தமிழ் இலக்கியத்தில் நாவல், சிறுகதை, கவிதை, கட்டுரை என்று பல தளங்களில் இயங்குபவர்கள் பலர் உண்டு. ஆனால் பாமரன் இத்தளங்களிலிருந்து விலகி கடித வடிவில் எழுதினார். சினிமா, அரசியல் என்று இவர் எழுதிய பாமரனின் பகிரங்கக் கடிதங்களால் எரிச்சலுற்றவர்கள் பலருண்டு. ஒருமுறை இயக்குனர் கே.பாலசந்தர் படங்களைப் பற்றி குமுதத்தில் இவர் எழுதிய கடிதம் தமிழ் சினிமா உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. வெகுண்டெழுந்த திரையுலகம் ‘குமுதம்’ பத்திரிகை அலுவலகத்தை முற்றுகையிட்டு பாமரனை மன்னிப்புக் கேட்கச் சொன்னது. இப்படி இவர் எழுத்து எப்போதுமே ஒரு பரபரப்பை உண்டு பண்ணும். பெரும்பாலும் இவருடைய எழுத்து சமூகத்தில் ஒடுக்கப்பட்டவர்கள், விளிம்புநிலை மனிதர்கள், சமூக அவலங்கள், மனித உரிமை மீறல்களைப் பற்றியதாகவே இருக்கும்.
“அன்புத் தோழிக்கு”, “புத்தர் சிரித்தார்”, “வாலி + வைரமுத்து = ஆபாசம்”, “பகிரங்கக் கடிதங்கள்”, “தெருவோரக் குறிப்புகள்”, “சாட்டிலைட் சனியன்களுக்கு”, “அகிம்சாமூர்த்தி அமெரிக்கா”, “ஆரிய உதடுகள் உன்னது” ஆகிய தலைப்புகளில் இவருடைய புத்தகங்கள் வெளிவந்துள்ளன.
கோவையில் வசிக்கும் இவரை “இனிய உதய”த்திற்காகச் சந்தித்து உரையாடினோம். எழுத்தைப்போலவே இவரது பதில்களிலும் கிண்டல், கேலி, எகத்தாளம் எல்லாம் இருந்தது. அதிலிருந்து…
எந்த நிகழ்வு உங்களை எழுதத் தூண்டியது?
ஆரம்பத்தில் காதல் கவிதைகள் எழுதி சமூகத்தைச் சீரழிக்கும் பணியில் நானும் ஒருவனாக இருந்தேன். அதன் பிறகு “நீ” என்ற பெயரில் மாதம் இருமுறை வரும் ஒரு பத்திரிகை ஆரம்பித்தேன். அது மூன்று இதழ்களோடு ஊத்தி மூடப்பட்டது. அதெல்லாம் என் சொந்த அரிப்புக்காக எழுதப்பட்டதுதான். இதனால் சமூகத்துக்கு பயன் எதுவுமில்லை என்று உணர்ந்தேன். அப்புறம் எழுதணும் என்ற நோக்கத்திற்காக எழுதக்கூடாது. நம்ம எழுத்து எதற்காக எழுதப்படுகிறது, யாருக்காக எழுதுகிறோம் என்ற சிந்தனையைத் தூண்டிவிட்டது ஈழப்போராட்டம்தான்.
83 ல் இலங்கையில் நடந்த இனப்படுகொலை என்னை நிலைகுலைய வைத்தது. இதற்குப் பிறகுதான் நான் மக்களுக்கான எழுத்தை நோக்கி நகர ஆரம்பித்தேன்.
பாமரன் என்று பெயர் வைக்க என்ன காரணம்?
நான் ஞானி அல்ல என்பதுதான் காரணம். இது அவை அடக்கத்துக்காக வைத்துக் கொண்டதுமில்லை. உண்மையிலேயே உலகத்தில் எல்லாம் தெரிந்தவர்கள் என்று எவரும் இல்லை. ஏதோ ஒரு விதத்தில் நாம் எல்லோருமே பாமரர்கள்தான்.
நாவல், சிறுகதை, கவிதை, கட்டுரை என்ற தளத்திலிருந்து விலகி, கடித வடிவத்தைத் தேர்வு செய்ய என்ன காரணம்?
கடித வடிவத்திற்கு நான்தான் புதுசே தவிர, கடித வடிவ இலக்கியம் தமிழுக்குப் புதுசு இல்லை. முப்பது நாற்பது வருடங்களுக்கு முன்பே செ.கணேசலிங்கம் எழுதிய ‘மான்விழிக்குக் கடிதங்கள்’, புதுமைப்பித்தன் ‘கண்மணி கமலாவுக்கு’ என்ற தலைப்பில் எழுதியது…இதுபோல ஏகப்பட்ட முன்னோடிகள் இருக்கிறார்கள்.
எழுத்தாளன் என்பவன் மலை மேல் உட்கார்ந்து பிரசங்கம் செய்பவன் அல்ல. எனக்கு எது எதெல்லாம் தெரியும் என்பதைக் காட்டிலும், நான் வாழுகின்ற சமூகத்தோடு நெருக்கமாக இருப்பதற்கு அவர்கள் மொழியிலே எழுதுவதுதான் சரியா இருக்கும் என்று முடிவெடுத்தேன். அதன் விளைவே இந்தக் கடித வடிவக் கண்றாவிகள்.
தமிழ் சினிமாவைப் பற்றிய உங்களுடைய எழுத்தின் குரல் ஒரு தோல்வியுற்ற உதவி இயக்குனரின் குரலாக ஒலிக்கிறதே.
நீங்கள் திரைப்படத்தில் முயற்சி செய்து தோல்வியுற்றவரா?
நான் அதுபோன்ற தற்கொலை முயற்சியில் ஈடுபட்டவன் அல்ல.
தற்போதைய தமிழ் சினிமாவின் ஆகச் சிறந்த இயக்குனர்கள் இன்றும் எனக்கு நெருக்கமான குடும்ப நண்பர்களாக இருக்கிறார்கள். நான் விருப்பப்பட்டால் இவர்கள் எடுக்கும் சினிமாவில் இணை இயக்குனராகவோ, வசனகர்த்தாவாகவோ, ஏன் நடிகராகவோ கூட என்னால் ஆக முடியும். ஆனால், நான் இயங்கும் தளம் முற்றிலும் வேறுபட்டது.
ஏற்கெனவே அவல நிலையிலுள்ள தமிழ் சினிமாவை நானும் சேர்ந்து துன்புறுத்த விரும்பவில்லை.
நீங்கள் தீவிர பெரியார்வாதி. பெரியார் கடவுள் மறுப்புக் கொள்கையைக் கையாண்டார். நிறுவனமயமாக்கப்பட்ட பெருந்தெய்வங்களை எதிர்த்ததில் நியாயம் இருக்கிறது. மக்களோடு மக்களாக வாழும் சிறுதெய்வ வழிபாட்டையும் அவர் சேர்த்தே எதிர்த்தது நியாயமா?
பெரியார் என்பது ஒரு பேரலை.
இந்தச் சமூகத்தின் எந்தத் தரப்பு மக்களாக இருந்தாலும், அவர்களுடைய உழைப்பும் அதன் மூலமாக சிறுகச் சிறுக சேர்த்த வருமானமும்
எக்காரணம் கொண்டும் மூட நம்பிக்கைகளின் பெயரால் வீணாகிப் போய் விடக் கூடாது என்பதில் மிகுந்த அக்கறை கொண்டவர். அதன் பொருட்டே அவர் ஒடுக்கப்பட்ட மக்கள் எங்கிருந்தாலும் அவர்களுக்காக ஓங்கிக் குரல் கொடுத்தவர்.
இதைப் புரிந்து கொண்ட குன்றக்குடி அடிகளார் போன்ற உண்மையான ஆன்மீகவாதிகள் பெரியாரோடு நெருக்கமாகவே இருந்தார்கள்.
இப்படிப்பட்ட பெரியார்தான் கோவில் நுழைவுப் போராட்டங்களுக்கும்
அனைத்து சாதியினரும் அர்ச்சகர்களாக வேண்டும் என்பதற்காகவும்
இறுதி மூச்சு வரை போராடி வந்தார். கடவுள் இல்லை என்பதுதான் பெரியாரின் ஆணித்தரமான கருத்து.
ஆனால் இறைத் தலங்களில் சமத்துவமின்மை நிலவும் போது
வாய் மூடி மவுனம் காத்தவர் இல்லை பெரியார். அவருடைய கருத்து எதுவாக இருந்தாலும் மனித உரிமைகள் எதன் பெயரால் மீறப்படுகிறதோ
அங்கெல்லாம் அதற்கு எதிராகக் குரல் கொடுக்கத் தயங்காத மனித உரிமைப் போராளி. தெய்வமே இல்லையென்று சொல்லும்போது அதில் சின்ன தெய்வம், பெரிய தெய்வம் என்று என்ன வேண்டிக் கிடக்கு? என்றிருப்பார் பெரியார்.
“அகிம்சாமூர்த்தி அமெரிக்கா” என்ற புத்தகத்தில் உலக நாடுகளில் அமெரிக்கா செய்து வரும் அயோக்கியத் தனங்களை
வெட்ட வெளிச்சமாக எழுதியிருந்தீர்கள். அந்த அமெரிக்காவுக்கு நீங்கள் செல்ல வேண்டிய சூழல் வந்தால் போவீர்களா?
நிச்சயமாகப் போவேன். இந்தப் பூமிப் பந்தை எவனும் எவனுக்கும்
பட்டா போட்டுக் கொடுக்கவில்லை. அமெரிக்க அரசின் பிணம் தின்னும் போக்கைத்தான் எதிர்க்கிறோமேயன்றி, ஒட்டு மொத்த அமெரிக்க மக்களை அல்ல.
வாய்ப்புகள் அதிகமிருந்தும் நான் பக்கத்திலுள்ள கச்சத் தீவிற்குக்கூடப் போனதில்லை.
‘வாலி + வைரமுத்து = ஆபாசம்’ என்றொரு புத்தகத்தில் நீங்கள்
வாலி, வைரமுத்துவின் ஆபாச வரிகளைக் கடுமையாக விமர்சித்திருக்கிறீர்கள். ஆனால் இன்றுள்ள இளம் திரைப்படப் பாடலாசிரியர்களின் பாடல்களிலும் ஆபாசமான வரிகள் அதிகமாக இருக்கிறதே. இதைப் பற்றி தங்களின் கருத்தென்ன?
இன்றைய திரைப்படப் பாடலாசிரியர்கள் வாலியையும், வைரமுத்துவையுமே நல்லவர்களாக்கி விட்டார்கள். விரசத்தில் வாலியையும், வைரமுத்துவையும் விட நாங்கள் எந்த விதத்திலும் சளைத்தவர்கள் அல்ல என்று நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள். இது எல்லா திரைப்படப் பாடலாசிரியர்களுக்கான பொத்தாம் பொதுவான மதிப்பீடுகள் இல்லை. இதில் சில விதிவிலக்குகளுமுண்டு.
தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர்கள் தங்களின் வரிகளால் வயாக்கராக்களுக்கு வேலை இல்லாமல் செய்து விட்டார்கள்.
சினிமா என்பதே பொழுது போக்கிற்குத்தான் அதில் எல்லா படங்களிலும் பண்பாடு, கலாச்சாரம், ஒழுக்கம் இருக்க வேண்டும் என்பது நியாயமா? அதுவுமில்லாமல் நீங்கள் தமிழ் சினிமா மீது கடுமையான விமர்சனங்கள் வைக்கிறீர்கள். மற்ற மொழிகளிலும் இது போலத்தானே படங்கள் வந்து கொண்டிருக்கின்றன?
எல்லோரும் கள்ளச் சாராயம் காய்ச்சுகிறார்கள் என்பதற்காக
நானும் எனது இனமும் கள்ளச் சாராயம் காய்ச்ச முடியாது.
எல்லோரும் பிக்பாக்கெட் அடிக்கிறார்கள் என்பதற்காக
நாங்களும் பிக்பாக்கெட் அடிக்க முடியாது.
நீங்கள் தவறானவற்றை உதாரணம் காட்டுகிறீர்கள்.
அதற்கு பதிலாக நீங்கள் ஏன் அகிரா குரோசுவாவைப் போல படம் எடுக்கவில்லை?
நீங்கள் ஏன் ஒரு அடூர் கோபாலகிருஷ்ணனைப் போல படம் எடுக்கவில்லை? என்று உதாரணம் காட்டியிருந்தால் சரியாக இருந்திருக்கும்.
இன்றைக்குப் பல கேணையர்கள் கிளம்பியிருக்கிறார்கள். தமிழ் சினிமாவை உலகத் தரத்திற்கு உயர்த்திக் காட்டுவோம் என்று. ஆனால் உலகத் தரம் என்று ஒரு வெங்காயமும் கிடையாது. இங்குள்ள எம் மக்களின் யதார்த்தமான வாழ்க்கையைச் சித்தரிக்கும் படங்கள் வரும் போது,
உலகமே இதுதான் தரம் என்று உச்சரிக்கும் காலம் வந்தே தீரும்.
அதற்கான வல்லமை நம்மவர்களிடம் உண்டு.
நீங்கள் சொல்லும் பொழுது போக்கு என்பது போக்கிரிகளின் பொழுதுபோக்காகிவிடக் கூடாது.
தற்போது இலக்கியப் படைப்பாளிகள் அரசியலுக்குள்ளும்,
திரைப்படங்களுக்குள்ளும் வரத் துவங்கியுள்ளார்கள்.
இது அந்தத் துறைகளுக்குப் பெருமை சேர்க்குமா?
பெரியார் சொன்ன ஐந்து தீமைகளில் ஒன்று சினிமா.
இன்னொன்று ஓட்டுப் பொறுக்கும் அரசியல்.
ஒருவேளை நமது இலக்கியப் படைப்பாளிகள் சினிமாவுக்குள்ளும்,
சினிமாக்காரர்கள் அரசியலுக்குள்ளும் நுழைவது
பெரியாரின் கனவை நிறைவேற்றுவதற்காகக்கூட இருக்கக்கூடும்.
இதில் எது நடந்தாலும் எமக்கு மகிழ்ச்சியே.
ஈழப் பிரச்சினையைப் பற்றி அதிகம் பேசியும் எழுதியும் வருகிறீர்கள்.
ஈழத்தில் அமைதி திரும்புமா? அம்மக்கள் எப்போது நிம்மதியாக வாழ்வார்கள்?
இது ஒரு கிராம நிர்வாக அதிகாரி தேர்வுக்குப் போட்ட விண்ணப்பம் அன்று.
அல்லது ஒரு அரசு ஊழியன் தனது வருகைப் பதிவேட்டில் போட்ட கையெழுத்தும் அன்று. மாலையில் போகும்போது வாங்கிக் கொண்டு போகலாம் என்பதற்கு.
ஒரு விடுதலைப் போரின் காலகட்டத்தை எவனாலும் கணிக்க முடியாது.
தயவு செய்து இது போன்ற இந்தியத்தனமான கேள்விகளைத் தவிருங்கள்.
Freedom not to be given.
It should be taken…
ஆக விடுதலை என்பது பிச்சை கேட்டுப் பெறுவதல்ல.
போராடிப் பறித்தெடுப்பது.
உங்களின் இந்தியத்தனமான இந்தக் கேள்விக்கு நான் மிகவும் வருந்துகிறேன்.
சென்னை சங்கமம் நிகழ்ச்சி பற்றிய தங்களின் கருத்தென்ன?
சென்னை சங்கமம் நிகழ்ச்சியைப் பொறுத்தமட்டில்
நின்று கொண்டிருப்பதை விட சென்று கொண்டிருப்பது மேல்
என்பது எவ்வளவு சரியோ அப்படித்தான் நான் அதைப் பார்க்கிறேன்.
ஒன்றுமே இல்லாமல் இருந்த இடத்தில் நானூறு, ஐந்நூறு கலைஞர்களை
அழைத்து வந்து, அதுவும் சமூகத்தில் அங்கீகரிக்கப்படாத,
ஒதுக்கி வைக்கப்பட்ட அவர்களை வைத்து நடத்திய நிகழ்ச்சியை நிச்சயமாக வரவேற்க வேண்டும்.
சிலருக்கு இது எரிச்சலை உண்டு பண்ணியிருக்கு.
என்ன எரிச்சல் என்று எனக்குத் தெரியவில்லை.
குறிப்பாக ஞாநி போன்ற ஆசாமிகள் எதிர்ப்பது உண்மையிலே அவர்களுக்கு இன்னமும் சி.பி.எம் டோன் போகவில்லையோன்னு சந்தேகம் வலுக்கிறது.
அவருடைய உளறல்களில் சமீபத்திய பெரிய உளறல் 27 சதவிகித இட ஒதுக்கீட்டிற்காக நடந்த முழு அடைப்பைப் பற்றியது. முழு அடைப்பை ஞாநி கண்டிக்கிறார்.
தமிழ் நாட்டு மக்களின் ஒட்டுமொத்த எதிர்ப்பை முழு அடைப்பு நடத்தித்தான் காட்ட முடியும். இந்தக் கடையடைப்பில் யார் யார் பாதிக்கப்பட்டார்கள் என்று ஞாநி தேடிப் பிடிக்கிறார்.
27 சதவிகித இட ஒதுக்கீடு இல்லாமல் எத்தனை கோடி இளைஞர்கள்
பாதிக்கப்படுகிறார்கள் என்பதைப் பற்றி இவருக்குக் கவலை இல்லை.
ரஷ்யாவிலும், கியூபாவிலும் புரட்சி பண்ணியதால்தான் அங்கு விடிவு பிறந்தது. அகிம்சையை காங்கிரஸ்காரர்கள் கடைபிடிக்கிறார்களோ இல்லையோ ஆனால் இந்த So Called கம்யூனிஸ்டுகள் கடைபிடிக்கிறார்கள்.
பின் நவீனத்துவப் படைப்புகளைப் படித்திருக்கிறீர்களா?
அதைப்பற்றி உங்கள் கருத்தென்ன?
அதில் நான் ஒரு எல்.கே.ஜி.
ஏனென்றால் எனக்கு முன்னும் தெரியாது.
பின்னும் தெரியாது.
ஆனால் மண் தெரியும்.
தற்போதைய தமிழ் இலக்கியப் போக்கு எவ்வாறு உள்ளது?
தமிழகத்தில் பிள்ளைமார் ஜாதி, தேவர் ஜாதி, கவுண்டர் ஜாதி, முதலியார் ஜாதி எனச் சொரி பிடித்து அலைவது போல இலக்கியவியாதிகளுக்குள்ளும்
சுந்தரராமசாமி ஜாதி, மனுஷ்யபுத்திரன் ஜாதி எனப் பல ஜாதிகள் இருக்கின்றன.
என்னைப் போன்ற அனாதைகள் முதலில் சொன்ன ஜாதிகளிடமிருந்து தப்பிக்கலாமே ஒழிய, இரண்டாவது வகை ஜாதிகளிடமிருந்து தப்பித்துக் கொள்ள வழி தேடிக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.
இன்றைய தமிழ் சினிமாவின் போக்கு குறித்து…?
இன்றைய தமிழ் சினிமா
நேற்று….
கொழுந்தியாளைக் கைப்பற்றுவது எப்படி?
இப்படித்தான் என்பதற்கொரு ‘ஆசை’.
சகோதரன் மனைவியை அடைவது எப்படி?
என்பதற்கொரு ‘வாலி’.
இன்று….
இதிலெல்லாம் ஆணாதிக்கம்தான் தலை தூக்கி நிற்கிறது…
இதற்கு மரண அடி கொடுக்க வேண்டாமா பெண்ணியம்?
என்று எடுத்துத் தொலைத்ததுதான் மயிர்…சாரி ‘உயிர்’.
கொஞ்ச நாளில்
“கடைசிவரை தன் காதலியைக் கைப்பற்றுவதற்காகவே
உயிர்வாழ்ந்த ஒரு இளைஞனின் கதை” என்றொரு படம் வரக்கூடும்….
அந்தக் காதலியை அடைவதற்காக அவன் பட்ட பிரயத்தனங்கள்தான்
அதன் முக்கியமான கட்டங்கள்….
அது நிறைவேறக்கூடாது என்று அவன் தந்தையே
தடுப்பதுதான் அதன் திருப்பங்கள்….
இறுதியில்தான் தெரிகிறது…..
தான் காதலித்தது தனது அம்மாவை என்று.
இதற்கு இவர்கள்
“தமிழ் சினிமாவில் இதுவரை எதிலும் கண்டிராத ஒரு கிளைமேக்ஸ்”
என்று அறிவிக்கவும் கூடும்.
அந்தத் திரைப்படத்தின் பெயர் ஒருவேளை “இடிபஸ்” ஆகவும் இருக்கக்கூடும்.
நல்லவேளை இவர்களுக்கு இன்னும் இடிபஸ்ஸைத் தெரியவில்லை.
இன்று மக்களிடையே ஆங்கில மோகம் அதிகரித்து வருவது பற்றி….?
ஆங்கில மோகம் என்பதை விட,
ஆங்கில வெறி என்று சொல்லலாம்.
ஒரு மொழி என்பது அறிவாகாது.
இவர்களுடைய போக்குகளைப் பார்க்கும்போது
இவர்கள் தமிழர்கள்தானா என்ற சந்தேகம் வருகிறது.
இவனுக்கும் ஜனவரி 1 க்கும் என்ன சம்பந்தம்?
டிசம்பர் 31 ஆம் தேதி இரவு நல்லா தண்ணி போட்டுட்டு
‘ஹேப்பி நியூ இயர்’ங்கிறான்.
தமிழர் திருநாளான பொங்கல் அன்று
ஏதோ இழவு விழுந்தது மாதிரி இருக்கிறான்.
சித்திரை 1 ஆம் தேதி தமிழ் வருடப் பிறப்புங்கறான்.
சித்திரை ஒன்று ஒருபோதும் தமிழ் வருடப் பிறப்பாகாது.
குழந்தைகளைப் பள்ளியில் சேர்க்கும் போது இங்கிலீஸ் மீடியத்தில்தான் சேர்க்கிறான்.வேலை பார்க்கிற இடங்களில் ஆங்கிலத்தில்தான் பேசுகிறான்.
இவனுக மனசுல தான் ஒரு பிரிட்டிஷ்காரன் பேரன் என்று நினைக்கிறான்.
ஆங்கிலம் ஒரு நல்ல மொழிதான்.
அதைப் படிக்க வேண்டாம் என்று சொல்லுவதும் தப்புதான்.
அதற்காகத் தாய் மொழியைப் புறக்கணிக்கக் கூடாது.
கோவிலுக்குப் போனால் “இங்கு தமிழிலும் அர்ச்சனை செய்யப்படும்”
என்று போர்டு போட்டிருக்கிறார்கள்.
வெளி மாநிலத்திலோ, வெளிநாட்டிலோ இந்த மாதிரி போர்டு
மாட்டியிருந்தா சரிங்கலாம்.
தமிழ் நாட்டுல உள்ள கோவில்களில் “இங்கு தமிழிலும் அர்ச்சனை செய்யப்படும்” என்று போர்டு போட்டிருப்பது அவமானம் என்பது அவனுக்குப் புரியவில்லையே என்பதுதான் நமக்கு வருத்தமா இருக்கு.
உங்கள் மகனுக்கு சேகுவேரா என்று பெயர் வைத்திருக்கிறீர்கள் என்ன காரணம்?
1989 ஆம் வருடம் என் மகனுக்கு சேகுவேரா என்று பெயர் வைத்தோம்.
அப்போது இந்தப் பெயரைக் கேட்டு கிண்டல் பண்ணியவர்கள் அதிகம்.
சேகுவேரா என்பது எந்த சாதிக்குள்ளும், எந்த மதத்துக்குள்ளும் அடங்காது .
ஒரு நாட்டின் மாபெரும் விடுதலைப் போராட்டத் தியாகியின் பெயர்.
நானும் எனது தோழர்களும், துணைவியாரும் கலந்தாலோசித்துதான்
எங்கள் மகனுக்கு சேகுவேரா என்று பெயர் வைத்தோம்.
தொலைக்காட்சி ஊடகங்களின் செயல்பாட்டைப் பற்றித் தங்கள் பார்வை என்ன?
எமது மூதாதையர்களை சாதியின் பெயரால் அன்று கல்வி கற்க விடவில்லை.
போராடிப் படித்தார்கள்.
டாக்டர் அம்பேத்கரும் தந்தை பெரியாரும் போராட்டங்கள் நடத்தி
அனைவருக்கும் கல்வி பொது என்றாக்கினார்கள்.
ஆனால் இன்று சமூகத்தை ஒட்டுமொத்தமாக எப்படி நவீன முறையில் சீரழிக்கலாம் என்பதில் இவர்கள் கோடம்பாக்க சினிமாக்காரர்களுக்குச் சளைத்தவர்கள் அல்ல என்பது தெளிவாகத் தெரிகிறது.
டெலிபோன் மனித வாழ்வுக்கு அத்தியாவசியமானது.
ஆனால் அது இன்றைக்கு எதற்காகப் பயன்படுகிறது என்றால்..
இங்கிருந்து சென்னையில் உள்ள ஏதோ ஒரு தொலைக்காட்சி சேனலுக்கு
போன் போட்டு ‘எனக்கு அந்தப் படத்திலிருந்து இந்தப் பாடலை போடு’ என்று கேட்டு..
‘நான் இந்தப் பாடலை என் கொழுந்தியாளுக்கு டெடிகேட் பண்ணுறேன்’ என்கிறான்.
சினிமாப் பாடலை எழுதியது ஒருவன்…இசையமைத்தது ஒருவன்….
ஆனால் அந்தப் பாடலோடு எந்த விதத்திலும் சம்பந்தப்படாத இவன்
கொழுந்தியாளுக்கு ‘டெடிகேட்’ பண்ணுவானாம்…என்ன கண்றாவி இது….
வீட்டுக்குள்ளிருந்து படிக்கிறாயா?
நான் இருபத்தி நாலு மணிநேரமும்
தொலைக்காட்சி ஊடகம் வழியாக உன் வீட்டுக்குள் வருவேன்…
முடிந்தால் படி.
வெளியில் வந்தால்…
கோடம்பாக்கத்துக்காரர்கள்
‘நான் இப்படித்தான் தரங்கெட்ட படங்களை எடுத்துத் திரையிடுவேன்.
தப்பித்துக் கொண்டு படிக்க முடிந்தால் படி.’
‘இதையெல்லாம் வேண்டாமென்று நீ சுடுகாட்டுக்கே போனாலும்
அங்கேயும் ஒரு எப்.எம் ரேடியோ வழியாக வந்து
உன் படிப்பைக் கெடுப்பேன்’ என்கிறார்கள்.
தமிழர்களே இவர்களைப் பற்றித் தெளிவாகப் புரிந்து
சற்று விலகியே இருக்கக் கற்றுக் கொண்டு
உங்கள் குழந்தைகளுக்குக் கல்வி அறிவு புகட்டுங்கள்.
தற்போது என்ன படித்துக் கொண்டிருக்கிறீர்கள்?
அடுத்து என்ன புத்தகம் வெளிவர உள்ளது?
தமிழர்களுக்குத் தெரியாத ஒருவருடைய பெயரைச் சொல்லி…
‘அவருடைய நாவலைத்தான் நான் மறுவாசிப்பு பண்ணிக் கொண்டிருக்கிறேன்’ என்றெல்லாம் நான் பொய் சொல்ல விரும்பவில்லை.
நான் சின்ன வயதில் படித்த முத்து காமிக்ஸ்,
இரும்புக்கை மாயாவி…
இது போன்ற புத்தகங்களைத்தான் படித்துக் கொண்டிருக்கிறேன்.
அடுத்து “பெண்ணொன்று கண்டேன்” என்கிற புத்தகம் வெளிவரவுள்ளது.
பெண் கவிஞர்கள் எழுதும் உடல்மொழிக் கவிதைகள் பற்றி உங்கள் பார்வை என்ன?
பெண்ணியக் கவிஞர்களின் கவிதைகள் குறித்து ஆணாகிய நான் சொல்வதற்கு அருகதையோ, உரிமையோ கிடையாது.
அது அவர்களது உரிமை.
அதேபோல ஆண் கவிஞர்கள் உடல் குறித்தும்,
அவர்களது சுயசரிதம் குறித்தும்
எனக்கு எந்தவித மறுப்புகளும் இல்லை.
அதுவும் அவர்களது உரிமை.
ஆனால்….
தங்களது உடல் இன்ப துன்பங்கள் தாண்டி
மலம் வழித்துக் கொண்டிருக்கிறது ஒரு இனம்.
அது பற்றித்தான் எனது அக்கறை…எனது கவலை.
நன்றி: நக்கீரனின் “இனிய உதயம்.” மே 2007. சந்திப்பு: சிவதாணு.
//ஆனால்….
தங்களது உடல் இன்ப துன்பங்கள் தாண்டி
மலம் வழித்துக் கொண்டிருக்கிறது ஒரு இனம்.
அது பற்றித்தான் எனது அக்கறை..எனது கவலை.
//
இங்கே தான் பாமரன் உயிர்ப்புடன் இருக்கிறார். 🙂
ஞாநியின் சென்னை சங்கமம் மற்றும் இடஒதுக்கீடு பந்த் குறித்த விமர்சனத்தை
ஆ.வி.யில் படித்தபோது எனக்குள் தோன்றிய உணர்வை அப்படியே வெளிப்படுத்தி உள்ளீர்கள்.
நன்றி
anbu pamaran, kalanduraiadal migavum arumai
பதில்கள் எல்லாம் பொட்டில் அடித்தது போல் உண்மையை உரைக்கின்றன . பாராட்டுகள் பாமரன், சமூகத்தின் குரலை எதிரொலிப்பதற்கு .
எம்.ரீஷான் ஷெரீஃப்,
இலங்கை
Thozha, iniya udayam peati ‘ PANCHA MIRUTHAM .
yazhinian
sathyamangalam
இனிய பாலபாரதி,சந்துரு,மோகன்ராஜ்,ரீஷான் ஷெரீப்,ஆறுமுகம் உட்பட நண்பர்கள் அனைவருக்கும்….
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.
தொடர்வோம்.
ஆங்கிலத்தில் பதில் அளிக்கும் நண்பர்களுக்கு….
நமது வலையின் இடது பக்கத்தில் “தமிழில் சுலபமாக எழுத” என்றொரு பகுதி உள்ளது அதை கிளிக் செய்தால் போதும். நிங்கள் மிக எளிதாக தமிழில் அடிக்கலாம்.. முயற்சித்துப் பாருங்கள்.
அன்புடன்,
பாமரன்.
“எல்லோரும் கள்ளச் சாராயம் காய்ச்சுகிறார்கள் என்பதற்காக
நானும் எனது இனமும் கள்ளச் சாராயம் காய்ச்ச முடியாது.”
– தனித்து நிற்கிறீர்கள் – நாகூர் இஸ்மாயில்
மிக்க நன்றி…. முத்து காமிக்ஸ் ரசிகராக இருப்பது…
இனிய பாமரன் அவர்கட்கு…….
கட்டுரை மிகவும் அருமை.கீழே இருக்கும் வினாவிற்கு உங்கழுடைய பதில் மிகவும் அருமை.சமீபத்தில் வந்த “பருத்தி வீரன்”.அப்படி ஒரு படைப்பு என்னுடைய கருத்து. அந்த படம் பற்றி உங்க அபிப்ராயம்…….
\\சினிமா என்பதே பொழுது போக்கிற்குத்தான் அதில் எல்லா படங்களிலும் பண்பாடு, கலாச்சாரம், ஒழுக்கம் இருக்க வேண்டும் என்பது நியாயமா?\\
//ஒரு மொழி என்பது அறிவாகாது
தலைவா, கலக்குங்க…
//நான் சின்ன வயதில் படித்த முத்து காமிக்ஸ்,
இரும்புக்கை மாயாவி…
இது போன்ற புத்தகங்களைத்தான் படித்துக் கொண்டிருக்கிறேன்.//
சூப்பர்!!!
அன்புடன் பாமரன் அவர்களுக்கு.
உங்களின் சிந்தனைகள் அற்புதமாக இருக்கிறது. ஒரு மனதுக்கு இனிய கட்டுரை படித்த மகிழ்ச்சி.
தற்போதைய மக்கள் தொலைக்காட்சிப் பற்றி உங்கள் கருத்து என்ன?
இனிய தோழருக்கு,
தங்களது கருத்துக்கள் இன்றைய சமூகத்தை பாதிக்கும் வகையில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய இழிவான திரைப்படங்களை எடுத்துவரும் இயக்குனர்களை சாடுவதாக இருந்தது.
இந்த மனிதர்கள் இனியாவது திருந்தட்டும். திருந்த வைப்போம்.
தொடரட்டும் சாடல்.
என்றென்றும் அன்புடன்,
இ.ஜேசுராஜ்
ஆனந்த விகடனில் வரும் ஞாநியின் தொடரில் சார்பு நிலை அதிகம் உள்ளது. அவருக்கு பிடிக்காதவர் என்றால் போதும் வறுத்து எடுத்து விடுகிறார். அப்துல் கலாம் மற்றும் கலைஞர் விசயத்தில் இதை பார்த்து விட்டேன். நல்லது செய்தால் பாராட்டும் குணமும் இல்லை. விகடனுக்கு கடிதம் எழுதினாலும் கண்டு கொள்வார் யாருமில்லை. அவர்கள் வாசகரை மதிக்கும் லட்சணம். என்ன செய்வது விகடன் வாங்குவதை நிறுத்தி விட்டேன்.
intha pakka vinaigalai padikkumpothu thangalukku valikka illayaa..? (adutha murai thai mozhiyil thattukirean. mannikkavum)
paamaran ayyaaviRku Enadhu vaNakkam naan ungkaLadhu padiththadhum kiziththum vaasakan naan mikavum virumpi padippen kizippadhu thodara vendum
thangkaLin kaippesi en kidaiththal mikavum makilven
Balaji
புரட்சிகர மே தின வாழ்த்துக்கள்
//
thangkaLin kaippesi en kidaiththal mikavum makilven
//
இவரை போன்றவர்கள் செல் பேசி இல்லாமல் இருப்பதே நலம். நமக்கும் சேர்த்து இவரை போன்றவர்களாவது சிந்திக்கட்டும்.
Dear Sir, It is always pleasant to read your writings. keep on writing. Can you explain why JJ arrested Kanchi? don’t see anything good of JJ?-sta
nice mr.pamaran.. i am really enjoy your writtings…
Anna,
Please let me know through this page for all readers, the stall where we can get your books in the chennai book fair next jan.
அய்யா இந்த உங்கள் கடைசி வரிகள் என் உணர்வுகளை தோண்டி உசுப்பேத்துகிறது.
HI Pamaran,
You are doing very good to the society and people.
I think you should be very careful since some antisocial people may try to harm you.
I like a good citizen and a good human like you to be in safe.
தங்கள் கருத்து இதயத்தை துளைக்கிறது