அப்பாலே போ சாத்தானே……

ஒரு முன் குறிப்பு:
வெள்ளைக்கார துரைகள் கணக்காய் படங்களுக்கு இங்கிலீஷ் பெயர் வைத்துக் கொண்டிருந்தவர்கள்  தமிழுக்கு இறங்கி வர….இந்த நேரம் பார்த்து “அகம் பிரம்மஸ்ய” என்று சமஸ்கிருதத்தில் துணைத் தலைப்பை வைத்திருக்கிறார் பாலா. சமஸ்கிருதத்துக்கும் தமிழக அரசின் வரி விலக்கு உண்டா என்ன?

“நான் கடவுள்” படத்திற்காக ஏகப்பட்ட பிச்சைக்காரர்களை திரட்டி படப்பிடிப்பு நடத்திக் கொண்டிருப்பதாகச் செய்தி.

இதைக் கேள்விப்பட்டதும் சட்டென்று ஒரு பொறி தட்டியது. ஏற்கெனவே ஆசிய வங்கி, ஐ.எம்.எப், உலக வங்கி, பரலோக வங்கி என ஒவ்வொரு வங்கிகளாய் படியேறி தலையைச் சொறிந்து, பல்லை இளித்துக் காசு வாங்கி வந்த அனுபவம் கை கொடுக்கும் என்பதால் இந்தியா முழுவதும் உள்ள மாநில நிதியமைச்சர்கள்… மத்திய நிதியமைச்சர் என அனைவரையும் திரட்டிக் கொண்டு வந்து இவர்களோடு நடிக்க வைத்தால் தத்ரூபமாக இருக்குமே படம் என்பதுதான் அந்தப் பொறி. சிறந்த நடிப்பிற்கான தேசிய விருதுக்குக் கூட வாய்ப்பிருக்கிறது. எதற்கும் அதைக் கொஞ்சம் பரீட்சித்துப் பாருங்களேன் பாலா….

 

##########

“இதெல்லாம் ஒரு பிரச்சனையா…வெறும் குப்பை மேட்டர்ப்பா…” என்று இனி யாரும் அசட்டையாகச் சொல்லிவிட முடியாது. அதுவும் சிங்காரச் சென்னையில் மூக்கைப் பிடித்துக் கொண்டு நடந்தவர்கள்.கடந்து போகிறவர்களுக்கே இப்படி என்றால் அதை சுமந்து செல்பவர்களுக்கு எத்தனை வலி இருக்கும் என்பதை ஒரு நொடியாவது சிந்திக்க வேண்டிய வேளையிது.

ஏழேகால் வருடக் காண்ட்ராக்ட்டில் வந்த ஓனிக்ஸ் கம்பெனி அதற்கு முன்னரே ஓட்டம் பிடிக்க….வந்தது வேட்டு சென்னைவாசிகளுக்கு. குவிந்த குப்பையைப் பொறுக்காததோடு இருக்கிற குப்பைத் தொட்டிகளையும் உடைத்துப் போட்டுவிட்டு ஓடியிருக்கிறது அந்த சிங்கப்பூர் நிறுவனம்.

நல்லவேளை அவர்கள் நாட்டிலிருந்து கொண்டுவந்து கொட்டிவிட்டுப் போகாமலிருந்தார்களே அதற்காக நிம்மதிப் பெருமூச்சு விடலாம்.

பொறுப்பற்று நடந்த அந்த நிறுவனத்தை கூண்டில் ஏற்றி குமுறி எடுக்கச் சொல்லாமல்….”மாநகராட்சி ஊழியர்களைக் கூட்டி வந்து சுத்தம் செய்வதற்கு என்ன?” என்று ஊளையிடுகின்றன சில பத்திரிக்கைகள்.

சென்னையின் நிலை இப்படி என்றால் கோயம்புத்தூர்வாசிகளின் நிலையோ சிறப்போ சிறப்பு.

வீட்டுக்கு வீடு இலவச டி.வி. தருவதைப் போல இனி வீட்டுக்கு வீடு இரண்டு குப்பைத் தொட்டிகளைத் தரப் போகிறது மாநகராட்சி.

ஒன்று : மக்கும் குப்பைக்கு
மற்றொன்று: மக்காத குப்பைக்கு.

கோவை நகர மக்கள் இனி குப்பையைக் கொடுக்கும் போது கூடவே 30 ரூபாயையும் கொட்டி அழ வேண்டும்.

கோவை மக்கள் கொடுக்கும் வீட்டுக் குப்பைகளை மறு சுழற்சி செய்து உரமாக்கினால் மாதம் 60 லட்சம் ரூபாய் லாபம் கிடைக்கும். ஆனால் மாநகராட்சியோ இந்தக் குப்பைகளை வெறும் 24 ஆயிரம் ரூபாய்க்கு தனியார் நிறுவனத்துக்குத் தாரை வார்க்க தருணம் பார்த்துக் கொண்டிருக்கிறது என்கிறார்கள் நகர மேம்பாட்டுக்கான கண்காணிப்புக் குழுவினர்.

குறைந்தபட்ச அறிவுள்ளவர்கள்  வருகின்ற 60 லட்சம் லாபத்தை நோக்கி நடப்பார்களா?
அல்லது வெறும் 24 ஆயிரம் “லாபத்தை” (?) நோக்கிப் போவார்களா?

யாராவது ஆறறிவு உள்ளவர்கள் இவர்களுக்கு அறிவுறுத்தினால் நல்லது.

ஆக….
குப்பை வரி….
இன்று கோவை.
நாளை சென்னை?

##########

அவசர அவசரமாக ரேஷன் கடையை நோக்கி ஓடிக் கொண்டிருந்தவனைப் பிடித்து நிறுத்தி கையில் ஒரு நோட்டீசைத் திணித்தார் ஒரு ஆசாமி.
இருந்த அவசரத்தில் படிக்காமலேயே….என்ன? என்றேன்.

“கர்த்தராகிய இயேசு மீண்டும் வருகிறார் சகோதரா” என்றார்.

நான் ரேஷன் வாங்கிய பிறகா…இல்லை அதற்கு முன்னமேவா? என்றேன்.
“அதற்கு முன்னால் நீங்கள் தேவ ஊழியர்களின் கைகளால் ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ள வேண்டும்.” என்றார்.

நான் ஸ்நானமே வாரத்துக்கு ஒரு தடவைதான்….அதென்ன ஞானம்? என்றேன்.

“அதற்குப் பிறகு நீங்கள் ஜீவியம்….தெய்வீக சுகத்துக்குக் கீழ்படிந்து அனுபவங்களைப் பெற்றுக்கொள்ள வேண்டும்” என்றார் மறுபடியும்.

சாதாரண சுகத்துக்கே கீழ்படிபவன்….தெய்வீக சுகம்ன்னா சும்மாவா இருக்கப் போறேன்? சீக்கரம் மேட்டருக்கு வாங்க என்றேன்.

அப்படியே இயேசு வந்தாலும் ஏழு வருட காலம் வெயிட்டிங் லிஸ்ட்டில் இருப்பாராம்…அப்போது இன்னொரு டூப்ளிகேட் இயேசு மீசைக்கு மேலே ஒரு மச்ச அடையாளத்தோடு பயங்கர ஆட்சி நடத்துவாராம். ஏழு முடிந்த பிறகு இயேசுவின் ஏழரை அடச்சே….ஆயிரம் வருட ஆட்சி நடக்குமாம்….

அப்புறம் ஆஸ்த்துமா ரட்சிப்பைப் பெற்ற என்னைப் போன்ற “பரிசுத்தவான்கள்” த்ரிஷா, பாவ்னா போன்ற தேவதைகளோடு சூப்பரான வாசஸ்தலங்களுக்கும்….

உங்களைப் போன்ற ஆஸ்த்துமா ரட்சிப்பைப் பெறாதவர்கள் சுப்ரமண்யசாமி போன்றவர்களோடு அக்கினிக் கடலுக்கும் போவீர்களாம்….
உளறிக்கொண்டே போனது அது……

அது சரி நீங்க எந்த டாக்டர் கிட்ட டிரீட்மெண்ட் எடுத்துக்கறீங்க? என்றேன் சன்னமாக.

“அப்பாலே போ சாத்தானே” என்றபடி கையில் எதையோ அடிக்க எடுக்க..

உடு ஜூட் என்றபடி பின்னங்கால் பிடறியில் பட ரேஷன் கடை நோக்கிப் பறந்தேன்.