‘பெல்’ தேசம்….

கிரகாம்பெல் என்றதும்…

இன்றைக்கு பயங்கரவாத எதிர்ப்பு அவதாரம் எடுத்திருக்கும் காந்தியின் மறு உருவான புஷ்ஷின் சித்தப்பா என்றோ…

அல்லது,

அமெரிக்காவினது வெளியுறவு அமைச்சராகவே ஆகிவிட்ட டோனி பிளேயரது பேரன் என்றோ…

மூளையைக் கசக்கிக் கொள்ள வேண்டியதில்லை யாரும்.

இந்த ‘பெல்’…

நீங்கள் நினைக்கும் அதே ‘பெல்’ தான்.

அந்த பெல் உருவாக்கிய ‘பெல்’லால் வந்ததுதான் இத்தனை வம்பும்.

எதை நினைத்து இதைக் கண்டுபிடித்தாரோ கிரகாம்பெல். ஆனால் அதை நினைத்து இங்குள்ளவர்கள் இதைப் பயன்படுத்துவதில்லை என்பது மட்டும் உறுதி.

மக்களது அவசர… அத்தியாவசிய தகவல் பரிமாற்றத்திற்காக கண்டுபிடிக்கப்பட்ட இக்கருவி இன்றைக்கு சினிமாக்காரர்கள் கையில் கிடைத்த காதலைப் போல் கந்தலாகிவிட்டது.

டி.வி.யின் எந்தச் சேனலைத் திறந்தாலும்… கெக்கே பிக்கே என்று இளித்துக் கொண்டோ… ‘மாரியாத்தா’ வந்ததைப் போல கையைக் காலை உதறிக் கொண்டோ காம்ப்பியர்களின் தரிசனம்தான் (அதாவது தொகுப்பாளினிகள்)  மதுரையிலிருந்தோ… பம்பாயிலிருந்தோ… துபாயிலிருந்தோ… ‘போராடிக் களைத்த’ தமிழர்கள் இவர்களுக்கு ‘போன்’ போட்டு…

‘இந்தப் படத்திலிருந்து ஒரு பாட்டு…

அந்தப் படத்திலிருந்து ஒரு காட்சி…

என்று விவஸ்தை கெட்டுப்போய் கேட்க…

அதற்கு இதுகளும் பதிலுக்கு வழிந்துவிட்டு அபத்தமான அஞ்சாறு விஷயங்களைப் பேசிய பிறகு… ஏதோ பல வருடங்கள் ஒரே தட்டில் இருவரும் சாப்பிட்டு ஒரே பாயில் படுத்துத் தூங்கியதைப்போல போலியான அன்யோன்யத்துடன் கேள்விகளை அள்ளி வீசுவார்கள்.

போதாக்குறைக்கு…

ஏதோ கண்தானம்… ரத்ததானம்… கிட்னிதானத்தைப் போல…

‘இந்தப் பாட்டை யாருக்கு டெடிcஅடெ பண்ண விரும்புறீங்க?’ என்கிற ‘அறிவுபூர்வமான’ ஒரு கேள்வி வேறு.

அடப்பாவிகளா…

பின்னர் கிரகாம்பெல் மீது கோபம் வராமல் என்ன செய்யும்?

சென்னை மாநகரத் தந்தையின் தந்தைக்கு குருவாய் இருந்த அண்ணா எப்போதோ சொன்னதாக ஞாபகம்:

“புகைவண்டியில் போய்க்கொண்டிருக்கும்போது சிலர் ஐந்து நிமிடத்துக்கொருமுறை ஜன்னலுக்கு வெளியே எட்டிப் பார்த்துக் கொண்டே வருவார்கள். ஏதாவது ஒரு மண் மேடோ அல்லது ஒரு குன்றோ தெரிந்தால் போதும். ‘ஏங்க அது என்ன சர்ச்சு. இது எந்த கோயில்? அது என்ன தர்க்கா…? என்று அருகில் இருப்பவரைத் துளைத்துக் கொண்டே வருவார்கள். அதற்கு பதிலாக நாம் பயணம் செய்யும் புகைவண்டியைக் கண்டுபிடித்தவர் யார்? அது எப்படி இயங்குகிறது? என்பது குறித்து ஒரு நிமிடம்கூட சிந்திக்க மாட்டார்கள். இப்படிப்பட்டவர்கள் கையில் விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளைக் கொடுத்தால் நாடு எப்படி முன்னேறும்…?” என்பார் அண்ணா.

இப்படி தொலைக்காட்சிக்கு மட்டும் என்றில்லை… கம்ப்யூட்டருக்கும் அதே கதிதான் ஏற்பட்டிருக்கிறது. இவர்கள் கையில் கம்ப்யூட்டரைக் கொடுத்தால் ஜோசியம்தான் பார்க்கிறார்கள்.

யுனிக்ஸ், ஜாவா, ஆரக்கல், ஆட்டுக்கல் எல்லாம் அத்துபடியில்லை என்றாலும் ஓரளவுக்காவது கம்ப்யூட்டர் தெரிந்தவன் என்ற முறையில் சொல்வதானால்…

இரு உயிரினங்களுடைய பிறந்த தேதி – இடம் – நேரம் இவற்றைக் கொடுத்தால் அது உடனடியாக கணித்துக் கொடுக்கும் என்பது உண்மைதான். ‘பதிமூன்று பொருத்தங்களும் பொருந்திப் போகிறது. கல்யாணத்தை ஜாம் ஜாமென்று நடத்தலாம்’ என்று கன கச்சிதமாகச் சொல்லும் என்பதும் உண்மைதான். அந்த இரண்டில் ஒன்று ஒரு நாயுடையதாக இருந்தாலும் அதன் பதில் இதுதான் என்பதுதான் கிளைமாக்ஸ்.

சரி விட்ட இடத்திற்கே வருவோம்…

வேலை வெட்டி எதுவுமற்ற இளைஞர்கள்…

பொறுப்பற்ற பெண்மணிகள்…

சாப்பிட்டு ஜீரணம் ஆகாத ஒரு கூட்டம்… இதற்கென்றே அலைவதையும், இந்த அஃறிணைகளுக்குப் ‘பொறுப்பாக’ பதில் சொல்லி ‘அறிவுபூர்வமாக’ கேள்வி கேட்டு… கேட்ட பாடலை ஒளிபரப்புவதற்கென்றே ஒவ்வொரு டி.வியிலும் ஆட்களை வைத்திருக்கிறார்கள் என்பதையும் பார்க்கும்போது நாம் தமிழகத்தில் இருக்கிறோமா இல்லை ‘பாண்டி மடத்தில்’ இருக்கிறோமா என்கிற பெரும் சந்தேகம் எழுந்து தொலைக்கிறது.

பாடலைப் போடுவதற்கு முன் இந்த ஜென்மங்கள் அந்தப் பெண்களிடம் உளறும் உளறல் இருக்கிறதே… அய்யோடா…

நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க…

(டி.வி. கண்டுபிடித்த காலத்திலிருந்து…)

உங்க வாய்ஸ் ரொம்ப ஸ்வீட்…

(சொல்வது இயர்போன் வைத்திருப்பவர்…)

ரொம்ப நேரமா டிரை பண்றோம்… இப்பதான் லைன் கிடைச்சுது…

(வேலை இல்லா திண்டாட்டமே தீர்ந்தது போ)

பதிலுக்கு சும்மாயிருக்க முடியுமா இந்த அம்மணிகள்…

ஹலோ… நீங்க என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க…?

பாட்டணி படிச்சுட்டு சும்மா இருக்கேன்.

ஏன் ஹிஸ்டரி படிக்கலே…?

***

இந்த பாட்டை கேக்குறீங்களே… யாரையாவது லவ் பண்றீங்களா…?

ஐய்யய்யோ இல்லீங்க.

ஏன் சார் லவ் பண்றது தப்பா…?

தப்பில்லைதான்… ஆனால். பென்சன் வாங்கற காலத்துல வீணா எதுக்குமா அதெல்லாம்…?

***

ஆமா நீங்க என்ன பிஸினஸ் பண்றீங்க.

இருப்புக்கடை வெச்சிருக்கேன் மேடம்.

ஏன் பிராந்திகடை வைக்கலே…?

***

வாவ்… என்ன கட்டணக் கழிப்பிடமா வெச்சிருக்கீங்க…

எப்பிடிப் போகுது பிஸினெஸ்?

ரொம்ப டல்லுங்க மேடம்.

ஏன் அவ்வளவு டல்…?

உள்ள போனா அவனவன் சீக்கிரம் வரமாட்டேங்கிறான்…

வெளிய கியூவுல நிக்கறவன் வேற எடம் தேடீ ஓடீர்றான்…

ஏன் நீங்க இடத்த change பண்ணி பார்க்க வேணடீதுதானே?

நாட்டதான் change பண்ணனும் மேடம்…

what கண்ட்ரீயவேயா…? எனி பிராப்ளம்…?

நீங்கதான் பிராப்ளம்…

அவசரத்துக்கு உள்ள போனமா வந்தமான்னு இல்லாம உள்ள போறவன் செல்போனை வெச்சுக்கிட்டு உங்களுக்குப் போனப் போட்டு பாட்டைக் கேட்டுக்கிட்டு இருக்கான்… நானே இப்ப அவசரத்துக்கு வீட்டுக்கு ஓடீட்டு இருக்கேன். ஆள உடு தாயே…

***

அப்புறம் ஹேமா… உங்க பக்கத்துல வேற யார் இருக்கா?

இருங்க எங்க பாட்டி இருக்காங்க தர்றேன்…

ஹாய் பாட்டி… நீங்க என்ன ஹவுஸ் கிராண்ட்மாவா?

இல்ல ஏதாவது வேலைக்குப் போறீங்களா…?

ஏம்மா… நான் என்ன ஜீன்ஸ் பட பாட்டி லச்சுமீன்னு நெனச்சயா… அமெரிக்காவுல போயி ஆப்பக்கடை வைக்கறதுக்கு…?

வாவ்… வெரி நைஸ் ஏன்சர். அப்புறம் பாட்டி வீட்டுல எப்படி டைம் போகுது…? புக்ஸ் எல்லாம் படிப்பீங்களா…? உங்களுக்குக் கவலையே கெடயாதா…?

இருக்கு… ஒரே ஒரு கவலை…

கமான் சொல்லுங்க… ஐ வில் டிரை…

இந்தக் கண்ணு ரெண்டும் அவிஞ்சு போகாம ஏன் தெரிஞ்சுகிட்டு இருக்குதுங்கிற ஒரே கவலைதான்.

***

இன்னும் சிலருக்கு…

தமிழகம் தொழில் வளர்ச்சியில் எத்தனாவது இடத்தில் இருக்கிறது…

அவசியமில்லை…

தமிழகம் கல்வி வளர்ச்சியில் எத்தனாவது இடத்தில் இருக்கிறது…

அவசியமில்லை…

எத்தனை இளைஞர்கள் வேலை கிடைக்காது பூச்சி மருந்திலும், ரயில் தண்டவாளங்களிலும் தன் உயிரைப் போக்கிக் கொண்டு இருக்கிறார்கள்…

அவசியமில்லை…

எத்தனை பெண்கள் பாலியல் வன்முறைக்கும், வரதட்சணை வேட்டை நாய்களுக்கும் பலியாகிக் கொண்டிருக்கிறார்கள்…

அவசியமில்லை…

ஆனால்… ‘மின்னலே’ படப்பாடலோ ‘பத்ரி’ படப் பாடலோ இந்த வாரம் எந்த இடத்தில் இருக்கிறது என்பது தான் ரொம்ப முக்கியம்.

இப்படிப் போகிறது இவர்களது பொழுதுகள்.

நமது கவலை… நமது கோபம்… எல்லாம் கிரகாம்பெல் மீது திரும்புவது நியாயமில்லைதான்.

ஆனால் அத்தியாவசியத் தேவைகளுக்காக உருவாக்கப்பட்ட இக்கருவி ஆடம்பரத் தேவைகளுக்காகவும் பொறுப்பற்ற விஷயங்களுக்காகவும் பயன்படுவதற்கு நமது தொலைபேசித் துறையும் துணை போகிறதே என்கிற கோபம் எழுவது எந்த விதத்திலும் தவறாகாது.

மருத்துவமனையிலுள்ள அம்மாவினது உடல்நிலை பற்றி அறிந்து கொள்ளும் பதைபதைப்பிலோ…

விபத்தில் அண்ணனோ தங்கையோ இறந்துபோன தகவலை உடனடியாகத் தெரிவித்தாக வேண்டும் எனும் அவசரத்திலோ… தொடர்பு கொள்ளும்போது கிடைக்கிற பதில்…

‘இந்தத் தடத்தில் உள்ள இணைப்புகள் யாவும் உபயோகத்தில் உள்ளன. இன்னும் சிறிதுநேரம் கழித்து…’ என்கிற அதே பல்லவிதான்.

போதாக்குறைக்கு வானொலியும் இந்தத் துப்புக்கெட்ட தனத்தையே பின்பற்றுகிறது.

இத்தகைய சமூகப் பொறுப்பற்ற செயல்களுக்கு துணை போவதைப் பற்றி தொலைபேசித் துறை யோசித்தாக வேண்டிய வேளை இது.

அவர்களது தடத்தில் உள்ள இணைப்புகள் சில நொடிகளுக்காவது உபயோகத்தில் இல்லாமல் இருக்கும் பட்சத்தில் நாம் சொல்வதெல்லாம் இதுதான்:

ஏற்கனவே…

சினிமா புதிர் – டி.வி. புதிர் போன்ற ‘அறிவு’ப் போட்டிகளுக்கென அதிக விலையுள்ள தனி அஞ்சலட்டைகளை அஞ்சல் துறையே வெளியிட்டுள்ளது.

அதைப் போன்றே…

மக்கள் அடுத்த வேளை சோற்றுக்குக் கூட அல்லாடிக் கொண்டிருக்கிற சூழலில் இத்தகைய செயலில் ஈடுபடும் மூடர்களிடம் எஸ்.டி.டி. கட்டணத்தை பத்து மடங்காக உயர்த்தி வசூல் செய்ய வேண்டும்.

இதுவும் சாத்தியப்படவில்லை எனில்…

இப்படி வெட்டிப் பொழுது போக்கும் இந்த ‘தேச பக்தர்களை’ கட்டாய ராணுவ சேவைக்கு இழுத்துக் கொண்டுபோய் எல்லையில் நிறுத்தி விடுவது எவ்வளவோ மேல்.

திரும்பி வந்தால் வீட்டுக்கு.
வராவிட்டால் நாட்டுக்கு.
ஒரே கல்லில் இரண்டு மாங்காய்

-ஆனந்தவிகடன் 11.11.2001