அச்சம் என்பது தமிழன் உடைமையடா

திரைகடலோடியும் தர்ம அடி வாங்கும் தமிழனுக்கு!
இந்தக் கடுதாசிய எழுதற இந்த நேரத்துல
நீ எந்த நாட்டுல…
எந்த ஊர்ல…
எந்த வீதில…
எவன்கிட்ட ஒதக்கு மேல ஒதை வாங்கீட்டு இருக்கியோன்னு ரொம்பக் கவலையா இருக்கு.

திரைகடலோடியும் திரவியம் தேடூன்னு உன்ன அனுப்புனா…
போன பக்கமெல்லாம் கண்ட கண்ட கழுதைககிட்டயெல்லாம்
தர்ம அடி வாங்கறதே உன் பொழப்பாய் போச்சு.

காலைல பேப்பர் படிச்சதுல இருந்து
மனசே சரியில்லேன்னு சத்தமில்லாம…
அப்படியே ஆனந்த் ஒயின்ஸ் பக்கம் நைசா ஒதுங்குனா…
அப்பப் பாத்து வர்றான் நம்ம அறிவொளி அப்பாசு.
அதுவும்… ‘அச்சம் என்பது மடமையடா அஞ்சாமை திராவிடர் உடமையடா…’ன்னு பாடீட்டு.

என்ன அப்பாசு… நேரங்காலந்தெரியாம பாடீட்டு வர்றே..ன்னேன்.
‘ஏன்.. இப்ப என்ன ஆகிப்போச்சுன்னு
நீ இப்படி தண்ணீரும் தள்ளாட்டமுமா இருக்கே…?’ன்னான் அப்பாசு.

அட… சந்தன வீரப்பன் கன்னட நடிகர் ராஜ்குமாரக் கடத்தீட்டுப் போயிட்டாருப்பா…
அந்தாளக் கடத்துனதால பெங்ளூர்லயும் மைசூர்லயும்
நம்ம தமிழர்கள ஊடுகட்டி அடிக்கறாங்களாமா கன்னடர்க..
உனக்குத் தெரியாதா…?ன்னேன்.

‘அதுக்கெதுக்கு நம்மாளுகள அடிக்கறாங்க…
வீரப்பனென்ன ராஜ்குமாரக் கடத்தலாமா..
வேண்டாமான்னு தமிழ்நாட்டுல கருத்துக்கணிப்பு நடத்தீட்டு
கடத்துன மாதிரி இவுங்க நம்மாளுகள அடிக்கறதுல
என்ன நியாயம்?’ங்கறான் நம்ம அறிவொளி அப்பாசு.

அப்புறம் எதுக்கு..’அச்சம் என்பது மடமையடா’ன்னு பாடறே…
அந்தப் பாட்டையே இனிமே..
‘தமிழனுக்கு அச்சம் என்பது உடைமையடா…
அஞ்சாமை மத்தவன் கடமையடா…’ன்னு பாடு…ன்னேன்.

“என்ன இருந்தாலும் ஒரு இந்தியன் இன்னொரு சக இந்தியன குத்தம் சொல்றது நல்லாவா இருக்கு?”ன்னான்

“இதுக்கொண்ணும் கொறச்சலில்லை… இந்த இந்தியன்… செவ்விந்தியன்கறதெல்லாம் ஆகஸ்ட் 15க்கும், ஜனவரி 26க்கும் மட்டும்தான் செல்லுபடியாகும். மத்த நாளெல்லாம் நம்ம

தமிழனுக “பம்பாய் இந்தியன்” கிட்டயோ….”கர்நாடக இந்தியன்” கிட்டயோ…. தர்ம அடி வாங்க வேண்டீதுதான். “காவிரில 205 டி.எம்.சி. தண்ணி உடு”ன்னு உகாண்டாக்காரனா

சொன்னான்?.இந்தியர்களால்-இந்தியர்களுக்காக-இந்தியரே உருவாக்கிய நடுவர் மன்ற நீதிபதி
“உடு”ன்னு சொன்னப்பவே தேடித் தேடி ஒதைச்சான் தமிழர்கள.இதுல நீ வேற ஒடிஞ்சதுகளுக்கு ஒத்தாசையா வர்றே… இத எங்க போயி முட்டிக்க?. இங்க பாரு அப்பாசு…. உன்ன மாதிரி நம்மால யானைக்கெல்லாம் கோமணம் கட்ட முடியாது…..ஏதோ நம்மளால முடிஞ்சது….. எலிக்கோ…. பூனைக்கோ……கட்டலாம்.நீ வேணும்னா பீகார்ல கல்லொடைக்கறவனுக்காக கண்ணிர் உட்டுக் கவிதை எழுது. நான் வரல இந்த இந்தியன் வெளையாட்டுக்கு…. வா.. அப்படியே ஆளுக்கு நாலு இட்லிய உள்ல தள்ளீட்டு வருவோம்’ன்னு கடையப் பாத்து நடையக் கட்டுனோம்.

இட்லிக் கடைல செமக்கூட்டம்.
‘ஆளுக எந்திரிக்கற வரைக்கும் இதைப் படிச்சிட்டு இருங்க’ன்னு
பேப்பரத் தூக்கிப் போட்டாரு நாயரு.

அப்பாசு… அப்படியே அதுல ‘பெரியார்’ ரிசல்ட்
போட்டிருக்கா பாத்துச் சொல்றா…ன்னேன்.

‘பெரியாரப் பத்தி எந்தச் சமாச்சாரமும் இன்னைக்கு வர்லயே…’ன்னான்

அட நான் அந்தப் பெரியாரச் சொல்லலப்பா…
பெரியார் லாட்டரிச் சீட்டுல நம்ம நம்பர் வந்துருக்கான்னு
பாத்துச் சொல்லூன்னு சொன்னா…நீ வேற…

“அடப்பாவி… ‘ஒ€ழச்சுச் சாப்புடுங்கடா முட்டாப்பசங்களா’ன்னு
வாழ்நாள் பூராவும் தொண்ட கிழியக் கத்துன
பெரியார் பேராலயே லாட்டரிச் சீட்டா…
ஒலகம் உருப்பட்டாப்லதான்.
நாட்டுல பல பேரு கண்ணு தெரியலேயே…
நாலு நல்ல சமாச்சாரங்களப் பாக்க முடியலியே’ன்னு
மனசுக்குள்ள குமுறிக்கிட்டு இருக்கான்…
நீ என்னடான்னா இருட்டுல எரும மாட்டைத் தேடுன கதையா…நம்பரத் தடவுறியே…

இதப்பாத்தியா…
சிங்களன் குண்டுக்கு தப்பிச்சு படகேறி வந்த 21 தமிழ் அகதிகள
கடல்லயே தள்ளி கொன்னு போட்டாங்கய்யா…”ன்னு
பேப்பர நீட்டுறான் அறிவொளி அப்பாசு.

” ‘வந்தாரை வாழவைக்கும் தமிழகம்’ன்னு
நம்பி வந்தாங்க.
ஆனா… இங்க வந்தாரையும் வாழ வைக்கல…
வாழ்ந்தோரையும் நிம்மதியா விட்டு வைக்கல…”

ரொம்ப உணர்ச்சிவசப்படாதே அப்பாசு.
ஆயிரம் பிரச்சனைக எடைல வந்தாலும்
தொப்புள் கொடி உறவு உட்டா போகும்?
உனக்கு தான் தெரியுமில்ல…நம்மாளுக புத்தி…
புதுப்பிரச்சனை ஒண்ணு கெடச்சுதுன்னா
பழச அப்படியே அம்போன்னு உட்ருவாங்கன்னு…
இதுக்கு போயி வருத்தப்படறியே….
எனக்கு கொஞ்சம் வேல இருக்கு.
அப்படியே வீட்டு வரைக்கும் தலையக் காட்டீடு வந்தர்றேன்…னு நகர்ந்தேன்.

“ஊடெல்லாம் சுண்னாம்பு அடிக்கணும்…
ஊட்டை அடைச்சுக்கிட்டு இருக்குற ஒன்னோட புஸ்தகம்…
பேப்பரெல்லாம் ஓரங்கட்டிவையு”ன்னா பொண்டாட்டி.
மேயற மாட்டை நக்கற மாடு கெடுத்ததுங்கற பேர் வரவேண்டாமேன்னு…
மூல மூலைக்கு எறைஞ்சு கெடந்ததை
எல்லாம் தூசு தட்டி எடுத்துக் கட்டி வைக்க ஆரம்பிச்சேன்.

கால் வாசிப் புஸ்தகம் கரையான் அரிச்சு…
பாதி மழைல நனஞ்சுன்னு கெடந்ததச் சுத்தம்
பண்றதுக்குள்ள தும்மல் வேற…
பழைய பேப்பரக் கட்டிக் கடாசீறலாம்னு பார்த்தா…

அதுல…

‘பம்பாயில் தமிழர் மீது கொலை வெறித் தாக்குதல்!’
“சிவசேனா வெறியாட்டம்”
“துடிக்கத் துடிக்கக் கொன்றனர்.”
“இரண்டாயிரம் தமிழர்கள் ரயிலில் சென்னை வருகை…”ன்னு பக்கம் பக்கமா செய்திகள்.

அடச்சே…
யாதும் ஊரே யாவரும் கேளீர்ன்னு பாடுன
எங்க கவிஞர் இன்னேரம் இருந்திருந்தார்ன்னா…
மனசு நொந்தே செத்திருப்பாரு.
மத்தவங்களுக்கெல்லாம் தமிழ்நாடு தெறந்த வீடு…
ஆனா..நம்மாளுகளுக்கு மட்டும்தான்
நிம்மதியாகத் தங்க ஒரு கூரை கிடையாது.
இதையெல்லாம் படிச்சுகிட்டு இருந்தா
ஒரு மாதிரி ஆயிரும்னு கட்டி வெச்சுட்டு…
அப்பாசப் பார்க்க நடையக் கட்டினேன்.

அறிவொளி அப்பாசு குடுத்த டீயக் குடிச்சுகிட்டே….
ஏன் அப்பாஸ் தமிழனுக்கு மட்டும் இவ்வளவு சிக்கல்?ன்னேன்.

“அட நீ வேற இப்ப யார் தமிழன்கறதுலயே பலசிக்கல் இருக்கு.
எங்காளுகள எடுத்துக்கோ…
அதுல சில பேரு தமிழன்னு சொன்னா
அது வேற யாரோன்னு நெனச்சுகிட்டு இருக்கான்.
என்னவோ இவுங்கெல்லாம் அரேபிய ஷேக்கோட சித்தப்பா பசங்கன்னு
நெனச்சுக்கிட்டு இருக்கானுக…

மார்க்கம்தான் வேறயே தவிர
இனம்னா அவனும் தமிழந்தான்னு புரிய வைக்கறதுக்குள்ள
எங்க ஆத்தாகிட்ட குடிச்ச பாலெல்லாம் வெளீல வந்துடும் போலிருக்கு.

சுருக்கமாச் சொன்னா…

இஸ்லாம் எங்க வழி
தமிழ் எங்கள் மொழி.

ஆனா…
எங்காளுகள்லயே சிலருக்கு இன்னமும்
‘மதத்துக்கும்-இனத்துக்குமே வித்தியாசம் தெரியாமத்தான் இருக்கு.”

அட நீ ஒண்ணு… அப்பாசு…
நம்ம தமிழ்நாட்டோட முதல்வரே
செக்கோஸ்லேவியா பாணி விடுதலை பத்திப் பேசுனப்போ…
“ஈழத்துல தமிழ் மாணவர்கள் – முஸ்லிம் மாணவர்கள் பழிவாங்கப்பட்டனர்”ன்னு பேசுறாரு…
இத எங்கபோயி முட்டிக்க…?
வாஜ்பாயுக்குப் புரியணும்னா வேண்ணா…
‘இந்து மாணவர்கள்’ன்னு சொல்லீட்டுப் போயிருக்கலாம்.
ஆனா ‘தமிழ் மாணவர்கள்’ன்னு சொன்னது எந்த விதத்திலும் சரியில்லே

இஸ்லாமியர்களும் , கிறிஸ்தவர்களும்
தமிழர்கள் இல்லாம ஐரோப்பியர்களா…?
இதுனாலதான் அங்க உள்ளவர்கள் அனைவரையும்
‘தமிழ் பேசும் மக்கள்’ன்னு ஒரே வார்த்தைல சொல்றாங்க…புரிஞ்சுதா?
அதுசரி… தமிழன்  இங்க மட்டும்தான் அடிபட்டானா…
இல்ல வேற எங்காவது உண்டா அப்பாசு?ன்னு கேட்டேன்.

“ஏன் இல்லாம…நாற்பது ஐம்பது வருசம் முன்னாடியே
பர்மாவுல ஒதை வாங்குனாங்க…
ரங்கூன்ல இருந்து கூட்டம் கூட்டமா வந்து சேர்ந்தாங்க நம்மாளுக.
ஜெர்மனிய எடுத்துக்க…
இப்பவும் நியோ நாஜிக்கள் தமிழனக் கண்டாலே
பொறட்டிப் பொறட்டி அடிக்கறானுக.

மொத்தத்துல…
உலகம் முழுக்க உதைபட்ட ஒரே இனம் எங்க இனம்தான்னு
நாம ‘நெஞ்ச நிமித்தி’ சொல்லலாம்?
சரி… வா… அப்படியே ஒரு தம்மடிச்சுட்டு வர்லாம்…”னு
பொட்டிக்கடையப் பாத்து நடக்க ஆரம்பிச்சிட்டான் நம்ம அப்பாசு.

சரி… இந்த சர்வதேசத் தமிழன் சமாச்சாரமெல்லாம் கிடக்கட்டும்…
நம்ம லோக்கல் தமிழன் எப்படி இருக்கான்…?
இந்த நிலமையே நீடிக்குமா…
இல்ல இங்கயும் உளுகுமா ஒதை…
தேச அளவுல கெடைக்கற அதே’மொதல் மரியாதை’ இங்கயும் கெடைக்குமா…
அதச் சொல்லு நீ மொதல்ல…

“விழுந்தாலும் ஆச்சர்யப்படறதுக்கு இல்லை.
ஏன்னா…’தமிழ்நாட்டுல தமிழனே மைனாரிட்டி…
அதுனால தமிழ் வழிபாடு கூடாது’ன்னு ஒரு ஆளு புள்ளி விவரமா
ஒரு இங்கிலீஷ் பத்திரிகைல எழுதீருந்தானே அத நீ பாக்குலியா?”ங்கறான் அப்பாசு.

அது கெடக்கட்டும்…நீ மத்த விசயங்களச் சொல்லூன்னேன்….

“அதையெல்லாம் நீ என்னக் கேக்கறத விட…
அந்த மறத்தமிழனையே கேளு…நம்மள ஆள உடு…”ன்னு கெளம்பீட்டான்.

தன்னிகரில்லாத் தமிழனே…!

என்னத்தச் சொல்லி என்னத்தப் பண்ண…
அந்த காலத்துல இந்த நாட்டோட சுதந்திரத்துக்கே
போராடுன வ.உ.சி.யப் பத்தி படம் எடுத்தாக்கூட
‘கப்பலோட்டிய தமிழன்’ன்னு எடுத்தாங்க…
ஆனா… இன்னைக்கு டிராபிக் போலீசைத் தட்டிக் கேக்கறவனைக்கூட
‘இந்தியன்’ன்னு படமெடுக்கறாங்க.

போனவாரம் நாரதகான சபாவுல
ஒரு கூட்டத்துக்குப் போயிருந்தப்போ…
பக்கத்துல இருந்த ஒரு கிழடுகிட்ட
‘ஐயா நிகழ்ச்சி எப்பத் துவங்கும்’னு கேட்டா…
‘தம்பி எனக்கு இங்கிலீஷ் அவ்வளவா வராது’ங்குது அது.
Programme எப்ப Start ஆகும்னு ‘சுத்தத் தமிழ்ல’
கேட்டாத்தான் புரியுமாம் அதுக்கு.
சரி ஆறுதலுக்கு ஏதாவது பாட்டாவது கேக்கலாம்னு பாத்தா…
‘கட்டிப்புடி கட்டிப்புடிடா கண்ணாளா கண்டபடி
கட்டிப்புடிடா’ன்கறான் ஒரு தமிழன்.

ஆதித் தமிழனா இருக்க வேண்டியவன்
சாதித் தமிழனா ஆயிட்டான் இன்னைக்கு.

வெளி மாநிலத்தான்… வெளி  நாட்டான்…
நம்மாளுகள கொன்னு கொறைச்சது போக…
உள்ளூர்ல நம்மாளுக எண்ணிக்கைய நம்மாளுகளே
கொறைச்சிட்டு வர்றான்.

பாராளுமன்றத் தொகுதியே மூணு,நாலு கொறைஞ்சு போச்சு.
சாதாரணமாத் தமிழ் பேசுனாக்கூட
‘என்ன தமிழ்ப் பற்றா…?’ங்கறான் நம்மாளே.
‘இல்லப்பா எனக்கு அது மட்டும்தான் தெரியும்’னு
கையெடுத்துக் கும்புட்டாக்கூட விடமாட்டேங்கானுக
சில பிரிட்டிஷ்காரன் பேரனுக.

சாதித் தமிழன் போக மீதித் தமிழனுக
வாயப் பொளந்துகிட்டு ஆறு வித்தியாசத்துல அஞ்சுதான் தெரிஞ்சிருக்கு…
மீதி ஒண்ணு என்ன?ன்னு முடியப் பிச்சுக்கிட்டு சுத்தறானுக.

மொத்தத்துல…
தமிழனுக்கு குடும்பம் நடத்தறதுகூட எப்படீன்னு மறந்து போச்சு

‘அது’க்கும் மாத்ருபூதமோ… நாராயணரெட்டியோ வந்தாத்தான் ஆச்சுன்னு
அடம்புடிக்கறான் .

திரைகடலோடியும் திரவியம் தேடூன்னு
இவனுகள ஹார்டுவேர் – சாப்டுவேர் எல்லாம்
படிக்க வெச்சு அனுப்புனா…
இவனுக இருக்கற அண்டர்வேரையும் கிழிச்சுக்கிட்டு வந்து நிக்கறானுக.

இதுக்கெல்லாம் நம்மாளுகளுக்கு உள்ள ஒரேவழி…

எதிரிகளிடம்கூட காட்டுற இரக்கம் –
சகிக்கவே முடியாத அளவுக்கு கடைபிடிக்கிற சகிப்புத்தன்மை –
துரோகிககிட்டக்கூட காட்டுற பெருந்தன்மை –
இதையெல்லாம் அப்படியே மூட்டை கட்டி மூலைல வீசிட்டு…

தமிழனுக்கு ‘வாங்க’ மட்டுமில்ல.
‘குடுக்கவும்’ தெரியும்னு காட்டுனாப் போதும்.

அதுதான் பிரச்சனைகளுக்கான ஒரே முடிவு.

எதிர்ப்பார்ப்புகளுடன்,
பாமரன்
நன்றி: குமுதம்                                          17.8.2000