ஒரு புளுக்கையின் கதை…

எழுபதுகளின் இறுதிப் பகுதி – புகுமுக வகுப்பில் கோட்டைவிட்டு ஊரையே பூகோள ரீதியாக அலசிக் கொண்டிருந்த நேரம்.

என்னோடு சுற்றிக் கொண்டிருந்த நண்பர்கள் சிலருக்கு திடீரென்று மண்டைக்குள் ஏதோ ரசாயன மாற்றம் நிகழ்ந்து ‘குறியீடு… படிமம்…’ என்றெல்லாம் பேச ஆரம்பிக்க…  என்னமோ ஏதோ என்று பதறிப் போய்விட்டேன் நான்.

‘என்னடா ஏதேதோ பேசுறீங்க… என்னாச்சு உங்களுக்கு?’ என்றால்…

‘அதெல்லாம் ஒனக்குப் புரியாது.  வேலையைப் பாரு’ என்று சொல்லிவிட்டு வானத்தையோ, மரத்தையோ வெறித்துப் பார்ப்பார்கள்.

கொஞ்ச நாள் முன்பு வரை…

‘வறுமைக்குக் கோடு
போட்டுக் கொண்டிருக்கும்
நேரத்தில்
எங்கள் வீடுகளுக்கு ஓடு போட்டால்
ஒழுகாமலாவது வாழ்வோம்’ என்கிற ரகத்தில் எழுதிக் கொண்டிருந்த இவர்கள்…
ஏதோ ஒரு புளிய மரத்தின் கீழ் பெற்ற இலக்கிய ஞானத்தால்
‘பிரக்ஞை… கவிதானுபவம்’ என்று வெளுத்துக் கட்ட ஆரம்பித்தார்கள்.

“டே சீனா! மத்ததெல்லாம் நீங்களே வெச்சுக்கங்க…
அந்த கவிதாவோட அனுபவத்தை மட்டும் சொல்லு போதும்” என்பேன்.

“ச்சே… அது வாழ்வனுபவம்டா. சும்மா இரு…” என்று மிரட்டுவார்கள் நண்பர்கள்.

அதுவரை சீனிவாசன்… சூரி… என்று
சாதாரணமாக தங்கள் பெயரை எழுதிக் கொண்டிருந்தவர்கள் ஷ்றீனிவாஸன், ஸூரி என்றும்…
இதயம், சுவாசம் என்று எழுதிக் கொண்டிருந்தவர்கள்
ஹிருதயம்… ஸுவாசம் என்றும் எழுத ஆரம்பித்தார்கள்.

அவர்களைப் பார்த்தாலே எரிச்சல் எரிச்சலாக வரும். தினந்தோறும் சண்டைதான் அவர்களோடு.

“டேய் சுரேஷ்… நாட்டுல எவ்வளவு பேர் சோத்துக்குக் கஷ்டப்படறான். அதெல்லாம் எழுதமாட்டீங்களா?” என்பேன்.

“அது ஒரு எகனாமிஸ்ட்டோட வேலை” என்பான்.

“சரி… இலங்கைல நம்மாளுகளையெல்லாம் கொல்றாங்களே அதப் பத்தி எழுதலாமே…” என்றால்,

“அது ஹியூமன் ரைட்ஸ் ஆளுகளோட வேல என்பான்.

‘மரங்களை வெட்றான் மழையே இல்ல… அது…?”

“அது ஈக்காலஜிஸ்ட்டோட வேலை…”

“அப்ப… உங்களுக்கெல்லாம் என்ன புடுங்கறதாடா வேலை” என்று சண்டைக்கு கிளம்பி விடுவேன்.

இந்த மாதிரி சண்டைகளை எல்லாம் முடிவுக்குக் கொண்டு வந்தது நாகார்ஜுனன்தான்.

88ஆம் ஆண்டு நாகாரஜுனனோடு ஏற்பட்ட பழக்கம் பல்வேறு சாளரங்களை என்னுள் திறந்து விட்டது.

‘யாரையும் திட்டாதே…
உனக்கு என்ன தேவையோ அதை எடுத்துக்கோ,
புரியவில்லையா பத்துத் தடவை படி…
அப்பவும் புரியாட்டி கிழிச்சுப் போடு.
குற்றால அருவி கொட்டற மாதிரி அவ கூந்தல் இருந்துச்சுன்னு
லா.ச.ரா. சொல்றாரா…
அப்படி எப்படிச் சொல்லலாம்?ன்னு சண்டைக்குப் போகாதே.
கையில் எப்பவும் ஸ்கேல் வெச்சுக்கிட்டு சுத்தக் கூடாது…’ என்றபடி போகும் நாகார்ஜுனனூடான பொழுதுகள்.

அப்போதுதான் அந்த முடிவுக்கு வந்தேன்.
எது எனக்கான எழுத்து?
முதலில் அதை நோக்கிப் போவது.

மாறுபாடானவற்றோடு மல்லுக்கு நிற்பதைக் காட்டிலும்
மக்களுக்கான எழுத்தை நோக்கி நகர்வதே அது.

எது எவ்விதம் ஆயினும்…

எது எழுத்து?
அதுவும் எனக்கானது எது? 
என்கிற கேள்வி எழுகிற போதெல்லாம்
‘பூவுலகின் நண்பர்கள்’ முதன் முதலாக வெளியிட்ட
‘புதிதாய் சில’ என்கிற தொகுப்பில் வந்த ஒரு கவிதைதான்
எனது பதிலாக இருக்கிறது இன்றைய கணம் வரை:

“ஒருநாள்
என் நாட்டு
அரசியல் சாரா அறிவுஜீவிகள்
எளிமையான எம்மக்களால்
குறக்கு விசாரணை செய்யப்படுவர்.
தன்னைச் சிறுகச் சிறுக
இழந்து கொணடிருந்த
தீச்சுடரென மெதுவாக
அவர்கள் தேசம் செத்துக் கொண்டிருந்தபோது
அவர்கள் என்ன செய்து கொண்டிருந்தாரகள்
என்று விசாரிக்கப்படுவார்கள்…”

என வரும் நீள் கவிதையே அது.

அந்த முழுக் கவிதையையும் படித்து முடிக்காவிட்டால்
தலை சுக்கு நூறாக வெடித்துச் சிதறும் என்கிற
சாபத்துக்கு ஆளானவர்கள்
எனக்கு பின்னூட்டம் அனுப்பி உயிர்பிழைக்கக் கடவார்களாக.

நன்றி: தீராநதி

11 thoughts on “ஒரு புளுக்கையின் கதை…

 1. Thiru Pamaran Iya,

  If I don’t read the full poem, I am sure my head will break into thousand pieces. Please, publish the whole poems.

  Pardon me for typing in English.

 2. சகோதரர் பாமரன் அவர்களே. ஒழுங்காக முழுக்கவிதையும் பிரசுரிக்க வேண்டுகிறேன். இல்லை என்றால் கோவை விவசாயக்கல்லுரியில் தங்களுக்கு எதிராக தீர்மாணம் கொண்டு வர சொல்லி விடுவோம். சாக்கிரதை ஆமா. என்னுடைய மின்னஞ்சல் முகவரிக்கு கவிதையை அனுப்பினால் சந்தோஷமடைவேன். அன்புடன்

 3. நாட்டில் நடக்கும் கன்றாவித்தனத்தைப் பாக்கிறதுக்கு எழவு தலை சுக்கு நூறாக இல்லையில்லை ஆயிரமா வெடிச்சாக்கூட பரவாயில்ல.

  ஆனா அதுக்கு முன்னாடி ஒரு தடவ இந்தக் கவிதைய படுச்சா கொஞ்சம் சொகமா இருக்குமுனு தோனுதுங்கோ, அனுப்பிவைங்க ராசா

 4. அன்புத் தோழமைக்கு,

  வணக்கம்.

  நீங்கள் கேட்ட கவிதைக்கான இணைப்பு :

  https://pamaran.wordpress.com/2007/09/25/%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%8F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/

  தங்களின் அக்கறைக்கு என்றும் எமது நன்றிகள்.

  தோழமையுடன்,
  பாமரன்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s