‘மரம் அமைதியை நாடினாலும்
காற்று விடுவதாயில்லை’
– மாவோ
பள்ளியிலிருந்து வீடு திருப்புகிறேன் என்பது பல கிலோ மீட்டருக்கு முன்னமே எனது வீட்டாருக்குத் தெரிந்துவிடும்.
வழியில் கிடக்கும் பெரிய மரக்கிளை ஒன்றைத் ‘தர தர’வென இழுத்துக் கொண்டோ… புத்தகங்கள் வைப்பதற்கு வாங்கிக் கொடுத்த பெட்டியில் கற்களைப் போட்டு நிரப்பி, கைப்பிடியில் ஒரு நீளக் கயிற்றைக் கட்டி ‘தடதடதட’வென இழுத்துக் கொண்டோ… திரும்பிக் கொண்டிருப்பேன்.
‘ஓட்ட ஸ்க்கூல்’ பத்மா டீச்சர், தான் பார்த்து வந்த ‘சிவந்த மண்’ கதையைச் சொல்லும்போது நாங்களெல்லாம் டேபிளுக்கு அடியில் உட்கார்ந்து அதைக் கேட்டுக் கொண்டிருப்போம்… ‘ஓட்ட ஸ்க்கூல்’ என்பது… ‘ஓட்டை ஸ்கூல்’ என்பதன் மரூஉ.
எங்கோ… யாரோ வீட்டுக் கதவை இரவில் வெங்கடாசலபதி வந்து தட்டினான் என்பதை நம்பி பயந்துபோய் எங்கள் வீட்டுக் கதவிலும் நாமம் வரைந்து வைத்தேன் ஒருமுறை. இன்றைக்கும் ‘இறைவனடி சேர்ந்ததை’ பலர் வருத்ததுடன் தெரிவிப்பதைப் போல் ‘வந்ததுக்கு’ மகிழாமல் மிரண்டதை நினைத்தால் சிரிப்பாக இருக்கிறது.
சோளக்காட்டுக்குள் புகுந்து ஓடுவது…
சின்னச் சின்ன பாத்தி கட்டி செடி வளர்ப்பது…
ஒவ்வொரு பாத்திக்கும் நடுவே குட்டிக்குட்டி ஓட்டைகள் போட்டு தண்ணீர் விடுவது…
வண்ண வண்ணமாய் முட்டைகள் இடும் பொன்வண்டுகளை அடர்ந்த இலந்தைப்பழ மரத்திலிருந்து பிடித்து வந்து நூல்கட்டி விளையாடுவது… என இயற்கையோடு கலந்து கழிந்தது எனது ஆரம்பப் பள்ளிப் பருவம்.
நகர்ப்புற சந்தடிகளிலிருந்து ஒதுங்கி இருந்த ‘ஓட்ட ஸ்க்கூலை’ விட்டு வேறு பள்ளி மாறியபோது எல்லாமே மிரட்சியாக இருந்தது. எதுவுமே அப்பா அம்மாவின் பார்வையிலேயே இருந்த நிலை மாறியிருந்தது புரியவில்லை அப்போடது. பரிட்சையை எவ்வளவு பிரமாதமாக எழுதியிருக்கிறேன் என்பதை அம்மாவிடம் காட்டுவதற்காக கேள்வித்தாளை பள்ளியில் கொடுத்துவிட்டு விடைத்தாளை வீட்டுக்குக் கொண்டு வந்து விட்டேன் ஒருமுறை. அதைப் பார்த்ததும் அலறி அடித்துக்கொண்டு விடைத்தாளை ஒரு கையிலும்… என்னை மறு கையிலும் பிடித்துக் கொண்டு மீண்டும் பள்ளிப் படியேறினாள் அம்மா.
புதிய பள்ளியில் ஆறாம் வகுப்புக்கு நுழைவுத் தேர்வு வேறு. (இப்போதெல்லாம் பிரசவம் முடிந்த மறுவாரமே பள்ளியில் சேர்த்து விடுவது வேறு விஷயம்…) இங்கிலீஷிலும் கேள்விகள் வரும் என்பதால் அப்பா படித்துப் படித்து சொல்லித் தந்தார் பலவற்றை. அதில் ஒன்றுமட்டும் இன்றைக்கும் புரியாதது எனக்கு.
“வாட் ஈஸ் யுவர் பாதர்…?” என்பதற்கு என்னதான் மண்டையை உடைத்துக் கொண்டு யோசித்தாலும்…
“உன் அப்பா என்ன…?” என்பதற்கு மேல் ஓடவில்லை.
“அப்பா! ‘உங்கப்பா என்ன…? ன்னா… என்ன அர்த்தம்” என்பேன்.
“வாட் ஈஸ் யுவர் பாதர்…ன்னா உங்கப்பா என்ன வேலை செய்கிறார்?ன்னு அர்த்தம்” என்பார் அப்பா. இங்கு ‘வேலை’ என்பதற்குத் தேவையான ஒரு வார்த்தையும் இதிலில்லையே என்று குழப்பிப் போவேன்.
அந்நியமான மொழி…
அதட்டலான சூழல்… என
போயிற்று எனது பள்ளி வாழ்க்கை.
சில வருடங்கள் முன்பு நேஷனல் புத்தக டிரஸ்ட் வெளியிட்ட ‘ஜன்னலில் ஒரு சிறுமி’ என்கிற நூலை வாசித்தது நினைவுக்கு வருகிறது.
டோட்டோசான் என்கிற இந்த சிறுமிதான் இதன் கதாநாயகி.
வகுப்பறையின் சன்னலுக்கு வெளியே அமரும் பறவையை நேசிப்பவளாக…
வீதியோரக் கலைஞர்களது இசையை ரசிப்பவளாக…
இயற்கையின் அழகில் லயிப்பவளாக… இருக்கும் டோட்டோசான் இக் ‘கடும் குற்றங்களுக்காக’ பள்ளியிலிருந்து வெளியேற்றப்படுகிறாள். பிற்பாடு அவளை ஏற்றுக் கொள்ளும் மற்றொரு பள்ளி இயற்கைக்கும் டோட்டோசானுக்கும் உள்ள உறவை புதுப்பித்துத் தருகிறது.
நூலை வாசிக்க வாசிக்க அந்த ரயில் பெட்டி போல் அமைந்த வகுப்பறையில் அமர்ந்து வாசிப்பவர்களாக…
அன்பான ஆசிரியர்களோடு மலை முகடுகளைச் சுற்றி வருபவர்களாக…
கடல் வாழ் உயிரினங்களைக் காண படகுப் பயணம் செல்பவர்களாக… நாமும் மாறும் அதிசயம் நிகழ்ந்தேறுகிறது.
இப்படிப்பட்ட பள்ளியும் ஆசிரியர்களும் நமக்கும் நமது மழலைகளுக்கும் வாய்க்கவில்லையே என்கிற ஏக்கமும் சேர்ந்தே எழுகிறது.
இன்றைக்கு இருக்கும் அபத்தமான கல்விமுறை குறித்தும், அதனை நடைமுறைப்படும்தும் ஏவலர்களாக ஆகிப்போன பள்ளி கல்லூரி ஆசிரியர்கள் குறித்தும் அலசி ஆராய்ந்து வெளி வந்துள்ள மற்றொரு நூலினையும் வாசிக்க நேரிட்டது.
‘காலச்சுவடி’ன் ‘தமிழகத்தில் கல்வி’ என்கிற நூலே அது.
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராகப் பணியாற்றிய வசந்திதேவியுடன் நிகழ்ந்த உரையாடல்களின் தொகுப்பு தான் அந்நூல்.
சொன்னவைகளே திரும்பத்திரும்ப சில இடங்களில் சொல்லப்பட்டாலும் கல்வியின் பல்வேறு பரிமாணங்களைப் பற்றி அலசும் இந்நூல் அனைத்து பள்ளி கல்லூரிகளிலும் கட்டாயப்பாடமாக வைக்கப்பட வேண்டிய ஒன்று.
கவனிக்க: கட்டாயப்பாடம் மாணவர்களுக்கு அல்ல. ஆசிரியர்களுக்கு.
திகார் சிறையைப் பார்த்தே தீரவேண்டும் என்கிற மாளாத ஆசை கொண்டவர்கள் அதற்கான ‘தப்பு தண்டாக்களில்’ இறங்க வேண்டியதில்லை. பேசாமல் பக்கத்திலுள்ள ஏதாவது மெட்ரிகுலேஷன் பள்ளிகளை எட்டிப் பார்த்துவிடுவது போதுமானது.
நவீன சித்ரவதைக் கூடங்களின் மறு அவதாரங்கள் அவை.
சிறை அதிகாரிகளாக முதல்வர்களும்…
சிறை வார்டன்களாக ஆசிரியர்களும் உருமாற்றம் பெற்று ‘படி படி’ என்று படிக்க வைத்து ‘கிழி கிழி’ என்று கிழிக்க வைக்கிறார்கள்.
தமிழில் பேசினால் தண்டனை வழங்கும் பள்ளிகளும் உண்டு தமிழகத்தில்.
இதற்குக் காரணம் அடிமுட்டாள்களாகவும், பேராசை பிடித்தவர்களாகவும் இருக்கின்ற ‘கான்விக்ட் வார்டன்களே’
யாரிந்த ‘கான்விக்ட் வார்டன்கள்…?’
வேறு யார்… பெற்றோர்கள் தான்.
‘தன் குழந்தை மட்டுமே முதல் மதிப்பெண் பெறவேண்டும்… மற்றவர்களெல்லாம் பிற்பாடுதான்’ என்கிற போட்டி பொறாமை உணர்வுகளை ஊட்டியே வளர்கிறார்கள் தத்தமது மழழைகளை.
‘உனக்குத் தெரியாததை ஆசிரியரிடம் கேள்… தெரிந்ததை சக மாணவர்களுக்குச் சொல்லிக் கொடு..’ என்கிற பெற்றோர்கள் ஏறக்குறைய இல்லை என்பதே உண்மை.
தன் பிள்ளை மட்டுமே படித்து வளரவேண்டும் என்கிற மடையர்களால் வளர்க்கப்படும் பிள்ளைகள்…. வளர்ந்த பிற்பாடு நியூட்டனின் மூன்றாவது விதியை மிகச் சரியாகவே பின்பற்றுகின்றன.
வளர்ந்த பிற்பாடு அவர்கள் செய்யும் முதற்காரியம்: தன் பெற்றோரை முதியோர் இல்லத்துக்கு அனுப்பி வைப்பது தான்.
எல்லாப் பொழுதுகளும் படிப்பில் கழியும் மழழைகளுக்கு ஓய்வுக்கும் விளையாட்டுக்களுக்குமான பொழுதுகள் இல்லாது போயிற்று.
ஒன்று மனப்பிரமை பிடித்தவர்களாக…
அல்லது சமூகம் குறித்த மயிரளவு சிந்தனைகூட அற்றவர்களாக…
அதுவும் இல்லையெனில் தேர்வு முடிவுகள் வெளிவந்த மறுநாளே தற்கொலை செய்து கொள்பவர்களாக பலியிடப்படுகிறார்கள்.
இன்றைக்கு அவர்களுக்கு கதை சொல்லக்கூட பாட்டிகள் இல்லாது போனார்கள்.
கதை சொன்ன பாட்டிகள் கதை கேட்டுக் கொண்டிருக்கிறார்கள் சீரியல்களில்.
எதை வேண்டுமெனினும் மன்னிக்கலாம்.
ஆனால் மன்னிப்பே கிடையாது
மழலையைக் கொன்றவர்களுக்கு மட்டும்.
நன்றி : தீராநதி