ஆச்சி…

1aaachi.jpg

சொக்கலிங்கம்தான் ‘ஆச்சி மெஸ்ஸை’அறிமுகப்படுத்தி வைத்தார்.
அப்போதெல்லாம் முன்பணம் கட்டாமல்
எங்கேயும் சாப்பிட விடமாட்டார்கள்.

தொலைகாட்சியில் கமல்ஹாஸனோ – ரஜினிகாந்த்தோ எழுந்தருளி
‘ஒழுங்காக வருமானவரி கட்டுங்க’ என்றெல்லாம்
தொண்டை கிழியக் கத்தினாலும் கட்டாத ஜாதி நான்.
காரணம் அந்தளவு ‘செம’ வருமானம்.

‘அதெல்லாம் நான் பாத்துக்கறேன். நீங்க வாங்க’ என்று
ஆச்சியிடம் கூட்டிப்போய் ‘ஆச்சி இவுரு நம்ம நண்பர் பாத்துக்கங்க’ என்று ‘கணக்கு’ ஆரம்பித்து வைத்தவர் சொக்கலிங்கம் தான்.
அதற்கு முன்பு வரைக்கும் சுரேஷ்பாபு – ரமேஷ் இருவரது புண்ணியத்தில் ‘மரணவிலாஸில்’ இரவுச் சாப்பாடு ஒரு வழியாக ஒடிக் கொண்டிருந்தது.

‘வாய்யா… எப்ப வேணும்னாலும் வந்து சாப்பிடு…
நாராயணா! இவுருக்கு எலே எடுத்துப் போடு’ என்றது ஆச்சி.

பரிமாற வந்த பையன் கேட்டான் ‘சாருக்கு எந்த ஊரு?’
‘இதே ஊருதான்’ என்றவனை ஏற இறங்கப் பார்த்தான்.
எனக்கு வீட்டுச் சாப்பாடு ஒத்துக் கொள்ளவில்லை என்கிற
உண்மையை எப்படிச் சொல்ல அவனிடம்?

அது சரி தம்பி… உம் பேரு…? என்றேன்.

‘தடியப்பன்’ என்று பதில் வந்தது.

இப்படி ஒரு பேரா? என்றவனுக்கு…
‘இது எங்க குலதெய்வம் பேரு சார்’ என்றான் பையன்.

அன்றிலிருந்து எனக்கும் நண்பர்களுக்கும் ஆச்சி மெஸ்தான்.
ஆச்சியின் மகன் மகேஷ் அநியாயத்துக்கும் அப்பாவி.
இரவில் புரோட்டாவும் குருமாவுமாய் தின்று தள்ளும்
மேன்சன் வாலாக்களோடு பழகிப் பழகி
மரியாதை தருவதாக நினைத்துக் கொண்டு
‘ஜி, ஜி’ என்பார் மகேஷ்.

எனக்குக் கேட்டதுமே எரிச்சல் வரக்கூடிய
ஒரே வார்த்தை இந்த ‘ஜி’தான்.
தமிழர்களை மரியாதைப்படுத்துவதாக நினைத்துக் கொண்டு
‘பான்பராக் பார்ட்டிகளிடம்’ கடன் வாங்கிக் கொடுக்கும் வார்த்தை அது.

ஆனாலும் என்ன செய்வது ‘அக்கவுண்டில்’ சாப்பிடுபவன்
இதையெல்லாம் முதலிலேயே கேட்டுவிட முடியுமோ?
‘மகேஷ் என்னெ இப்படிக் கூப்பிடாதீங்க.
பேசாம பேர் சொல்லியே கூப்பிடுங்க’ என்பேன்.

‘அதெப்படி ஜி! அப்படிக் கூப்பிட முடியும்?’ என்பார் மீண்டும்.

நண்பர்கள் பரிவாரங்களோடு அங்கு செல்லும் குடும்ப இஸ்தன்
நானாகத்தான் இருக்கும்.
நாங்கள் போய் கொஞ்ச காலம்வரை
சாப்பாடு எவ்வளவு வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம்.
அளவு கிடையாது.

ஆனால் என்னோடு வந்த சோதிபுரம் கு.செயகுமாரால்
ஆச்சி மெஸ்ஸின் சட்டதிட்டங்களையே மாற்ற வேண்டி வந்தது.

சாம்பாருக்கு மூணு முறை சோறு…
ரசத்துக்கு மூணு முறை சோறு…
மோருக்கு மூணு முறை சோறு… என சாப்பாடு வாங்கினால்
அப்புறம் அவர்கள்தான் என்ன செய்வார்கள்?

பார்த்துப் பார்த்து சலித்துப் போய்
ஒன்றாம் தேதியிலிருந்து இனி எல்லோருக்கும் ‘அளவு சாப்பாடு’தான்
என போர்டு எழுதித் தொங்கவிட்டு விட்டார்கள்.

கூட வருகிற குண்டு சிவா, சார்லஸ், மொட்டை சிவா எல்லோருக்கும்
பிடித்த ஒரு விளையாட்டுப் பொருள் தடியப்பன் தான்.

‘டேய் தடி இங்க வா… இவுரு யார் தெரியுமா?’ என்பார்கள்
மூக்கு நீட்டமாக இருக்கிற வெங்கட்டை காட்டி…

‘சினிமாவுல எல்லாம் பார்த்திருப்பியே…’ பீடிகை தொடரும்.
பரிமாறுவதை விட்டுவிட்டு முழிக்கத் தொடங்கும் தடியப்பனிடம்
‘இவருதான் நடிகர் ரகுவரனோட தம்பி’ என்பார்கள்.
தடியப்பனோடு சாந்தாராமும் சேர்ந்து கொண்டு
வாயைப் பிளந்து கொண்டு நிற்பார்கள்.

மத்த டேபிள்காரர்கள் கையோடு மண்டையும் காய்ந்து போய் உட்கார்ந்திருப்பார்கள்.

மதுரையிலிருந்து வரும் ‘கு.ப.’ அவர்களிடம் ‘ஆபாவாணனாக’ அவதாரம் எடுப்பான்.
‘அண்ணே! ஒரு ஆட்டோகிராப் வாங்கி குடுங்கண்ணே’
என நச்சரிக்க ஆரம்பித்துவிடுவார்கள்.
ஆச்சி இதையெல்லாம் ரசித்தபடி முன்புறம் கட்டிலில் அமர்ந்திருக்கும்.
இரவு பதினொரு மணிக்குமேல் போனாலும்
எதையாவது சாப்பிட வைத்து அனுப்பாமல் இருக்காது ஆச்சி.
‘நாராயணா, அந்த அடுப்பை மூட்டு’ என்று குரல் கொடுக்கும்.
அப்புறம் ஆச்சியே எழுந்துவந்து அறையில் இருக்கும்
கப்போர்டைத் திறந்து… தனக்கென வைத்திருக்கும்
இட்லிப் பொடியை எடுத்துக் கொடுக்கும்.
சில நாட்களில் நானும் கட்டிலில் போய் அமர்ந்து கொள்ளும் வேளைகளில்
தான் 13 வயதில் கோயம்புத்தூருக்கு வந்திறங்கி
கஷ்டப்பட்ட கதையைச் சொல்லத் தொடங்கும்.

என்றாவது என்னோடு மகன் வரும்போது
கட்டிலில் பக்கத்தில் அமர வைத்து வாழைப்பழம்
உரித்துக் கொடுக்கும் ஆச்சி.
‘இவுங்க அம்மா வந்துட்டாளாய்யா?’ என்று கேட்கும்.
இன்னும் இல்ல ஆச்சி என்பேன்.
தனக்கு வைத்திருக்கும் பூஸ்ட்டில் பையனுக்குக் கொடுத்துவிட்டு
பழைய நினைவுகளில் புகுந்துவிடும்.

ஆச்சிக்கும், மகேசுக்கும் இருந்தது தலைமுறை இடைவெளிதான்.
மகேஷ் மெஸ்ஸை நவீனப்படுத்த நினைப்பார்.
ஆச்சிக்கு அதெல்லாம் பிடிக்காது.
மெஸ்ஸுக்கு வந்துபோகும் ‘வொயிட் காலர்களை’
எப்படி எப்படியெல்லாம் திருப்திபடுத்துவது
என்பதிலேயே மகேஷின் கனவுகள் இருக்கும்.
ஆச்சிக்கோ வேறு மாதிரி இருக்கும்.

இடையில் வெளியூருக்கு மாற்றல் வர …
ஆச்சியிடமும், மகேஷிடமும் போய் சொல்லிவிட்டு
“மகேஷ் இன்னமும் நான் உங்களுக்கு ஆயிரம் ரூபா பாக்கி” என்றேன்.

‘அதனால் என்ன சார்… எங்க போயிரப் போறீங்க…?’ என்றார் மகேஷ்.
‘காசாப்பா முக்கியம்? பத்திரமாப் போயிட்டு வாய்யா’ என்றது ஆச்சி.

உருண்டோடிய காலங்களில் ஓரிருமுறை ‘ஆச்சிமெஸ்’ பக்கம் தலையைக் காட்டினேன்.
கடைசியாக ஒருமுறை போனபோது…..

‘ஆச்சி போயி இன்னையோட பதினேழு நாளாகுது’ என்றார் இலை எடுக்கும் சுந்தரம்.
மனது கனமாகிப் போனது.

இப்பொழுது மிக நவீனமாகி விட்டது மெஸ்.
முன்புறம் இருந்த வாசலையும் சேர்ந்து விரிவுபடுத்தி விட்டார்கள்.
பார்சலுக்கென்று தனி இடம்.
எல்லாம் பிளாஸ்டிக் டப்பாக்களில்…
பூண்டு சாதம், மிளகு சாதம், கேரட் சாதம் என எல்லாமும் கிடைக்கிறது.

ஆச்சியின் அன்பைத் தவிர.

நன்றி: “புதிய பார்வை”                   1.1.2005

Advertisements

12 thoughts on “ஆச்சி…

 1. //ஆச்சியின் அன்பைத் தவிர.//

  அந்தக் காலத்து மனுஷங்களுக்கு இருந்த அன்பே ஒரு தனிவிதம்தான்.

  ஹூம்…………

 2. ஊரை விட்டு வெளியே இருந்தாலும் அப்பப்போ நாம பழகிய இடங்களையும் பழகிய மனிதர்களையும் பற்றிய எழுத்துக்களைப் படிப்பது சந்தோஷமா இருக்குங்க…

 3. ஆச்சி மெஸ் விலாசம் தருவீங்களா..கோவையில் எங்க அக்கா குடும்பத்தினரும் இப்படி ஒரு ஆச்சி மெஸ்ஸுக்குப் போய் வருவாங்க..ரெண்டும் ஒன்னான்னு பார்க்கணும்

 4. ஏற்கெனவே இந்த ஆச்சி மெஸ் படித்திருக்கிறேன் ஆனால் கண்டிப்பாக ‘புதிய பார்வை’யில் அல்ல. நீங்களே ஏற்கெனவே போட்டுருக்கீங்கன்னு நினைக்கிறேன்.

  உங்களை எட்டு விளையாட அன்போடு ஜூன் 28 அழைத்திருக்கிறேன். அழைப்பைப் பற்றி அறியத் தரவேண்டும் என்ற விதியின் படி இங்கே பின்னூட்டம்.

  http://jazeela.blogspot.com/2007/06/blog-post_28.html

 5. Dear Pamaran,
  Jayakanthan during seventees wrote one short story about his experience in an arrack shop(Tamilnadu was dry area then). In that story love , affection, and humanity were core themes.After along gap of very many years , now I admire your article.
  Finally one question- Whether you have settled your dues to Achchy mess?

 6. இப்பொழுது பணிவன்பு என்ற பெயரில் ஒரு செயற்கத் தனமான “good morning, hi, how are you?, how do you do?” போன்ற அன்பு பரிமாற்றங்கள் இருந்தாலும் பழைய மனிதர்களின் “வாங்க தம்பி, நல்லா இருக்கீங்களா?” என்று வாய் நிறைய அழைக்கும் அழகில் மனம் கரைந்து விடும், மனம் நிறைந்து விடும். தங்களின் வயிற்றை நிரப்பிய ஆச்சி அவர்கள் படிப்பவர் மனதில் நிறைந்து நிற்பார் என்பது உறுதி.

 7. //ஆச்சியின் அன்பைத் தவிர//
  நேசம் கடைச்சரக்கு ஆகி வருதில்லே……

 8. உண்மையில் நடந்ததா!!!!! ஆச்சி என்றதும் என் அப்பாச்சி நினைவு வருகின்றது….

 9. ஆச்சி மெஸ் …அண்ணாச்சி மெஸ் … நைனா மெஸ் … மதுரை முனியான்டி விலாஸ் ….எல்லாம் போயி இப்போ எல்லா பக்கமும் ஆந்திரா மெஸ் தான்………… நவீனப் படுத்துரேன்னு சொல்லி பழைய நினைவுகளை தோண்டிப் புதைத்து விட்டோம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s