எங்கே செல்லும் இந்தப் பாதை?

இன்றைக்கு இந்தியாவிலேயே தலையாய பிரச்சனை என்று எதைக் கருதுகிறீர்கள் நீங்கள்….?

திசை மாறிப் போன விவசாயக் கொள்கைகளால் கூட்டம் கூட்டமாகத் தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகளின் நிலையா?

“சுதந்திரம்” பெற்று 59 ஆண்டுகளாகியும் உயர்கல்வி நிறுவனங்களில் இன்னும் முழுமையாக நிறைவேறாமல் இழுத்துக்கொண்டு கிடக்கும் சமூக நீதி குறித்தா?

உள் நாட்டு வர்த்தகங்களுக்கு மூடுவிழா நடத்திவிட்டு புதிய கிழக்கிந்தியக் கம்பெனிகளுக்கு மகுடம் சூட்டுகின்ற “தாராள”தொழிற் கொள்கைகள் பற்றியா?

இப்படித் தேவையற்ற சாதாரணச் சிக்கல்கள் குறித்தெல்லாம் நீங்கள் சிந்தித்துக் கொண்டிருந்தால் நிச்சயம் நீங்கள் ஒரு “தேசத்துரோகி”யாகத்தான் இருக்க முடியும். இன்றைக்கு இதுவா பிரச்சனை?

மேற்கத்திய நாடுகள்…குறிப்பாக அமெரிக்கர்கள் தூங்கும் நேரத்தில் தாமும் உறங்கி….அவர்கள் விழிக்கும் நேரத்தில் தாமும் எழுந்து…அவர்கள் காலால் இட்ட பணியை தலையால் செய்து முடிக்கும் நம் தகவல் தொழில் நுட்பத் துறையினர் படும் இன்னல்களை விடவா அதி முக்கியமானவை இந்த விவசாயிகள், தொழிலாளர்கள் படும்பாடுகள்?

8 மணி நேரம் உழைப்பு – 8 மணி நேரம் ஓய்வு – 8 மணி நேரம் உறக்கம் என்பதெல்லாம் நம்மைப் போன்ற படு சோம்பேறிகளுக்குத்தான். இந்தக் கணிப்பொறி மேதைகள் “சமூக முன்னேற்றத்திற்காக” ஓய்வும் உறக்கமுமின்றி ஓடாய் உழைக்கும் பொழுதுகள் ஒரு நாளைக்கு எத்தனை மணி நேரம் தெரியுமா? அதிகமில்லை கனவான்களே.. ஏறக்குறைய இருபது மணி நேரம்தான்.

இப்படிப் படாத பாடுபட்டு பணி முடிந்து வீடு திரும்பும்போது நேரம் நள்ளிரவைத் தாண்டிவிடுவது முதல் பிரச்சனை.

இக்கண்ணியவான்கள் சாதாரண உழைக்கும் மக்களோடு சேர்ந்து டாஸ்மாக்கில் குடிக்க முடியாது என்பது இரண்டாவது பிரச்சனை.

அந்த டாஸ்மாக்கும் இரவு 11 மணிக்கு மேல் திறந்திருப்பதில்லை என்பது மூன்றாவது பிரச்சனை.

நெற்றி வியர்வை நிலத்தில் சிந்த உழைத்துத் திரும்பும் இந்த நடுநிசி நாயகர்களுக்குக் காத்திராமல் PUBS களை ஒரு மணிக்கே மூடி விடுவது நான்காம் பிரச்சனை.

அப்படியே கிடைத்தாலும் அருந்திவிட்டு வருபவர்களை சர்வ பாதுகாப்பாக வீட்டில் கொண்டு போய் சேர்க்காமல் வழி மறித்துக் கேள்விகள் வேறு கேட்கிறதே காவல்துறை என்பது ஐந்தாவது பிரச்சனை.
இப்படி ஒன்றா இரண்டா இச்”சமூக சேவகர்கள்” சந்திக்கும் இன்னல்கள்?
எதற்காக? காசய்யா காசு. நீங்கள் முப்பதாண்டுகள் முட்டி தேய உழைத்த பிறகு எண்ணிப் பார்க்கும் மொத்த காசையும் மூன்றே மாதத்தில் சுளையாக எண்ணிப் பார்ப்பதென்றால்…
இரவாவது பகலாவது?
சுதேசியாவது விதேசியாவது?
தான் சீரழிந்தால் என்ன சமூகம் சீரழிந்தால் என்ன?
அப்பன் சாவைக்கூட சி.டி.யில் பார்த்தால் போயிற்று.
சம்பளத்தை விடவா சமூகம்?

இப்படி பிற துறையினர் சம்பாதிக்கவே இல்லையா?
இவர்கள் மட்டும்தானா?
உங்கள் கேள்வி நியாயம்தான்.

உண்மை.
ஆனால் அவர்கள் எவரும் விடிய விடிய மதுபானக் கடைகளை தங்கள் “தியாகங்களுக்கு” ஈடாக திறந்து வைக்கச் சொல்லவில்லை.
” ‘இரவு வாழ்க்கை’ குறித்து அரசு கவனம் செலுத்த வேண்டும்” எனக் கோரிக்கை வைக்கவில்லை.
நடு இரவு வரை தார்ச் சாலை போட்டு விட்டு ஓரத்தில் உறங்கும் பணியாளர்கள் மீது காரை ஏற்றிக் கொல்லவில்லை.

நம்மைப் பொறுத்தவரை ….
நாள் முழுக்க ஓடாய்த் தேய்ந்து பிய்ந்த செருப்புக்களைத் தைத்துக் கொடுக்கும் ஒரு உழைப்பாளியை விட…
பிறரது மலத்தைச் சட்டியில் சுமந்து சென்று தனது பாழாய்ப்போன வயிற்றைக் கழுவிக் கொண்டிருக்கிற ஒரு துப்புரவுத் தோழனைவிட ….
இவர்கள் எந்த விதத்திலும் உயர்ந்தவர்களில்லை என்பதுதான்.

ஏற்கெனவே இந்த மேதைகளுக்காக புகைக்கும் அறைகளைக் கட்டிக் கொடுத்துள்ள நிறுவனங்கள் அடுத்ததாக குடிக்கும் கூடங்களையும்(PUBS) கட்டிக்கொடுக்க இருப்பதாகத் தகவல்.
சபாஷ்.
ஊழியர்கள் கண்ணில் நீர் வழிந்தால்
எஜமானர்களுக்கு உதிரம் கொட்டாமலா இருக்கும்?

இக் கணிப்பொறி மேதைகளுக்கு இந்தியப் பொருளாதாரம் குறித்துத்
தெரிந்திருக்கிறதோ இல்லையோ…
ஆனால் அமெரிக்கப் பொருளாதாரம் அத்துப்படி.
உள்ளூர்ச் சேரிகளில் உயிரோடு கொளுத்தப்படுவது தெரிகிறதோ இல்லையோ….
ஐரோப்பிய நாடுகளது பிரச்சனைகளை அலசி ஆராய்வதில் அசகாய சூரர்கள்.

வெளியில்தான் ஆட்டம் என்றில்லை. உள்ளுக்குள்ளும் அப்படித்தான் என்பதைப் பறைசாற்ற பாலியல் வன்முறைகளை விசாரிக்கவென்றே இருக்கின்ற REDRESSEL….மற்றும் OMS BUD போன்ற குழுக்கள்.

இறுதியாக ஒன்றே ஒன்றுதான் சொல்ல இருக்கிறது.
குடிக்கட்டும்…
கும்மாளமிடட்டும்…
இரவு பகல் பொழுதுகள் புரிபடாமல் உடற்கூறின் தன்மைகள் சிதைந்து
கடவுள் பாதி – மிருகம் பாதி ஆளவந்தான்களாய் அலையட்டும்.
அது ஒரு கட்டம் வரை அவர்களது பிரச்சனை.
ஆனால் அவர்களது வளாகத்தைத் தாண்டி வீதிக்கு வரும்போது அது சமூகத்தின் பிரச்சனை.

மேற்கத்திய நாடுகளின் மனிதர்கள் எந்தெந்த வேளைகளில் கழிப்பறைக்குச்
செல்கிறார்கள்…..
வெளிநாட்டுப் பயணங்களின் போது வெளியே தள்ளும் கழிவுகளுக்கான பணத்தை எப்படி முன் கூட்டியே செலுத்துவது…
போன்றவற்றிற்குக் கூட Pரொக்ரம்மிங் செய்து கொடுக்கும் நம் கணிப்பொறி மேதைகளுக்குச் சொல்ல வேண்டிய செய்திகளும் சிலதுண்டு.

அதுதான்:
முதலில் சகல துறைகளிலும் உள்ள உழைப்பாளிகள் எவரை விடவும் தாங்கள் உயர்ந்தவர்களில்லை என்பதை உணரட்டும்.

அடுத்து சம்பளம் மட்டுமே சமூக மரியாதைக்கான தகுதிகளில் தலையாயது என்கிற மூட நம்பிக்கைகளிலிருந்து விடுபடட்டும்.

சமூகத்தின் சகல மனிதர்களையும் தங்களது சக மனிதர்களாய் நேசிக்கக் கற்றுக்
கொள்ளட்டும்.

சுதந்திரம் என்பது பிற மனிதரது மூக்கின் நுனியைத் தொடாத வரைதான் என்பதைப் புரிந்து கொள்ளட்டும்.

இப்படி மக்களிடம் கற்றுக்கொள்ள அநேகம் இருக்கிறது அவர்களுக்கு.
கற்றுக் கொள்ள மறுத்து அடம் பிடிக்கிறபோது
மிகச் சரியானதொரு சந்தர்ப்பத்தில்
சமூகமே கற்பிக்கும்.

நன்றி: த சண்டே இந்தியன்