ரத்தம் சரணம் கச்சாமி……..

தினமும் வீட்டை விட்டுக் கிளம்பும் முன் அருகிலிருக்கும் கடையில் செய்தித்தாள்களை லேசாக மேய்ந்துவிட்டுப் புறப்படுவது வழக்கம். அன்றும் அப்படித்தான் எதேச்சையாக நாளிதழைக் கையில் எடுக்கிறேன். நெஞ்சில் பேரிடி ஒன்று இறங்குகிறது.

“இலங்கையில் தமிழர்கள் மீது கொலை வெறித்தாக்குதல்!”
“தமிழ்க் கைதிகளை கொடூரமாகக் கொன்ற கோரம்!!”

என விரிந்து கொண்டே போகிறது செய்தி. என்னை அறியாமல் கண்களில் தாரை தாரையாகக் கண்ணீர் கன்னத்தை நனைக்கிறது. வெலிக்கடை சிறையில் அடைக்கப்பட்டிருந்த குட்டிமணி, ஜெகன், தம்பித்துரை உட்பட ஐம்பதுக்கும் மேற்பட்ட தமிழ்ப் போராளிகளை அறை அறையாகச் சென்று தேடிப்பிடித்து நிராயுதபாணிகளான அவர்களை குத்திக் கொன்ற கொடூரமும்…….. உயிரிழந்தவர்களை இழுத்து வந்து அச்சிறையின் புத்தர் பீடத்துக்குக் கீழே வீசியெறிந்துவிட்டு ஆர்ப்பரித்த அவலமும்…….. கொலைச் செயல்கள் கச்சிதமாக அரங்கேறுகின்றனவா என்று வானூர்திகள் வட்டமிட்டபடி கண்காணித்த கொடுமையும்…….. விலாவாரியாக விளக்கப்பட்டிருந்தது அதில். எல்லாவற்றைக் காட்டிலும் ஏற்கெனவே சிங்கள அநீதி மன்றத்தால் மரணதண்டனை விதிக்கப்பட்டிருந்த குட்டிமணி, ஜெகன், தம்பித்துரை மூவரையும் குறி வைத்துக் கொன்றதோடு அவர்களது கண்களை நோண்டியெடுத்து தரையில் தேய்த்த ஈனச்செயல் இதயமுள்ள எவரையும் உலுக்கிப் போடும்.

அதற்கு முன்னர்தான் வழக்குமன்றத்தில் மரணதண்டனை விதிக்கப்பட்டபோது அம்மூன்று மாவீரர்களும் மரணத்தை துச்சமென மதித்து ஆற்றிய உரை மனதில் மீண்டும் ஒருமுறை ஒலித்தது.

“நாங்கள் இறந்த பிற்பாடு எங்களது கண்களை எடுத்து எமது தமிழ் இளைஞர்களுக்குப் பொருத்துங்கள். நாங்கள் அதன் மூலமாவது நாளை மலரப்போகும் தமிழ் ஈழத்தைக் காண்போம்” என்றார்களோ அந்தக் கண்களைத்தான் குதறியெறிந்து தரையில் தேய்த்தது புத்தரின் வழிவந்ததாகக் கூறிக் கொண்ட கூட்டம். இத்தகைய வாரிசுகளை வழிநடத்தக்கூடிய “தலைமை பிட்சுவாக” இருந்தவர்தான் ஜெ.ஆர்.ஜெயவர்த்தனா.

சிங்களக் காடையர் சகலருக்கும் “புத்தம் சரணம் கச்சாமி” என்பது “ரத்தம் சரணம் கச்சாமி” என்றே காதில் ஒலித்திருக்கிறது. விளைவு? வெலிக்கடைச் சிறை படுகொலைகளும்…….. கொழும்பு நகரில் நடத்திய வெறியாட்டங்களும். துயர செய்திகள் ஒவ்வொன்றாக வெளிவர மொத்த தமிழகமுமே கொதித்து எழுந்தது. ஆளும்கட்சி, எதிர்க்கட்சி என சகல கட்சிகளுமே இலங்கை அரசின் இனப்படுகொலைகளை வன்மையாகக் கண்டித்தன. அப்போது தமிழக முதல்வராய் இருந்த எம்.ஜி.ஆர். பிரதமர் இந்திரா காந்திக்கு தமிழக மக்களின் உணர்வுகளை பல்வேறு வழிகளில் தொடர்ந்து எடுத்துக் கூறிய வண்ணம் இருந்தார். தி.மு.க. தலைவர் கலைஞரும் மத்திய அரசின் துரித நடவடிகையை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை அறிவித்து நடத்திய வண்ணம் இருந்தார்.

தமிழகமெங்கும் மாணவர் போராட்டங்கள்…….. ஜெயவர்த்தனாவின் கொடும்பாவி எரிப்புகள்…….. என எங்கெங்கு காணினும் சிங்கள இனவெறியர்களுக்கு எதிரான கோபம் பொங்கும் முகங்கள். மிகவும் உணர்ச்சிவசப்பட்டிருந்தேன் நான். தாளமுடியாத கவலையும், கோபமும் மனதை ரணமாக்கிக் கொண்டிருந்தது.

கோயமுத்தூரில் ரயில் மறியலில் ஈடுபடுவதென முடிவாகி இருந்தது. வீட்டை விட்டு வெறியோடு வெளியேறினேன். ரயில் நிலைய மறியலில் கலந்து கொள்ள எனது கல்லூரி மாணவர்களை அழைத்துக் கொண்டு ரயில் நிலையச் சாலையை நெருங்கும்போது அங்கு ஏற்கெனவே ஆயிரக்கணக்கில் மாணவர்கள் குழுமி இருப்பதைப் பார்க்கிறேன். இக்கூட்டத்தில் எண்ணிக்கையில் அடங்காத அளவுக்கு பள்ளி மாணவர்களும் கலந்திருந்தனர். போலீசார் கைகளால் வளையம் அமைத்து ரயில் நிலையச் சாலையின் முனையிலேயே மாணவர்களை தடுத்து நிறுத்திக் கொண்டிருந்தனர். சிங்கள அரசுக்கெதிரான முழக்கங்களும், மத்திய அரசை உடனடியாக தலையிடக் கோரிய முழக்கங்களும் ஓங்கி ஒலித்துக் கொண்டிருந்தது. மாணவர்கள் போலீஸ் வளையத்தை உடைத்துக் கொண்டு ரயில் நிலையத்தை அடைய எத்தனிப்பதும்…….. போலீசார் அவர்களை பின்னுக்குத் தள்ளுவதுமான இழுபறியிலேயே நேரம் போய்க் கொண்டிருந்தது. மாணவர் தலைவர்கள் ஒவ்வொருவரையும் போலீஸ் வேனின் கூரை மீது ஏற்றிவிட்டு கூட்டத்தை அமைதிப்படுத்துமாறு கோருகிறார்கள் போலீசார். எந்த சமாதானத்தையும் எவரும் கேட்பதாயில்லை. நேரம் கடந்து கொண்டே போவதால் அந்த நேரம் பார்த்து வேறு ஒரு முடிவு எடுக்க வேண்டி வருகிறது மாணவர் தலைவர்களுக்கு.

ரயில் மறியல் என்றால் முன் வாசல் வழியாகத்தான் போயாக வேண்டுமா? ஊர் முழுக்க ஓடுகிற தண்டவாளத்தை அடைவதற்கு இது ஒன்றுதானா வழி?

அவ்வளவுதான்…….. அதுவரையில் போலீசாரிடம் முட்டி மோதிக் கொண்டிருந்த மாணவர் கூட்டம் எதிர்த் திசையில் திரும்பி கிடைத்த சந்துகளில் எல்லாம் புற்றீசலென ஓடத் துவங்குகிறது. போலிசாருக்கு என்ன நடக்கிறது என்பது புரிபடுவதற்குள்ளாகவே மொத்த இருப்புப் பாதையும் மாணவர்கள் கைவசம் வந்து சேருகிறது. வேறு வழியின்றி வந்து சேருகிறார் மாவட்ட ஆட்சித் தலைவர். அதே ரயில் நிலைய மாடியிலுள்ள ஹாலில் ஆரம்பமாகிறது பேச்சு வார்த்தை.

“ஈழத்தமிழர்கள் மீது எங்களுக்கும் அக்கறை இருக்கிறது. கவலை இருக்கிறது. அதற்காக நமது பயணிகளுக்கு சிரமம் அளிப்பது சரிதானா?” என்கிறார் மாவட்ட ஆட்சியர்.

“யாருக்கும் சிரமம் அளிப்பது எமது நோக்கமல்ல. ஆனால் ஈழத்தில் நமது மக்கள் பட்டுக் கொண்டிருக்கும் துயரங்களைப் பார்க்கும்போது இதுவொன்றும் பெரிய சிரமமில்லை. எங்கள் கோரிக்கை மத்திய அரசின் காதுகளில் விழ வேண்டும் என்பதற்காகத்தான் இந்த மறியல்” என்று மாணவர் தலைவர் ஒருவர் பேசிக் கொண்டிருக்கும்போதே வெளியில் கண்ணாடிகள் உடைபடும் சத்தம்.

“அதில்லை தம்பிகளா…….. ரயில் சரியான நேரத்துக்கு வரலைன்னா மக்கள் என்னவோ ஏதோன்னு சந்தேகப்படுவாங்க” என்கிறார் டி.எஸ்.பி.

“ரயில் சரியான நேரத்துக்கு வந்தால்தான் மக்களுக்கு தேவையில்லாமல் சந்தேகம் வரும். நேற்றுக்கூட ஜெயந்தி ஜனதா எக்ஸ்பிரஸ் 12 மணி நேரம் லேட்” என்கிறேன் நான். முறைக்கிறது போலீஸ்.

மீண்டும் கண்ணாடிகள் நொறுக்கப்படும் சத்தம்……..
ஜெயவர்த்தனாவுக்கு எதிராக ஓங்கி ஒலிக்கப்படும் முழக்கங்கள்……..
இதற்கிடையில் ரயில் எஞ்சினுக்கு எவரோ தீ வைத்துவிட எழுந்த புகை மண்டலம்……..
என வெளியில் நிலவரம் கலவரமாகிக் கொண்டிருக்கிறது.

“மாணவர்களிடம் சென்று அவர்களை அமைதிப்படுத்துங்கள்” என்கிறார் மீண்டும் மாவட்ட ஆட்சியர்.

“அது சாத்தியமேயில்லை அவர்கள் தாங்கவியலாத கவலையிலும், கோபத்திலும் இருக்கிறார்கள். வேண்டுமானால் எங்களைக் கைது செய்து கொள்ளுங்கள்” என்கிறோம்.

வேறுவழியின்றி இறங்கி வருகிறது நிர்வாகம். ரயில்கள் நிறுத்தப் படுகின்றன.

இதுதான்……..
வெறுமனே சினிமா பார்த்துக் கொண்டும்……..
கவிதைகள் என்ற பெயரில் கண்றாவிகளைக் கிறுக்கிக் கொண்டும்……..
இருந்த இளைஞனை வீதிக்கு அழைத்து வந்த முதல் போராட்டம்.

அதன் பிற்பாடு நாங்கள் உணர்ந்து கொண்டதுதான் ஈழத்தில் இன்றும் துவளாது தொடரும்……..

கற்பதற்கான போராட்டமும்
போராட்டத்துக்கான கல்வியும்.

(உளறல் தொடரும்)

Advertisements

22 thoughts on “ரத்தம் சரணம் கச்சாமி……..

 1. //உயிரிழந்தவர்களை இழுத்து வந்து அச்சிறையின் புத்தர் பீடத்துக்குக் கீழே வீசியெறிந்துவிட்டு ஆர்ப்பரித்த அவலமும்//

  இங்கே தான் மிகப்பெரிய முரணே தெரிகிறது.
  அன்பு காட்டுங்கள் என்று சொன்ன புத்தருக்கே சடலங்கள் பரிசா!

 2. நீண்ட நாட்களாக எதுவும் எழுதாவிட்டாலும், என் இதயத்தை பிசையும் பதிவாக இது அமைந்து விட்டது!

  “இழப்பதற்கு எதுவுமில்லை எனில்
  எதையும் செய்ய துணிந்து விடு”

  என்பது தானே நமது தாரக மந்திரமும் கூட
  இதற்கு ஒரு முடிவு தெரியாமல் ஓய கூடாது தோழரே

 3. தோழர் பாமரனுக்கு,

  நீண்ட நாட்களாக உங்களுக்கு என்று ஏதேனும் ஒன்று எழுத வேண்டும் என்ற என் எண்ணம் இன்று நிறைவேறியது எனக்கு மிக சந்தோசமே. ரத்தம் சரணம் கச்சாமி நீண்ட நாட்களுக்கு பிறகு வந்தாலும் நிச்சயம் ஒரு மிக நல்ல விஷயம். இலங்கை போராட்டமும், அப்போது நிகழ்ந்த இன படுகொலையும் இன்று சினிமாவிலும் டாஸ்மாக்லும் தொலைந்து கொண்டிருக்கும் இன்றைய தலைமுறைக்கு வெறும் கதைகள் என்றாகி விட்ட நேரத்தில், இதை படிக்கும் யாரேனும் ஒருவருக்காவது வலிக்கும் என்பது உண்மை.

  எனினும்

  இதுதான்……..
  வெறுமனே சினிமா பார்த்துக் கொண்டும்……..
  கவிதைகள் என்ற பெயரில் கண்றாவிகளைக் கிறுக்கிக் கொண்டும்……..
  இருந்த இளைஞனை வீதிக்கு அழைத்து வந்த முதல் போராட்டம்.

  போராட்டம் அதன்பின் தொடர்ந்ததா என்ற கேள்விக்கு கிடைக்கும் கசப்பான பதில் இல்லை என்பதே…

 4. இன்றுதான் உங்கள் வலைப்பூவைப் பார்த்தேன். உங்கள் பழைய பதிவுகளைப் படிக்கத்தொடங்கிவிட்டேன்.

 5. ஈழத்தமிழர்களுக்காக வேண்டாம் எம்தமிழக மீனவ சகோதரர்களுக்காகவேனும், பொங்கி எழ வேண்டமா!

  ஷில்பா ஷெட்டியின் முத்ததிற்கு யுத்தவெறி கொள்பவர்கள்.
  மீனவர்களின் ரத்ததிற்கு ரௌத்திரம் கொள்ள வேண்டாமா!

  பாக்கிஸ்தான், இந்தியா, சீனா, அமெரிக்கா, ஐரோப்பா எல்லோரும் ஈழத்தமிழரைக் கொல்வதில் மட்டும் ஒருமித்த கோட்பாடு.

 6. பாமரன் அண்ணா..

  இந்தக் கொடுமை ஈழத்தில் நடந்தபோது நான் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தேன்.. மறுநாள் பிரேயரில் இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினோம்.

  இரண்டு நாட்கள் கழித்து கருப்பு பேட்ஜ் அணிந்து திண்டுக்கள் நகரில் மெளன ஊர்வலம் நடத்தினோம்..

  அதே நாள் மாலை பள்ளியின் சர்ச்சில் கூட்டுப் பிரார்த்தனை நடத்தினோம்..

  ஏதோ எங்களால் அப்போதைக்கு முடிந்தது.. அன்றைய தமிழ்நாட்டின் ஊடகங்கள் ஒன்றுவிடாமல் இந்தப் படுகொலைகளைப் பற்றி தெளிவான செய்திகளை வெளியிட்டன. முதன் முதலாக ஈழத் தமிழர்கள் பற்றி தமிழக மக்களின் கவனத்தையும், அனுதாபத்தையும் திசைதிருப்பியது இந்தக் கொடூரச் சம்பவந்தான் என்பதில் எனக்கு சந்தேகமில்லை..

 7. வணக்கம் தோழா,

  என்ன தோழா நீண்ட நாள் காணல!

  மீண்டும் வருமா இந்த எழுச்சி?

 8. அறிந்த செய்தி என்றாலும் கண்களில் நீரை வரவழைத்து விட்டது. நாம் என்னதான் செய்ய முயும், தோழரே? விளங்கவில்லையே 😦

  நம் (தமிழ்நாடு) அக்கறையின்மையால் சிங்கள இராணுவம், தமிழரின் அரசியல் தலை நகரமாகிய கிளிநொச்சி அருகிலேயே வந்துவிட்டது!!!

 9. மேலே உள்ள செய்தியை பாருங்கள். நம்மள எல்லாம் கிறுக்கு பயபுள்ளைங்கன்னு முடிவே கட்டீடானுங்க!!!! ராடார் வழங்கியது தமிழ் நாட்டிலுள்ள அணு உலைகளை காப்பதற்காம் 😦

 10. //இதுதான்……..
  வெறுமனே சினிமா பார்த்துக் கொண்டும்……..
  கவிதைகள் என்ற பெயரில் கண்றாவிகளைக் கிறுக்கிக் கொண்டும்……..
  இருந்த இளைஞனை வீதிக்கு அழைத்து வந்த முதல் போராட்டம். //

  இதையே முன்பொரு பதிவில் பின்னூட்டமாகவும் அளித்தேன். உங்கள் அனுபவம்தான் எனக்கும். கடந்த வாரம் ஐ.நா. தலைமை அலுவலகம் முன்பு நடந்த கண்டனப் பேரணியில் கலந்து கொள்ள என்னை நியூயார்க் நகருக்கு அழைத்துச் சென்றதும் இந்த அனுபவம்தான்.

  ஓராண்டு முன்பு இந்நிகழ்ச்சியை அனுபவித்து விவரித்த சோபா சக்தியின் “ம்” நூலை வாசித்த பொழுது, நினைவுகள் என்னை இரண்டு வாரங்களுக்கு மிகவும் அழுத்தின. (அதே சோபா சக்தி தன்னுடைய சுயத்துக்கு அடிமையாகி புலியெதிர்ப்புணர்ச்சிக்காக எந்த ஈனச்செயலையும் செய்யத் துணிவார் என்று தோன்றுகிறபொழுது எப்பொழுதுமே வலிக்கிறது என்பது வேறு விடயம்).

  நன்றி – சொ. சங்கரபாண்டி

  (தோழர் பாமரன், உங்களைத் தொடர்ந்து வாசிக்கும் நான் இன்றுதான் பின்னூட்டமிட்டிருக்கிறேன். முதலில் நான் பாமரன் என்ற புனைப்பெயரில் எழுத நினைத்து யாகூ மற்றும் ஹாட்மெயில் போன்றவற்றில் பாமரன் முகவரிகளை வைத்திருந்தேன். இங்குள்ள சில குழுமங்களில் முதலில் ஒருசில கடிதங்கள் எழுதியதுமுண்டு. 2000-2001 வாக்கில் குமுதத்தில் உங்கள் எழுத்துக்களைப் பார்த்தபின் என் பாமரனைக் கைவிட்டேன். சுடலைமாடனை மட்டுமே பிடித்துக் கொண்டேன்.)

 11. “கற்பதற்கான போராட்டமும்
  போராட்டத்துக்கான கல்வியும்” ! நெத்தியடி தோழர்!!

  “ப்ரயொகம் இல்லாத தத்துவம் ஆண்மையற்றது”

  – தோழர் ஜோ. ஸ்டாலின்

 12. மானாட மயிலாடுகிறது தமிழகம்
  தான் வாழ போராடுகிற்து தமிழ் ஈழம்

  -புதுவை இரத்தினதுரை-

 13. கண்களில் நீருடன், நான் பிறந்ததே எண்பதுகளில்தான் ஈழத்தின் பிரச்சினை பற்றி படித்திருக்கிறேன். ஆனால் இந்தமாதிரி நடந்த சம்பவங்களை இப்போதுதான் படிக்கிறேன் ரொம்ப அவமானமாக இருக்கு. அப்போது தமிழகத்தில் இருந்த தலைவர்தான் இப்போது இருக்கிறார். தனக்குத்தானே பட்டம் கொடுத்து தொலைக்காட்சி ஆரம்பித்து அவர் காலத்தை ஓட்டிவிட்டார்..எதிர்காலத்தை எங்களுக்கு சூனியமாக கொடுத்திருக்கிறார்.கண்டிப்பாக என்னால் முடிந்ததை செய்வேன் என் காலத்தில் (களத்தில்)..

 14. தோழர் பாமரன்… இது மாதிரி வன் கொடுமைகள் செய்பவர்களுக்கு புத்த மதம் தேவையா இல்லை புத்தர் தான் தேவையா… தனது கண்களை எடுத்து வேறு ஒரு தமிழனிடம் வைக்க சொன்ன அந்த போராளியின் ஆசையை கூட நிறைவேற்றாத மிருக ஜென்மங்களை மனிதர்கள் என்று கருதுவது கூட தகாது

 15. அற்புதமான பணியை செய்து வருகிறீர்கள் தோழ்ர்…வாழ்த்துக்கள்..
  உண்மையில் இந்த கட்டுரைகள் இளைய சமுதாயத்தினை தான் சென்றடைய வேண்டும்; குறிப்பாக தமிழ் நாளிதழ் / வார / மாத இதழ்களில் வரவேண்டியது..பரவாயில்லை தோழர்..நீங்களாவது இக்கட்டுரைகளை தொகுத்து மலிவு விலையில் வெளியிடுங்கள்.
  –தமிழன்.

 16. எமக்காக (ஈழத்த்மிழருக்காக) எழுச்சிகொண்ட அத்தனை தமிழக உறவுகளுக்கும் நன்றியை இப்பதிவினூடாக தோழர் பாமரனின் சம்மதத்துடன் பதிவு செய்கிறேன்.

 17. அய்யா
  புத்த மதத்தை இலங்கைக்கு கொண்டு சென்றதும்,தமிழன் மூலமாகத்தானே.தமிழனை வெறுப்பவன், தமிழனால் தனக்கு போதிக்கப் பட்ட புத்த மதத்தையும் துறப்பதுதானே.இந்த சூடு,சொரணையெல்லாம் அந்த நாய்களுக்கு இல்லையே.பொறுத்தது போதும்.இந்த ஆண்டிலாவது உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் பொங்கியெழுந்து இதற்கு முடிவுரை எழுத வேண்டும்.

  ஆதங்கத்துடன்,
  அருள்

 18. ADADAA…..IBDIYELLAM NADANDHRUKKAA….
  SINGALAN VERY BIDITHA MIRUGATHAI VIDA ……SORRY MANUSHA PAYALUVALAE
  ILLAI…. ILLAI

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s