எதிர்பார்ப்பு….ஏமாற்றம்….எதார்த்தம்….

கொஞ்சம் ஏமாற்றமாகத்தான் இருக்கிறது. 
எமது “புளுக்கையின் கதை” பதிவின் இறுதியில்
பின்னூட்டம் இடுபவர்களுக்கு மட்டும்
மீதமுள்ள அக்கவிதையை அனுப்பி வைப்பதாக
எழுதி இருந்தேன்.

ஆனால் அதைப் பார்த்துவிட்டு 
அனுப்பச் சொல்லி பின்னூட்டமிட்டவர்கள் வெகு சிலரே.
என்ன செய்ய….ஆனாலும் எதார்த்த நிலை இதுதான்.

அந்த எளிய மனிதர்களின் அன்புக்கு செவி சாய்த்து கவிதையின் மீதி இதோ……..

அரசியல் சாரா அறிவு ஜீவிகள்

Otto Rene Castillo (Gautemala) 

1
ஒருநாள்
என் நாட்டு
அரசியல் சாரா அறிவு ஜீவிகள்
எளிமையான எம் மக்களால்
குறுக்கு விசாரணை செய்யப்படுவர்.
தன்னைச் சிறுகச் சிறுக இழந்து கொண்டிருந்த
தீச்சுடரென மெதுவாக
அவர்கள் தேசம் செத்துக் கொண்டிருந்தபோது
அவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்
என்று விசாரிக்கப்படுவார்கள்.

ஒருவரும் அவர்களிடம்
அவர்கள் உடைகளைப் பற்றியோ
அவர்களின் மதிய உணவையடுத்த
நீண்ட உறக்கத்தைப் பற்றியோ
கேட்கப் போவதில்லை.
அவர்களின்
‘உலகலாவிய’ கருத்துக் கொண்ட
மலட்டுப் புரட்சியைப் பற்றிக்கூட
அறிய எவரும் ஆவலாக இல்லை.
அவர்கள் தங்கள் நீதியை எப்படிப்
பெற்றார்கள் என்று ஒருவருமே
கலலைப்படவில்லை.

கிரேக்கப் புராணங்களைப் பற்றியோ
ஒரு சுய மாறுதலை அவர்கள் உணர்ந்தது பற்றியோ
அவர்களிடம் எதுவும் கேட்கப் போவதில்லை
முழுப் பொய்யின் நிழலிலே
பிறந்த
அவர்களின் மடத்தனமான
சமாளிப்புகளைப் பற்றியும்
அவர்களிடம் கேட்கப் போவதில்லை.

2
அந்த நாளில்
அந்த எளிய மனிதர்கள் வருவார்கள்.
அரசியல் சாரா அறிவு ஜீவிகளின்
புத்தகங்களிலோ,
கவிதைகளிலோ
இடம் பெற்றிராத
அந்த எளிய மனிதர்கள் வருவார்கள்.

ஆனால்
தினமும் அவர்களுக்கு
ரொட்டியும், பாலும் சேகரித்துத் தந்த
ஆம்லெட்டும், முட்டையும் உடைத்து ஊற்றிய,
அவர்களின் துணியை நெய்தும், தைத்தும் கொடுத்த
அவர்களின் வாகனங்களை ஓட்டித் திரிந்த
அவர்களின் நாய்களையும், தோட்டங்களையும் மேய்த்துவந்த
மொத்தமாக
அவர்களுக்காகவே தங்களை அர்ப்பணித்துவிட்ட
அந்த எளிய மனிதர்கள் வருவார்கள்.
வந்து கேட்பார்கள்:
‘ஏழைகள் துன்பத்தில் துடித்துக் கொண்டிருந்தபோது
அவர்களின்
இளமையும், வாழ்வும் திகுதிகுவென எரிந்து
கொண்டிருந்தபோது
நீங்கள் என்ன செய்து கொண்டு இருந்தீரகள்?’

3
என் இனிய நாட்டின்
அரசியல் சாரா அறிவு ஜீவிகளே
அப்போது
உங்களால் பதிலளிக்க இயலாது.
உங்கள் மனோதிடத்தை
மெளனம் அரித்துத் தின்னும்.
உங்கள் ஆத்மாவை உங்கள்
துன்பமே கடித்துக் குதறும்.
உங்கள் அவமானத்தில்
நீங்களே ஊமையாகிப் போவீர்.

ஒரு புளுக்கையின் கதை…

எழுபதுகளின் இறுதிப் பகுதி – புகுமுக வகுப்பில் கோட்டைவிட்டு ஊரையே பூகோள ரீதியாக அலசிக் கொண்டிருந்த நேரம்.

என்னோடு சுற்றிக் கொண்டிருந்த நண்பர்கள் சிலருக்கு திடீரென்று மண்டைக்குள் ஏதோ ரசாயன மாற்றம் நிகழ்ந்து ‘குறியீடு… படிமம்…’ என்றெல்லாம் பேச ஆரம்பிக்க…  என்னமோ ஏதோ என்று பதறிப் போய்விட்டேன் நான்.

‘என்னடா ஏதேதோ பேசுறீங்க… என்னாச்சு உங்களுக்கு?’ என்றால்…

‘அதெல்லாம் ஒனக்குப் புரியாது.  வேலையைப் பாரு’ என்று சொல்லிவிட்டு வானத்தையோ, மரத்தையோ வெறித்துப் பார்ப்பார்கள்.

கொஞ்ச நாள் முன்பு வரை…

‘வறுமைக்குக் கோடு
போட்டுக் கொண்டிருக்கும்
நேரத்தில்
எங்கள் வீடுகளுக்கு ஓடு போட்டால்
ஒழுகாமலாவது வாழ்வோம்’ என்கிற ரகத்தில் எழுதிக் கொண்டிருந்த இவர்கள்…
ஏதோ ஒரு புளிய மரத்தின் கீழ் பெற்ற இலக்கிய ஞானத்தால்
‘பிரக்ஞை… கவிதானுபவம்’ என்று வெளுத்துக் கட்ட ஆரம்பித்தார்கள்.

“டே சீனா! மத்ததெல்லாம் நீங்களே வெச்சுக்கங்க…
அந்த கவிதாவோட அனுபவத்தை மட்டும் சொல்லு போதும்” என்பேன்.

“ச்சே… அது வாழ்வனுபவம்டா. சும்மா இரு…” என்று மிரட்டுவார்கள் நண்பர்கள்.

அதுவரை சீனிவாசன்… சூரி… என்று
சாதாரணமாக தங்கள் பெயரை எழுதிக் கொண்டிருந்தவர்கள் ஷ்றீனிவாஸன், ஸூரி என்றும்…
இதயம், சுவாசம் என்று எழுதிக் கொண்டிருந்தவர்கள்
ஹிருதயம்… ஸுவாசம் என்றும் எழுத ஆரம்பித்தார்கள்.

அவர்களைப் பார்த்தாலே எரிச்சல் எரிச்சலாக வரும். தினந்தோறும் சண்டைதான் அவர்களோடு.

“டேய் சுரேஷ்… நாட்டுல எவ்வளவு பேர் சோத்துக்குக் கஷ்டப்படறான். அதெல்லாம் எழுதமாட்டீங்களா?” என்பேன்.

“அது ஒரு எகனாமிஸ்ட்டோட வேலை” என்பான்.

“சரி… இலங்கைல நம்மாளுகளையெல்லாம் கொல்றாங்களே அதப் பத்தி எழுதலாமே…” என்றால்,

“அது ஹியூமன் ரைட்ஸ் ஆளுகளோட வேல என்பான்.

‘மரங்களை வெட்றான் மழையே இல்ல… அது…?”

“அது ஈக்காலஜிஸ்ட்டோட வேலை…”

“அப்ப… உங்களுக்கெல்லாம் என்ன புடுங்கறதாடா வேலை” என்று சண்டைக்கு கிளம்பி விடுவேன்.

இந்த மாதிரி சண்டைகளை எல்லாம் முடிவுக்குக் கொண்டு வந்தது நாகார்ஜுனன்தான்.

88ஆம் ஆண்டு நாகாரஜுனனோடு ஏற்பட்ட பழக்கம் பல்வேறு சாளரங்களை என்னுள் திறந்து விட்டது.

‘யாரையும் திட்டாதே…
உனக்கு என்ன தேவையோ அதை எடுத்துக்கோ,
புரியவில்லையா பத்துத் தடவை படி…
அப்பவும் புரியாட்டி கிழிச்சுப் போடு.
குற்றால அருவி கொட்டற மாதிரி அவ கூந்தல் இருந்துச்சுன்னு
லா.ச.ரா. சொல்றாரா…
அப்படி எப்படிச் சொல்லலாம்?ன்னு சண்டைக்குப் போகாதே.
கையில் எப்பவும் ஸ்கேல் வெச்சுக்கிட்டு சுத்தக் கூடாது…’ என்றபடி போகும் நாகார்ஜுனனூடான பொழுதுகள்.

அப்போதுதான் அந்த முடிவுக்கு வந்தேன்.
எது எனக்கான எழுத்து?
முதலில் அதை நோக்கிப் போவது.

மாறுபாடானவற்றோடு மல்லுக்கு நிற்பதைக் காட்டிலும்
மக்களுக்கான எழுத்தை நோக்கி நகர்வதே அது.

எது எவ்விதம் ஆயினும்…

எது எழுத்து?
அதுவும் எனக்கானது எது? 
என்கிற கேள்வி எழுகிற போதெல்லாம்
‘பூவுலகின் நண்பர்கள்’ முதன் முதலாக வெளியிட்ட
‘புதிதாய் சில’ என்கிற தொகுப்பில் வந்த ஒரு கவிதைதான்
எனது பதிலாக இருக்கிறது இன்றைய கணம் வரை:

“ஒருநாள்
என் நாட்டு
அரசியல் சாரா அறிவுஜீவிகள்
எளிமையான எம்மக்களால்
குறக்கு விசாரணை செய்யப்படுவர்.
தன்னைச் சிறுகச் சிறுக
இழந்து கொணடிருந்த
தீச்சுடரென மெதுவாக
அவர்கள் தேசம் செத்துக் கொண்டிருந்தபோது
அவர்கள் என்ன செய்து கொண்டிருந்தாரகள்
என்று விசாரிக்கப்படுவார்கள்…”

என வரும் நீள் கவிதையே அது.

அந்த முழுக் கவிதையையும் படித்து முடிக்காவிட்டால்
தலை சுக்கு நூறாக வெடித்துச் சிதறும் என்கிற
சாபத்துக்கு ஆளானவர்கள்
எனக்கு பின்னூட்டம் அனுப்பி உயிர்பிழைக்கக் கடவார்களாக.

நன்றி: தீராநதி

அன்புத் திராவிடனுக்கு….

நினைவிருக்கிறதா நண்பா உனக்கு…?

ஏறக்குறைய எழுபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு…
சில பழந்துணிகளைத் தோளில் தொங்கும் மூட்டையில் திணித்துக்கொண்டு
மலையாள தேசம் நோக்கி நடைபோட்ட நம் நண்பனை…?

அவன் போன காரியம் என்னவென்பது புரியுமா உனக்கு?

அந்த நண்பன் போய்ச் சேர்ந்த பிற்பாடு
தனது துணைவியையும் துணைக்கு அழைத்துக்கொண்டான்.
அது போதாதென்று அவனது தங்கையும் அப்புறம் போய்ச் சேர்ந்தாள்.

அவன் போனது…
கள்ளிக்கோட்டையின் சுற்றுலாத் தலங்களைச் சுற்றிப் பார்ப்பதற்காக அல்ல.
அவன் துணைவி போனது எர்ணாகுளக் கரையோரங்களில் படகுகளில் பவனி வருவதற்கும் அல்ல.
அவனது தங்கை பயணப்பட்டது அவர்கள் இருவருக்கும் பேச்சுத் துணைக்காகவும் அல்ல.

அந்த நண்பனின் பெயர் நினைவுக்கு வருகிறதா உனக்கு?

அவன் பெயர்: ஈ.வே.ராமசாமி.
துணைவியின் பெயர்: நாகம்மை.
தங்கையின் பெயர்: கண்ணம்மா.
அவர்கள் அனைவருமே பயணப்பட்டது….
வைக்கம் மண்ணின் மக்களது சமூக இழிவைப் போக்குவதற்காக.

‘வைக்கம் தெருக்களில் ஒடுக்கப்பட்ட மக்கள் நடமாடக்கூட கூடாது’ என்கிற அவலத்தை அழித்து ஒழிப்பதற்காகத்தான் பயணப்பட்டான் அவன்.

அடக்கு முறையையே ஆயுதமாகக் கொண்டவர்கள் அவனை அடைத்து வைத்தனர். அழைப்பு விடுத்தான் அவனது துணைவிக்கு.
அடுத்த கட்டப்போராட்டத்தில் அணி சேர்ப்பதற்கு.
வந்த அவரும் விலங்கிடப்பட்டார்.
அடுத்ததாக வந்த அவனது தங்கை கண்ணம்மாவும் கைதாகி,
சிறையின் சுவர்களை செருக்குறச் செய்தனர்.
எவ்வளவு அற்புதமான பொழுதுகள் அவை.

உனது சோகமே எனது சோகமாக…
எனது துயரே உனது துயராக…
அப்போது நமது தேசத்துக்கும் நேசத்துக்கும் இன்னொரு பெயர் சூட்டியிருந்தோம்.

திராவிட நாடு.

சட்டரீதியாக அதற்கு இன்னுமொரு பெயரும் உண்டு.
அதுதான் மதராஸ் மாகாணம்.

அப்போது கேரளத்தில் ஏதேனும் அவலம் என்றால், இங்கிருந்து ஓடோடிப் போவார்கள் எமது தலைவர்கள். தமிழ்மண்ணில் யாதொரு போராட்டமென்றாலும் கேரளத்தில் இருந்து பாய்ந்து வருவார் டி.எம்.நாயர்.

‘முப்படை கொண்ட தமிழ் மாநிலம்தான் வேண்டும்’ என முழங்குவார் சர்.சி.சங்கரன் நாயர் என்கிற மலையாளி.

குறளையும் தொல்காப்பியத்தையும் வியந்து வியந்து புகழுவார் கே.வி.ரெட்டி நாயுடு என்கிற தெலுங்கு தேசத்துக்காரர்.

“கேரளம், கன்னடம், ஆந்திரம், தமிழ் பிரதேசங்கள் அடங்கியது தென் இந்தியா. இவை சேர்ந்ததே இன்றைய சென்னை மாகாணம். இந்தத் தென்இந்தியாவில் வாழும் மக்கள் ஒரே கூட்டத்தவர். இந்த நான்கு சகோதரர்கள் பேசும் பாஷைகள் ஒரே மூலத்தில் இருந்து பிறந்தவை. இந்தத் தென் இந்தியா இந்தியாவின் மத்திய அரசிலிருந்து விலகி, நான்கு பிரதேசங்களுக்குள்ளும் சேர்ந்த கூட்டு அரசு ஏற்பட வேண்டும். எங்கள் தென் இந்திய நல உரிமைச் சங்கம் அதற்காகவே ஏற்பட்டது. அதற்காகவே பாடுபடப்போகிறது” என 1917-லேயே முழங்குவார் டி.எம்.நாயர். அப்படியிருந்த நமது பொழுதுகள்…. அப்புறம் எப்படி நண்பா பொசுங்கிப் போயின…?

அந்த ஈரோட்டுக் கிழவரது ஆசைகள் நொறுங்கிப் போனதற்கு யார் காரணம்…?

எனது துயர் எனதாக…
உனது சோகம் உனதாக மட்டுமே…
எப்படி ஏற்பட்டது இந்த இடைவெளி…?

மலையாள தேசம் மல்லுக்கு நிற்காத போதிலும்…
தெலுங்கு தேசம் துயரத்தைத் தராத போதிலும்…
கன்னட மண் மட்டும் எம்மை இப்படிக் கரித்துக் கொட்டுகிறதே…
அதுதான் புரிபடமாட்டேனென்கிறது எமக்கு.

அன்பு நண்பா…!

எம் மக்கள் எதையுமே பிரித்துப் பார்ப்பதில்லை.
உண்பதென்றால்கூட உடுப்பி ஓட்டல் உணவுதான்.
தேநீருக்குக்கூட நாயர் கடைகளையே நாடிப்போகிறோம் நாங்கள்.
எம் மக்கள் வட்டிக்கு வாங்கக்கூட லேவாதேவிக்காரனே உண்டு இங்கு.

மத்தியத் தொகுப்புக்கு எமக்கான அரிசியை அளித்துவிட்டுப் புரோட்டாவைப் பிய்த்துக் கொண்டு இருக்கிறோம் நாங்கள்.
நெய்வேலி மின்சாரத்தை நாட்டுக்கு அளித்துவிட்டுப் பாட்டிலில் திரிபோட்டுப் படித்துக் கொண்டிருக்கின்றன எமது மழலைகள்.

‘இந்தி படித்தால் உடனே வேலை’ எனும்
‘வேதவாக்கில்’ சிலர் மயங்கினாலும்
இந்தி படித்தும் வேலை இல்லாது
இங்கே வந்து வியாபாரம் செய்யும் குஜராத்தியிடம்தான்
‘பானிப்பூரி’ சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம் நாங்கள்.

இப்படி இருந்தும் எப்படி எதிரிகளாகிப் போனோம் அவர்களுக்கு…?

எம்மக்களில் பலர் வேட்டியையும் சேலையையும் கூட விட்டு ஆண்டுகள் பலவாயிற்று. தெலுங்கு வருடப் பிறப்பான ‘உகாதி’க்குக்கூட அரசு விடுமுறை இங்கு.

அவ்வளவு ஏன்…
ஆறுகோடித் தமிழ் மக்களும் அவநம்பிக்கை ஏதுமின்றி
அரியணை ஏற்றியவர்களில் பட்டியலைப் பார்க்கிறாயா தோழனே…?

‘ஓமந்தூரார்’ என நேசத்தோடு விளிக்கப்பட்ட ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார்: தெலுங்கர்.

‘மக்கள் திலகமாக’ மகுடம் சூட்டப்பட்ட கண்டியில் பிறந்த கோபாலமேனனது
வாரிசு எம்.ஜி.ஆர்.: மலையாளி.

அனைவரது ஆசைக்கேற்ப அரசியலில் அடியெடுத்து வைத்து
அரியாசனத்தில் ஏறிய ஜெ.ஜெயலலிதா: கன்னடர்.

அடுத்து Waiting List-ல் எமது மக்கள் வைத்து இருப்பதாகச் சொல்லப்படும் நேற்றைய சிவாஜிராவ் – இன்றைய ரஜினிகாந்த்: கர்நாடகத்தில் வளர்ந்த மராட்டியர்.

இப்படி இருந்தும் எப்படி எதிரிகளாகிப் போனோம் அவர்களுக்கு…?

இந்த மண்ணுக்கு உழைத்தவர்கள் யாராயினும்
இதயப்பூர்வமாக ஏற்றுக் கொண்டே இருக்கிறோம்.
சில வேளைகளில் பின்னுக்கு இழுத்தவர்களையும் கூட…!

மலையாள தேசத்துக்காரர்கள் எம்மை எதிரிகளாக
எந்த நிலையிலும் எண்ணவில்லை.
தெலுங்கு தேசத்தவர்கள், கிருஷ்ணா வருகிறதோ இல்லையோ
கால்வாய் வெட்டவாவது கண்ணியமாக இடம் கொடுத்தவர்கள்.
ஏன் நண்பா கர்நாடகா மட்டும் கொக்கரிக்கிறது?

அவர்களது வறுமைக்கும் துயருக்கும் எந்த வகையிலும் காரணம்
நாங்கள் இல்லை என்பதனை எப்போது புரிந்து கொள்ளப் போகிறார்கள்?

‘தண்ணீர் விடக்கூடாது’ என்பதற்காக தமிழர்களிடம் தலைவிரித்து ஆடுபவர்கள்… ‘தண்ணீர் விடவில்லை’ என்பதற்காக இங்குள்ள கன்னடர்க்கு எந்த விபரீதமும்
நாங்கள் விளைவிக்கவில்லை என்பதை
எப்போது புரிந்து கொள்ளப் போகிறார்கள்?

இனிய கன்னட நண்பனே!

தொடராக முதல்வர் பதவிகளையே கூட
தாரைவார்த்துத்தந்த எங்களுக்கே வராத கோபம் உனக்கு மட்டும் ஏன்?

உனக்குத் தெரியுமா தோழனே…
வடக்கு நோக்கிச் செல்லச் செல்ல நாமனைவருமே ‘மதராசி’ என்ற ஓரே காரணத்துக்காக ஓரங்கட்டப்படுகிறோம் என்பது…?

ஒடுக்கப்படும் தேசிய இனங்கள் ஒன்றுக்கொன்று அடித்துக் கொள்வது
ஆளும் வர்க்கத்துக்கு அடிவருடுவதில் தான் போய் முடியும் என்பது புரியுமா உனக்கு?

நரிகள் புலிகளாக ஆசைப்பட்டு சாயத் தொட்டியில் விழுந்து எழுந்த கதைகள் ஏராளம்தான்.

ஆனால்… இங்கோ…

திராவிட நாட்டுக்காக கர்ஜனை செய்த அநேகப் புலிகள் ‘தேசிய’ச் சாயத்தில் தவறி விழுந்து நரிகளாகி ஊளையிடத் துவங்கியதன் விளைவுதான் இக்கடிதமும் என்பது.

மற்ற மாநிலத்தவனது சமூக இழிவையெல்லாம்
மனித குலத்துக்கு ஏற்பட்ட இழிவாக ஏற்றுக் கொண்டு
அல்லாடிச் செத்த அந்தக் கிழவரது மக்களை
இப்படி இழிவுபடுத்துகிறீர்களே இது என்ன நியாயம்?

போதும் தோழா…

கோபமும் உக்கிரமும் உனக்கு மட்டுமே சொந்தமில்லை
என்பதை உணர்த்த வைத்துவிடாதே எம்மை.

இன்னமும்
‘மதராஸ் மாகாணக்’ கனவில் வாழும்…

பாமரன்

– ஆனந்த விகடன்
29.10.2000

‘பெல்’ தேசம்….

கிரகாம்பெல் என்றதும்…

இன்றைக்கு பயங்கரவாத எதிர்ப்பு அவதாரம் எடுத்திருக்கும் காந்தியின் மறு உருவான புஷ்ஷின் சித்தப்பா என்றோ…

அல்லது,

அமெரிக்காவினது வெளியுறவு அமைச்சராகவே ஆகிவிட்ட டோனி பிளேயரது பேரன் என்றோ…

மூளையைக் கசக்கிக் கொள்ள வேண்டியதில்லை யாரும்.

இந்த ‘பெல்’…

நீங்கள் நினைக்கும் அதே ‘பெல்’ தான்.

அந்த பெல் உருவாக்கிய ‘பெல்’லால் வந்ததுதான் இத்தனை வம்பும்.

எதை நினைத்து இதைக் கண்டுபிடித்தாரோ கிரகாம்பெல். ஆனால் அதை நினைத்து இங்குள்ளவர்கள் இதைப் பயன்படுத்துவதில்லை என்பது மட்டும் உறுதி.

மக்களது அவசர… அத்தியாவசிய தகவல் பரிமாற்றத்திற்காக கண்டுபிடிக்கப்பட்ட இக்கருவி இன்றைக்கு சினிமாக்காரர்கள் கையில் கிடைத்த காதலைப் போல் கந்தலாகிவிட்டது.

டி.வி.யின் எந்தச் சேனலைத் திறந்தாலும்… கெக்கே பிக்கே என்று இளித்துக் கொண்டோ… ‘மாரியாத்தா’ வந்ததைப் போல கையைக் காலை உதறிக் கொண்டோ காம்ப்பியர்களின் தரிசனம்தான் (அதாவது தொகுப்பாளினிகள்)  மதுரையிலிருந்தோ… பம்பாயிலிருந்தோ… துபாயிலிருந்தோ… ‘போராடிக் களைத்த’ தமிழர்கள் இவர்களுக்கு ‘போன்’ போட்டு…

‘இந்தப் படத்திலிருந்து ஒரு பாட்டு…

அந்தப் படத்திலிருந்து ஒரு காட்சி…

என்று விவஸ்தை கெட்டுப்போய் கேட்க…

அதற்கு இதுகளும் பதிலுக்கு வழிந்துவிட்டு அபத்தமான அஞ்சாறு விஷயங்களைப் பேசிய பிறகு… ஏதோ பல வருடங்கள் ஒரே தட்டில் இருவரும் சாப்பிட்டு ஒரே பாயில் படுத்துத் தூங்கியதைப்போல போலியான அன்யோன்யத்துடன் கேள்விகளை அள்ளி வீசுவார்கள்.

போதாக்குறைக்கு…

ஏதோ கண்தானம்… ரத்ததானம்… கிட்னிதானத்தைப் போல…

‘இந்தப் பாட்டை யாருக்கு டெடிcஅடெ பண்ண விரும்புறீங்க?’ என்கிற ‘அறிவுபூர்வமான’ ஒரு கேள்வி வேறு.

அடப்பாவிகளா…

பின்னர் கிரகாம்பெல் மீது கோபம் வராமல் என்ன செய்யும்?

சென்னை மாநகரத் தந்தையின் தந்தைக்கு குருவாய் இருந்த அண்ணா எப்போதோ சொன்னதாக ஞாபகம்:

“புகைவண்டியில் போய்க்கொண்டிருக்கும்போது சிலர் ஐந்து நிமிடத்துக்கொருமுறை ஜன்னலுக்கு வெளியே எட்டிப் பார்த்துக் கொண்டே வருவார்கள். ஏதாவது ஒரு மண் மேடோ அல்லது ஒரு குன்றோ தெரிந்தால் போதும். ‘ஏங்க அது என்ன சர்ச்சு. இது எந்த கோயில்? அது என்ன தர்க்கா…? என்று அருகில் இருப்பவரைத் துளைத்துக் கொண்டே வருவார்கள். அதற்கு பதிலாக நாம் பயணம் செய்யும் புகைவண்டியைக் கண்டுபிடித்தவர் யார்? அது எப்படி இயங்குகிறது? என்பது குறித்து ஒரு நிமிடம்கூட சிந்திக்க மாட்டார்கள். இப்படிப்பட்டவர்கள் கையில் விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளைக் கொடுத்தால் நாடு எப்படி முன்னேறும்…?” என்பார் அண்ணா.

இப்படி தொலைக்காட்சிக்கு மட்டும் என்றில்லை… கம்ப்யூட்டருக்கும் அதே கதிதான் ஏற்பட்டிருக்கிறது. இவர்கள் கையில் கம்ப்யூட்டரைக் கொடுத்தால் ஜோசியம்தான் பார்க்கிறார்கள்.

யுனிக்ஸ், ஜாவா, ஆரக்கல், ஆட்டுக்கல் எல்லாம் அத்துபடியில்லை என்றாலும் ஓரளவுக்காவது கம்ப்யூட்டர் தெரிந்தவன் என்ற முறையில் சொல்வதானால்…

இரு உயிரினங்களுடைய பிறந்த தேதி – இடம் – நேரம் இவற்றைக் கொடுத்தால் அது உடனடியாக கணித்துக் கொடுக்கும் என்பது உண்மைதான். ‘பதிமூன்று பொருத்தங்களும் பொருந்திப் போகிறது. கல்யாணத்தை ஜாம் ஜாமென்று நடத்தலாம்’ என்று கன கச்சிதமாகச் சொல்லும் என்பதும் உண்மைதான். அந்த இரண்டில் ஒன்று ஒரு நாயுடையதாக இருந்தாலும் அதன் பதில் இதுதான் என்பதுதான் கிளைமாக்ஸ்.

சரி விட்ட இடத்திற்கே வருவோம்…

வேலை வெட்டி எதுவுமற்ற இளைஞர்கள்…

பொறுப்பற்ற பெண்மணிகள்…

சாப்பிட்டு ஜீரணம் ஆகாத ஒரு கூட்டம்… இதற்கென்றே அலைவதையும், இந்த அஃறிணைகளுக்குப் ‘பொறுப்பாக’ பதில் சொல்லி ‘அறிவுபூர்வமாக’ கேள்வி கேட்டு… கேட்ட பாடலை ஒளிபரப்புவதற்கென்றே ஒவ்வொரு டி.வியிலும் ஆட்களை வைத்திருக்கிறார்கள் என்பதையும் பார்க்கும்போது நாம் தமிழகத்தில் இருக்கிறோமா இல்லை ‘பாண்டி மடத்தில்’ இருக்கிறோமா என்கிற பெரும் சந்தேகம் எழுந்து தொலைக்கிறது.

பாடலைப் போடுவதற்கு முன் இந்த ஜென்மங்கள் அந்தப் பெண்களிடம் உளறும் உளறல் இருக்கிறதே… அய்யோடா…

நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க…

(டி.வி. கண்டுபிடித்த காலத்திலிருந்து…)

உங்க வாய்ஸ் ரொம்ப ஸ்வீட்…

(சொல்வது இயர்போன் வைத்திருப்பவர்…)

ரொம்ப நேரமா டிரை பண்றோம்… இப்பதான் லைன் கிடைச்சுது…

(வேலை இல்லா திண்டாட்டமே தீர்ந்தது போ)

பதிலுக்கு சும்மாயிருக்க முடியுமா இந்த அம்மணிகள்…

ஹலோ… நீங்க என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க…?

பாட்டணி படிச்சுட்டு சும்மா இருக்கேன்.

ஏன் ஹிஸ்டரி படிக்கலே…?

***

இந்த பாட்டை கேக்குறீங்களே… யாரையாவது லவ் பண்றீங்களா…?

ஐய்யய்யோ இல்லீங்க.

ஏன் சார் லவ் பண்றது தப்பா…?

தப்பில்லைதான்… ஆனால். பென்சன் வாங்கற காலத்துல வீணா எதுக்குமா அதெல்லாம்…?

***

ஆமா நீங்க என்ன பிஸினஸ் பண்றீங்க.

இருப்புக்கடை வெச்சிருக்கேன் மேடம்.

ஏன் பிராந்திகடை வைக்கலே…?

***

வாவ்… என்ன கட்டணக் கழிப்பிடமா வெச்சிருக்கீங்க…

எப்பிடிப் போகுது பிஸினெஸ்?

ரொம்ப டல்லுங்க மேடம்.

ஏன் அவ்வளவு டல்…?

உள்ள போனா அவனவன் சீக்கிரம் வரமாட்டேங்கிறான்…

வெளிய கியூவுல நிக்கறவன் வேற எடம் தேடீ ஓடீர்றான்…

ஏன் நீங்க இடத்த change பண்ணி பார்க்க வேணடீதுதானே?

நாட்டதான் change பண்ணனும் மேடம்…

what கண்ட்ரீயவேயா…? எனி பிராப்ளம்…?

நீங்கதான் பிராப்ளம்…

அவசரத்துக்கு உள்ள போனமா வந்தமான்னு இல்லாம உள்ள போறவன் செல்போனை வெச்சுக்கிட்டு உங்களுக்குப் போனப் போட்டு பாட்டைக் கேட்டுக்கிட்டு இருக்கான்… நானே இப்ப அவசரத்துக்கு வீட்டுக்கு ஓடீட்டு இருக்கேன். ஆள உடு தாயே…

***

அப்புறம் ஹேமா… உங்க பக்கத்துல வேற யார் இருக்கா?

இருங்க எங்க பாட்டி இருக்காங்க தர்றேன்…

ஹாய் பாட்டி… நீங்க என்ன ஹவுஸ் கிராண்ட்மாவா?

இல்ல ஏதாவது வேலைக்குப் போறீங்களா…?

ஏம்மா… நான் என்ன ஜீன்ஸ் பட பாட்டி லச்சுமீன்னு நெனச்சயா… அமெரிக்காவுல போயி ஆப்பக்கடை வைக்கறதுக்கு…?

வாவ்… வெரி நைஸ் ஏன்சர். அப்புறம் பாட்டி வீட்டுல எப்படி டைம் போகுது…? புக்ஸ் எல்லாம் படிப்பீங்களா…? உங்களுக்குக் கவலையே கெடயாதா…?

இருக்கு… ஒரே ஒரு கவலை…

கமான் சொல்லுங்க… ஐ வில் டிரை…

இந்தக் கண்ணு ரெண்டும் அவிஞ்சு போகாம ஏன் தெரிஞ்சுகிட்டு இருக்குதுங்கிற ஒரே கவலைதான்.

***

இன்னும் சிலருக்கு…

தமிழகம் தொழில் வளர்ச்சியில் எத்தனாவது இடத்தில் இருக்கிறது…

அவசியமில்லை…

தமிழகம் கல்வி வளர்ச்சியில் எத்தனாவது இடத்தில் இருக்கிறது…

அவசியமில்லை…

எத்தனை இளைஞர்கள் வேலை கிடைக்காது பூச்சி மருந்திலும், ரயில் தண்டவாளங்களிலும் தன் உயிரைப் போக்கிக் கொண்டு இருக்கிறார்கள்…

அவசியமில்லை…

எத்தனை பெண்கள் பாலியல் வன்முறைக்கும், வரதட்சணை வேட்டை நாய்களுக்கும் பலியாகிக் கொண்டிருக்கிறார்கள்…

அவசியமில்லை…

ஆனால்… ‘மின்னலே’ படப்பாடலோ ‘பத்ரி’ படப் பாடலோ இந்த வாரம் எந்த இடத்தில் இருக்கிறது என்பது தான் ரொம்ப முக்கியம்.

இப்படிப் போகிறது இவர்களது பொழுதுகள்.

நமது கவலை… நமது கோபம்… எல்லாம் கிரகாம்பெல் மீது திரும்புவது நியாயமில்லைதான்.

ஆனால் அத்தியாவசியத் தேவைகளுக்காக உருவாக்கப்பட்ட இக்கருவி ஆடம்பரத் தேவைகளுக்காகவும் பொறுப்பற்ற விஷயங்களுக்காகவும் பயன்படுவதற்கு நமது தொலைபேசித் துறையும் துணை போகிறதே என்கிற கோபம் எழுவது எந்த விதத்திலும் தவறாகாது.

மருத்துவமனையிலுள்ள அம்மாவினது உடல்நிலை பற்றி அறிந்து கொள்ளும் பதைபதைப்பிலோ…

விபத்தில் அண்ணனோ தங்கையோ இறந்துபோன தகவலை உடனடியாகத் தெரிவித்தாக வேண்டும் எனும் அவசரத்திலோ… தொடர்பு கொள்ளும்போது கிடைக்கிற பதில்…

‘இந்தத் தடத்தில் உள்ள இணைப்புகள் யாவும் உபயோகத்தில் உள்ளன. இன்னும் சிறிதுநேரம் கழித்து…’ என்கிற அதே பல்லவிதான்.

போதாக்குறைக்கு வானொலியும் இந்தத் துப்புக்கெட்ட தனத்தையே பின்பற்றுகிறது.

இத்தகைய சமூகப் பொறுப்பற்ற செயல்களுக்கு துணை போவதைப் பற்றி தொலைபேசித் துறை யோசித்தாக வேண்டிய வேளை இது.

அவர்களது தடத்தில் உள்ள இணைப்புகள் சில நொடிகளுக்காவது உபயோகத்தில் இல்லாமல் இருக்கும் பட்சத்தில் நாம் சொல்வதெல்லாம் இதுதான்:

ஏற்கனவே…

சினிமா புதிர் – டி.வி. புதிர் போன்ற ‘அறிவு’ப் போட்டிகளுக்கென அதிக விலையுள்ள தனி அஞ்சலட்டைகளை அஞ்சல் துறையே வெளியிட்டுள்ளது.

அதைப் போன்றே…

மக்கள் அடுத்த வேளை சோற்றுக்குக் கூட அல்லாடிக் கொண்டிருக்கிற சூழலில் இத்தகைய செயலில் ஈடுபடும் மூடர்களிடம் எஸ்.டி.டி. கட்டணத்தை பத்து மடங்காக உயர்த்தி வசூல் செய்ய வேண்டும்.

இதுவும் சாத்தியப்படவில்லை எனில்…

இப்படி வெட்டிப் பொழுது போக்கும் இந்த ‘தேச பக்தர்களை’ கட்டாய ராணுவ சேவைக்கு இழுத்துக் கொண்டுபோய் எல்லையில் நிறுத்தி விடுவது எவ்வளவோ மேல்.

திரும்பி வந்தால் வீட்டுக்கு.
வராவிட்டால் நாட்டுக்கு.
ஒரே கல்லில் இரண்டு மாங்காய்

-ஆனந்தவிகடன் 11.11.2001