சோத்துக்கு வக்கில்லாம எட்டாங் கிளாஸ் தாண்ட முடியல…
தாண்டினாலும் கல்லூரிக்குள் கால் வைக்க வக்கில்ல…
கிழிந்த தாவணிக்கும் – சட்டைக்கும் மாற்றுத் துணிக்கு வழியில்லை…
எந்தக் கம்பெனிய எப்ப மூடுவான் தெரியாது….
இப்படிக் கணக்கிடமுடியாத சுய துன்பத்தில் மக்கள் இழுத்துக் கொண்டு கிடக்கையில்…. சுய இன்பத்தைப் பற்றி பல மேதைகளுக்கு வந்திருக்கும் கவலை சொல்லி மாளாதது. மனித உடலில் எத்தனை விதமான துளைகள் இருக்கின்றன என்கிற அறிவியல் ஆய்வுகள் மெய் சிலிர்க்க வைக்கின்றன. சமூகத்தில் இது ஒன்றுதான் இப்போது மிச்சமிருக்கிற பிரச்சனை.
இனி யாரும் மாத்ருபூதம் செத்துப் போய்விட்டாரே என்கிற கவலையில் இருக்க வேண்டியதில்லை. இதோ இருக்கவே இருக்கிறார்கள் பல ஞானிகள். இடையில் கொஞ்ச நாளாய் காணாமல் போயிருக்கிற டாக்டர்.ஷர்மிளாவையும் கண்டுபிடித்து கூட்டி வந்து ஜோடி சேர்த்து வைத்தால் போதும்…உடனே ரெடி “புதிரா…புனிதமா Part II.”
வயதானவர்களைப் பார்க்கும் போதெல்லாம்….
அந்நியப் படைகளை ஓட ஓட விரட்டி அடித்த உமர் முக்தாரும்…
அமெரிக்காவையே திணறடிக்க வைக்கிற பிடல் காஸ்ட்றோவும்தான் நினைவுக்கு வருவார்கள்.
ஆனால் இந்த “அறிந்தும் அறியாத” கட்டுரைகளுக்கு
முடிந்தும் முடியாமலிருக்கிற கிழடு ஒன்று கடுதாசி வேறு போட்டிருக்கிறதாம்.
காடு வரவேற்பு விழா வைத்துக் காத்திருக்கிற 77 வயதில் பிறப்புருப்பின் துளைகளைப் பற்றி இப்போதுதான் துல்லியமாகக் கற்றுக் கொண்டிருக்கிறதாம்.
அதுவும் கல்யாணமாகி 50 வருடங்களுக்குப் பிறகு.
பெருசு…!
உனக்கான துளை இப்பவே ரெடி.
அகலம் 2 அடி…நீளம் 6 அடி.
தொந்தரவு பண்ணாம பத்திரமாய்ப் போய்
படுத்துக்கப்பா செல்லம்.
பாலியல் கல்வி அவசியம்தான்.
ஆனால் அதைப்போதிக்கும் இடம் கல்வி நிலையங்களாக இருக்க வேண்டும்.
போதிப்பவர்கள் பொறுப்பான ஆசிரியர்களாக இருக்க வேண்டும்.
அதை விட்டு விட்டு மூலை மூலைக்கும்..வெகுஜன தளத்திலும் நடத்திக்
கொண்டிருந்தால்….
டாக்டர் பிரகாஷ”ம்…கன்னட பிரசாத்தும் கையும் களவுமாக சிக்கினால் கூட ‘பாலியல் பாடத்தின் பத்தாவது அத்தியாயத்தை நடத்திக் கொண்டிருந்தோம்’ என எஸ்கேப் ஆகி விடுவார்கள். கவனம்.
***********
மணப்பாறை மருத்துவத் தம்பதிகளின் மகன் திலீபன்ராஜ் சம்பவம் குறித்து மதுரையிலும் சென்னையிலும் இருக்கிற அறுவை சிகிச்சை நிபுணர்கள் சிலரிடம் பேசிக் கொண்டிருந்தேன்.
“நோயாளியின் அனுமதி இல்லாமல் செய்திருந்தால் அது தவறுதான். ஆனாலும் உலகிலேயே மிக ஈஸ’யான ஆபரேஷன் எது தெரியுமா?” என்று என்னிடம் திருப்பிக் கேட்டார்கள். வழக்கம்போல் தலையாட்டினேன்.
“சிசேரியன்தான். 15 வயது சிறுவன் என்ன…படிப்பறிவு இல்லாதவர்கள் கூட பலமுறை உற்று கவனித்து புரிந்து கொண்டால் எளிதாகச் செய்து விடக்கூடிய ஆபரேஷன்தான் இந்த சிசேரியன்.”
அய்யய்யோ என்று அலறிவிட்டேன் அவர்கள் சொன்னதைக் கேட்டு.
“உண்மைதான். அந்தப் பகுதியில் எந்தவொரு முக்கிய நரம்போ…ரத்தநாளங்களோ ஓடாத பகுதிதான் அது. ஓபன் செய்த உடனேயே யூற்றஸ் என்கிற கர்ப்பப்பை மிகத் தெளிவாக கண்ணுக்குத் தெரியும். தேட வேண்டியதில்லை. முறையான பயிற்சியும், கூரிய கவனமும் இருந்தால் போதும் எவர் வேண்டுமானாலும் சிசேரியன் செய்யலாம். ஆனால் ஒரு நிபந்தனை வேறு ஏதாவது சிக்கல் வந்துவிடாமல் இருக்க பயிற்சி பெற்ற மருத்துவர் ஒருவர் உடனிருத்தல் அவசியம்” என்றார்கள் அவர்கள்.
சிறுவன் திலீபன் ராஜ் விஷயத்தில் நடந்திருப்பது ஆர்வக் கோளாறும், புகழ் ஆசையும்தான். மற்றபடிக்கு இது கவனமாகக் கேட்பது….கவனமாகப் பார்ப்பது….பார்த்ததையும் , கேட்டதையும் மனதில் கொண்டு நடைமுறையில் செய்வது என்ற விதத்தில் எவருக்கும் கை வரக்கூடியதுதான் இந்த சிசேரியன்…”என்று போட்டுடைத்தார்கள்.
கல்பாக்கம் டாக்டர்.புகழேந்தியின் கருத்துக்களோ இன்னும் ஒரு படி மேலே. žனப் புரட்சியின் போது காயம் பட்ட மக்களுக்கு சிகிச்சை அளித்துக் கொண்டிருந்தவர் டாக்டர்.நார்மன். அனைவரும் கூவோ கூவென்று கூவுகிற முறையான மருத்துவப் பல்கலைக் கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்றவர்.
காயம்பட்ட செஞ்சேனை வீரர் ஒருவரைக் காப்பாற்றப் போவதற்குள் அந்த வீரரது கால்கள் அழுகிப்போக ஆரம்பிக்க.. வேறு வழியில்லாமல் அங்கிருக்கும் ஒருவரைக் கொண்டே உயிரைக் காப்பாற்ற கால்களை வெட்டி எடுத்து விடுகிறார்கள். தாமதமாக வந்து சேர்ந்த டாக்டர் நார்மன் நோயாளியின் வெட்டப் பட்ட கால்களைப் பார்த்துவிட்டு “இதைச் செய்த டாக்டர் மிகச் சரியாகவே செய்திருக்கிறார். ஆனால் வெட்டிய முனைகளை மட்டும் கொஞ்சம் Smooth ஆகச் செய்திருக்கலாம். மற்றபடிக்கு எல்லாம் ஓ.கே. அது சரி எங்கே அந்த டாக்டர்..?” என்று கேட்க…
கூடியிருந்தவர்கள் “அதோ…அவர்தான்…” என்று கை நீட்டி இருக்கிறார்கள்.
அவர்கள் காட்டிய திசையில் பார்த்தபோது……
அங்கே ஒரு நடுத்தர வயது மனிதர் மாடு மேய்த்துக் கொண்டிருந்தார்.
ஆக…மக்கள் மருத்துவம் என்பது வேறு.
என்றென்றும் பீதியிலும்…கிலியிலும் மக்களின் உடல்களை வைத்திருக்கிற வணிகமய மருத்துவம் என்பது வேறு.
இதையெல்லாம் பார்க்கையில் எனக்கு எப்போதோ படித்த பொன்மொழி ஒன்றுதான் நினைவுக்கு வருகிறது.
அது:
எனது நோயிலிருந்து
விடுபட்ட மறுநாள்
என் மருத்துவரால்
கொல்லப்பட்டேன்.
**********
யாரும் மயக்கம் போட்டு விழுந்துவிட வேண்டாம்….
560000000000 ரூபாய் மட்டும்தான் செலவாகும் கங்கை – காவிரி இணைப்புக்கு. சைபர்களைக் கூட்டிப் பார்த்தும் சரியாக வரவில்லையா கணக்கு?
எதற்கு வீண் சிரமம்…வெறும் 5,60.000 கோடிதான் இந்த நதிநீர் இணைப்புக்கான செலவு.
‘பாலம் கட்டுவதற்கும்…சாலை போடுவதற்கும் கூட வக்கில்லாமல் தனியாருக்குத் தாரை வார்த்துக் கொண்டிருக்கையில் எங்கிருந்து வரும் இத்தனை லட்சம் கோடிகளும்?’ என்று கேட்டால் நம்மைப் போல தேசத் துரோகிகள் வேறு யாரும் இருக்க முடியாது.
9300 கிலோ மீட்டர் நாடு-நகரம்-காடு-கரை என எல்லாம் கடந்து போடப்பட இருக்கிற இந்தக் கால்வாய் கி.பி.2016 க்குள் முடிந்துவிடும் என்கிறார்கள் சில ‘அறிஞர்கள்’.
வெங்காயம்…1000 கிலோ மீட்டர் மட்டுமே உள்ள இந்திராகாந்தி கால்வாயே அரைகுறையாய் அனாதையாய் நிற்கும்போது இதுமட்டும் எப்படிச் சாத்தியம்…? 2016 ல் அல்ல கி.பி.8016 ல் கூட இந்த கங்கை காவிரி இணைப்பு முடியாது என்பதுதான் எதார்த்தம்.
“உபரியாய் கிழக்கில் ஓடும் நதிகளை எல்லாம் இந்தியாவின் மேற்குப் பகுதி, மத்தியப் பகுதி, தெற்குப் பகுதி ஆகியவற்றுக்குத் திருப்பி விட்டால் போதும். தீர்ந்தது தண்ணீர்ப் பிரச்சனை. ஒரு பக்கம் வெள்ளமும் இல்லை… மறுபக்கம் வறட்சியும் இல்லை.”
கேட்க நல்லாத்தான் இருக்கு. ஆனா…போலீஸ் ஸ்டேஷன் போர்டுக்கு பெயிண்ட் அடிக்கக்கூட காசில்லாம பொடவைக்கடக்காரனுகள உட்டு “உபயம்”ன்னு போர்டு போட்டுகிட்டிருக்கற நிலைல இந்த 560000 கோடிக்கு யார் வீட்டுக் கதவைத் தட்டப் போகிறது இந்த அரசு?
அப்படியே கொடுத்தாலும் கொடுக்கிற புண்ணியவான்கள் என்னென்ன கண்டிஷன்கள் போடுவாங்களோ?
அப்படியே போட்டாலும் கங்கையையும் காவிரியையும் இணைக்கிற இந்தப் பூமாலைத் திட்டம்
உத்தரப் பிரதேசத்துல ஆரம்பிச்சு….மத்தியப் பிரதேசம்….ஜார்கண்ட்….மேற்கு வங்காளம்…ஒரிசா….சட்டிஸ்கர்….மகாராஷ்டிரம்….கர்நாடகம்…ஆந்திரம்…. என இத்தனை மாநிலங்களையும் தாண்டி வந்து தமிழகத்தை எட்டுவதற்கு எத்தனை நூற்றாண்டுகள் பிடிக்கும்?
அப்படியே வந்தாலும்…
மத்தியப் பிரதேசம் தண்ணீர் கேட்டா….
உத்தரப் பிரதேசத்துக்காரன் விட மாட்டான்
ஜார்கண்ட் தண்ணீர் கேட்டா….
மத்தியப் பிரதேசத்துக்காரன் விட மாட்டான்
மேற்கு வங்காளம் தண்ணீர் கேட்டா….
ஜார்கண்ட்காரன் விட மாட்டான்
ஒரிசா தண்ணீர் கேட்டா….
மேற்கு வங்காளத்துக்காரன் விட மாட்டான்
சட்டீஸ்கர் தண்ணீர் கேட்டா….
ஒரிசாக்காரன் விட மாட்டான்
அய்யோ தலை சுத்துதே சாமி…..
கர்நாடகாவுல ஆரம்பிச்சு…தமிழ்நாட்டுல முடியற காவிரிலயே தவணை முறைல தண்ணீர் விடறதுக்கு கர்நாடகா தொறத்தித் தொறத்தி அடிக்கறான்…..
இந்த லட்சணத்துல
பத்து மாநிலங்களக் கடந்து
எப்ப தண்ணீர் வர்றது….?
எப்ப நாங்க அதுல முங்கி முத்தெடுக்கறது?
**********
பள்ளிக்கூட சுவர் ஒன்றில்….
“குழந்தைகளின் வருமானம்
பெற்றோருக்கு அவமானம்”
“சிறுவன் சுமக்கும் செங்கல்
நாட்டு முன்னேற்றத்தின் தடைக்கல்”
போன்ற ஆபாச வாசகங்களைக் கண்டு எரியக்கூடாத இடத்தில் எரிச்சல் வந்தது.
ஆத்தாக்காரி அங்கயும்…இங்கயும்…கடன ஒடன வாங்கி
காய்கறிக்கடை வெச்சா….
உள்நாட்டு பெருமுதலைகளக் கூட்டீட்டு வந்து….
“நீயும் கடை வை” ங்குது கவர்மெண்ட்டு.
அப்பன்காரன் ஆத்தா தாலிய அடகு வெச்சு
பெட்டிக்கடையாவது வெச்சுப் பொழைக்கலாம்ன்னு பார்த்தா…
வெளிநாட்டு மொதலாளிகளக் கூட்டீட்டு வந்து
“நீயும் வையு”ங்குது அதே கவர்மெண்ட்டு….
இந்த லட்சணத்தில்
அதுக பெத்த புள்ளைக
செங்கல் சூளைக்கு வேலைக்குப் போகாம
சிலிக்கான் சிட்டிக்கா வேலைக்குப் போகும்?
அடச்சீ.