டிக்கிலோனா இந்தியன் ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷங்கருக்கு….!-இறுதி பாகம்

 நம்ம ‘பாய்ஸ்’ படத்த எப்படியாவது பாத்தர்லாம்ன்னு பார்த்தா
அப்பப் பாத்து வேலைக்கு மேல வேல வந்துகிட்டே இருக்கு.
சரி எப்படி இருந்தாலும் நம்மாளுது இருநூறு நாளைக்கு முன்னாடியேவா எடுத்தறப் போறான்…னு அசால்ட்டா இருந்தா ரெண்டாவது நாளே…

‘பெரியோர்களின் வேண்டுகோளுக்கு இணங்க
சில காட்சிகள் வெட்டப்பட்டுள்ளன’ன்னு ஒரு விளம்பரம்

அப்புறம் அடுத்த நாளு…

‘மகளிரின் வேண்டுகோளுக்கு இணங்க
சில காட்சிகள் வெட்டப்பட்டுள்ளன’ன்னு இன்னொரு விளம்பரம்…

இதென்னடாது வம்பாயிருக்குன்னு யோசிக்க யோசிக்கவே…

‘டாக்டர்.கிருஷ்ணசாமியின் வேண்டுகோளுக்கு இணங்க
சில காட்சிகள் வெட்டப்பட்டுள்ளன’ன்னு மறுபடியும் ஒரு விளம்பரம்

கொஞ்சம் உட்டா நம்ம ஷ்ஷ்ஷ்ஷங்கரோடதையே வெட்டீருவாங்களோன்னு…
அடச்சே நம்ம ஷங்கருக்குப் புடிக்காதுன்னு சொல்லி
எதையாவது வெட்டீருவாங்களோன்னு கிலி கெளம்பீடுச்சு…
இத இப்படியே உட்டா சரிப்படாது…
எப்படியாவது பிளாக்குல வாங்கியாவது பாத்தர்றதுன்னு
கங்கணம் கட்டீட்டுக் கெளம்பீட்டேன்

தியேட்டர் பக்கம் பார்த்தா எவனையும் காணோம்…
அதவிடக் கூட்டம் டீக்கடைலதான் இருக்கு.
டிக்கட் கவுண்ட்டர்கிட்ட நெருங்குனா…
நம்முளுக்கு முன்னாடி நிக்கறானுக ‘அறிவொளியும்…’ ‘கலாரசனையத்தவனும்…’

அப்ப எனக்கு வந்த தெனாவெட்டுக்கு அளவே இல்ல.

வாங்க… வாங்க… எப்படி இருந்தாலும்
எங்காளுகிட்ட வ்ந்தே தீருவீங்கன்னு எனக்கு தெரியும்…ன்னேன்.

“யோவ் ‘சங்கரதாஸ்’…! இப்ப எதுக்கு அதெல்லாம்…?
மொதல்ல நீ டிக்கெட் வாங்கு…”ன்னாங்க.

அப்படி வாங்க வழிக்குன்னு நெனச்சுக்கிட்டே
டிக்கட் வாங்கீட்டு உள்ள நொழையவும்
படம் போடவும் செரியா இருந்துச்சு.
ஆந்திராவுல வாங்குன சென்சார் சர்டிபிகேட்டப் பார்த்ததும்
பெரியார் சொன்ன திராவிட நாடே கெடச்சுட்டாப்புல ஒரு சந்தோசம்…
ஆனாலும் கொள்ளைக்குப் போனாலும்…
கூட்டாகாதுங்கற மாதிரி எனக்கு இந்த பக்கம் ‘அறிவொளி…’
அந்தப் பக்கம் ‘கந்தன்’.

சரி ‘விதி’ உட்ட வழி…ன்னு படத்தப் பாக்க ஆரம்பிச்சா…

மொதல் சீன்லயே ஒருத்தன் ஜிப்பக் கழுட்டீட்டு வர்றான்…

சரி ஏதோ ஜிப்பு வைக்கத்தான் காசில்லாத வறுமையோன்னு
படத்தப் பார்த்தா… எதுக்கால வர்ற பொண்ணுகிட்ட
நீ பாக்கறதுக்குத்தான் கழுட்டீட்டு வர்றேங்கறான்.

“அடி செருப்பால…”ன்னு பக்கத்துல இருந்து சத்தம் கேக்கற நேரமாப் பார்த்து…
வசனம் சுஜாதா…ன்னு தெரைல போடறான்.

ச்சேச்சே… நம்மாளு நல்லவரு…
அவர இந்தாளுதான் கெடுத்திருப்பாருன்னு நெனச்சுக்கிட்டே
படத்தப் பாக்க ஆரம்பிச்சா… கிறுகிறுன்னுவருது.

இன்னொருத்தன் வர்றான்
தொடைக்கு நடுவுல கைய வைக்கிறான்…
“என்ன அரிக்குதா..?”ங்குது ஒரு மாதர் குல மணிவிளக்கு.

எவனோ ஒருத்தன் ஒருத்தியக் கூட்டீட்டு சாப்படப் போறான்…
“சாப்புட்ட காசுக்கு அளவா கைய மட்டும் புடிச்சுக்கோ…
தொடையெல்லாம் டூமச்சூ…”ங்கிறா…

இந்தக் ‘கொள்கைப் போராட்டத்துல’ தலைய உடற
ஒரு தறுதலையை தியேட்டர் கக்கூசுல வெச்சுப்
பின்னிப் பெடலெடுக்குது ஒரு கூட்டம்…

ஒருத்திக்காக அஞ்சு பேர் அலையறத வன்மையாக் கண்டிக்கிறார்
கண்ண பரமாத்மா மாதிரி ஒரு மகா புருசன்…

அதுல திருந்தி தனித்தனியா அலைய ஆரம்பிக்குது
அந்தத் தறுதலைக்கூட்டம்.

மொதல்ல ஒருத்தன் ஒருத்திய மடக்குனதும்…
தனியொருவனுக்கு பிகரில்லையேல் ஜகத்தினை அழித்திடுவோம்…ன்னு கெளம்பாம…
அவளோட காலுக்கு அடில படுத்துக்கிட்டு
“எங்களுக்கும் ஒன்ன மாதிரி ஒண்ணு வேணும்…”ன்னு கெஞ்சுது அந்தக் கூட்டம்.

அவுளும் அதுக்கு மனமிரங்கி… ஆளாளுக்கு இன்னொரு ஆள் புடிச்சுத்தர…

5+5=10 பேரும்.

ஜெண்டில்மேன்ல சொன்ன வேலையில்லா திண்டாட்டப் போராட்டம்…

காதலன்ல சொன்ன வர்க்கப் போராட்டம்…

இந்தியன்ல சொன்ன சுதந்திரம் கம் லஞ்ச லாவண்ய ஒழிப்புப் போராட்டம்…

இதையெல்லாம் ஒடனடியா நெறைவேத்தறதுக்கு ஏதோ ஒரு பீச்சுக்குப் போறாங்க.

அதுல ஒருத்தன்…
“உனக்கு பீலிங் வந்தா என்ன பண்ணுவே…?”ங்கறான்.

இன்னொருத்தி வாயுல மண்ணள்ளிப் போடறா…
ஒருத்தி ஷ்ஷ்ஷ்ஷ்ங்கரோட… அய்யய்யோ… தப்பு தப்பு…
கதா நாயகனோட “புர்ர்ர்ர்ர்ர்ர்ச்சிக்கு” ஒத்துக்க மாட்டேங்கிறா…
தொணையா வந்த இன்னொருத்தி புடிபடாதவளப் புடிக்க
ஒரு ‘புரட்சிகரமான’ ஒரு ஐடியாவக் குடுக்க…
காதலுக்காக(?) அவுத்துப் போட்டுட்டு அம்மணமா ஓடறான் கதாநாயகன்.

“சங்கரு!… வேணாம்… போட்டுக்க எல்லாத்தையும்…”ங்கறான் அறிவொளி அப்பாசு.

“ஐய்யய்யோ சுஜாதா… மாட்டிக்க டிரஸ்ஸ…”ங்கிறான் கந்தசாமி.

அதுக்கப்புறம் என்னாச்சு… ஏதாச்சு…ன்னு ஒரு எழவும் புரியல…
மயக்கம் தெளிஞ்சு எந்திரிச்சப்ப எதுக்கால நிக்கறானுக
நம்ம கந்தனும்… சுஜாதாவும்…
ச்சே… அப்பாசும் சங்கரும்…
அடச்சே… கலாரசனையத்த கந்தசாமியும் அறிவொளி அப்பாசும்.

மயக்கம் தெளிஞ்சதும் ரொம்ப சந்தோசமாகி…
அவ்வை சண்முகில வர்றாப்பல…
கால்ல போட்டிருக்கறத கழுட்டி
மூஞ்சி மூஞ்சியாப் பாத்து அடிச்சானுக ரெண்டு பேரும்.
மறுபடியும் இருட்டிக்கிட்டு வந்துச்சு.

மயக்கமானவனக் கொண்டுபோயி தர்மாஸ்பத்திரில போட்டுட்டு
நர்சுகிட்ட…
“இந்த நாயு செத்தா ஊட்டுக்கு தகவல் குடு…
உசுரோட எந்திரிச்சா எங்களுக்குத் தகவல் குடு…”ன்னு
சொல்லீட்டு போயிருக்கானுக ரெண்டு பேரும்.

ஆனாலும் முதல்வனே…!

உங்களுக்கு நிகர் நீங்கதான்…
இதுக்கெல்லாம் தளர்ந்து போயிறாதீங்க.
தளர்ந்து போற வயசா உங்குளுது…?
ஊஞ்சலாடிக்கிட்டிருந்த வாலிக்கே
‘எப்படி எப்படி சமஞ்சது எப்படீ…’ன்னு
வரி எடுத்துக் குடுத்த வயாகரா வள்ளல் நீங்க.
வாலிப அன்பர்களே!ன்னு லேகியம் விக்கற
பல டாக்டருககூட லேகியம் பலிக்காம
‘பாய்ஸ்’ பாருங்கன்னு சொல்றாங்கன்னா…
ஒங்க ‘தெறமை’ என்னன்னு உங்களுக்குப் புரியும்…

அதுனால ‘பாய்ஸ்’ படத்தோட
உங்க ‘கலைச்சேவையை’ நிறுத்திடாதீங்க.
இந்தப் படம் வேண்ணா குடும்பத்தோட
அம்மா… அக்கா… அண்ணி… தங்கை…ன்னு
பாக்கமுடியாத படமா இருக்கலாம்…

ஆனா… நீங்க இந்த ஒலகத்துக்கே பொதுவானவர்.
அதுனால… “GIRLS”ன்னு ஒரு படம் எடுங்க்…
அதை அப்பா… அண்னன்… தம்பி… பாக்கமுடியாத மாதிரி எடுத்து
ஆணாதிக்கத்துக்கு ‘மரண அடி’ குடுங்க…

நீங்க ஒரு K.K.வாகவும் வசனகர்த்தா ஒரு M.K.ஆகவும் இருந்தா என்ன…?
படம் பாக்கறவங்க எப்பவுமே ஒரு L.K. தான் புருஞ்சுதா?

அந்தப் படமும் நம்ம அம்மாக்கள் மாருல
எவனோ கைய வெச்சுகிட்டு இருந்தாலும் நாம ரசிக்கிற மாதிரி எடுங்க.

நம்ம சம்சாரங்களும் ரங்கநாதன் தெருவுல நடந்து போறப்போ
மத்தவனுக ஒரசர மாதிரி எடுங்க.
(உங்க Language லயே சொன்னா சாணை புடிக்கற மாதிரி…)

நம்ம தங்கச்சியா இருந்தாலும் Dating வேணும்ன்னு துடிக்கறப்போ
டெலிகிராமுலயாவது மணியார்டர் பண்ணி
அவ ‘சேவை’ தொடர்வதற்கு ஊக்குவிக்கற மாதிரி படம் எடுங்க…

அஞ்சு பொம்பளைக ஒரு ஆம்பளையக் கூட்டீட்டு வந்து
கட்டில் சத்தம் எழுப்பற மாதிரி…முக்கற மாதிரி..படம் எடுத்துத் தள்ளுங்க.

‘பாய்ஸ்’ படத்துக்கே 23 கோடி செலவு பண்ணி
தலைல துண்டு போட்டுக்க ஒரு தயாரிப்பாளர் கெடச்ச மாதிரி….
GIRLS படத்துக்கும் ஒரு இளிச்சவாயன் கெடைக்காமலா போவான்….
செய்வீங்களா ஷ்ஷ்ஷ்ஷ்ஷங்கர்….?

செய்வீங்க நீங்க…
எங்களுக்குத் தெரியும்…
ஏன்னா நீங்க ஒரு ‘ஜென்டில்மேன்’.

மனிதனையும் , மிருகத்தையும் பிரிச்சுக் காட்டறதே
அந்த ஆறாவது அறிவு ஒண்ணுதான்.
அது இல்லைன்னா…
தெருவுல இழுத்துக்கிட்டு சுத்தற நாயுக்கும்
நம்முளுக்கும் வித்தியாசம் இல்லாமப் போயிரும்.
ஆனா இப்ப நீங்க எங்கள மறுபடியும் மிருக வாழ்க்கைக்குத் தள்ளுறீங்க.
உங்களோட இந்த மனோவியாதிக்கான மருத்துவம் பாக்கறதுதான்
தமிழ் சமூகம் பண்ணியாக வேண்டிய மொதல் வேல.
அதுக்காக தெருத் தெருவா கையேந்தி வசூலிச்சாவது
மருத்துவம் பாக்க வேண்டீது எங்களோட பொறுப்பு.
ஏன்னா…உங்கள மாதிரி இளைஞன் வக்கிரம் புடுச்சு வீணாப் போறத விரும்பல நாங்க.

நீங்க சரி..
ஆனா எல்லாத்தையுமே “ஏன்…எதற்கு…எப்படி…?”ன்னு ஆராய்ச்சி பண்ற…
‘புனிதமான’ கலாச்சாரப் பின்னணில இருந்து வந்ததா நம்பிக்கிட்டிருக்கிற…
ஜப்பானியப் பாரம்பர்யத்திலேயே சம்பந்தம் பண்ணிக்கிட்ட…
வயசு எழுபதைக் கடந்த விஞ்ஞான வெண்ணையும்
ஏன் இப்படி சிந்திக்குதுங்கிறதுதான் யோசிக்க வேண்டிய விசயம்.

போதாக்கொறைக்கு இந்தப் ‘புரட்சிப்’ படத்தப் பத்தி
ஏதோ ஒரு டீ.வி.ல
நீங்களும் – மதனும் – சுஜாதாவும் மாத்தி மாத்தி
நெஞ்ச நக்கீட்டதப் பாத்ததும் புல்லரிச்சுப் போச்சு.

என்ன பெருமையடா ஏமாளி…?ன்னா
தவுட்டுப் பெருமையடா கோமாளி…ன்னானாம் ஒருத்தன்.
அந்த மாதிரி வெளக்குமாத்துக்குப் பட்டுக் குஞ்சம் வெச்சாப்பல
அந்த மதன் ஒங்களோடத ஓகோ…ஆகோ..ன்னு புகழறதக் கேட்டு
உங்களுக்கே பகீர்ன்னுதான் இருந்திருக்கும்.

“ஷங்கர் ஆபீசுக்குப் போன் பண்ணினோம்…
ஷங்கரே பேசுனாரு…”ங்குது அது.

ஷங்கர் ஆபீசுக்குப் போன் பண்ணுனா
ஷங்கர் பேசாம பின்ன அப்துல் கலாமா பேசுவாரு…?

கேக்கறவன் கேணப்பயல்ன்னா
பன்னி கூட பிளைமவுத் ஓட்டும்பாங்க இந்த மாதிரி ஆளுங்க.

எது எப்படியோ….
ஷ்ஷ்ஷ்ஷ்ஷங்கரு – சுஜாதா – மதன் வகையறாக்களுக்கு ஒரு சின்ன அப்பீலு:
பெரிய்ய்ய்ய்ய்ய பெரிய்ய்ய்ய்ய்ய்ய படிப்பெல்லாம் படிச்சவுங்க நீங்க.
நான் வெறும் தற்குறி.

இருந்தாலும் சொல்லணும்ன்னு தோணுச்சு…சொல்லீர்றேன்….

கோவிச்சுக்காதீங்க….

உங்குளுக்கெல்லாம் கண்ணாலம் ஆயிடுச்சுன்னு தெரியும்.

ஆனா….

குழந்தை குட்டிக…பேரன் பேத்தீக…இருக்கான்னு தெரியாது.

அப்படித் தப்பித் தவறி இருந்தா…
நான் சொல்றத ஒண்ணே ஒண்ணக் கேட்டுக்கங்க….

ஏன்னா…ஒங்க படத்துலயே சொல்ற மாதிரி….

M -T.V….
F – T.V…..ன்னு வந்து காலம் ரொம்பக் கெட்டுக் கெடக்குது…
அதுனால…
அதுக எல்லாம் பெருசாகி பள்ளிக்கூடம் போறப்ப…..
புஸ்தகம் வாங்கிக் குடுத்துடுவீங்களோ….இல்லையோ….

ஆனா….

மறக்காம….

நிரோத் வாங்கிக் குடுத்துடுங்க.

அவுங்குளுக்கு மட்டுமில்ல….
உங்க படத்தப் பாக்க வர்றவங்களுக்கும் சேர்த்துத்தான்.

அது படம் பார்க்க வந்தவங்களுக்கு ஒரு ‘பாதுகாப்பாவும்’ இருக்கும்….
சனத்தொகை கட்டுப்பாட்டுக்கு கெவுர்மெண்டுக்கு ஒதவுன மாதிரியும் இருக்கும்….

எப்புடி நம்ம ஐடியா…?

வேண்டுகோளுடன்,
பாமரன்.

நன்றி: தினமலர்                             05.10.2003

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s