அன்புத் திராவிடனுக்கு….

நினைவிருக்கிறதா நண்பா உனக்கு…?

ஏறக்குறைய எழுபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு…
சில பழந்துணிகளைத் தோளில் தொங்கும் மூட்டையில் திணித்துக்கொண்டு
மலையாள தேசம் நோக்கி நடைபோட்ட நம் நண்பனை…?

அவன் போன காரியம் என்னவென்பது புரியுமா உனக்கு?

அந்த நண்பன் போய்ச் சேர்ந்த பிற்பாடு
தனது துணைவியையும் துணைக்கு அழைத்துக்கொண்டான்.
அது போதாதென்று அவனது தங்கையும் அப்புறம் போய்ச் சேர்ந்தாள்.

அவன் போனது…
கள்ளிக்கோட்டையின் சுற்றுலாத் தலங்களைச் சுற்றிப் பார்ப்பதற்காக அல்ல.
அவன் துணைவி போனது எர்ணாகுளக் கரையோரங்களில் படகுகளில் பவனி வருவதற்கும் அல்ல.
அவனது தங்கை பயணப்பட்டது அவர்கள் இருவருக்கும் பேச்சுத் துணைக்காகவும் அல்ல.

அந்த நண்பனின் பெயர் நினைவுக்கு வருகிறதா உனக்கு?

அவன் பெயர்: ஈ.வே.ராமசாமி.
துணைவியின் பெயர்: நாகம்மை.
தங்கையின் பெயர்: கண்ணம்மா.
அவர்கள் அனைவருமே பயணப்பட்டது….
வைக்கம் மண்ணின் மக்களது சமூக இழிவைப் போக்குவதற்காக.

‘வைக்கம் தெருக்களில் ஒடுக்கப்பட்ட மக்கள் நடமாடக்கூட கூடாது’ என்கிற அவலத்தை அழித்து ஒழிப்பதற்காகத்தான் பயணப்பட்டான் அவன்.

அடக்கு முறையையே ஆயுதமாகக் கொண்டவர்கள் அவனை அடைத்து வைத்தனர். அழைப்பு விடுத்தான் அவனது துணைவிக்கு.
அடுத்த கட்டப்போராட்டத்தில் அணி சேர்ப்பதற்கு.
வந்த அவரும் விலங்கிடப்பட்டார்.
அடுத்ததாக வந்த அவனது தங்கை கண்ணம்மாவும் கைதாகி,
சிறையின் சுவர்களை செருக்குறச் செய்தனர்.
எவ்வளவு அற்புதமான பொழுதுகள் அவை.

உனது சோகமே எனது சோகமாக…
எனது துயரே உனது துயராக…
அப்போது நமது தேசத்துக்கும் நேசத்துக்கும் இன்னொரு பெயர் சூட்டியிருந்தோம்.

திராவிட நாடு.

சட்டரீதியாக அதற்கு இன்னுமொரு பெயரும் உண்டு.
அதுதான் மதராஸ் மாகாணம்.

அப்போது கேரளத்தில் ஏதேனும் அவலம் என்றால், இங்கிருந்து ஓடோடிப் போவார்கள் எமது தலைவர்கள். தமிழ்மண்ணில் யாதொரு போராட்டமென்றாலும் கேரளத்தில் இருந்து பாய்ந்து வருவார் டி.எம்.நாயர்.

‘முப்படை கொண்ட தமிழ் மாநிலம்தான் வேண்டும்’ என முழங்குவார் சர்.சி.சங்கரன் நாயர் என்கிற மலையாளி.

குறளையும் தொல்காப்பியத்தையும் வியந்து வியந்து புகழுவார் கே.வி.ரெட்டி நாயுடு என்கிற தெலுங்கு தேசத்துக்காரர்.

“கேரளம், கன்னடம், ஆந்திரம், தமிழ் பிரதேசங்கள் அடங்கியது தென் இந்தியா. இவை சேர்ந்ததே இன்றைய சென்னை மாகாணம். இந்தத் தென்இந்தியாவில் வாழும் மக்கள் ஒரே கூட்டத்தவர். இந்த நான்கு சகோதரர்கள் பேசும் பாஷைகள் ஒரே மூலத்தில் இருந்து பிறந்தவை. இந்தத் தென் இந்தியா இந்தியாவின் மத்திய அரசிலிருந்து விலகி, நான்கு பிரதேசங்களுக்குள்ளும் சேர்ந்த கூட்டு அரசு ஏற்பட வேண்டும். எங்கள் தென் இந்திய நல உரிமைச் சங்கம் அதற்காகவே ஏற்பட்டது. அதற்காகவே பாடுபடப்போகிறது” என 1917-லேயே முழங்குவார் டி.எம்.நாயர். அப்படியிருந்த நமது பொழுதுகள்…. அப்புறம் எப்படி நண்பா பொசுங்கிப் போயின…?

அந்த ஈரோட்டுக் கிழவரது ஆசைகள் நொறுங்கிப் போனதற்கு யார் காரணம்…?

எனது துயர் எனதாக…
உனது சோகம் உனதாக மட்டுமே…
எப்படி ஏற்பட்டது இந்த இடைவெளி…?

மலையாள தேசம் மல்லுக்கு நிற்காத போதிலும்…
தெலுங்கு தேசம் துயரத்தைத் தராத போதிலும்…
கன்னட மண் மட்டும் எம்மை இப்படிக் கரித்துக் கொட்டுகிறதே…
அதுதான் புரிபடமாட்டேனென்கிறது எமக்கு.

அன்பு நண்பா…!

எம் மக்கள் எதையுமே பிரித்துப் பார்ப்பதில்லை.
உண்பதென்றால்கூட உடுப்பி ஓட்டல் உணவுதான்.
தேநீருக்குக்கூட நாயர் கடைகளையே நாடிப்போகிறோம் நாங்கள்.
எம் மக்கள் வட்டிக்கு வாங்கக்கூட லேவாதேவிக்காரனே உண்டு இங்கு.

மத்தியத் தொகுப்புக்கு எமக்கான அரிசியை அளித்துவிட்டுப் புரோட்டாவைப் பிய்த்துக் கொண்டு இருக்கிறோம் நாங்கள்.
நெய்வேலி மின்சாரத்தை நாட்டுக்கு அளித்துவிட்டுப் பாட்டிலில் திரிபோட்டுப் படித்துக் கொண்டிருக்கின்றன எமது மழலைகள்.

‘இந்தி படித்தால் உடனே வேலை’ எனும்
‘வேதவாக்கில்’ சிலர் மயங்கினாலும்
இந்தி படித்தும் வேலை இல்லாது
இங்கே வந்து வியாபாரம் செய்யும் குஜராத்தியிடம்தான்
‘பானிப்பூரி’ சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம் நாங்கள்.

இப்படி இருந்தும் எப்படி எதிரிகளாகிப் போனோம் அவர்களுக்கு…?

எம்மக்களில் பலர் வேட்டியையும் சேலையையும் கூட விட்டு ஆண்டுகள் பலவாயிற்று. தெலுங்கு வருடப் பிறப்பான ‘உகாதி’க்குக்கூட அரசு விடுமுறை இங்கு.

அவ்வளவு ஏன்…
ஆறுகோடித் தமிழ் மக்களும் அவநம்பிக்கை ஏதுமின்றி
அரியணை ஏற்றியவர்களில் பட்டியலைப் பார்க்கிறாயா தோழனே…?

‘ஓமந்தூரார்’ என நேசத்தோடு விளிக்கப்பட்ட ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார்: தெலுங்கர்.

‘மக்கள் திலகமாக’ மகுடம் சூட்டப்பட்ட கண்டியில் பிறந்த கோபாலமேனனது
வாரிசு எம்.ஜி.ஆர்.: மலையாளி.

அனைவரது ஆசைக்கேற்ப அரசியலில் அடியெடுத்து வைத்து
அரியாசனத்தில் ஏறிய ஜெ.ஜெயலலிதா: கன்னடர்.

அடுத்து Waiting List-ல் எமது மக்கள் வைத்து இருப்பதாகச் சொல்லப்படும் நேற்றைய சிவாஜிராவ் – இன்றைய ரஜினிகாந்த்: கர்நாடகத்தில் வளர்ந்த மராட்டியர்.

இப்படி இருந்தும் எப்படி எதிரிகளாகிப் போனோம் அவர்களுக்கு…?

இந்த மண்ணுக்கு உழைத்தவர்கள் யாராயினும்
இதயப்பூர்வமாக ஏற்றுக் கொண்டே இருக்கிறோம்.
சில வேளைகளில் பின்னுக்கு இழுத்தவர்களையும் கூட…!

மலையாள தேசத்துக்காரர்கள் எம்மை எதிரிகளாக
எந்த நிலையிலும் எண்ணவில்லை.
தெலுங்கு தேசத்தவர்கள், கிருஷ்ணா வருகிறதோ இல்லையோ
கால்வாய் வெட்டவாவது கண்ணியமாக இடம் கொடுத்தவர்கள்.
ஏன் நண்பா கர்நாடகா மட்டும் கொக்கரிக்கிறது?

அவர்களது வறுமைக்கும் துயருக்கும் எந்த வகையிலும் காரணம்
நாங்கள் இல்லை என்பதனை எப்போது புரிந்து கொள்ளப் போகிறார்கள்?

‘தண்ணீர் விடக்கூடாது’ என்பதற்காக தமிழர்களிடம் தலைவிரித்து ஆடுபவர்கள்… ‘தண்ணீர் விடவில்லை’ என்பதற்காக இங்குள்ள கன்னடர்க்கு எந்த விபரீதமும்
நாங்கள் விளைவிக்கவில்லை என்பதை
எப்போது புரிந்து கொள்ளப் போகிறார்கள்?

இனிய கன்னட நண்பனே!

தொடராக முதல்வர் பதவிகளையே கூட
தாரைவார்த்துத்தந்த எங்களுக்கே வராத கோபம் உனக்கு மட்டும் ஏன்?

உனக்குத் தெரியுமா தோழனே…
வடக்கு நோக்கிச் செல்லச் செல்ல நாமனைவருமே ‘மதராசி’ என்ற ஓரே காரணத்துக்காக ஓரங்கட்டப்படுகிறோம் என்பது…?

ஒடுக்கப்படும் தேசிய இனங்கள் ஒன்றுக்கொன்று அடித்துக் கொள்வது
ஆளும் வர்க்கத்துக்கு அடிவருடுவதில் தான் போய் முடியும் என்பது புரியுமா உனக்கு?

நரிகள் புலிகளாக ஆசைப்பட்டு சாயத் தொட்டியில் விழுந்து எழுந்த கதைகள் ஏராளம்தான்.

ஆனால்… இங்கோ…

திராவிட நாட்டுக்காக கர்ஜனை செய்த அநேகப் புலிகள் ‘தேசிய’ச் சாயத்தில் தவறி விழுந்து நரிகளாகி ஊளையிடத் துவங்கியதன் விளைவுதான் இக்கடிதமும் என்பது.

மற்ற மாநிலத்தவனது சமூக இழிவையெல்லாம்
மனித குலத்துக்கு ஏற்பட்ட இழிவாக ஏற்றுக் கொண்டு
அல்லாடிச் செத்த அந்தக் கிழவரது மக்களை
இப்படி இழிவுபடுத்துகிறீர்களே இது என்ன நியாயம்?

போதும் தோழா…

கோபமும் உக்கிரமும் உனக்கு மட்டுமே சொந்தமில்லை
என்பதை உணர்த்த வைத்துவிடாதே எம்மை.

இன்னமும்
‘மதராஸ் மாகாணக்’ கனவில் வாழும்…

பாமரன்

– ஆனந்த விகடன்
29.10.2000