என்றென்றும் தாடி….

pam88.jpg

தாடி மீதான காதல் எனக்கு எப்போது ஏற்பட்டது என்று துல்லியமாக யூகிக்க முடியவில்லை.

ஏழாவதோ எட்டாவதோ படிக்கும்போது கிளாஸ் லீடர் அரவிந்தனின் அடர்த்தியான மீசையும் அவனுடைய கிடார் வாசிப்பும் ரொம்பப் பிடிக்கும். போண்டா சிவாதான் சொன்னான்… ‘கன்னத்துக்கு சோப்புப் போடாம வெறும் பிளேடுல சொரண்டி உட்டா போதும் சீக்கிரம் மொளச்சிரும்’….

போண்டாவின் பேச்சைக்கேட்டு அப்பாவுடைய ஷேவிங் செட்டை எடுத்து… மேலும் கீழுமாக இழுத்துப் பார்த்ததில் அழுக்கு வந்ததுதான் மிச்சம்.

ஒரு வழியாக……
அங்கொன்றும் இங்கொன்றுமாக முடி எட்டிப்பார்க்கும்போது வயது இருபதை எட்டிக் கொண்டிருந்தது.

பி.எஸ்.ஜி. கல்லூரியில் இறுதியாண்டு படிக்கும்போது பற்றி எரியத் தொடங்கி இருந்தது ஈழப்பிரச்சனை.
எங்கு பார்த்தாலும் ஊர்வலங்கள்…. கொடும்பாவி எரிப்புகள்…
ரயில் மறியல்… மாணவர் கொந்தளிப்புகள்…
அங்கிருந்து வரும் செய்திகள் ஒன்று – உள்ளத்தை உருகவைக்கும் அல்லது கொதிக்க வைக்கும்.

மாணவர் தலைவராயிருந்த நானும் கொதித்துப் போனதில் ஆச்சரியம் ஏதுமிருக்க வாய்ப்பில்லை. அன்றைக்கு பத்திரிக்கை நேர் காணல் ஒன்றுக்காக போராளி அமைப்பின் தலைவரைச் சந்திப்பதாக ஏற்பாடு.

அவர் பாலகுமார். ஈரோஸ் அமைப்பின் தலைவர்.

கோடம்பாக்கத்திலுள்ள மாடி அறை ஒன்றில் அவர்களது இயக்க அலுவலகம். பேட்டிக்கான எண்ணற்ற கேள்விகளை மனதுக்குள் வரிசைப்படுத்தியாறே அறையினுள்ளே நுழைகையில்
லுங்கி கட்டிய ஓர் இளைஞர் அறையைப் பெருக்கிக் கொண்டிருந்தார். முகத்தில் லேசான தாடி.

‘அவர் கூட்டி முடிக்கட்டும். அதுவரை அடுத்த அறையில் இருப்போம்… தேத்தண்ணி சாப்பிடுவீங்கதானே…?’ என்றவாறு அழைத்துப்போய் அமரவைக்கிறார் பார்த்திபன்.

சற்று நேரத்தில் உள்ளே நுழைந்த இளைஞரைக் காட்டி ‘இவர்தான் ஈரோஸ் பாலகுமார்’ என்று அறிமுகப்படுத்திய போது ஆடிப் போனேன் நான்.

சற்று நேரத்திற்கு முன்பு அறையைப் பெருக்கிக் கொண்டிருந்த அந்த தாடி வைத்த இளைஞரேதான் அவர்!

‘என்ன பார்த்திபன்… விளையாடுகிறீர்களா…?’ என்று கேட்டேன்.

‘ஏன்… உங்கட தலைவர்கள் மாதிரி தலையைச் சுத்தி ஒளிவட்டத்தோடு முன்னாலும் பின்னாலும் பத்து பேர் சூழ படையோடு வருவார் என்டா எதிர்பார்த்தீங்கள்?’ என்று சிரித்தபடி எதிரே அமர்ந்தார் பாலா.

கேட்கவந்த கேள்விகளெல்லாம் மறந்துபோய் உளறத் துவங்கியது உதடு.  ஏறக்குறைய மூன்று நான்கு மணி நேர கலந்துரையாடலுக்குப் பிறகு
ஒரு புதிய உறவொன்று பூத்த பூரிப்பில்…
எழும்போது கேட்டேன்… ‘தோழர் பாலா… உங்களோட போட்டோ ஒண்ணு..’.

‘நமது சனங்களுக்கு எங்களுடைய கருத்துகள்தான் முக்கியமே தவிர… புகைப்படங்கள் அல்ல…’ என்று மெலிதாக மறுத்தபடி அகன்ற அவரது பண்பு என்னுள்ளும் ஏகப்பட்ட மாற்றங்களை ஏற்படுத்தியது உண்மை.

தோழர் பாலாவின் பேச்சு…

அதைவிட… அவரது தாடி…

கோவை திரும்பும்போதே தாடிதான் இனி எனத் தீர்மானித்திருந்தது மனது.

முதலில் வீட்டில் கத்திக் கூச்சலிட்டாலும் இந்த ஒடுக்கு மூஞ்சிக்கு தாடியே தேவலை என்று விட்டுவிட்டார்கள்.
‘உன் நண்பர்களைச் சொல்… நீ யாரென்று கூறுகிறேன்’ என்பதைப் போல நட்பைப் பொறுத்து நாளாவட்டத்தில் எனது நடவடிக்கைகளும் மாறத் தொடங்கியது.

வீட்டில் மாட்டியிருந்த நடிகர்களது படங்களுக்குப் பதில்
உலக வரைபடமும்… கார்ல் மார்க்ஸும்.
அதிலும் குறிப்பாக அவரது தாடி…

நண்பன் கியூபட் ஒருமுறை கொடுத்த ‘கியூப புரட்சிகர யுத்தத்தின் கதை’ நூலைப் படித்துவிட்டு ஃபிடல் காஸ்ட்ரோவின் தாடியையே பல நிமிடங்கள் உற்றுப் பார்த்தபடி…

சர்வதேச புரட்சியாளன் சேகுவேராவின் நூல்களைப் படிக்கப்படிக்க அளப்பறிய காதல் அவன் மீது. வழக்கம் போல் அந்தத் தாடியின் மீதும்தான். அதிலும் அவருடைய மீசையும் தாடியும் இணையும் இடம் ரொம்பப் பிடிக்கும் எனக்கு.

ஆரம்ப நாட்களில் தாடிகுறித்த விசாரிப்புகள்தான் எங்கு போனாலும்.

‘என்ன… ஏதாவது உடம்பு சரியில்லையா?’ என்பவர்களுக்கு ‘அதெல்லாம் இல்லை… மூளையத்தான் வளர்க்க முடியலை… இந்த முடியவாவது வளர்க்கலாமேன்னுதான்…’ என்றும்
‘என்ன… ஏதாவது லவ் ஃபெயிலியரா?’ என்பவர்களுக்கு, ‘திருவள்ளுவருக்கென்ன காதல் தோல்வியா… தாடி விட்டிருந்தார்…?’ என்றும் பதில் தரவேண்டியிருந்தது.

ஏதாவது கல்யாணங்களுக்கோ, சாவுக்கோ போனால் சொந்தக்காரர்களுடைய நச்சரிப்பு தாங்கமுடியாது. ஏதோ இந்தியப் பொருளாதாரமே எனது தாடியால்தான் சரிந்து கிடப்பதைப் போலவும்… தாடியை எடுத்துவிட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்பது போலவும் தொணதொணக்க ஆரம்பித்துவிடுவார்கள். இவர்களது அபத்தமான கேள்விகளுக்குப் பயந்தே பல நிகழ்ச்சிகளுக்குப் போவதை ரத்து செய்யவேண்டி வந்தது. மொத்தத்தில் எதிர்ப்பு வலுக்க வலுக்க… தாடி மீதான எனது காதலும் வலுத்துக்கொண்டே வந்தது.

என் திருமணத்தின்போதும் தாடியுடன்தான் இருந்தேன்.

எண்பதுகளின் இறுதி………

துயரம் தோய்ந்த இரவுப் பொழுதொன்றில் பத்தொன்பதே வயதான ஹக்கீம் கோரமாகக் கிழித்தெறியப்படுவதில் துவங்குகிறது மதங்களின் மரண விளையாட்டு. அக்கீமுக்கு ஈடாக இன்னொரு உயிர் காவு கேட்கப்பட்டதில் கணேஷ் குதறப்பட… கணேஷ¤க்கு ஈடாக இன்னொன்று… அந்த இன்னொன்றுக்கும் ஈடாக மற்றொன்று எனத் தொடர்கிறது மரண விளையாட்டு.

தொண்ணூறுகளின் மத்தியில் கோவை மாநகர மக்கள் நிம்மதியை முற்றிலுமாகத் தொலைத்துத் தவிக்கத் துவங்கினர்.
எங்கு… எவர் எவரைத் தீர்ப்பார்களோ… பேருந்துகள் நிறுத்தப்படுமோ… பள்ளி சென்ற பிள்ளைகள் நடு வழியில் தவிக்குமோ…
ஆத்திரமும் அழுகையும் பொங்க அலையத் துவங்கும் சனம்.

இது வரையிலும் நேசபூர்வமான வாழ்க்கை நடத்திவந்த மக்கள் யாருக்கு யார் எதிரி எனப் புரிபடாது, ஒவ்வொரு சக மனிதனையுமே சந்தேகக் கண்கொண்டு பார்க்கத் துவங்க… சொந்த மண்ணிலேயே அந்நியராகிப் போயினர் அநேகர்.

அதுவரையிலும் ‘என்ன லவ் ஃபெயிலியரா…?’ என்று கேள்வி கேட்டவர்கள். நான் முஸ்லிமா… இந்துவா என அடையாளப்படுத்திக் கொள்ள மதத்தை மயிருக்குள் தேடத்துவங்கினர்.
அதையும் மீறி என்ன மதம் என்று கேட்டவர்களிடம்
முன்னைக் காட்டிலும் மூர்க்கத்தனமாக பதில் சொல்ல வேண்டி வந்தது – ‘மனுசன்’ என்று.

‘‘The Day After ’ என்றொரு படம்.

முதலில் –

அந்த ஊர் மக்களது அமைதியான வாழ்க்கை – அவர்களது சின்னஞ்சிறு ஊடல்கள் – நேசம் பொங்கும் தம்பதியர் – பரிவைப் பொழியும் பெரியவர்கள் – தும்பி துரத்தும் தளிர்கள்… என அரைமணி நேரமாக ஓடிக் கொண்டிருக்கும் படத்துக்கு நடுவே ஒரு குரல்… ‘படத்தைப் போடுங்கடா டேய்…’ என்று. தொடர்கிறது படம். சலசலக்கும் நீரோடையாக நெளியும் மக்களது வாழ்க்கையில் சூறாவளி சூல்கொள்ளப்போகிறது என்பதற்கு அடையாளமாக ஒரு குரல்…

ஆம். தியேட்டரில் ஒலித்ததைப் போலவே படத்திலும்…

‘கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணை ஒன்று ரஷ்யாவிலிருந்து புறப்பட்டு லாஸ் ஏஞ்சல்ஸ் நகரை நோக்கி வருகிறது. அதைப் போன்றே அமெரிக்காவிலிருந்தும் ஒரு ஏவுகணை ரஷ்யாவை நோக்கிப் புறப்பட்டு விட்டது…’ என அக்குரல் ஒலித்து முடிக்கும் முன்பே பூமியைப் பிளக்கிறது ஏவுகணை.

நாய்க்குடைக் காளானாக விண்ணை நோக்கி விரிகிறது புகை மண்டலம்.

வெப்பத்திலும் தீயிலும் ஆயிரக்கணக்கில் பொசுங்கிப்போன மக்கள்… எங்கும் இருள்… திரும்பிய பக்கமெங்கும் மரணஓலம்… கட்டடங்கள் தகர்ந்து – சாலைகள் சிதைந்து… நகர் முழுக்க மனித உடல்கள் தாறுமாறாக…
மருந்து, குடிநீர், உணவு, மின்சாரம் என எதுவுமின்றி நிர்க்கதியான மக்கள்… ரத்தம் போதாமையினால் அறுவை சிகிச்சையின் பாதியிலேயே உயிரை விடும் மக்கள்… உணவுப் பஞ்சம்… அதன் விளைவால் எழும் விபரீதங்கள். ஒரே ஒரு ரொட்டித் துண்டுக்காக ஒருவனைச் சுட்டுக் கொல்கிறான் மற்றொருவன்.

தியேட்டரில் முழு அமைதி.

தகப்பனை இழந்த மழலைகள் – மனைவியை இழந்த கணவன்… எங்கும் கூக்குரல். சிதைந்த ஊரில் வீட்டைத் தேடும் மனிதர்கள்.

ஒரு முதியவர், ஒருவழியாக தனது வீட்டைத் தேடிக் கண்டுபிடித்து நெருங்குகிறார். கூரை ஏதுமின்றி எலும்புக்கூடாகக் கிடக்கிறது அவரது வீடு. தீய்ந்துபோன பொருட்கள். மணலில் கயை விட்டுத் துழாவுகிறார். பல நிமிடத் தேடலுக்குப் பிறகு கிடைக்கறது. அவரது மனைவியின் டாலர் ஒன்று. இதையே பார்த்துக் கொண்டிருந்த மற்றொரு முதியவர் தட்டுத்தடுமாறி எழுந்து மெள்ள மெள்ள நெருங்கி வந்து தனது பாண்ட் பைக்குள் கையை நுழைக்கிறார். பைக்குள் இருந்து ஆப்பிள் ஒன்றை எடுத்து அந்தக் கிழவரிடம் நீட்ட… அவரும் அதை வாஞ்சையோடு வாங்கி கடித்துவிட்டு மீதியை மீண்டும் அந்த முதியவரிடமே நீட்டுகிறார்.

அவர் அப்படியே மணலில் சரிந்து மண்டியிட்டு மற்றவரைக் கண்ணீரோடு அணைத்துக் கொள்ள… இருவரும் ஒருபிடி மண்ணை எடுத்து கண்ணீர் பொங்க கீழே விடும்போது முடிகிறது படம்.

படம் முடிந்து வெளியில் வரும்போது… ‘ஏண்டா இப்பிடி சாதி, மதம்னு அடிச்சுக்கிட்டு சாகறீங்க…?’  என்று கத்தவேண்டும் போலத் தோன்றியது.

ஒரு மாதம் கழித்து மீண்டும் பழையபடி ‘பூதம்’ கிளம்பிவிட்டது ஊருக்குள்.

அங்கொன்றும் இங்கொன்றுமாக தீ வைப்புகள். சில இடங்களில் கை கலப்புகள். குரூரமான கொலைகள்.

“டேய். மொதல்ல அந்தத் தாடியை எடுத்துட்டு வெளீல போடா…”- அம்மாவின் கெஞ்சல்.

வீடு – நட்பு அலுவலகம் என ஒரு இடம்கூட மீதமின்றி அன்பும் அழுகையும் கலந்த வேண்டுகோள்கள்.

“தயவுசெய்து எங்களுக்காகவாவது அந்தத் தாடியை எடுங்க…”

வேறுவழியின்றி ஒரு முடிவுக்கு வந்தவனாக… அப்பா விட்டுச் சென்ற ஷேவிங் செட்டைத் திறந்தேன். ஒவ்வொரு முறை கன்னத்தில் வைத்து இழுக்கும்போதும் கண்ணீர் தாரை தாரையாக பொத்துக்கொண்டு வந்தது. கண்ணீரோடு முடியும் கலந்து கன்னம் பிசுபிசுத்தது.
யாருக்காகவோ என் சுயத்தை இழந்துகொண்டிருந்தேன்.
கல்லூரிக் காலம், கல்யாணக்காலம் என எப்போதும் நான் நேசித்துவந்த அந்தத் தாடி….

பாலகுமார் – சேகுவேரா – மார்க்ஸ் – பெரியார் என ஒவ்வொருவரும் என் மனக்கண்ணில்…
‘மதமென்னும் பேய் பிடியாதிருக்கவேண்டும்’ என்ற வள்ளலாரை எப்படி மறந்து போயினர் எம் மக்கள்…?

கண்ணீரைப் போலவே பல்வேறு மகான்களுடைய எண்ணமும் அலையலையாக எனக்குள்.

‘சரி. ஒரு சிகரெட் பிடித்தாலாவது சற்று ஆறுதலடையலாம்’ என எண்ணி மழுங்கச் சிரைத்த முகத்துடன் வெளியில் வர…

‘டேய்… கடையை மூடுங்கடா…’ எனக் கத்தியவாறே ஒரு கும்பல்.
எதிரில் வந்த பேருந்து ஒன்றின் கண்ணாடிகள் சிலீர் என்று உடைந்து விழுந்தது. தலைதெறிக்க எதிர்த்திசையில் எல்லோரும் ஓட… என்னையறியாமல் நானும் ஓடிக்கொண்டிருந்தேன். கொஞ்சம் தூரம்கூட ஓடியிருக்க மாட்டேன்…

எதிரே எண்பது வயதான ஒரு பெரியவர்… ஒரு மழலையைப்போல் மெள்ள மெள்ள எதிரே வந்து கொண்டிருந்தார்.
அதிர்ந்துபோனேன். முக்கால் காலுக்கு ஒரு லுங்கி… நெஞ்சைத்தொடும் தாடி… குழி விழுந்த கண்கள்… கன்னம் மட்டும்  கொஞ்சம் உப்பலாக…

ஓட்டமாக அவரை நோக்கி ஓடி… “ஐயா… கொஞ்சம் திரும்பி நடங்கய்யா… அந்தப் பக்கம் ஒரு கூட்டம் வந்துக்கிட்டு இருக்கு… வேண்டாம்யா…” என கையைப் பிடித்துக் கெஞ்ச…
அந்தக் கிழவர் மிக நிதானமாக என்னை உற்றுப்பார்த்தார்.

பதட்டத்துடன் திரும்பிப் பார்த்தேன். தொலைவில் பத்துப் பதினைந்து பேர் ஒரு கடிகாரக் கடைக்கு தீவைத்துக் கொண்டிருப்பது தெரிந்தது.

”இல்ல தம்பி…. நீங்க தைரியமா போங்க” என்றார்.

“ஐயா… சொன்னாக் கேளுங்க. அந்தப் பக்கமெல்லாம் ஒரே பிரச்சனை. திரும்பி நடங்க…” – அதற்குள் அழுகை வேறு முட்டிக்கொண்டு…

“கவலைப்படாதீங்க தம்பி… எனக்கொண்ணும் ஆகாது. எல்லாத்தையும் அவன் பாத்துக்குவான்… நீங்க கிளம்புங்க” கிழவர் எதற்கும் மசியமாட்டார் என அந்த நொடியில் புரிந்துபோயிற்று.

பெரியவர் அந்தக் கூட்டம் வந்துகொண்டிருந்த திசையை நோக்கி
மெள்ள மெள்ள நடக்கத் துவங்கினார்.

மெல்லிய காற்றில் அசைந்தாடிய அவரது தாடி
ஒரு சேதியைச் சொல்லாமல் சொல்லியது…

அச்சம் தவிர்.

– ஆனந்த விகடன்                                                        5.12.1999

Advertisements

6 thoughts on “என்றென்றும் தாடி….

 1. “மதத்தை மயிருக்குள் தேடத்துவங்கினர்” — இதுதான் பாமரன்.

  வாழ வந்த சமூகம் மதம் பிடித்து சாகிறது.

  அர்த்தமில்லாத மதங்கள்.
  இல்லாத கடவுள்கள்
  இதையெல்லாம் உணராத சமூகம்

  ;-(

 2. when i read about your introduction really i cried. really your father is a GEM of the human being. after reading your THADI MATTER I felt very sad becasue some of culprints are making the society as poisoneous and harvesting their own profit. Is it one million of them are alive in India or two millions. rest of us are still respecting mankind and helping each other. Always The history records the humanity when ever the people who needs help like SUNAMI AND EARTH QUAKE OF GUJARATH. Still the humanity alive in India becasue of us. Once again i highly appreciate your articles to induce the hunaity from the harden heart peoples.

  And one more hats off for your good article about the bulshit film Sivaji at the Kumudam and now the peoples are waken up and making some strikes. hopefully you heard about it.

 3. தாடி என்றால் அது காதல் தோல்வியாக தான் இருக்கும் என்று ஒரு கருத்து உண்டு. ‘அச்சம் தவிர்’ புதிய கருத்தை சொல்லாமல் சொல்லி இருக்கிறது – நாகூர் இஸ்மாயில்

 4. நல்ல இருக்கு தோழரே……

  “மெல்லிய காற்றில் அசைந்தாடிய அவரது தாடி
  ஒரு சேதியைச் சொல்லாமல் சொல்லியது…
  அச்சம் தவிர்.”

  இது ரொம்ப பிடிச்சிருக்கு…………….

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s