செயல் மறந்து வாழ்த்துதுமே……

 

“தமிழ் படிச்சா இதுதான் கதி என அச்சுறுத்துகிறது படம்…”

“எம்.ஏ தமிழ் படிச்சா வேலை கிடைக்காதுன்னு எவன் சொன்னது?”

“தமிழ் படிச்சவன இப்படி வன்முறையாளனாவா காட்டறது?”

என ஏகப்பட்ட வாதப் பிரதிவாதங்கள்

ஆனால் கற்றது தமிழ் அலசுவது அதைப்பற்றி மட்டும்தானா?

‘இந்து’ தொடங்கி ‘இந்தியா டுடே’ வரைக்கும் கிழித்துக் காயப் போட்டு விட்டார்கள் படத்தை. அடுத்த படமாவது சிறப்பாக அமைய ஆசி வேறு வழங்கியிருக்கிறது ஆ.வி.

அப்படியானால் இந்தப்படம் ?

‘கற்றது தமிழை’ யார் யாரெல்லாம் ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதைவிடவும் யார் யாரெல்லாம் எதிர்க்கிறார்கள் என்பதில் மட்டும் ஒரு ஓரப் பார்வையைச் செலுத்தினால் போதுமானது.

‘கற்றது தமிழ்’ தமிழ் படித்தவனின் நிலையை அலசுகிறது என்பதைக் காட்டிலும் தமிழ்ச் சமூகத்தின் ஒட்டுமொத்த சூழலையும் அலசுகிறது என்பதுதான் உண்மை.

அதுவும் இன்றிருக்கும் உலகமயம் தனியார்மயச் சூழலில்…

நினைவு தெரிந்து இதுவரை தமிழாசிரியர் என்றாலே அரைக்கிறுக்கர்களாய்…

மற்றவரது கேலிக்கும் கிண்டலுக்குமான ஒரு பண்டமாய் மட்டுமே கோடம்பாக்க அயோக்கியர்களால் சித்தரிக்கப்பட்டு வந்திருக்கிறார்கள். அதனை இந்தப் படம் மாற்றிக் காட்டியிருக்கிறது.

தமிழ் படித்தவர் தமிழ் இலக்கியம் படித்தவர் தமிழ் ஆசிரியர் என்பவர்கள் யாருக்கும், எவருக்கும் எந்த விதத்திலும் சளைத்தவர்களில்லை என்பதை உரக்கச் சொல்கிறது கற்றது தமிழ்.

“தமிழ் படிச்சவன்னா சோடா புட்டி கண்ணாடி மாட்டிகிட்டு…………தாடி வெச்சுகிட்டு…………ஜோல்னாப் பை போட்டுகிட்டு டொக்கான் மாதிரி இருப்பான்னு நெனைக்காதே…………தமிழ் சாந்தத்தை மட்டுமல்ல, ரௌத்திரத்தையும் பழக்கியிருக்கிறது” என ஒலிக்கும் பிரபாகரனின் குரல் பல லட்சம் தமிழர்களது உள்ளத்தில் புதைந்து கிடந்த குமுறல்.

தமிழ் படித்தால் வேலை கிடைக்காது என அச்சுறுத்துவதாக இருக்கிறது என உளறுபவர்கள்…………

“நானாவது ரெண்டு குறள் சொல்லிப் பொழச்சுக்குவேன்.

ஆனா ஹிஸ்டரி படிச்சவன்…………

ஜாகரபி படிச்சவன்…………

எக்கனாமிக்ஸ் படிச்சவன்…………

சோசியாலஜி படிச்சவன்…………

சைக்காலஜி படிச்சவன்…………

பொலிடிசல் சைன்ஸ் படிச்சவன்…………

எல்லாம் செத்தான்.

‘வாத்தியார் வேலை கூட கிடைக்காது” என்கிற வரிகள் அரங்கில் ஒலிக்கும் போது காதுகளில் எதை வைத்துக்கொண்டு உட்கார்ந்திருந்தார்கள் என்பது ஆராய்ச்சிக்கு உரிய விஷயம்.

உண்மையில் இக்குரல் தமிழகத்திற்கு மட்டுமில்லை…………

இந்தியாவிற்கு…………

மூன்றாம் உலக நாடுகள் அனைத்திற்குமான குரல்.

உயர் கல்வியையும்…………

ஆதிக்கம் செலுத்தும் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளுக்கு அடிமைச் சேவகம் செய்வதற்காக மட்டுமே கற்றுக் கொள்ளும் கல்வியையும் கிழித்துக் கூறுபோடும் குரல்.

அதுசரி எத்தனையோ துறைகள் இருக்கும்போது I.T என்கிற தகவல் தொழில் நுட்பத் துறையினர் மீது மட்டும் படத்தில் ஏன் இந்தப் பாய்ச்சல்?

நியாயம்தான்.

ஆனால்

மருத்துவர்கள்……….

பொறியியலாளர்கள்……….

கொளுத்தும் வெய்யிலிலும், கொட்டும் மழையிலும் தார் சாலை போடுபவர்கள்……….

என எவரும் இரவு பகல் பாராமல் உழைத்துவிட்டு வருகிறோம் எங்களுக்காக விடிய விடிய PUBS (மதுபானக் கூடங்கள்) களை திறந்து வையுங்கள்என்று கோரிக்கை வைக்கவில்லை. ஆனால் அப்படிப்பட்ட அதி அத்தியாவசியக் கோரிக்கையை வைத்தவர்கள் இந்த I.T துறையினர் மட்டும்தான். தென்னக உணவக உரிமையாளர்கள் சங்கம் “பன்னாட்டு நிறுவனங்களும்……….பெரும் தொழில் நிறுவனங்களும் மேலும் மேலும் வந்து கொண்டிருக்கும் இச்சூழலில் அரசு இரவு வாழ்க்கை குறித்தும் சிந்தித்து முடிவெடுக்க வேண்டும்” என கோரிக்கை வைத்தது இம்மேதைகளுக்காகத்தான்.

இங்கு பலரது பகல் வாழ்க்கையே பாடையில் போய்க்கொண்டிருக்கும் பொழுது……….

இரவு வாழ்க்கை குறித்து சிந்திக்கச் சொல்பவர்கள் மீது பாய்ச்சல் வராமல் வேறென்ன வரும்?

இது கற்றது தமிழை இந்த நூற்றாண்டின் ஒரே புரட்சிகரமான படமாக நிறுவும் முயற்சியும் அல்ல………. குறைகளே அற்ற உன்னத காவியம் என உயர்த்திப் பிடிக்கும் போக்கும் அல்ல.

30 களில் தொடங்கிய புராண, இதிகாச படங்களாகட்டும்……….

50 களில் உலுக்கிய பராசக்தி, ரத்தக்கன்ணீர் போன்ற சமூக மறுமலர்ச்சிப் படங்களாகட்டும்……….

60 களில் வந்த பாலச்சந்தர் வகையறாக்களின் நாடகபாணிப் படங்களாகட்டும்……….

70 களின் பிற்பகுதியில் ஸ்டுடியோக்களுக்குள் மட்டுமே முடங்கிக் கிடந்த காமிராவை வயல்வெளிகளுக்கு இழுத்துச் சென்ற பாரதிராஜாவின் படங்களாகட்டும்……….

மரியாதைக்குரிய மகேந்திரன், பாலு மகேந்திரா போன்றவர்கள் தமிழ் இதயங்களை நெருடிச் சென்ற உதிரிப்பூக்கள், மெட்டி, வீடு போன்ற படங்களின் காலகட்டமாகட்டும்……….

அதை அப்படியே கடத்திக் கொண்டு போய் மசாலாக்களில் மூழ்கடித்த சகலகலாவல்லவர்களின் காலகட்டமாகட்டும்……….

என இப்படிப் பல காலகட்டங்களைத் தாண்டித்தான் வந்திருக்கிறது தமிழ் சினிமா.

“ங்கொம்மா……….ங்கொம்மா என்ன சேத்தி வைப்பாளா?” என்கிற வினாக்களும்……….

கொளுந்தியாளை அடைய “ஆசை”ப் படும்போது கொளுந்தனாரின் மீது ஏன் “உயிர்” ஆக இருக்கக்கூடாது? என்கிற ஆதங்கங்களும்……….

“என் செல்லப் பேரு ஆப்பிள் நீ சைசா கடிச்சுக்கோ

என் சொந்த ஊரு ஊட்டி என்ன ஸ்வெட்டர் போட்டுக்கோ” என “கண்ணியத்தை”ப் பறை சாற்றும் குரல்களும்……….

ஒலிக்கின்ற “ஆரோக்கியமான” சூழலில்தான் கற்றது தமிழ் வெளிவந்திருக்கிறது என்பதைக் கருத்தில் கொண்டால் மட்டுமே இப்படத்திற்கான தேவை புரியும்.

ரத்தமும் சதையுமாய் பிய்த்தெறியப்படும் அம்மாவின் சாவை நுகரும் ஏழு வயதுப் பிரபாகர்……….

பால்ய தோழி ஆனந்தி……….

வருடிக் கொடுக்கும் தமிழ் அய்யாவால் விடுதியில் வளரும் சூழல்……….

அவர் ஊட்டிய உணர்வால் படிக்கப்போன தமிழ் இலக்கியம்……….

பள்ளி நிர்வாகி குடும்பத்துக்கு ஊழியஞ் செய்து பெறும் தமிழாசிரியர் பணி……….

என நகரும் நாயகனின் வாழ்க்கையில் ஒரு சிகரெட்டுக்காகக் குறுக்கிடும் போலீசால் திக்குத் தெரியாமல் ஓடத் தொடங்குவதை ஒட்டி ஓடத் துவங்குகிறது படம்.

ஒரு காட்சியையும் மற்றொரு காட்சியையும் கண்ணுக்குப் புலப்படாத நூலிழையால் பிணைக்கும் பாங்கு……….

அடி முதல் நுனி வரை சாவுதான் எனக்கு விசிட்டிங் கார்டு என்பதற்கான சாட்சியக்கோர்வைகள்……….

நாயகனின் வசிப்பிட டேபிளில் தென்படும் ஆல்பர் காம்யூவின் அந்நியன் நாவல் புத்தகம்……….

அப்புத்தகத்தின்படி நகரும் இப்படத்தின் இறுதிக்கட்டக்காட்சி……….

பார்க்கும் ஒவ்வொருவருக்கும் விளம்பர இடைவேளையின்றி நகரும் படம்…

சேனல்களை மாற்ற முடியாத ரிமோட்…

ஏழு வயது சிறுவனாகவே இருந்து

ஏழு வயது சிறுவனாகவே மடிந்து போகும் மனோநிலை…

என வித்தை காட்டியிருக்கிறார் ராம்.

ஆனால் இதையெல்லாம் எழுதினால் எனது பெயரும் சைக்கோ.

ஆக சைக்கோக்களே சாதியின் பெயரால் மனிதர்களை குடிசையோடு கொளுத்தாதவர்கள்……….

ஆக சைக்கோக்களே மதங்களின் பெயரால் கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றைக் கிழித்து சிசுவை வெளியில் இழுத்துக் கூறுபோடாதவர்கள்……….

ஆக சைக்கோக்களே இனத்தின் பெயரால் மழலைகள் பயிலும் பாடசாலைகளின் மீது குண்டு வீசி கொன்றழிக்காதவர்கள்……….

ஆக நாமும் ஒருவகையில் சைக்கோக்கள்தான்.

நன்றி: நக்கீரன்.காம்