உனது மடல் கிடைத்தது.
இம்முறையும் குழம்பிப் போனேன்.
எதைத்தான் எழுதுவது…?
‘நீ இங்கு சுகமே. நான் அங்கு நலமா?’ என்று எழுதிக் கொண்டிருந்தால் நிச்சயம் நீ என்னை மனநல மருத்துவமனையில்தான் சேர்ப்பாய் என்று தெரியும்.
இருப்பினும் குழப்புவது எனக்கு மட்டுமேயான பிறப்புரிமை என்று எண்ணிக் கொண்டிருந்தால்…
உனக்கும் அதுதான் என்பது போல உனது மடல் மேசையின் மீது கிடந்தது.
“எங்கள் பிரச்சனைகளைப் பற்றி யார் எப்போழுது எழுதினாலும் ஒன்று ‘வரதட்சணைக் கொடுமை அல்லது மாமியார் மருமகள் பிரச்சனை’ என்று எழுதுவதே பலரது வாடிக்கையாகிவிட்டது.
பெண்கள் என்றாலே செக்கு மாட்டைப்போல அவர்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை மட்டுமே வாசிப்பார்கள் என்று எண்ணுவது அறியாமை. இவைகள் எல்லாவற்றையும் தாண்டி அரசியல் அதிகாரத்துக்கான போரினில் பெண்களுக்குப் பங்கு கிடையாதா…?
எங்களுக்கு உலக விசயங்கள் எதுவுமே ஒத்துவராது என்று ஒதுக்குவது ஏன்? ஈழத்திலும், பாலஸ்தீனத்திலும் பெண்கள் துப்பாக்கி தாங்கி களத்தில் போராடும் போது,
இங்குள்ளவர்கள் மட்டும் கோலப்போட்டி நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
இத்தகைய பிரச்சனைகளைத்தான் பெண்கள் படிப்பார்கள் என்று அவர்களாகவே ஒரு வட்டத்தைப் போட்டுக் கொண்டு உளறிக் கொட்டிக் கொண்டிருக்கும் எழுத்தாளர்கள் வரிசையில் உன்னையும் சேர்க்கலாமா வேண்டாமா என்றுதான் யோசித்துக் கொண்டிருக்கிறேன்” என கோபம் கொப்பளிக்க எழுதியிருக்கிறாய். மிக நியாயமான மடல்.
எனக்கும் அதில் ஒப்புதலில்லைதான். நிச்சயம் உனது ஆணைக்கு அடிபணிந்தே தீர வேண்டும். உன் கட்டளைக்குக் கீழ்படியும் முகமாக… இம்மடல் உன்னை இந்த உலகத்தின் இன்னொரு கோடிக்கு கொண்டு செல்லப் போகிறது.
இனிய தோழி, ‘திராவிட இயக்கங்களுக்கு’ செப்டம்பர் மாதம் எப்படி ஒரு விழா மாதமோ…
மாவீரர்களுக்கு நவம்பர் மாதம் எப்படி ஒரு புரட்சி மாதமோ…
அப்படி இதுவும் ஒரு கதை சொல்லும் காலம் தான் போலிருக்கிறது.
‘கதை’ என்றதும் பயந்து விடாதே.
அங்குலம் அங்குலமாய் அசிங்கங்களை அள்ளித் தெளித்துவிட்டு அதன் இறுதி வரிகளில் மட்டும் ‘அறிவுரைகளை’ அள்ளி வீச… இது ஒரு நடிகையின் கதை அல்ல.
‘அதற்கு பதிலளிக்கிறேன் பார்’ என்ற போர்வையில் ‘பத்திரிகையாளர்கள் அனைவருமே மோசம். அவன் மனைவி, மக்கள் கூட மார்க்கம் தவறித்தான் வாழ்வார்கள்’ என நடிகை ரேவதி உளறிக் கொட்டிய ‘ஒரு பத்திரிகையாளனின் கதை’யும் அல்ல.
இது மக்களுக்காகவே வாழ்ந்து,
மக்களுக்காகவே வீழ்ந்த ஒரு புரட்சியாளனின் கதை.
அவன் பெயர் குவேரா. புரட்சிக்கு இன்னொரு பெயர் சூட்டலாம் என்று எவராவது எண்ணினால் கூச்சமின்றி கூப்பிடலாம் குவேரா என்று.
ஆசிய நாடுகள் என்றாலே இந்தியா – இலங்கை – பாகிஸ்தான் என இங்கிருப்பதைப் போல லத்தீன் அமெரிக்க நாடுகள் என்றால் பெரு – பிரேசில் – மெக்ஸிகோ – என பலவற்றைச் சொல்லலாம். அவற்றுள் ஓர் அரிய தேசம்தான் அர்ஜன்டைனா. அங்குதான் குவேரா எனும் புரட்சி கருக்கொண்டு உருக்கொண்டது.
ஆம், அதுதான் அவன் பிறந்த மண்.
அப்போது நாள்காட்டி ஜுன் 14 – 1928 என்று அறிவித்தது.
அவன் வளர்ந்த பொழுதுகளை அருகிருந்து ரசித்தவர்கள் குறும்புக்கு இன்னொரு பெயரும் குவேரா தான் என்று அடித்துச் சொல்வார்கள்.
அவன் வளர வளர குறும்போடு சேர்ந்து கூடவே வளர்ந்தது அவனது அறிவு மட்டுமில்லை அளவிடற்கரிய அவனது மனிதநேயமும்.
ரப்பர் மிதவைகளைத் தூக்கி ஆற்றில் போடுவான். தாவிக் குதித்த பிறகு தொடங்கும் அவனது பயணம் 100 – 150 மைல்கள் என. பத்து பதினைந்து நாட்கள் கழித்தே வீடு வந்து சேருவான்.
இன்றோ… நாளையோ… இறுதி மூச்சையும் விட்டுவிடும் அந்த லுானா… அதையும் விடமாட்டான். அதில் ஏறிக்கொண்டு ஐநூறோ அறுநூறோ மைல்கள் பயணம் செய்த பிறகே அவன் மனம் அமைதிப்படும். போகிற வழியெல்லாம் தென்படும் மக்களது வாழ்க்கை முறைகளையும், அவர்கள் சுமந்த கணக்கிலடங்கா சோகங்களையும் கணக்கிட்டுக் கொண்டே வீடு திரும்புவான்.
அந்த அர்ஜன்டைனா நாடு அவனையும் ஒரு மருத்துவனென்று சான்றளித்தபோது நாட்காட்டி மார்ச் 7, 1953 என்று அறிவித்தது.
மருத்துவரென்றால் பத்தாவது பெயிலாகிவிட்டு போலிப்பத்திரம் தயாரித்து வாழ்ந்த மருத்துவனல்ல.
மருத்துவரென்றால்…
‘எக்ஸ்ரேவுக்கு இத்தனையாகும்,
ஸ்கேனிங்குக்கு அத்தனையாகும்
எல்லாம் சேர்த்து மொத்தம் உன் சொத்தில் பாதி கட்டணமாகும்’ என உயிர்வாங்கும் மருத்துவனல்ல.
அவன் உயிர் கொடுக்கும் மருத்துவனாகவே மலர்ந்தான்.
மருந்துப்பைகளைத் தனது தோளில் சுமந்தபடி கொலம்பியா, வெனிசுலா எனும் துார தேசங்களிலிருந்த தொழுநோயாளிகளின் குடியிருப்புகளைத் தேடிச் சென்றான் மருத்துவம் பார்க்க.
கடமைக்கும், வியாபாரத்திற்கும் வித்தியாசம் தெரிந்த மருத்துவன் அவன்.
இப்படிப் பல்வேறு பகுதிகளுக்குப் பயணப்பட்ட குவேரா மெக்ஸிகோ நாடு வந்து சேர்ந்தபோதுதான் எதிர்காலம் அவன் எதிர்பாராத வேலைகளை அவனுக்காக வைத்துக் கொண்டு காத்திருப்பது புரிய வந்தது. அவன் வாழ்க்கையைப் புரட்டிப்போட்ட பல்வேறு சம்பவங்கள் சங்கமித்த மண்தான் மெக்ஸிகோ.
அங்குதான் அவன் நாற்பதாண்டுகளாய் நகர்த்த முடியாத நாயகனாய் கியூபா நாட்டின் பிரதமராகவும், புரட்சியின் பிதாமகராகவும் வீற்றிருக்கிற பிடல் காஸ்ட்ரோவைச் சந்தித்தான்.
அப்போது நாட்காட்டி ஜுலை 14, 1955 என்று அறிவித்தது.
மருத்துவராய் பல்வேறு நாடுகளுக்குப் பயணப்பட்ட குவேராவும் புரட்சியாளனாய் கியூபா நாட்டிலிருந்து வெளியேறிய பிடல் காஸ்ட்ரோவும் மெக்ஸிகோ நாட்டில் தான் அறிமுகமாகிறார்கள்.
விடிய விடிய நடக்கிறது விவாதங்கள்.
ஆனால், விடிந்த பிறகே விளங்குகிறது பிடலுக்கு… அந்த 27 வயது மருத்துவனும் கியூபா நாட்டு விடுதலைக்காக
வீர சபதமேற்று தன்னோடு பயணப்பட்டுவிட்டான் என்பது.
கப்பலில் பயணப்பட்டவர்கள் கரை இறங்கியபோது எதிர்கொண்டு அழைத்தது ஏவுகணைகளும்
எதிரிகளின் துப்பாக்கித் தோட்டாக்களும்தான்.
தப்பித் பிழைத்த அவர்களை தாவி அணைத்துக் கொள்கிறது கியூபக்காடுகளும் மலை முகடுகளும்.
அப்போதுதான் ‘இனி தன் தோள்கள் சுமக்க வேண்டியது மருந்துப் பையை அல்ல. படைகளைச் சிதற அடிக்கும் துப்பாக்கியை’ என உணர்கிறான்.
படை மருத்துவன் படைத் தளபதியாய் பரிணாமம் பெற்ற நாற்பத்தி எட்டே மாதங்களில் பறந்தோடுகிறான் எதிரி.
விடுதலை கீதம் கியூப மண்ணில் இசைப்படும்போது…
பிப்ரவரி 16, 1959 என்று அறிவிக்கிறது நாட்காட்டி…
பிரதமராகிறார் பிடல்.
எந்த நாட்டிலோ பிறந்து இந்த நாட்டுக்காக உழைத்த அந்த இளைஞனுக்கு நன்றி செலுத்துகிறது நாடே. அவனை வாழ்த்தும் விதமாக கியூபா மக்கள் சே என்று செல்லப் பெயர் சூட்டி குதூகலிக்கிறார்கள்.
குவேரா எனும் பெயரோடு ‘சே’வும் சேர்ந்து கொள்ள சேகுவேரா என புதுப்பெயர் பெறுகிறான் அந்த இளைஞன்.
அந்நிய மண்ணில் பிறந்திருந்தாலும்
தங்களுடையதை கண்ணியமிக்க மண்ணாக்கிக் காட்டிய இளைஞனை கியூப நாட்டினுடைய தேசிய வங்கியின் தலைவராக்குகின்றனர்.
மகிழ்ச்சிக் கூத்தாடுகின்றனர் மக்கள்.
அதை ஒன்று மட்டும் உறுத்தலோடு
உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கிறது. அந்நாட்டின் ருபாய் நோட்டுக்களில் ‘சே’ எனும் தனது செல்லப் பெயரை கையெழுத்தாக இடுகிறார் சேகுவேரா.
அடுத்து அந்நாட்டின் தொழில்துறை தலைவராக்குகின்றனர் குவேராவை.
மகிழ்ச்சிக் கூத்தாடுகின்றனர் மக்கள்.
அதை ஒன்று மட்டும் உறுத்தலோடு
உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கிறது.
புதிய பொறுப்பேற்றுக் கொண்டவுடன் உள்ளுர் தொழில்களை ஊக்குவிக்கும் முகமாக அந்நிய நாட்டு கொள்ளை நிறுவனங்களுக்கு அழகிய பூட்டுகளை அனுப்பி வைக்கிறார் சேகுவேரா.
அதை ஒன்று மட்டும் உறுத்தலோடு
உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கிறது.
அடுத்தடுத்து அநேக சீர்த்திருத்தங்கள்,
அதற்கிடையே திடீர் திடீர் தலைமறைவு.
இதுதான் சேகுவேராவின் தொட்டில் பழக்கம்.
முதல் முறையாக அவர் தலைமறைவானபோது –
சேகுவேராவின் கதையை முடித்துவிட்டார் பிடல் காஸ்ட்ரோ என முதல் பக்க தலைப்புச் செய்திகள்.
மறுப்பார் பிடல்.
மீண்டும் வருவார் சேகுவேரா.
நாட்டின் எல்லையிலிருக்கும் சர்க்கரை ஆலைத் தொழிலாளர்களோடு அத்தனை நாளும் பணியாற்றிவிட்டு.
மறுபடியும் தலைமறைவு.
‘கைது செய்து அடைத்து வைத்திருக்கிறார்கள்’ என அலறும் முதல் பக்கச் செய்திகள்.
மறுப்பார் பிடல்.
மீண்டும் வருவார் சேகுவேரா.
சுரங்கத் தொழிலாளர்களின் தோழனாகச் சில காலம் பணிபுரிந்து விட்டு.
மகிழ்ச்சிக் கூத்தாடுகின்றனர் மக்கள்.
அதை ஒன்று மட்டும் உறுத்தலோடு
உற்றுப்பார்த்துக் கொண்டிருக்கிறது.
திடீரென ஒருநாள் மீண்டும் தலைமறைவு.
ஆனால் இந்த முறை தனது தோழன் பிடலுக்கு ஒரு நெஞ்சுருகும் மடல் ஒன்றை காணிக்கையாக்கிவிட்டு காணாமல் போகிறார்.
‘அயோக்கியர்களால் அல்லல் படும் இன்னொரு தேசத்திற்கு எனது தோள்கள் தேவைப்படுகிறதாம். எனவே பயணப்படுகிறேன். பத்திரமாகப் பார்த்துக்கொள்ளுங்கள் நம் கியூப மக்களை.
வெற்றி நமதே’ என்கிறது அக்கடிதம்.
தொழில் அமைச்சர் பதவியோ,
தேசிய வங்கியின் தலைவர் பதவியோ எதுவுமே அவருக்குப் பொருட்டில்லை. விடுதலைக்கு ஏங்கும் மக்கள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் அவர்களுக்காக போராடுவதே அவர் நேசித்த பெரிய பதவி.
அதை ஒன்று மட்டும் உறுத்தலோடு
உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கிறது.
தனது பதவி விலகல் கடிதங்களை பிடலுக்கு அனுப்பிவிட்டு மாறுவேடத்தில் அவர் பயணப்பட்ட மண்தான் பொலிவியா.
அங்குள்ள உழைக்கும் மக்களது உன்னதப் போராட்டத்தில் சேகுவேரா தன்னையும் இணைத்துக் கொள்ளும்போது…
நாட்காட்டி நவம்பர் 4, 1966 என்று அறிவிக்கிறது.
‘இங்குள்ள போராட்டக்காரர்களுக்கு எப்படித் தெரிந்தது இத்தனை வித்தைகள்’ என விவரம் புரியாமல் வியக்கிறது பொலிவிய அரசு.
ஆனால்
ஒன்று மட்டும் அதை உறுத்தலோடு
உற்றுப்பார்த்துக் கொண்டிருக்கிறது.
போராளிகளின் விதவிதமான தாக்குதல்கள் தொடரத்தொடர தலைசுற்றுகிறது பொலிவியப் படைகளுக்கு.
ஆனால்
ஒன்று மட்டும் அதை உறுத்தலோடு
உற்றுப் பார்த்துக்கொண்டிருக்கிறது.
அலறுகிறது அரசு தாக்குதல்களை தாக்குப் பிடிக்க முடியாமல். உற்று நோக்கிக்கொண்டிருந்த அது அருகில் வந்து ஆறுதல் சொல்கிறது. அந்த அற்புதமான வீரனை வீழ்த்த ஆயுதமும் கொடுக்கிறது.
கியூபா மலைகளில் துவங்கிய யுத்தம் பொலிவியக் காடுகளில் தொடர்கிறது.
உறுத்தலோடு உற்று நோக்கிக் கொண்டிருந்த அது மெல்ல மெல்ல அந்த மாமனிதனை நெருங்குகிறது.
ஒரு அதிகாலைப் பொழுதில் பெரும்படையோடு அந்தப் புரட்சிக்காரன் ஆஸ்த்துமா தாக்குதலுக்கு உள்ளாகியிருந்த வேளையில் சுற்றிவளைத்துக் கைது செய்கிறது அது.
சேகுவேரா கைதான செய்தி எப்படியோ கசிந்துவிட… எட்டுத்திக்கும் செய்தி பறக்கிறது. அவரை விடுவிக்க கோரி மாபெரும் அறிஞர்களும், லட்சக்கணக்கான மக்களும் பங்கு கொண்ட பேரணி லண்டனில் நடக்கிறது.
‘சேகுவேராவை எதுவும் செய்துவிட வேண்டாம்’ என எழுந்த லட்சக்கணக்கானவர்களின் குரல்களை ஏளனம் செய்தபடி ‘அது’ தனது துப்பாக்கியின் திசையை சேகுவேராவை நோக்கி திருப்புகிறது.
துப்பாக்கியின் விசையை அழுத்தப்போகும் வேளையில்
‘ஒரு நிமிடம்…’ என்கிறார் சேகுவேரா.
சுடுவதை தாமதிக்கிறது அது.
இறந்து விடுவோம் என்பது உறுதியாகிவிட்ட வேளையில் அந்த இனியவனின் இதயத்திலிருந்து எழுந்த இறுதி வரிகள் இதுதான்…
“எனது தோழன் பிடலிடம் சொல்…
எனது மரணத்தால் புரட்சியை ஒருக்காலும் ஒடுக்கிவிட முடியாது என்று. அவரைத் தொடர்ந்து போராடச் சொல்.
என் மனைவி ஹில்டாவிடம் மறுமணம் செய்து கொள்ளச் சொல்.
உனது குறி சரியாக இல்லை நேராக எனது நெற்றியைக் குறி பார்.”
குரூரத்துடன் அது விசையைத் தட்டுகிறது.
அந்த மாவீரன் பொலிவிய மண்ணில் வீழ்கிறான்.
அப்போது நாட்காட்டி அக்டோபர் 9, 1967 என அறிவிக்கிறது.
எது அந்த ‘அது’?
உலக மக்களின் கூக்குரலை உதாசீனப்படுத்திய ‘அது’ எது?
அதுதான்: அமெரிக்கா.
மற்றும் அதனுடைய உளவுக்கும்பல்.
அன்புத்தோழி,
அம்மாவீரன் இறந்து முப்பது ஆண்டுகள் கழித்து இன்னொரு அதிசயம் நிகழ்ந்தது. இத்தனை ஆண்டுகளாக சிக்காமலிருந்த அப்புரட்சியாளனது எலும்புக்கூடு கடந்த ஆண்டுதான் கண்டுபிடிக்கப்பட்டு தோண்டியெடுக்கப்பட்டது.
தனது தோழனின் எலும்புக்கூட்டை இன்றைக்கும் கியூபாவினது பிரதமராக இருக்கின்ற பிடல் காஸ்ட்ரோ பெற்றுக்கொண்டு சேகுவேராவின் மகளிடம் ஒப்படைத்தபோது அவர் சொன்னது:
‘மீண்டும் மாவீரனாக அவர் திரும்பி வந்திருக்கிறார்’
இனிய தோழி,
இங்கு சாதிச் சண்டைகளிலும்,
மதப் பாகுபாடுகளிலும்,
எல்லைச் சண்டைகளிலும் எண்ணற்ற ‘மனிதர்கள்’
தங்கள் உயிரைப் போக்கிக் கொண்டிருக்க…
நமது புரட்சியாளனோ
எந்த மண்ணிலோ பிறந்து
எந்த மண்ணிலோ போராடி
எந்த மண்ணிலோ உதிர்ந்தவன்.
ஆம் தோழி,
நமது சேகுவேரா வாழ்ந்ததற்கும் இலக்கணம் படைத்தவர், வீழ்ந்ததற்கும் இலக்கணம் படைத்தவர்.
புரட்சியாளர்கள் புதைக்கப்படுவதில்லை
விதைக்கப்படுகிறார்கள்.
தோழமையுடன்,
பாமரன்.
(இன்று மாவீரன் சே இம்மண்ணில் விதைக்கப்பட்ட நாள்)
நன்றி : “பெண்மணி” வார இதழ் – 1997
Nandru… arumaiyana ezhuthottam… / புரட்சியாளர்கள் புதைக்கப்படுவதில்லை
விதைக்கப்படுகிறார்கள் / – arumai..
பெண்கள் என்றாலே கோலம், சமையல், அழகுக்குறிப்புகள், நவராத்திரி கொலு என்று பெண்களின் ஆற்றலை குறைத்தே மதிப்பிடும் வணிகப்பத்திரிகைகளின் சூழலில் பெண்களை முன்னிறுத்தி எழுதப்பட்ட இந்த கட்டுரை காலத்தின் கட்டாயம்.
//நமது புரட்சியாளனோ
எந்த மண்ணிலோ பிறந்து
எந்த மண்ணிலோ போராடி
எந்த மண்ணிலோ உதிர்ந்தவன்//
மண்ணை கடந்தது மார்க்சியம் என தெளிவாக சொன்னீர்கள்
உணர்ச்சி பிழம்பாய் எழுதி இருக்கிறீர்கள் தோழர்
அருமையாக சொன்னீர்கள் வாழ்த்துக்கள் தோழர்
விழுபவைகள் எல்லாம் விதைகள் அல்ல!!!!!!
விதைக்க பட்டவை மட்டுமே!!!!!!
ஆனால் சே…. நீ விதைக்க பட்டது என் போன்ற இளைஞர்கள் நெஞ்சில்!!!!!!
வணங்குகிறோம் தோழரே….
நீ வாழ்ந்த உலகில் நானும் வாழ்கிறேன் என்பதில் பெருமை எனக்கு…
megamvum niraka
Arumaiyana pathivu. nam mannilum oru Kuvera pirakka mattara endra eekkam ezhugirathu.
idhu pola neriya ezhuthungal . vazhthukkal.
Dear Pamaran, Che Guevara is a great man. The history remebers him.-S.T.Arasu
Che Guevara had some last words before his death; he allegedly said to his executioner, “I know you are here to kill me. Shoot, coward, you are only going to kill a man.” His body was lashed to the landing skids of a helicopter and flown to neighboring Vallegrande where it was laid out on a laundry tub in the local hospital and displayed to the press
-courtesy wikipedia
மரணம் ஒரு வாழ்வை எடுத்துச் செல்ல
உன் உறவின் ஸ்பரிசம் எண்னுள்ளே
பூமியின் இச் சுற்றில் நீ
காத்திறுக்கிறேன் என் சுற்றிற்க்கு
படங்கள் அருமையாக வந்துள்ளது தோழர்
நீண்ட வருடங்களுக்கு பிறகு மீண்டும் உங்களுடைய கடிதம் படித்த்தது மிகவும் உத்வேகமான ஒரு தளத்துக்குள் என்னை இறக்கிவிட்டிருக்கிறது
இது மறுவாசிப்பு
மக்களை நேசித்த ஒரு சிறந்த மனிதனின் வரலாற்றை தங்களுக்கே உரிய ஆர்வம் தூண்டும் வார்த்தைகளில் படிக்க தந்தமைக்கு நன்றி – நாகூர் இஸ்மாயில்
நீண்ட வருடங்களுக்கு பிறகு மீண்டும் உங்களுடைய கடிதம் படித்த்தது மிகவும் உத்வேகமான ஒரு தளத்துக்குள் என்னை இறக்கிவிட்டிருக்கிறது
வணங்குகிறோம் தோழரே….
நீ வாழ்ந்த உலகில் நானும் வாழ்கிறேன் என்பதில் பெருமை எனக்கு…
உலகம் நிலைபெற ‘சே’ வழி நடப்போம்!
//தனது பதவி விலகல் கடிதங்களை பிடலுக்கு அனுப்பிவிட்டு மாறுவேடத்தில் அவர் பயணப்பட்ட மண்தான் பொலிவியா.//
I read some where,After Cuba, he moved to Congo for that people’s liberation…There his effort failed and later he moved to Bolivia..
Very nice to see this article..Thanks to Pamaran.
Hari
சரிதான் நண்பரே…
காங்கோவிலும் அவர் எதிர்பார்த்தது நடப்பதில்லை.
சுருக்கம் கருதியே அதனைத் தவிர்த்திருந்தேன்.
தங்களது சுட்டிக்காட்டுதலுக்கு எமது அன்பான நன்றி.
தோழமையுடன்,
பாமரன்.
vanakkam…..
‘she’ kaddurai miga arumayaka ullathu…
vazhthugal…
m.khathiravan
9321454425
Pamaran avargalukku,
Nija vaazhvin kadhaa naayagan Che pondra maanidan ippuvyil thondriyadhu naam seydha punniyam. Indrum andha maha puratchiyaalan vaazhgiran, aegaadhipathiyaththaiyum, adhigaara meeral seivoraiyum edhirkkum ovvoru manidhanullum.
Thaangal avanai theriyaadha palarukku, thangalukkae uriya saadhuriyaththaal arimugam siydhadhu miga nandru.
Vaazhthukkal
Vanakkam
Pazham
மாவீரர்கள் எப்போதும் புதைக்கப்படுவதில்லை … அவர்கள் விதைக்கப்படுகிறார்கள்
che kuvera indru un vali nadaka nangal irukom.ulagathil amithiyai nilai naati manithanai pirntha ellarukum unnai pol manithavi manathai kondu varuvom.
vanakkam..
idelam padikrapa namalam ena panitrukom… ena pana mudiyum namalanu dan thonudhu… na physics M.Sc 2nd year panren… idelam padika arambicha timela romba insipirationa… puratchi adu idunu bayangrama irunduchu… oru stagela ida padicha virakthidan varudhu.. ama padichu matum na ena kilika poren…!!!!
kelvigallodu..
Thendral
Hats off!
உலக விடுதலை வேட்கையின் அடிநாதமாய் சுழன்றிசைத்த மாவீரன்.