ராஜீவ் காந்தியும் நானும்…

(ஈழத்து இளைஞர்களும்… தமிழகத்துத் தாத்தாக்களும் – 2 )

(கட்டம் கட்டி ஆசிரியர்தான் முழங்க வேண்டுமா? என்னைப் போன்ற ஆசாமிகளுக்கு அந்த உரிமை கிடையாதா என்ன? ஆக…… இந்தக் கட்டத்துக்கான காரணம் யாதெனில்…… போன இதழில் என்னைக் கட்டம் கட்டிப் போட்டதில் மாபெரும் பிழை ஒன்று நடந்திருக்கிறது என்பதுதான். சொற்குற்றமாயின் பொருத்தருளலாம்…… ஆனால் பொருட் குற்றத்தை……?

ஒரு பேப்பருக்கு உலகெங்கிலும் உள்ள விரிவுரையாளர்கள் மீது என்ன கோபமோ நானறியேன். ஆனால்…… பி.காம். படிப்பையே இன்றைய நொடி வரை முடிக்காத என்னைப் போய்…… “விரிவுரையாளர்” என விளித்தது ஒட்டுமொத்த கல்வி மான்கள்……கரடிகள்…… கங்காருகள்…… என எல்லோருக்கும் ஆப்பு வைக்கும் செயல். வெட்கத்தை விட்டு சொல்வதானால் (அப்படி ஒன்று இல்லாவிட்டாலும்……) இன்னமும் இருபத்தி மூணு அர்ர்ரியர்ஸ் பி.காமில்.(வணிகவியல் எண்டும் சொல்லலாம்) மொத்தம் இருபத்தி ஐந்தில் இரண்டு மட்டுமே தேறிய “மேதையைப்” போய்…… “விரிவுரையாளர்” என்றால் அடுக்குமா? “அதுசரி…… அப்புறம் உனக்கெல்லாம் எப்படித்தான் கொடுத்தான் வேலையை?” என நீங்கள் புருவத்தை உயர்த்துவது புரிகிறது. சுருக்கமாகச் சொல்வதானால் நானும் ராஜீவ் காந்தியும் ஒரே ரகம்.

ஆம்.

அவர் அம்மா இறந்ததனால் பிரதமர் வேலைக்கு வந்தவர்.

நான் அப்பா இறந்ததனால் கிளர்க் வேலைக்கு வந்தவன்.

போதுமா? )

எண்பதுகளின் தொடக்கத்தில் தமிழக மண்ணைத் தொட்ட போராளிகளாகட்டும்…… புலம் பெயர்ந்தவர்களாகட்டும்…… யாருக்குமே “ஒழுங்காக” தமிழ் பேச வராது என்கிற “உண்மை” இன்னும் பலருக்குத் தெரியாது. தமிழகத்தில் அடைக்கலம் தந்த அநேகருக்கு ஈழத்தவர்கள் கதைத்த ‘இங்கிலீஷ்’ தலை சுற்ற வைத்து விட்டது. இவர்களும் அவர்களும் உரையாடிக் கொள்வதைப் பார்த்தால் ஏதோ இரண்டு வேற்று கிரகவாசிகள் உரையாடிக் கொள்வதைப்போல் தான் இருக்கும்.

இப்படித்தான் ஒருமுறை தோழன் குட்டி திருச்சியில் நின்றபோது ஒரு சம்பவம். ஏதோ அவசர நிமித்தமாய் பக்கத்து வீட்டுக்காரரின் கதவைத் தட்டி “அம்மா…… ஒரு பாரமான வாளி இருந்தா கொடுங்கம்மா” என்று கேட்க அந்த அம்மணி வெலவெலத்துப் போய்விட்டார்.

“ஏம்ப்பா…… நீ மலையாளத்துக்காரனா? சொல்லவே இல்லியே……” என்று பதிலுக்கு வினவ…… ஏற்கெனவே அவசரத்தில் இருக்கிற குட்டி என்ன செய்வது? ஏது செய்வது? என்று தடுமாறிய வேளையில் சட்டென்று பதில் தோன்றியிருக்கிறது பக்கத்தில் இருந்த தோழனுக்கு…… “அம்மா…… அவன் கிடக்கிறான்…… நீங்க ஒரு வெயிட்டான பக்கெட் இருந்தா கொடுங்க அவசரம்.” என்று விளக்கம் கொடுக்க……

“ஆங்…… அப்படித் தமிழ்ல கேட்டா குடுப்பனல்ல” என்றபடியே கொடுத்திருக்கிறார் அந்த பக்கத்து வீட்டுக்காரர்.

பாரமான வாளி இங்கிலீஷ் ஆகவும்
வெயிட்டான பக்கெட் தமிழாகவும் மாறிய
கதையைச் சொல்லிச் சொல்லி சிரிப்பார்கள் தோழர்கள்.

சென்னை கலைவாணர் அரங்கத்தில் ஒரு நிகழ்ச்சி. கூட்டம் 6 மணிக்கு என்று அழைப்பிதழில் போட்டிருந்தாலும் ஆரம்பிப்பதாய்க் காணோம். பொறுத்துப் பொறுத்து பார்த்த எனது ஈழத்து நண்பன் பக்கத்தில் அமர்ந்திருந்த ஒரு பெரியவரிடம்…… “அய்யா…… நிகழ்ச்சி எப்பத் துவங்கும்?” என்று கேட்க…… பெரியவரிடம் இருந்து எந்த பதிலும் இல்லை. ஒருவேளை பெருசுக்கு காது கேட்காதோ என்னமோ என்கிற சந்தேகத்தில் கொஞ்சம் உரக்க “அய்யா…… நிகழ்ச்சி எப்பத் துவங்கும்?” என்று அடிவயிற்றிலிருந்து மறுபடியும் குரல் கொடுக்க…… கொஞ்சம் அசைந்து கொடுக்கிறது பெருசு. அப்பாடா இப்பவாவது காதில் விழுந்ததே என்கிற நிம்மதியில் நண்பன் மீண்டும் அந்தப் பெரியவரைப் பார்த்து புன்னகைக்க……

அவரோ சுற்றும் முற்றும் பார்க்கிறார். பின்னர் மெதுவாக நண்பனின் காதருகே குனிந்து மன்னிப்பு கேட்கும் தொனியில்  “தம்பி…… எனக்கு அவ்வளவாக இங்கிலீஷ் பேச வராது” என்று சொல்ல…… நண்பன் மயக்கம் போட்டு விழாததுதான் குறைச்சல். கர்மம்டா சாமி…… என்று தலையில் அடித்துக் கொண்டு “அய்யா…… நான் புரோகிராம் எப்ப ஸ்டார்ட் ஆகும்ன்னு கேட்டன்”  என “அழகு தமிழில்” விளக்கிச் சொல்ல……

“ஓ அதுவா தம்பி…… புரோகிராம் கரெக்ட்டா செவன் ஓ கிளாக் ஸ்டார்ட் ஆயிரும்” என்று பெருசு நெத்தியடியாய் போட்ட போட்டில் அன்றிலிருந்து நண்பன்  நிகழ்ச்சிகளுக்கு போவதையே கைவிட்டு விட்டான் என்பது வேறுகதை.

சாதாரணமாக வழக்குத் தமிழில் பேசினாலேயே “சார் உங்களுக்கு ரொம்ப தமிழ் பற்றா?” என்று எங்களையே ஒரு கை பார்க்கும் சனத்திடம் நமது ஈழத் தோழர்கள் பட்ட பாட்டை நினைத்துப் பார்கிறேன்…… ம்ம்ம்ம்ம்ம்ம்…… அந்தப் பாட்டுக்கு பதிலாக வெறும் காத்துதாங்க வருது.

என்னைப் பொறுத்தவரை……

சிங்களனுக்குத் தப்பி தமிழகத்தின் கரைகளில்
ஒதுங்கியவர்களை விடவும்

‘சிங்களன் கையாலேயே செத்தாலும் பரவாயில்லை’ என்று
தமிழனுக்குத் தப்பி படகேறியவர்களின் எண்ணிக்கை அதிகம்
என்பது எனது நம்பிக்கை.

(உளறல் தொடரும்)