தேசபக்தத் திலகம் சேரன் ஐயா சமூகத்துக்கு -2

முதல் பாகத்தின் தொடர்ச்சி…

நீங்க ரசிகர் மன்றமே வேண்டாம்னு சொல்லீட்டு ‘காந்தி, காமராசருக்கு அடுத்தபடி ரஜினிதான்’ன்னு சொன்னமாதிரி…
“போயி உங்க அப்பன் ஆத்தாவப் பாருங்கடா”ன்னு முரளி வசனம் பேசறப்ப பாத்து ஒரு இந்தியன் ‘இளம் புயல் முரளி வாழ்க’ன்னு தியேட்டர்ல கத்தறான். எனக்கு மகா கடுப்பாயிடுச்சு.

சரியான ஆசுபத்திரி இல்லாம சனங்க அலையறதும்…நெற மாச புள்ளத்தாச்சி பஸ்சுலயே உசுர உடறதும்… பாக்கறப்ப உண்மையிலேயே உங்களுக்கு உள்ள நல்ல மனசு புரியுதுங்க. அதுக்குக் காரணமான
அரசாங்கத்தைத் தட்டிக் கேக்கணும்னு இளைஞர்கள் பொங்கி எழறதும் இந்தக் காலத்துக்குத் தேவையான ஒன்ணுங்க.

ஆனா…அதுக்காக நீங்க சொல்ற ‘தீர்வு’ இருக்கே…அதுதாங்க கொஞ்சம் ஒதைக்குது. படத்துல பத்து வெள்ளக்காரன “அகிம்சையாச்” சுட்ட தியாகி எத்திராசு…அதான் நாகேசு…கொழப்புன மாதிரி உங்க கதைய வெவாதிக்கறப்போ உங்கள எவனோ கொழப்பீட்டான் போலிருக்கு.

ஏனுங்க சேரன்…ஒரு எம்.எல்.ஏ.வைக் கடத்துனா ஒரு ஊரு செரியாகும்…
ஒரு எம்.பி.யைக் கடத்துனா ஒரு மாவட்டம் செரியாகும்… ஒரு முதல்வரக் கடத்துனா ஒரு மாநிலம் செரியாகும்…னு சொல்றீங்களே ரொம்ப சரி… அதே மாதிரி…ஒரு பிரதமரக் கடத்துனா ஒரு நாடே செரியாகும்… அதென்னமோ யு.நா…இல்லயில்ல….ஐ.என்… அடச்சே ரெண்டுமில்ல…அதான் ஐ.நா. சபைத் தலைவரு கோபி அண்ணனோ… சத்தியமங்கல தம்பியோ இருக்காராமா… அவுரக் கடத்துனா இந்த உலகமே செரியாகும்களே…

இந்தத் தமிழ்நாட்டு சனங்க இப்ப உங்கள கையெடுத்துக் கும்படற மாதிரி
இந்த உலகத்து சனமே உங்களக் கும்பிட்டிருக்குமேன்னு சொல்ல வந்தேன்.

உங்குளுக்கு எந்தச் சாயமும் வந்தரக் கூடாதேங்கற கவலைல நீங்களே எல்லாச் சாயத்தையும் எடுத்து உங்க மேல பூசிக்கிட்டிருக்கறதுதான் சகிக்கல.

ஊர்ப்பெருசு மூவர்ணக் கொடிய ஏத்தி, வந்தே மாதரம் சொல்றப்போ….
சனங்க மாதிரியே…நானும் நீங்க காங்கிரசுதான்னு நெனைக்க…

அடுத்த சீன்லயே…
‘தேசியக் கொடிக்கும் காங்கிரஸ் கொடிக்கும் வித்தியாசம் தெரியாதவங்க’ன்னு நீங்க ஆப்படிக்க…

காந்தி வாங்கிக் குடுத்த சொதந்திரம் படாதபாடு படுதுன்னு தியாகி பொலம்ப….
அட நீங்க காந்தி ஆளுதான்னு நாங்க நெனைக்க…

அடுத்த சீன்லயே…
‘உசிரே போனாலும் ‘அந்தாளு’ செலைய நான் தெறக்க மாட்டேன்’னு காந்தி துண்டு போட்டுத் தாண்டுன பகத்சிங் படத்தைக் காட்டி தியாகி நெஞ்சை நிமித்த….
அட…இவுரு பகத்சிங் ஆளுதான்னு நாங்க நெனைக்க…

அடுத்த சீன்லயே…
காந்தியும் பகத்சிங்கும் உசுரோட இருந்தாலே ஒத்துக் கொள்ளாத…இ.எம்.சங்கரன்…அதாங்க…’நம்பூதிரிபாடு’ படம் போட்ட புஸ்தகத்தக் காமிச்ச ‘இருந்தா இவுரு மாதிரி இருக்கோணும்’…னு கதாநாயகன் பேச…
அட…இவுரு சுத்தி அருவாள் ஆளுதான்னு நாங்க நெனைக்க…

அடுத்த சீன்லயே…
காந்தி…நம்பூதிரி ரெண்டு பேருக்குமே ஒத்து வராத நக்சலைட்டுகளைப் பத்தி புகழ….
அட…இவுரு நம்ம நக்சல்பாரி ஆளுதான்னு போலிருக்குதுன்னு நாங்க நெனைக்க….

அடுத்த சீன்லயே….
காந்தி- பகத்சிங் – நம்பூதிரி – நக்சலைட்டு..ன்னு இவுங்க யாருமே ஒத்துக்காத ஆர்.எஸ்.எஸ்.காரனுக கணக்கா நெட்டுக்குத்தலா குங்குமத்த நெத்தில வெச்சுகிட்டு முதல்வரக் கடத்தப்போக…
அட…இந்தாளு ஆர்.எஸ்.எஸ்.காரன் போலிருக்குன்னு நாங்க நெனைக்க….
தல கிறுகிறுன்னு சுத்தீருச்சுங்க சேரன்.

பீசுக்குள்ள என் தலை தெரிஞ்சதுமே த.தி.தண்டபாணி வெவகாரமா ஒரு இளிப்பு இளிச்சான். இந்தத் தடவை கோபம் வர்றதுக்கு பதிலா வெக்கம் வந்துச்சு எனக்கு.

“வாங்க வந்தே மாதரம்…படம் எப்படி?”ன்னான்.

ம்ம்…பரவால்லே…ன்னேன்.

“இழுக்காதே…சும்மா சொல்லு”ன்னான்.

சனங்க சோத்துகில்லாம சாகறாங்களேன்னு நம்மாளுக்குக் கவலை இருக்கு.
ஆனா அத எப்படிச் சொல்றதுங்கறதுலதான் கொழப்பம். எடைல எவனோ பூந்து கொழப்பீட்டான் நம்மாளன்னேன்.

“உங்க பார்ட்டி கொழம்பவுமில்லே..எவனும் கொழப்பவுமில்ல…உங்காளு தெளிவாத்தான் இருக்காரு”ன்னான் த.தி.தண்டபாணி.

எப்பவுமே இவன் இப்படித்தான்.
நாம ஆணைக்கு அர்றம்ன்னா…இவன் குதிரைக்கு குர்றம்பான்.
நாம எந்தப் படம் நல்லாருக்குன்னு சொல்றமோ அது சகிக்கலைம்பான்.
எத நாம சகிக்கலைன்னு சொல்றமோ அதுதான் சூப்பரும்பான்.
நான் கொழம்பிப்போன விசயங்களைச் சொன்னேன்.

“இதுல என்ன கொழப்பம்? உன் ஆளு மட்டுமில்ல…இந்தியாவே கொழம்பித்தான் கெடக்கு….
தமிழ்நாட்டு இந்தியன் தண்ணி கேட்டா…கர்நாடக இந்தியன் பின்னி எடுப்பான்.
பம்பாய்ல பிச்சை எடுத்தாக் கூட….பம்பாய் இந்தியன் தொரத்தித் தொரத்தி அடிப்பான்.
இருக்கற கோவணத்தையும் உட்டுட்டு ஓடியாற நெலமைல வந்தேமாதரம் பாடறதாவது…பாரத மாதாவுக்கு ச்சே போடறதாவது…
எனக்கு அதெல்லாம் பெரிய பிரச்சனையே இல்ல….
இவுங்கதான் நொடிக்கு நூறு தரம் ‘இந்தியன்’ ‘இந்தியன்’கறவுங்க ஆச்சே..
அப்புறம் எதுக்காக ஒரு தமிழனக் கடத்தணும்? இவுங்க கொள்கைப்படி ஒரு இந்தியன…
அதான் பிரதமரக் கடத்தறதுதான? அதைவிட முக்கியமா பரமக்குடில உள்ள பகத்சிங் சாலைல இருந்து வர்றாரே தியாகி எத்திராசு…
அவுரு போட்டாக்களைக் காட்டி பெருமைப்படற காட்சி இருக்கே…அது கண்கொள்ளாக் காட்சி.

இந்த நாட்டுல சரியா அரசியல் தெரிஞ்ச எவனும் பகத்சிங்கை ஒத்துக்கறவன் காந்திய ஒத்துக்க மாட்டான்.
காந்திய ஒத்துக்கறவன் பகத்சிங்கை ஒத்துக்க மாட்டான்.
ஏன்னா ரெண்டு பேருமே எதிரெதிர் முனைக.
காந்திய சாகற வரைக்கும் பகத்சிங் ஒத்துக்கல.
பகத்சிங்கை செத்த பிறகும்கூட காந்தி ஒத்துக்கல.

அதுக்கு முன்னதா உங்க தியாகி புல்லரிச்சுப் போயி ஒரு படத்தக் காமிச்சு சொல்றாரே…
“கொடிப் போராட்டம் சத்தியமூர்த்தி ஐயா”ன்னு….அப்ப எனக்கு நெசமாவே புல்லரிச்சுடுச்சு.
அந்த சத்தியமூர்த்தி ஐயாவோட வண்டவாளம் தெரியுமா உனக்கு?

இந்தத் தமிழ் மண்ணுல ஒரு குறிப்பிட்ட சாதிப் பெண்கள் மட்டும்
‘பொட்டுக்கட்டுதல்’ங்கிற பேரால தேவதாசிகளா ஆக்கப்பட்டு செத்துகிட்டு இருந்தப்ப….
அத எதுத்துப் போராடுனாங்க ஆயிரக்கணக்கான தமிழ்நாட்டு இளைஞர்கள்…சாரி…தமிழ்நாட்டு இந்தியர்கள்.

அப்போ “தேவதாசி முறைங்கிறது எங்க இந்து மதத்தோட ஒரு அம்சம்.
அதத்தடை பண்ணக்கூடாது. தடை பண்ணுனா கலைகள் அழிஞ்சு போயிடும்”ன்னு அடாவடித்தனம் பண்ணுனாரு சத்தியமூர்த்தி ‘ஐயா’.

இதக்கேட்டதும் தமிழ்நாட்டோட மொதல் பெண் டாக்டர்.முத்துலட்சுமி அம்மா எந்திரிச்சு “கலைகள் அழியுதுங்கிற கவலை அவருக்கு இருந்தா….அவரு வீட்டுப் பொண்ணுகள வேணும்ணா தேவதாசிகளாக்கி
‘கலையை’ வளர்க்கட்டும்…இனிமேல் எங்க வீட்டுப் பொண்ணுக இதுக்குத் தயாரா இல்ல”ன்னு பொட்டுல அடிச்ச மாதிரி உட்ட உடனதான் அடங்குனாரு ‘கொடிப்போராட்டம் சத்தியமூர்த்தி’.

அப்பேர்ப்பட்ட ‘தேசத் தியாகியே’ இந்த லட்சணத்துல இருந்திருந்தா
மத்தவங்க எப்படி இருந்திருப்பாங்கன்னு யோசிச்சுப்பாரு”ன்னான் த.தி.தண்டபாணி.

“கக்கன்….கக்கன்ங்கிறாங்களே அவுரு உண்மைலயே எளிமையா வாழ்ந்து அனாதையா இறந்தவரு.அவுரோட கடைசிக் காலத்துல நீங்க சொல்ற அந்த மிட்டா மிராசு தேசபக்த பரம்பரைக யாரும் அவர சீந்தல. அந்த வேளையிலும் ஓடிபோயி பார்த்தவங்க சேரன் கரிச்சுக் கொட்டற திராவிட இயக்கத் தலைவருகதான்.

39 ஆம் வருசம் கக்கன் போன்றவர்கள கோயிலுக்குள்ள அனுமதிச்சதால தீட்டுப் பட்டிருச்சுன்னு கருவறையைப் பூட்டீட்டுப் போன பட்டர்களைப் பின்னி எடுத்து…பூட்டை ஒடச்சு…அவுங்கள சஸ்பெண்ட் பண்ணி…
புதுப் பட்டர்கள நியமிச்சார் ஒருத்தர். அதுனால வந்த கிரிமினல் வழக்குகளையும் துணிச்சலா சந்தித்தார் அவர்.
அவரு யாரு தெரியுமா….? அவர்தான் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நிர்வாக அதிகாரியா இருந்த ஆர்.எஸ்.நாயுடு.
அவுரு இந்த நாட்டு மக்களுக்கே குல்லாப் போட்டு அல்வாக் குடுத்த கட்சிக்காரரு இல்ல…அவரும் திராவிடக் கட்சிக்காரருதான்.

தேசபக்தர் ராஜாஜி கட்சிக்குள்ள இருந்துகிட்டே காமராசருக்குக் குழி வெட்டின கதைகளையும்…
அதுக்கு மகா ஆத்மா காந்தி ராஜாஜிக்கு கொம்பு சீவி விட்ட கதைகளையும்…
கதர்சட்டைக்காரர்களாலும் காந்தியாலும் காமராசர் பலமுறை அவமானப்படுத்தப்பட்ட சம்பவங்களையும்
எடுத்து உட்டா கதர்க் குல்லாக்காரங்க பொழப்பு நாறிப் போயிடும்.”

எனக்கு இந்தமாதிரி சமாச்சாரமெல்லாம் தெரிஞ்சா நான் ஏன் இப்படி இருக்கேன்? நானே வந்தேமாதரம் பாடீட்டு வவுத்துல ஈரத் துணியக் கட்டீட்டு படுக்கற நெலமைல இருக்கேன். என்னப் போயி திட்டறயே…ன்னேன்.

“கோவிச்சுக்காத புண்ணாக்கு…நான் உன்னச் சொல்லல. சமீபத்துல ‘தேசபக்திக்கு’ டீலர் ஆகியிருக்காரே உங்க சேரன் அந்த ஆளச் சொல்றேன்.

மக்களோட அடிப்படைப் பிரச்சனைகளை கொந்தளிக்கிற மாதிரி சொல்லியிருக்கறதுனால உங்காளு சேரனோட சிந்தனை சிவப்புச் சிந்தனைன்னு முடிவு பண்ணீராதே.

ஆமா செகப்புக் கொடி மழைல நனைஞ்சு நனைஞ்சு நாள்பட ஆனா என்ன நெறத்துக்கு வரும்?”ன்னு திடீர்ன்னு ஒரு கேள்வியத் தூக்கிப் போட்டான் த.தி.தண்டபாணி.

(மிகுதி நாளை…..)

Advertisements

2 thoughts on “தேசபக்தத் திலகம் சேரன் ஐயா சமூகத்துக்கு -2

  1. பின்னி பிடலெடுக்குறீங்க தலைவா!
    உங்க பேருல ஒரு ரசிகர் மன்றம் பதிவு செய்ய இதோ கிளம்பிட்டேன்.

  2. //கோபி அண்ணனோ… சத்தியமங்கல தம்பியோ//
    என்னமோ போங்க!!!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s