ஆரிய உதடுகள் உன்னது….

 

தமிழகத்தின் ஆகப்பெரும் அறிவு ஜீவிகளில் ஒருவரும்…
இந்திய துணைக்கண்டத்தின் அசைக்கவியலா இடதுசாரியும்…
சனநாயகத்தை தூக்கி நிறுத்திக் கொண்டிருக்கிற நான்கு தூண்களில்
மூன்றாவதோ, நான்காவதோ தூணான பத்திரிக்கைத் துறையின்
‘பிதாமகன்’களில் ஒருவருமான…
அவரைப் பற்றி அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது.
சந்திக்கும் பாக்கியம்தான் அடியேனுக்கு இன்னும் வாய்க்கவில்லை.
அவரது தூணுக்கு ஒருமுறை தமிழக அரசால் ‘ஆபத்து’ வந்தபோது
தமிழகத்துப் பத்திரிக்கையாளர்கள் பொங்கியெழுந்த ஒரு கூட்டத்தில்
பேசும்போது கூட….
இந்தத் தூண் ஈழத்தின் சகல தூண்களுக்கும் எவ்விதம் இன்னல்கள் விளைவித்தது
என்பதை முதலில் எடுத்துச் சொன்ன பிறகே என்னால் பேச முடிந்தது.

சுற்றி வளைப்பானேன்…?
அவர்தான் ‘இந்து’ ராம்.

காரல்மார்க்சுக்கு அடுத்த இத்தகைய மாமேதையைக் குறித்து
அண்மையில் நான் கேள்விப்பட்ட சில செய்திகள்
என்னை அதிர்ச்சியின் விளிம்புக்கே இட்டுச் சென்றன
என எழுதினால் அது பொய்.

மாறாக, மனசுக்குள் போட்டு வைத்திருந்த கணக்கை சரிபார்த்துக் கொள்ளக் கிடைத்த
அரியதொரு வாய்ப்பாக அமைந்தது என்பதுதான் மெய்.

அதில் ஒன்று தான்:
சர்வதேசப் பாட்டாளி வர்க்கத்திற்காகக் குரல் கொடுத்து வருபவரும்…
சி.பி.எம்.முடன் காற்றுக்கூட நுழைய இடமின்றி
இறுக்கமான இணைப்பு வைத்திருப்பவரும்…
அதனது எஸ்.எப்.ஐயின் தந்திராலோசனைக் கூட்டங்களில்
தவறாது பங்கேற்கும் தளகர்த்தரும்….
கருத்துச் சுதந்திரத்தின் குரல்வளைக்கு இன்னல் நேரும்போதெல்லாம்
களத்தில் குதித்துக் கத்தியைச் சுழற்றுபவருமான…
‘இந்து’ ராம் எதற்காக பலான குற்றச்சாட்டுக்களிலிருந்து
பல்வேறு குற்றச்சாட்டுகள் வரைக்கும் ஆளான
விஜயேந்திரரை ஓடோடிச் சென்று தனது சொந்தக்காரில் அழைத்து வந்தார்? என்பது தான்.

இது குறித்து நமது கேள்விகளெல்லாம் வெகுவெகு எளிதானவை.

தீவிர இடதுசாரி…
சாதி மறுப்பாளர்…
மதச்சார்பின்மையின் மொத்த உருவம்…
என்கிற அளவிற்கு உருவகப்படுத்தப்படும் இந்த ராம்
எதற்காக விஜயேந்திரரை நேரில் சந்தித்து அழைத்து வந்தார்?

அவருக்கும் இவருக்குமான உறவு
வர்க்க விடுதலைக்கான போராட்டத்தில் முகிழ்த்த உறவா…?
அல்லது அவரும் இவரைப் போல் SFI யின்
அரசியல் வகுப்பெடுக்கும் மார்க்சிய ஆசானா…?

ராம் சார்ந்திருப்பதாகச் சொல்லப்படும் அக்கட்சி
இச்செயலை எவ்விதம் பார்க்கிறது?
(‘இந்து’ ராம் சார்ந்திருக்கும் என்பதைவிடவும்…
இந்து.ராமை சார்ந்திருக்கும்… என்று எழுதத்தான் ஆசை…
ஆனாலும் சந்திரிகாவின் இந்த இனிய நண்பர்,
அமைப்புரீதியாக இதில் அங்கம் வகிக்கிறாரா இல்லையா? என்பது புரியாத
எண்ணற்ற விக்ரமாதித்தியன்கள் வேதாளங்களின் கேள்விகளுக்கு
விடை தெரியாமல் நம்மைப் போலவே தலையைச் சொரிந்து கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் சிக்கல்).

திலீபன் மன்றத்தைத் துவக்கியதற்காகவும்…
ஈழத்தில் ‘அமைதி’ப்படையின் அத்துமீறல்களுக்கு எதிராய்
மனிதச் சங்கிலியில் தங்களை இணைத்துக் கொண்டதற்காகவுமே…
அநேகரைக் கட்சியை விட்டுக் கட்டம் கட்டிய காம்ரேடுகள்
இதில் மட்டும் மெளனம் சாதிப்பதின் பின்னணி என்னவாக இருக்கக்கூடும்…?

சரி, இவை எல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும்.
நாம் அடுத்த விஷயத்திற்கு வருவோம்.

சுனாமியின் சோகம் இன்னும்கூட மக்களின் மனங்களைவிட்டு அகலாத சூழலில்…

எத்தனை உயிர்கள் பறிபோயிற்று…?
பெற்றோரைத் தொலைத்த மழலைகளின் நிலை என்ன…?
அரசினது நிவாரண பணிகள் மக்களைச் சென்றடைகிறதா இல்லையா…?
தமிழகக் கரையோரங்களில் ஒதுங்கிய உடல்கள் எவ்வளவு…?
அரசினது உதவிகளுமின்றி ஈழத்தின் வடக்கிலும் கிழக்கிலும்
பலியானவர்களின் குடும்பங்கள் என்ன பாடுபடுகின்றன…? என்கிற கவலைகளை காட்டிலும்…….

“கட்டி அழும்போதும் தாண்டவக்கோனே
காசு காரியத்தில் கண்வையடா தாண்டவக்கோனே”

என்கிற கதையாய் சிறீ லங்காவின்  ‘THE ISLAND’ பத்திரிக்கை கிளப்பிய புரளியை
ஆதாரமாக்கி ‘Is Prabhakaran Dead or Alive?’ என
சனவரி 9ஆம் தேதியே முதல் பக்கத்தில் வெளியிட வேண்டிய அவசியம் என்ன?

‘ஏன் இந்த அக்கறை…?
அதிலும் யாருக்கும் இல்லாத அக்கறை உனக்கு மட்டும் எதற்கு…?’ என
பராசக்தி பாணியில்தான் நாம் ராமையும்…
1878லிருந்து  ‘India’s National News Paper’ ஆக
இருந்து கொண்டிருக்கும் ‘இந்து’ நாளிதழினையும் நோக்கி
நாம் வினவவேண்டி வருகிறது.
போதாக்குறைக்கு அடுத்தநாளே இதற்கென ஒரு தலையங்கம் வேறு.

இப்படி எண்பதுகளின் இறுதியில்
சங்கரராமனை ‘மோட்சத்திற்கு’ அனுப்பி வைத்ததாகச் சொல்லப்படும் நபர்
பத்து பதினைந்து நாட்களுக்கும் மேலாய் ‘காணாமல்’ போயிருந்தபோது
‘Is Acharya dead or Alive?’ என்று கட்டம் கட்டிப்போட இவர்களுக்குத் தோன்றவில்லையே…
அதற்கு என்ன காரணம்?

அவரோடும் அவரது இயக்கத்தோடும் ஆயிரம் முரண்பாடுகள் அநேகருக்கு இருக்கலாம்.
ஆனால் தமிழக அரசு ஒரு நடவடிக்கையில் இறங்கினால் Freedom of Expression
எனத் தொண்டை கிழியக் கத்துகிற ஒரு நாளிதழ்…
புரளிகளை ஆதாரங்களாகவும்
ஆதாரங்களை புரளிகளாகவும் பார்க்கிற போக்கிற்கு என்ன பெயர்?

“பத்திரிகா தர்மம்…?”

“ஆங்கிலப் பத்திரிக்கை ஆரம்பிக்க சொல்கிறீர்களே அய்யா…
செய்திகளுக்கு எங்கே போவது?” என ஒருமுறை பெரியாரிடம் கேட்டார்களாம்.
அதற்கு அவர், ‘செய்திக்கா பஞ்சம்…? இன்னத்த ‘இந்து’ பேப்பர் வாங்கீட்டு வா…
அதுல அவன் எதையெல்லாம் சரின்னு போட்டிருக்கானோ
அதையெல்லாம் தப்புன்னு எழுது…
எதத் தப்புன்னு போட்டிருக்கானோ
அதையெல்லாம் சரின்னு எழுது…’ என்றாராம்.

இந்த “மெளண்ட்ரோடு மகாவிஷ்ணு” விஷயத்தில் அதுதான் இன்றைக்கும் சரி போலிருக்கிறது.

எது எப்படி இருப்பினும்
நம்முன் எழும் அடிப்படைக் கேள்வி ஒன்றே ஒன்றுதான்:

அது சரி…
ஒரே ஊரில் எதற்காக இரண்டு இலங்கைத் தூதரகங்கள்…?

நன்றி : புதிய பார்வை                     15.2.2005

Advertisements

4 thoughts on “ஆரிய உதடுகள் உன்னது….

 1. தமிழர்களுக்கு எதிராகவும், சிங்கள பேரினவாத அரசிற்கு ஆதராகவும் செயல்பட்டதற்காகத்தான் “neo-அவதார புருஷன் ராம்” அவர்களுக்கு “லங்கா-ரத்னா” பட்டம் கொடுக்கப்பட்டது.

  அதே முறையில் தற்போது அன்னார் அவர்கள் “பாரத ரத்னா” பட்டம் வாங்கவும் முயற்சி மேற்கொண்டிருக்கலாம். அல்லது நமது பொதுவுடைமை கொள்கைக் குன்றுகள் அவருக்கு அந்த பட்டத்தை வாங்கி கொடுக்க கங்கணம் கட்டிக்கொண்டு முயற்சி செய்வார்கள்.

  அல்லது அதற்கும் மேலாக துக்ளக் சோ, எம்.எஸ். சுவாமிநாதன் பாணியில் ராஜ்யசபா எம்.பி. ஆகும் உத்தேசமிருக்கலாம். யார் கண்டது.

  எது எப்படியோ கேட்கறவன் கேனப்பயலா இருக்கறவரை எருமை மாடுகள் ஏரோப்ளேன் ஓட்டத்தான் செய்யும்!

 2. அது மட்டுமல்ல 1989இல் (இந்திய அமைதிப்படை காலத்தில்) பிரபாகரன் இறந்துவிட்டார் என பரப்பப்பட்ட புரளியை கட்டம் கட்டி இந்து நாளிதள் வெளியிட்டது. ஆனால் அடுத்த நாளே அதே பத்திரிகை ஒன்றை வாசிக்க்கும் படத்தை புலிகள் வெளியிட்டு இந்துவினதும் தினமலரதும் முகத்தில் கரி பூசினார்கள். இதில் நகைப்புக்குரிய செய்தி என்னவென்றால் பிரபாகரன் எவ்வாறு கொல்லப்பட்டார் என ‘விலாவாரி’ யாக எழுதியதுதான். அத்துடன் நின்றுவிடாமல் இந்திய அடிவருடி வரதராஜப்பெருமாள் தான் அச்செய்தியை உறுதிப்படுத்தியதுமட்டுமல்ல பிரபாகரனின் உடலுக்கு மரியாதை நிமித்தம் மாலை அணிவித்ததாகவும் கூறியதையும் பிரசுரித்தனர்!!!!

 3. ராமைத்தான் நீங்க இரண்டாவது தூதரகம்னு சொன்னது இந்த தற்குறிக்கு தாமதமாகத்தான் புரிந்தது.

  படம் சந்திரிக்கா ராமை பார்த்து ஆரிய உதடுகள் உன்னது என பாடுவதுபோல் உள்ளது.

  இருவருக்குமிடையே விஜேந்திரருக்கும் சொர்ணமால்யாவுக்கும் உள்ள ‘ஈடுபாடு’ கண்களில் தெரிகிறது.

  -கருணா-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s