திரையுலக தருமி – ‘மேதை’ மணிரத்னத்துக்கு,(கிளைமேக்ஸ்)

நேற்றைய பதிவின் தொடர்ச்சி 

‘பம்பாய்’ உனக்கு விஷமா? உன்னையெல்லாம் விஷம் வெச்சுத்தான் காலி பண்ணனும்னு கோபத்துல அவன் சட்டையவே எகிறிப் புடுச்சிட்டேன்.

‘அய்யோ… என் சட்டைய உடு…
என் முதுகெலும்பு… முதுகெலும்பு’ன்னு கத்தறான்.

முதுகெலும்பப் பத்தி நீ பேசாத… இந்தக் கோடம்பாக்கத்துலயே எங்காளுக்கு மட்டும்தான் இருக்கு அது… மொதல்ல சொல்லு அதுல என்ன விஷம்ன்னு…?

“சரி… சொல்றேன்… சொல்றேன்…
இப்போ
குப்புசாமி மயக்கம் போட்டு விழுந்தான் – சுப்ரமணி சோடா குடுத்தான் அப்படீங்கிறத… திருப்பிப் போட்டு படி…
சுப்ரமணி சோடா குடுத்தான் – குப்புசாமி மயக்கம் போட்டு விழுந்தான்னுவரும். கேக்கறவனுக்கு… இவன் சோடா குடுத்ததுனாலதான் அவன் மயக்கமே போட்டானோன்னு சந்தேகம் வந்துரும்.
அந்த மாதிரி…
வடநாட்டுல இருந்த மசூதிய இடிக்கறதுக்கு முன்னாடி
என்னென்ன அட்டகாசம் நடந்துச்சு…?
இந்த நாட்டோட முப்படைகளும் நின்னுக்கிட்டு இருந்தப்பவே
அவுங்களால எப்படி இடிக்க முடிஞ்சது…?
அவுங்க கையில துப்பாக்கி வெச்சிருந்தாங்களா…
இல்ல கைராட்டையும் பஞ்சும் வெச்சிக்கிட்டிருந்தாங்களா…?
இடிச்சதும் இல்லாம டிசம்பர் 7 ஆம் தேதி வெற்றி ஊர்வலம் விட்டாங்களே… இதையெல்லாம் மொதல்ல உங்க மேதை சொல்லாம…
இடிச்சதுக்கப்புறம் கதைய ஆரம்பிக்கறாரே…
அதுதான் வருத்தம்… அவ்வளவுதான்’

ம்……. அதையெல்லாம் சொல்லணும்னா…
அந்தக் காலத்துல விடிய விடிய நடக்குமே
தெருக்கூத்து அதுலதான் சொல்ல முடியும்.
மூணு மணி நேர படத்துல முடியாதுன்னேன்.

சரி வேண்டாம்…
சிவசேனா தலைவர் பால்தாக்கரே
அந்தக் கலவரத்துக்கு முன்னாடி தன்னோட
‘சாம்னா’ங்கிற பத்திரிக்கையில
‘இனி வரும் நாட்கள் நமக்கானவை’ன்னு எழுதி
கலவரத்துக்குப் பச்சைக்கொடி காட்டுனதையும்…
அதுக்கு முன்னாடியே ‘சிவசேனா’ கட்சிக்காரங்க
‘வீட்டு வசதி வாரிய ஊழியர்கள்’ மாதிரி
வீடு வீடாப் போயி எங்கெங்கே ‘பாய்க’ குடியிருக்காங்கன்னு
பட்டியல் எடுத்ததையும் துல்லியமா
‘இந்திய மக்கள் மனித உரிமைகள் குழு’ சொல்லுச்சே
அதையாவது காட்டீருக்கலாமில்ல…
பிரச்சனைக்கு எது காரணமோ அதக் காட்டாம…
முக்கியக் காரணத்தை கை கழுவீட்டு
பிரச்சனைய மட்டும் படம் எடுக்கறது
எல்லாத்துக்கும் சுலபம்தான்.
அட… இதுவாவது கெடக்கட்டும்…
பம்பாய் கலவரத்துல இந்துக்களாலேயே
பல தமிழர்கள் கொல்லப்பட்டாங்களே…
ஆயிரக்கணக்கில் தமிழர்கள் அகதியா அடிச்சு தமிழகத்துக்குத்
துரத்தப்பட்டாங்களே… அதப்பத்தி… ஒரு இடத்துல…
ஒரே ஒரு இடத்துல… காட்டீருக்கலாமில்ல” அப்படீங்கறான்.

இங்கபாரு கந்தசாமி. இப்ப நெலமை சரியில்லை…
நீயும் இந்து மத துரோகியா மாறுவேன்னு கொஞ்சங்கூட எதிர்பார்க்கலே… முஸ்லீம்களின் கைக்கூலி நீ…ன்னு அடிச்சேன் ஒரு அடி…

ஆனா… பையன்தான் அசரல.

‘நான் இந்துவா இல்லையாங்கிறத அப்புறம் பார்த்துக்கலாம்.
‘நட்டகல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்’ன்னு கேட்ட
சிவவாக்கியரயே பாகிஸ்தான் கைக்கூலின்னு சொல்லீருவீங்க நீங்க.

சுருக்கமாச் சொல்றேன்:

சவத்தை வெச்சு சிவசேனா சம்பாரிச்சது முதல்வர் பதவி.

சவத்தை வெச்சு உங்க மேதை சம்பாரிச்சது 4 கோடி. புரிஞ்சுதா…?”

சரி சரி இதெல்லாம் எங்க ‘மேதை’ அவசரத்துல மறந்திருக்கலாம்.
ஆனா படத்தை எவ்வளவு எதார்த்தமா எடுத்திருக்காரு
அதைப்பத்தி சொல்ல உனக்கு ஒரு வார்த்தை கூடக் கெடைக்கலியா?

“எதுய்யா எதார்த்தம்…? 
‘பாய்’ன்னாலே வீட்டு சுவத்துல வீச்சரிவாள் வைச்சிருப்பான்…
வேல செய்யுற எடத்துல கூட உத்தரத்துல சொருகி வெச்சிருப்பான்கிறதுதான் எதார்த்தமா?

காதலன் பிள்ளையார் சுழிபோட்டு காதல் கடிதம் எழுதறதும்…
காதலி குர்ரான எடுத்துக்கிட்டு பம்பாய் போறதும்…
சாயிரா பானுவை வீட்டுக்காரர்கிட்ட
வெறும் பானுன்னு அறிமுகப்படுத்துறதும்…
பாக்குறப்போ இவுங்க மனது முழுக்க மதம் தான் வியாபிச்சு இருக்குன்னு அப்பட்டமாத் தெரியுது.

அலைகள் ஒய்வதில்லை பாத்தியா…
அதுல மதம் பெருசா?  காதல் பெருசாங்கறப்போ…
அந்தப் பையன் பூணூல அறுத்து வீசறான்.
காதலி சிலுவையப் பிச்சு வீசறா…
இந்த மண்ணுக்கேத்த தன்மையே அதுதான்யா.
மதத்தை மிதி – மனுசனை மதிங்கற தத்துவம் உதிச்ச மண்ணுய்யா இது.
மத உணர்வு – மத வெறியா ஆகறதுக்கு ரொம்ப காலம் ஆகாது.
அதப் புரிஞ்சுக்கோ…
மதவெறிய மட்டுமல்ல மதத்தையே கீழே போட்டு மிதின்னு சொல்றதுதான்
சரியான வழி”ன்னு சொல்லி ‘சாமி’ வந்த மாதிரி ஆடறான்.

போதும்… போதும்… நிறுத்துன்னு சொல்ல வேண்டி வந்துடுச்சு.
சரி பேச்சை வேற திசைக்கு மாத்தலாம்னு நினச்சு…

சரி அது கெடக்கட்டும் கழுதை…
‘சென்சாருக்கெல்லாம் முதுகெலும்பு கிடையாது’ன்னு
சொல்லீருக்காரே எங்காளு, அதைப் பாத்தியான்னு கேட்டு வாய மூடல…

“இந்த ‘ஸ்பைனல் கார்டு’ பத்தியெல்லாம் பேச
உங்காளுக்கு யோக்கியதையே கிடையாது.
மதவெறியப் பத்தி படமெடுத்துட்டு…
அந்த மதவெறிக்கே யார் காரணமோ…
அந்த பால்தாக்கரே கிட்டயே போட்டுக் காமிச்சப்போ
இந்தாளு முதுகெலும்பு எந்த ஊர் மேயப் போச்சு?
உங்காளு…
ஹவாலா மோசடி பத்தி படமெடுத்து
ஹர்சத் மேத்தாகிட்ட போட்டுக் காட்டுவாரு…
ஈழத்தமிழரப் பத்தி படமெடுத்து
சந்திரிகா கிட்டே போட்டுக் காட்டுவாரு.

மாமன் செத்தா மசுராச்சு
மாமன் கம்பளி எனக்காச்சுங்கிற கதையா
எவனோ சாவுல இந்தாளு இதுவரைக்கும் சம்பாதிச்சிட்டு…
இன்னைக்கு ‘முதுகெலும்பிருக்கா…?
கிட்னி இருக்கா?’ன்னு கூச்சல் போடறாரே…
அவுங்க நான் சொன்னதையெல்லாம் திருப்பி சொல்லி…
‘உனக்கு மூளை இருக்கான்னு கேட்டா எப்படி இருக்கும்?
இனி உன் மேதையப் பத்தி பேசுனா அவ்வளவுதான்…
நம்ம சகவாசமே முறிஞ்சிரும்…
ஞாபகம் வெச்சுக்கோ”ன்னுட்டு கெளம்பீட்டான்.

தலைவா! உங்க படங்கள எல்லாம் பாக்குறபோது…
உங்களுக்கு ‘கலாச்சாரக் காவலர்’ன்னு ஒரு பட்டம் குடுத்தா
தப்பேயில்லைன்னு தோணுது.
ஒரு பொண்ணப் பாத்த பத்தே நிமிசத்தில
வளவளன்னு போட்டுத் தீட்டாம…
ஓடிப் போயிரலாமான்னு கேக்கறதும்…
‘இதயத்தைத் திருடாதே’ல பட்டம் குடுக்க வர்ற
பொம்பளகிட்ட ஐ லவ்யூங்கறதும்
திரை வரலாற்றுலயே ஒரு திருப்புமுனைங்க.

அக்கினி நட்சத்திரத்துல அமலா சிகரெட் குடிக்கறது மாதிரி
காட்டீருக்கிறது மூலமா ஆணாதிக்க வெறியர்களுக்கு
சரியான அடி குடுத்திருக்கீங்க.
எம்.ஜி.ஆருக்குப் பிறகு கிழவிகளக் கரிசனையாப் பாக்குறதுக்கு
உங்களவிட்டா வேற ஆளே கிடையாதுன்னு எனக்குத் தெரியும்.

ஆனா… கந்தசாமிதான் விடமாட்டான்.
“யோவ்… உன் ஆளு கெழவிய ஆட உடறதப்
பாத்துப் பாத்து சலிச்சுப்போச்சு.
‘தளபதில கெழவி கூட ஒரு பாட்டு…
ரோஜாவுல முப்பது நாப்பது கெழவிகள சேத்துகிட்டு
‘ருக்குமணி – ருக்குமணி’ன்னு ஆபாசக் கூத்து…
‘பம்பாய்’ல ஒரு மலையாளக் கிழவிய கன்னத்தக் கிள்றது…
அதே ரோஜாவுல ஒரு கெழவிய வீட்டு வரைக்கும் தூக்கீட்டுப் போறது… இப்படியெல்லாம் எங்க ஊருல எவனாவது கெழவியத் தூக்கீட்டுப் போன…
அப்புறம் அவனுக்கு மொழங்கையுக்குக் கீழே
கையே இருக்காது தெரிஞ்சுக்கோ.

உன் ஆளுக்கு மூளை என்னைக்காவுது சரியா வேல செஞ்சிருக்கா…
ரோஜாவுல அம்மா முன்னாடி சிகரெட் புடிக்கறது…
‘அஞ்சலி’ல கொழந்தைக ‘டைவர்ஸ்’ பத்தி பேசறது…
காதலிக்கறவங்களுக்கு தொணையா கொழந்தைக காவல் காக்கறது…
‘லவ் ஜோடி’ன்னு பாடறது… எல்லாம் எந்த ஊர்க் கலாச்சாரம்?

குழந்தைகளுக்கான ஆண்டுல
குழந்தைகளை குட்டிச் சுவராக்குறதுக்காகப்
படம் எடுத்த ஒரே ஆள் உங்காளுதான்.

இதுல வேற வலிப்பு வந்தவன் மாதிரி
வசனத்த வெட்டி வெட்டிப் பேசறது…
அக்னி நட்சத்திரத்துல இதே மாதிரி ஒரு கர்மம்:
‘டேய் அவ உனக்கு அம்மா ஆகறதுக்கு முன்னாடியே
எனக்குப் பொண்டாட்டிடா’ன்னு.
அப்புறம் மத்தவங்க எல்லாம் என்ன அம்மா ஆயிட்டுதான் பொண்டாட்டியானாங்களா…? நீயும் உன் ஆளும்”னு திட்டுவான்.

அவன் கோவிச்சுக்கிட்டுப் போனதுல இருந்து
மனசே சரியில்லாமாப் போச்சு.
எனக்கும் அவனுக்கும் இருக்கறது என்ன சாதாரண நட்பா?
கலைஞருக்கும் – எம்.ஜி.ஆருக்கும் மாதிரி நாற்பதாண்டு கால நட்பு.

அட…இதச் சொல்றப்பதான் உங்க ‘இருவர்’ படம் வந்திருக்கிறது
ஞாபகத்துக்கு வந்துச்சு.
சரி சும்மாதான இருக்கோம் போயி பார்த்தாதான் என்னன்னு தோணுச்சு.
படம் போட்டு ஒரு வாரம்கூட ஆகல.
ஆனா…….
கவுண்ட்டர்ல கத்தை கத்தையா இவ்வளவு டிக்கெட் வெச்சிருக்காரேன்னு யோசிச்சேன்…
அப்பவும் மனசுக்குள்ள ஏதோ ஒரு பச்சி சொல்லுச்சு வேண்டாம்னு…
இந்தப் பாழாப்போன புத்திக்கு எட்டுனாத்தானே…

உள்ளே போனா…
என்னையுஞ்சேத்தி எட்டே பேரு…
படம் ஓடுது ஓடுது அப்படி ஓடுது.
இங்க கொஞ்சம்… அங்க கொஞ்சம்…
பிரகாஷ்லால்… மோகன்ராஜ்ன்னு மாத்தி… மாத்தி தலைசுத்துது.
சுத்தி முத்திப் பாத்தா…
பக்கத்துல எவனும் இல்ல.
பயமா வேற இருக்குது…
நாயி வாயி வெச்ச மாதிரி
பத்து படத்துல இருந்து வெட்டி பிட்டு சேத்த மாதிரி…

அதுலயும் நம்ம மோகன்லால் பேசற தமிழ் இருக்கே…
மேதையே! உங்களுக்கு எம்.ஜி.ஆர். மேல என்னவாது கோவம்னா
நேரடியாச் சொல்லீருக்கலாம்.

எனக்குத் தெரிஞ்ச அ.தி.மு.க.காரன்
‘எங்க தலைவர் 87 ஆம் வருசம் சாகல… 97ல தான் செத்திருக்காரு.
அதுவும் இந்த மணிரத்னம் மூலமா.
இந்த மோகன்லால் ‘வரூ, வரூ’ன்னு தமிழ் பேசறதக் கேட்டாலே
திரையவே பிச்சறலாமான்னு வெறி கெளம்பீடுச்சு.
எங்க தலைவர் மேடைக்கு வந்தா எவ்வளவு துள்ளலா…
ஒரு கன்னுக்குட்டி மாதிரி பாஞ்சு வருவாரு…
உங்காளு என்னடான்னா…
குருடனப் போயி ராஜமுழி முழிக்கச் சொன்ன மாதிரி
மோகன்லாலப் போட்டு எங்க தலைவரையே அவமானப்படுத்தீட்டாரு.
உங்க மணிரத்னம் எங்க தலைவர்
போட்டாவையாவது பாத்திருக்காராயா?’ங்கிறான்.

போதாததுக்கு ஒரு உடன்பிறப்பு வேற
‘எங்க தலைவர் இந்தி எதிர்ப்புப் போராட்டத்துக்கு
தண்டவாளத்துல தலைவச்சா உங்காளு இட ஒதுக்கீடுங்கிறாரு…
உங்காளுக்கு இந்தப்படத்த இந்தீல வேற டப் பண்ணி
ஓட்டணும்கற நெனப்புல பிரச்சனையவே மாத்துனாரு.
ஒரு சினிமாக்காரனுக்கே புத்தி இவ்வளவு வேல செஞ்சா…
எங்க தலைவருக்கு எப்படி வேல செய்யும்.
யோவ் எம்.ஜி.ஆர். கட்சிய உட்டுப் போறதுக்கு ‘மந்திரி’ பதவி மட்டும் காரணமில்லையா…
இன்னைக்கு இந்த அம்மணிக அல்லாடறாங்களே…
அமலா பிரிவு… அமுலாக்கப் பிரிவுன்னு…
அந்த மாதிரி பல சிக்கலக்குடுத்தாங்க அன்னைக்கு.
திராவிடக் கட்சிய பொளந்து பலவீனப்படுத்தணும்னு
மத்திய அரசு வேற பல வருசமா திட்டம் போட்டதும்…
அதுக்குப் பின்னாடி மோகன் குமாரமங்கலம் போன்ற
காங்கிரஸ் தலைக வேல செஞ்சதும் உங்காளுக்குத் தெரியுமா?
அறுக்கமாட்டாதவன் இடுப்புல அம்பத்தெட்டு அருவாளுங்கற கதையா…
பெருசா படம் எடுக்க வந்துட்டாரு’ன்னு பொளந்து கட்டுறாங்க.

மேதையே!
உங்காளு நானு.
நானும் படம் பார்த்தேன்.
அதுல நீங்க அவுங்க ரெண்டு பேரோட நட்பைச் சொல்றீங்களா?
இல்ல அவுங்க ரெண்டு பேரும் அரசியல் துறைல அவுங்கவுங்க பங்குக்குச் சாதிச்சதைச் சொல்றீங்களா?
இல்ல ரெண்டு பேரும் அரசியல் ரீதியா விட்ட தவறுகளைச் சொல்றீங்களா?

அவுங்க அரசியல் ரீதியா விட்ட தவறுகளச் சொல்றதுக்கு உங்களுக்குத் தெம்பில்லைன்னும் தெரியும். யோக்யதை இல்லைன்னும் புரியும். ஆனா…

அந்த காலத்துல சாதி பத்தியும், மதம் பத்தியும், பெண்ணுரிமை பத்தியும் எதக்கேட்டாலும் பொட்டுல அடிச்ச மாதிரி பதில் சொன்ன திராவிடக் கட்சிக இன்னைக்கு சரியில்லைங்கிறது… உங்கள ஒளற… சாரி…
வளர விட்டதுல இருந்தே புரியுதுங்க.

உங்க ‘கேமரா’ முழுக்க முழுக்க ரெண்டு தரப்புலயும் இருக்குற பெண் சமாச்சாரத்தையே சுத்தி சுத்தி வர்றதப் பாக்குறப்போ…
உங்க நோக்கமே வேறையோன்னு சந்தேகப்பட வைக்குது.

பம்பாயையும், காஷ்மீரையும் விட்டு தமிழ்நாட்டுப் பக்கம் பாருங்கன்னு
எந்தப் படுபாவீயோ சொன்னது உங்க காதுல விழுந்துடுச்சு போலிருக்கு.
அதுக்கு நாங்கதானா கெடைச்சோம்?
ஊருக்கு எளைச்சவன் புள்ளையார் கோவில் ஆண்டின்னு
ஒரு பழமொழி உண்டுங்க…
அந்த மாதிரி இந்த நாட்டுல எவன் எவன்தான்
‘திராவிடக் கட்சி’ய விமர்சிக்கறதுன்னு விவஸ்தையே இல்லாமப் போச்சு.

போதாதுக்கு உங்க படம் பார்க்க
ஏதோ 3டி பார்வையோ திருடன் பார்வையோ
வேணும்குது ஒரு பத்திரிக்கை.
உங்க அக்கினி நட்சத்திரம் கிளைமேக்ஸ் பாத்து
இருந்த பார்வையும் போனதுதான் மிச்சம்.

நீங்களும் ஏதோ ‘மொழிப்போர் தியாகி’ மாதிரி
‘இந்தி மொழி மேல ஒரு வெறுப்பு’
‘பெரியார் மேல பற்று’ன்னு பேட்டி குடுக்கறீங்க.
உங்களுக்கு இருக்கிற ‘இந்தி எதிர்ப்புணர்வும்’
‘தமிழ் பற்றும்’பத்திக் கேட்டாலே முடியெல்லாம் சிலிர்க்குது.

உங்க ஆபீசுக்கு ‘மெட்ராஸ் டாக்கீஸ்’ன்னு
பேர் வெச்சிருக்கப்பவே புரியுது
நீங்க டமில எவ்வளவு நேசிக்கறீங்கன்னு.

உண்மையில்லாத ஒரு கதைய
வெளீல உண்மைக் கதைன்னு புளுகீட்டு
படத்துல மட்டும் ‘இது உண்மைக் கதை அல்ல’ன்னு
அந்தர்பல்டி அடிக்கறீங்களே…
வரலாற்றுல நெப்போலியனுக்கு அடுத்த வீரன்
வேற யாருமில்ல நீங்கதாங்க.

‘கஷ்டப்பட்டு படமெடுத்த என்னை கொலைகாரனைப் போல்
அல்லாட வைக்கிறார்கள்’ன்னு சொல்றீங்களே…

இன்னைக்கல்ல…
ஏறக்குறைய நாப்பது வருசத்துக்கு முன்னால
‘பராசக்தி’, ‘பணம்’ மாதிரி பல படங்க வெளிவர்றதுக்குள்ள
சந்திச்ச சவால்கள் பத்தியும்,
எழுந்த எதிர்ப்புகள் பத்தியும் ஏதாவது தெரியுமா?

அன்னைக்கு அரசாங்கம் மட்டுமில்ல
தமிழ்நாட்டின் ஒரு பத்திரிக்கைகூட பாக்கி இல்லாம
பக்கம் பக்கமா திட்டுச்சு.

இன்னைக்கு உங்களோட ‘திருடா திருடா’ படத்துக்குக் கூட
‘கவர் ஸ்டோரி’ எழுதறதுக்கு பத்திரிக்கை இருக்கு.

ஆனா…
அப்போ யாரும் உங்கள மாதிரி புலம்பல.
சிக்கல்கள சவாலாச் சந்திச்சாங்க.

இதுதாங்க…
பிரச்சனைகளுக்காகப் போராடறவன்
படமெடுக்க வர்றதுக்கும் –
பிரச்சனைய வச்சு பணம் பண்றதுக்காக வரும்
சினிமாக்காரனுக்கும் உள்ள வித்தியாசம்.

‘வெளிநாட்டுல இந்த மாதிரி அரசியல்வாதிகளப் பத்தியெல்லாம்
துணிச்சலா படம் எடுக்கறாங்களாம்.
அதுல ரெண்டு தலைவர்களுக்குள்ள இருந்த ‘ஓமோ செக்சை’க்கூட படமாக்குனாங்களாமா…

நீங்க ஒரு சிறந்த மேதை…
அதுவும் தொழில்நுட்ப மேதை…
அந்த வெளிநாடு மாதிரி…
உங்களுக்கே உரிய கை வண்ணத்தோட…

மவுண்ட் பேட்டன் பொண்டாட்டிக்கும்
நம்ம தேசிய தலை ஒண்ணுக்கும்
ஏதோ ‘கசமுசா’ இருந்துச்சாம் அதைப்பத்தி…

சங்கரமடத்துல ஒரு சாமியாரு
‘தண்டத்த’ உட்டுட்டுப் பயணம் போனாராமா அதைப்பத்தி…

படமா எடுப்பீங்களா மணீ…?

பொதுவா உங்க படம் வெளீல வர்ற வரைக்கும்
படத்தோட கதை யாருக்குமே தெரியாதாம்…

அது சரிங்க…
உங்களோட பல படங்க
வெளீல வந்த பிறகும்கூட
கதை என்னன்னு தெரியமாட்டேங்குதே…

என்ன செய்யலாம் அதுக்கு…?

சராசரிக்கும் கீழான,
பாமரன்
(குமுதம் ஸ்பெஷல் – மார்ச் 97)