தேசபக்தத் திலகம் சேரன் ஐயா சமூகத்துக்கு

“நீங்கள் அனாவசியமாக கூச்சல் போட்டு அமளி செய்தால், மேலும் சில உண்மைகளை வெளியிட வேண்டியிருக்கும். அது உங்களுக்கு சாதகமாக இருக்காது.

நமது நாட்டில் நாள் ஒன்றுக்கு மூன்று அணா (18 பைசா) வருமானத்தில் காலந்தள்ளுபவர்களின் எண்ணிக்கை 27 கோடி. மொத்த ஜனத்தொகையில் 30 சதவிகிதம் வறுமைக் கோட்டிற்குக் கீழே இருக்கிறது. இது ஒரு பக்கம். மறுபடியும் குறிப்பிட்ட ஒரு முதலாளியின் குடும்ப வருமானம் நாள்
ஒன்றுக்கு மூன்று லட்ச ரூபாய். பிரதம மந்திரி நேருவுக்காக ஒவ்வொரு நாளும் ரூ.25,000 செலவழிக்கப்படுகிறது. நாடா இது?

நாட்டில் இப்போது 17 அல்லது 18 கோடி ஏக்கர் நிலம் தரிசாகக் கிடக்கிறது. அதை சாகுபடிக்குக் கொண்டுவர இந்த அரசாங்கத்திற்கு வக்கில்லை. திறந்த மாடியிலும், பூந்தோட்டங்களிலும் உணவு பயிரிடச் சொல்லுகிறார் நமது பிரதமர் நேரு. எப்படி இருக்கிறது கதை…?

பாராளுமன்றத்தில் நேரு மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் போது டாக்டர் லோகியாவின் பேச்சு.

தேசபக்தத் திலகம் சேரன் ஐயா சமூகத்துக்கு,

கும்படறஞ்சாமி.

அசோக வனத்து சீதை கணக்கா இந்தத் திரையுலகம் உங்கள மாதிரி ஒரு ஆளுக்காகத்தான் இத்தன காலமும் தவம் கெடந்துச்சுன்னு சொன்னா தப்பே இல்லீங்க. உங்க மொதோப்படமே படு சூப்பருங்க. சாதிச் சண்டைல சாகாதீங்கடான்னு நீங்க சாடுனசாடு இருக்கே…யப்பா…
சின்னச் சின்ன குத்தம் கொறை இருந்தாலும் இந்த அளவுக்காவது சொல்ல முடிஞ்சதேன்னு நாங்க சந்தோசப்பட்ட படமுங்க ‘பாரதி கண்ணம்மா’. ரெண்டாவதா வந்த பொற்காலமும் உடல் ஊனம் ஊனமே இல்லன்னு உறுதியாச் சொல்லுச்சுங்க. இது ரெண்டையும் பாத்தப்புறம் தளபதி சேரன் தலைமை ரசிகர் மன்றத்துக்கு முகூர்த்தக்கால் போட்ற வேண்டியதுதான்னு
முடிவே பண்ணீட்டன்னா பாத்துக்குங்களேன். சரி…நம்ம மன்றத்த எப்புடியாவது ஆரம்பிச்சரலாம்னு பசங்ககிட்டே கேட்டப்ப….”அதெல்லாம் நீ நெனச்ச மாதிரி பண்ணீர முடியாது. அதுக்கு மொதல்ல நம்ம மன்றத்த மொறையாப் பதிவு பண்ணனும்…கொறைஞ்சது ஏழு பேராவது வேணும்…பீடி குடிக்க மாட்டேன்… ரோட்டுல வம்பு பண்ன மாட்டேன்னு விதிமுறைகளெல்லாம் எழுதிக் குடுத்தாத்தான் பதிவு பண்ண முடியும்…”னாங்க.

இந்த எழவெல்லாம் நமக்குத் தெரியாதே. இப்ப என்ன பண்றதுன்னேன்.

“உனக்கென்ன உன்னோட புரட்சித் தளபதி சேரன் மன்றத்தப் பதிவு பண்ணனும் அவ்வளவுதானே… நாளைக்குக் காத்தால நேரா பத்தர ஆபீசுக்குப் போ…போயி நம்ம ‘தகுதி திறமையத்த தண்டபாணி’ சீட்டு எங்கேன்னு கேளு. யாரக் கேட்டாலும் டக்குன்னு சொல்லுவாங்க. அவன் பாத்துக்குவான் மத்தத’ன்னு சொன்னானுக.

அதே மாதிரி பத்தர ஆபீசுக்குள்ள நொழஞ்சதுமே “வாடா புண்ணாக்கு…எங்க இந்தப்பக்கம்”ன்னான் ‘தகுதி திறமையத்த தண்டபாணி’. எங்கப்பன் புண்ணாக்கு வியாபாரம் பண்ணப்போயி வருமானம் வந்துச்சோ இல்லியோ
ஆனா..எனக்கு இந்தப் பேரு வந்ததுதான் மிச்சம்.

வந்த விசயத்தச் சொன்னதுதான் தாமதம்.

திடீர்ன்னு வெறிகெளம்புனவன் கணக்கா ‘பாரத் மாதாக்கீ ச்சே’ன்னு கத்த…
சொட்டைத் தல ஹெட்கிளார்க் என்னவோ ஏதோன்னு நிமிர்ந்து பார்க்க…
சுத்தியிருந்த மத்தவங்க என்னையும் அவனையும் ஒரு மாதிரியா பார்க்க…
காக்கி வெள்ள யூனிபார்ம் போட்ட பியூனு “என்ன சார் டாக்டர்கிட்ட கூட்டிட்டுப் போகவா வந்தீங்க…?”ன்னு என்னக் கேக்க…ஒரே களேபரம்….

“ஒண்ணுமில்ல கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டுட்டேன்…அவ்வளவுதான்…வா டீ சாப்பிடலாம்”ன்னு  வெளியே கூட்டீட்டு வந்துட்டான்….நம்ம ‘தகுதி திறமையத்த தண்டபாணி’.

வந்த விசயத்த மறுபடியும் ஞாபகப்படுத்த….

“அதுசரி உங்க புரட்சித் தளபதியோட லேட்டஸ்ட் படத்தை பார்த்துட்டியா…?”ன்னான்.

இப்பதான வந்திருக்கு அதுவுமில்லாம கையில வேறு ஏழு ரூபா முப்பத்தஞ்சு காசுதான் இருக்கு. எப்படி இருந்தாலும் சனிக்கெழமைக்குள்ள பாத்துருவேன்னேன்.

என்ன நெனச்சானோ என்னவோ உடனே ஜோப்புக்குள்ளே கைய உட்டு பத்து ரூபா எடுத்து நீட்டுனான்…

“நீ இப்ப என்ன பண்றே…முதல்ல கவிதா தியேட்டர் போற….போயி உங்காளோட மூணாவது புரட்சித் தயாரிப்பான தேசியகீதம் பாக்கறே…அப்புறம் நேரா ரெண்டு மணிக்கு என் சீட்டுக்கு வர்ர…
நான் அதுக்குள்ள உனக்கு வேண்டிய பாரமெல்லாம் ரெடி பண்ணி வெச்சிருக்கேன்…கெளம்பு…”ன்னு சொல்லீட்டு தலைய அந்தப் பக்கமாத் திருப்பி நக்கலா ஒரு சிரிப்பு சிரிச்சான்.

நம்ம தகுதி திறமையத்த தண்டபாணி இருக்கானே கொஞ்சம் வில்லங்கமான ஆளுதான். அவன் வெசமமா சிரிச்சதுல ஏதாவது வெவகாரம் இருக்குமோன்னு தோணுச்சு மனசுக்குள்ள.  இருந்தாலும் உங்க படத்துக்கு ஒருத்தன் காசையும் குடுத்து பாருடா படத்தேன்னு சொன்னா…மாட்டேன்னு சொல்ல எனக்கென்ன மண்டைல மசாலாவா இருக்கு? எல்லாம் ரெடி பண்ணி வையு வந்தர்றேன்னுட்டு கிளம்பினேன்.

மறுபடியும் அதே சிரிப்பு. எரிச்சல் எரிச்சலா வந்தது . என்ன பண்றது…நம்ம மன்றத்த பதிவு பண்ணனுமேன்னு யோசிச்சுகிட்டே சைக்கிள மிதிக்க ஆரம்பிச்சேன்.

உள்ளே போகவும் டைட்டில் போடவும் செரியா இருந்துச்சுங்க. மொதல் சீன்லயே அந்தக் கதர் சட்டை,  கதர் வேட்டி கட்டுன பெரியவரு தேசியக் கொடியை ஏத்தி ‘வந்தே மாதரம்’ன்னு முழங்கறப்போ என்னோட மயிர்க்காலெல்லாம் அப்படியே குத்திகிட்டு நின்னுடுச்சுங்க. ரொம்ப நாள் கழிச்சு சரியான படத்துக்குத்தான் வந்திருக்கம்னு அப்பவே புரிஞ்சு போச்சு. சீட்டுல நிமிர்ந்து உட்கார்ந்து படம் பார்க்க ஆரம்பிச்சிட்டேன். நடிகனுக்காக  பேனர் கட்டறவனையும்…போஸ்டர் ஒட்டறவனையும்…
நடிகனுக்காக ரசிகர் மன்றம் வெக்கறவனையும்…நீங்க புடுச்சு வாங்கு வாங்குன்னு வாங்கறப்போ விசில் சத்தம் தியேட்டர்ல காதப் பொளக்குதுங்க.

இதுதான்…இதேதான்… நாம எதிர்பார்த்த படம்னு ரொம்ப சந்தோசமாயிடுச்சுங்க.
கொஞ்ச காலமா இந்த நாட்டு மக்களுக்கு இந்தியன்கிற உணர்வே இல்லாமப் போச்சு.
அந்தக் கவலை தாங்காமத்தான் இப்படிப்பட்ட தேசபக்திப் படத்தக் குடுத்திருக்கீங்க….

அந்தக் கிராமத்துக்காரங்க தண்ணியில்லாம கஷ்டப்படுறதும், தண்ணீருக்காக பல மைலு நடந்தே போயி புடுச்சுகிட்டு வர்றதையும் தத்ரூபமா எடுத்திருக்கீங்க. கெடச்சுகிட்டு இருந்த ஒரு குடம் தண்ணியையும் ‘பக்கத்து ஊர்க்காரனே’ குடுக்க மாட்டேன்னு சொல்றப்ப அவுங்க படற பாடு இருக்கே…சொல்லி மாளாதுங்க.

கெரகம்… அந்த நேரம் பார்த்துத்தானா காவிரில தண்ணி உடமாட்டேன்னு 1924லுல இருந்து தகராறு பண்ணீட்டிருக்கிற கர்நாடக இந்தியன் ஞாபகத்துக்கு வரணும்? ஆனா அந்த ஞாபகம்
யாருக்கும் வந்தறக்கூடாதுங்கிற கவலை ஒரிஜினல் இந்தியனான உங்களுக்கு இருக்காதுங்களா….?

“பாவம் அவுங்களுந்தா என்ன பண்ணுவாங்க…இருக்கறதே மொழங்கால் அளவுத் தண்ணி..
அதையும் குடுத்துட்டு அவுங்க எங்க போவாங்க”ன்னு நீங்க கர்நாடக இந்தியனுக்காக…
இல்லயில்ல பக்கத்து கிராம இந்தியனுக்காக பரிஞ்சு பேசற இடமிருக்கே…இந்த இடம் ரொம்ப டச்சிங்குங்க.

இதுக்காகவே உங்களுக்கு கர்நாடக அரசோட மாநில விருது கெடைச்சாலும் ஆச்சர்யப்படறதுக்கில்ல.

‘ரெண்டு கிராமத்துக்கு தண்ணியில்லன்னா ரெண்டு கிராமமும் சேர்ந்து மாநில அரசுக்கெதிரா போராடோணும்….
பத்து பஸ்ஸக் கொளுத்தோணும்…எம்.எல்.ஏ.வக் கொண்டாந்து கட்டி வச்சு ஒதைக்கோணும்’னு நீங்க சொல்ற வீரமிருக்கே வீரம்…அதுக்கே குடுக்கோணும் அவார்டு.
ரெண்டு கிராமத்துக்குள்ள தண்ணீர்ப் பஞ்சம்ன்னா இதப் பண்ணலாம்….
ரெண்டு மாநிலத்துக்குள்ள தண்ணீர்ப் பஞ்சம்னா…யாரக் கடத்தலாம்னும் நீங்க சொல்லீருந்தா இன்னும் டச்சிங்கா இருந்திருக்கும்.

ரோடே இல்ல..ரோடிருந்தா சரியா இல்ல…சரியா இருந்தா பஸ்சு வராது…பஸ்சு வந்தாலும் ஒழுங்கா ஓடாது…
ஒழுங்கா ஓடுனாலும் டிரைவர் செரியில்ல…இதெல்லாம் உண்மைலயே  நியாயமான பிரச்சனைகதாங்க.
நீங்க ஒரு பேட்டில சொல்லியிருந்த மாதிரி இந்தப் படமே ஒரு ‘மனு’ மாதிரிதாங்க.

மக்களோட இந்தமாதிரி அடிப்படைப் பிரச்சனைகளப் பத்தி பேசற படங்கள் ரொம்ப ரொம்பக் குறைவுங்க….

இருந்தாலும் பாருங்க…
இது இந்த சனங்களுக்குப் புரியவே மாட்டேங்குது.

 (மிகுதி நாளை….)

Advertisements

6 thoughts on “தேசபக்தத் திலகம் சேரன் ஐயா சமூகத்துக்கு

 1. பாமரன்,
  இதுல உள்குத்து எதுவும் இல்லையே? நீங்க பாராட்டறீங்களா இல்ல கவுக்க போறீங்களான்னே தெரியலை :))

 2. சந்தோஷ், படமே இப்பதான் ஆரம்பிச்சிருக்கு… அதுக்குள்ள கிளைமேக்ஸ் பத்தி கேட்டா எப்படி நண்பரே?

  அன்புடன்
  பாமரன்

 3. அப்படி போடு அருவாள. மாயக்கண்ணாடி பாத்துட்டு சேரனை என்ன பண்ணப்போறிங்களோ பயமா இருக்கு

 4. ஒரு வழியா, தமிழ்மண டாபிகலா எழுத ஆரம்பிச்சிருக்கீங்க. மாயக்கண்ணாடி வரை போவீங்களா? 😉

 5. //சந்தோஷ், படமே இப்பதான் ஆரம்பிச்சிருக்கு… அதுக்குள்ள கிளைமேக்ஸ் பத்தி கேட்டா எப்படி நண்பரே?//

  :)) சரிங்க ஆபீசர் :))

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s