புதுப் புது “அர்த்தங்கள்”…

பத்தாம் தேதி இரவு பத்தரை மணிவரைக்கும் எழுத

எண்ணியிருந்த கட்டுரை வேறு.

அதற்கான ‘தயாரிப்புகள்’ வேறு.

ஆனால் எதிரேயிருந்த நண்பன் கேட்ட கேள்வியில்

எழுத இருந்த கட்டுரையே திசைமாறிப் போனது.

தீவிரவாதிகள் – அகிம்சாவாதிகள் – தியாகிகள் – துரோகிகள் –

என்கிறார்களே அது யார் யார்? என்றான் அப்பாவியாக.

கொஞ்சம் யோசித்தால் தலை சுற்றுகிறது நமக்கு.

இந்தக் குழப்பம் குருதிப்புனல் எடுத்த கமலகாசனுக்கே..

மன்னிக்க…கமல் ஹாஸனுக்கே இருந்தால்

இந்தச் சிறுவனுக்கு எப்படி இல்லாது போகும்?

உண்மைதான்…

தீவிரவாதிகள் யார்?

அடிப்படைவாதிகள் யார்?

போராளிகள் யார்?

பயங்கரவாதிகள் யார்?

இவர்களுக்குள் என்ன அடிப்படை வேறுபாடு?

அதைக் காட்டிலும் இவர்கள் எதன் பொருட்டு…?

ஏன் உருவாகிறார்கள் என்பது அடிப்படையிலும் அடிப்படையான கேள்வி.

நமக்கு எப்போதுமே ‘விளைவுகள்’தானே முக்கியம்…

அடிப்படைக் காரணங்கள் ஆயிரம் இருந்தாலென்ன?

வரலாற்று ரீதியாகப் பார்த்தால்

இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி அந்நியரோடு போர் தொடுத்த

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ‘தீவிரவாதி’.

ஆனால் இந்திய கப்பற்படை எழுச்சியை எதிர்த்த

மோகன் தாஸ் கரம்சந்த் காந்தி ‘அகிம்சாவாதி’.

பாரத் நவ ஜவான் சபாவை கட்டமைத்து

அப்பாவிகள் யாரும் சாகாது குண்டு வீசிய பகத்சிங் ‘அதி பயங்கரவாதி’.

பகத்சிங்கை தூக்கிலேற்றிய ஆங்கிலேய அரசு ‘மிதவாதி’.

ஆகஸ்டுப் ‘புரட்சி’யில் தந்திக் கம்பங்களைச் சாய்த்து

தபாலாபீசுகளைக் கொளுத்திய காங்கிரஸ்காரர்கள்

பிரிட்டிஷ் கணக்குப்படி பார்த்தால் ‘பயங்கரவாதிகள்’.

சுதந்திர இந்தியாவின் கணக்குப்படி தேசத் தியாகிகள்

இந்தக் குழப்பம் ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்தவர்களூக்கு

மட்டும்தான் என்றில்லை,

தத்துவப் போராட்டத்தை முன்னெடுத்தவர்களுக்கும் நீடிக்கத்தான் செய்தது.

சாதியை அடிப்படையாகக் கொண்ட வர்ணாசிரம முறையை

ஏற்றுக்கொண்ட எம்.கே.காந்தி அகிம்சாவாதியாகவும்…

சாதீய அமைப்பையே தகர்த்தெறிய வேண்டும் என்று போராடிய

பி.ஆர்.அம்பேத்கர் தீவிரவாதியாகவும் சித்தரிக்கப் பட்டது வரலாற்றுச் சோகம்.

எண்ணக் குதிரையை எண்பதுகளில் நிறுத்தினால்

ஸ்வீடனிலிருந்து ‘அதி நவீன’ ஆயுதங்கள் வாங்கிக் குவித்த

ராஜீவ்காந்தி ‘தேச பக்தர்’.

அந்த பணத்தில் ஒரு லட்சம் ஓராசிரியர் பள்ளிகளுக்கு

ஓடாவது போட்டிருக்கலாமே என்றவர்கள் ‘தேசத்துரோகிகள்’.

சர்வதேச அரசியல் அரங்கில் இந்தியாவின் ‘முற்போக்கு’க் கணக்குப்படி…

திம்புவில் நடந்த பேச்சுவார்த்தைக்கு சொன்னவுடன் வந்தால் போராளிகள்.

பிற்பாடு வந்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ள மறுத்தால் ‘தீவிரவாதிகள்’.

‘அறவழியில்’ கருப்புக்கொடி காட்டிய தி.மு.க.வினரிடமிருந்து

இந்திராவைக் காப்பாற்றிய நொடிவரையில்

காங்கிரஸ்காரர்களுக்கு நெடுமாறன் ஒரு தேசபக்தர்.

பிற்பாடு ‘தேசத்துரோகி’.

நல்லவேளையாக இவர்கள் ‘இந்திராவைக் காப்பாற்றியதே

மிகப்பெரிய தேசத்துரோகம்’ என்று சொல்லாமல் விட்டார்களே

என்கிற அளவில் மற்றவர்கள் மகிழ்ச்சி அடையலாம்.

சர்வதேச அளவிலாகட்டும் – இந்திய அளவிளாகட்டும் –

அவரவர்களுக்கென்று தனித்தனி அகராதிகள்.

அவைகளுக்கே உரித்தான புதுப் புது அர்த்தங்கள்

மத சம்பந்தமான விஷயங்களும் இதற்கு விதிவிலக்கல்ல.

பாபர் மசூதியை இடிப்பவன் ‘மிதவாதி’.

இடிப்பைக் கண்டிப்பவன் ‘முஸ்லிம் தீவிரவாதி’…

(உலகளாவிய ‘பார்வையில்’

இந்து – கிருஸ்துவ – யூதத் தீவிரவாதிகள் என்று யாருமே கிடையாது

என்பது சுவாரசியமான விஷயம்.)

பாலஸ்தீனியர்களை சொந்த மண்ணை விட்டு

விரட்டியடிப்பது ‘அகிம்சாவாதம்’.

நாடற்றவர்கள் அவலக் குரல் எழுப்புவது ‘பயங்கரவாதம்’.

மான்கடா படைத் தாக்குதலில் விசாரிக்கப்பட்டபோது

பிடல் காஸ்ட்ரோ ஒரு ‘பயங்கரவாதி’.

மக்கள் அலையில் பாடிஸ்டா மூழ்கடிக்கப்பட்டபோது

பிடல் காஸ்ட்ரோ புரட்சியின் நாயகன்.

தங்கத் தமிழ் மண்ணைப் பொறுத்தவரையும் ஒரு அகராதி உண்டு.

அதுதான் தமிழில் கல்வியும் – வழிபாடும் – குடமுழுக்கும் – ஒதுக்கப்பட்டோருக்கு உரிமையும்

வேண்டும் என்பவர்கள் ‘தமிழ்த் தீவிரவாதிகள்’.

“தாழ்த்தப்பட்ட மக்கள் பியூட்டி பார்லருக்குப் போய்

‘பேசியல்’ செய்து கொண்டு…

‘ஹெட்ஸ் அண்ட் ஷோல்டர்ஸ்’ ஷாம்ப்போடு

‘லக்ஸ்’ போட்டுக் குளித்து…

யார்ட்லி செண்ட்டோடுதான் கோயிலுக்குள் வரவேண்டும்” என்கிற

மடச் சாமியார் ‘மிதவாதி’.

(தேசம் தழுவிய பார்வையில்

மலையாள – கன்னட – குஜராத்தி தீவிரவாதிகள்

என்று யாருமே கிடையாது என்பதும் சுவாரசியமான விஷயம்தான்.)

எது எவ்விதமோ…

ஆனால் காலச்சக்கரம் மட்டும் சுழலாமல் நிற்பதில்லை.

வரலாறுகள் மாறும்போது…

இன்றைய “துரோகிகள்”….

நாளைய தியாகிகள்.

ஆனால்….

இன்றைய “தியாகிகள்….?

24 thoughts on “புதுப் புது “அர்த்தங்கள்”…

 1. முன்னமே வாசித்தது தான் என்றாலும்… மீண்டும் வாசித்த போது உண்மையிலேயே புதுப்புது’அர்த்தங்கள்’ தந்தது.

  ஆமா… பாமரன் நீங்க மீதவாதியா… தீவிரவாதியா?

  😉

 2. ஆரம்பத்தில் போராளிகள்…. ஆமாம் சாமி போடாவிட்டால் பயங்கரவாதிகள் … பிந்தரன்வாலே முதல் பிரபாகரன் வரை இந்திய நிலைப்பாடு இதுதான்!

 3. இயற்க்கையாக வாழும் மனிதன் ஆதிவாசி காட்டுமிராண்டி செயற்கையாக வாழும் நகர மனிதன் நாகரிகவாதி. வாழ்க நல் உலகு.

 4. \\ படித்தவுடன் எனக்கு ஒரு சந்தேகம், மு.க.அழகிரி மிதவாதியா? தீவிரவாதியா? //

  யாழினியன்
  சத்தியமங்கலம்

 5. என்ன மிஸ்டர் பாமரன்..புது புது அர்த்தங்கள் என்ற தலைப்பை பார்த்தவுடன் என்னோட குரு கே.பி ய திட்ட போறீங்கன்னு நினைத்தேன்..இப்படி அல்வா கொடுத்து விட்டீர்களே..ஆயினும் புதிதாய் யோசிக்க வைத்து விட்டீர்கள்..வாழ்த்துக்கள்…ஆமா குமுதம்’ல உங்க போட்டோவா காணாமே?

 6. அருமை..சிறு சந்தேகம்.புத்தகத்தில் எழுதும் பாமரன் தானே நீங்களா?
  இல்லை பாமரன் ரசிகரா இந்த வலைத்தளம் அமைதத்து?

 7. அதிகமா குழம்பிவிட்டேன். மறுபடி ஒருதரம் வாசித்து பார்க்கிறேன்.

 8. முன்பு எழுதிய ஒரு கடிதம், இப்போது உங்களுக்கான பின்னுட்டமாக..

  தீவிரவாதத்திற்கு இப்போது வருவோம்,முதலில் தீவிரவாதிகள் என்பவர்கள் யார்? அவர்கள் கிரிமினலா?கொள்ளையர்களா? ஆம் என்றால் தீவிர வாதத்தை எந்த ஒரு அரசாங்கமும் நசுக்கி விடலாம்.ஆனால் நிஜத்தில் அவ்வாறு இல்லை.அவர்களை நசுக்க நசுக்க மேலும் வளரத்தான் செய்கிறது.அமேரிக்காவும்,நமது இந்தியாவும் மேலும் சில நாடுகளும் சொல்லிக்கொள்வதால் இப்பொது நாமும் தீவிரவாதத்தை எவ்வித வடிவத்திலும் எதிர்க்கவேண்டும் என கூறுகிறோம்.ஆனாலும் அதனை புரிந்து கொள்ளாதவரையில் அதனை நீங்கள் முழுமையாக அழிக்க முடியாது.எந்த ஒரு சமுதாயக்குழுவிலும் அதன் அறிவும்,ஆற்றலும் மற்றவர்களுக்கு சமமாக வளரும்போது அதில் உள்ள ஆளுமை தகுதிஉள்ள மக்களுக்கு ஆளுவதற்கு வாய்ப்பு கிடைக்காத போது(பாகிஸ்தான் என்பதே ஜின்னாவிற்காகத்தான் உருவாகியது என்று கூறுபவரும் உண்டு) அதில் உள்ள மக்களுக்கு மறுக்கப்படும் அல்லது காலந்தாழ்தப்படும் விஷயங்களை வைத்து எளிதாக தூண்டப்படுவதுதான் இப்போது தீவிரவாதம் என அழைக்கப்படுகிறது.முன்பு இது பெருவாரியான நாடுகளில் வேறுமாதிரியான கம்யூனிச எழுச்சியாக எழுந்தது.ஆனால் கம்யுனிச கருத்துக்கள் கருத்தொழிந்து போன அல்லது அந்த கருத்துகளை ஒத்துக்கொள்ளாத இஸ்லாம் மத வதிகள் தற்போது தீவிரவாதிகள் ஆகி விட்டனர்.
  விடுதலைப்புலிகளின் ஆரம்பநிலையில் கம்யுனிச கருத்துக்களின் தாக்கம் அதிகமாக இருந்தது.நானேகூட விடுதலை புலிகள் வெளியிட்ட சேகுவாராவின் புத்தகத்தை படித்துளேன்.ஆனால் பின்பு தற்செயலோ அல்லது பாலசிங்கத்தின் தொலைநோக்கோ அது கம்யுனிச பார்வையை விட்டொழித்தது,அதனாலேயே அங்குள்ள பலர் மேற்கத்தியநாடுகளில் அது வளர்வத்ற்கான ஒரு சுழ்நிலையை உருவாக்கியது.இதுவே அதன் ஒரு வெற்றியானது.எனவே தீவிரவாதத்தினை எதிர்ப்பது என்பது அவ்வளவு எளிதான விஷயமன்று.
  இதனை இரண்டு வழிகளில் ஒழிக்கலாம்.ஒன்று அம் மக்களின் தேவைகளை புரிந்து நிவர்த்தி செய்வது இல்லை என்றால் அதன் ஆளுமை நிறைந்தவர்களின் பதவிப்பசியை நிவர்த்தி செய்வது.

 9. மிக அருமையான பதிவு. தொடரட்டும் உங்கள் பணி.

  வாழ்த்துக்களுடன்,

  ரங்கராஜ்
  உடுமலைப்பேட்டை.

 10. தோழர் பாமரன் ,
  தங்களின் வலைப்புவினை முதன் முறையாக படிக்கிறேன், நிறுத்த முடியாமல் படித்துகொண்டே இருக்கிறேன். நிறைய யோசிக்க வைக்கிறது. தொடர்ந்து எழுதுங்கள்.சமயம் கிடைக்கும் பொதெல்லாம் படிப்பேன்.
  செந்தில் குமரன்.

 11. “துப்பாக்கி வைத்திருப்பவனை தீவிரவாதி என்கிறான்.. அனுகுண்டு வைத்திருப்பவன்” எனகி்ற எனக்குப் பிடித்த காசிஆனந்தன் கவிதை வரிகளும் இதே கவலையைத்தான் சொல்கிறது.

  தீவிரவாதம் என்பது இன்று பயண்படுத்தும் ஆயுதத்தை பொறுத்து முடிவு செய்யப்படுகிறது.

  விமானம் மூலம் ஒரு இனத்தின் மீது குண்டு மழை பொழியும் அரசு மிதவாதி. தன் மீது குண்டைக் கட்டிக்கொண்டு அந்த விமானத்தை வெடிக்கச்செய்பவன் தீவரவாதி..

  என்னைப் பொறுத்த வரை அப்பாவி பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தும் எவனும் தீவரவாதி.. (ஈராக் மீதான அமெரிக்க தாக்குதல்.. அமெரிக்க மக்கள் மீதான அல்கொய்தா தாக்குதல்..தமிழர் மீதான் இலங்கை தாக்குதல் எல்லாம் தீவரவாதம் தான்.. ) பயிற்ச்சி பெற்ற, ஆயதம் தாங்கிய ரானுவத்தை எதிர்த்து தன் மக்களுக்காக போராடும் இயக்கங்கள் போராளிகள் தான்..

  என்ன தோழா… சரியா ?

 12. பாமரன் உங்களது எழுத்துக்கள் குற்றம் சாட்டும் தொனியில் இருப்பது படிப்பதற்கு வேண்டுமானால் சுவாரஸ்யமாக இருக்கும். ஆனால் எவராவது கேட்பார்களா ? ம்ஹூம். படிப்பார்கள். சிரிப்பார்கள். சற்று சிந்திப்பார்கள். பின்னர் வசதியாய் மறந்து விடுவார்கள்.

  இந்தக் களம் உங்களுக்கு எதிர்ப்பாளர்களைத் தான் தோற்றுவிக்கும்.
  உலகில் எண்ணற்ற விஷயங்கள் எவ்வளவோ இருக்கின்றன. அதைப் பற்றி எழுதலாம் அல்லவா ? இது எனது விருப்பம்…

 13. Dear Mr. Pamaran, Your words have enlightened me a lot. Thanks for sharing your thoughts in this website. But for the sake of people like me, why dont you publish your articles which you had published even before April 2007? I have searched through the net so many times for your other articles but I could not find them effectively. Every week I wait for Kumudam new edition only for the sake of reading your article and this week I was really disappointed that you didnt write. For the sake of record, I can write Tamil very well without any mistakes & I would love to write in Tamil in this forum but I dont know how to do it. I did like your article condemning the way Cheran had picturized his film Desiya Geetham & thanx for putting all those arguements in apt words which I really felt as if you were echoing my thoughts. Have you seen Cheran’s much acclaimed film “autograph”? which itself is a copy of an old Tamil movie? I just could not understand the way people congratulated him & praised him for that film. I think it was the pure male chauvinistic thought. I think a man & woman-both have the same harmonal disorders in each age group which leads to romantic fantasies in those years of budding. so, what if the girl he is marrying in the film invites all those men with whom she had some fantasies / romantic ideas / teenage infatuations at each stage of her life span? I think autograph was pure humbug & who knows, maybe you might have liked the particular film, but, I hope you being Pamaran definitely would have thought atleast once from my point of view about the story life of the film “Autograph”, bye my friend & thanks for educating us sooooooo well…..

 14. Very good Pamaran…. You superbly combine many leaders and their activities and their image among the people,but i think there is no meaning in simply analyzing the past. What all the indians need now is the SOLUTION for the Terrorism. I can’t see any solution in this post. Actually this post will develop more crisis rather than giving solution to any current crisis of terrorism. I think all our discussion should at least need to give a path for a solution. How can we tackle the terrorist whether they are Hindus or Muslim ?. This is the question all we need to find answer rather than discussing whether Gandhiji is Mahatma or Terrorist. Even if you prove that Gandhiji is terrorist, he was no more on this earth to give any punishment. What all we need to do his show our Unity at least on the issue of terror. Its really Amazing to see that all the Pakistan people and leaders are united even all they are telling the lie that no pakistan hand behind this terror attacks, but unfortunately in India our people are using this opportunity to discuss whether Gandhiji is Terrorist or not…. Anyway gandhiji really feel proud to see this kind of discussions, because only pure democracy allow us to discuss like this.

 15. பல வருடங்களுக்கு முன்பு தங்களது ‘பகிரங்க’ கடிதங்கள் படிக்கும் போதே ஒரு பரவசம் வரும்…

  இவ்வளவு நாளாக உங்களது பதிவுகளை மிஸ் பண்ணி விட்டேனே???

  படித்தால் எல்லாமே நெத்தியடி போல் உள்ளது…

  தொடரட்டும் தங்களது பதிவுகள்.. வாழ்த்துக்கள்..

  தங்களது வலையில் ‘பின்பற்றுவோர்’ வசதி அல்லது மின்னஞ்சலில் பதிவுகள் பெறும் வசதியை உருவாக்கினால் நன்றாக இருக்குமே..

 16. Bhagath singh patri ezhuthiyathu miga sari, thesathirkaga uyirai vitta avarai indru varai entha arasum kandukollavillai

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s