‘தாஜ்மகாலைக் கட்டியது ஷாஜகான் அல்ல…’ என எனக்கொரு ஈ-மெயில் வந்திருந்தது.
இந்த ரீதியிலேயே போனால்…
அமெரிக்க ராக்கெட் விண்ணில் வெடித்தது திப்பு சல்தான் செய்த சதி…
டயானா சாவுக்கு பிடல் காஸ்ட்ரோதான் காரணம்…
என்றெல்லாம் கூட மின்னஞ்சல்கள் வரலாம்.
இத்தகைய மின்னஞ்சல்கள் மொட்டைக் கடிதாசிகளின் நவீன வடிவம்.
பெரும்பாலான மின்னஞ்சல்களில் கொடி கட்டிப் பறப்பது… ‘தேசம்’ குறித்த அதீத அக்கறைகள்தான். அமெரிக்காவில் வயிறு வளர்த்தாலும் இவர்களது ‘தேசம்’ குறித்த ‘அக்கறைகள்’ சொல்லி மாளாதவை.
காஷ்மீர்…
கோத்ரா…
லைன் ஆப் கண்ட்ரோல்… என வெளுத்து வாங்கி விடுவார்கள் இந்த ‘நியோ பேட்றியாட்ஸ்’கள். ஆனால்… உள்ளூர் திண்ணியத்தில் பீயைத் தின்ன வைத்தது குறித்தெல்லாம் மூச்சு கூட விடமாட்டார்கள் இவர்கள்.
சேச்சே… இந்த ‘சகோதர’ சண்டைகளையெல்லாம் பெரிதுபடுத்தலாமோ…? நமது ‘தலையாய’ பிரச்சனைகளே வேறு…
உலகக் கோப்பை இந்த முறை யாருக்கு…?
பில்கேட்ஸ் கொடுக்கும் டாலர்களை வைத்து என்ன செய்யலாம்…?
இந்தியாவை ஊடுருவிய ‘அந்நியர்கள்’ யார் யார்? என்றெல்லாம் அயல்நாட்டில் ஆற அமர உட்கார்ந்து கொண்டு ஆலோசிப்பார்கள் இந்த கம்ப்யூட்டர் டகோடியாக்கள்.
(கைபர் போலன் கணவாய் ஊடுருவல்காரர்களுக்கு மட்டும் இதில் விதிவிலக்கு என்பது சொல்லத் தேவையில்லை).
ராமர் ஆலயம் கட்டுவதற்கான ‘நியாயங்களை’ டன் கணக்கில் அள்ளி வீசினாலும்… இவர்களது ஒரே ஆலயம் அமெரிக்கத் தூதராலயம்தான்.
உள்ளூரில் நெசவாளிகள் தெருவுக்கு வந்துவிட்டார்களா… மூச்.
விவசாயிகள் பட்டினிச் சாவா… மூச்.
தொழிலாளர்கள் வேலை இழப்பா… மூச்.
உள்ளூர் ‘சகோதரர்களை’ சேரியோடு சேர்த்துக் கொளுத்துகிறார்களா… மூச்.
இந்த ‘அற்பக்’ காரணங்களுக்காகவெல்லாம் பயன்படுத்தவா கம்ப்யூட்டர் சாப்ட்வேர்களை வடிவமைத்திருக்கிறார்கள் மைக்ரோ சாப்ட்டும்… சன்…னும்?
கார்சேவக்குகள் என்றால் சும்மா கடப்பாறையும் கையுமாக மட்டும் சுற்றும் ஆட்கள் என்று லேசாக எண்ணிவிடாதீர்கள். கம்ப்யூட்டரும் கையுமாக சுற்றும் ஜீன்ஸ் சேவக்குகளும் இருக்கிறார்கள். இவர்கள்தான் நமது ‘நவீன’ மாதிரிகள்.
நாட்டை அந்நியர்களுக்கு அடமானம் வைக்கும் உலகமயமாக்கலைக் கண்டித்து பல லட்சம் பேர் ஊர்வலம் போய் ஒப்பாரி வைத்தாலும் சரி… ஒரு கோடி பேர் கையெழுத்துப் போட்டு மனு கொடுத்தாலும் சரி…
அத்தனையும் வாக்மேன் கேட்பவன் காதில் ஊதிய சங்குதான்.
ஆனால்…
ஐரோப்பிய நாடுகளிலும், அமெரிக்க ஐக்கியக் குடியரசிலும் பஞ்சம் பிழைக்கப் போன இந்த ‘இந்தியர்களது’ குரலுக்கு இவர்களது செவி நிச்சயம் சாய்க்கும்.
இந்தியாவில் டாலர் மழையைப் பொழிய வைக்கும் இவர்களை அல்லாட வைக்கலாமா?
உள்ளூர் இந்தியன் ஒப்பாரி வைத்தால் நமக்கென்ன?
ஓடுகாலி இந்தியனுக்கு ஏதாவது செய்ய வேண்டாமா?
‘அம்பேத்கர் சொன்ன தலித்துகளுக்கான இரட்டை வாக்குரிமை எல்லாம் சும்மா உடான்ஸ்…
நாங்கள் கொண்டுவருகிற ‘இரட்டைக் குடியுரிமை’ திட்டம் இருக்கிறதே… அது இரட்டை டம்ளர் முறையைக்கூட ஏப்பம் விட்டு விடும்… பாருங்கள்…’ என்கிறது இந்திய அரசு.
மன்னன் எவ்வழியோ மக்கள் அவ்வழி.
சம்பளம் கட்… போனஸ் கட்… வேலைய வாய்ப்பு கட்… வேலையே கட்… என்றிருக்கும் மத்திய, மாநில அரசுகள்.
இந்த லட்சணத்தில் ‘புலம் பெயர்ந்த இந்தியர்கள்’ பிறகு வேறு எதைத்தான் சாட் செய்வார்களாம்…?
ஓசாமா பின் லேடனைச் சொல்லி ஆப்கானிஸ்தான் மீது குண்டு போடுகிறதா அமெரிக்கா…
மெளனமாய் இரு.
ஆந்த்ராக்ஸ் பீதியைக் கிளப்பி உலக நாடுகளையெல்லாம் நடுங்க வைக்கிறதா அமெரிக்கா…
மெளனமாய் இரு.
‘கம்யூனிச பயங்கரத்தைத் தடுப்பதாகக் கூறி கியூபாவின் மீது பொருளாதாரத் தடை விதிக்கிறதா…
மெளனமாய் இரு.
வேதியியல் ஆயுதங்களை வைத்திருப்பதாகச் சொல்லி ஈராக்கைக் கபளீரம் பண்ணத் துடிக்கிறதா அமெரிக்கா…
மெளனமாய் இரு.
அமெரிக்காவைப் போலவே நமக்கும் தந்தை சந்தைதான்.
மெளனமாய் இரு.
மெளனம் மெத்தச் சரிதான்…
ஆனால் எதுவரை…?
புஷ்ஷின் கோவணத்தைக் களவாடிவிட்டு வந்தவனுக்கு இந்தியா அடைக்கலம் கொடுத்திருப்பதாகக் கூறி அமெரிக்க ஏவுகணைகள் இந்தியாவைக் குறி பார்க்காதவரை.
நன்றி : தீராநதி.