மதமென்னும் பேய்…

‘Religion is regarded by the Common People as True,
by Wise as False and by Rulers as Useful’
                                                      – Seneca

பிறப்பால் நான் ஒரு கிருஸ்துவன்’ என்றார்
எதிரிலிருந்த நண்பர்.

அவரது அறியாமையை நினைத்துப் பரிதாபமாக
இருந்தது எனக்கு.

குழந்தை குழந்தையாகத்தான் பிறக்கிறது.
இங்கு எவரும் பிறக்கும்போதே ‘இந்து’வாகவும்,
‘இசுலாமிய’ராகவும்,
‘கிருஸ்தவ’ராகவும் பிறப்பதில்லை.

நான் பிறக்கும்போது என்னுடைய அப்பா
‘காந்தி காமராஜ் தேசியக் காங்கிரசில்’
(குமரி அனந்தனின் பழைய கட்சி) இருந்தார்
என்பதற்காக நான் பிறக்கும்போதே
கா.கா.தே.கா.வாகத்தான் பிறந்தேன் என்பது
எவ்வளவுக்கெவ்வளவு அபத்தமோ
அவ்வளவுக்கவ்வளவு அபத்தம்
நான் பிறப்பால் இந்துவென்பதும்,
முஸ்லிம் என்பதும்
இன்னபிற இத்யாதிகளென்பதும்.

தமிழக அரசின் கட்டாய
மதமாற்றத் தடைச் சட்டப்படி
உண்மையில் ‘கம்பி எண்ண’
வைக்கப்பட வேண்டியவர்கள்
உலகெங்கிலும் உள்ள பெற்றோர்கள்தான்.

எந்தவித தத்துவப் பின்னணிகளும்
அரசியல் சித்தாந்தங்களும்
மத எண்ணங்களும இன்றிதான்
ஒரு உயிர் உதிக்கிறது இந்த மண்ணின் மடியில்.

உண்மையான கட்டாய மதத் திணிப்பு
மழலைப் பருவத்திலேயே ஆரம்பித்துவிடுகிறது.
அதுவும் பெற்றோர்களால்.

மதம் தானாய் மாறுவது –
மாற்றப்படுவது –
மாறாமலே இருப்பது என்கின்ற
விஷயங்களையும் தாண்டி
நாம் கவனிக்க வேண்டியவை சிலதும் இருக்கின்றன.

அதுதான்:
மதத்தைத் தேர்வு செய்யும் உரிமை (Right to Choose)

எப்படி இந்த நாட்டின் ‘இறையாண்மையையே’
காப்பாற்றுவதற்கு
ஒருவருக்கு வயது வரம்பு
நிர்ணயிக்கப்பட்டிருக்கிறதோ…
அப்படி மதத்தைத் தேர்வு செய்வதற்கும்
வயது வரம்பு தேவை
என்பது எனது கருத்து.

இந்த நாட்டில் இல்லாத ‘ஜனநாயகத்தையே’
தூக்கி நிறுத்துவதற்கு
எப்படி 18 வயது நிச்சயிக்கப்பட்டிருக்கிறதோ
அதைப் போன்றே…
இல்லாத மதங்களை தீர்மானிப்பதற்கும்
வயது தேவை என்பதுதான் சரியானது.

ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை
அரசியல் கட்சிகளது தேர்தல் அறிக்கைகளையோ
எந்தக் கர்மத்தையோ ‘அலசிப்பார்த்து’
ஓட்டுப் போடுவதைப் போல

சகல மதங்களின் யோக்யதைகளையும்
உரசிப் பார்த்து தீர்மானிப்பதே
உத்தமமான விஷயம்.

இதில் கட்சிகளும் மதங்களும்
நம்மை முடிந்தளவிற்கு மடையர்களாக்குகின்றன.

இந்தத் ‘தேர்ந்தெடுக்கும்’ விளையாட்டில் சலிப்புற்று
‘தேர்தல் பாதை திருடர் பாதை’
என்று நிராகரிப்பதைப் போல
‘எம்மதமும் சம்மதமில்லை’
எனத் தீர்மானிக்கும் உரிமையும் இதில் உள்ளடக்கம்.

கொஞ்சம் பின்னோக்கிப் பார்த்தால்…

‘மதம் மக்களுக்கு அபின்’ என்ற மார்க்சும்…

‘மதம் மக்களுக்கு விஷம்’ என்ற ஈ.வே.ராமசாமியும்…

‘நால் வருணம் ஆசிரமம் ஆசாரம் முதலா
நவின்றகலைச் சரிதமெலாம் பிள்ளை விளையாட்டே…’
என்ற வள்ளலாரும்…

இன்று இருந்திருந்தால்…

‘பாகிஸ்தானின் கைக்கூலி’யாகவோ…
‘மதத்துரோகியாகவோ சித்தரிக்கப்பட்டிருப்பார்கள்.

அல்லது ‘இந்திய ஒருமைப்பாட்டிற்கு’
ஊறு விளைவித்ததாகக் கூறி
தடாவிலோ… பொடாவிலோ
உள்ளே தள்ளப்பட்டிருப்பார்கள்.

மொத்தத்தில் எல்லா மதங்களுமே
அம்பலப்பட்டு நிற்பது
பெண்கள் விஷயத்தில்தான்.

என்னதான் மதங்கள்
சமத்துவம் – சகோதரத்துவம் – அன்பு
என ஓலமிட்டாலும் பெண்களைப் பொறுத்தவரை
இவர்கள் எண்ணம் –
செயல் எல்லாம் ஒன்றுதான்.

இவைகள் அனைத்தும் ஒரே குரலில்
ஆணாதிக்கத்தையே பறைசாற்றுகின்றன
என்பதுதான் உண்மை.

என்னதான் பைபிளைக் கரைத்துக் குடித்தாலும்
ஒரு பெண் போப்பாக முடியாது.

என்னதான் நான்கு வேதமோ
நாற்பத்தேழு மந்திரமோ
நுனி நாக்கில் வைத்திருந்தாலும்
ஒரு பெண் மடாதிபதியாகவோ,
சங்கராச்சாரியாகவோ முடியாது.

என்னதான்
குர்ரானைத் தலைகீழாக ஒப்பித்தாலும்
ஒரு பெண் கலீபாவாக ஆக முடியாது.

ஏனெனில்,
மனித குல விடுதலைக்கான நெடிய போராட்டத்தில்
இம்மதங்கள் என்றுமே
பெண்களுக்கு எதிராகவே அணிவகுத்திருக்கின்றன.
மதங்களைச் சுற்றி என்னதான்
‘தத்துவப்’ புணுகு பூசினாலும்
நெற்றி அடியாய் என்னைச் சுற்றிச்சுற்றி
வருபவை இரண்டே இரண்டு வரிகள் தான்.

‘மதத்தை மிதி.
மனிதனை மதி’

என்பதே அது.

மதவாதிகள் மனிதனைக் கொன்றுவிட்டு
கடவுளைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.

கடவுளோ மதக் கலவரங்களில்
தான் கொல்லப்படாமலிருப்பதற்காக
நாத்திகர்களது கதவைத் தட்டிக் கொண்டிருக்கிறார்.

பாவம் கடவுள்.

நன்றி: தீராநதி 2002

‘உ’ போடு…..


‘Suspect Everybody’ – சேகுவேரா

‘அந்த மனுசன் தன் மனைவியைப் போட்டு இந்த மிதி மிதிச்சாரே
நீங்க தடுக்கவில்லையா?’ என்றேன் நண்பரிடம்.

‘அது அவருடைய நம்பிக்கை.
நான் மற்றவர்களுடைய நம்பிக்கைகளில்
குறுக்கிடுவதில்லை’ என்றார் வெகு அமைதியாக.

அடப்பாவிகளா…
எது நம்பிக்கை?
எது மூட நம்பிக்கை?
எது தன்னம்பிக்கை? என்று யோசிக்க ஆரம்பித்தால் தலை சுற்றுகிறது.

முதலில் ‘தன்னம்பிக்கை’ப் பிரியர்களைப் பார்ப்போம்.
இந்த ஜீவராசிகள் இங்கு மட்டும் என்றில்லை, உலகம் முழுவதும் உண்டு.

‘மேலதிகாரியைத் திருப்திபடுத்துவது எப்படி?’,
‘நண்பர்களைக் கண்டுபிடிப்பது எவ்விதம்?’,
‘கொழுந்தியாளைக் கோணாமல் பார்த்துக் கொள்வது எவ்வாறு?
என்கிற ரீதியில் ஆயிரக்கணக்கான தலைப்புகளில் அள்ளி வீசுவார்கள்.

‘பல் விளக்குவது எப்படி?’ என்பதைக் கூட புத்தகத்திலோ,
விளம்பரத்திலோ பார்த்து ஒப்புக்கொள்ளும் மத்தியதர வர்க்கம்தான், இவர்கள் இலக்கு.

மனித இனம் தோன்றி பல்லாயிரம் ஆண்டுகள் ஆகிவிட்ட போதிலும்
‘வாழும் கலை’யைச் சொல்லித் தருவதற்குக் கூட
புத்தகம்தான் வேண்டி இருக்கிறது இந்த வர்க்கத்திற்கு.

இந்தத் தன்னம்பிக்கைப் பிரியர்களது
மகா ‘கண்டுபிடிப்பு’தான் ‘செய்யும் தொழிலே தெய்வம்’.

புதை சாக்கடைக்குள் இறங்கி
மலத்துக்கு நடுவே ‘முத்துக்குளித்து’ அடைப்பு நீக்கி
வெளியில் வருபவருக்கும்…
மின் விசிறிக்குக் கீழே கோப்புகளோடு
குறட்டை விட்டுக் கொண்டிருப்பவருக்கும் ஒரே தெய்வம்.
முன்னவர்களுக்கு மட்டும் துர்நாற்றம் வீசும் தெய்வம்.
பின்னவர்களுக்கு ‘சுகந்தம்’ வீசும் தெய்வம்.
ஏனிப்படி…? என்றெல்லாம் கேட்டுத் தொலைக்காதீர்கள்.
அப்புறம் நீங்களெல்லாம் ‘தன்னம்பிக்கை’க்கு எதிரிகள் ஆகி விடுவீர்கள்.

இந்த தன்னம்பிக்கைப் பிரியர்களது ஒரே தாரக மந்திரம்: ‘உ’போடு.
அதென்ன ‘ஓ’வுக்குப் பதிலாக ‘உ’?.

அதுதான்: உண்மை – உழைப்பு – உயர்வு.
இந்த மூன்று ‘உ’வையும் தூக்கிக் கொண்டு
உள்ளூரின் பெரிய முதலாளிகளைத் தேடி ஓடுவார்கள் இவர்கள்.

மக்கள் எவரும் போராட்டம், புரட்சி, போர் என்று போய்விடாமல்
பார்த்துக் கொள்ளும் வேலையை இவர்கள் செய்கிறார்களே என்கிற
மகிழ்ச்சித் திளைப்பில் அவர்களும் அவிழ்த்து விடுவார்கள்,
தமது ‘வெற்றிக்கான படிக்கட்டுகளை’. 
‘நான் பேப்பர் பொறுக்கிக் கஷ்டப்பட்டு இந்த நிலைக்கு உயர்ந்தேன்’ என்கிற
ரகத்தில் நீளும் அவர்களது வியாக்கியானங்கள்.

இது போதும் நமது தன்னம்பிக்கைப் பிரியர்களுக்கு
அவர்கள் வாந்தி எடுத்ததை வாரிக்கொண்டு வந்து
மறுபடியும் மூன்று ‘உ’க்களோடு ஒரு தலைப்பைப் போட்டு
அச்சடிக்க வேண்டியது தான்.
உழைப்பால் உயர்ந்த உத்தமர்.

சரி இதுகள் இருக்கட்டும் ஒருபுறம்.

இன்று நாம் எதை மூடநம்பிக்கை என்று சொன்னாலும்
முண்டியடித்துக் கொண்டு சண்டைக்கு வருவதற்கென்றே
ஒரு கூட்டம் இருக்கிறது.
இது வேறு வகை.

‘ஆண்கள் பொட்டு வைப்பது மூடநம்பிக்கை’ என்று கலைஞர் ஒருமுறை எடுத்துவிட….

மதத்தின் மனசு நோகாமல் பார்த்துக் கொள்ளும் காவலர்கள் குமுறி எழ…
‘நான் நாத்திகர்களிலேயே நல்ல நாத்திகன்’ என இவர் சொல்ல…

‘நம்பிக்கையை மூட நம்பிக்கை என்று எப்படிச் சொல்லலாம்?’ என்று
மீண்டும் எகிறிக் குதிக்க…
அந்த நேரம் பார்த்துத்தானா தேர்தல் வந்து தொலைக்க வேண்டும்?

தான் ‘சீறிய’  ஆசாமிக்கே மூடநம்பிக்கைக் கோட்டாவில் எம்.பி.சீட்டை ஒதுக்கித்தர…
‘கோட்டா’வுக்கு எதிரானவர்கள் அந்த நல்ல நாத்திகரோடு
கூட்டணி வைத்துக் கொண்டு வலம் வர…
மொத்தத்தில் அந்த விளையாட்டு அப்போதைக்கு முடிவுக்கு வந்தது.

இரண்டு தரப்பையும் ரசித்தவர்களுக்கு ஒன்று மட்டும் புரிந்தது:

‘இவர்களது நாத்திகமும் பொய்.
அவர்களது ஆத்திகமும் பொய்
என்பதே மெய்’ என்று.

மதவாதியோ, பகுத்தறிவுவாதியோ
இரு தரப்பும் வசதியாக மறந்துபோன ஒன்று உண்டு.
அதுதான்: கருத்துச் சுதந்திரம்.

கருத்தை கருத்தால் எதிர்கொள்ளும்
துணிவற்ற அசடுகளின் கருத்துப் படி…
உலகம் உருண்டை என்கிற விஞ்ஞானத்தைச் சொன்ன
கலிலியோ பழம் கிருஸ்தவர்களது நம்பிக்கையில் குறுக்கிட்டவராகிறார்.

‘பிராம்மணனும் அப்பிராம்மணனும் சமமே’ என்ற புத்தர்
வர்ணாசிரம நம்பிக்கையில் குறுக்கிட்டவராகிறார்.

‘நட்ட கல்லும் பேசுமோ?’ என்று கேட்ட சிவவாக்கியர்
உருவ வழிபாட்டாளர்களின் நம்பிக்கையில் குறுக்கிட்டவராகிறார்.

எந்த மார்க்கமோ, எந்த தத்துவமோ, எந்த இயக்கமோ
அதற்குத் தேவை கருத்தைக் கருத்தால் சந்திக்கும் துணிவு.

இல்லாவிடில்…

‘கொலை வாளினை எடடா
மிகும் கொடியோர் செயல் அறவே’ என்றாராம் பாரதிதாசன்.

அப்படியாயின்…

கொடியோரைக் கொடியோர் என்று அழைப்பதுகூட
ஒருவேளை கொடியோரது நம்பிக்கையில் குறுக்கிடுவதாக ஆகிவிடுமோ என்னவோ?

நன்றி: தீராநதி- 2004
 

ஆரிய உதடுகள் உன்னது….

 

தமிழகத்தின் ஆகப்பெரும் அறிவு ஜீவிகளில் ஒருவரும்…
இந்திய துணைக்கண்டத்தின் அசைக்கவியலா இடதுசாரியும்…
சனநாயகத்தை தூக்கி நிறுத்திக் கொண்டிருக்கிற நான்கு தூண்களில்
மூன்றாவதோ, நான்காவதோ தூணான பத்திரிக்கைத் துறையின்
‘பிதாமகன்’களில் ஒருவருமான…
அவரைப் பற்றி அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது.
சந்திக்கும் பாக்கியம்தான் அடியேனுக்கு இன்னும் வாய்க்கவில்லை.
அவரது தூணுக்கு ஒருமுறை தமிழக அரசால் ‘ஆபத்து’ வந்தபோது
தமிழகத்துப் பத்திரிக்கையாளர்கள் பொங்கியெழுந்த ஒரு கூட்டத்தில்
பேசும்போது கூட….
இந்தத் தூண் ஈழத்தின் சகல தூண்களுக்கும் எவ்விதம் இன்னல்கள் விளைவித்தது
என்பதை முதலில் எடுத்துச் சொன்ன பிறகே என்னால் பேச முடிந்தது.

சுற்றி வளைப்பானேன்…?
அவர்தான் ‘இந்து’ ராம்.

காரல்மார்க்சுக்கு அடுத்த இத்தகைய மாமேதையைக் குறித்து
அண்மையில் நான் கேள்விப்பட்ட சில செய்திகள்
என்னை அதிர்ச்சியின் விளிம்புக்கே இட்டுச் சென்றன
என எழுதினால் அது பொய்.

மாறாக, மனசுக்குள் போட்டு வைத்திருந்த கணக்கை சரிபார்த்துக் கொள்ளக் கிடைத்த
அரியதொரு வாய்ப்பாக அமைந்தது என்பதுதான் மெய்.

அதில் ஒன்று தான்:
சர்வதேசப் பாட்டாளி வர்க்கத்திற்காகக் குரல் கொடுத்து வருபவரும்…
சி.பி.எம்.முடன் காற்றுக்கூட நுழைய இடமின்றி
இறுக்கமான இணைப்பு வைத்திருப்பவரும்…
அதனது எஸ்.எப்.ஐயின் தந்திராலோசனைக் கூட்டங்களில்
தவறாது பங்கேற்கும் தளகர்த்தரும்….
கருத்துச் சுதந்திரத்தின் குரல்வளைக்கு இன்னல் நேரும்போதெல்லாம்
களத்தில் குதித்துக் கத்தியைச் சுழற்றுபவருமான…
‘இந்து’ ராம் எதற்காக பலான குற்றச்சாட்டுக்களிலிருந்து
பல்வேறு குற்றச்சாட்டுகள் வரைக்கும் ஆளான
விஜயேந்திரரை ஓடோடிச் சென்று தனது சொந்தக்காரில் அழைத்து வந்தார்? என்பது தான்.

இது குறித்து நமது கேள்விகளெல்லாம் வெகுவெகு எளிதானவை.

தீவிர இடதுசாரி…
சாதி மறுப்பாளர்…
மதச்சார்பின்மையின் மொத்த உருவம்…
என்கிற அளவிற்கு உருவகப்படுத்தப்படும் இந்த ராம்
எதற்காக விஜயேந்திரரை நேரில் சந்தித்து அழைத்து வந்தார்?

அவருக்கும் இவருக்குமான உறவு
வர்க்க விடுதலைக்கான போராட்டத்தில் முகிழ்த்த உறவா…?
அல்லது அவரும் இவரைப் போல் SFI யின்
அரசியல் வகுப்பெடுக்கும் மார்க்சிய ஆசானா…?

ராம் சார்ந்திருப்பதாகச் சொல்லப்படும் அக்கட்சி
இச்செயலை எவ்விதம் பார்க்கிறது?
(‘இந்து’ ராம் சார்ந்திருக்கும் என்பதைவிடவும்…
இந்து.ராமை சார்ந்திருக்கும்… என்று எழுதத்தான் ஆசை…
ஆனாலும் சந்திரிகாவின் இந்த இனிய நண்பர்,
அமைப்புரீதியாக இதில் அங்கம் வகிக்கிறாரா இல்லையா? என்பது புரியாத
எண்ணற்ற விக்ரமாதித்தியன்கள் வேதாளங்களின் கேள்விகளுக்கு
விடை தெரியாமல் நம்மைப் போலவே தலையைச் சொரிந்து கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் சிக்கல்).

திலீபன் மன்றத்தைத் துவக்கியதற்காகவும்…
ஈழத்தில் ‘அமைதி’ப்படையின் அத்துமீறல்களுக்கு எதிராய்
மனிதச் சங்கிலியில் தங்களை இணைத்துக் கொண்டதற்காகவுமே…
அநேகரைக் கட்சியை விட்டுக் கட்டம் கட்டிய காம்ரேடுகள்
இதில் மட்டும் மெளனம் சாதிப்பதின் பின்னணி என்னவாக இருக்கக்கூடும்…?

சரி, இவை எல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும்.
நாம் அடுத்த விஷயத்திற்கு வருவோம்.

சுனாமியின் சோகம் இன்னும்கூட மக்களின் மனங்களைவிட்டு அகலாத சூழலில்…

எத்தனை உயிர்கள் பறிபோயிற்று…?
பெற்றோரைத் தொலைத்த மழலைகளின் நிலை என்ன…?
அரசினது நிவாரண பணிகள் மக்களைச் சென்றடைகிறதா இல்லையா…?
தமிழகக் கரையோரங்களில் ஒதுங்கிய உடல்கள் எவ்வளவு…?
அரசினது உதவிகளுமின்றி ஈழத்தின் வடக்கிலும் கிழக்கிலும்
பலியானவர்களின் குடும்பங்கள் என்ன பாடுபடுகின்றன…? என்கிற கவலைகளை காட்டிலும்…….

“கட்டி அழும்போதும் தாண்டவக்கோனே
காசு காரியத்தில் கண்வையடா தாண்டவக்கோனே”

என்கிற கதையாய் சிறீ லங்காவின்  ‘THE ISLAND’ பத்திரிக்கை கிளப்பிய புரளியை
ஆதாரமாக்கி ‘Is Prabhakaran Dead or Alive?’ என
சனவரி 9ஆம் தேதியே முதல் பக்கத்தில் வெளியிட வேண்டிய அவசியம் என்ன?

‘ஏன் இந்த அக்கறை…?
அதிலும் யாருக்கும் இல்லாத அக்கறை உனக்கு மட்டும் எதற்கு…?’ என
பராசக்தி பாணியில்தான் நாம் ராமையும்…
1878லிருந்து  ‘India’s National News Paper’ ஆக
இருந்து கொண்டிருக்கும் ‘இந்து’ நாளிதழினையும் நோக்கி
நாம் வினவவேண்டி வருகிறது.
போதாக்குறைக்கு அடுத்தநாளே இதற்கென ஒரு தலையங்கம் வேறு.

இப்படி எண்பதுகளின் இறுதியில்
சங்கரராமனை ‘மோட்சத்திற்கு’ அனுப்பி வைத்ததாகச் சொல்லப்படும் நபர்
பத்து பதினைந்து நாட்களுக்கும் மேலாய் ‘காணாமல்’ போயிருந்தபோது
‘Is Acharya dead or Alive?’ என்று கட்டம் கட்டிப்போட இவர்களுக்குத் தோன்றவில்லையே…
அதற்கு என்ன காரணம்?

அவரோடும் அவரது இயக்கத்தோடும் ஆயிரம் முரண்பாடுகள் அநேகருக்கு இருக்கலாம்.
ஆனால் தமிழக அரசு ஒரு நடவடிக்கையில் இறங்கினால் Freedom of Expression
எனத் தொண்டை கிழியக் கத்துகிற ஒரு நாளிதழ்…
புரளிகளை ஆதாரங்களாகவும்
ஆதாரங்களை புரளிகளாகவும் பார்க்கிற போக்கிற்கு என்ன பெயர்?

“பத்திரிகா தர்மம்…?”

“ஆங்கிலப் பத்திரிக்கை ஆரம்பிக்க சொல்கிறீர்களே அய்யா…
செய்திகளுக்கு எங்கே போவது?” என ஒருமுறை பெரியாரிடம் கேட்டார்களாம்.
அதற்கு அவர், ‘செய்திக்கா பஞ்சம்…? இன்னத்த ‘இந்து’ பேப்பர் வாங்கீட்டு வா…
அதுல அவன் எதையெல்லாம் சரின்னு போட்டிருக்கானோ
அதையெல்லாம் தப்புன்னு எழுது…
எதத் தப்புன்னு போட்டிருக்கானோ
அதையெல்லாம் சரின்னு எழுது…’ என்றாராம்.

இந்த “மெளண்ட்ரோடு மகாவிஷ்ணு” விஷயத்தில் அதுதான் இன்றைக்கும் சரி போலிருக்கிறது.

எது எப்படி இருப்பினும்
நம்முன் எழும் அடிப்படைக் கேள்வி ஒன்றே ஒன்றுதான்:

அது சரி…
ஒரே ஊரில் எதற்காக இரண்டு இலங்கைத் தூதரகங்கள்…?

நன்றி : புதிய பார்வை                     15.2.2005

ஆச்சி…

1aaachi.jpg

சொக்கலிங்கம்தான் ‘ஆச்சி மெஸ்ஸை’அறிமுகப்படுத்தி வைத்தார்.
அப்போதெல்லாம் முன்பணம் கட்டாமல்
எங்கேயும் சாப்பிட விடமாட்டார்கள்.

தொலைகாட்சியில் கமல்ஹாஸனோ – ரஜினிகாந்த்தோ எழுந்தருளி
‘ஒழுங்காக வருமானவரி கட்டுங்க’ என்றெல்லாம்
தொண்டை கிழியக் கத்தினாலும் கட்டாத ஜாதி நான்.
காரணம் அந்தளவு ‘செம’ வருமானம்.

‘அதெல்லாம் நான் பாத்துக்கறேன். நீங்க வாங்க’ என்று
ஆச்சியிடம் கூட்டிப்போய் ‘ஆச்சி இவுரு நம்ம நண்பர் பாத்துக்கங்க’ என்று ‘கணக்கு’ ஆரம்பித்து வைத்தவர் சொக்கலிங்கம் தான்.
அதற்கு முன்பு வரைக்கும் சுரேஷ்பாபு – ரமேஷ் இருவரது புண்ணியத்தில் ‘மரணவிலாஸில்’ இரவுச் சாப்பாடு ஒரு வழியாக ஒடிக் கொண்டிருந்தது.

‘வாய்யா… எப்ப வேணும்னாலும் வந்து சாப்பிடு…
நாராயணா! இவுருக்கு எலே எடுத்துப் போடு’ என்றது ஆச்சி.

பரிமாற வந்த பையன் கேட்டான் ‘சாருக்கு எந்த ஊரு?’
‘இதே ஊருதான்’ என்றவனை ஏற இறங்கப் பார்த்தான்.
எனக்கு வீட்டுச் சாப்பாடு ஒத்துக் கொள்ளவில்லை என்கிற
உண்மையை எப்படிச் சொல்ல அவனிடம்?

அது சரி தம்பி… உம் பேரு…? என்றேன்.

‘தடியப்பன்’ என்று பதில் வந்தது.

இப்படி ஒரு பேரா? என்றவனுக்கு…
‘இது எங்க குலதெய்வம் பேரு சார்’ என்றான் பையன்.

அன்றிலிருந்து எனக்கும் நண்பர்களுக்கும் ஆச்சி மெஸ்தான்.
ஆச்சியின் மகன் மகேஷ் அநியாயத்துக்கும் அப்பாவி.
இரவில் புரோட்டாவும் குருமாவுமாய் தின்று தள்ளும்
மேன்சன் வாலாக்களோடு பழகிப் பழகி
மரியாதை தருவதாக நினைத்துக் கொண்டு
‘ஜி, ஜி’ என்பார் மகேஷ்.

எனக்குக் கேட்டதுமே எரிச்சல் வரக்கூடிய
ஒரே வார்த்தை இந்த ‘ஜி’தான்.
தமிழர்களை மரியாதைப்படுத்துவதாக நினைத்துக் கொண்டு
‘பான்பராக் பார்ட்டிகளிடம்’ கடன் வாங்கிக் கொடுக்கும் வார்த்தை அது.

ஆனாலும் என்ன செய்வது ‘அக்கவுண்டில்’ சாப்பிடுபவன்
இதையெல்லாம் முதலிலேயே கேட்டுவிட முடியுமோ?
‘மகேஷ் என்னெ இப்படிக் கூப்பிடாதீங்க.
பேசாம பேர் சொல்லியே கூப்பிடுங்க’ என்பேன்.

‘அதெப்படி ஜி! அப்படிக் கூப்பிட முடியும்?’ என்பார் மீண்டும்.

நண்பர்கள் பரிவாரங்களோடு அங்கு செல்லும் குடும்ப இஸ்தன்
நானாகத்தான் இருக்கும்.
நாங்கள் போய் கொஞ்ச காலம்வரை
சாப்பாடு எவ்வளவு வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம்.
அளவு கிடையாது.

ஆனால் என்னோடு வந்த சோதிபுரம் கு.செயகுமாரால்
ஆச்சி மெஸ்ஸின் சட்டதிட்டங்களையே மாற்ற வேண்டி வந்தது.

சாம்பாருக்கு மூணு முறை சோறு…
ரசத்துக்கு மூணு முறை சோறு…
மோருக்கு மூணு முறை சோறு… என சாப்பாடு வாங்கினால்
அப்புறம் அவர்கள்தான் என்ன செய்வார்கள்?

பார்த்துப் பார்த்து சலித்துப் போய்
ஒன்றாம் தேதியிலிருந்து இனி எல்லோருக்கும் ‘அளவு சாப்பாடு’தான்
என போர்டு எழுதித் தொங்கவிட்டு விட்டார்கள்.

கூட வருகிற குண்டு சிவா, சார்லஸ், மொட்டை சிவா எல்லோருக்கும்
பிடித்த ஒரு விளையாட்டுப் பொருள் தடியப்பன் தான்.

‘டேய் தடி இங்க வா… இவுரு யார் தெரியுமா?’ என்பார்கள்
மூக்கு நீட்டமாக இருக்கிற வெங்கட்டை காட்டி…

‘சினிமாவுல எல்லாம் பார்த்திருப்பியே…’ பீடிகை தொடரும்.
பரிமாறுவதை விட்டுவிட்டு முழிக்கத் தொடங்கும் தடியப்பனிடம்
‘இவருதான் நடிகர் ரகுவரனோட தம்பி’ என்பார்கள்.
தடியப்பனோடு சாந்தாராமும் சேர்ந்து கொண்டு
வாயைப் பிளந்து கொண்டு நிற்பார்கள்.

மத்த டேபிள்காரர்கள் கையோடு மண்டையும் காய்ந்து போய் உட்கார்ந்திருப்பார்கள்.

மதுரையிலிருந்து வரும் ‘கு.ப.’ அவர்களிடம் ‘ஆபாவாணனாக’ அவதாரம் எடுப்பான்.
‘அண்ணே! ஒரு ஆட்டோகிராப் வாங்கி குடுங்கண்ணே’
என நச்சரிக்க ஆரம்பித்துவிடுவார்கள்.
ஆச்சி இதையெல்லாம் ரசித்தபடி முன்புறம் கட்டிலில் அமர்ந்திருக்கும்.
இரவு பதினொரு மணிக்குமேல் போனாலும்
எதையாவது சாப்பிட வைத்து அனுப்பாமல் இருக்காது ஆச்சி.
‘நாராயணா, அந்த அடுப்பை மூட்டு’ என்று குரல் கொடுக்கும்.
அப்புறம் ஆச்சியே எழுந்துவந்து அறையில் இருக்கும்
கப்போர்டைத் திறந்து… தனக்கென வைத்திருக்கும்
இட்லிப் பொடியை எடுத்துக் கொடுக்கும்.
சில நாட்களில் நானும் கட்டிலில் போய் அமர்ந்து கொள்ளும் வேளைகளில்
தான் 13 வயதில் கோயம்புத்தூருக்கு வந்திறங்கி
கஷ்டப்பட்ட கதையைச் சொல்லத் தொடங்கும்.

என்றாவது என்னோடு மகன் வரும்போது
கட்டிலில் பக்கத்தில் அமர வைத்து வாழைப்பழம்
உரித்துக் கொடுக்கும் ஆச்சி.
‘இவுங்க அம்மா வந்துட்டாளாய்யா?’ என்று கேட்கும்.
இன்னும் இல்ல ஆச்சி என்பேன்.
தனக்கு வைத்திருக்கும் பூஸ்ட்டில் பையனுக்குக் கொடுத்துவிட்டு
பழைய நினைவுகளில் புகுந்துவிடும்.

ஆச்சிக்கும், மகேசுக்கும் இருந்தது தலைமுறை இடைவெளிதான்.
மகேஷ் மெஸ்ஸை நவீனப்படுத்த நினைப்பார்.
ஆச்சிக்கு அதெல்லாம் பிடிக்காது.
மெஸ்ஸுக்கு வந்துபோகும் ‘வொயிட் காலர்களை’
எப்படி எப்படியெல்லாம் திருப்திபடுத்துவது
என்பதிலேயே மகேஷின் கனவுகள் இருக்கும்.
ஆச்சிக்கோ வேறு மாதிரி இருக்கும்.

இடையில் வெளியூருக்கு மாற்றல் வர …
ஆச்சியிடமும், மகேஷிடமும் போய் சொல்லிவிட்டு
“மகேஷ் இன்னமும் நான் உங்களுக்கு ஆயிரம் ரூபா பாக்கி” என்றேன்.

‘அதனால் என்ன சார்… எங்க போயிரப் போறீங்க…?’ என்றார் மகேஷ்.
‘காசாப்பா முக்கியம்? பத்திரமாப் போயிட்டு வாய்யா’ என்றது ஆச்சி.

உருண்டோடிய காலங்களில் ஓரிருமுறை ‘ஆச்சிமெஸ்’ பக்கம் தலையைக் காட்டினேன்.
கடைசியாக ஒருமுறை போனபோது…..

‘ஆச்சி போயி இன்னையோட பதினேழு நாளாகுது’ என்றார் இலை எடுக்கும் சுந்தரம்.
மனது கனமாகிப் போனது.

இப்பொழுது மிக நவீனமாகி விட்டது மெஸ்.
முன்புறம் இருந்த வாசலையும் சேர்ந்து விரிவுபடுத்தி விட்டார்கள்.
பார்சலுக்கென்று தனி இடம்.
எல்லாம் பிளாஸ்டிக் டப்பாக்களில்…
பூண்டு சாதம், மிளகு சாதம், கேரட் சாதம் என எல்லாமும் கிடைக்கிறது.

ஆச்சியின் அன்பைத் தவிர.

நன்றி: “புதிய பார்வை”                   1.1.2005