“கற்றது தமிழ்”….

pic1.jpg

  

தமிழ் சினிமாவுக்கு என்றும் அழிவில்லை   இயக்குனர் பாலுமகேந்திரா பேச்சு   

                                                                                                                                                                கோவை, அக்.29: ‘‘தமிழ் சினிமாவுக்கு அழிவு என்பது என்றும் இல்லை. புதிய இளைஞர்களின் வருகையால் புதுப்பிக்கப்பட்டுக்கொண்டே இருக்கும்,’’ என இயக்குனர் பாலுமகேந்திரா கோவை விழாவில் பேசினார்.

கோவை நாய்வால் திரைப்பட இயக்கம் சார்பில் கற்றது தமிழ் எம்.ஏஇயக்குனர் ராமுக்கு பாராட்டு விழா நேற்று நடந்தது. வழக்கறிஞர் சிவக்குமார் வரவேற்றார். இதில், இயக்குனர் பாலுமகேந்திரா பேசியதாவது:

சினிமா வாழ்வில் என்னை முதலில் பாதித்த படம் பாரசக்தி. ரத்தகண்ணீர், மனோகரா, திரும்பிப்பார் ஆகிய படங்கள் ஆவேசமாக தமிழ் உணர்வை ஊட்டின. நல்ல இயக்குனர் இருந்தால்தான் ஒளிப்பதிவாளர் மிளிர முடியும். இலக்கியத்தை ஆழமாக படிப்பவன்தான் நல்ல சினிமாவை தரமுடியும். படைப்பாளியை விட படைப்பு முன்னிலை வகிக்க வேண்டும். உண்மையான படைப்பு சமூக அவலத்தை பிரதிபலிக்க வேண்டும். சமூக அக்கறை உள்ளவனே சிறந்த படைப்பாளியாக முடியும். மெல்லத்தமிழினி சாகும் என்ற வார்த்தை போல மெல்ல தமிழ் சினிமா சாகும் என்ற கருத்து உள்ளது. இது போன்ற படைப்புகள் படைப்பாளிகள் மூலம் தமிழ் என்றும் வாழும். நகரத்து பேருந்துகளில் கனவுகளுடன் பயணிக்கும் இளைஞனும், கிராமத்து வயல்களில் சினிமா சுமந்து நம்பிக்கையுடன் திரியும் இளைஞனும் புதிது புதிதாக தமிழ் சினிமாவிற்கு வந்து கொண்டே இருப்பார்கள். இதனால் தமிழ் சினிமாவிற்கு அழிவு என்பதே இல்லை. இவ்வாறு பாலுமகேந்திரா பேசினார்.

கவிஞர் முத்துகுமார், எழுத்தாளர் பாமரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இயக்குனர் ராம் பேசுகையில், ‘‘பாலுமகேந்திரா இந்த படத்தை பார்த்ததும் ஆசியாவின் சிறந்த 5 படங்களில் ஒன்று என்று பாராட்டினார். இந்த வார்த்தைதான் எனக்கு விருது. இந்த படத்தை திரும்பவும் ஒருமுறை கூட என்னால் பார்க்க முடியாது. காரணம் ஒவ்வொரு பிரேமிலும் இன்னும் சிறப்பாக செய்திருக்கலாமோ என்ற ஆதங்கம் மேலிடுகிறது.

ஒரு படைப்பாளிக்கு பொறுமையுடன் காத்திருப்பது முக்கிய தகுதியாகிறது. ஒரு படைப்பை உன்னிப்பாக கவனித்து படைப்பாளியின் உள்வலியை, உணர்த்த விரும்பும் வரியை பார்வையாளன் புரிந்து கொள்வதில்தான் வெற்றி உள்ளது. கிரேன் போகமுடியாத அச்சன்கோயில், புல்மேடு போன்ற மலைப்பகுதிகளில் கூட சென்று ஒரு காட்சிக்காக பல நாள் கஷ்டப்பட்டோம்.

இயக்குனர் தனக்கு வேண்டியதை பெறுவதில் முரட்டு பிடிவாதம் காட்டினால் மட்டுமே ஜெயிக்க முடியும். 96ம் வருடம் பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குனர் வாய்ப்பு கேட்டு சென்றபோது மறுத்து விட்டார். அவரிடமே பிறகு உதவி இயக்குனராக சேர்ந்தேன். எனது அடுத்த படத்தை ஒளிப்பதிவு செய்ய பாலுமகேந்திரா ஒப்புக்கொண்டது எனது பாக்கியம்.

இவ்வாறு ராம் பேசினார்.

– நன்றி தினகரன்

தமிழ் சினிமாவில் ஆபாசம் அதிகரித்துவிட்டது

எழுத்தாளர் பாமரன் குற்றச்சாட்டு  

                                                                               கோவை, அக். 28- 

 கற்றது தமிழ்திரைப்பட இயக்குனர் ராமுக்கு நாய்வால் திரைப்பட இயக்கம் சார்பாக கோவையில் இன்று பாராட்டு விழா நடத்தப்பட்டது.  நிகழ்ச்சியில் டைரக்டர் பாலு மகேந்திரா, பாடல் ஆசிரியர் நா.முத்துக்குமார், எழுத்தாளர் பாமரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.  

விழாவில் எழுத்தாளர் பாமரன் பேசும்போது கூறியதாவது:- 

தற்போது திரைப்படதுறை மிவும் சீரழிந்து வருகிறது. படம் பார்க்க குடும்பத்துடன் செல்ல முடியவில்லை. ஒரு சில டைரக்டர்கள்தான் உணர்ச்சி களையும், உணர்வுகளையும் வெளிக்காட்டுகின்றனர். மற்ற டைரக்டர்கள் அனைவரும் பணத்துக்கு ஆசைப்பட்டு படம் எடுக்கின்றனர். டைரக்டர் ராம் போன்ற சிலர் தமிழ் சினிமாவுக்கு தற்காலிக புத்துணர்ச்சி தருகிறார்கள். இந்த படத்தில் டைரக்டர் ராம் உண்மை நிலையை தைரியமாக எடுத்து சொல்லியுள்ளார்.  

இந்த படத்தில் தமிழ் படித்தவர்கள் மட்டுமல்லாமல் அதை சார்ந்து படித்தவர்களுக்கும் இதே நிலைதான். இந்த படத்திற்கு எவ்வளவு எதிர்ப்பு கிளம்புகிறது என்று பார்த்து வெற்றி நிர்ண யிக்கப்படும் என்றார். டைரக்டர் சங்கர் தனது பாய்ஸ் படத்தில் சென்னை தி நகர் சென்றால் பெண்களை இடிக்கலாம் என்று காட்டியுள்ளார். அதே தி நகரில் ஒரு இளைஞன் வேலை தேடுவதைத்தான் ராம் காட்டியுள்ளார். இதுதான் இவர்களுக்குள் உள்ள வித்தியாசம். ஜென்டில்மேன் படத்தில் டிக்கிலோனா விளையாட்டை காட்டிய சங்கர்தான் பாய்ஸ்சில் பெண்கள் மீது இடிப்பதை காட்டியுள்ளார். 

அவ்வைக்கு அருநெல்லிக் கனி கொடுத்த பாரி மன்னனின் மகள்கள் அங்கவை, சங்கவை. இவர்களை ஒரு தமிழ் பேராசிரியரே கேவலப்படுத்தியுள்ளார். சம்பள உயர்வுக்கு குரல் கொடுக்கும் தமிழ் ஆசிரியர்கள், தமிழ் நசுக்கப்படுவதற்கு குரல் கொடுக்கவில்லை. இது கண்டனத்துக்குரியது.  

விழாவில் டைரக்டர் பாலுமகேந்திரா பேசியதாவது:- படைப்பாளிகளின் வெளிப்பாடு என்பது அவர் வாழும் சமூகத்தை அடையாளப்படுத்துவதாக இருக்க வேண்டும். சில சமயங்களில் அது முடியாமல் போகிறது. ஒரு படைப்பாளிக்கு சமூக அக்கரை அவசியம்தானா? ஒரு திரைப்படத்தின் மூலம் சிரிக்க வைப்பது கூட சமூக அக்கறைதான். கற்றது தமிழ் இன்றைய வாழ்க்கையோடு நேரிடையாக சம்பந்தப்பட்ட கதை . இந்தப்படத்தின் ஒளிப்பதிவாளர் கதிருக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது”. இவ்வாறு அவர் பேசினார். 

நன்றி : மாலைமலர்

img_6020.jpg

திறமையான இளைஞர்களால் தமிழ் சினிமா உயிர் வாழும்

இயக்குநர் பாலு மகேந்திரா உருக்கம்

கோவை, அக். 29-

தமிழ் சினிமா மோசமாகிவிடவில்லை. திறமையான இளைஞர்கள் கட்டாயம் வருவார்கள். இவர்கள் தமிழ் சினிமாவை சாகவிட மாட்டார்கள். என திரைப்பட இயக்குநர் பாலு மகேந்திரா பேசினார்.

கோவையில் ‘கற்றது தமிழ்” திரைப்பட இயக்குநர் ராமுக்கு பாராட்டு விழா நடந்தது. “நாய்வால்” திரைப்பட இயக்கத்தின் சார்பில் நடந்த விழாவில் இயக்குநர் பாலு மகேந்திரா, பாடலாசிரியர் நா.முத்துக்குமார், எழுத்தாளர் பாமரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


விழாவில் இயக்குநர் பாலு மகேந்திரா பேசியதாவது:
“ ‘கற்றது தமிழ்’ படத்தில் தமிழின் மீதான ஆத்மார்த்தமான அக்கறை வெளிப்படுகிறது. மிக அபூர்வமாகத்தான், இது போன்ற படைப்புகள் வெளியாகின்றன. தொடர்ந்து இதே போல் அழுத்தமான படங்கள் இவரிடம் இருந்து நிச்சயம் வரும். ஒரு படைப்பாளியின் வெளிப்பாடு என்பது, வளரும் சமூகத்தை அடையாளம் காட்டுவதாக இருக்க வேண்டும். பல நேரங்களில் இது சாத்தியப்படாமல் போய் விடுகிறது. “கற்றது தமிழ்” படத்தின் கருத்து, அன்றாட வாழ்க்கையில் இருந்து எடுக்கப்பட்டது. அதன் ஒரு பகுதியை ரத்தமும் சதையுமாக பிய்த்து எடுத்து வந்துள்ளார் ராம். ஒளிப்பதிவாளர் கதிர் ஒளிப்பதிவின் உச்சத்துக்குச் சென்றுள்ளார்.

இசையமைப்பாளர் இளையராஜாவுடனான எனது உறவு “மூடுபனி” முதல் தொடர்கிறது. எனது அர்த்தமுள்ள மெளனங்களைப் புரிந்து கொண்டு, அதை தனது இசையால் இளையராஜா எப்போதும் கலைத்ததில்லை. “எடிட்டிங்” என்பது பூமாலை போன்றது. மாலையான பின்பு அதன் பூர்வீகத்தை யாரும் தேடுவதில்லை. அதே போல் சிறந்த படத்தின் எடிட்டிங் என்பது காட்சிகளின் “கட்”களை உணர்த்தாமல் இருக்க வேண்டும். “கற்றது தமிழ்” படத்தில் இந்தக் கலை கைவந்துள்ளது.

 \தமிழ் சினிமா மோசமாகி விட்டது என யாரும் நினைக்க வேண்டாம். குப்பைகளுக்கு நடுவே பாலா, ராம் போன்ற இளைஞர்கள் இன்னும் வருவார்கள். சினிமாவில் சரியான வாய்ப்பு கிடைக்காததால் இன்று நெரிசல் மிகுந்த பஸ்களிலும், வயல் வெளிகளிலும் சிரமப்பட்டுக் கொண்டிருக்கும் பல இளைஞர்கள் கட்டாயம் வருவார்கள். இவர்கள் தமிழ் சினிமாவை சாக விட மாட்டார்கள்”. இவ்வாறு பேசிய இயக்குநர் பாலு மகேந்திரா உணர்ச்சி வசப்பட்டு மேடையில் அழுதே விட்டார்.

திரைப்பட பாடலாசிரியர் முத்துக்குமார் பேசுகையில், “இயக்குநர் பாலு மகேந்திராவின் பரம்பரையினர்தான் இனி வரும் சினிமாவை ஆளப்போகிறவர்கள். பாலு மகேந்திராவின் உதவியாளராக இருந்த பாலாவிடம் இருந்து அமீர் வந்துள்ளார். இப்போது ராம் வந்துள்ளார். இது ஒரு மரபுச்சங்கிலி. நானும் இயக்குநராகத் திட்டமிட்டுள்ளேன். இன்று தமிழ் வகுப்புகள் கல்லூரியின் ஏதாவது ஒரு மூலையில் குடோன்கள் போல் உள்ளன. தமிழை ஈடுபாட்டுடன் படித்தால் நிச்சயம் வேலை கிடைக்கும். “கற்றது தமிழ்” மிகக் கூர்மையான அரசியல் படம். அனைத்து இளைஞர்களும் ஒன்று சேர்ந்து இப்படத்தை வெற்றி பெறச் செய்யவேண்டும்.” என்றார்.

இயக்குநர் ராம் தனது ஏற்புரையில், “ கற்றது தமிழ் படத்தை அனைவராலும் ஏற்றுக் கொள்ள முடியாது. சிலரிடம் இதன் கருத்துக்கள் கோபத்தை ஏற்படுத்தும். ஒரு கலை கோபத்தை ஏற்படுத்தினால் அது வெற்றி பெற்றது என அர்த்தம். படத்தைப் பார்த்த இயக்குநர் பாலு மகேந்திரா “ஆசியாவின் சிறந்த ஐந்து திரைப்படங்களில் கற்றது தமிழ் படமும் ஒன்றாக பேசப்படும்” என்றார். இந்த வார்த்தைகள் போதும் எனக்கு. வேறு விமர்சனங்கள் குறித்து கவலை இல்லை. இன்று கிடைக்கும் பாராட்டுக்கள் நிறைய கடமைகளைத் தந்துள்ளது. இதை நிறைவேற்ற நான் உழைப்பேன்.” என்றார்.

எழுத்தாளர் பாமரன் பேசுகையில், “1970 களில் ஆரோக்கியமான  சினிமாக்கள் வந்தன. அப்போது இயக்குநர்கள் பாலு மகேந்திரா, மகேந்திரன் போன்றவர்கள் கருத்துள்ள படங்களை எடுத்தனர். தற்போது திரைக்கு வரும் படங்களை குடும்பத்துடன் அமர்ந்து பார்க்க முடிவதில்லை. இது மிகவும் வருத்தப்பட வேண்டிய விஷயம். இயக்குநர் ராம் இயக்கிய ‘கற்றது தமிழ்’ படம் எதார்த்தத்துடன் கூடிய நல்ல படங்களை பிறர் எடுக்க வேண்டும் என்பதற்கான மனுவாக எடுத்துக் கொள்ளலாம். இப்படத்தில் சமூகத்தின் அவலம் அப்படியே சித்தரிக்கப்பட்டுள்ளது” என்றார்.

நன்றி : தினமலர்.