கத்தியின்றி…… ரத்தமின்றி…… வெட்கமின்றி……

காங்கிரஸ் ஏற்பட்டபிறகுதான் மக்களுக்குத் தேசத்துரோகம் செய்து வாழ வேண்டிய அவசியமே ஏற்பட்டது. இப்போது மக்கள் ஒவ்வொருவரும் வாழ வேண்டுமானாலும்…… சிறப்பாக அயோக்கியர்கள் வாழ வேண்டுமானாலும்…… உத்தியோகங்களை விட காங்கிரசுதான் தக்க இடமாக இருந்து வருகிறது. -தந்தை பெரியார் – 1927.

ஊருக்கு மூணே பேர் இருந்தாலும் இந்தக் காங்கிரஸ் அலப்பரைக்கு மட்டும் அளவே இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது. காகிதப்பஞ்சமே வந்துவிடக் கூடிய அளவிற்கு அறிக்கைப் “போர்” நடத்திக் கொண்டிருக்கிறார்கள் அதன் சர்வ கோஷ்டித் தலைவர்களும். சீமான் – கொளத்தூர் மணி – மணியரசன் கைது…… விடுதலைச் சிறுத்தைகள் பேனர் கிழிப்பு…… சத்தியமூர்த்தி பவனில் செருப்படி…… சிபிசிஐடி விசாரணை…… என அல்லோலப் பட்டுக் கொண்டிருக்கிறது தமிழகம். ஆனால் சத்தியமூர்த்தி பவனைப் பொறுத்தவரையில் இந்த முறை மட்டும் ஒரே ஒரு வித்தியாசம்தான். இதுவரைக்கும் தங்களது சொந்தக் கட்சியின் தலைவர்களையே வேட்டியை உருவி ஓடவிடுவது…… தங்களது தலைவர்களின் கொடும்பாவிகளை தாங்களே கொளுத்துவது…… சரமாரியாய் செருப்பாலடித்து “முதல்” “மரியாதையை” அளிப்பது என்பதெல்லாம் தங்களுக்கே உரித்தான பிறப்புரிமை என்றிருந்தவர்களுக்கு மற்றவர்கள் இதில் பங்குக்கு வந்தால் கோபம் வராமல் என்ன செய்யும்?

ஆனால் காவிரியில் கர்நாடகம் நீர் விட மறுக்கும்போதோ…… தலித்துகளுக்கோ, பிற்படுத்தப்பட்டோருக்கோ சமூகநீதி மறுக்கப்படும்போதோ…… தங்களது சகல துவாரங்களையும் பொத்திக் கொண்டிருக்கிற இந்தப் பேரா(சை)யக் கட்சிக்காரர்கள் “ஈழம்” என்று வாயைத் திறந்தாலே போதும் எகிறிக்குதித்து வந்துவிடுகிறார்கள்.

அதைப் பார்க்கும்போது இவர்களுக்குத் தலைவர் சோனியா காந்தியா? அல்லது ராஜபக்சேவா? என்கிற நியாயமான கேள்வி ஆறறிவு உள்ளவர்கள் எவருக்கும் எழத்தான் செய்யும். அதுசரி…… இந்தப் பேராயக் கட்சி இப்போதுதான் இப்படியா……? அல்லது எப்போதும் இப்படியா? என்கிற சந்தேகத்தைத் தீர்த்துக் கொள்ள வேண்டிய வரலாற்றுக் கட்டாயம் இன்றைய தலைமுறைக்கு ஏற்பட்டிருக்கிறது.

ஆக்டேவியன் ஹியூம் என்கிற வெள்ளைக்காரனது கருவில் உருவான இந்தக் காங்கிரஸ் முட்டை “வெள்ளையனே வெளியேறு” என்கிற சரணத்தோடு துவக்கவில்லை தனது “தேசபக்திப்” பாட்டை. “மாட்சிமை தாங்கிய பிரிட்டிஷ் மகாராணியார் நீடூழி வாழ்க” என்றே தனது அன்றாடப் பணிகளை ஆரம்பித்தது. ஆம். இந்திய “சுதந்திரப்” போராட்ட வரலாற்றை அறிந்து கொள்ளும் ஒவ்வொருவரும் காங்கிரசின் துரோக வரலாற்றையும் அறிந்து கொண்டால்தான் தற்காலத் தற்குறிகளின் தொடைதட்டல்களை விளங்கிக் கொள்ள முடியும்.

மாவீரன் பகத்சிங்கும் அவனது தோழர்களும் இந்தியாவின் உண்மையான சுதந்திரத்திற்காக தூக்குக் கயிற்றை முத்தமிட்டு bagat-singஇன்றோடு எழுபத்தி எட்டு ஆண்டுகள் உருண்டோடி விட்டது. ஆனால் அம்மாவீரன் தூக்கு தண்டனையை எதிர்நோக்கிக் காத்திருந்த வேளையில் மகா ஆத்மா காந்தி ஒரு கடிதம் எழுதினார் பிரிட்டிஷ் பிரபு எமர்ஸனுக்கு. என்னவென்று தெரியுமா நண்பர்களே……? “நீங்கள் தூக்கில் போடுவதென்று முடிவு செய்துவிட்டால் கராச்சியில் நடக்க இருக்கும் காங்கிரஸ் மாநாட்டுக்கு முன்னரே அவரை போட்டு விடுவது நல்லது.” என்று.

இன்று காங்கிரசார் தபால்தலை உட்பட இன்னபிற இத்யாதிகளுடன் தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடும் மாவீரன் பகத்சிங் அன்றைய காங்கிரஸ்காரர்களுக்கு “தீவிரவாதி”. அதுவும் கராச்சி மாநாட்டுக்கு முன்னரே தூக்கிலேற்றப்பட வேண்டிய “பயங்கரவாதி.”

 “தாழ்த்தப்பட்டோருக்கு தனி வாக்காளர் தொகுதிதான் ஓரளவுக்காவது அம்மக்கள் தங்கள் உரிமைகளைப் பெற உரிய வழி” என முழங்குகிறார் அம்பேத்கர். அதன் தார்மீக நியாயம் புரிந்து 1932 இல் பிரிட்டிஷ் பிரதமரே தீர்ப்பு அளிக்கிறார் “அம்பேத்கரின் நியாயம் அங்கீகரிக்கப்படுகிறது” என்று. “இது எங்களுக்குள் பிரிவினையை ஏற்படுத்திவிடும்” என்று எரவாடா சிறையிலேயே “சாகும்வரை” “உண்ணாவிரதத்தை” அறிவித்து அம்பேத்கரை அல்லலுக்கு ஆளாக்குகிறார்கள் காந்தியும், ambedkar-sகாங்கிரசாரும். அப்போதுதான் இந்த “உண்ணாநோன்பு” குறித்து கிண்டலடித்து நீதிக்கட்சியின் நாளேடான திராவிடன் எழுதியது : “காந்தியார் எதற்காகத் தமது உயிரைத் தியாகம் செய்யத் துணிந்தார் என்றால் இந்திய நாட்டில் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாய்த் தாழ்த்தப்பட்டு…… ஒடுக்கப்பட்டு…… நாதியற்று…… நசுங்கிக் கிடக்கும் ஏழு கோடி பிணங்களுக்கும் தனிப் பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டதே காரணமாம் ! அந்தோ இக்காரணத்தை எண்ணும்போதுதான் காந்தியின் ஒரு உயிரை விட எமது ஏழுகோடி ஏழை மக்களின் ஏழு கோடி உயிர்கள் பெரிதல்ல என்ற எண்ணம் நமக்குத் தோன்றுகிறது.”

 தலித் மக்களின் விடுதலைக்காக சாகும் வரையிலும் போராடிய மாமனிதன் அம்பேத்கர் அன்றைய காங்கிரசாருக்கு “இந்து சமூகத்தைக் கூறு போட வந்த குழப்பவாதி”. இன்றைய கதர்சட்டைகளுக்கு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை வார்த்தெடுத்த மேதை.

இந்திய தேசிய ராணுவத்தை அமைத்து பிரிட்டிஷ்காரர்களுக்கு கிலி மூட்டிய ஆனானப்பட்ட நேதாஜி சுபாஷ் சந்திர போசே காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவதற்குள் பட்டபாடும்…… ஆன பிற்பாடு கதர்க்குல்லாக்களிடம் பட்டபாடும்…… பிற்பாடு “உங்கள் சகவாசமே வேண்டாம்…… உங்கள் கதர்க்கொரு கும்பிடு…… உங்கள் காங்கிரசுக்கொரு கும்பிடு……” என்று வெறுப்போடு வெளியேறியதையும் வரலாறு தனது பக்கங்களில் அழுத்தமாகப் பதித்து வைத்திருக்கிறது. nethaji“சுபாஷ் போஸ் நம்பத் தகுந்தவரே அல்ல என்பதை நான் கவனித்து வந்துள்ளேன். எனினும் காங்கிரசின் அடுத்த தலைவராக வரக்கூடியவர் அவரைத் தவிர வேறு யாருமல்ல.” இது காந்தி வல்லபாய் பட்டேலுக்கு எழுதிய கடிதம். –நவம்பர் 1. – 1937.

ஆக அன்றைய காங்கிரசாருக்கு நேதாஜி நம்பத்தகாதவர். இன்றைய காங்கிரசாருக்கு நேதாஜி நம்பிக்கை நாயகன்.

சொந்த நாட்டின் விடுதலை வீரர்களுக்கே “தீவிரவாதி……” , “பயங்கரவாதி……” எனப் பட்டம் சூட்டியவர்கள்…… அண்டை நாட்டின் போராளிகளையா அங்கீகரிக்கப் போகிறார்கள்……? இது மட்டும் என்றில்லை. சமூக மாற்றங்களுக்கான அடித்தளம் எங்கெங்கெல்லாம் ஆரம்பிக்கப்பட்டதோ…… அங்கெங்கெல்லாம் அதன் அடிக்கல்லை உருவுவதே அதன் தலையாய “தேசபக்த”ப் பணியாக இருந்திருக்கிறது.

நடைவண்டி பழகும் நாட்களிலேயே பெண்குழந்தைகள் விதவைக் கோலம் பூணும் கோரம் சகியாமல் கொண்டுவந்த “இளம் வயது விவாக விலக்கு மசோதா”வை…… “பால்ய விவாகமில்லாவிட்டால் உண்மையான கற்பு சாத்தியமில்லை” என்று சண்டித்தனமாய் எதிர்த்தவர் தமிழ்நாடு காங்கிரஸ் சுயராஜ்ஜியக் கட்சி உறுப்பினர் எம்.கே.ஆச்சாரியார்தான்.

கடந்த நூற்றாண்டின் துவக்க காலங்களிலேயே தான் நம்பிய கொள்கைக்கு உண்மையாய் கதர் உடுத்தி…… தனது குடும்பத்தவர்களையும் உடுத்த வைத்து…… கள்ளுக்கடை மறியல்களில் ஈடுபட்டு…… வைக்கத்தில் தெருநுழைவுப் போராட்டங்களில் கைதாகி…… வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தை வலியுறுத்தி…… இறுதியில் தன் உழைப்பு அனைத்தும் விழலுக்கு இரைத்த நீராய் போனதைப் புரிந்து கொண்டு…… “இனி காங்கிரசை ஒழிப்பதே என் முதல் வேலை.” என வெளியேறிய தந்தை பெரியாரையே ஆப்படித்துப் பார்த்தவர்கள் அல்லவா இந்தக் கதரின் பிதாமகர்கள்?

அவ்வளவு ஏன்……? நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் இரத்தக்கண்ணீர், போர்வாள், தூக்குமேடை உட்பட பல நாடகங்களுக்குத் தடை விதித்தும்…… 144 தடை உத்திரவு போட்டும்…… நாடகத் தடைச் சட்டம் கொண்டு வந்தும்……சரமாரியாக கல்வீச்சு நடத்தியும் mrradhaகருத்துச் சுதந்திரத்தை “நிலைநாட்டிய” கண்ணியவான்கள்தான் இந்த அகிம்சையின் புத்திரர்கள்.

ஆனால், அந்தச் சேற்றிலும் காமராசர் என்கிற செந்தாமரை முளைக்கத்தான் செய்தது. எந்தக் காங்கிரஸ்காரர்கள் கருத்துச் சுதந்திரத்தின் குரல்வளை மீது ஏறி நின்று “அகிம்சையை” நிலைநாட்டினார்களோ…… அதே ஆட்கள் மத்தியில் “எம்.ஆர்.ராதா அவர்கள் என்னை எத்தனைதரம் திட்டி இருப்பார் என்று நினைக்கிறீர்கள். அவர் திட்டியதற்காக நான் ஒன்றும் வருத்தப் படவில்லை. அவர் திட்டியதில் நியாயம் இருக்கிறதா என்று பார்ப்பேன். நியாயம் kamarajஇருந்தால் எடுத்துக் கொள்வேன்.” என்று முழங்கினார் காமராசர். தன்னையே விமர்சித்தாலும் மாற்றுக்கருத்துக்களுக்கு மதிப்பளித்த காமராசர் எங்கே……?

நியாயமான கருத்துக்களைக் கூட சகித்துக் கொள்ள முடியாத தங்கபாலுக்களும்…… இளங்கோவன்களும் எங்கே……?

எல்லாவற்றுக்கும் மேலாய்…… காங்கிரஸ் நண்பர்களிடம் கேட்பதற்கும் நியாயமான கேள்வி ஒன்றிருக்கிறது. “பொட்டுக்கட்டுதல்” என்கிற பெயரால் ஒரு குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்த பெண்கள் மட்டும் தேவரடியார்களாக சிறுகச் சிறுகச் செத்துக் கொண்டிருந்தபோது அதைத் தடுக்கக் கொண்டு வந்ததுதான் “தேவதாசி ஒழிப்புச் சட்டம்”. ஆனால் அச்சட்டம் வந்தால் “எங்கள் பண்பாடு கெட்டுப் போகும்…… எங்கள் கலைகள் அழிந்துவிடும்……” என்று பெண் இனத்துக்கே எதிராக குரல் கொடுத்தவர்தானே சத்தியமூர்த்தி……

இன்னமும் அவர் பெயரால் உங்கள் “பவன்” இயங்குவது நியாயமா……?

அல்லது…… கடைக்கோடி மனிதனுக்கும் இந்தக் கல்வி போயாக வேண்டும் என்று வாழ்வின் இறுதிவரை கவலைப்பட்டாரே காமராசர்……

அந்தக் காமராசரின் பெயரால் உங்கள் “பவன்” இயங்குவது நியாயமா……?

யோசியுங்கள்.

ஆனால், அதற்கும் முன் தமிழ் மக்களும் தங்கள் மனதில் அழுத்தமாகப் பதிய வைத்துக் கொள்ள வேண்டியது ஒன்றிருக்கிறது.

அதுதான் :

கதர்ச்சட்டைக்காரர்கள் இன்று யார் யாரையெல்லாம் தியாகிகள் என்கிறார்களோ

அவர்களெல்லாம் நாளைய துரோகிகள்.

அவர்கள் யார் யாரையெல்லாம் துரோகிகள் என்கிறார்களோ……

அவர்களே நாளைய தியாகிகள்.

அவர்களது அகராதிப்படியே.

நன்றி : “தமிழக அரசியல்” வார இதழ்.