இருபதாம் நூற்றாண்டின் ”இசை நந்தன்” ராசையாவுக்கு…

                   Rasa2

இசை குறித்தும் அதனது ஆழ அகலங்கள் குறித்தும்
அணுவளவும் அறிவற்ற பாமரன் எழுதும் மடல்.

இதனை எழுதும்போது கூட….
சுரங்கள் ஆறா, ஏழா என்று அநாவசியக் குழப்பத்துடன்தான்
ஆரம்பிக்கிறேன் இதனை.

நினைவு தெரிந்த நாளிலிருந்து….
“…திரை இசை இத்தோடு முடிந்தது.
மீண்டும் அடுத்த திரை இசை மாலை 6.10-க்கு….”
என்பதோடு என் வீட்டு வானொலியின்
கழுத்து திருகப்பட்டு விடும்.

ஹம்சத்வதனியோ..கல்யாணியோ..
கரகரப்ப்ரியாவோ..கரகரப்பில்லாத ப்ரியாவோ…
அணுவளவும் அறிந்ததில்லை நான்.

உன்னை இசைஞானி என்றழைக்க மாட்டேன்.
ஏனெனில், படத் தயாரிப்பாளனில்லை நான்.

உன்னை ராகதேவன் என்றழைக்க மாட்டேன்.
ஏனெனில் எந்தப் படத்தையும் இயக்கப் போவதில்லை நான்.

உன்னை மேஸ்ட்ரோ என்றழைக்க மாட்டேன்.
ஏனெனில் விநியோகஸ்தனுமில்லை நான்.

எனவே… என் இனிய ராசையா !

எங்கள் ஊர் மாரியம்மன் கோயில் ஒலி பெருக்கிகள்……
அந்த அதிகாலை பொழுதுகளில் ஒன்று :
யாதோங்கி பாரத் பாடலுடன் துயில் எழுப்பும்.
அல்லது ‘ஏ தோஸ்து கீ’ பாடலுடன் சோம்பல் முறிக்கும்.

மொழி புரிகிறதோ இல்லையோ….
பாபியோ, குர்பானியோ பத்து காசு கொடுத்து
பாட்டுப் புத்தகம் வாங்கி வந்து
மனப்பாடம் செய்துவிட்டுத்தான் மறுவேலை.

ஏனெனில் இந்திப் பாடல் தெரிந்திருப்பது என்பது 
எமக்கான அங்கீகாரத்திற்கான அடையாளங்கள்.

அழகாயில்லை என்பதற்காக அம்மாவைகூட
வேலைக்காரி என்று கூறும் மரபில் வந்த மண்ணின் மைந்தர்கள் நாங்கள்.

எப்படி இன்றைக்கு கிரிக்கெட் குறித்து
சிலாகிக்காமல் இருப்பது “அநாகரீகமோ”
அப்படி அன்றைக்கு இந்திப் பாடல் முணுமுணுக்காது
இருப்பதும் ‘அநாகரீகம்’

அத்தகைய பொழுதுகளில் தான் அறிமுகமானாய் நீ எமக்கு.
அன்று ‘அன்னக்கிளி’ யின் முறுக்கு பிழியும் இசையோடு
ஆர்ப்பாட்டமாய் அடியெடுத்து வைத்த நீ
இன்று ‘ராமன் அப்துல்லா’ வரையிலும்
இதயத்தை பிழியும் இசையோடு எங்களை ஆக்ரமித்து வருகிறாய்.

இடையில் எத்தனை காலம் உருண்டோடியிருக்கிறது
என்று எண்ணிப் பார்க்கிறேன்.
ஏறத்தாழ இருபது ஆண்டுகள்..
7300 நாட்கள்….
எனக்குத் தெரிந்தவரை……
இத்தகையதொரு வரலாறு எந்தவொரு
இசையமைப்பாளனுக்கும் இருந்ததில்லை.

உனது வருகைக்குப் பின்னர்தான் எம்மூர் ஒலிபெருக்கிகள்
இந்திப் பாடல்களுக்குப் பிரிவுபச்சார விழா நடத்திவிட்டு
தமிழைத் தாங்கி கொள்ளத் துவங்கின.

ராஜாஜி தொடங்கி பக்தவச்சலம் வரைக்கும்
அரசாண்ட காலங்களில் அரசாணைகளாக வடிவெடுத்த
இந்தித் திணிப்பிற்கு எதிராக
தமிழறிஞர்களும் திராவிடத்தலைவர்களும்
தோள் தட்டிக் களம் குதித்த பொழுதுகளில்……
புறமுதுகிட்டது “பொதுமொழி”.

அது நான் அரை டிராயர் போட்டுத் திரிந்த காலங்கள்.
நெடியதொரு மொழிப்போர் நிகழ்ந்ததன் சுவடுகளே புரியாமல் வளர்ந்த நாங்கள்
ஓடி வந்த இந்திப் பெண்ணே ! கேள்…
நீ நாடி வந்த நாடு இதல்ல
” என்ற முழக்கங்களை மறந்து அந்நிய மொழியின்
அரவணைப்பில் துயில் கொள்ளத்துவங்கிய போது அறிமுகமானாய் நீ எனக்கு.

தார் பூசி அழிக்கவில்லை நீ.
தடைமீறி மறியலுக்கு போகவில்லை நீ.
சத்தமின்றி ஒரு மொழிப்போர் நடத்தின உனது சங்கீதங்கள்.

மெளனமாய் நீ தொடுத்த அமைதிப்போரில்
அந்நிய மொழியின் அடிச்சுவடு கூட அழிந்து போயிற்று.

இனிய ராசையா!
உண்மையை ஒளிக்கது சொல்லவேண்டுமென்றால்……
எங்களையே எங்களுக்கு அறிமுகம் செய்து வைத்தவன் நீ தான்.

நாங்கள் தொலைத்த எமது அடையாளங்களை……
மறந்த கலாச்சாரத்தை……
நீண்ட கோடைவிடுமுறையில் பரணுக்குப் போய்விட்ட
புத்தகப் பையைக் கீழிறக்கி,
தூசி தட்டித் துடைத்து தோளில் மாட்டி அனுப்பும் ஒரு தாயாய்……
தவறவிட்ட தடயங்களை திரும்பவும் தோளில் மாட்டி விட்டவன் நீயேதான்.

அதன் விளைவுதான்…..
நகர்புறத்து ஜீன்ஸ் இளைஞன் கூட ‘இஞ்சி இடுப்பழகா’
என்று கிராமிய மெட்டை முணுமுணுத்தது..

அதன் விளைவுதான்….
விஜயலட்சுமி நவநீத கிருஷ்ணனது வட்டாரப் பாடல்கள்
மீண்டும் நகர்வலம் வந்தது.

அதன் விளைவுதான்…. 
புஷ்பவனம் குப்புசாமியின் தமிழிசைப் பாடல்கள்
இத்தமிழ் மண்ணில் தனிக்கவனம் பெற்றது.

ஆனால் ராசையா..
நீ அன்னக்கிளியில் அடியெடுத்து வைத்த போது….
“வெறும் டப்பாங்குத்து….” என்ற உதடுகள்…
“தவுல் பார்ட்டி….” என்ற உதடுகள்…
“எண்ணி எட்டே படம் தான்….” என்று சொன்ன உதடுகள்..

உனது ‘மண்வாசனை’யில் மயங்கி…
‘மூடுபனியில்’யில் விறைத்து…
‘நெஞ்சத்தைக்கிள்ளாதே’யில் நெருங்கி…
‘கவிக்குயிலில்’ கரைந்து…
உனது ‘பயணங்கள் முடிவதில்லை’ என்று ஒப்புக்கொண்டன.

இனிய ராசையா….
இவரிவர் தான் பாடவேண்டும்….
இப்படித்தான் பாட வேண்டும்…..
இனிமை என்றால் இது தான் என்று
இறுகிக் கிடந்த இசையுலகை நெகிழ்த்தியவன் நீ தான்.
அதன் பிறகுதான் சாதாரணர்களின்……
மிக மிகச் சாதாரணர்களின் குரலை நாங்கள் கேட்கத் துவங்கினோம்.

‘அண்ணே அண்ணே சிப்பாயண்ணே’ வின் கரகரத்த குரலும்……

‘ஓரம்போ ஓரம்போ’வென தென் மாவட்டத்துச் சிறுவர்களின்
சில்லுடையாக் குரல்களும்..

‘தேனாம்பேட்டை சூப்பர் மார்க்கெட் எறங்கு ‘ என
சிட்டுக்குருவியில் ஒலித்த நடத்துனரின் குரலும்….
எமக்கு புதியவை ராசையா.

இம்மண்ணில் “புனிதம்” என்று எதுவுமில்லை.
“தீண்டத்தகாதது” என்று ஒன்றும் இல்லை..
ஆனால் “புனிதம்” என்ற சொல் ஒழிக்கப்படும் வரை
“தீண்டாமைக்கு” விடிவு இல்லை என்பதை
புரிந்து கொண்டவர்கள் நாங்கள்.

இத்தோடு நின்றதா உன் இசைப்பயணம் ?

திரை இசையோடு தீர்ந்து போயிற்று
உனது இசைச் சரக்கு
என்று இருந்தவர்களுக்கு……
வந்து சேர்ந்தன உனது இசை தொகுப்புகள்.

ஒன்று : காற்றை தவிர வேறில்லை (Nothing But Wind )

மற்றொன்று : எப்படிப் பெயரிட்டு அழைப்பது
( How to Name It )

இவையிரண்டும்  இசையின் இன்னொரு பரிமாணம்.

அதை வார்த்தைகளால் வர்ணிப்பது என்பது
குயிலின் குரலை காகிதத்தில் எழுதிப்படிப்பதற்கு ஒப்பானது.

சரி…. அத்தோடு தான் நின்றதா ராசையா உனது இசைப்பயணம் ?

சூரியன் மறையாத தேசத்துக்குச் சொந்தக்காரர்கள்
எழுந்து நின்று உன் எழுச்சிக்கு தலைவணங்கிய வேளையில்….Rasa3
உன் சொந்த நாட்டுக்காரர்களோ….
சுஷ்மிதா சென்னில் சொக்கிப்போய் ரத்தினக் கம்பள வரவேற்பு
கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.

உன்னிடம் என்ன இருக்கிறது ?
எங்கள் சுஷ்மிதா சென்னின் நுனி நாக்கு ஆங்கிலம் வருமா  உனக்கு ?

உன்னிடம் என்ன இருக்கிறது ? 
நகர்ப்புற நாகரீகம் தெரிந்தவனா நீ ?

உன்னிடம் என்ன இருக்கீறது ?
லண்டனுக்கு கூட வேட்டி கட்டிபோன ஒரு பண்னைப்புரத்தான் தானே ?

எங்கள்’சென்’னின் அழகும்….
அறிவும்…. ஆங்கிலமும்…. ஒயிலான நடையும் முன்னே நீ எம்மாத்திரம் ?

வயிறு பற்றி எரிகிறது ராசையா……
கோபம் பொங்குகிறது……
ஆத்திரத்தில் வார்த்தைகள் வசமிழந்து விடக்கூடாது.
இரு என்னை நானே கட்டுப்படுத்திக் கொண்டாக வேண்டும்……
ஓரிரு நிமிடங்கள் அவகாசம் கொடு ராசையா…

லண்டனிலுள்ள ராயல் பிலார்மோனிக் இசைக்குழுவில்
சிம்பொனி இசை அமைக்க :
தமிழகத்திலிருந்து….
இல்லை இந்தியாவிலிருந்து……
அது கூட இல்லை
இந்த ஆசியாக் கண்டத்திலேயே அழைக்கபட்ட
முதல் மனிதன் நீ தான்.
இதை பல மிருகங்கள் புரிந்து கொள்ளவேயில்லை……

மன்னித்துவிடு..
இவர்களைக் காட்டிலும்
மிருகங்கள் மகத்தானவை என உணர்வேன்.

‘காதலுக்கு’
‘கருமாதிக்கு’-
‘கழுதை வியாபாரத்திற்கு’ என இலவச இணைப்புகள் போட்ட
அநேக பத்திரிக்கைகள்..
நினைத்துப் பார்க்க முடியாமல் நிகழ்ந்து விட்ட
இந்த நிஜத்தை நினைத்து நடுங்கிப் போனது
நிஜத்திலும் நிஜம்.

தென் திசையிலுருந்து ஓர் புயல் புறப்பட்டு கரை கடந்ததையோ……
அது இங்கிலாந்தில் மையம் கொண்டதையோ…….

அது ராயல் பிலார்மோனிக் இசைக்குழுவையே
இசையால் சுழற்றி அடித்ததையோ..

வரைபடத்தில் மட்டுமே இந்தியர்களாய்
வாழ்ந்து கொண்டிருக்கும்
அநேக வட இந்தியர்களுக்கு உறைக்கவேயில்லை

காரணம் : உன் தோலின் நிறம்.
காரணம் : நீ ஒரு மதராசி.
காரணம் : உன் மொழி.

அநேக சமயங்களில் உன் மீதே கூட கோபம் வருகிறது ராசையா.
கேட்டால்…
“உன்னை உணர்” என்பாய்.
”மெளனம்….ஞானம்..விதி..” என்பாய்.
“ஆத்மாவை உணர்வது” என்பாய்.

என்னைப் பொறுத்தவரை ஆஸ்துமாவை தவிர
வேறெதையும் உண்ர்ந்ததில்லை.

தன்னை உணர்வது ஒரு புறமும்
தன்னைச் சுற்றி நிகழ்வதை மறுபுறமும்
ஒரு சேர உணர்வது தான்
என்னளவில் சரியெனப்படுகிறது..

உன்னுடைய இசைத்திறமை குறித்து
இங்கே எண்ணற்ற வியாக்கியானங்களும்….
சொற்சிலம்பங்களும் நடந்து கொண்டிருக்கின்றன..

“பல பிறவிகளில் செய்த புண்ணியத்தின் தொடர்ச்சி” என்று சிலரும்…

“ஸ்வர தேவதைகள் உன்னோடு ஐக்கியமாகி
இந்த ஜென்மத்தில் உனக்கு சேவை
செய்து கொண்டிருக்கிறார்கள்” என்று வேறு சிலரும்..

“ஏதோ ஒரு சக்தி என்னை இயக்குது” என நீயும்
கூறிக்கொண்டிருப்பது
சிரிப்பைத்தான் வரவழைக்கிறது ராசையா.

இந்த மண்ணில் ‘ஆவி அமுதா’வும் கூட
அப்படித்தான் சொல்லி கொண்டிருக்கிறார்.
உனது இசை மேன்மைக்கு காரணம் :
உழைப்பு – உழைப்பு-உழைப்பு-
அதுவும் உன் ஓயாத உழைப்பு.

இனிய ராசையா,
உன்னை நேசிப்பதற்கு
எவ்வளவு உரிமை எடுத்துக் கொள்கிறேனோ..
அவ்விதமே உன்னை யோசிக்க வைப்பதற்கும்
உரிமையிருப்பதாகவே உணர்கிறேன்.

அதுவே ஒரு தோழனுக்குரிய கடமையும் கூட..

ஆன்மீகமோ – பகுத்தறிவோ
அது அவரவர்
உணர்தலையும் உரிமையையும்
உள்ளடக்கிய விஷயம்.

ஆனாலும் ராசையா..
சித்தர்களைச் சில விசயங்களில் சிலாகிக்கும் நீ
நட்டகல்லை தெய்வமென்று
நாலு புட்பம் சாத்தியே
சுத்திவந்து மொணமொணவென்று
சொல்லும் மந்திரமேதடா..
” என்ற
சிவவாக்கியரைச் சரிவரப் புரிந்து கொள்ளாமல்
திருவரங்கம் கோயில் கோபுரத்துக்கு எட்டு லட்சம்
கொட்டிக் கொடுத்தாயே
அது தான் சற்று உறுத்துகிறது மனதை.

ஒரு வேளை உனக்கு……
நாரதகான சபாக்களின் நாக்குகளால் நற்சான்றிதழ்
வாங்குவது தான் நோக்கமோ எனும்
நெருடல் நெடுங்காலமாய் உண்டு.

இந்த நூற்றாண்டின் இசை நந்தனோ?
எனும் அச்சமும் உள்ளுக்குள் உறுத்துகிறது.

சமத்துவமற்ற சமயத்தலம்
எவருடையதாயினும்
நமக்கு வேண்டாம் ராசையா….

‘நந்தி விலகாதா?’ எனும் நந்தனின் நிலையில்
உன்னை உணர்ந்ததாலோ என்னவோ
எட்டு லட்சம் எண்ணிக் கொடுத்தாய் ?

நந்தி விலகும் விட்டலாச்சார்யா காலத்து வேலையெல்லாம்
இளைய தலைமுறையிடம்
இனி செல்லுபடி ஆகாது ராசையா.Rasa4
ஒன்று  : நந்தன் உள்ளே போக வேண்டும்.

அல்லது: சிவன் வெளியில் வரவேண்டும்.

இது தான் ராசையா…
இன்றைய நிலை
இன்றைய அரசியல்
இன்றைய ஆன்மீகம்.

அடுத்ததாய் அங்கலாய்க்க நினைத்த விசயம் அழகிப்போட்டி.

எத்தனை பேர் எதிர்த்த விசயம் அது.
ஆனால் எதிர்த்த அத்தனைபேரும்
முற்போக்காளர்கள் அல்ல என்பது வேறு விசயம்.

பெண்ணைப் பற்றி ‘சினிமா மொழி’யில் சொல்வதனால்…
ஒன்று “அம்மா என்றழைக்காத உயிரில்லையே” என்று உருகுவது….
அல்லது ”புதுசா சுட்ட பணியாரமாய்” கடை விரிப்பது .
இதுவா ராசையா பெண் ?

அழகு என்கிற போது
அவளது அறிவு புறந்தள்ளப்படுகிறது

அழகு என்கிற போது
அவளது உழைப்பு புறந்தள்ளப்படுகிறது

அழகு என்கிற போது
அவளது திறமை புறந்தள்ளப்படுகிறது

”உன்னை உணர்தலிலேயே” பெரும் பொழுது போய்விட்டபடியால்
”பெண்ணை” உணரத் தவறிவிட்டாய்.
பெண்ணை போகப் பொருளாக்கும் ஓர் இழிவான நிகழ்ச்சியில்
உனது இசையும் இணைந்து கொண்டது
ஏற்றுக் கொள்ள இயலாத  வருத்தம்தான்.

பெண் குறித்த புரிதல் இருந்திருக்குமேயானால்
“நிலாக்காயுது”வும்….
“சித்தெறும்பு கடிக்குது”வும்….
உனது இசையில் அரங்கேறியிருக்காது.

குப்பைத் தொட்டிக்குப் போக வேண்டிய சில பாடல்கள்
உனது இசையின் வலிமையால்
கோபுரத்தின் உச்சியிலே போய் உட்கார்ந்து கொண்டதனை
ஒத்துக் கொண்டுதான் ஆகவேண்டும்.

இனிய ராசையா….
இவை எல்லாம் நீ நிமிர்ந்து பார்த்தாலேயே
நின்றுவிடக் கூடிய விஷயங்கள்தான்..
கோடம்பாக்கத்தில் இத்தகைய ஆர்ப்பாட்டமற்ற….
ஆரோக்கியமான…. எளிமையான மனிதர்கள்
விரல்விட்டு எண்ணக்கூடிய வகையிலேயே இருக்கிறார்கள்
என்பது வருத்தமான விஷயம்.

அதிலும் ஒருவனாக
எமது ராசையா இருக்கிறானே என்பது
வருத்தத்திலும் மகிழ்ச்சி தரக்கூடிய விஷயம்.

”வெட்ட வெளிதனில் கொட்டிக் கிடந்த” உனது எழுத்துக்களை
எட்டிப்பார்த்தேன்.
அதில் :
“நாம்-இந்தச் சமூகத்தின் அங்கம்.
நம்மில் ஒரு மாற்றம் நிகழாமல்-
அது இந்தச் சமூகத்தில் நிகழப் போவதில்லை”

என்று எழுதி இருந்தாய்.

ஆம் இதுவும் உண்மைதான் ராசையா.

ஆனால் இதுமட்டுமே போதுமானதாகப்படவில்லை.

தன்னை உணர்தலுக்கு இடையேயும்
இச்சமூகத்தின் அவலங்களுக்கு எதிராக
நாம் சுட்டுவிரலையாவது அசைத்துத்தானாக வேண்டும்.

அய்ரோப்பிய நாடுகளுக்கு நீ போயிருந்த போது
பீத்தோவனின் கல்லறைக்கும்….
பிற இசைமேதைகளின் கல்லறைக்கும் போய்ப் பார்த்தாயாம்.

கொஞ்சம் திரும்பிப் பாரேன் என் ராசையா…
இந்த நாடே கல்லறையாக…
சாதிவெறியால்….
மதவெறியால்…
பிணங்கள்….
குவியல் குவியலாய்…
ஒட்டப்பிடாரம் துவங்கி மீரட் வரையிலும்
நாளைய பொழுது நிச்சயமற்றதாய் நகர்கிறது.

பயந்து விடாதே…
உன்னை கொடி தூக்க சொல்லவில்லை.

எடு அந்தப் பறையை சாதி வெறிக்கெதிராய்..
எடு அந்தப் பறையை மத வெறிக்கெதிராய்..
எடு அந்தப் பறையை மனித உரிமைகளுக்காய்..

கொட்டு… கொட்டி முழங்கு… இந்தத் தேசமெங்கும்.

கலாச்சாரத்தில் வேறுபட்ட மேற்கத்திய இசைக் கலைஞர்கள் கூட
நிறவெறிக்கெதிராய் பாடியிருக்கிறார்கள்.

சுற்றுசூழலுக்காய் தங்கள் முழக்கங்களைப் பதிவு செய்திருக்கிறார்கள்.

எண்பதுகளில் மனித உரிமைகளை வலியுறுத்தி
டிரேசி சேப்மேன், பீட்டர் கேப்ரியேல்
போன்ற பாடகர்கள் உலகளாவிய இசைப் பயணம்
மேற்கொண்டிருக்கிறார்கள்.

அவ்வளவு ஏன்……
ஆந்திராவினது இசைக்கலைஞர் கத்தார்
இம்மக்களது துயரங்களை
பாடல்களாய் பவனி வரச் செய்யவில்லையா…

அதைப் போன்று…
கயத்தாரின் சோகங்களை……
தூத்துகுடியின் துயரங்களை……
மீரட்டின் மதக்கலவரங்களை……
ஒடுக்கப்படும் தலித்துகளின் துயரங்களை
நீயேன் பாடல்களாக……
இசைத்தொகுப்புகளாக……
இம்மண்ணில் வலம் வரச்செய்யக் கூடாது.?

இங்குள்ள மக்கள்
ஆப்பிரிக்க விடுதலைக்கான பாடல்களை பாடும்போது…
நீயேன் இம்மக்களது சோகங்களை
ஆப்பிரிக்க…. அய்ரோப்பிய நாடுகளில்
எதிரொலிக்க வைக்கக்கூடாது ?

நீயேன் இந்த ‘இழிந்த’ மக்களின்
கிழிந்த வாழ்வைச் சுமந்து கொண்டு
ஒர் இசைப்பயணம் மேற்கொள்ளக்கூடாது ?

செய்வாயா ராசையா ?

இம்மண்ணின் மக்கள் உன் மீதான அன்பை
உனக்குப் பலமுறை உணர்த்திவிட்டார்கள்.
அதற்குக் கைமாறாக
உன் முன் வைக்கப்படும் ஒரே வினா :
நீ எப்போது…? எப்படி…?

இனிய ராசையா,

நாங்கள் மறந்து போயிருந்த இயற்கையின் கீதங்களை…

வெத்திலை கொட்டும் ஒலியை….

துணி துவைக்கும் ஓசையை….

சலசலக்கும் நீரோடையை….

உனது இசையில் கேட்டுக் கொண்டிருந்தோம் இது வரை.

இனி இவைகளை இசை வடிவத்தில்
கேட்பது மட்டுமே சாத்தியம்
என்கிற இயந்திர கதியில்
போய்க் கொண்டிருக்கிறது இன்றைய உலகம்.

நகரத்தின் நகங்கள் நீண்டு……
வயல்வெளிகள் ரியல் எஸ்டேட்டுகளாய்…….

மிச்சமிருக்கிற மரங்களும் சூறையாடப்பட்டு…….
உயர் ரகக் குழந்தைகளுக்கான டிஸ்னி லேண்டுகளாய்…….

கிராமத்துச் சிறுவர்கள் வெட்டுக்கிளியும்,
பொன்வண்டும் பிடித்துத் திரிந்த புதர்க் காடுகள்….
ஹாலிடே ரிசார்ட்டுகளாய்….

எங்கள் இயற்கை ”நவீனத்தின்” கோரப்பற்களால்
குதறப்பட ஆரம்பித்தாயிற்று.

இனி …
நாங்கள் அந்த குயிலின் ஓசைகளையும்…….
சலசலக்கும் நீரோடையின் ஒலிகளையும்…….
உனது பாடல்களில் கேட்டால்தான் உண்டு.

இங்கு எல்லாமே ஆடம்பரமாய் போயிற்று.

வாழ்வில்…..

காதலில்……

கல்வியில்….

ஆன்மீகத்தில்….

இசையில்….

அரசியலில்….

என எல்லாமே……

ஆடம்பரம்….ஆரவாரம்.
பேரிரைச்சல்……
காதைக் கிழிக்கும் ஓலம்……

இடையிடையே மரண ஓலங்களும் கூட.

போதும் போதும்…. என்கிறவரை போகட்டும்.

இந்த ஆரவாரப் பேரிரைச்சல்களில் இருந்து
விடுபட மாட்டோமா என இதயங்கள்
ஏங்கத் துவங்கும் காலம் நிச்சயம் வரும்.

அப்போது…
உனது ஒற்றைப் புல்லாங்குழலின் இசைக்காக
இந்த உலகம் காத்திருக்கும்.

அப்போது…
நீ இருக்க மாட்டாய்…

ஆனால்….
உனது இசை இருக்கும்.

என்றென்றைக்கும் இந்த மக்களோடு………

நம்பிக்கையுடன்,
பாமரன்.

 
நன்றி: குமுதம் ஸ்பெஷல். மே 1997
 
 

Advertisements

23 thoughts on “இருபதாம் நூற்றாண்டின் ”இசை நந்தன்” ராசையாவுக்கு…

 1. // எடு அந்தப் பறையை சாதி வெறிக்கெதிராய்..
  எடு அந்தப் பறையை மத வெறிக்கெதிராய்..
  எடு அந்தப் பறையை மனித உரிமைகளுக்காய்..

  கொட்டு… கொட்டி முழங்கு… இந்தத் தேசமெங்கும்.

  கலாச்சாரத்தில் வேறுபட்ட மேற்கத்திய இசைக் கலைஞர்கள் கூட
  நிறவெறிக்கெதிராய் பாடியிருக்கிறார்கள்.
  சுற்றுசூழலுக்காய் தங்கள் முழக்கங்களைப் பதிவு செய்திருக்கிறார்கள்.

  இசைஞானி செய்ய தவறியதை , வெகு சிறப்பாக உங்களுக்கே உரிய எளிய நடையில் சுட்டி காட்டியுளீர்கள் நன்றி .

 2. உங்கள் கட்டுரையை வாசித்தேன், ராசையா எப்போதோ பிராமணியத்தை தழுவி விட்டார். இதன் உச்ச கட்டம்
  தான், பெரியாரின் படத்திற்கு இசை அமைக்க முடியாது என்று சொன்னது. அதுவும் கடவுள் இல்லை என்ற
  பாடல் வருவதால் என்னால் இசை அமைக்க முடியாது. என் நாவில் சரஸ்வதி குடிகொண்டு உள்ளதால்
  என்னால் முடியவே முடியாது என்று மறுத்தவர். உங்கள் விண்ணப்பம் அவர் காதில் விழாது. மீறி கேட்டால்
  முன் ஜென்ம பயன் என்று உங்கள் வாயை மூடி விடுவார்.

 3. வணக்கம் திரு பாமரன் அவர்கள்
  உங்களுக்கு தலை வணக்குகிரன்
  வாழ்க தமிழ்

 4. ungal karuthukkalodu udanpadukeran. viabbara nokkam perumalluvu kondu irukkum cinema ulaginnil indha alavirkku pudhumai mattuminry mozhi nermaiyai yum kadai pidithu irukkirar enrall adhu miga periya seyal. mattrapadi avarudaya nambikayai urassi parpadhu thevai illathadhu. neengal kumudhathil periyar vallalar madathil kadai pitha mariyadhainai pattri ezhuthi irundhirgal! avar vazhi vandha nammum annaermaiyai kadai pidikka muyalvom ,nandri!!!!

 5. அன்பு அண்ணன் பாமரன் அவர்களுக்கு, வணக்கம் தம்பி வீரமணி. இருபதாம் நூற்றாண்டின் “இசை நந்தன்” ராசையாவை படித்து சந்தோஷப்பட்டு பேசுகிறேன். இளையராசாவை யாராவது இப்படி கேட்கமாட்டார்களா என்று எத்தனையோ முறை நண்பர்களிடம் பகிர்ந்திருக்கிறேன் .நல்ல வேளை நீங்கள் கேட்டுவிட்டீர்கள். நீங்கள்தான் கேட்கவேண்டும்…நீங்கள் அனுமதி கொடுத்தால் இந்த கட்டுரையை நகல் எடுத்து பல பேருக்கு கொடுக்கலாம்.

  அன்புடன்
  தம்பி வீரமணி

 6. பாமரன் அவர்களுக்கு வணக்கம் சமீபத்தில் தமிழ் சினிமாவின் பத்து ஆளுமைகளில் இளையராஜாவை சேர்க்கமால் விட்ட குமுதம் பற்றி தங்கள் கருத்து என்ன என்பதை அரிய ஆவலாய் உள்ளேன் மேலும் கோவையில் தங்கள் முகவரி மற்றும் தொலைபேசி எண்ணும் கிடைத்தால் தங்களை சந்திக்க ஆவலாய் உள்ளேன் – சீனிவாசன்

 7. a very good qustion for pamaran ,raciya plz say yes or no, do or nothing speal

  {tamil type knowlage no english type i laran and type tamil }

  thankis

 8. hello paamaran,
  I have bben reading your paamaran pakkangal regularly..nice.. I have read your comment about raja sir.. you are right about his work but what I feel is that , like me, there are millions of people who grew up with his music, many , like me, were shaped up in to a fine human being , with his music making us understand love, affection, friendship, and manymore. I can say I was tuned in to a good person to love other people , to be happy as well as to feel bad in times. with all of his music following my life like a shadow..no other person has influnced my life like him for his sheer beauty and purity and perfection in music. They way he present it,is fanatastic. Once he said ‘in which varnam my fan is listening to my song, is the same varanam that I have made that song…means , you can hear it feel the same song in a different level…and he says that he tuned in that level only…
  he has sacrificed his life , denying his wife and children a normal life by staying in the studios for nights and nights…it is sheer hard work and concentration and dedication to give perfection and variety in music…to us..
  so I feel it is right to let him alone, at this stage. he does not need appalauses, or insults now..a peaceful life, better quiet. can we give it to him please?
  I am 42 , and I think when you become 60, you will also understand a man’s feel about God. As a non beleiver of God, you, cannot comment his decision of refusing music for an atheist..he has every right like you in establishing what he beleives..ok..
  regards
  prabhu
  breathes his music….all the time…

 9. இசைஞானி செய்ய தவறியதை , வெகு சிறப்பாக உங்களுக்கே உரிய எளிய நடையில் சுட்டி காட்டியுளீர்கள் நன்றி .

 10. //உனது வருகைக்குப் பின்னர்தான் எம்மூர் ஒலிபெருக்கிகள்
  இந்திப் பாடல்களுக்குப் பிரிவுபச்சார விழா நடத்திவிட்டு
  தமிழைத் தாங்கி கொள்ளத் துவங்கின.//

  என்ன உளரல், ராஜா வருவதற்கு முன்னால் தமிழகத்தில் எல்லோரும் இந்திப்பாடல்களைத்தான் கேட்டுகொண்டிருந்தோமா? அல்லது ராஜா வந்த பின்பு ஹிந்தி பாடல்கள் இங்கே ஹிட் ஆனதே இல்லையா? க

  கோயம்புத்தூர் அம்மன் விழாவில் ஒருவேளை நீங்கள் இந்தி பாடல்களை மட்டும் நீங்கள் கேடிருந்தால் தமிழகம் முழ்க்க அதுதான் நிலமை நம்புவது என்ன அறிவுடமையோ? ராஜா வருவதற்கு முன்பு துவங்கி இன்மும் தமிழகத்தின் மூலை முடுக்குகளில் ஒலித்துக் கொண்டிருக்கும் எம்ஜியார் சிவாஜி மற்றும் மெல்லிசை மன்னரும் மற்றவ்ர்களும் அளித்த பாடல்களை கேட்பவர்கள் உங்களுக்கு மனிதர்களாக தெரியவில்லை போலும். அந்த காலத்தில் இந்தி பாடல்களை கேட்டு கொண்டிருந்த , கேட்பதை பெருமையாய் கொண்டிந்த சிறிய அளவு மக்கல் கூட்டம் மட்டும் மனிதர்களாக தெரிகிறது போலும்.

 11. dear pamaran!,

  at that age of 21(during that article in1997, still i rememder the letter to the great KB also) i start to respect you b’cos of your admires on this great human, some of these people simply criticise this man in wrong way(even they do no how to position a flute too)…

  the base fact is… he is not a ordinary man that we all looks…. after quiet sometime his journey was changed by the almighty that he beleives…

  simply in his voice…. “……naayaenai thannadigal paaduvitha naayaganai!…., porul vazhi sellum mana vazhi adaippaai, nin arul arul alaigindra manam idnru pithatruthaey!…. maranthaen piranthaen muruga!,muruga!!!!…

 12. ஒன்று : நந்தன் உள்ளே போக வேண்டும்.
  அல்லது: சிவன் வெளியில் வரவேண்டும்.

  நன்றாகச் சொன்னீர்கள்.

 13. Absolutely beautiful writing. A rightfully justified tribute to a great musician of our times. I may have differences of opinions on many issues with you, but this article is beyond any criticisms.

 14. Dear Pamaran,

  You made me cry. I have met an Assamese, who incidentally is a professor at IIT, Guahati who likes Ilayaraja . Perhaps, if Ilayaraja had set music to
  a film like Roja, he might have been praised by the so called main stream (H) Indian
  media.
  If some one from the downtrodden is inefficient, reservation will be blamed.
  If some one from the downtrodden is meritorious , he will be at least ignored if
  not crushed.

  Sincerely,
  T.Sengadir

 15. இசைஞானி என எல்லோராலும் புகழப்படும் இளையராசாவின் இசை எதை எந்த கருத்தை தாங்கி வருகிறது என்பதை பொறுத்தே அவரின் திறமையை புகழ்வதா இல்லை இகழ்வதா என தீர்மானிக்க முடியும்.ஒரு படைப்பாளி என்பவனின் கடமை யாது?மக்களின் அன்றாட பிரச்சினைகளை சந்திக்காது இல்லை அதை பற்றி சிந்திக்காது இருப்பவன்,மக்களின் பிரச்சினைகளை தன் கலை மூலமாக வெளிப்படுத்தாது இருப்பவன் எப்படிஆகமுடியும்.. ஆசான்கள் சொன்னது போல “வர்க்கத்துக்கு அப்பாற்பட்டு எதுவும் இல்லை”,வர்க்கத்துக்கு அப்பாற்பட்ட எழுத்தாளனோ அல்லது ஒரு படைப்பாளியோ இருக்கவே முடியாது.

  ஒரு படைப்பாளி தன்னுடைய படைப்புக்களை உண்மையாகவே சிந்தித்து படைக்கின்றான் எனில் எப்படி ஒரே கையால் ஏழையின் வறுமையை பற்றியும் , முதலாளித்துவத்தின் பெருமையைப்பற்றியும் படைக்க முடிகின்றது, அவன் முதலாளித்துவத்தின் பெருமையை படைப்பதற்க்ககவே ஏழையின் வறுமையை படிக்கின்றான் . எந்த படைப்பாளியும் தன் வர்க்கத்துக்காகவே சிந்திக்கின்றான் அவனின் தேவைக்கு ரசிப்புக்கு ஏழையின் கண்ணீரும் தேவைப்படுகின்றது என்பது தான் உண்மை.

  கேள்விக்கு அப்பாற்பட்டவர்கள் யாரும் இங்கு இல்லை என்பது தான் உண்மை.ஆனால் கேள்வி கேட்கவே கூடாத பல புனிதங்கள் வரிசையாய் நிற்கின்றன.அவற்றை வெட்டி வீழ்த்தாது மக்களுக்கு கண்டிப்பாய் விடுதலை இல்லை.புனிதங்களுக்கு கல்லறை கட்டும் வேலையை செய்யும் வினவை கண்டிப்பாய் பாராட்டித்தான் ஆக வேண்டும்,பொழுதுபோக்கென கூறி புரளிகளையும் புரட்டுகளையும் பேசும் இந்த வலைஉலகில் வலைக்கு வெளியே பரந்து பட்ட மக்கள் உலகம் இருகின்றது அது இன்னமும் அடிமையாயிருக்கின்றது,அந்த அடிமை விலங்கை உடைக்க போராடி நம்மையும் அப்போர்க்களத்திற்கு அழைத்து செல்லும் வினவின் பதிவுகள் தொடர வேண்டும்.மீண்டும் சொல்வோம் இது மகிச்சிகரமான விசயமே ஏனெனில் மகிச்சி என்பது போராட்டம் தானே.

  Courtesy: Vinavu: http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=4784:2009-01-11-12-50-08&catid=240:2008-11-18-10-48-47

 16. Dear Pamaran,

  I dont think u have criticised in a right sense. Whatever u have expected(new commitments) from ilayaraja the same can be rejected by him with the logic u have handled.

  And another thing…. give equal weightage to both negative and positive crtics.

  Regards

  D.Gangaiselvan

 17. எங்கள் மனதில் இருந்ததை அப்படியே சொல்லி விட்டீர்கள் பாமரன் அய்யா

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s