“சொல்லிக்காட்டவா சோறு போட்டீர்கள்?”

நல்லது.
மீண்டும் அந்தக் காலம் அரும்பியிருக்கிறது.
ஈழத்தமிழர் நலனுக்காக ஒட்டுமொத்த தமிழகமுமே களம் இறங்கியிருக்கும் செய்திதான் அது. அம்மக்களின் நெடுங்காலப் போராட்டத்திற்கு ஆதரவாக ஆக்கபூர்வமாக என்ன செய்யப் போகிறோம் நாம்? என்பதுதான் நம் முன் உள்ள கேள்வி.

என்னென்னவெல்லாம் செய்யப் போகிறோம் என்பதைக் காட்டிலும்……
என்னென்னவெல்லாம் செய்யக் கூடாது என்பதில் கவனத்தைக் குவித்தாக வேண்டிய வேளை இது.
அது நாம் காலக்குதிரையை சற்று கழுத்தைத் திருப்ப அனுமதித்தால் மட்டுமே நடந்தேறக்கூடிய விசயம்.

முதலில், சமாதான மேசைகளில் பரிமாறப்பட இருப்பது ஈழத் “தமிழர்” குறித்ததான பிரச்சனை என்பது கவனத்துக்கு வருமேயானால்…… இந்தத் தமிழர்களது பிரச்சனைகள் குறித்து எந்தெந்தத் “தமிழரெல்லாம்” கூடி விவாதிக்கப் போகிறார்கள்? என்கிற வினாவும் கூட எழுந்தே தீரும். அதில் ஏ.கே.அந்தோணி தொடங்கி எம்.கே.நாராயணனில் தொடர்ந்து சிவசங்கர் மேனனில் வளர்ந்து இலங்கையில் இருக்கும் இந்தியப் பிரதிநிதி அலோக் பிரசாத் வரைக்கும் பலரும் இந்த மொழிக்குடும்பத்திற்குள் அடக்கி விட முடியாதவர்கள் என்பது பள்ளிச் சிறுவனுக்குக் கூட தெரியும். இவர்களெல்லாம் தமிழர்கள் குறித்து விவாதிக்கக் கூடாது என்பதில்லை. ஆனால் எவருடைய பிரச்சனை குறித்து விவாதிக்கப்பட இருக்கிறதோ அவர்களது தரப்பைச் சார்ந்த ஓரிருவராவது அதில் அடங்கியிருந்தால் இன்னும் கொஞ்சம் அது அர்த்தமுள்ளதாக இருக்குமே என்பதுதான் ஆதங்கம்.

எண்பதுகளின் மத்தியில் இதை சரிவர கணக்கில் கொள்ளாமல் ரொமேஷ் பண்டாரி என்கிற வெளியுறவு அதிகாரியை திம்பு பேச்சுவார்த்தையில் தலையிட வைத்ததன் விளைவு…… அமைதிக்கு பதிலாக அனர்த்தத்தில் போய் முடிந்தது. பேச்சுவார்த்தையில் இருந்து ஒட்டுமொத்தமாக அனைத்து போராளிக் குழுக்களுமே வெளிநடப்பு செய்தனர். பொறுப்பற்ற அதிகாரியின் போக்கால் போராளிகள் வெளியேறியதை மத்திய அரசு புரிந்து கொள்ளாததால் ஆண்டன் பாலசிங்கம், சத்தியேந்திரா, சந்திரகாசன் மூவரும் நாடு கடத்தப்பட்டனர். அதையொட்டி தமிழகத்தில் எழுந்த போராட்டமும்…… அதற்கு மத்திய அரசு வேறு வழியின்றிப் பணிந்ததும்…… இன்னமும் நினைவில் நிற்கும் நினைவுகள்.

அடுத்து வந்த “அகிம்சைப் படை” காலங்களில் தமிழரின் இனப் பிரச்சனையைக் கையாண்ட ஜே.என்.தீட்ஷித் ஆகட்டும் கல்கத் ஆகட்டும் தமிழ் குறித்தோ…… தமிழர் குறித்தோ…… “அ” னா “ஆ”வன்னா கூட அறியாதவர்கள் என்பதும் அனைவரும் அறிந்த விசயம்.

இரண்டாவதாக, இலங்கையின் ராணுவத்தை “சிறீலங்கா ராணுவம்” என்றழைப்பதே எதார்த்தத்திற்குப் புறம்பான விஷயம் என்பதுதான். அதன் ராணுவத்தில் ஒரு தமிழர் கூட இல்லாத நிலையில் அதை சிங்கள ராணுவமாக மட்டுமே பார்ப்பதும், அழைப்பதும்தான் சரியாக இருக்க முடியும். அப்போதுதான் அங்கு நடப்பது இனச்சண்டை அன்று இனப்படுகொலை என்கிற உண்மை புலப்படும்.
சரி, அப்படி இருக்கிற ராணுவமும் என்ன யோக்கியதையில் இருக்கிறது என்பதை ஹெய்ட்டி லீலைகளே உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டன. ஐ.நா.அமைதிப்படையில் மக்களைப் பாதுகாக்கப் போன சிங்கள ராணுவத்தினர் 108 பேர் ஹெய்ட்டி நாட்டுப் பெண்களை(யும்) பாலியல் வல்லுறவு கொண்ட குற்றத்திற்காக கழுத்தைப் பிடித்து வெளியில் தள்ளப்பட்டனர். அமைதி காக்கப்போன இடத்திலேயே இத்தகைய ஆட்டம் போட்டவர்கள்…… எதிர்த்தாக்குதல் நிகழும் இடங்களில் எத்தகைய ஈனச்செயல்களில் ஈடுபட்டிருப்பார்கள் என்பதற்கு “கோணேஸ்வரிகளே” சாட்சி.

மூன்றாவது, “இறையாண்மை” குறித்து இடத்திற்கு இடம் மாறுபடும் வியாக்கியானங்கள். ஒரு நாட்டில் உள்ள இரு இனப்பிரிவுகள் ஒன்றோடொன்று இணைந்திருப்பதோ…… விலகிக் கொள்வதோ அது அவை இரண்டும் சம்பந்தப்பட்ட விஷயம். ஆனால், பாகிஸ்தானின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிட்டு வங்காள தேசத்தை உருவாக்கும்போது தோன்றாத “இறையாண்மை” ஈழத்தமிழர்கள் இனப்படுகொலைக்கு ஆளாகும்போது மட்டும் தோன்றுவதுதான் நெருடலான துயரம்.

அதுவும் எப்படிப்பட்ட “நேச”நாட்டின் “இறையாண்மையைக்” காப்பாற்றப் போகிறோம்……?
இந்திய – பாகிஸ்தான் போரின்போது பாகிஸ்தான் பக்கம் நின்ற நாட்டின்
“இறையாண்மையை”……

இந்திய – சீன யுத்தத்தின் போது பெளத்தத்தின் பெயரால் சீனாவின் பக்கம் நின்ற நாட்டின் “இறையாண்மையை”……

இன்றைய கணம் வரை பாகிஸ்தானோடும், சீனாவோடும் நூலிழை கூட இடைவெளி இல்லா உறவோடு ஆயுதங்களை வாங்கிக் குவிக்கும் நாட்டின் “இறையாண்மையை”……

இந்தப் புவிசார் அரசியல் சூழலின் சூட்சுமம் நேருவின் மகளுக்குப் புரிந்தது.

விளைவு?
ஒடுக்கப்படும் இனத்தினை நோக்கி அவரது கரங்கள் நீண்டது.
நாடெங்கிலும் ஆயுதப் பயிற்சி முகாம்களும்…… அரசியல் ரீதியான அணுசரணையும் ஈழப்போராளிகளுக்கு வாய்த்தது.

அதன் பின்னர் வந்த அயலுறவுக் “கொள்கை” வகுப்பாளர்களோ ராஜதந்திரத்துக்கான புதியதொரு அகராதியையே “படைத்தனர்.”

எதிரிகளைக் கூட நண்பர்களாக மாற்றும் வல்லமை படைத்த ராஜதந்திரம் விடைபெற்று……
நண்பர்களைக் கூட எதிரிகளாக மாற்றும் “ராஜதந்திர” அபத்தங்கள் அரங்கேறத் தொடங்கியதும் இன்னமும் நினைவில் நிற்கும் நிகழ்வுகள்தான்.

நான்காவதாக, தொடரான ஒடுக்குமுறையும் இனப்படுகொலையும் தொடரும்போது பூமிப்பந்தில் புதிய புதிய தேசங்கள் தோன்றுவதொன்றும் புதிரானதோ எதிரானதோ அல்ல. அது செர்பியா தொடங்கி ஒசீட்டியா வரைக்கும் உலக நிகழ்வுகளை உற்றுப் பார்த்தவர்களுக்குப் புரியும். அப்படி மலரும் ஈழமும் இந்துமகா சமுத்திரத்தின் அரசியல் வானில் இந்தியாவிற்குத் துணையாகத்தான் இருக்கும் என்பதுதான் அப்பட்டமான எதார்த்தம் என்பதும் புரியும்.

ஐந்தாவதாக, துயரப்படும் ஒரு இனத்திற்கான நமது உதவி என்பது எத்தகைய பிரதிபலனும் கருதாமல் நாம் நம் கடமையைச் செய்கிறோம் என்பதே. எண்பதுகளின் பிற்பகுதியில் தமிழகத்தில் ஓங்கி ஒலித்த ஈழத்தமிழர் ஆதரவுக் குரல்களும்…… போராட்டங்களும்…… மத்திய அரசினை கொழும்பை நோக்கி ஒரு கோபப்பார்வையை வீச வைத்தது. அடுத்து இலங்கையின் வான் எல்லைக்குள் இந்தியப் போர் விமானங்கள் துணையோடு உணவுப் பொட்டலங்கள் வடக்கு கிழக்கில் வாடிய உயிர்களை நோக்கி வீசப்பட்டன. தமிழகமும், ஈழமும் நன்றிப்பெருக்கோடு நிமிர்ந்து நோக்கின.

ஆனால்…… அடுத்து வந்த நாட்களோ……?
“இந்திய – இலங்கை வெளியுறவுத் துறை அதிகாரிகள் ஆலோசனை……”
“இந்திய – இலங்கை வெளியுறவு அமைச்சர்கள் பேச்சுவார்த்தை……”
என நகர்ந்து இறுதியில் ராஜீவ் – ஜெயவர்த்தனா ஒப்பந்தத்தில் போய் முடிந்தது. எந்தவொரு ஒப்பந்தமும் போரிட்டுக் கொள்கிற இரு தரப்பாருக்குள் நிகழ வேண்டுமே அன்றி சமரசம் செய்யச் சென்ற நடுவரே உடன்படிக்கையில் கையெழுத்திடுவதென்பது உலகம் கண்டிராத விந்தை. அமைதிக்கான ஒப்பந்தம் என்பது இலங்கை அரசுக்கும் போராளிகளுக்கும் இடையே ஏற்பட்டிருக்க வேண்டும். சமரசம் செய்யச் சென்ற ராஜீவ்காந்தி அதில் சாட்சிக் கையொப்பமிட்டிருக்க வேண்டும். அதுதான் நியதி.

ஆனால்……
உணவுப் பொட்டலங்களின் பெயரால் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட கட்டாயப்படுத்தப்பட்டனர் போராளித் தலைவர்கள். பார்வையாளர்கள் சிலருக்கும் ‘ “இவ்வளவு” உதவிகள் செய்த மத்திய அரசை ஏற்றுக் கொண்டு கையெழுத்துப் போட்டால்தான் என்ன?’ என்கிற எண்ணத்தினையும் அது ஏற்படுத்தியது. நடுவராக இருந்த அரசே இன்னொரு தரப்பாக உருமாறி ஒப்பந்தம் போட்டுக் கொண்டதும்…… அப்படிப்பட்ட ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ளச் சொல்லி நிர்பந்தப்படுத்தியதும்…… ஏற்படுத்திய துயரம் தாளாமல் சென்னையில் நடந்த கூட்டத்தின்போது ஒரு போராளி கேட்டார் :

“சொல்லிக்காட்டவா சோறு போட்டீர்கள்?”
இதுவும் நினைவில் நிற்கும் நிகழ்வுதான்.

எல்லாவற்றுக்கும் மேலாய், இறுதியாக……
அண்டைநாடு…… பஞ்சசீலம்…… இறையாண்மை…… உள்நாட்டு விவகாரம்…… எல்லாம் தாண்டி “நேச” நாட்டுக் கடற்படையினரால் காவு வாங்கப்பட்ட “சொந்த” நாட்டு மீனவர்கள் மட்டும் இதுவரை ஐநூற்றுச் சொச்சம் பேர்.

“எதிரி” நாட்டு படையான பாகிஸ்தானியரால் கூட மீனவர்கள் எவரும் இப்படிக் கொல்லப்பட்டதில்லை.

இந்தியக் கடற்படையும் பாகிஸ்தானிய மீனவர்களை இப்படிக் கொன்றதில்லை.

அவ்வளவு ஏன்…… எதிரும் புதிருமான கியூபாவும் அமெரிக்காவும் கூட மீனவர்கள் விசயத்தில் இவ்விதம் நடந்து கொண்டதில்லை.

இங்கு மட்டும் ஏன் இப்படி?

இன்று மனசாட்சியுள்ள எவருள்ளும் எழும் கேள்வி இதுதான் :

அப்படியாயின்…… தமிழர்கள் என்பவர்கள் யார்……?

அவர்கள் ஈழத்தில் பிறந்திருப்பினும் சரி.
இந்தியாவில் பிறந்திருப்பினும் சரி.

தமிழர்கள் என்பவர்கள் யார்……?

இதுவே இன்று அவர் முன் உள்ள ஒரே கேள்வி.

நன்றி : சண்டே இந்தியன் வார இதழ் – 18.10.2008

சுதந்திரம் என்பது……

(ஈழத்து இளைஞர்களும்…… தமிழகத்துத் தாத்தாக்களும்…… 4)

எம்மவர்கள் தமிழகத்தின் கரைகளில் தடம் பதித்தபோது எதிர்கொண்ட வினாக்களுக்கே ஒரு பெரும் நாவல் எழுதலாம்.

“இங்கிருந்து போயி……..நீங்க நாடு கேட்கலாமா?” என்பதில் தொடங்கி……..

“தம்பி…….. இடையில இந்தக் கடல் மட்டும் இல்லேன்னா……..அந்த ஜெயவர்த்தனாவை அப்படியே……..” என்பதில் தொடரும்.

கேப்டன் ஹென்றி பேர்ட் காலத்தில் தேயிலைத் தோட்டங்களுக்கு கூலித் தொழிலாளிகளாக அழைத்துச் செல்லப்பட்ட மலையக மக்களைத் தாண்டி…….. ஏற்கெனவே அங்கே ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் வாழ்ந்து வரும் பல லட்சம் புராதனத் தமிழர்களைப் பற்றிய வரலாற்று அறிவை ஊட்டுவதற்கே படாத பாடுபட்டனர் எம்மவர்கள்.

அடக்குமுறைகளின் விளைவால் தாயகம் இழந்து ஏதிலிகளாக புலம் பெயர்ந்தவர்கள் யார்?
“ஒப்பந்தங்களின்” அடிப்படையில் சொந்த நாடு திரும்பியவர்கள் யார்?
என இரண்டுக்குமான வித்தியாசம் சாதாரண சனங்களுக்குப் புலப்படாவிட்டால் கூட பரவாயில்லை. ஆனால் நான் சந்தித்த ஓரிரு அரசியல் தலைவர்களுக்கே அந்த அடிப்படை வித்தியாசம் புரியவில்லை என்பதுதான் துயரம்.

அதன் விளைவாக அன்று ஈழமக்கள் எதிர்கொண்ட கேள்விகளையும்……..இடர்ப்பாடுகளையும்…….. இன்றைய வார்த்தைகளில் சொல்வதை விடவும்…….. 1988 ல் வெளிவந்த “அன்புத் தோழிக்கு” என்கிற எனது முதல் நூலின் வரிகளிலேயே சொல்வது பொருத்தமாகப் படுகிறது எனக்கு.

இனி,
எனது “அன்புத் தோழிக்கு” நூலில் இருந்து கொஞ்சம்……..

“அன்புத் தோழி!

ஈழத்திலிருந்து கியூபட் கடிதம் எழுதியிருந்தான். கடிதத்தை பிரிக்கும் முன்னரே கண்களை கண்ணீர் கைப்பற்றிக் கொண்டது. இவனையாவது விட்டு வைத்திருக்கிறார்களே என்ற எண்ணம் என்னுள் எழுந்தது. சற்றே நிம்மதி.

ஈழம் குறித்த உனது வினாக்கள் சில நியாயமானவைதான். ஆம், நமது மக்கள் இப்படித்தான் இருக்கிறார்கள். தோழி! மூன்று அல்லது நான்காண்டுகள் இருக்கும்:

கோவைக்கு வெகு அருகிலுள்ள சிறு கிராமம். அங்குள்ள இளைஞர்கள் அங்கும், இங்கும் அலைந்து கொண்டிருக்கிறார்கள். ஒரு அரிசி ஆலையில் நாங்கள் பேசுவதாக ஏற்பாடு. ஐந்தரை மணி சுமாருக்கு பேருந்தை விட்டு இறங்குகிறோம். என்னுடன் வந்த போராளிகளை விழிகளை இமைக்காது மேலும் கீழுமாக ஆச்சர்யத்துடன் பார்க்கிறார்கள் அக்கிராமத்து மக்கள்.

தோழி! இதில் என்ன வேடிக்கையெனில் அவர்கள் என்னையும் ‘ இவனும் இலங்கையோ?’ எனும் சந்தேகக் குறியோடு பார்க்கிறார்கள். நான் ‘ நான் நம்மூர் தாங்க…’ என்று முதலிலேயே தெளிவுபடுத்தி விடுகிறேன்.

சில பெரியவர்களும் சிறுவர்களும், தோழர்கள் தோளில் தொங்கும் பையினையே உற்று உற்றுப் பார்க்கிறார்கள், ‘துப்பாக்கி’ ஏதேனும் தென்படுமோ என்று. அதில் ஒரு சிறுவன் உள்ளிருந்த புகைப்பட ஆல்பத்தினைத் தொட்டுப் பார்த்துவிட்டு, ‘டோய்! துப்பாக்கி டோய்’ என்று கூவுகிறான். தோழர்கள் சிரித்துக்கொண்டே உள்ளிருந்த புகைப்பட ஆல்பத்தினை எடுத்துக் கொடுத்து, ‘உங்கள் மத்தியில் நாங்கள் இருக்கும் போது துவக்கு (துப்பாக்கி) எங்களுக்கு தேவையில்லை தானே ? நாங்களும் உங்களைப் போலத்தான் ?. எங்கள் சூழல் எங்களை இப்படி ஆக்கியிருக்கிறது. எங்களை யாரும் வித்தியாசமாகப் பார்க்க வேண்டாம். ஆயுதங்களைக் கவர்ச்சிப் பொருளாக ஆக்க நாங்கள் விரும்பவில்லை. தயவு செய்து உங்களில் ஒருவராக எங்களைப் பாவியுங்கள்” என வேண்டுகோள் விடுக்கிறார்கள்.

தோழி! அந்த மக்களுக்குத்தான் எத்துணை மகிழ்ச்சி. தங்கள் மொழியைப் பேசும் ஒருவன் துப்பாக்கி ஏந்திப் போராடுகிறான் என்பதில் அவர்களுக்கு ஏற்படும் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை தோழி!

நண்பர் ஒருவர் வந்து, அனைவரும் கூடிவிட்டதாகவும் கூட்டத்தை துவங்கி விடலாம் எனவும் அழைக்கிறார்.

“’நடக்கலாமா குமரன்?” என்கிறேன்.

கலந்துரையாடல் துவங்குகிறது, அதற்கு முன்பாகவே நான் எழுந்து, தோழர்களுக்கு தர்மசங்கடத்தினை உருவாக்கும் எந்தக் கேள்விகளையும் கேட்க வேண்டாம் எனவும், அவர்களது கொள்கைகள், நடைமுறைகள் குறித்த வினாக்களை மட்டுமே வினவும்படியும் வேண்டுகோள் விடுக்கிறேன். ( உங்களுக்கு யார் அதிகமாக உதவுகிறார்கள் ? கலைஞரா ? எம்.ஜி.ஆரா ? எத்தனை துப்பாக்கிகள் வைத்திருக்கிறீர்கள் ? எங்கு வைத்திருக்கிறீர்கள் ? இப்படி, எப்படி எப்படியெல்லாமோ எழும் கேள்விகளைத் தவிர்ப்பதற்கே )

தோழர்கள் ஒவ்வொருவராய் ஈழப் போராட்டம் குறித்து விளக்கிக் கொண்டிருக்கிறார்கள். எதிரே ஒரு கரும்பலகை -வரைபடங்களுடன்.

திடீரென்று ஒரு குரல் எங்களை திக்குமுக்காட வைத்துவிட்டது தோழி!

‘நீங்க எப்ப தமிழ் ஈழம் வாங்குவீங்க?’

எனக்கு பகீரென்கிறது. அந்தக் குரலுக்கு உரியவரைத் தேடுகிறேன்.

‘ஒரு முதியவர்’

என்னையறியாமல் அவர் மீது மிகுந்த இரக்கம் ஏற்படுகிறது.

குமரன் சிரித்துக்கொண்டே ‘ ஒரு போராட்டத்தின் காலக்கட்டத்தைக் குறிப்பிட்டுக் கூற முடியாது. இது இன்னும் எத்தனை ஆண்டுகள் வேண்டுமானாலும் தொடரக்கூடிய சூழல்கள் உருவாகலாம். ‘ அடுத்த சித்திரையில் அடைவோம், வைகாசியில் கொடியேற்றுவோம் என்று உங்களை ஏமாற்ற தயாராயில்லை’ என்று மென்மையாக மறுக்கிறார்.

கூட்டம் முடிவதற்கு இரவு நெடுநேரம் ஆகிவிடுகிறது. அக்கிராமத்திலேயே ஒருவர் வீட்டில் சாப்பாடு. அங்கிருந்து புறப்பட்டு வரும்பொழுது ஒரு மூதாட்டி தோழர்களின் கையைப் பிடித்துக் கொண்டு, ‘பாத்து சண்டை போடுங்க சாமீ. நீங்க நல்லாத் திரும்பி வரணும் கண்ணு” என்று கண்ணீர் விடுகிறார்.தோழர்கள் அக்கிராமத்து மக்களின் பாசமிகு உபசரிப்புகளைக் கண்டு கண் கலங்குகின்றனர்.

திரும்பும் வழியில் குமரனிடம் கேட்கிறேன்.

‘ தோழர், அந்தப் பெரியவர் கேட்டாரே ஒரு கேள்வி நினைவிருக்கிறதா….?”

‘ம்….இருக்கிறது…’

‘தமிழ் ஈழம் எப்ப வாங்குவீங்கன்னாரே. அவரோட அறியாமையைப் பார்த்தீர்களா ?

விழிகளை உயர்த்தி வினவுகிறார்.

“எங்களோட சனங்களுக்கு சுதந்திரம் என்கிறது பிச்சை கேட்டு வாங்குவது என்ற எண்ணம்தான் இருக்கிறதேயொழிய பறித்து எடுப்பது என்ற அடிப்படை உண்மைகூட புரியவில்லை பார்த்தீர்களா ?

உலகில் சுதந்திரம் எங்கேயும் கொடுக்கப்படவில்லை. எடுக்கப்பட்டது என்பதுதான் உண்மை.

FREEDOM NOT TO BE GIVEN;
IT MUST BE TAKEN.

என்பது கூடப் புரியவில்லை பார்த்தீர்களா ?

சுதந்திரம் என்பது போராடிப் பெறுவது தானேயன்றி பிச்சைகேட்டுப் பெறுவது அல்ல என்பதை எம்மக்கள் அறியாததற்குக் காரணமே பிர்லா மாளிகையில் பால்குடித்துக் கொண்டு பராரி வேஷமிட்ட மகாத்மாக்கள்தான்.

சோவியத் மக்கள்
ஜார் மன்னனிடம் மனுப்போட்டா
அடைந்தார்கள் அவர்களது
அமைதி பூங்காவை…?

வியத்நாம் மக்கள் வீரஞ்செறிந்த
போரின்றி விரட்டியிருக்க முடியுமா
அமெரிக்க ரேம்போக்களை ?

உலகில் எங்கும் – எவராலும் –
கொடுக்கப்படவில்லை – எடுக்கப்பட்டது
என்பது தானே வரலாறு, என்கிறேன்.

மெளனமாய்ப் புன்னகைக்கிறார்கள் குமரனும் மற்ற தோழர்களும்.

தோழி! நமது மக்கள் இப்படியிருக்கும் வரைதான் ‘அவர்களது’ வாழ்க்கை அப்படியிருக்கும். கத்தியின்றி..ரத்தமின்றி…என்று வெட்கமின்றிப் பேசும் சில ஜென்மங்களைப் பற்றி நீயும் அறிவாய்.’சுதந்திரம்’ என்பதன் முழு அர்த்தத்தினையும் அடுத்த மடலில் எழுதுகிறேன்.’பகத்சிங்’கின் புத்தகத்தினைப்படித்து முடித்திருந்தால் ஊருக்கு வரும்போது எடுத்து வா.

தோழமையுடன்
பாமரன்