தலையைச் சீவினா தப்பா… ?

சின்ன வயதில் சும்மா இருக்காமல் ஒரு பெண்ணுக்கு லெட்டர் கொடுக்கப் போக…அவளது அண்ணன்கள் ‘கவனித்த’ கவனிப்பில் கடுதாசி எழுதுவதையே கை விட வேண்டி வந்தது. அதன் பின்னர் ஒரு நாள் இரவு திடீரென கனவில் தமிழ்த்தாய் தோன்றி “மகனே பர்சனல் கடிதங்கள் கிடக்கட்டும்…நீ ஏன் பகிரங்கக் கடிதங்க எழுதக் கூடாது? உனக்காக இந்தத் தமிழ் சமூகமே ஏங்கித் தவிக்கிறது. வா…வந்து இலக்கியச்’சேவை’யோ…உப்புமாவோ செய்…” என வேண்டிக் கொண்டதன் விளைவுதான் விளைவுதான் நான் பத்திரிகை உல்கையே ‘ரட்சிக்க’ப் பயணப்பட்டது.

ஆனால் உண்மையில்…

‘பகிரங்கக் கடிதங்கள்’ என்றாலேயே உடனே பேனாவைத் திறந்துவிடுகிற நான், பர்சனல் கடிதங்கள் விஷயத்தில் மட்டும் படு சோம்பேறி. இந்தக் கடுதாசி எழுதுகிற ‘நோய்’ எப்பொழுது என்னைத் தொற்றியது என்பதை யோசித்தால் எண்பதுகளின் தொடக்கம் என்றே நினைவு. பிறருக்கு நான் எழுதியவற்றை விடவும் சுவாரசியமானவை மற்றவர்கள் எழுதியவைதான். அதில் எழுத்தாளர் செ.கணேசலிங்கன் எழுதிய
‘மான்விழிக்குக் கடிதங்கள்’, ‘குந்தவிக்குக் கடிதங்கள்’ மறக்க முடியாதவை. எவ்வளவோ சிக்கலான விஷயங்களைக் கூட எளிமையாகப் புரிந்து கொள்ளும் வண்ணம் எழுதப்பட்ட தொகுப்புகள் அவை. ஈழப் போராட்டம் தமிழகத்து வெகுஜன மக்களையும் தட்டி எழுப்பிய வேளையில் வெளிவந்தவை அந்த நூல்கள்.

எனக்குத் தெரிந்து ஒரு கடிதமே ஒரு கட்சியை இரு கட்சியாக்கிய அதிசயமும் இந்தத் தமிழ் மண்ணில் நடந்தேறியிருக்கிறது.
அதுதான் ‘உளவுத் துறை’ தி.மு.க.வின் நிரந்தரத் தலைவர் கலைஞருக்கு அனுப்பிய கடிதம். பாவம் வை.கோ.

எண்பதுகளின் இறுதிப் பகுதியில் ராஜீவ் – ஜெயவர்த்தனே என்கிற இரு சுயநலமிகள் தங்களது சொந்த நலனுக்காக ஈழத் தமிழர் வாழ்வின் மீது ‘ஒப்பந்தம்’ என்கிற பேரிடியை இறக்கிய நேரம். அரசு ‘அள்ளி வழங்கிய’ அவமானமும் வேதனையும் தாங்காது, தங்களது நேசத்துக்குரிய தமிழக மக்களைப் பிரிந்து கப்பலேறும் முன் ‘பாலம்’ இதழுக்கு கி.பி.அரவிந்தன் எழுதிக் கொடுத்துவிட்டுப் போன “எங்கள் நினைவுகளை உங்களிடம் கையளித்துள்ளோம்” என்கிற அக்கடிதம் எம்மை வாய்விட்டு அழவைத்த ஒன்று.
வெள்ளையனுக்கு எதிராகக் கப்பலையே விட்ட வ.உ.சி. தனது வாரிசுக்கு வேலை ஏற்பாடு பண்னச் சொல்லி பெரியாருக்கு எழுதிய கடிதம் இன்னமும் பலர் அறியாதது.

சமீபத்தில் கூட ஒரு சுவரொட்டியைப் பார்த்து தலையே சுற்றிவிட்டது.
“அன்புள்ள அப்பா அம்மாவுக்கு…நாங்க சிரிச்சுப் பேசுனா லவ்வூகிறீங்க…தம் அடிச்சா தப்பா? தண்ணி அடிச்சா தப்பா? தலையச் சீவுனா தப்பா?” என்று சட்டமன்ற பாணியில் சரமாரியாய்த் தத்துபித்தென்று கேள்விகள் கேட்டு ஒரு சுவரொட்டி. ‘துள்ளுவதோ இளமை’ படத்துக்காக. சுவரொட்டியில் ஒரு கடிதமே எழுதிவிட்டார்கள் இவர்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

ஒரே நேரத்தில் ‘தணிக்கை செய்யப்பட்டது’ என்கிற முத்திரையோடு ஒரு இந்து தீவிரவாத இயக்க நபரிடமிருந்தும், அவர்களால் தீவிரவாதத்தை நோக்கித் தள்ளப்பட்ட இசுலாமிய நண்பரிடமிருந்தும் வந்த விமர்சனக் கடிதங்கள் என்னை ஆச்சர்யத்தில் அமிழ்த்திய ஒன்று. எத்தனை கடிதங்களை வாசித்தாலும்…எத்தனையோ கடிதங்களை எழுதினாலும்…இன்றைக்கும் என்னால் மறக்க முடியாத கடிதம் ஒன்று உண்டு.

அநேகமாக அது அண்டன் செக்காவ் என்பதாகத்தான் ஞாபகம்.

அந்தக் கதை இதுதான்:

தனது பேரனைப் பாதுகாக்க வழியின்றி நகரத்திலுள்ள ஒரு பணக்கார வீடொன்றில் கொண்டுபோய்ச் சேர்க்கிறார் தாத்தா. அவர் தனது பேரனை விட்டுவிட்டு ஊர் திரும்பிய ஓரிரு நாட்களிலேயே சித்ரவதை செய்ய ஆரம்பிக்கிறது அப்பணக்காரக் குடும்பம். பல நாள் அடி, உதை, பட்டினிகளுக்குப் பிற்பாடு….எப்படியோ அவர்களது கண்களுக்குத் தப்பித்து கடிதம் ஒன்றினை எழுதுகிறான் அப்பேரன்:

“அன்புள்ள தாத்தாவுக்கு,
நீ விட்டுவிட்டுப் போன சில நாட்களிலேயே இங்குள்ளவர்கள் மிரட்ட ஆரம்பித்து விட்டனர்.
அவர்கள் தினந்தோறும் அடிப்பதையும், சூடு வைப்பதையும் என்னால் தாங்க முடியவில்லை.

நான் இன்றோடு சாப்பிட்டு மூன்று நாட்களாச்சு. எப்படியாவது உடனே வந்து
என்னை நமது கிராமத்துக்கே கூட்டிக் கொண்டு போய் விடு. மிக அவசரம்.”

என்று எழுதிவிட்டு பின்புறம் திருப்பித் தனது தாத்தாவின் முகவரியை எழுதுகிறான் அப்பேரன். இப்படியாக…..

பெறுநர்:
தாத்தா,
கிராமம்.

அவ்வளவுதான்.

இதுதான் உலகெங்கிலுமுள்ள பேரன்கள் தங்கள் துயரங்களைச் சுமந்தபடி தமது தாத்தாக்களுக்கு எழுதிய கடிதம்.

10 thoughts on “தலையைச் சீவினா தப்பா… ?

 1. Pala murai padithu irukirEn..intha katturaiyai..but still..ovvoRu murai vaasikkUm pOthum..”Thalayai seevina thappaaa? enkira intha katturai miga periya vEtriddathai yaerpaduthi vidukirathu.. nutpamaaga manitha nEyathai, orU pErum thuyarathin-ooDe..sOlli vittu pOi vidukiraar thozhar PAMARAN…Vaazhthukkal..

 2. paamaranin Ezhuthukkalil edhartthamum,egathalamum nirainthirukum.niraiya ezhutha vendum.periyarai pondru pala edhartha vathigal thondra vendum.atharku neengal innum muzhu veechil ezhutha engal vaazhthukal. ethirpaarapudan senguttuvan,elango,castro matrum ernesto

 3. மேலே ஒரு அன்பர் குறிப்பிடுவது போல இந்த கட்டுரை படித்த பின்பு மனதில் பெரும் பாரம் வந்து உட்காரும் இடம் இந்த பின்வரும் முகவரி பகுதிதான்.

  //பெறுநர்:
  தாத்தா,
  கிராமம்.//
  உண்மையில் இந்த கட்டுரையின் உயிர் இங்குதான் உள்ளது. இதற்க்கு முந்தைய பகுதிகளெல்லாம் ஒரு இலகுவான மனநிலைக்கு நம்மை தயார் படுத்தும் ஒரு முயற்சி என்றே சொல்ல வேண்டும். அப்படி இலகுவாக பயணப்படும் நமது மனம் தீடிரென்று இந்த முகவரி வாசித்து பாரம் சுமக்கிறது.

  இதே போல ஒரிரு வரிகளில் ஒரு பெரும் பாரத்தை மனதில் ஏற்றும் வலு கொண்ட, திரும்ப திரும்ப படிக்கும் போதும் கண்ணில் ஒரு துளியேனும் கண்ணீர் விட வைக்கும் இன்னோரு வரிகள் மிகைல் சோலகவ்வினுடைய ‘அவன் விதி’ சிறுகதையில் வருகிறது. பல இன்னல்களுக்குப் பிறகு தனது முதிர் பருவத்தில் ஒரு அமைதியான வாழ்க்கை வாழக் கிடைத்த ஒரு உழைப்பாளியின் வாழ்க்கையில் தீடிரென்று குறுக்கிடும் ஒரு சிறு சுட்டி சிறுவனின் ‘அப்பா என் செல்லக் குட்டி’ என்ற கூறி அந்த முதியவனை கட்டியணைத்து கொஞ்சம் வரிகள், படிக்கும் எவரையும் கண்ணில் நீர் கோர்க்க வைத்துவிடும்.

  அன்பு….. மனித நேயம்….. இவை என்றும் அழியா உணர்வுகள்.

  அசுரன்

 4. தோழமை நெஞ்சஙகளுக்கு,

  உங்கள் கருத்துக்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.
  இப்பூவுலகில் அன்பும்…மனிதநேயமும் மேலும் தழைக்க நம் தோழமை தொடரட்டும்.
  மகிழ்ச்சி.

  அன்புடன்,
  பாமரன்.

 5. உங்களின் பேச்சை மட்டும் கேட்டு மகழ்ச்சி அடைந்த நாங்கள் எழுத்தையும் எளிதாக கிடைக்கும் படி செய்ததற்கு நன்றி.. இணையத்தில் எழுதி தொடர்ந்து எங்களை மகிழவையுங்கள்

 6. எதனாலும் வகைப்படுத்த முடியாத மலை போன்ற பாரத்தை கட்டுரையின் இறுதி வசனத்தின் மூலமாக மனதிலே இறக்கி விட்டீர்கள்.

  எம்.ரீஷான் ஷெரீஃப் , இலங்கை

 7. அந்த கிராமம் முகவரி தருகின்ற வலி சொல்லில் அடங்காது. அபயக்குரல் கேட்கப்படாத திசையில் ஒலிக்கிறோமே என்பது கூட தெரியாத கொடுமையை நினைக்கும்போது பதருகிறது மனது

 8. முகவரி தெரியாது.
  இருந்தாலும்
  எழுதாமல்
  இருக்க முடியவில்லை.
  எழுதுவது அனுப்புவதற்காக மட்டுமல்ல
  துயரங்களை இறக்கி வைக்கவும்தான்.

 9. தோழரே!
  தங்களை வாசிப்பது, ரசிக மனோபாவத்தை வெறுக்கும் என் உள்ளத்தையும் ஈர்க்கிறது.

  தங்களிடம் என் உள்ளக்கிடக்கையை தெரிவித்து அழத்தோன்றிற்று, அழுவதென்றால் கண்ணீர் வடிப்பதில் மட்டுமல்ல, மடல் வடிப்பதிலும் முடியும் என்று நினைத்தேன், ஆதலால் இதோ என் குமுறல்,

  நானும் புலம்பெயந்து வாழும் தமிழன்தான், ஆமாம் பிழைப்புக்காக சொந்த ஊரிலிருந்து புலம் பெயர்ந்து மும்பையில் குடியமர்ந்த பெற்றோரோடு வாழும், தமிழன். ஆனால் தமிழைவிட்டு விலகும் வாய்ப்பு எனக்கு கிட்டவில்லை(தாய், தந்தை படிக்காத்து இதில் எனக்கு கிடைத்த லாபம்).ஏனென்றால் பெற்றோர்களுக்கும் வேறு மொழி தெரியாது, நான் வாழும் பகுதியில் வாழும் பகுதியில் வாழும் தமிழர்களுக்கும் வேற்று மொழி புலமை கிடையாது.(நான் வாழும் பகுதி தமிழர்கள் அதிகம் வாழும் தாராவி) ஆதலால், தமிழ் விலகவில்லை, தமிழுணர்வு விலகிபோயிற்று. என்னையும் ஒரு மராத்தியனை போல காட்டிக் கொள்ளும் ஆர்வத்தில் தமிழர்களோடு தொடர்பு இல்லாமல், மராத்தி மொழியை கற்று தேர வேண்டும் என்ற சமூக புறத்தூண்டுதல் என்னை மராத்தி மொழியை நோக்கி என்னை ஈர்த்திட்டு. இந்தியிலும், மராத்தியிலும் ஓரளவு சிறப்பாக கற்கும் திறனையும் இதனால் பெற்றேன்.

  தமிழர்களோடு தொடர்பு இல்லாமல் இருந்த்து ஒரு வகையில் நல்ல பலனாக இருந்த்து.ஏனென்றால், இங்கும் தமிழன் சங்கம் வைத்து சாதி/வயிறு வளர்க்கிறான். இதில் தாழ்த்தப்பட்ட வகுப்பு சகோதரர்களும் விதிவிலக்கல்ல. இவர்கள் அம்பேத்கர் படத்திற்கு ஊதுபத்தி கொழுத்தி வாழைப்பழத்தில் சொருகி, அதே உணர்வோடு பணம் பிடுங்கி விநாயகர் சதுர்த்தி கொண்டாடுகின்றனர். அந்த எண்ண ஓட்டம் நல் வாய்ப்பாக தமிழர்களோடு சேராதிருந்த்தால் என்னை ஒட்டவில்லை.

  ஆனால், இங்கு விமரிசையாக கொண்டாடப்படும் தசரா பண்டிகையின் போது ஒரு மராத்தியன் என்னை நான் யார் என்று சரியாக அடையாளப்படுத்தினான். அன்று எல்லோரும் தாண்டியா இங்கு அழைக்கப்படும் கோலாட்டம் ஆடிக்கொண்டிருந்தனர்.எனக்கு அனுமதி மறுக்கப்பட்ட்து. காரணம், நான் தமிழன். அன்றுதான் உரைத்தது, நான் யார் என்ற தேடல் தீவிரமாயிற்று, என்னுடைய வேரின் தேடல் என்னை தமிழுக்கு அருகில் கொண்டு நிறுத்திற்று.
  என் வேரை ஆய்வு செய்து பார்த்த்தில், நல்ல ஆழமான பழமையான வேராகத்தான் பட்ட்து. ஆனால், ஒரு சில கிளைகளை தவிர்த்து எல்லாமே சாதிக்கிளைகளாக இருந்த்து என்னை மேலும் பாதித்தது. என் மொழியின் பழமை கண்டு பெருமைப்பட்டு என் மராத்தி தோழர்களிடம் பெருமை கொள்ளலாம் என்று நினைத்த நேரத்திலேயே என்னை சிறுமை படுத்தியது இங்கு புலம்பெயர்ந்து வாழும் மும்பை தமிழர்களின் சாதி வெறி.

  சில மாதங்களுக்கு முன் ஒரு கொலை நடந்தது, இரு தாழ்த்தப்பட்டவர்களுக்குள் சண்டை பறையன், பள்ளனை வெட்டிவிட்டானாம். வெட்டும்போது பறையனிடம் வச்சுக்காதே என்று சொல்லி வெட்டினானாம்.
  என் நண்பன் ஒரு பெண்ணிடம் காதலை சொன்னானாம், அவனுக்கு அந்த பெண் மறுப்பு தெரிவிப்பதற்கு பதிலாக அந்த பெண் சொல்லியது இதுதான், “என் சாதிய பத்தி தெரியும் இல்லையா, ஒழுங்கா திருந்திடு இல்லை காதல் பட நாயகனுக்கு நேர்ந்த கதிதான்.”
  மும்பையில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் தன்னை தேவர் வகுப்பாக அடையாள படுத்திக் கொண்டவர், சொன்னாராம் “ அதென்ன தேவேந்திர குல வேளாளர், தேவேந்திரன்னா யாரு? தேவனுக்கு அப்பன், நாம வேணா யாருக்கும் அப்பனா இருக்கலாம், நமக்கு அப்பனா யாரும் இருக்க முடியாது.(அப்பன் இல்லாம எப்படிடா பிறந்தன்னு கேட்க அங்க யாருமில்லை).

  இயக்குனர் சூர்யா, மும்பையில் வந்து மீசையின் பெருமையபத்தி, மீசை என்னமோ ஒரு வகுப்பை சார்ந்தவங்களுக்கு மட்டும்தான் முளைக்கும் என்பதுபோல் பெருமை பேசிப்போறார்(ன்).
  என் நண்பன் வீட்டுக்கு போனால், “ இவன் என்ன சாதிடா?”ன்னு என் நண்பனோட தாயார் கேட்டாங்களாம் நான் குடித்த தேநீர் குவளையை கழுவும் முன் கேட்டார்களாம்.

  இப்படி தமிழின் பெருமைத் தேடி தமிழிடம் வந்து சேர்ந்த எனக்கு சாதி என்னும் உள்ளடிக்கிய தமிழை, தமிழனை பெருமையாக நினைக்கத் தோன்றவில்லை.

  இப்படி சாதி உணர்வில் முன்னேறி இருக்கும் புலம் பெயர்ந்த மும்பை தமிழன் தமிழுணர்வில் உங்கள் எல்லோரையும் மிஞ்சி விட்டான். மும்பை தமிழன் என்ற அமைப்பை ஏற்படுத்தி அதில் ஹிந்தியில் உரையாற்றுகிறான்,எங்கள் மும்பை தமிழன்.

  தமிழ் தெரியாது குழந்தைகளை வளர்த்தெடுப்பதை பெரிய கடமையாக நினைத்து, பெருமை பேசிக் கொள்கிறான் எங்கள் மும்பை தமிழன்.

  தமிழண்விலும், சாதியுணர்விலும் இவ்வளவு மேலோங்கியிருக்கும் தமிழன் மத உணர்விலும் சற்றும் சளைத்தவனல்ல என்று நிருபிக்கும் வகையில் சேது சமுத்திர திட்டத்தை பற்றி கூட்டப்பட்ட கூட்டத்தில் ஆர்எஸ்எஸ், விஎச்பி குரங்கு கூட்ட்த்தோடு சேர்ந்து கல்லெரிந்தவன் எங்கள் மும்பை தமிழன்.

  இப்படி எல்லா வகையிலும் தமிழ்நாட்டு தமிழர்களை விட ஒரு படி மேலிருக்கும் மும்பை தமிழனை வாழ்த்துங்கள் மேலும் உருப்படாமல் போகட்டும்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s