இது முன்னுரை அல்ல…

appa_final.gif

15 வேலம்பாளையம்.

இதுதான் அவனது ஊர். தமிழக வரைபடத்தில் தேடிப்பார்த்தாலும்
தென்பட்டுவிடாத கிராமம் அது. எண்ணி எழுபதே வீடுகள். ஆறேழு
கிலோ மீட்டர்கள் நடந்தேதான் போக வேண்டும் அவனது ஊருக்கு.

அவனது அப்பன் செங்கோடன், தானே நெய்த துணிகளைத்
தலையில் சுமந்து ஊர் ஊராய் விற்று வயிறு வளர்த்து வந்தவன்.
கணக்கய்யர் பையனும், மணியகாரர் மகளும் வண்டி கட்டிக் கொண்டு
போய் படித்து வர – அவனோ அந்த ஆறேழு கிலோ மீட்டரும்
நடையாய் நடந்து டவுனிலுள்ள பிஷப் ஸ்கூலுக்குப் படிக்கப் போனான்.

அப்போதுதான் திராவிட இயக்கங்கள் திரைப்படத் துறையில் தூள்
கிளப்பிக் கொண்டிருந்த நேரம்.

“தென்றலைத் தீண்டியதில்லை, ஆனால்
தீயைத் தாண்டியிருக்கிறேன்”

‘கருணாநிதின்னு உங்கள மாதிரி ஒரு பையன் எப்புடி எழுதீருக்கான்
பாருடா’ என்று அவனது தமிழாசிரியர் ஊட்டிய உணர்வுகளினூடே
அவன் வளர்ந்தான்.

அதுதான் அன்றைக்கு அவனுக்கு ஊட்டப்பட்ட அடிப்படை
அரசியல். காவிக்கு கறுப்பு காவடி தூக்காத காலம் அது.

தேர்வு முடிவுகள் வந்தபோது அந்தக் கூட்டத்துக்கே பெருங்கொண்டாட்டம்.

15 – வேலம்பாளையத்தில் பத்தாவது பாஸென்பது
லேசுப்பட்ட விஷயமா என்ன? ராசுக்குட்டி பாசானது அந்த கிராமத்துக்கே
‘கலேக்கட்டரு’ பதவி கெடைச்சாப்பல. “வள்ளியம்மா பையன்
பத்தாவது பாசாயிட்டானாமா….” செங்கோடம் பையன் பாசானது
தெரியுமா உனக்கு?”

அவனது நெருங்கிய உறவுகளில் சிலர் சாராயம் குடிப்பவர்களல்ல –
காய்ச்சுபவர்கள். சோறில்லாவிட்டாலும் சுயமரியாதையையே
சொத்தாகக் கொண்டிருந்தவர்கள் பலர்.

“……புள்ளைக்கு படிப்பெதுக்கு?” என்ற காலத்தில் பத்தாவது
பாசானவனாயிற்றே…உச்சி முகர்ந்தது ஊர். பத்தாதற்கு விவசாய
டிப்போவில் வேலைக்கும் போய்ச்சேர…தேடி வந்தது ‘பெரிய’ இடத்து
சம்பந்தம். திருப்பூரின் திசையை மாற்றி கொத்திக் கொண்டது கோவை
அவனை.

திருமணத்திற்குப் பிற்பாடு புகுமுக வகுப்புத் தேர்ச்சியும், பி.காம்
பட்டமும் அவனது துணிச்சலுக்கு முன்னே தூசாயிற்று. விவசாய
டிப்போவிலிருந்த அவனை விவசாய பல்கலைக் கழகம் தனது
ஊழியனாக வரித்துக் கொண்டது. பின்னர் அப்பல்கலையின் முதல்
கணக்கு அலுவலர்களுக்கான பட்டியலில் அவனது பெயரும் இடம்
பெறுவது தவிர்க்க முடியாததாயிற்று அன்றைக்கு.

ஆனால்…’ரைஸ்மில்காரரின் மச்சினன்’ என்பதோ…’அக்ரி
காலேஜின் கணக்கதிகாரி’ என்பதோ…எதுவும் ஏற்புடையதில்லை
அவனுக்கு. சுள்ளி பொறுக்கியும், சாராயம் காய்ச்சியும் வாழ்க்கையை
ஓட்டி வந்த தனது உறவுகளும், உற்றார்களும் உயர வேண்டுமே என்ற
உறுத்தல்தான் அவனுக்குள் என்றும் இருந்தது.

அநேக கனவுகளினூடே கல்யாணம் பண்ணிக் கொண்டவனுக்கு
மகன் பிறந்தபோது மட்டும் தலைகால் புரியவில்லை. பேர்
வைப்பதற்குக் கூட பெரும்பொழுது ஆயிற்று. சுத்தமான தமிழ்ப்
பெயராய்…அதுவும்…இதுவரை எவரும் வைக்காத தமிழ்ப் பெயராய்…
கவுந்தப்பாடி தமிழாசிரியர் குழந்தைசாமியும், அவனும் யோசித்து
யோசித்து பெயரிடுவதற்குள் நான்கு 365 நாட்கள் நகர்ந்து போயிற்று.

தனது தந்தை செங்கோடனைத் ‘தூக்கிக் கொண்டு’ போன போதுகூட
அழுகை வரவில்லை அவனுக்கு. ஆனால், அண்ணாதுரை இறந்தபோது
வீட்டிலிருக்கிற ‘மர்பி ரேடியோ’ முன்பு அவன் குலுங்கிக் குலுங்கி
குமுறியது அவன் மகனுக்கு இன்னமும் நினைவிலிருக்கிறது.

மனைவியோடு கோயிலுக்குப் போனாலும் வாசற்படியோடு
நின்றுவிடுவான் அவன். கோயில் திண்ணையிலும் ‘முரசொலி’ விரித்து
அமருவதுதான் அவனுக்கு அலாதி சுகம். நூர்தீன் பெரியப்பாதான்
அம்மாவை கோயிலினுள்ளே கூட்டிப்போய் ஒவ்வொன்றாக
விளக்குவார். அவன் தனது தலைமுறைக்கு சாதி கடந்தும், மதம் கடந்தும்
மனிதர்களை நேசிக்கக் கற்றுக் கொடுத்தான்.

அவன் தனது மகனை நூர்தீனைப் பெரியப்பா என்றும், தலித் பாலசுந்தரத்தை சித்தப்பா என்றும்
அக்கிரகாரத்து முத்துராமனையும், ஆலிவரையும் மாமாவென்றும் அழைக்கப் பழக்கப்படுத்தினான்.

ஆனால் சொந்தங்களை சார் என்று அழைத்தான் அவனது மகன். “என்னடா சம்பு இப்புடி உன் பையனை வளத்திருக்கே?” என்பவர்களது கேள்விக்கு ஒரு நமட்டுச் சிரிப்புதான் அவனது பதிலாக இருக்கும். சிறுபான்மையினர் மீதான நேசம்…தலித்துகளுடனான தோழமை….பிற்படுத்தப்ட்டவர்களுடனான பாசம் என வளர்ந்தவன் அதன்படியே அவனது வாரிசையும் வளர்த்தான்.

ஆயினும் அவனது பொறுமைக்கு நேரெதிராய் ஆத்திரமும், ஆவேசமும் கொண்ட அவனது மகன்.
அவனது அமைதிக்கு நேரெதிராய் ஆர்ப்பாட்டத்தைத் தவிர வேறெதுவுமறியாத அவனது மகன்.
இருப்பினும் எல்லாவற்றையும் அனுமதித்தான் அவன். கருத்துச் சுதந்திரத்திற்கு கடிவாளமிடவில்லை
அவன். மகனைத் தோழனாய்ப் பார்த்தான் அவன்.

மகனது கல்லூரி லீலைகளையும், கலாட்டாக்களையும்கூட சுற்றுப்புறத்தில் சீரழிந்திருந்த
கலாச்சாரச் சூழலினையும் கவனத்தில் கொண்டே கண்டித்தான் அவன்.
மகனது கிறுக்குத்தனங்களையும், குறும்புகளையும் களையச் சொன்னான் கனிவோடு.

மகனும் பிற்பாடு தமிழ் மீதும் , திராவிடத்தின் மீதும் தனது பார்வையைத் தழையவிட….அவனுக்குள் ஒரு பெருமிதம்.

‘ஆறுமுறை மின்சாரம் தாக்கியும் உயிரிழக்காத அர்ஜன்டைனா மனிதர் அலெக்ஸ் இவர்தான்’ என
அவனது மகன் எழுதிய அபத்தத் துணுக்குகள் அவனுக்கு ஏற்புடையதில்லையாயினும்….
துவக்கம் துவண்டாலும் தொடரத் தொடர துளிர் விடக்கூடும் எனத் தெரிந்து வைத்திருந்தான் அவன்.

நேரடியாக ஊக்குவிக்காவிடினும் மறைமுகமாக மனதுக்குள் ரசித்தான் அவன்.
மகன் எழும் முன்னரே வாசகர் கடிதத்தில் அவனது பெயர் தென்படுகிறதா எனத் தேடிப்பார்த்த பின்னரே தேநீர் அருந்தினான்.

அவன் தன் மகனுக்கு விட்டுச் சென்றதெல்லாம்…சாதி…மத…மொழி…இனம்…நிலம் கடந்து மனிதர்களை நேசிக்கக் கற்றுக் கொடுத்ததுதான்.
அவன் போய்ச் சேர்ந்த பிறகு அந்த வேலம்பாளைய வீட்டை பதினேழாயிரத்துக்கு விற்றுவிட்டு
ஊர் வந்து சேர்ந்தார்கள் அவனது மனைவியும் மகனும்.

“வெல்டன் Mr. கோமல், தூள் கிளப்பிவிட்டீர்கள்” என வாசகர் கடிதம் எழுதுபவனாய்….
பூவாளிக்கும், முத்தாரத்திற்கும் துணுக்கு எழுதுபவனாய்….
‘தனிச் சுற்றுக்கு மட்டும்’ என்று அச்சடித்து பத்திரிக்கை நடத்துபவனாய்….
பிராவிடண்ட் பண்டில் லோன் போட்டு சிறுசிறு புத்தகங்கள் வெளியிடுபவனாய்….
வளர்ந்த மகன் பிற்பாடு வெகுஜனப் பத்திரிக்கைகளால் ஈர்க்கப்பட்டு சினிமா, அரசியல் விமர்சகனாய்
“வளர்ந்த” போது சூட்டிக் கொண்ட பெயர் பாமரன்.

மகனுக்குள் துருத்திக் கொண்டிருக்கும் துயரமெல்லாம் தனது எழுத்தை மறைந்திருந்தாவது படிக்க…

அந்த 15 – வேலம்பாளையத்து

‘ராசுக்குட்டி’ என்கிற

‘சம்பு’ என்கிற

செ.சண்முகசுந்தரம், பி.காம்., இல்லையே என்பதுதான்.

Advertisements

2 thoughts on “இது முன்னுரை அல்ல…

  1. எழுத்து பயில வந்த என் போன்றவர்களுக்கு தங்களின் பதிவுகளை படிப்பதே பயிற்சி பெறுவதாக அமைகிறது. நன்றி. வாழ்த்துகள்.

  2. அன்பு பாமரன்….உடனடி பதில் தேவை….. நம் மக்களுக்கு ஸென் கதைகள் அவசியமா?….இவர்கள் எல்லா திருக்குறளையும் படித்து முடித்து விட்டார்களா??????

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s