கல் தோன்றி மண் தோன்றா….

முன் தோன்றிய மூத்த குடியின் நெடிதுயர்ந்த வரலாறுகளும்….
விட்டு வந்த தடங்களும்….
இமயம் சென்று மீன் கொடி பொறித்த வீரங்களும்….
காகிதங்களில் மட்டுமே மின்னிக் கொண்டிருக்க….
இக்குடிகளின் இன்றைய வாழ்வோ “சிறப்பிதழ்”

போட்டுச் சொல்லவேண்டிய லட்சணத்தில் இருக்கிறது.

தமிழர்களது மனோ நிலையை அலசுவதில் மட்டுமில்லை….முதலில் யார் தமிழர் என்பதிலேயே ஏகப்பட்ட சிக்கல்கள். தமிழ் பேசும் மக்கள் ஆளுக்கொரு மார்க்கங்களைத் தத்தெடுத்துக் கொண்டாலும் அனைவருமே அடிப்படையில் தமிழர்கள்தான் என்கிற புரிதல்கூட பலரிடம் தொலைந்து போயிருக்கிறது.

பானிப்பட்டு போர்களையும், அசோகர் நிழல் தரும் மரங்களை நட்டதையும், சோமநாதபுரப் படையெடுப்புகளையும் படித்த தமிழர்கள் தங்களது சொந்த வரலாறுகளை படிக்கத் தவறியதன் விளைவுதான் “எதுக்குங்க இன்னைக்கும் ஜாதி ரீதியா ஒதுக்கீடு?” என்கிற கேள்விகள்.

தனது பாட்டனுக்கும் முப்பாட்டனுக்கும் இதே சாதியின் பெயரால்தான் கல்வி மறுக்கப்பட்டது என்பதையோ….
இதே சாதியின் பெயரால்தான் தோளில் தொங்க வேண்டிய துண்டுகளை கக்கத்தில் இடுக்கிக் கொண்டார்கள் என்பதையோ….
இதே சாதியின் பெயரால்தான் காலில் இருக்க வேண்டிய செருப்புகளை கையில் சுமந்தார்கள் என்பதையோ….
சாலையில் நடக்கக்கூட அனுமதி மறுக்கப்பட்டார்கள் என்பதையோ….
உணவகங்களில் தனியே உட்கார வைக்கப்பட்டார்கள் என்பதையோ….
இப்’புதிய’ தமிழர்கள் உணரவுமில்லை.
முன்னர் உதை வாங்கிய தமிழர்கள் உணர்த்தவுமில்லை.
எதன் பேரால் இவர்களது உரிமைகள் மறுக்கப்பட்டனவோ அதன் பேராலேயே இழந்தவைகளை மீட்பதுதான் சமூக நீதி என்பதைப் புரிய வைக்க வேண்டியிருக்கிறது.

எதிரிகளுக்கு அல்ல.
நண்பர்களுக்கு.

இதிலும்  நாம்  சோம்பி  இருக்கும்  போது பல்வேறு சிக்கல்களை புதிது புதிதாய்க் கொடுத்து உசுப்பேற்றிவிடத் தயங்காதது உச்ச நீதி மன்றம் ஒன்றுதான்.

அடுத்து சுற்றுச் சூழல் சீரழிவு சமாச்சாரங்கள்….தமிழர்களைப் பொறுத்தவரை இது யாருக்கோ…எங்கோ நிகழ்ந்து கொண்டிருப்பதாகத்தான் நினைவு. இவர்களது அதிகபட்ச சுற்றுச் சூழல் குறித்த விழிப்புணர்வு என்பது பிளாஸ்டிக் பொருட்களை வீதிகளில் வீசக்கூடாது என்பதுதான். தனக்கு மட்டுமில்லை என்றென்றைக்கும் சந்ததி களுக்கும் சேர்த்து உலை வைக்கும் அணு உலைகள் குறித்தோ….அதனது கதிரியக்க பயங்கரங்கள் குறித்தோ….எவ்விதப் புரிதல்களுமில்லை இவர்களிடம். ஒரு போபால் விஷ வாயுப் பேரழிவைக்கூட  தாங்க முடியாத இத்துணைக்கண்டம் ஒருவேளை கதிரியக்கக் கசிவுக்கு  ஆளாக நேர்ந்தால் என்ன கதியாகும்மென்பதுகூட அக்கறை இல்லை. அக்கொடூரம் தப்பித்தவறி நடந்தால் நாளை “கவர் ஸ்டோரி” போடுவதற்குக்கூட பத்திரிக்கைகள் இருக்காது என்பது வேறு சமாச்சாரம்.

‘அடி  உதவற  மாதிரி அண்ணன் தம்பி உதவமாட்டான்’ போன்ற “பொன்மொழிகள்” ஏற்கெனவே தமிழர்களது மன அடுக்குகளில் புதையுண்டு கிடப்பதால் மனித உரிமை குறித்த ‘ஞானம்’ அளவிடற்கரியது. காவலில் சித்திரவதைகளோ….லாக்கப் மரணங்களோ….என்கவுண்ட்டர்களோ….எதுவாயினும் ஒடுக்குகின்ற அதிகார வர்க்கத்தின் பக்கமே நின்று பழகியாயிற்று. அப்புறம் மனித உரிமைன்னா கிலோ என்ன விலை என்று கேட்காமல் இருப்பார்களா நம்மவர்கள்.? போதாக்குறைக்கு போலீஸ் டாக்குமெண்டரி படங்களாக  ஒதுக்கித் தள்ள  வேண்டிய  குப்பைகள் கூட கோடம்பாக்கத்திலிருந்து வெகு ஜன சினிமாவாக வெற்றி வலம் வரும்போது அவைகள்தான் தமிழர்களது மூளைகளில் இத்தகைய ரசாயண மாற்றங்களை நிகழ்த்தியிருக்கும் என சொல்லத் தேவையில்லை. மனித உரிமைகள் விஷயத்தில்கூட கட்சி கட்டிக் கொண்டு பிரிந்து நிற்கும் போக்குதான்  அசாதாரணத்  தமிழர்களான   அறிவுஜீவிகள்   மத்தியிலும்  நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

மரணதண்டனைக்கு எதிரான பிரச்சாரங்களில் கூட….

அப்சலின் மரணதண்டனையை எதிர்ப்பவர்கள்
பேரறிவாளனது மரணதண்டனையை எதிர்ப்பதில்லை.
பேரறிவாளனது மரணதண்டனையை எதிர்ப்பவர்கள்
அப்சலின் மரணதண்டனையை எதிர்ப்பதில்லை.

இதில்  தமிழக  அறிவுஜீவிகள்  கடைபிடிக்கும் கள்ள மௌனத்திற்கெனவே தனியானதொரு விருது வழங்கலாம்.

நடிகை குஷ்புவின் கருத்துச் சுதந்திரத்திற்காகக் கும்மியடித்த “மனித உரிமை”ப் “போராளிகள்” கூட நடிகை ஜெயமாலாவின் வழிபடும் உரிமை மறுக்கப்படும் போது வாயையும் மற்றதையும் இறுகப் பொத்திக் கொள்கிறார்கள்.

தமிழர்களது வரலாற்று அறிவு மட்டுமில்லை ….
பூகோள அறிவும் ‘சுடர்விட்டுப் பிரகாசிக்கும்’ அவலம் தெரிந்துதான் அச்சுதானந்தன்கள் வாலாட்டுகிறார்கள்.

அண்டப்புளுகு ஆகாசப்புளுகுகளுக்கு மேலே இனி
அச்சுதானந்தப் புளுகுகளையும் சேர்த்துக் கொள்ளலாம். தவறில்லை.

இல்லாவிட்டால் கடல் மட்டத்திலிருந்து ஏறக்குறைய 2500 அடி உயரத்தில் இருக்கும் முல்லைப் பெரியாறு அணை உடைந்தால்…..
3000 அடிக்கு மேலிருக்கும் மூன்று மாவட்டங்கள் மூழ்கிப் போகும் என்று அவிழ்த்து விடுவாரா தனது புளுகு மூட்டையை….?

தண்ணீர் மேட்டிலிருந்து பள்ளத்திற்குப் பாய்வதற்கு பதிலாக
பள்ளத்திலிருந்து மேட்டிற்குப் பாய்கின்ற இத்தகைய விநோதங்களை
சர்வதேசியக் கொள்கையையே தனது மலையாளக் கோடாரியால்
காவு வாங்கிய அச்சுதானந்தன்களிடம்தான் நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.

பண்டைக்கால சோம பான….சுரா பான சமாச்சாரங்கள் ஒரு புறம் இருக்க…..
“தமிழ்நாட்டில் மதுக் கடைகள் திறக்கும் அபாயம்”
என 38 ஆண்டுகள் முன்பு அலறிய பத்திரிக்கைகள்……
இன்று 
“தமிழ்நாட்டில் மதுக் கடைகளை மூடும் அபாயம்”
என்று அலறுகின்றன.

எந்த அபாயமும் உலகமயமாகும்போது
புதிய பரிமாணங்கள் பெறும் போலும்.

எனவேதான் இளநீர் விற்றுப் பிழைத்தவர்கள்
பூச்சி மருந்தினைக் குடித்துப் “பரலோகம்” போக….
புதிய தமிழர்களோ பூச்சி மருந்து கலந்த பானம் பருகி
“சொர்க்கலோகம்” காண்கிறார்கள்.

ரியல் எஸ்டேட்டுகளுக்கும்….
“ஏழைக்” குழந்தைகளின் விளையாட்டிற்கான ‘தீம் பார்க்’குகளுக்கும் ….
விளை நிலங்களை வளைத்தது போதாதென்று
“சிறப்புப்” பொருளாதாரங்களூக்கான மண்டலங்களின் ஆரவார வருகை.
பொருளாதாரத்தை உயர்த்துகிறதோ இல்லையோ ஆனால் இம்மண்டலங்களின் வருகை  நிச்சயம் பல லட்சம் பேரை கமண்டலம் தூக்க வைத்து விடும் என்பது மட்டும் புரிகிறது.

தமிழாய்ந்த தமிழ் மகன்தான் தமிழ்நாட்டின் தலைமகனாய் வருதல் வேண்டுமென்றாராம் கனக சுப்பு ரத்தினம்.
வருவது தமிழாய்ந்த தமிழ் மகனாய் இருந்தாலும் சரி.
தமிழாயாத கன்னட மகளாயினும் சரி
“சிறப்புப் ” பொருளாதார மண்டலங்களுக்காக விளை நிலங்களை தாரை வார்த்துத் தந்தாகவே வேண்டும்.

நாட்டின் “வளர்ச்சியின்” நிமித்தம் கையளவு நிலங்களைக் கூட பறி கொடுத்த விவசாயிகள் இனி “சிறப்புப்” பொருளாதார மண்டலங்களில் பகல் ஷிப்டோ….இரவு ஷிப்டோ….வாட்ச்சுமேன் வேலைக்கு மனுப் போடலாம். “நாடென்ன செய்தது உனக்கு என்று கேள்விகள் கேட்பது எதற்கு? நீயென்ன செய்தாய் அதற்கு என்று உன்னை நீயே கேட்டுக்கொள்….கேட்காமல் அடம் பிடித்தால் நந்திகிராமில் கிடைத்த “பரிசுதான்” உனக்கும்…. என்கிறது அரசு.

இந்த லட்சணத்தில் தெருவில் பிச்சை எடுத்து உயிர்வாழும் பிச்சைக்காரர்களை சுற்றி வளைத்து கைது செய்யப்போகிறார்களாம்.
நல்லது. மிக நல்லது.
பிச்சையெடுக்கலாமோ…அதுவும் தெருவில்?
தெருவில் பிச்சை எடுப்பவர்களுக்குப் பெயர் பிச்சைக்காரர்கள் என்றால் உலக வங்கி தொடங்கி சகல வங்கிகள் வரையிலும் எடுக்கும் நிதியமைச்சர்களை என்னவென்று அழைப்பது?

ஆக…..

59 வருடங்கள் கடந்தாலும் இன்றோ நாளையோ என இழுத்துக்கொண்டு இருக்கும் சமூக நீதிச் சிக்கல்கள்….

“இப்படி ஒரு இனம் இருந்தது” என்பதற்குக்கூட அடையாளமற்றுப் போகச் செய்வதற்காகக் காத்திருக்கும் அணு உலை அபாயங்கள்….

மனித குலத்தையே தலை கவிழச் செய்யும் உரிமை மீறல்கள்….

நீரின் இயற்கையான ஓட்டத்தைக் கூட தடுத்து நிறுத்தும் அண்டை மாநிலங்களின் அத்துமீறல்கள்….

என
எதுவும் பிரச்சனையில்லை தமிழனுக்கு.

இவனுக்கு விடியும் போதே சினிமாவோடு விடிகிறது.
முடியும்போதும் சினிமாவோடுதான் முடிகிறது.
எங்கும் சினிமா. எதிலும் சினிமா.

தமிழகத்தின் எந்தப் பகுதியில் எடுத்தாலும் இரண்டு நண்பர்களது சந்திப்பு “கடைசியா என்ன படம் பார்த்தே?” என்கிற கேள்வியில்லாமல் முடிவதில்லை.

கணவன் – மனைவிகளது செம்புலப் பெயல் நீர் வாழ்க்கை
மாதத்திற்கு ஒரு திரைப்படம் இன்றி முடிவடைவதில்லை.

இன்பச்  சுற்றுலாக்கள் ஒருவர் “கா” வில் ஆரம்பித்து வைக்க மற்றொருவர் “உ”வில் தொடரும் “பாட்டுக்குப் பாட்டு” விளையாட்டுக்களின்றி முற்றுப் பெறுவதில்லை.

இவர்களது திருமணங்கள் திரைப்பாடல்களுக்கான கச்சேரிகளின்றி அரங்கேறுவதில்லை.

இவர்களது திருமண வீடியோக்கள் பின்னணியில் திரைப்படப் பாடல்களின்றி நிரப்பப்படுவதில்லை.

தமிழர்களைப் பொறுத்தவரை ஆடுவது என்பது
திரைப்படத்தில் வருவது போல் ஆடுவது.

பாடுவது என்பது திரைப்படத்தில் பாடுவது போல் பாடுவது.

காதல் கொள்வது என்பது
திரையில் நாயகர்கள் கொள்வது போல் கொள்வது.

வாழ்வது என்பதும் திரையில் வாழ்வதைப் போல் “வாழ்வது”.

மொத்தத்தில் முகம் தொலைத்தது ஒரு இனம்.

தை 1 அறுவடைத் திருநாள்தான் தமிழனின் ஆண்டுப் பிறப்பு என்கிற அறிவுகூட இன்றி
ஜனவரி   ஒன்றிற்கும்,  சித்திரை ஒன்றிற்கும்  வாழ்த்தும்  தமிழனை   என்னவென்று சொல்வது?
பிரஜோற்பதியும்  – ஆங்கிரஸவும்  – ஸர்வஜித்தும்   தமிழ் மாதங்கள்தான் என நம்பிக்கொண்டிருக்கும் நிலைக்கு எங்கே போய் முட்டிக் கொள்வது?
இதில் முல்லைப் பெரியாறாவது….முருங்கைக்காய் சாம்பாராவது…..

நயன்தாரா – சிம்பு உறவின் கதி ஏன் இப்படிப் போயிற்று….?
கமலின் 7 அடி நீள தசாவதார கெட்டப்புகள் எப்படி….?
சிவாஜி படப் பாடல் சி.டி. எத்தனை லட்சம் விற்றது….?
நாம் திருவோட்டோடு திரிந்தாலும் இந்தமுறை உலகக் கோப்பை யாருக்கு….?
என எண்ணற்ற தலையாய பிரச்சனைகள் முன் தோன்றி மூத்த குடிக்கு இருக்கும் போது மற்ற “சாதாரண” பிரச்சனைகளைக் கவனிக்க அவர்களுக்கு ஏது நேரம்?

இதில் மலத்தின் மீது சாம்பல் கொட்டி
தகரத்தில் சுரண்டி  எடுத்து
கூடையில் அள்ளிச் சுமக்கும் மனிதர்கள் மீது என்ன அக்கறை?

ஆனால்…..
இதில் மட்டுமில்லை நாம் புலம்பித் தீர்த்த சகல விஷயங்களிலும்
அக்கறையும் கவலையும் கொண்ட….
மானுடத்தின் மீது தீராத காதல் கொண்ட….
வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் தானும் வாடும்
மனித நேயர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
அவர்கள் எண்ணிக்கையில் குறைந்தவர்களாக இருக்கலாம்.

இருந்தாலும்
அவர் பொருட்டே பெய்கிறது இம் மழை.
 

 நன்றி:         ” த சண்டே இந்தியன்” வார இதழ்

14 thoughts on “கல் தோன்றி மண் தோன்றா….

 1. ஒரு கட்டுரையில் இடஒதுக்கீடு,உச்ச நீதி மன்றம்,சுற்றுச் சூழல் சீரழிவுகள்,மனித உரிமை, பெண்ணியம்,சிறப்புப் பொருளாதார மண்டலம்…..என எல்லா பிரச்சனைகளை மிக சிறப்பாக தொய்வின்றி உங்களால் மட்டுமே எழுத முடியும் நண்பரே.. ஏற்கனவே வாசித்திருந்தாலும் சிறப்பான கட்டுரை தோழரே..படித்ததும் – கிழித்ததும் மிக சிறப்பாக இருக்கிறது- ஆயினும் இது போல “கட்டுரை வடிவில்”இருக்கும் உங்கள் எழுத்து தான் சிறப்பு!!!!!

 2. ஒரே கட்டுரையில் பல பிரச்சனைகளை பற்றி எழுதியுள்ளிர்கள், நல்ல கருத்துக்கள்

 3. இனிய பாமரன்,
  தொடர்ந்து சமூக அவலங்களையும் தமிழனத்தின் வெட்க கேடான செயல்களையும் கடுமையாய் விமர்சிக்கும் உங்களின் பதிவுகளை வரவேற்கிறோம். வாழ்த்துக்கள்.
  தோழமையுடன்,
  முரளி.

 4. அன்பு பாமரன் அவர்களுக்கு,

  உங்களது பெரும்பான்மையான கட்டுரைகளை படிக்கும்போது சமூக அக்கறையுடன் எழுதுகிறீர்களா அல்லது கிண்டலுக்காக மட்டுமே எழுதுகிறீர்களா என அவ்வப்போது ஐயம் ஏற்படுவதுண்டு.

  உங்களது கல் தோன்றி .. கட்டுரை எவ்வளவு தூரம் ஒரு இனம் தனது அடையாளத்தை இழக்க முடியும் அல்லது இழந்துள்ளது என்பதை தெளிவாக எடுத்துக்காட்டி உள்ளீர்கள்.

  // மரணதண்டனைக்கு எதிரான பிரச்சாரங்களில் கூட….

  அப்சலின் மரணதண்டனையை எதிர்ப்பவர்கள்
  பேரறிவாளனது மரணதண்டனையை எதிர்ப்பதில்லை.
  பேரறிவாளனது மரணதண்டனையை எதிர்ப்பவர்கள்
  அப்சலின் மரணதண்டனையை எதிர்ப்பதில்லை//

  உண்மை. எப்படி தமிழனாய் ஒன்றாய் இருந்த இனம் இன்று ஜாதி வாரியாய் மதவாரியாய் பிரிந்து ஒருவருக்கொருவர் காட்டிக்கொடுத்து வாழும் கிழ் நிலைக்கு ஆளானோம் எனப்புரியவில்லை.

  //அச்சுதானந்தப் புளுகுகளையும் சேர்த்துக் கொள்ளலாம். தவறில்லை.

  இல்லாவிட்டால் கடல் மட்டத்திலிருந்து ஏறக்குறைய 2500 அடி உயரத்தில் இருக்கும் முல்லைப் பெரியாறு அணை உடைந்தால்…..
  3000 அடிக்கு மேலிருக்கும் மூன்று மாவட்டங்கள் மூழ்கிப் போகும் என்று அவிழ்த்து விடுவாரா தனது புளுகு மூட்டையை….?//

  இது எனக்குப் புதிய தகவல்.

  //59 வருடங்கள் கடந்தாலும் இன்றோ நாளையோ என இழுத்துக்கொண்டு இருக்கும் சமூக நீதிச் சிக்கல்கள்….//

  “இப்படி ஒரு இனம் இருந்தது” என்பதற்குக்கூட அடையாளமற்றுப் போகச் செய்வதற்காகக் காத்திருக்கும் அணு உலை அபாயங்கள்….

  மனித குலத்தையே தலை கவிழச் செய்யும் உரிமை மீறல்கள்….

  நீரின் இயற்கையான ஓட்டத்தைக் கூட தடுத்து நிறுத்தும் அண்டை மாநிலங்களின் அத்துமீறல்கள்….//

  இவை எதுவுமே பிரச்சினை இல்லை தமிழனுக்கு … உண்மை நண்பரே..

  //இவனுக்கு விடியும் போதே சினிமாவோடு விடிகிறது.
  முடியும்போதும் சினிமாவோடுதான் முடிகிறது.
  எங்கும் சினிமா. எதிலும் சினிமா.

  தமிழகத்தின் எந்தப் பகுதியில் எடுத்தாலும் இரண்டு நண்பர்களது சந்திப்பு “கடைசியா என்ன படம் பார்த்தே?” என்கிற கேள்வியில்லாமல் முடிவதில்லை.

  கணவன் – மனைவிகளது செம்புலப் பெயல் நீர் வாழ்க்கை
  மாதத்திற்கு ஒரு திரைப்படம் இன்றி முடிவடைவதில்லை.

  இன்பச் சுற்றுலாக்கள் ஒருவர் “கா” வில் ஆரம்பித்து வைக்க மற்றொருவர் “உ”வில் தொடரும் “பாட்டுக்குப் பாட்டு” விளையாட்டுக்களின்றி முற்றுப் பெறுவதில்லை.

  இவர்களது திருமணங்கள் திரைப்பாடல்களுக்கான கச்சேரிகளின்றி அரங்கேறுவதில்லை.

  இவர்களது திருமண வீடியோக்கள் பின்னணியில் திரைப்படப் பாடல்களின்றி நிரப்பப்படுவதில்லை.

  தமிழர்களைப் பொறுத்தவரை ஆடுவது என்பது
  திரைப்படத்தில் வருவது போல் ஆடுவது.

  பாடுவது என்பது திரைப்படத்தில் பாடுவது போல் பாடுவது.

  காதல் கொள்வது என்பது
  திரையில் நாயகர்கள் கொள்வது போல் கொள்வது.

  வாழ்வது என்பதும் திரையில் வாழ்வதைப் போல் “வாழ்வது”.

  மொத்தத்தில் முகம் தொலைத்தது ஒரு இனம்.//

  எவ்வளவு உண்மை இதில்… என் இப்படி சினிமாக்காரர்களின் அடிமைகளாய் ஆனோம் என புரியவே இல்லை.

  //இருந்தாலும்
  அவர் பொருட்டே பெய்கிறது இம் மழை.//

  எனவே இன்னும் நம்பிக்கை போய்விடவில்லை..

  நல்ல கட்டுரை பாமரன்…

  தொடர்ந்து எழுதுங்கள்.

  வாழத்துக்களுடன்

  ஜெயக்குமார்

 5. குமுதம் படிக்கும் போதெல்லாம் பாமரத்தனமில்லாமல் டோஸ் விடும் பாமரன் யார் என்ற கேள்வியெல்லாம் எழவில்லை.ஆனால் விசய ஞானத்துடன் எழுத்துக்கும் அப்பால் உற்று நோக்கும் போது இது எனது கொல்லையில் பூத்த முல்லை என்பது பிரமிப்பாக உள்ளது.

 6. உங்கள் பதில்கள் அடங்கிய மின்னூலைப் படித்தேன்.. அருமையான உங்களுக்கே உரித்தான அட்டகாசமான, சிந்திக்க வைத்த பதில்கள். குறிப்பாக “இந்தியா வல்லரசு ஆவதைப் பற்றிய பதில்” அதில் உள்ள நுட்பம் அருமை சார்.
  அன்புடன்
  வினையூக்கி
  http://www.vinaiooki.com

 7. SHAAMI…SHAAMI..ennaku oru unmai therinjaaganum..eppo thaan update pannalaam endru ninaippu?
  vaarathirkku oru muraiyaavathu update pannunga thozhaa….daily vanthu paarthuvittu yemaatraththudan sella vendi irukku..

  thozhamaiyudan
  kuppan.

 8. அன்புத் தோழர்.குப்பன் அவர்களுக்கு,

  அடுத்த வாரம்
  நிச்சயம் பதிவிடுவேன்.
  காக்க வைத்தமைக்கு மன்னிக்க.

  தோழமையுடன்,
  பாமரன்.

 9. அன்பு பாமரனுக்கு,
  வலைப்பதிவில் உங்களைப் பார்ப்பதில் மிகவும் மகிழ்ச்சி…இத்தனை நாளாய் உங்கள் வலைத்தளம் இருப்பது தெரியாமல் போய்விட்டது..இப்போது என் நண்பர்களுக்கும் இதை அறிமுகப்படித்தியிருக்கிறேன் ..

  சுயதம்பட்ட, கீழ்த்தர காழ்ப்புணர்ச்சி வலைப்பதிவுகளுக்கு நடுவில் உங்களுடையது மிகப்பெரிய ஆறுதல் எமக்கு..
  அடிக்கடி எழுதவும்(கிழிக்கவும்!) ..மீண்டும் சிந்திப்போம்..
  அன்புடன்,
  ஏகாந்தன்.

 10. வினையூக்கி அவர்களே, மின்னூலை படிக்க உதவ முடியுமா? அதன் இணைய முகவரியை தெரிவிக்க இயலுமா? – நாகூர் இஸ்மாயில்

 11. Nanbare,

  Thaangal ezhuthi konde irungal……..Naangal thookam varavillai endral ithanai padithu pozhuthu pokkugirom………Engalukku suyamariyaathai endra vaarthai maranthu pooi niraiya naalayitru.Soranaiyum (Aduthavan moonjoyil seruppaal adikkum podhu) konjamaaithaan etti paarkirathu.Engalukku unmai pidikaathu.aanaal pizza-vum ,coke-um pidikkum (pidikkavillai endralum piditha maathiri nadippom)

  Adutha murai Tamizh font ezhuthugiren.
  Enaal mudinthavatrai (oru thani manithanaaga) kandippaaga seiven ena thangalidam solvathil perumai adaigiren

  Rajan

 12. பாமரன் அவர்களே,

  அணு உலைகள் சரியாக கட்டப்பட்டு, போதிய பாதுகாப்புகள் செய்யபடாமல் செயல்பட்டால், செர்னோபிள் போல் மிக கொடிய விபத்துகள் நேர வாய்ப்பு உண்டு.
  அனால் நமக்கு மின்சாரம் ஏற்கனவே பற்றாக்குறை. நில்க்கரி மின் உலைகள் சுற்று புற‌ சூழலை மேலும் நாசமாக்குகிறது. பின் என்னதான் செய்வது ? மின்சாரம் இல்லாமல்,
  பழைய படி மாட்டு வண்டியிலும், எண்ணை அகல் விளக்குகளில் ஒளி பெற்றும் வாழ வேண்டியதுதான் !! விவசாயிகள் பம்ப் செட் இல்லாமல் மாடு பூட்டி நீர் ஏற்றம் செய்து போதிய தானியம் உற்பத்தி செய்ய முடியுமா ?

  வாரத்திற்க்கு பாதி நாட்கள் மின்சாரம் இல்லமல் வாழ வேண்டிய சூழல் விரைவில் தமிழகத்திற்கு வரப்போகிறது. (பீகார் போல்). பெட்ரோலியமும் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது. இன்னும் 50 ஆண்டுகளில் தீரப் போகிறது. நிலக்கரியும் அவ்வாறே. அணு உலைகள் இல்லாமல் பின் எப்படி மின்சாரம் தயாரிப்பது ? காற்றாலை, சூரிய வெப்பம் போன்றவை இன்னும் முழுமையாக, மலிவாக வில்லை.

  ப்ரான்ஸ் நாட்டின் மின்சாரத் தேவையில் 70 சதவீததிற்கு மேல் அணு உலைகள் மூலமே தயாராகிறது. இதுவரை விபத்துக்ள் இல்லை…

 13. தமிழ் நாட்டுக்கு சரியான சாட்டயடி…

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s