திரையுலக தருமி – ‘மேதை’ மணிரத்னத்துக்கு,

செளக்யம்களா…?

இப்பெல்லாம் யாருக்காவது கடுதாசி எழுதறதுன்னாலே கையெல்லாம் கிடுகிடுன்னு நடுங்குதுங்க. எந்த மகராசரு எதுக்குப் பெட்டிசன் குடுப்பாங்களோன்னு ஒரே பயம்மா இருக்குதுங்க…

அப்புறம்… உங்க ‘தேசபக்தி வியாபாரமெல்லாம்’ நல்லபடியா நடக்குதுங்களா…? நம்முளுக்குப் பொழுதுபோக்கே படம் பாக்குறதுதாங்க. மொதல்ல எல்லாம் ‘ஜகன் மோகினி’, ‘அபூர்வ சக்தி 369’ மாதிரிப் படங்கன்னா எனக்குக் கரும்பு தின்ன மாதிரிங்க. ‘ஆட்டுக்கார அலமேலு’வ பதிமூணு தடவ பாத்தேன்னா புரிஞ்சுக்கங்களேன். நான் எந்தளவுக்கு சினிமாவெறியன்னு.

இப்புடி இருந்த என் வாழ்க்கைல…

திடீர்னு ஒருநாள்…

கீழ்வானத்துல ஒரு வால் நட்சத்திரம் தெரிஞ்சுதுங்க… வெளில வந்து பாத்தப்ப… எதுக்கால முண்டாசு கட்டீட்டு மூணு பேர் வந்தாங்க… ‘உன் சினிமா உலகத்த தூக்கி நிறுத்துறதுக்கு ஒரு புதிய குமாரன் பொறந்திருக்கான்’னாங்க.  யாரு?ன்னு கேட்டேன். ‘மணிரத்னம்’னு உங்க பேரச் சொன்னாங்க. அப்ப வந்ததுதாங்க என் சினிமா வாழ்க்கைல வெளிச்சம். அதுக்கப்புறம் நான் நம்ம ஊட்ல கரண்ட்டு பில்லே கட்டுலேன்னா பாத்துக்கங்களேன்…

சீட்டுக் கம்பெனி மாதிரி தவணை முறைல சண்டை கட்டீட்டு நின்ன என் சம்சாரம் திரும்பி வந்து பொழப்புத்தனம் நடத்தறதுக்கே காரணம் உங்க ‘மெளன ராகம்’ படந்தாங்க. புருசம் பொண்டாட்டி உறவுக்கே பாலம் போட்ட மகராசன் மக்கள் பிரச்சனைய படமா எடுத்தா எப்புடி இருக்கும்னு யோசிச்சதுதான் தாமதம்… ‘கலவப்படாத சசோதரா’ன்னு நீங்க அடுத்தடுத்து எடுத்துட்ட அத்தனை படங்களும் மக்கள் பிரச்சனைதாங்க.

ஆனா… இந்தக் கலாரசனையத்த கந்தசாமி இருக்கானே அவன் சொல்றான்… “மக்கள் பிரச்சனைய அவரு எடுத்தாரோ இல்லியோ… அவுரு எடுத்ததுனால மக்களுக்கு வந்த பிரச்சனைகதான் அதிகம். ‘பிரச்சனையைப் பத்தி படம் எடுக்குறேன்… எடுக்கறேன்னு’ இவுரு கிளப்புன பிரச்சனைகதான் அதிகம்”கறான்.

நான் விடுவனா…?

கந்தா!… ஊருக்குள்ள ஒருத்தன் உருப்படியா இருந்தா புடிக்காதே உனக்கு. ‘ரோஜா’ன்னு ஒரு படம் வந்துச்சே பாத்தியான்னேன்.

‘எது… அந்த டாக்குமெண்டரி படமா…?’

‘ரோஜா’ உனக்கு செய்திப்படமா… காசுமீர்த் ‘தீவிரவாதிக’ இந்த நாட்ட எப்படிச் சீரழிக்கிறாங்க… அதனால நம்முளுக்கு எத்தனை சிரமம்னு தெள்ளத் தெளிவா சொன்னாரு நம்மாளு அதுல. அத உடு… புதுசா கல்யாணங் கட்டிக்கிட்ட ஜோடி அங்க போயி கொஞ்ச நேரங்கூட கொஞ்ச முடியாம… தட்டத்துல வெச்ச பாயாசத்த நக்க முடியாம தட்டிப்பறிச்ச மாதிரி கடத்தீட்டுப் போறானுங்களே அந்தப் பாவிங்க… அந்த ரோசா புருசனப் பறிகுடுத்துட்டுப் படறபாடு இருக்கே… அதெல்லாம் பட்டாத்தான்யா தெரியும் உனக்கு… அதப்போயி செய்திப்படம்கற… உனக்கெல்லாம் சினிமான்னா என்னன்னு தெரியுமா? ஓட்டச் சட்டியவே பாத்த உனக்கு கம்ப்யூட்டர்ன்னா என்ன? கம்ப்யூட்டர் கிராபிக்ஸ்ன்னா என்ன எழவுன்னாவது தெரியுமா?ன்னு புடுச்சேன் ஒரு புடி.

‘படத்துக்கு நடுவுல ஒரு பொம்பளயக் காமிச்சா போதுமே வாயில ஜொள்ளுட்டுட்டு பிரச்சனையவே அம்போன்னு உட்டுருவ நீயு. நாயிக்கு சீலகட்டி உட்டா இவனுங்க நாலு மைலுக்குத் தொரத்துவானுங்கன்னு தெரிஞ்சுதான் உன் டைரக்டரு புருசன் பொண்டாட்டிக்கு இடைல இந்தப் பிரச்சனையை நொழைச்சிருக்கார்யா. ‘காசுமீர்ல பொறந்தவனெல்லாம் தீவிரவாதி… எப்பவுமே கக்கத்துல குண்ட வெச்சுக்கிட்டுத்தான் சுத்துவான்… அரணாக்கவுத்துல கூட அணுகுண்ட வெச்சிருப்பான்… குறிப்பா தாடி வெச்சிருப்பான்’னு உங்காளு உடறாரே உடான்ஸ். இதுதான்யா வடிகட்டின பொய்யு. வி.எம்.தார்குண்டே-ன்னு ஒரு பெரிய நீதிபதி சொன்னாரு “அங்கே மனித உரிமைங்கற வார்த்தைக்கே அர்த்தமில்லாமப் போயிடுச்சு… ‘தீவிரவாதிகளத் தேடுறோம்’கற பேர்ல நம்மாளுக அடிக்கிற லூட்டி தாங்கல. சாதாரண சனங்க சாப்பாட்டுப் பொட்டலம் வாங்கக் கூட வெளீல வரமுடியல. ரோஜாவின் ராஜா நேரு காலத்துல இருந்து ‘பொது வாக்கெடுப்பு நடத்தறோம்… நடத்தறோம்னு சொல்றாங்களே ஒழிய அத நடத்துன வழியக்காணோம்’ன்னு சொல்றாரு.

இந்தக் கர்மமெல்லாம் உங்க மணிரத்னத்துக்கு தெரியாதப்ப… காலைல எந்திரிச்சா ‘கன்னித்தீவு’ படிக்கிற உனக்கு இது எங்கே வெளங்கப் போகுது’ங்கிறான்.

அதுசரி… படத்துக்கு யாரு வசனம் தெரியுமில்ல… நம்ம சுஜாதாதான்.

‘யாரு… விக்ரம் படத்துல வேல செஞ்சாரே அவரா?’ன்னான்.

ஆமா, அவுரேதான்னேன்.

‘அப்பச் சரி… திருடனப்புடி திருடனப்புடின்னு கத்தீட்டு திருடனே ஓடுன கதை தான். அந்த மகராசன் ‘விக்ரம்’ படத்துலயே… ஏவுகணையக் கடத்தீட்டுப் போறவன் பிரான்சிஸ் அற்புதராஜ்ங்கிற ‘கிருஸ்தவன்’. அத ஒளிச்சு வைக்க எடம் குடுக்கிறவன் ‘சலாமியா’யாங்கற நாட்டுக்கார ‘பாய்’.  ஏவுகணையை மீட்டுக் கொண்டாறவன் ‘இந்து’ன்னு ‘புரட்சிகரமா’ எழுதுன புண்ணியவான். கல்யாண ஊட்லயே கட்டீட்டு அழுகிற உங்க சுஜாத்தா சாவூட்ல சும்மாவா நிப்பாரு’ங்கிறான் கந்தசாமி.

‘ஒண்ட வந்த பிடாரி ஊர்ப்பிடாரிய விரட்டுன கதை மாதிரிதான்… ஆளே இல்லாத ஊர்ல ஒரு பொள்ளாச்சி ஜோசியக்காரன்… சுந்தரபாண்டிபுரத்திலிருந்து வந்த ரோசா… கம்ப்யூட்டர் மேதை ரிஷிகுமார்… தலைப்பாகை கட்டுன சிங்குக…ன்னு ஒரே வெளி மாநிலப் பட்டாளந்தான் கண்ணுக்குத் தெரியுதே ஒழிய காசுமீர்க்ாரன் ஒருத்தனையும் காணோம். இதுகெல்லாம் போயி ஊரையே நெறைச்சிட்டதாலதான் அவனே நாடு வேணும்னு போராடறான் போலிருக்கு…’ ங்கிறான் கந்தசாமி.
சரி.. சரி.. நீ பேசறதக் கேட்டா தலையே சுத்துது. அப்ப அந்தப் படத்துல, ஒண்ணுமே இல்லேங்கறயா…? நம்ம சத்தியவான் சாவித்திரி மாதிரி கதாநாயகி ரோசா மத்திய மந்திரி கிட்டயே நேரடியா சண்டப் போட்டு புருசன மீட்டுக்கிட்டு வர்றாளே… அந்தத் துணிச்சலயாவது பாராட்டுய்யான்னேன்.

அந்தக் கலாரசனையத்த கபோதி அதையும் விட்டு வைக்கல.

‘யோவ்… நம்ம ஊர் மீனவனுங்கள மாசந் தவறாம சிங்களக் கடற்படை புடுச்சுக்கிட்டு போயி இலங்கைல அடைச்சு வைக்கறானுங்களே அதாவது தெரியுமான்’னான்.

தெரியும்னேன்.

“உங்க ரோசா மாதிரி எத்தனை ரோசா மத்திய மந்திரியப் பாக்க முடிஞ்சிருக்கு? புருசன மீட்டுக் தாங்கன்னு சண்டப் போட முடிஞ்சிருக்கு? மந்திரி என்னய்யா மந்திரி… மீனவனுங்களோட சம்சாரங்க அந்த ஏரியா வட்டாரச் செயலாளரக் கூட பாக்க முடிஞ்சதில்லய்யா. அதுதான் எதார்த்தம். பத்து நாளு பாக்க வேண்டியது… அதுக்கு அப்புறமும் வர்லேன்னா புருசன் படத்துக்கு மால போட்டு பொட்டு வைக்க வேண்டியது. இதுதான் இந்த நாட்டோட நெலமை. மீறிக் கேட்டா… உனக்கு மீன் புடிக்க கடல உட்டா வேற இடமே இல்லியாம்பீங்க… மீறி மீன் புடிச்சா ‘மீண்டும் ஆத்துலயே விடச் சொல்லி’ பாட்டு வேற எழுதுவீங்க. உங்கள மாதிரி ஜென்மங்களுக்கெல்லாம் எந்த எழவும் வெளங்காததுனாலதான் உங்க ‘மேதைக’ காலம் ஒடுது… அவ்வளவுதான் சொல்லுவேன்… ஆள உடு’ன்னு கோபமா கெளம்பீட்டான். இவன் சொன்னது எதுவும் வெளங்காம ராத்திரியெல்லாம் புரண்டு புரண்டு படுத்ததுதான் மிச்சம். மொத்தத்துல அன்னைக்கு சிவராத்திரிதான்.

இந்த ‘சீட்டாடற கிளப்பு’ மாதிரி ‘சினிமா கிளப்பு’ ன்னு ஒண்ண வெச்சிருக்கானுக சில பேரு நம்மூர்ல. நம்ம சீனிவாசன் கூப்புட்டானேன்னு தெரியாத்தனமா அதுல போயி மாட்டிக்கிட்டேன் ஒரு நாளு. அதென்னவோ ‘பல்கேரியாப் படம்’ன்னு பல்லு வெளக்கறதையே பத்து நிமிசம் காமிச்சிக்கிட்டிருந்தாங்க. உட்கார முடியல. இதெல்லாம் படமாடா சீனான்னு கேட்டேன். ‘அதெல்லாம் உனக்கு புரியாது… உங்க ‘மேதை மணிரத்னம்’ கூட இந்த மாதிரி படத்துல இருந்துதான் உருவிப் போட்டுக்குவாரு தெரியுமா’ன்னான்.

எத வேணும்னாலும் சொல்லு… ஆனா எங்காள மட்டும் திருடறாருன்னு சொல்லாதே… அவரு ‘சுயம்பு’ மாதிரி… மண்டபத்திலிருந்து எவனாவது எழுதுனத தள்ளீட்டு வர்ற தருமியில்ல அவரு… புருஞ்சுக்கோன்னேன்.

அவ்வளவுதான்… பின்னி எடுத்துட்டான் மவன். அதென்னமோ ‘காட் பாதர்’னு ஒரு இங்கிலீசுப் படமாமா… அதுல மாருல பிராண்டுனவனோ… கால்ல பிராண்டுனவனோ? நடிச்சதாமா… அதைய அப்படியே அப்பட்டமா ‘நாயக’னாக்கீட்டீங்களாமா…அதைய மட்டுமில்ல… உங்களோட படத்துல… அதான் ‘அஞ்சலி’ல வானத்துல கொழந்தைக பறக்கறாப்பல ‘மேஜிக் ஜர்னி’ன்னு ஒரு பாட்டு வருமில்ல அதுவும் ET ங்கற இங்கிலீஷ் படத்துல இருந்து கத்தரிச்சு எடுத்து அப்படியே ஒட்ட வெச்சதுதான்’கிறான் சீனி. ‘உங்காளு மரியாதைக்குக் கூட அந்தப் பாட்டுக்கு இடைய ‘நன்றி: ஸ்பீல்பெர்க்’ன்னு ஒரு சிலேடு போடல’ன்னு பொளந்து கட்டறான்.

ஒரு நாள் உங்க ‘திருடா திருடா’ங்கற கலைப் படத்தப் பாக்கறதுக்காக தியேட்டருக்குள்ள நுழையறப்ப சீனிவாசன் எதிர்ல வர்றான். ‘தொலைஞ்சோம்’னு நெனச்சேன்.

‘என்ன படத்துக்கா?’ன்னான்.
இல்ல பாத்ரூமுக்குன்னேன்.

“கிளிப் ஏங்கர் பாத்தியா?”ன்னான். பாத்தேன்னு சொன்னதுதான் தாமதம். ‘அப்ப திரும்பி நட… அத பாத்தா இதப்பாக்க வேண்டாம்… இதப் பாத்தா அதப் பாக்க வேண்டாம்’ன்னு சொல்லி கழுத்துல கைய வெச்சி தள்ளீட்டு வந்திட்டான்.

“இப்படியே மத்த படங்கள்ல இருந்து ‘சுடறது’னால உங்க ‘சுயம்பு’வப் பார்த்தாலே வெளிநாட்டு டைரக்டருக எல்லாம் துண்டக் காணோம். துணியக்காணோம்னு ஓடறான். ஓடறப்பவும் கவனமா அவனுக கதைய எடுத்து கிச்சுல வெச்சுக்கிட்டு ஓடறான் தெரியுமா உனக்கு?”ங்கறான்.

டேய்… சீனா… நான் உன்ன மாதிரி ‘அறிவுசீவி’ இல்லடா சராசரிக்கும் கீழான பாமரன். படம் பார்க்க உடுன்னேன்.

“பைத்தியம்னு சொன்னாலே போதும். அதுல என்ன சராசரிக்கும் கீழான பைத்தியம்… சராசரிக்கும் மேலான பைத்தியம்னு என்ன வேண்டிக் கிடக்குது… நீ மொதல்ல வீட்டுக்கு நட”ன்னு தொரத்தீட்டான்.

வாராது வந்த மாமணீன்னு சொல்லுவாங்களே. அந்த மாதிரி வந்து சேந்துதுங்க உங்க பம்பாய். அதப்பாத்து அப்படியே கொந்தளிச்சுப் போயிட்டேன். படம் பாக்கப் பாக்க ரெண்டு கண்ணுல இருந்தும் தாரை தாரையா கண்ணீர் வருது. இந்த இந்துக்களும் முஸ்லீம்களும் வெறிபுடுச்ச நாய்கணக்கா வெட்டீட்டு சாகறானுக. படம்னா இதுதான் மேதையே படம். படம் முழுக்க ரத்தம்… தீ… கூச்சல்… பொணம்ன்னு அதப் பாத்து பலநாள் தூக்கமே வரல்லே. மனசு மேல ஒரு பெரிய பாறாங்கல்லக் கொண்டாந்து வெச்ச மாதிரி இருந்துச்சு. அப்பவே உங்களுக்கு ஒரு கடுதாசி போடலாம்னு நெனைச்சேன். நான் நெனச்சது இந்தக் கலாரசனையத்த கந்தசாமிக்கு எப்பிடித்தான் தெரிஞ்சுதோ… அப்பப்பாத்து வந்து தொலைச்சான். டேப்புல வேற அவன் வந்து தொலைக்கிற நேரமாப் பாத்து ‘அந்த அரபிக்கடலோரம்’ பாடீட்டிருக்க… இதுபோதாதா நம்ம க.க.கந்தசாமிக்கு…

ஆனா… அதிசயமா ‘படம் கொஞ்சம் பரவால்ல’ன்னான்.
அப்பாடான்னு சொல்லி வாய மூடறதுக்குள்ள…

‘ரோஜாவைவிட பரவால்ல… இதுல வெஷம் கொஞ்சம் கம்மி’ன்னான்.

எனக்கு வந்துதே கோபம்…

(இறுதிப் பகுதி நாளை……)

15 thoughts on “திரையுலக தருமி – ‘மேதை’ மணிரத்னத்துக்கு,

 1. /ஒரு நாள் உங்க ‘திருடா திருடா’ங்கற கலைப் படத்தப் பாக்கறதுக்காக/
  /“கிளிப் ஏங்கர் பாத்தியா?”/
  ennaathu ?????
  இதெல்லாம் தங்களின் பழைய சரக்கா?..அதான் குமுதத்தில நல்லா வில போச்சில்ல ..இப்ப புதுசா ஏதாவது எழுதலாமில்ல..

 2. பாமரன்
  வணக்கம்!
  குமுதத்தில் வந்தபோதே இந்தக் கட்டுரையைப் படித்துள்ளேன்.
  இதில் எனக்கு நிறைய கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், என்னைத் தங்களுக்கு மறுமொழியிடச் செய்த விஷயம் – ஒரு சுவாரசியமான ஒற்றுமை!
  என்னவென்றால், பாரத்வாஜ் ரங்கன் ஃபிப்ரவரியில் ஒரு கட்டுரை வரைந்திருந்தார் – மணிரத்னத்தைச் சிலாகித்து (http://baradwajrangan.blogspot.com/2007/02/mani-ratnam-madras-male.html)
  அவர் உபயோகப்படுத்திய அதே புகைப்படம்தான் (india4u புகைப்படம்) தங்கள் வலைப்பதிவில் இருப்பதும்! ஒரே புகைப்படம்! இரு துருவங்களான விமர்சனங்கள்! Interesting.
  மற்றபடி தொடர்ந்து எழுதுங்கள். தங்களின் பகிரங்கக் கடிதங்கள் புத்தகமாய் வந்த ஞாபகம் (25/- ?). இன்னும் விற்பனையிலுள்ளதென்றால் தெரிவிக்கவும். நெடுநாளாய் படிக்க விட்டுப்போன புத்தகங்களில் அதுவும் ஒன்று.

  அன்புடன்
  வெங்கட்ரமணன்

 3. Com. Pamaran,

  “மாருல பிராண்டுனவனோ… கால்ல பிராண்டுனவனோ?” . We cannot ignore Marlon Brando like anyother kuthadis. I am sure that you are aware that Marlon Brando is the only revolutionary film star in the whole planet who declined to accept his 2nd Oscar award and here is that intresting reason why he refused to accept Oscar award while OLKA NAYAGAN HAMALA HASSAN, psuedointellect’s director Maniratnam are dying to win one OSCAR award before they die ….

  Marlon Brando’s Unfinished Oscar Speech

  On March 27, 1973, a young Indian woman named Sasheen Littlefeather took the stage during the Academy Awards to decline Marlon Brando’s Best Actor Oscar for The Godfather. “Marlon Brando … has asked me to tell you, in a very long speech which I cannot share with you presently—because of time—but I will be glad to share with the press afterward, that he must… very regretfully cannot accept this very generous award. And the reason for this being… are the treatment of American Indians today by the film industry… excuse me… and on television in movie re-runs, and also the recent happenings at Wounded Knee. I beg at this time that I have not intruded upon this evening and that we will, in the future…our hearts and our understanding will meet with love and generosity. Thank you on behalf of Marlon Brando.”

  Some in the audience applauded, but most booed. While presenting the Best Picture Award, Clint Eastwood wondered if it should be presented “on behalf of all the cowboys shot in John Ford westerns over the years.” Michael Caine then critized Brando for “letting some poor little Indian girl take the boos,” instead of appearing and taking the boos himself.”

  After the ceremony, Littlefeather shared the full text of Brando’s statement with the press.

  THE GODFATHER
  Unfinished Oscar Speech
  By MARLON BRANDO

  For 200 years we have said to the Indian people who are fighting for their land, their life, their families and their right to be free: ”Lay down your arms, my friends, and then we will remain together. Only if you lay down your arms, my friends, can we then talk of peace and come to an agreement which will be good for you.”

  When they laid down their arms, we murdered them. We lied to them. We cheated them out of their lands. We starved them into signing fraudulent agreements that we called treaties which we never kept. We turned them into beggars on a continent that gave life for as long as life can remember. And by any interpretation of history, however twisted, we did not do right. We were not lawful nor were we just in what we did. For them, we do not have to restore these people, we do not have to live up to some agreements, because it is given to us by virtue of our power to attack the rights of others, to take their property, to take their lives when they are trying to defend their land and liberty, and to make their virtues a crime and our own vices virtues.

  But there is one thing which is beyond the reach of this perversity and that is the tremendous verdict of history. And history will surely judge us. But do we care? What kind of moral schizophrenia is it that allows us to shout at the top of our national voice for all the world to hear that we live up to our commitment when every page of history and when all the thirsty, starving, humiliating days and nights of the last 100 years in the lives of the American Indian contradict that voice?

  It would seem that the respect for principle and the love of one’s neighbor have become dysfunctional in this country of ours, and that all we have done, all that we have succeeded in accomplishing with our power is simply annihilating the hopes of the newborn countries in this world, as well as friends and enemies alike, that we’re not humane, and that we do not live up to our agreements.

  Perhaps at this moment you are saying to yourself what the hell has all this got to do with the Academy Awards? Why is this woman standing up here, ruining our evening, invading our lives with things that don’t concern us, and that we don’t care about? Wasting our time and money and intruding in our homes.

  I think the answer to those unspoken questions is that the motion picture community has been as responsible as any for degrading the Indian and making a mockery of his character, describing his as savage, hostile and evil. It’s hard enough for children to grow up in this world. When Indian children watch television, and they watch films, and when they see their race depicted as they are in films, their minds become injured in ways we can never know.

  Recently there have been a few faltering steps to correct this situation, but too faltering and too few, so I, as a member in this profession, do not feel that I can as a citizen of the United States accept an award here tonight. I think awards in this country at this time are inappropriate to be received or given until the condition of the American Indian is drastically altered. If we are not our brother’s keeper, at least let us not be his executioner.

  I would have been here tonight to speak to you directly, but I felt that perhaps I could be of better use if I went to Wounded Knee to help forestall in whatever way I can the establishment of a peace which would be dishonorable as long as the rivers shall run and the grass shall grow.

  I would hope that those who are listening would not look upon this as a rude intrusion, but as an earnest effort to focus attention on an issue that might very well determine whether or not this country has the right to say from this point forward we believe in the inalienable rights of all people to remain free and independent on lands that have supported their life beyond living memory.

  Thank you for your kindness and your courtesy to Miss Littlefeather. Thank you and good night.

  Com. Pmaran, won’t you agree that he is the real hero of the people?

 4. பாமரன் அவர்களே, தங்களின் பழைய வலைப்பதிவான “கோவை பாமரனி”ல் எழுதியதை திரும்ப திரும்ப படிப்பது எனது வழக்கம். இப்பொழுது காணக் கிடைக்க வில்லையே, இந்த புதிய வலைப்பதிவில் அதனை இணைக்கும் எண்ணம் தங்களுக்கு உள்ளதா? – நாகூர் இஸ்மாயில்

 5. 🙂
  சிரிப்பு சிரிப்பு வருது…
  சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது,
  சின்ன மனுசன் பெரிய மனுசன்
  செயலைப் பார்க்க சிரிப்பு வருது!

 6. என்ன பாமரன் சார், மணிரத்தினத்துக்கு எழுதுன கடிதத்துல சுஜாதாவயும் போட்டுத் தாக்கியிருக்கீங்க? ஆனா அவரு அத பெரிசா எடுத்துக்காம “இன்னா செய்தாரை ஒறுத்தா” ப்ரின்சிப்பிள கடைபிடிச்சு உங்கள கதாநாயகனாக்கி விட்டுட்டாரு, பாத்தீங்களா? அதான் சார், அந்நியன் படத்துல நீங்கதான ஹீரோ. நீங்க பாமரன், கந்தசாமி, சீனிவாசன்னு பெர்சனாலிட்டிய மாத்தி, மாத்தி போட்டத பாத்துட்டுதான் அவரு அம்பி, ரெமோ, அந்நியன்னு கதாபாத்திரங்கள உண்டு பண்ணிட்டார். நீங்க ‘விக்ரம்’ படத்த வச்சுத்தான அவர தாக்கினீங்க. அதான் அந்நியன் படத்துல விக்ரம கதாநாயகனாவும் ஆக்கிட்டார். என்ன சார், நம்ப முடியலியா? என்னத்த எழுதினாலும் நம்பறதுக்கு ஆள் இருக்கற ஒலகத்தில எத வேணா எழுதலாம்லா சார், அதான் நானும் எழுதறேன், நீங்களும் எழுதறீங்க.

  நீங்க, அதாவது நீங்க இல்ல சார், கந்தசாமிங்கற ஒங்க மாத்து பர்சனாலிட்டி “காஸ்மீர்ல மனித உரிமைங்கற வார்த்தைக்கே அர்த்தமில்லாமப் போச்சு” அப்படின்னு தார்குண்டேன்னு ஒருத்தர் போட்டதா சொல்லப்படற குண்ட எடுத்து வீசுறாரு. கூடவே, நம்மாளுங்க, அதாங்க நம்ம அரசாங்கம், அங்க அராஜகம் பண்ணுது, அது, இதுனு பேசுறாரு. அத நான் இல்லன்னு சொல்லலீங்க.

  தீவிரவாதி மணிரத்னம் ரோசாவுல காட்டுன மாதிரி தாடி வச்சிகிட்டு, துப்பாக்கிய தூக்கிகிட்டு, “நாந்தான் தீவிரவாதி”ன்னு நெத்தில எழுதி ஒட்டாத குறையா வர்றதில்லை. அவம்பாட்டுக்கு கமுக்கமா வருறான். சோலிய தீத்துட்டு போறான். பக்கத்து நாட்டுல இருந்து, இன்னொரு பக்கத்து நாட்டுக்குப் போறான். அங்கருந்து நம்ம நாட்டுக்கு வர்ற ப்ளேன கடத்துறான். ப்ளேன்ல அவன எவனாவது எதுத்தா கத்தியால குத்தறான். ப்ளேன்லர்ந்து செத்தவன் பாடிய முனிசிப்பால் லாரிலெர்ந்து நாயத் தூக்கிப் போடற மாதிரி எறிஞ்சுட்டு போறான். நாடு விட்டு நாடு போறான். அவனுக்கு மாலை போட்டு மரியாத குடுக்க நாடுகளும் இருக்கு. அங்க போயிட்டு “காஸ்மீர்ல நீ கைது பண்ணி வச்சிருக்கீல்ல அந்த தீவிரவாதிகள விடுவி” அப்டிங்கறான். இந்த மாதிரி ஆளுங்க கூட டீல் பண்ணும் போது சம்பந்தமில்லாதவங்களுக்கும் சேதாரம் வரத்தான் செய்றது. வராம இருந்தா நல்லது. வர்றத கொறைக்கிறது நல்லது. ஆனா, சொல்றது சுலபம்; செய்யறது கடினம்.

  தலப்பா கட்டின சிங்குகள பத்திச் சொல்லியிருக்கீங்க. பதினஞ்சு, இருவது வருசத்துக்கு முன்னால அவங்க எடத்துலயும் நீங்க காஸ்மீர்ல இப்ப நடக்கதுன்னு சொல்ற அதே பிரச்சினையெல்லாம் அங்கயும் இருக்கத்தான் செஞ்சுச்சு. எதுக்கு இந்த பிரச்சினை, தீவிரவாதிகள் விரும்பற மாதிரி பேசாம பஞ்சாப தனி நாடா குடுத்துடலாமே அப்படின்னு சொல்ற ஆட்களும் இருந்தாங்க. ஆனா, பெரும்பாலானவங்க பதறுனாங்க. அடடா, இந்த சிங்குகள் நாட்டுக்கு எவ்வளவு செஞ்சவங்க. இவங்க நம்ம விட்டு பிரிஞ்சு போலாமா அப்படின்னு நெனச்சாங்க. நீங்க சொன்ன “நம்மாளுங்க” தப்பு அப்பப்ப பண்ணுனாலும் கரெக்டானதும் பண்ணுனாங்க. பிரச்சினை தீந்துச்சு. இன்னிக்கு தலப்பா கட்டுன ஒரு சிங்குதான் நாட்டுக்கே தலைவரா இருக்கார். அதேதான் காஸ்மீர்லயும் நடக்கணும்னு நானும் கனா கண்டிட்டு இருக்கேன்.

  காஸ்மீரப் பத்தி நெனைக்கும் போது ஒண்ண மறந்துராதீங்க. காஸ்மீர், காஸ்மீர்னிட்டு ஒரு நாடு அறுவது வருச பசியோட இருக்கு. அது கைல கெடச்சா காஸ்மீரும், காஸ்மீரிகளும் இப்ப இருக்கறத விட என்ன ஆகும், ஆவாங்கன்னு நெனச்சுப் பாருங்க.

  நீங்க அங்கங்க நடக்கற மனுச உரிம விசயங்கள எடுத்துச் சொல்லுங்க, வேண்டாங்கல. அது நல்ல விசயம். ஆனா, எல்லாப் பிரச்சனைக்கும் இரண்டு பக்கம் இருக்குது. அதனால மறுபக்கத்தையும் கணக்கில எடுத்துக் கிட்டு எழுதுனீங்கன்னா நல்லா இருக்கும்.

  இப்படிக்கு,

  நெசமான பாமரன்

 7. கோகிலா என்ன செய்து விட்டாள் என்ற ஜெயகாந்த்னின் குறுநாவல் படித்த்தில்லையா…படித்த எனக்கு அதுதான் மெளனராகம் என்று பட்டது!

 8. ஒரு கலைத்தாயின் முதல் புதல்வனை முதுகில் புரண்டிய அந்த கந்தசாமி ரொம்ப லொள்ளு புடிச்ச சாமியா இருப்பானாட்ட..

 9. மீனவனுங்களோட சம்சாரங்க அந்த ஏரியா வட்டாரச் செயலாளரக் கூட பாக்க முடிஞ்சதில்லய்யா. அதுதான் எதார்த்தம். பத்து நாளு பாக்க வேண்டியது… அதுக்கு அப்புறமும் வர்லேன்னா புருசன் படத்துக்கு மால போட்டு பொட்டு வைக்க வேண்டியது. இதுதான் இந்த நாட்டோட நெலமை. மீறிக் கேட்டா… உனக்கு மீன் புடிக்க கடல உட்டா வேற இடமே இல்லியாம்பீங்க… மீறி மீன் புடிச்சா ‘மீண்டும் ஆத்துலயே விடச் சொல்லி’ பாட்டு வேற எழுதுவீங்க.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s