டிக்கிலோனா இந்தியன் ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷங்கருக்கு….!

கும்புட்டுக்கறனுங்கோ…

ஊட்ல எல்லாரும் செளக்கியம்களா…?

நமைச்சல் புடிச்ச நம்ம கைக்கு கொஞ்ச நாளா வேலையே இல்லாம இருந்துச்சுங்க…
ஆனா அரிசி தின்ன வாயும்…..
ஊர் மேயப் போன ….ம்
சும்மா இருக்காதுன்னு சொல்லுவாங்க நம்ம ஊர்ல.
ஏதோ உங்கள மாதிரி நாலு ‘நல்ல’ மனுசனுக இருக்கறதுனாலதான்
நம்ம ‘பொழப்பு’ ஓடுதுங்க.
உங்களொட மொதல் படத்தப் பார்த்ததுல இருந்தே
எப்படியாவது உங்கள ‘பலமாப்’ பாராட்டணும்ன்னு
தவியாத் தவிச்சுக்கிட்டு இருந்தேனுங்க…
ஆனா இப்பத்தான் அதுக்கு வசமா வேல வந்திருக்கு.
சமீபத்துல உங்க சமாச்சாரம் ஒண்ணு
சினிமாவா வந்திருக்குதுன்னு கேள்விப்பட்டதும் தலகால் புரியல.

கந்தசாமி! போலாமாப்பா படத்துக்கு…?ன்னேன்.

“என்ன படத்துக்கு…?”ன்னான் கலாரசனையத்த கந்தசாமி.

“பாய்ஸ்…”ன்னேன்

“எனக்கு இங்கிலீசு எல்லாம் புரியாது…
வேற ஏதாவது தமிழ் படத்துக்குப் போலாம்…”கிறான் மரமண்டை.

யோய் கந்தா… ஜெண்டில்மேன்… ஜீன்ஸ்சு… பாய்சு…ன்னு
இங்கிலீசுல பேர் வெச்சாலும் நம்ம ஷ்ஷ்ஷ்ஷ்ஷங்கரு ஒரு சுத்தத் தமிழரப்பா…ன்னேன்.

“ஆமா வேலிக்கு ஓணான் சாட்சி…”ன்னு வாயுக்குள்ளயே மொணங்கறான் கந்தசாமி.

சினிமாவ சினிமாவா பார்க்கத் தெரியாத சீரழிஞ்ச சென்மங்கள்ல அவனும் ஒருத்தன்.

ஏம்ப்பா கந்தா!…
இந்த நாட்டுல உள்ள வேலை இல்லாத் திண்டாட்டத்தை
எப்படி அப்பட்டமா தோலுறுச்சு காமிச்சிருக்காரு
நம்ம ஷ்ஷ்ஷங்கரு ஜெண்டில்மேனுல…
அவரப் போயி ஏப்பா இப்படி கரிச்சுக் கொட்டறே…ன்னேன்

“எது… அர்த்த ராத்திரில கம்பி போட்டு நெம்பறதும்…
பகல்ல பணியாரம் விக்கறதுமா…
ஒண்ண எடுத்து உட்டாரே அதுவா…”ன்னு சொல்லீட்டு இளிக்கிறான் கந்தன்.

எனக்கு இவன்கிட்டப் புடிக்காதது இந்த இளிப்பு ஒண்ணுதான்.

கலாரசனைத்தவனே…! அதுல அர்ஜுன் விக்கறது பணியாரமில்ல அப்பளம்…ன்னேன்.

“ஏதோ ஒரு கருமம்..
நாட்டுல உள்ள பிற்படுத்தப்பட்டவங்க…
தலித்துக…
பழங்குடியினரு…ன்னு எல்லாத்துக்கும்
சீட் வாங்கிக் குடுத்துட்டாரு உங்க ஷ்ஷ்ஷங்கரு…
மீதி இருந்தது அந்த அய்யிருப் பையன் ஒருத்தந்தான்…
அவனுக்கு சீட்டுக் கெடைக்கலியேன்னு சொல்லி
அழுது பொறண்டு எடுத்த படத்தத்தான சொல்றே…?”ங்கிறான் கந்தசாமி

ச்சே… எதப்பாரு எகத்தாளம்தான் உனக்கு…ன்னேன்

“யோவ் சங்கரதாசா!
என்னக் கேட்டா… உங்க ஷ்ஷ்ஷங்கரோட ‘தெறமை’க்கு
தமிழ்நாட்டோட அமைச்சராகவே ஆக்கீருக்கணும் தெரியுமா…?”ன்னான் திடீர்ன்னு.

இதென்னடாது…
உத்தரப்பிரதேச எம்.எல்.ஏ. மாதிரி
திடீர்ன்னு கட்சிமாறி கோல் போடறானேன்னு நிமிர்ந்து பார்த்தா…

“அமாம்… வெளையாட்டுத்துறை அமைச்சரா…”ன்னு சொல்லீட்டு மறுபடியும் இளிக்கறான்.

எரிச்சல் வந்தாலும் அடக்கிக்கிட்டே  “எதுனால சொல்றே…?”ன்னேன்.

“பின்னே என்ன…
பழந்தமிழர் வெளயாட்டுக்களான பட்டம் உடறது…
பம்பரம் சுத்தறது…
கபடி ஆடறது… எல்லாம் அழிஞ்சு போச்சேங்கற
கவலைல ‘டிக்கிலோனா’வையும் ‘கப்ளிங்கை’யும் தமிழகத்துக்குக்கே
அறிமுகப்படுத்துன மகராசனாச்சே உங்க ஷ்ஷ்ஷங்கர்…
அதுதான் சொன்னேன்…”ங்கறான் கலாரசனையத்த கந்தசாமி.

அடச்சே… இதுக்குத்தான்யா உங்கிட்ட பேசறதேயில்ல…
நம்ம தமிழ் சினிமாவ இந்தியத் தரத்துக்கு…
அவ்வளவு ஏன் உலகத் தரத்துக்கே கம்பியூட்டரு… கிராபிக்ஸுன்னு
தூக்கி நிறுத்தற எங்க ஆளத் திட்ட எப்பிடிய்யா உனக்கு மனசு வருது…?ன்னேன்.

“அதுவா வருது…”ங்கறான் கந்தசாமி

பேசப் பேச வந்து சேர்ந்தான் ‘அறிவொளி அப்பாசு’.

இவனும் அவன் கேசுதான்…
நாம ஆனைக்கு அர்ரம்ன்னா…
இவனுக குதிரைக்கு குர்ரம்… பானுக ரெண்டுபேரும்.
நல்ல வேளையா ஒரே ஒரைக்குள்ள மூணு பிச்சுவா இருக்கக்கூடாதுங்கிற
‘பொன்மொழி’ அந்த நேரம் பார்த்து ஞாபகத்துக்கு வர…
சரி பேச்சோட ரூட்டையே மாத்தீரலாம்ன்னுட்டு….

வா… அப்பாசு! வேலையெல்லாம் எப்புடிப் போகுதூ…?ன்னேன்

“மொதல்ல வேலை வாங்கிக் குடு…
அப்புறம் சொல்றேன் அது எப்படிப்போகுதூன்னு…” சலிப்போட பேசறான்.

ஏன் உனக்கெல்லாம் கோட்டா கெடையாதா…?ன்னேன்.

பாத்தியா உன் ஷ்ஷ்ஷங்கரோட புத்தியக் காட்டுறயே…
கோட்டாவெல்லாம் கெட்டியாத்தான் இருக்கு…
ஆனா கெவுர்மெண்டுலதான் வேலையே கிடையாது…
எங்க பாரு லஞ்சம்… லாவண்யம்…”ன்னு மொணக மொணக
எனக்கு சட்டுன்னு உங்க ஞாபகம்தான் வந்துச்சு.

அட… அதப்பத்திதான் எங்க ஆளு
ஏற்கெனவே ‘இந்தியன்’ன்னு எடுத்திருக்காறே… பாக்கலியா…?ன்னு
சொல்லீட்டு வாய மூடறேன்… ரெண்டு பேரும் நக்கலா சிரிக்கிறானுக.

அப்பத்தான் நான் வாய உட்டு வம்புல மாட்டுன விசயம் புரிசுச்சு…
அவனுக நம்மள பொறி வெச்சுப் புடிக்கத்தான்
போட்டு வாங்கீருக்கானுக…ன்னு தெரிஞ்சதும் வெலவெலத்துப் போச்சு.

“எந்த இந்தியன்…?
மச்சம் பாக்க வந்த இந்தியனா…?
இல்ல அக்கடான்னு அவுங்க உடை போட்டா…
துக்கடான்னு நீங்க எடை போட்டா தடாவுல தள்ளற இந்தியனா?”ங்கறானுக கோரசா ரெண்டு பேரும்.

யோவ் கேணத்தனமா பேசாதீங்க…
அதுல லஞ்சத்தப் பத்தி பேசலியா எங்க ஆளு…?
சும்மா எதுக்கெடுத்தாலும் குத்தம் சொல்ற
வேலைய மொதல்ல உடுங்க… புரிஞ்சுதா…?ன்னு சொல்ல சொல்ல…

“போய்யா அரைலூசு…
அந்தப் படம் பார்த்த எவனும் கதாநாயகி தொடையையும்…
கமலகாசன் தொடையையும்தான் பார்த்தான்.
சுண்டல் விக்கறவன் கிட்ட பத்து ரூவா புடிங்கித் திங்கற போலீசத்தட்டிக் கேக்கறவன் பேரு இந்தியனாம்…

“போபர்சுல அடிச்சவன்…
தெகல்காவுல சுட்டவன்னு பெரிய பெரிய பெருச்சாளிகளைப் பத்திப் பேச துப்பில்லாம…
டிராபிக் போலீசு… பொட்டிக்கடைக்காரருக கிட்டயெல்லாம்
‘வர்மக்கலையக்’ காட்டறதுக்கு இந்த வெண்னை வெட்டி சிப்பாயு தேவையில்லை புரிஞ்சுதா…?
பத்து நிமிசம் தொடை….
பத்து நிமிசம் படை…ன்னு காட்டுறத
லேகியம் விக்கறவன்கூட செய்வான் ஞாபகம் வெச்சுக்கோ….”ன்னு
கடுப்பாப் பேசறானுக கந்தசாமியும் அறிவொளியும்.

எனக்கு எரிச்சல் எரிச்சலா  வந்துச்சு.
என்ன இருந்தாலும் உங்க தேசபக்திய
மச்சம் பாக்கற விசயத்துல வெச்சுக் கவுத்துட்டானுகளே
இந்தக் கபோதிக…ன்னு நெனைக்கறப்போ அழுகாச்சி அழுகாச்சியா வந்துருச்சு.
கன்னித்தீவு கதையே புரியாதவனுககிட்டப் போயி
கம்ப்யூட்டர் கிராபிக்சைப் பத்தி பேசுனது
நம்ம தப்புதான்னு நெனச்சுக்கிட்டே கெளம்ப எந்திரிச்சேன்.

“யோவ்…எங்க நைசா கம்பி நீட்டறே…?
உக்காரு பேசுவோம்…பத்தாததுக்கு…
அதுல உங்காளு சுதத்ந்திரப் போராட்ட வரலாற்றைச்
சொல்றேன்னுட்டு…
‘வெள்ளக்காரன் தமிழ் பொம்பளைகள கற்பழிக்க வந்தான்…
அப்படி வந்தப்போ எல்லாரும் தண்ணீல குதிச்சு செத்துப் போயிட்டாங்க’ன்னு
இதுவரைக்கும் எதுலயுமே இல்லாதத…
யாருமே எழுதாதத…’வரலாறு’ன்னு சொல்லி
உடான்ஸ் எடுத்து உடறாரே உங்காளு..
எனக்குத் தெரிஞ்ச கதையெல்லாம்…
வெள்ளக்காரன் யாரும் இந்தியப் பொண்ணுகள
கூட்டம் கூட்டமா கற்பழிக்க வர்ல…
ஆனா இந்தியன் ஒருத்தன் வெள்ளைக்காரி ஒருத்திய
தட்டீட்டு போயிரக்கூடாதேன்னு
சம்சாரத்தக் கூட்டீட்டு ஓடுனான் மெளண்ட்பேட்டன்…ன்னு
கேள்விப்பட்டிருக்கேன்…”ன்னு சொல்லீட்டு வழக்கம் போல
இளிக்கிறான் கலாரசனையத்த கந்தசாமி.

“அது சரி…உங்காளு இன்னொரு படம் எடுத்தாரே….
கேமராமேன்ல இருந்து லைட்பாய் வரைக்கும் டபுள் ஆக்ட்டுன்னு…
அது என்ன படம்..?”ன்னு கேட்டான் கந்தன்.

மெதுவா ….’ஜீன்ஸ்’சு…ன்னேன்.

“அதுல ஏதும் புர்ர்ர்ர்ச்சி பண்ணுலயா உங்காளு…?”ன்னு
நக்கலாக் கேக்கறான் அறிவொளி அப்பாசு.

“அட …அந்த விசயம் உனக்குத் தெரியாதா…?
ஒரு ஆள இவுங்க தலைவர் சங்கரு லட்சாதிபதியாவே ஆக்கீட்டாரு…
அது தெரியாதா உனக்கு…?”ங்குறான் நம்ம கந்தன்.

“யாரை…?”ன்னான் சந்தேகத்தோட அப்பாசு.

“வேற யார்…?
கோடீசுவரனா இருந்த அந்தப் படத்தோட தயாரிப்பாளரத்தான்….”ன்னு
சொல்லீட்டு விளுந்து விளுந்து சிரிக்கிறானுக ரெண்டு அரைவேக்காடுகளும்.

சும்மா நிறுத்துங்கப்பா…
இந்த மாதிரி ரெட்டைக் கொழந்தைக சப்ஜெக்ட்ட
எம்.ஜி.ஆரோட நீரும் நெருப்பும்ல இருந்து
ஜாக்கிசானோட டுவின் பிரதர்ஸ் வரைக்கும் எத்தன பார்த்தாச்சு…
ஆனா அதுல எல்லாம் காட்டுனத விட வித்தியாசமா காட்டீருந்தாரு
எங்க ஷ்ஷ்ஷங்கரூ…அதெல்லாம் எப்படிப் புரியும் உங்க மர மண்டைக்கு…?ன்னேன்.

“வித்தியாசம் உனக்குப் புருஞ்சுது சரி…
ஆனா நம்ம பாட்டு பொஸ்தகம் அடிச்ச பளனிச்சாமிக்குப் புரியணுமே…”ன்னு
இளுத்தான் கலாரசனையத்தவன்.

இதென்னடா புதுசா புதிர் போடறானேன்னுட்டு…
அந்தப் படம் நம்ம பாட்டு புஸ்தகப் பளனிச்சாமிக்கு ஏன் புரியலை….?ன்னேன்.

“பின்ன…அதுல நடிச்ச பிரசாந்த்தும் டபுள் ஆக்ட்டு….
அதுல நடிச்ச ஐஸ்வர்யாராயும் டபுள் ஆக்ட்டு….
அதுல நடிச்ச நாசரும் டபுள் ஆக்ட்டு….ன்னு
கத கேட்டுக் கொளம்பிப் போயி…..
‘சல சல சல ரெட்டைக்கிளவி
கல கல கல ரெட்டைக்கிளவி’ன்னு போடறதுக்கு  பதிலா…..
அதுல நடிச்ச லட்சுமியும் டபுள் ஆக்ட்டுதானோன்னு நெனச்சுக்கிட்டு….
“ரெட்டைக்கிழவி”ன்னு போட்டுட்டான் நம்ம பளனிச்சாமி….”ன்னு சொல்லீட்டு
இளிக்கிறானுக ரெண்டு பேரும்.

அதுசரி இதெல்லாம் கெடக்கட்டும் ..
எங்க ஆளோட முதல்வன் எப்படி…?
அதையாவது ஒத்துக்குவீங்களா…?ன்னேன்.
ஆனா அதுக்கும் அவனுக அசந்தர்ற ஆளாத் தெரியல.

“சாரி…
நாங்க அத்துமீறி தெலுங்குப் படத்தையெல்லாம்
விமர்சிக்கறதில்லை…”கிறாங்க பண்ணாடைக.

அதக் கேட்டதும் கோபம் தலைக்கேறீடுச்சு எனக்கு.

சும்மா நிறுத்துங்கப்பா ரெண்டு பேரும்.
இப்ப ரிலீஸ் ஆகியிருக்கு பாரு எங்காளோட ‘பாய்ஸ்’
அதப் பாத்துட்டுப் பேசுங்க…
இந்த நாட்டோட வேலையில்லாத் திண்டாட்டம்….
வறுமை…
லஞ்சம்….
இதையெல்லாம் மத்ததுல காட்டுனத விட
இதுல தோலுரிச்சுக் காட்டீருப்பாரு எங்காளு….
பாத்துட்டுப் பேசுங்க ரெண்டு பேரும்…ன்னு சொல்லீட்டு எரிச்சலோட ஊட்டுக்குக் கெளம்பீட்டேன்.
(……மிகுதி “மொத்தமும்” நாளை…)
 

11 thoughts on “டிக்கிலோனா இந்தியன் ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷங்கருக்கு….!

 1. அதெல்லாம் சரி. உங்க புரட்ட்ட்ட்ட்ட்சித் தமிழன், தமிழகத்து சேகுவாரா டைரக்டரு படத்தையெல்லாமும் அலசுங்களேன் தில்லு இருந்தா.

 2. நாளைக்காகக் காத்திருக்கிறேன் ஐயா 🙂

  சாத்தான்குளத்தான்

 3. அருமையான உள்குத்து. 😉 ஏன் தொடரும் போட்டீங்க இன்றே முடிச்சிருக்கலாமே ? நம்ம வலையுலகத்து மக்களை நல்லாவே படிச்சிருக்கிறதால சரியான அளவில் தொடரும் போட்டுடீங்க போல் இருக்கு 😉

 4. நீங்கதான் ஒரு படத்தை எடுத்து வெளியிடுங்க. அந்த படம் நல்ல படமா இருக்குதா இல்லயான்னு மத்தவங்க அலசட்டும். ஷங்கரு ஒரு மூளையத்தவன் சுஜாதாவோட பினாமி. இதெல்லாம் எத்தனை காலத்துக்குங்க பேசிகிட்டு இருப்பிங்க? படத்தை பாத்தோமா வந்தோமா நாலு கருத்துகள சொன்னோமான்னு இருக்கணும். எப்படிப்பட்ட அருமையான, குறையே சொல்லமுடியாத அளவுக்கு படம் எடுத்தாலும் அதையும் குறை சொல்ல இந்த உலகத்தில் ஆள் இல்லாமல் இல்லை.
  இதெல்லாம் ஒரு படம்னு உங்கள யாரு பாக்க சொன்னது? பாக்கறது பாக்காதது எல்லாம் உங்க உரிமை. பாத்துட்டு யாரு இந்த மாதிரி ஒப்பாரி வைக்க சொன்னது? அட இதுவும் உங்க உரிமைதான… மறந்தே போச்சு.
  சரி நீங்களே ஒரூ கதை ரெடி பண்ணி படமா எடுத்துடுங்க. மொத்த இயக்குனர்களுக்கு அதை ஒரு பாடமா, காவியமா வச்சிடலாம். : )

  ஏற்கனவே தமிழ்மணத்துல, மற்ற இடங்கள்லயும் தேவையே இல்லாமா ஓசி பப்ளிசிட்டி கொடுத்தாச்சு இதுல பத்தோட பதினொன்னா இந்த பதிவும் இணையுது. சரி எந்த பதிவுலயும் இல்லாத எந்த விஷயத்தை இந்த பதிவுல எழுதிட்டிங்க? எல்லாரும் எழுதி சளிச்சி போட்ட புளிச்சி போன விஷயந்தான்.

  ஓசி பப்ளிசிட்டி பூத்துல உங்க ஓட்டும் பதிவாயிடிச்சி.

  இதே பதிவுக்கு ஆமாங்க நச்சுன்னு சொல்லிட்டிங்க ன்னு நாலு கமெண்டும்
  உனுக்கு எதுக்கு இந்த வேலை?ன்னு நாலு கமெண்டும் வரும்.
  அட பதிவுன்னு போட்டா நாலு பேரு கமெண்டு போடத்தான் செய்வாங்க
  இதெல்லாம் என்ன புதுசா….

  எப்படியோ ஷங்கர் பத்தின பெருங்கொண்ட உண்மைகள சூப்பரா சொல்லிட்டிங்க இல்லாட்டி போனா யாருக்குமே தெரியாம போயிருக்கும்.

 5. தானத்தில் பெரிது நிதானம்.
  பொறுங்கள் நண்பா…
  அவருக்கு எழுதிய கடிதம் அடுத்த வாரம்…

 6. மகாசனங்களே எங்காளு அதான் என்னைப்போலவே ஒரு ஷ்ஷ்ஷங்கரதாசன் ஒரு கமெண்ட் போட்டிருந்தாரே அவர் எங்கே
  திடீர்ன்னு காணாமப்போயிட்டாரு????????????????????

  கவுண்டமணி பாணீல சொல்லணும்ன்னா

  “சூப்பரப்பூ”

 7. எழுதியதெல்லாம் சரிதான் ஆனால் படம் வந்து பல வருசம் ஆச்சு… இப்ப போய் எதுக்கு….
  இனி மேலாவது எவனும் பார்க்க கூடாதுன்னா….. கடைசியா ஒண்ணு எடுத்திருக்கரே சிவாஜி…. அதையும் போய் பாருங்க…… தமிழன, எவ்வளவு முடியுமோ அவ்வளவு தூரம் கேவலபடுத்தியிருக்கார் நம்ம பிரமா(மு)ண்டம் சங்கர்….

 8. அண்ணா, நல்வழி வாழ படம் எடுக்கும் நம்ம சங்கருக்கு ஏன் ஆஸ்கார் அவார்ட் குடுக்ககூடாது.

 9. பாமரன் அவர்களுக்கு,

  தங்களின் படைப்புகளை மிகவும் ரசித்து படிப்பவன் நான்.. அது கடிதங்களாகட்டும் இல்லை கட்டுரைகளாகட்டும் சாட்டையடி போன்ற நிதர்சன உண்மைகள் என்னையும் சில சமயம் சுட்டுத்தான் பார்க்கும்.

  நான் பெரிய எழுத்தாளன் அல்ல… காதலின் பேயரின் மிகச் சாதரணமாக கிறுக்கிக் கொண்டிரும் ஒரு பைத்தியக்காரன் தான். தங்களை போல உண்மைகளை வெளிப்படையாக பேசுவது என்பது எனக்கு கடினமான விஷயம். தயக்கமோ / பயமோ இதில் எதுவென்று எனக்கு சரியாக தெரிவவில்லை. இருந்தாலும் நான் சொல்லத் துடிப்பவைகளை உங்களின் எழுத்துகளில் காண்பதால் கொஞ்சம் நிம்மதி அடைகிறேன்.

  என்னத்தான் ‘சே’ வை பற்றி திரும்ப திரும்ப படித்தாலும்.. உள்ள இருக்கிற உணர்ச்சிகளை வெளிய கொட்டத் தெரியாத ஜென்மமா இருக்கிறதுல எனக்கே கொஞ்சம் கடுப்பா தான் இருக்கு. தயவு செஞ்சு என் வலைப்பூ பக்கம் மட்டும் வந்துறாதீங்க.. அப்புறம் “கிறுக்குப் பய கவிதைக் காதலன்”ன்னு நீங்க எழுதுற மாதிரி ஆயிடும்…

  சரிங்களா..

  இப்போதைக்கு போயிட்டு ..அப்புறமா வரேன்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s