்றி அங்கிருந்த வேளையில்தான் இந்தியாவையே உலுக்கிய அந்தச் சம்பவம் நடந்து முடிந்திருந்தது. நமக்குத் தெரிந்ததெல்லாம்
கோமுட்டி செட்டி…
தேவாங்க செட்டி…
நாட்டுக்கோட்டை செட்டி வகையறாக்கள்தான். ஆனால் இந்த ஷில்பா செட்டியைத் தெரியாமல் தொலைந்ததை எண்ணி கவலைப்படாமல் இருக்க முடியாது.
ச்சே… இந்தளவிற்கு தேசபக்தி இல்லாமல் இருந்ததை நினைத்தால் எனக்கே வெட்கமாகத்தான் இருக்கிறது.

நண்பர்கள்தான் சொன்னார்கள்:
“அவர் சாதாரண நடிகை கிடையாது. காந்தியாரின் தண்டி யாத்திரையில் கூட அவரது குடும்பத்திற்கு பெரும் பங்கு இருக்கிறது. இந்தியத் திரை உலகமே அவர் திறமையைக் கண்டு மூக்கின் மேல் விரல் வைத்துக் கிடக்கிறது….தமிழ்த் திரையிலும் அவர் கலைச்சேவை ஆற்றியதற்கு வரலாற்று ஆவணங்கள் பல இருக்கின்றன. சேம்பிளுக்கு ஒன்று….அவர் நடித்த ரோமியோவின் போது காணாமல் சாமியாராய்ப் போன பிரபுதேவா இப்போதுதான் திரும்பி வந்திருக்கிறார். அதுவும் டைரக்டராக. வடக்கு தெற்கு என்றில்லை… மொத்தத்தில் அவர் ஒரு தேசிய சொத்து.”
என்றார்கள்.

அவர் கேவலம் மூன்றரைக் கோடி பிசாத்துக் காசுக்காக அவமானப்படுத்தப்பட்ட விதத்தினைக் கேட்கக் கேட்க ரத்தம் கொதித்தது. நாமெல்லாம் இந்தியனாய் இருப்பதை விட நாண்டுகிட்டே சாகலாம் என்று கூடத் தோன்றிவிட்டது. நல்ல வேளையாக தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இந்த விஷயத்தில் தாமதிக்காமல் இந்திய அரசு சுறுசுறுப்பாக செயல்பட்ட விதம்தான் என்னைப் போன்றவர்களைக் காப்பாற்றி கட்டுரை எழுத வைத்திருக்கிறது.

செய்தி கேள்விப்பட்ட மறுநொடியே பிரிட்டனின் சேன்சிலரைக் கூப்பிட்டுக் கண்டித்தது….
மனித உரிமைப் போராளி டோனி பிளேயரை குரல் கொடுக்கத் தூண்டியது….என அடுக்கிக் கொண்டே போகலாம்.

தேசத்தின் கௌரவத்தைத் தூக்கி நிறுத்தப்போன ஷெட்டிக்கு ஒரு அவமானம் என்றால் அது தேசத்துக்கே ஏற்பட்ட அவமானமல்லவா?

அதுவும் இனவெறிப் பேச்சை எப்படி சகித்துக் கொள்ளும் இந்தியா?
கயர்லாஞ்சியில் நிலவும் சமத்துவமாகட்டும்….
இன்றோ நாளையோ என்று இழுத்துக் கொண்டு கிடக்கும் சமூக நீதியாகட்டும்….
எந்த விதத்தில் சளைத்தது….பசுவும் புலியும் ஒரே ஓடையில் நீர் அருந்தும் இந்த ராமராஜ்ஜியம்?

என்னைக் கேட்டால் தேசத்தின் சொத்துக்கு ஏற்பட்ட சேதாரத்திற்கு பிரிட்டன் மீது பொருளாதாரத் தடையே விதித்திருக்க வேண்டும்.

முடிந்தால் ஷில்பா ஷெட்டியோடு ஒரு ‘அமைதிப் படை’யைக் கூட அனுப்பி வைக்கலாம்…..
சொல்ல முடியாது….
செய்தாலும் செய்வார்கள்.

ஆற அமர கறி சோறு சாப்பிட்டு….
அப்படியே வெத்திலை போட்ட கையோடு
ஒரு குட்டித் தூக்கமும் போட்டு….
சோம்பல் முறித்து நிமிர்ந்து பார்க்க…
எங்க ஷில்பா ஷெட்டி என்ன ஈழத்தமிழர்களா என்ன?

பின் குறிப்பு:
லண்டனில் ஷெட்டிக்கு ஏற்பட்ட அவமானம்
இந்தியாவுக்கே ஏற்பட்ட அவமானம் என்றால்…

டெல்லியில் ஷில்பாவுக்குக் கிடைத்த முத்தம்
ஒருவேளை இந்தியாவுக்கே கிடைத்த முத்தமோ….
புரியலியேப்பா……..