அப்ஜக்சன் யுவர் ஹானர்……

இது மாதிரி காரியங்களுக்குப் பரிகாரம் தேட வேண்டுமானால் நாம் சட்டத்தை நினைக்கக்கூடாது. நாம் எடுத்துக் கொண்ட காரியம் நியாயமானதா? அநியாயமானதா? முயற்சி எடுக்க வேண்டுமா? வேண்டாமா? என்றுதான் யோசிக்க வேண்டுமேயொழிய சட்டத்தைப் பற்றி நினைக்கக்கூடாது. அதைப் பார்த்தால் நாம் ஒன்றும் செய்ய முடியாது.

– 23.10.1960 திருச்சியில் நடைபெற்ற அய்க்கோர்ட் நீதிப்போக்குக் கண்டன நாள் பொதுக்கூட்டத்தில் தந்தை பெரியார் ஆற்றிய உரை.

 

 

 

அப்ஜக்சன் யுவர் ஹானர்

-பாமரன்

ஆக –
நீதி அரசர் அகர்வாலுக்கு நன்றி சொல்ல வேண்டிய வேளை இது.
ஆண்டாண்டு காலமாக அங்கொன்றும் இங்கொன்றுமாக முணுமுணுக்கப்பட்ட நீதித் துறை மீதான விமர்சனங்களை வெகுமக்கள் திரளுக்குள் கொண்டு சென்றதற்காகவே அவரைப் பாராட்ட வேண்டும்.
அதுவும் ஞாயிற்றுக் கிழமையன்று உச்ச நீதி மன்றத்தின் கதவுகளை அகலத் திறந்து வைத்து நீதி வழங்கக் காத்திருந்த செயல் நீதி பரிபாலனத்தின் மீது அவர்களுக்குள்ள அளவு கடந்த அக்கறையை உலகுக்கு உரத்துச் சொன்னது.

“இதே ஜெயலலிதா ஆட்சியில் வக்கீல் விஜயன் இட ஒதுக்கீட்டிற்கு எதிராக வழக்குத் தொடுத்து பல லட்சம் மாணவர்களது எதிர்காலமே கேள்விக் குறியாகி தவித்த வேளையில் கதவுகளைத் திறக்காத நீதி மன்றம்………

அறுபதாண்டு காலமாக மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் சமூக நீதி மறுக்கப்படுவதைக் களைவதற்காக கதவுகளைத் திறக்காத நீதி மன்றம்………

ஒரு கடையடைப்புக்கு
அல்லது
ஒரு உண்ணாவிரதத்திற்காக
கதவுகளைத் திறந்து வைப்பதா?” என்று எவராவது கிசுகிசுத்தால் கூட அது அப்பட்டமான கோர்ட் அவமதிப்பு என்பதை உணரக் கடவார்களாக.

ஆனாலும் உச்ச நீதி மன்ற நீதிபதி கொஞ்சம் அதிகமாகவே உணர்ச்சிவசப்பட்டு விட்டார் என்பது எல்லோருக்குமே அப்பட்டமாகத் தெரிந்துதான் போயிற்று.

“தமிழகத்தின் தற்போதைய நிலவரம் என்ன?” என்று எதிரே நிற்கிற தமிழக அரசின் வழக்கறிஞரைக் கேட்டிருக்கலாம்………

சென்னை உயர் நீதி மன்றத்தைத் தொடர்பு கொண்டு “உண்மை நிலையைத் தெரிவியுங்கள்” என்று உத்தரவு பிறப்பித்திருக்கலாம்.

அதன் பிறகு தனது வாயைத் திறந்திருக்கலாம்.

அதையெல்லாம் விட்டுவிட்டு………
‘தமிழகத்தில் என்னதான் நடந்து கொண்டிருக்கிறது?’
‘தமிழக ஆட்சியைக் கலைப்பதற்கு மத்திய அரசு கூச்சப்படக் கூடாது’
என்றெல்லாம் “அருள் வாக்கு” சொன்னது வாக்களித்த மக்களை மட்டுமல்ல அனைவரையுமே கிள்ளுக்கீரையாக நினைத்த செயல்.

மாங்குயில் கூவிடும் பூஞ்சோலை
எம்மை மாட்ட நினைக்கும் சிறைச்சாலை………
என்றெல்லாம் மற்ற நேரங்களில் முழங்கும் தமிழக முதல்வர் “நடப்பது உண்ணாவிரதம்தான். உண்ணாவிரதத்திற்கு தடை என்று சொல்லவில்லை அவர்கள். சொல்லியிருந்தால் அதையும் ஏற்றுக் கொண்டிருப்போம்” என்று அவர்களது
அத்துமீறலைக் கண்டிக்காமல் விட்டது அவரது சாதுர்யத்தைக் காட்டலாமேயொழிய
பெரியாரின் பாசறையிலிருந்து பெற்றதாகக் கூறும் “துணிச்சல்” அப்போது எங்கே போயிற்று? என்கிற கேள்வி நம்முள் எழாமலில்லை.

காமராசர் ஆட்சிக் காலத்தில் அழகிரிசாமி அவர்களை அரசு வழக்கறிஞராக நியமித்ததை வரம்புக்கு மீறி கண்டித்த நீதிபதிகளுக்கு எதிராக பொங்கி எழுந்தார் பெரியார் 1960 ல்.

“நான் பேச வந்திருப்பது மிகவும் கடினமான விஷயம் . இந்த விஷயம் நான் பேசியதற்காக கண்டிப்பாக நான் ஜெயிலுக்குப் போக வேண்டியிருக்கும் என்பது எனக்குத் தெரியும். தங்களுக்குப் பாதுகாப்பு இருக்கிறது என்பதற்காகவே பலர் மிக மிக நேர்மைக்கேடாய், அக்கிரமமாக நடந்துகொண்டு வந்தால், அதை எதிர்த்து ஒழிக்க நம்மால் கையாலாகாவிட்டாலும் அந்த நேர்மைக்கேட்டை அக்கிரமம் என்று சொல்லக்கூடவா நமக்கு யோக்யதை இல்லை? யோக்யதை என்பது அதனால் வரும் கஷ்ட நஷ்டத்தை அனுபவிக்கத் தயாராயிருப்பதுதான். அதனால் முன்பு ஒருமுறை எடுத்துக் கூறித் தண்டனை அடைந்த அதே காரியத்தை, இரண்டாவது தடவையாகச்  செய்து தண்டனை அடைந்து ஜெயிலுக்குப் போக வேண்டிய அவசியம் உள்ளவனாக இருக்கிறேன்” என்று துணிந்து எழுந்தார் பெரியார்.

அன்று அவர் போட்டுக் கொடுத்த ராஜபாட்டையில்தான் இன்றிருக்கும் “குறைந்தபட்ச ஜனநாயகமும்” நடை போட்டுக் கொண்டிருக்கிறது.

அன்று மட்டுமில்லை இன்றும் அருந்ததிராய் போன்ற வீராங்கனைகள் நீதித் துறையின் செயல்பாடுகள் பற்றி துணிச்சலாக அடித்துத் துவைத்து காயப்போட்டுக் கொண்டுதானிருக்கிறார்கள்.

சரி அப்படியே ஒரு உச்ச நீதி மன்ற நீதிபதி சொல்லிவிட்டால் அந்த ஆட்சியைக் கலைத்துவிட வேண்டியதுதானா?
அவர்களுக்கு யார்  அந்த அதிகாரத்தை கொடுத்தார்கள்.?
இந்த ஆட்சி நீடிக்க வேண்டுமா…கூடாதா என்பதைத் தீர்மானிக்க வேண்டியது மக்களுக்குத்தான் இருக்கிறதேயொழிய அந்த உரிமை வேறு எந்தக் கொம்பனுக்கும் கிடையாது.

ஏன் அந்த உரிமை மத்திய அரசுக்குக்கூட இல்லை.

மறைந்த சோமப்ப ராயப்ப பொம்மை வழக்கில் 356 சட்டப் பிரிவை தவறாகப் பயன்படுத்துவதற்கு எதிராக உச்சநீதி மன்றம் கொடுத்த வழிகாட்டுதல்கள் பற்றி உச்ச நீதி மன்றத்திலேயே இருக்கும் நீதிபதிக்குத் தெரியாமல் போனது எப்படி?
“55 ஆண்டுகளாகப் பொறுத்திருந்தீர்களே………
இன்னும் பொறுத்திருக்கக் கூடாதா?” என்று இன்னமும் வந்து சேராத உயர் கல்வி ஒதுக்கீடுக்காக படியேறியவர்களைப் பார்த்துக் கேட்ட உச்ச நீதி மன்றம்………
வெறும் ஒரு உண்ணாவிரதத்திற்கு எதிராக படியேறியவர்களை வெத்திலை பாக்கு வைத்து வரவேற்று “அவமதிப்பு வழக்கை தனியாகத் தாக்கல் செய்யுங்கள்” என்று மந்திராலோசனை வேறு வழங்குகிறது என்றால்… என்னே நீதி?

சேதுசமுத்திரத் திட்ட வழக்காகட்டும்………
இட ஒதுக்கீட்டுக்கான வழக்காகட்டும்………
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆவதற்கான வழக்காகட்டும்………
என எதுவும் முடிவில் போய் மாட்டிக் கொள்ளும் ஒரே இடம் உச்சநீதி மன்றம்தான்.

இதற்கெல்லாம் முடிவு கட்ட ஒரே வழி நீதித் துறையில் கொண்டு வந்தே தீர வேண்டிய இடஒதுக்கீடுதான்.

+2 மாணவர்கள் எழுதிய விடைத்தாளை
+2 மாணவர்களை விட்டே மதிப்பெண் போடச் சொல்வது எவ்வளவு அபத்தமோ
அவ்வளவு அபத்தம்
உச்சநீதி மன்ற நீதிபதிகளைக் கொண்டே
உச்சநீதி மன்ற நீதிபதிகளைத் தேர்ந்தெடுப்பதும்.

வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் மாஜிஸ்ட்ரேட் பதவிகளோடு மட்டும் முற்றுப் பெறாமல்
அது உயர்நீதி மன்ற நீதிபதிகள் நியமனம் தொடங்கி உச்சநீதி மன்ற நீதிபதிகள் நியமனம் வரையிலும் நீட்டிக்கப்பட்டாக வேண்டும்.

அப்போதுதான் சமூக நீதி என்பதே சாத்தியப்படும்.
அதுவரை இவைகள் “ஒரு சமூகத்தின் நீதி” என்பதாகவே மட்டுமே அர்த்தப்படும்.

 

 

 

 

நன்றி: விழிப்புணர்வு மாத இதழ். 

 

3 thoughts on “அப்ஜக்சன் யுவர் ஹானர்……

  1. நீங்க சொன்னதெல்லாம் நிசந்தானுங்கோ, பூனைக்கு யாரு மணி கட்டுறது, எப்ப நடக்கும், சொதந்திரம் அப்பிடின்னு ஒன்னு நம்க்கெல்லாம் கிடச்சமாறி பீலிங்கே இல்லங்க, தேடி சோறு நிதந்தின்னுன மாதிரி தான் போகுது

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s