“சொல்லிக்காட்டவா சோறு போட்டீர்கள்?”

நல்லது.
மீண்டும் அந்தக் காலம் அரும்பியிருக்கிறது.
ஈழத்தமிழர் நலனுக்காக ஒட்டுமொத்த தமிழகமுமே களம் இறங்கியிருக்கும் செய்திதான் அது. அம்மக்களின் நெடுங்காலப் போராட்டத்திற்கு ஆதரவாக ஆக்கபூர்வமாக என்ன செய்யப் போகிறோம் நாம்? என்பதுதான் நம் முன் உள்ள கேள்வி.

என்னென்னவெல்லாம் செய்யப் போகிறோம் என்பதைக் காட்டிலும்……
என்னென்னவெல்லாம் செய்யக் கூடாது என்பதில் கவனத்தைக் குவித்தாக வேண்டிய வேளை இது.
அது நாம் காலக்குதிரையை சற்று கழுத்தைத் திருப்ப அனுமதித்தால் மட்டுமே நடந்தேறக்கூடிய விசயம்.

முதலில், சமாதான மேசைகளில் பரிமாறப்பட இருப்பது ஈழத் “தமிழர்” குறித்ததான பிரச்சனை என்பது கவனத்துக்கு வருமேயானால்…… இந்தத் தமிழர்களது பிரச்சனைகள் குறித்து எந்தெந்தத் “தமிழரெல்லாம்” கூடி விவாதிக்கப் போகிறார்கள்? என்கிற வினாவும் கூட எழுந்தே தீரும். அதில் ஏ.கே.அந்தோணி தொடங்கி எம்.கே.நாராயணனில் தொடர்ந்து சிவசங்கர் மேனனில் வளர்ந்து இலங்கையில் இருக்கும் இந்தியப் பிரதிநிதி அலோக் பிரசாத் வரைக்கும் பலரும் இந்த மொழிக்குடும்பத்திற்குள் அடக்கி விட முடியாதவர்கள் என்பது பள்ளிச் சிறுவனுக்குக் கூட தெரியும். இவர்களெல்லாம் தமிழர்கள் குறித்து விவாதிக்கக் கூடாது என்பதில்லை. ஆனால் எவருடைய பிரச்சனை குறித்து விவாதிக்கப்பட இருக்கிறதோ அவர்களது தரப்பைச் சார்ந்த ஓரிருவராவது அதில் அடங்கியிருந்தால் இன்னும் கொஞ்சம் அது அர்த்தமுள்ளதாக இருக்குமே என்பதுதான் ஆதங்கம்.

எண்பதுகளின் மத்தியில் இதை சரிவர கணக்கில் கொள்ளாமல் ரொமேஷ் பண்டாரி என்கிற வெளியுறவு அதிகாரியை திம்பு பேச்சுவார்த்தையில் தலையிட வைத்ததன் விளைவு…… அமைதிக்கு பதிலாக அனர்த்தத்தில் போய் முடிந்தது. பேச்சுவார்த்தையில் இருந்து ஒட்டுமொத்தமாக அனைத்து போராளிக் குழுக்களுமே வெளிநடப்பு செய்தனர். பொறுப்பற்ற அதிகாரியின் போக்கால் போராளிகள் வெளியேறியதை மத்திய அரசு புரிந்து கொள்ளாததால் ஆண்டன் பாலசிங்கம், சத்தியேந்திரா, சந்திரகாசன் மூவரும் நாடு கடத்தப்பட்டனர். அதையொட்டி தமிழகத்தில் எழுந்த போராட்டமும்…… அதற்கு மத்திய அரசு வேறு வழியின்றிப் பணிந்ததும்…… இன்னமும் நினைவில் நிற்கும் நினைவுகள்.

அடுத்து வந்த “அகிம்சைப் படை” காலங்களில் தமிழரின் இனப் பிரச்சனையைக் கையாண்ட ஜே.என்.தீட்ஷித் ஆகட்டும் கல்கத் ஆகட்டும் தமிழ் குறித்தோ…… தமிழர் குறித்தோ…… “அ” னா “ஆ”வன்னா கூட அறியாதவர்கள் என்பதும் அனைவரும் அறிந்த விசயம்.

இரண்டாவதாக, இலங்கையின் ராணுவத்தை “சிறீலங்கா ராணுவம்” என்றழைப்பதே எதார்த்தத்திற்குப் புறம்பான விஷயம் என்பதுதான். அதன் ராணுவத்தில் ஒரு தமிழர் கூட இல்லாத நிலையில் அதை சிங்கள ராணுவமாக மட்டுமே பார்ப்பதும், அழைப்பதும்தான் சரியாக இருக்க முடியும். அப்போதுதான் அங்கு நடப்பது இனச்சண்டை அன்று இனப்படுகொலை என்கிற உண்மை புலப்படும்.
சரி, அப்படி இருக்கிற ராணுவமும் என்ன யோக்கியதையில் இருக்கிறது என்பதை ஹெய்ட்டி லீலைகளே உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டன. ஐ.நா.அமைதிப்படையில் மக்களைப் பாதுகாக்கப் போன சிங்கள ராணுவத்தினர் 108 பேர் ஹெய்ட்டி நாட்டுப் பெண்களை(யும்) பாலியல் வல்லுறவு கொண்ட குற்றத்திற்காக கழுத்தைப் பிடித்து வெளியில் தள்ளப்பட்டனர். அமைதி காக்கப்போன இடத்திலேயே இத்தகைய ஆட்டம் போட்டவர்கள்…… எதிர்த்தாக்குதல் நிகழும் இடங்களில் எத்தகைய ஈனச்செயல்களில் ஈடுபட்டிருப்பார்கள் என்பதற்கு “கோணேஸ்வரிகளே” சாட்சி.

மூன்றாவது, “இறையாண்மை” குறித்து இடத்திற்கு இடம் மாறுபடும் வியாக்கியானங்கள். ஒரு நாட்டில் உள்ள இரு இனப்பிரிவுகள் ஒன்றோடொன்று இணைந்திருப்பதோ…… விலகிக் கொள்வதோ அது அவை இரண்டும் சம்பந்தப்பட்ட விஷயம். ஆனால், பாகிஸ்தானின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிட்டு வங்காள தேசத்தை உருவாக்கும்போது தோன்றாத “இறையாண்மை” ஈழத்தமிழர்கள் இனப்படுகொலைக்கு ஆளாகும்போது மட்டும் தோன்றுவதுதான் நெருடலான துயரம்.

அதுவும் எப்படிப்பட்ட “நேச”நாட்டின் “இறையாண்மையைக்” காப்பாற்றப் போகிறோம்……?
இந்திய – பாகிஸ்தான் போரின்போது பாகிஸ்தான் பக்கம் நின்ற நாட்டின்
“இறையாண்மையை”……

இந்திய – சீன யுத்தத்தின் போது பெளத்தத்தின் பெயரால் சீனாவின் பக்கம் நின்ற நாட்டின் “இறையாண்மையை”……

இன்றைய கணம் வரை பாகிஸ்தானோடும், சீனாவோடும் நூலிழை கூட இடைவெளி இல்லா உறவோடு ஆயுதங்களை வாங்கிக் குவிக்கும் நாட்டின் “இறையாண்மையை”……

இந்தப் புவிசார் அரசியல் சூழலின் சூட்சுமம் நேருவின் மகளுக்குப் புரிந்தது.

விளைவு?
ஒடுக்கப்படும் இனத்தினை நோக்கி அவரது கரங்கள் நீண்டது.
நாடெங்கிலும் ஆயுதப் பயிற்சி முகாம்களும்…… அரசியல் ரீதியான அணுசரணையும் ஈழப்போராளிகளுக்கு வாய்த்தது.

அதன் பின்னர் வந்த அயலுறவுக் “கொள்கை” வகுப்பாளர்களோ ராஜதந்திரத்துக்கான புதியதொரு அகராதியையே “படைத்தனர்.”

எதிரிகளைக் கூட நண்பர்களாக மாற்றும் வல்லமை படைத்த ராஜதந்திரம் விடைபெற்று……
நண்பர்களைக் கூட எதிரிகளாக மாற்றும் “ராஜதந்திர” அபத்தங்கள் அரங்கேறத் தொடங்கியதும் இன்னமும் நினைவில் நிற்கும் நிகழ்வுகள்தான்.

நான்காவதாக, தொடரான ஒடுக்குமுறையும் இனப்படுகொலையும் தொடரும்போது பூமிப்பந்தில் புதிய புதிய தேசங்கள் தோன்றுவதொன்றும் புதிரானதோ எதிரானதோ அல்ல. அது செர்பியா தொடங்கி ஒசீட்டியா வரைக்கும் உலக நிகழ்வுகளை உற்றுப் பார்த்தவர்களுக்குப் புரியும். அப்படி மலரும் ஈழமும் இந்துமகா சமுத்திரத்தின் அரசியல் வானில் இந்தியாவிற்குத் துணையாகத்தான் இருக்கும் என்பதுதான் அப்பட்டமான எதார்த்தம் என்பதும் புரியும்.

ஐந்தாவதாக, துயரப்படும் ஒரு இனத்திற்கான நமது உதவி என்பது எத்தகைய பிரதிபலனும் கருதாமல் நாம் நம் கடமையைச் செய்கிறோம் என்பதே. எண்பதுகளின் பிற்பகுதியில் தமிழகத்தில் ஓங்கி ஒலித்த ஈழத்தமிழர் ஆதரவுக் குரல்களும்…… போராட்டங்களும்…… மத்திய அரசினை கொழும்பை நோக்கி ஒரு கோபப்பார்வையை வீச வைத்தது. அடுத்து இலங்கையின் வான் எல்லைக்குள் இந்தியப் போர் விமானங்கள் துணையோடு உணவுப் பொட்டலங்கள் வடக்கு கிழக்கில் வாடிய உயிர்களை நோக்கி வீசப்பட்டன. தமிழகமும், ஈழமும் நன்றிப்பெருக்கோடு நிமிர்ந்து நோக்கின.

ஆனால்…… அடுத்து வந்த நாட்களோ……?
“இந்திய – இலங்கை வெளியுறவுத் துறை அதிகாரிகள் ஆலோசனை……”
“இந்திய – இலங்கை வெளியுறவு அமைச்சர்கள் பேச்சுவார்த்தை……”
என நகர்ந்து இறுதியில் ராஜீவ் – ஜெயவர்த்தனா ஒப்பந்தத்தில் போய் முடிந்தது. எந்தவொரு ஒப்பந்தமும் போரிட்டுக் கொள்கிற இரு தரப்பாருக்குள் நிகழ வேண்டுமே அன்றி சமரசம் செய்யச் சென்ற நடுவரே உடன்படிக்கையில் கையெழுத்திடுவதென்பது உலகம் கண்டிராத விந்தை. அமைதிக்கான ஒப்பந்தம் என்பது இலங்கை அரசுக்கும் போராளிகளுக்கும் இடையே ஏற்பட்டிருக்க வேண்டும். சமரசம் செய்யச் சென்ற ராஜீவ்காந்தி அதில் சாட்சிக் கையொப்பமிட்டிருக்க வேண்டும். அதுதான் நியதி.

ஆனால்……
உணவுப் பொட்டலங்களின் பெயரால் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட கட்டாயப்படுத்தப்பட்டனர் போராளித் தலைவர்கள். பார்வையாளர்கள் சிலருக்கும் ‘ “இவ்வளவு” உதவிகள் செய்த மத்திய அரசை ஏற்றுக் கொண்டு கையெழுத்துப் போட்டால்தான் என்ன?’ என்கிற எண்ணத்தினையும் அது ஏற்படுத்தியது. நடுவராக இருந்த அரசே இன்னொரு தரப்பாக உருமாறி ஒப்பந்தம் போட்டுக் கொண்டதும்…… அப்படிப்பட்ட ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ளச் சொல்லி நிர்பந்தப்படுத்தியதும்…… ஏற்படுத்திய துயரம் தாளாமல் சென்னையில் நடந்த கூட்டத்தின்போது ஒரு போராளி கேட்டார் :

“சொல்லிக்காட்டவா சோறு போட்டீர்கள்?”
இதுவும் நினைவில் நிற்கும் நிகழ்வுதான்.

எல்லாவற்றுக்கும் மேலாய், இறுதியாக……
அண்டைநாடு…… பஞ்சசீலம்…… இறையாண்மை…… உள்நாட்டு விவகாரம்…… எல்லாம் தாண்டி “நேச” நாட்டுக் கடற்படையினரால் காவு வாங்கப்பட்ட “சொந்த” நாட்டு மீனவர்கள் மட்டும் இதுவரை ஐநூற்றுச் சொச்சம் பேர்.

“எதிரி” நாட்டு படையான பாகிஸ்தானியரால் கூட மீனவர்கள் எவரும் இப்படிக் கொல்லப்பட்டதில்லை.

இந்தியக் கடற்படையும் பாகிஸ்தானிய மீனவர்களை இப்படிக் கொன்றதில்லை.

அவ்வளவு ஏன்…… எதிரும் புதிருமான கியூபாவும் அமெரிக்காவும் கூட மீனவர்கள் விசயத்தில் இவ்விதம் நடந்து கொண்டதில்லை.

இங்கு மட்டும் ஏன் இப்படி?

இன்று மனசாட்சியுள்ள எவருள்ளும் எழும் கேள்வி இதுதான் :

அப்படியாயின்…… தமிழர்கள் என்பவர்கள் யார்……?

அவர்கள் ஈழத்தில் பிறந்திருப்பினும் சரி.
இந்தியாவில் பிறந்திருப்பினும் சரி.

தமிழர்கள் என்பவர்கள் யார்……?

இதுவே இன்று அவர் முன் உள்ள ஒரே கேள்வி.

நன்றி : சண்டே இந்தியன் வார இதழ் – 18.10.2008

22 thoughts on ““சொல்லிக்காட்டவா சோறு போட்டீர்கள்?”

 1. காலமறிந்த பதிவுக்கு நன்றி தோழரே!

  தமிழக உறவுகளின் எழுச்சி செயல் வன்மைமிக்க அரசியல் எழுச்சியாக மாற,

  ஈழத்தமிழர்கள் இறையாண்மை கொண்ட தனித்துவமான தேசியய இனம் என்றும், ஈழத்தமிழர்கள் மரபுவழி தாயகத்தை உடையவர்கள் என்றும், ஈழத்தமிழர்கள் தமது எதிர்காலத்தை தாமே தீர்மானிக்கும் தன்னாட்சி உரிமை உடையவர்கள் என்றும், ஈழததமிழர்களுக்கு தனித்தமிழீழமே தீர்வு என்றும் எல்லா அமைப்புக்களும், கட்சிகளும் தீர்மானம் இயற்றி அதற்காக முப்பது அகவைகளுக்கு மேலாக அளப்பரிய தியாகங்கள் புரிந்து போராடிவரும் அமைப்பின் தடையை நீக்கி மற்றைய உலகநாடுகளும் தடையை நீக்க முன்னிற்க வேண்டுமென, நடுவண் அரசிற்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமென்று தமிழக உறவுகளை ஈழத்தமிழர்களில் ஒருவனாக கேட்கின்றேன்.

 2. //அப்படியாயின்…… தமிழர்கள் என்பவர்கள் யார்……?
  அவர்கள் ஈழத்தில் பிறந்திருப்பினும் சரி. இந்தியாவில் பிறந்திருப்பினும் சரி. தமிழர்கள் என்பவர்கள் யார்……? இதுவே இன்று அவர் முன் உள்ள ஒரே கேள்வி.//

  இது தெரியாததால்தான் இத்தனைக் குழப்பமும்.. நீங்களாவது சொல்லுங்க சாமி.. யார் இங்கே தமிழர்கள்..

 3. தேவையான நேரத்தில் வந்த பதிவு…

  உங்கள் வாசிப்புக்களை தொடர்ந்து படிக்கும் ஒரு வாசகனின் அன்பு வணக்கங்கள்!

 4. அருமையான அலசல்.
  உங்களைப்போல் அரசியல் தெளிவு உள்ளவர்களிடம் கேட்டு அறிந்து இன்னும் பல இந்திய சகோதர சகோதரியர் ஈழத்தமிழருக்கும் தமிழ் ஈழத்திற்கும் ஆதரவு நல்குவர் என நம்புவோம்!

 5. தேவையான நேரத்தில் வந்த பதிவு…

  உங்கள் வாசிப்புக்களை தொடர்ந்து படிக்கும் ஒரு வாசகனின் அன்பு வணக்கங்கள்!

 6. “பெளத்தத்தின் பெயரால் சீனாவின் பக்கம் நின்ற” — பணிவான நன்றிகள்!!

 7. Right article at a right time. But in the recent ‘ dialogue between karunanidhi and Prnab none of these things seem to have been taken into consideration. Only Tha. Pandian is shouting.

 8. dear sir
  good article ihave learnt so many things from this article go head sir if ur having time please come to andaman
  with regards
  i.jaisankar

 9. அய்யா வணக்கம் !!

  உங்கள் எழுத்துக்களை தொடர்ந்து வாசித்து வரும் வாசகன் நான்! பல்வேறு வார இதழ்களில் வந்த தங்கள் கருத்துகளால் பெருமளவு கவரப்பட்டேன். என்னை பொறுத்த மட்டும் ஈழ பிரச்சனைகள் தீர ஒரே வழி ஆயுதம் ஏந்தி போராடுவதன்றி வேறில்லை. முப்பது ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வரும் இந்த பிரச்சனைக்கு எந்த அரசியல் தலைவராலும் சரி அரசியல் கட்சியாலும் சரி , தீர்வு காண முடியவில்லை. மேலே காஷ்மீர் , கீழே ஈழம் , மத்தியில் நதி நீர் பங்கிடு குறித்த பிரச்சினைகளில் எந்த அரசும் ஒரு தெளிவான நிலைப்பாட்டை எடுக்க முடிவதில்லை. அரசின் மேல் மட்டும் நாம் குற்றஞ் சொல்லி எந்த முன்னேற்றமும் ஏற்பட போவதும் இல்லை. இளைய தலைமுறை அரசியல்வாதிகட்கு எனக்கு தெரிந்த அளவிற்கு கூட ஈழம் பற்றி தெரியவில்லை என்னும் போது குற்றத்தை நாமே முழுமனதோடு ஏற்று கொண்டு ஆகவேண்டியதை பார்த்தால் ஈழம் பிறக்க வழி உண்டு. முதலில் தமிழன் யார் என்ற கேள்விக்கான விடை தேடல் தொடங்கினாலே ஈழம் பிறக்க வாய்ப்பு பெருகும். அந்த தேடல் தொடங்க மறுபடியும் ஒரு பெரியாரோ காமராஜரோ வர மாட்டார்கள். சுய தேடலில் தான் விடை கிடைக்கும்.

  நன்றி அன்பரே ,

  ராஜண்ணா

  P/s : if i am wrong in any sense, please feel free to correct me sir. this is the first time i have typed in tamizh. please continue the good work.

 10. Ulaga Thamizhargal anaivarum kadumaiyaaga kural kodukka vendum appodhuthan indha prachinai thirum. Thangal pani thodarattum.

 11. Please, kindly consider the Tamils who live in up-country(Illankai). They worked for this country (not for them) for more than two centuries, but still at the bottom line. Since, they are Tamils. They earned 80% of the foreign remittance prior to 1990. The place where they live flourish as they live there.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s