ரத்தம் சரணம் கச்சாமி……..

தினமும் வீட்டை விட்டுக் கிளம்பும் முன் அருகிலிருக்கும் கடையில் செய்தித்தாள்களை லேசாக மேய்ந்துவிட்டுப் புறப்படுவது வழக்கம். அன்றும் அப்படித்தான் எதேச்சையாக நாளிதழைக் கையில் எடுக்கிறேன். நெஞ்சில் பேரிடி ஒன்று இறங்குகிறது.

“இலங்கையில் தமிழர்கள் மீது கொலை வெறித்தாக்குதல்!”
“தமிழ்க் கைதிகளை கொடூரமாகக் கொன்ற கோரம்!!”

என விரிந்து கொண்டே போகிறது செய்தி. என்னை அறியாமல் கண்களில் தாரை தாரையாகக் கண்ணீர் கன்னத்தை நனைக்கிறது. வெலிக்கடை சிறையில் அடைக்கப்பட்டிருந்த குட்டிமணி, ஜெகன், தம்பித்துரை உட்பட ஐம்பதுக்கும் மேற்பட்ட தமிழ்ப் போராளிகளை அறை அறையாகச் சென்று தேடிப்பிடித்து நிராயுதபாணிகளான அவர்களை குத்திக் கொன்ற கொடூரமும்…….. உயிரிழந்தவர்களை இழுத்து வந்து அச்சிறையின் புத்தர் பீடத்துக்குக் கீழே வீசியெறிந்துவிட்டு ஆர்ப்பரித்த அவலமும்…….. கொலைச் செயல்கள் கச்சிதமாக அரங்கேறுகின்றனவா என்று வானூர்திகள் வட்டமிட்டபடி கண்காணித்த கொடுமையும்…….. விலாவாரியாக விளக்கப்பட்டிருந்தது அதில். எல்லாவற்றைக் காட்டிலும் ஏற்கெனவே சிங்கள அநீதி மன்றத்தால் மரணதண்டனை விதிக்கப்பட்டிருந்த குட்டிமணி, ஜெகன், தம்பித்துரை மூவரையும் குறி வைத்துக் கொன்றதோடு அவர்களது கண்களை நோண்டியெடுத்து தரையில் தேய்த்த ஈனச்செயல் இதயமுள்ள எவரையும் உலுக்கிப் போடும்.

அதற்கு முன்னர்தான் வழக்குமன்றத்தில் மரணதண்டனை விதிக்கப்பட்டபோது அம்மூன்று மாவீரர்களும் மரணத்தை துச்சமென மதித்து ஆற்றிய உரை மனதில் மீண்டும் ஒருமுறை ஒலித்தது.

“நாங்கள் இறந்த பிற்பாடு எங்களது கண்களை எடுத்து எமது தமிழ் இளைஞர்களுக்குப் பொருத்துங்கள். நாங்கள் அதன் மூலமாவது நாளை மலரப்போகும் தமிழ் ஈழத்தைக் காண்போம்” என்றார்களோ அந்தக் கண்களைத்தான் குதறியெறிந்து தரையில் தேய்த்தது புத்தரின் வழிவந்ததாகக் கூறிக் கொண்ட கூட்டம். இத்தகைய வாரிசுகளை வழிநடத்தக்கூடிய “தலைமை பிட்சுவாக” இருந்தவர்தான் ஜெ.ஆர்.ஜெயவர்த்தனா.

சிங்களக் காடையர் சகலருக்கும் “புத்தம் சரணம் கச்சாமி” என்பது “ரத்தம் சரணம் கச்சாமி” என்றே காதில் ஒலித்திருக்கிறது. விளைவு? வெலிக்கடைச் சிறை படுகொலைகளும்…….. கொழும்பு நகரில் நடத்திய வெறியாட்டங்களும். துயர செய்திகள் ஒவ்வொன்றாக வெளிவர மொத்த தமிழகமுமே கொதித்து எழுந்தது. ஆளும்கட்சி, எதிர்க்கட்சி என சகல கட்சிகளுமே இலங்கை அரசின் இனப்படுகொலைகளை வன்மையாகக் கண்டித்தன. அப்போது தமிழக முதல்வராய் இருந்த எம்.ஜி.ஆர். பிரதமர் இந்திரா காந்திக்கு தமிழக மக்களின் உணர்வுகளை பல்வேறு வழிகளில் தொடர்ந்து எடுத்துக் கூறிய வண்ணம் இருந்தார். தி.மு.க. தலைவர் கலைஞரும் மத்திய அரசின் துரித நடவடிகையை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை அறிவித்து நடத்திய வண்ணம் இருந்தார்.

தமிழகமெங்கும் மாணவர் போராட்டங்கள்…….. ஜெயவர்த்தனாவின் கொடும்பாவி எரிப்புகள்…….. என எங்கெங்கு காணினும் சிங்கள இனவெறியர்களுக்கு எதிரான கோபம் பொங்கும் முகங்கள். மிகவும் உணர்ச்சிவசப்பட்டிருந்தேன் நான். தாளமுடியாத கவலையும், கோபமும் மனதை ரணமாக்கிக் கொண்டிருந்தது.

கோயமுத்தூரில் ரயில் மறியலில் ஈடுபடுவதென முடிவாகி இருந்தது. வீட்டை விட்டு வெறியோடு வெளியேறினேன். ரயில் நிலைய மறியலில் கலந்து கொள்ள எனது கல்லூரி மாணவர்களை அழைத்துக் கொண்டு ரயில் நிலையச் சாலையை நெருங்கும்போது அங்கு ஏற்கெனவே ஆயிரக்கணக்கில் மாணவர்கள் குழுமி இருப்பதைப் பார்க்கிறேன். இக்கூட்டத்தில் எண்ணிக்கையில் அடங்காத அளவுக்கு பள்ளி மாணவர்களும் கலந்திருந்தனர். போலீசார் கைகளால் வளையம் அமைத்து ரயில் நிலையச் சாலையின் முனையிலேயே மாணவர்களை தடுத்து நிறுத்திக் கொண்டிருந்தனர். சிங்கள அரசுக்கெதிரான முழக்கங்களும், மத்திய அரசை உடனடியாக தலையிடக் கோரிய முழக்கங்களும் ஓங்கி ஒலித்துக் கொண்டிருந்தது. மாணவர்கள் போலீஸ் வளையத்தை உடைத்துக் கொண்டு ரயில் நிலையத்தை அடைய எத்தனிப்பதும்…….. போலீசார் அவர்களை பின்னுக்குத் தள்ளுவதுமான இழுபறியிலேயே நேரம் போய்க் கொண்டிருந்தது. மாணவர் தலைவர்கள் ஒவ்வொருவரையும் போலீஸ் வேனின் கூரை மீது ஏற்றிவிட்டு கூட்டத்தை அமைதிப்படுத்துமாறு கோருகிறார்கள் போலீசார். எந்த சமாதானத்தையும் எவரும் கேட்பதாயில்லை. நேரம் கடந்து கொண்டே போவதால் அந்த நேரம் பார்த்து வேறு ஒரு முடிவு எடுக்க வேண்டி வருகிறது மாணவர் தலைவர்களுக்கு.

ரயில் மறியல் என்றால் முன் வாசல் வழியாகத்தான் போயாக வேண்டுமா? ஊர் முழுக்க ஓடுகிற தண்டவாளத்தை அடைவதற்கு இது ஒன்றுதானா வழி?

அவ்வளவுதான்…….. அதுவரையில் போலீசாரிடம் முட்டி மோதிக் கொண்டிருந்த மாணவர் கூட்டம் எதிர்த் திசையில் திரும்பி கிடைத்த சந்துகளில் எல்லாம் புற்றீசலென ஓடத் துவங்குகிறது. போலிசாருக்கு என்ன நடக்கிறது என்பது புரிபடுவதற்குள்ளாகவே மொத்த இருப்புப் பாதையும் மாணவர்கள் கைவசம் வந்து சேருகிறது. வேறு வழியின்றி வந்து சேருகிறார் மாவட்ட ஆட்சித் தலைவர். அதே ரயில் நிலைய மாடியிலுள்ள ஹாலில் ஆரம்பமாகிறது பேச்சு வார்த்தை.

“ஈழத்தமிழர்கள் மீது எங்களுக்கும் அக்கறை இருக்கிறது. கவலை இருக்கிறது. அதற்காக நமது பயணிகளுக்கு சிரமம் அளிப்பது சரிதானா?” என்கிறார் மாவட்ட ஆட்சியர்.

“யாருக்கும் சிரமம் அளிப்பது எமது நோக்கமல்ல. ஆனால் ஈழத்தில் நமது மக்கள் பட்டுக் கொண்டிருக்கும் துயரங்களைப் பார்க்கும்போது இதுவொன்றும் பெரிய சிரமமில்லை. எங்கள் கோரிக்கை மத்திய அரசின் காதுகளில் விழ வேண்டும் என்பதற்காகத்தான் இந்த மறியல்” என்று மாணவர் தலைவர் ஒருவர் பேசிக் கொண்டிருக்கும்போதே வெளியில் கண்ணாடிகள் உடைபடும் சத்தம்.

“அதில்லை தம்பிகளா…….. ரயில் சரியான நேரத்துக்கு வரலைன்னா மக்கள் என்னவோ ஏதோன்னு சந்தேகப்படுவாங்க” என்கிறார் டி.எஸ்.பி.

“ரயில் சரியான நேரத்துக்கு வந்தால்தான் மக்களுக்கு தேவையில்லாமல் சந்தேகம் வரும். நேற்றுக்கூட ஜெயந்தி ஜனதா எக்ஸ்பிரஸ் 12 மணி நேரம் லேட்” என்கிறேன் நான். முறைக்கிறது போலீஸ்.

மீண்டும் கண்ணாடிகள் நொறுக்கப்படும் சத்தம்……..
ஜெயவர்த்தனாவுக்கு எதிராக ஓங்கி ஒலிக்கப்படும் முழக்கங்கள்……..
இதற்கிடையில் ரயில் எஞ்சினுக்கு எவரோ தீ வைத்துவிட எழுந்த புகை மண்டலம்……..
என வெளியில் நிலவரம் கலவரமாகிக் கொண்டிருக்கிறது.

“மாணவர்களிடம் சென்று அவர்களை அமைதிப்படுத்துங்கள்” என்கிறார் மீண்டும் மாவட்ட ஆட்சியர்.

“அது சாத்தியமேயில்லை அவர்கள் தாங்கவியலாத கவலையிலும், கோபத்திலும் இருக்கிறார்கள். வேண்டுமானால் எங்களைக் கைது செய்து கொள்ளுங்கள்” என்கிறோம்.

வேறுவழியின்றி இறங்கி வருகிறது நிர்வாகம். ரயில்கள் நிறுத்தப் படுகின்றன.

இதுதான்……..
வெறுமனே சினிமா பார்த்துக் கொண்டும்……..
கவிதைகள் என்ற பெயரில் கண்றாவிகளைக் கிறுக்கிக் கொண்டும்……..
இருந்த இளைஞனை வீதிக்கு அழைத்து வந்த முதல் போராட்டம்.

அதன் பிற்பாடு நாங்கள் உணர்ந்து கொண்டதுதான் ஈழத்தில் இன்றும் துவளாது தொடரும்……..

கற்பதற்கான போராட்டமும்
போராட்டத்துக்கான கல்வியும்.

(உளறல் தொடரும்)