சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்?

போனமுறை புத்தகக் கண்காட்சியில் வாங்கிய புத்தகங்களையே புரட்டிக்கூட பார்க்காவிட்டாலும், இந்தமுறையும் போயிருந்தேன் புத்தகக் கண்காட்சிக்கு. எல்லாம் ஒரு அரிப்புதான். புத்தகக் கண்காட்சிக்குப் போகாவிட்டால் எங்கே நம்மை “அறிவுஜீவி இல்லை” என்று அறிவித்து விடுவார்களோ என்கிற பயத்திலேயே பலபேர் போகிறார்கள் போலிருக்கிறது.

இலவசக் கடலையோடு சில புத்தகங்களையும் இலவசமாக வாசலிலேயே கொடுத்துக் கொண்டிருந்தார்கள். திலகவதி புண்ணியத்தில் அடியேன் திருமுகத்துக்கும் ஒதுக்கீடு வழங்கியிருந்தார்கள் அம்ருதா பதிப்பகத்தினுடைய பேனரில்.

புத்தகக் கண்காட்சிக்கு வெளியே இருக்கிற கேண்டீனில் வயிறு புடைக்கத் தின்றது போதாதென்று உள்ளேயும் தர்ப்பூசினி…… வடை…… டீ…… என்று பலபேர் வெளுத்துக் கட்டிக் கொண்டு இருந்தார்கள். பல ஜென்மங்கள் சாப்பிடுவதற்காகவே வந்திருப்பது அப்பட்டமாகத் தெரிந்தது.

புத்தகக் கண்காட்சி உண்மையிலேயே உருப்பட வேண்டுமென்றால் அதைச் சுற்றி பத்து கிலோமீட்டர் பரப்பளவுக்கு ஓட்டல்களே இல்லாமல் இருப்பது நல்லது.

கீழைக்காற்று…… தமிழினி…… திராவிடன்…… உட்பட பல பதிப்பகங்களில் கையிலிருந்த காசுக்கு கொஞ்சம் புத்தகங்கள் வாங்கிவிட்டு வெளியில் வர…… எங்கோ

பராக்குப் பார்த்தபடி வந்த ஒருவர் ஆளை குப்புறத் தள்ளுகிற அளவுக்கு மோதி விட்டு…… “அட நீங்களா?” என்றார். ஏதோ பிக்பாக்கெட்டைப் பார்த்ததைப் போல. “ஆமாம்…… நானேதான்.” என்றேன்.

அடுத்து ஒரு பத்திரிக்கையின் பெயரைக் குறிப்பிட்டு “நீங்கள் ஏன் அதில் எழுதுவதேயில்லை?” என்றார். “அவங்க கேட்கல…… அதனால எழுதலீங்க” என்றேன். ஆசாமி

அத்தோடு விடுவதாயில்லை. இன்னொரு பத்திரிக்கையைக் குறிப்பிட்டு “இதில் ஏன் எழுதுனீங்க……?” என்றார். “எழுதச் சொன்னதால் எழுதினேன்” என்றேன். வேறென்ன சொல்ல?

இந்தக் குழப்பம் “நண்பர்கள்” சிலருக்கும் உண்டு. என்னைப் பொறுத்தவரை எதில் எழுதுகிறேன் என்பதை விடவும்…… என்ன எழுதுகிறேன் என்பதில்தான் எனது கூடுதல் கவனம் இருக்கும். எனது எந்தவொரு வார்த்தையோ…… வாக்கியமோ…… நான் நேசிக்கும் பெரியார் – அம்பேத்கரிய தத்துவங்களுக்கோ…… பொதுவுடமை சித்தாந்தங்களுக்கோ…… இம்மியளவு கூட குந்தகம் விளைவித்துவிடக் கூடாது என்கிற அக்கறையிலேயே பயணப்படும்.

நான் எழுதிக் கிழித்ததெல்லாம் கிடக்கட்டும் ஒருபுறம்…… ஆனால் என்னை எழுத வைப்பதற்குள் அந்தந்த பத்திரிகை நண்பர்கள் படும்பாடுதான் பெரும்பாடு. உலகமகா சோம்பேறிக்கான பட்டம் யாருக்காவது கொடுக்கலாம் என்றால்…… நிச்சயம் எனது பெயரைத்தான் பரிந்துரைப்பார்கள் பத்திரிகை உலக நண்பர்கள்.

எப்படித்தான் மற்றவர்கள் மூனே மாசத்தில் எட்டு புத்தகம்…… பத்து புத்தகம்…… என்று போட்டுத் தள்ளுகிறார்களோ……? அவர்களெல்லாம் எழுத்தாளர்களா? அல்லது ஏதாவது காபி போடும் மெஷினா? என்கிற சந்தேகம் அடிக்கடி வரும். அதுசரி…… சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்? நமக்குத்தான் மண்டையில் இருக்கவேண்டிய சமாச்சாரம் சுத்தமாய் இல்லையே…… என்று என்னை நானே சமாதானப்படுத்திக் கொள்வேன்.

கட்சிதாவலுக்கு பல அரசியல்வாதிகள் சொல்லும் பல சமாளிப்புகளைப் போல……

பத்திரிகை தாவலுக்கும்

 “சொந்த வீடு……”

“வாடகை வீடு……”

“ஒத்திக்கு எடுத்தது……” என்றெல்லாம் புலம்பித்தள்ளும் எழுத்தாளர்களும் உண்டு. என்னைப் பொறுத்தவரை எந்தப் பத்திரிகையோடும் எந்தப் பகையும் இல்லை. ஏனென்றால் உறவு இருந்தால்தானே பகையைப் பற்றி சிந்திக்க.

 வர்த்தக இதழ்களைத் தாண்டி சமூக மாற்றத்திற்காக தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்களது இதழ்களில் எழுத வேண்டும் என்கிற ஆசை அவ்வப்போது எழும். ஆனால் வெகுஜன தளத்தில் வெறுமனே ஜல்லியடித்துக் கொண்டிருக்கும் எனது எழுத்துக்களால் அந்த இதழ்களின் பக்கங்கள் விரையமாகிவிடக் கூடாதே என்கிற அக்கறையில் அந்த ஆசையை அப்போதே புதைத்து விடுவேன்.

“சண்டே இந்தியன்” பத்திரிகையின் அரிந்தம் செளத்ரி “ஈழக் கோரிக்கை சரியில்லை” என்கிறாரா……

அதிலேயே “ஈழம் காலத்தின் கட்டாயம்” என்றுதான் எழுதுவேன்.

அவ்வளவு ஏன்……? இதே தமிழக அரசியல் இதழில் “சீனியர்” “பொருளாதார ரீதியான இட ஒதுக்கீடுதான் சரியானது” என்கிறாரா……

அதற்கு நேரெதிரான கருத்துத்தான் என்னுடையது என்பதனை எழுதத் தயங்க மாட்டேன். “குமுதம்” தொடங்கி “தமிழக அரசியல்” வரைக்கும் அதனதன் ஆசிரியர்கள் சமூகநீதி…… சமயமறுப்பு உட்பட எனது பல்வேறு எண்ணங்களை அறிந்தேதான் எழுத அழைக்கிறார்கள்.

மாற்றுக் கருத்துக்களுக்கான இடம் என்பது இதழியலின் மிக முக்கியமான அங்கம் என்பதை உணர்பவர்களோடு தொடர்கிறது எனது எழுத்து. அது இல்லாத இடங்களில் “உனக்கொரு கும்பிடு…… உன் பத்திரிகைக்கு ஒரு கும்பிடு” என்று நடையைக் கட்டி விடுவேன்.

இந்தக் குழப்பங்களுக்கெல்லாம் முடிவு கட்ட வேண்டுமானால் ஒன்று செய்யலாம்……

“இந்த இதழில் வெளிவரும் எந்தவொரு கதையையோ, கட்டுரையையோ ஏற்கவோ, மறுக்கவோ, சுருக்கவோ, நீட்டவோ ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.” என பல பத்திரிகைகள் கட்டம் கட்டி கடைசி பக்கத்தில் வெளியிடுவதைப் போல……

எனது கட்டுரை இடம்பெறும் பத்திரிக்கைகளில்…… “ இந்த இதழின் பிற பக்கங்களில் இடம்பெறும் எந்தவொரு கதைக்கோ…… கட்டுரைக்கோ…… நான் எந்தவிதத்திலும் பொறுப்பல்ல. எனது பக்கங்களில் இடம்பெறும் எழுத்துக்களுக்கு நான் மட்டுமே பொறுப்பு.” என்று கட்டம் கட்டிப் போடச் சொல்லலாம்.

ஆக……

எழுதுகிற இதழ்களெல்லாம்

எனக்கானவையும் அல்ல.

எழுதாத இதழ்களெல்லாம்

எனது எண்ணங்களுக்கு எதிரானவையும் அல்ல.

நன்றி : தமிழக அரசியல் வார இதழ்.

“வாழும் பக்தவச்சலங்கள்”

muthukumar01

 உலகத்தின் ஒட்டுமொத்த மனசாட்சியையும் உலுக்கிப் போட்டிருக்கிறது முத்துக்குமாரின் மரணம். இப்பூவுலகை விட்டுப் புறப்படுவதற்கு முன் தான் பயணப்படுவதற்கான காரணங்களை மிகத் தெளிவாக அச்சிட்டு……. நிதானமாக ஒவ்வொருவர் கையிலும் அளித்துவிட்டு……. மூடியைத் திறந்து ஊற்றினால் பெட்ரோல் பரவலாகத் தன் உடலில் பரவாது என்று அதன் அடிப்பகுதியை அறுத்து தன்னை முழுதாகக் குளிப்பாட்டிக் கொண்டு பற்ற வைத்திருக்கிறான் தோழன் முத்துக்குமார்.

அந்தத் தோழனின் மரண சாசனத்திலுள்ள ஒவ்வொரு வார்த்தையும் ஒவ்வொரு வரியும் இதயமுள்ள எவரையும் கண்ணீர் விட்டு அழ வைக்கும். உள்ளூர் அரசியலின் ஒவ்வொரு அங்குலத்தையும் அலசி ஆராய்வதிலிருந்து……. சர்வதேச அரசியலின் ஆணிவேரையும் அடையாளம் காட்டியிருக்கிறது அவனது மரண சாசனம். இது இந்த நூற்றாண்டின் மக்களுக்கான இலக்கியமாக என்றென்றும் வீற்றிருக்கும்.

“வேலைக்குப் போகும் அவசரத்திலிருக்கும் உங்களை இப்படி சந்திக்க நேர்ந்ததற்கு நான் வருந்துகிறேன். ஆனால் வேறு வழியில்லை…….” எனத் தொடங்கும் அந்தத் தோழனின் மடல் தமிழக – இந்திய ஓட்டுப் பொறுக்கிகளின் யோக்யதை……. தமிழக மாணவர்களது போராட்ட உணர்வு……. காவல்துறையில் எஞ்சியிருக்கும் ஓரிரு நேர்மையாளர்களும் மக்களுக்காகப் அர்ப்பணிக்க வேண்டியதன் அவசியம்……. காலத்தின் கட்டாயமாகிப் போன ஈழத்தின் விடியல்……. என எண்ணற்ற திசைகளில் பயணிக்கிறது அக்காவியம். அத்தோடு நில்லாமல் முத்துக்குமார் தான் நேசிக்கும் சர்வதேச சமூகத்தை நோக்கி வீசியிருக்கும் வினா……. அறிவு நாணயமுள்ள எவரையும் சிந்திக்க வைக்கும் வினா.

அதை அத்தோழனது வரிகளிலேயே சொல்வதானால்……. ” வன்னியில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர்தான் நடக்கிறது என்கிறார்கள். புலிகள் மக்களைக் கேடயமாகப் பயன் படுத்துகிறார்கள் என்கிறார்கள். அப்படியானால் அரசு சொன்ன பகுதிக்கு வந்த மக்களை ஏன் கொலை செய்தார்கள்? இது ஒன்று போதுமே. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளைச் சார்ந்து நின்றாலும் சரி, இலங்கை அரசைச் சார்ந்து நின்றாலும் சரி, தமிழர்கள் என்ற காரணத்திற்காகவே அவர்கள் கொல்லப்படுவார்கள் என்பதற்கு. இது இனப்படுகொலை இல்லையா? இந்தியா, பாகிஸ்தான், சீனா ஆயுதம் கொடுத்தும், ஜப்பான் பணம் கொடுத்தும், கூடுதலாக இந்தியா நாட்டாமை செய்தும் தமிழர்களைக் கொல்கிறார்கள் என்றால், நீங்கள் உங்கள் மெளனத்தின் மூலமாகவும், பாராமுகத்தின் மூலமாகவும் அதே கொலையைத்தான் செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பதை ஏன் உணரவில்லை?” முத்துக்குமாரின் வரிகளில் உள்ள சர்வதேச அரசியல் பார்வையையும்……. சர்வதேச சமூகத்தின் சகிக்கமுடியாத மெளனம் குறித்த கவலையையும்……. வாசிக்க வாசிக்கவே……. இத்துணை அற்புதமான தோழனை இழந்திருக்கிறோமே எனக் கண்ணீர் விட்டு அழுதேன். ஒருமுறை அல்ல. பலமுறை.

தான் வெறுமனே தமிழ் வெறியனல்ல. ஒட்டுமொத்த மனிதகுலத்தின் ஓருயிர் என்பதை உணர்த்தும் விதமாய்…….” படுகொலை செய்யப்பட்ட சிங்களப் பத்திரிகையாளர் லசந்தாவின் சாவுக்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்…….

தமிழ்நாட்டிற்கு அகதிகளோடு அகதிகளாக வந்த சிங்களத் தம்பதியினர் மீதான பாஸ்போர்ட் குற்றச்சாட்டு நீக்கப்பட்டு, அவர்களும் அகதிகளாக அங்கீகரிக்கப்பட வேண்டும்…….” என்கிற வரிகளை வாசிக்கும்போது விண்ணுக்கும் மேலாய் உயர்ந்து நிற்கிறான் அம்மானுடன்.

“என் உடலை காவல்துறை அடக்கம் செய்துவிட முயலும். விடாதீர்கள். என் பிணத்தைக் கைப்பற்றி, அதை புதைக்காமல் வைத்திருந்து போராட்டத்தைக் கூர்மைப்படுத்துங்கள்” என்கிற தம்பியின் வேண்டுகோளை ஏற்று……. போலீசை மட்டுமல்ல……. ஓட்டுப் பொறுக்கிகளையும் ஓட ஓட விரட்டியிருக்கிறார்கள் இளைஞர்கள்.

காங்கிரசின் கிளைக் கழகமாகிப் போன தி.மு.க.வின் எம்.எல்.ஏ.வுக்கு உதை…….

போயஸ் தோட்டத்தில் “போர்த்தந்திரம்” வகுக்கும் வை.கோவிடம் “ஜெ.கிட்டே இருந்து வெளீல வந்துட்டு ஈழத்தைப் பத்திப் பேசு” என்கிற எச்சரிக்கை…….

என ஓட்டுத் தலைவர்கள் எவரும் தப்பவில்லை இந்த இளைஞர்களிடம். காங்கிரஸ் ஆட்சிக்காலங்களில் இந்தித் திணிப்பிற்கெதிரான மாணவர்களது மொழி உணர்வுகளை தங்களுக்காக அறுவடை செய்து கொண்ட தி.மு.க.வினருக்குத் தெரியாதா……. எதை எப்படிச் சமாளிப்பதென்று? அதுவும் அப்படியே செய்தது…….. கல்லூரிகள் அனைத்தையும் இழுத்து மூடி, மாணவர்களை வெளியேற்றியது. ஆனால் அதையும் உடைத்தெறிந்து இந்தக் கணம் வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது மாணவர்களது யுத்தம்.

காங்கிரஸ் ஆட்சியில் முதல்வர் பகதவச்சலம் மாணவர்களை ஒடுக்க எதை எதையெல்லாம் செய்தாரோ……. அவைகளை அச்சு பிசகாமல் அரங்கேற்றிக் கொண்டிருக்கிறார் “வாழும் பக்தவச்சலமான” முத்தமிழறிஞர்.

இந்த லட்சணத்தில் இருக்கின்ற அமைப்புகள் போதாதென்று “இலங்கை தமிழர் நல உரிமை பேரவை” என்று இன்னொரு புது அமைப்பு வேறு. பெரியாருக்கு ஆப்படிக்கும்போது “தலைவர்” பதவியைக் காலியாக விட்ட மாதிரி…….

இந்த அமைப்புக்கும் இப்போது “தலைவர்” கிடையாதாம்…….

அதன் துணைக் குழுவுக்கு அமைப்பாளராக துரைமுருகனாம்…….

செயலாளர்களில் ஒருவராக இரட்டைக் குழல் துப்பாக்கியின் ஒரு குழாயான கி.வீரமணியாம்…….

இப்படி நகர்கிறது இவர்களது நகைச்சுவை நாடகம். இதற்கு பதிலாக…….

தலைவராக “வழக்கம்போல்” கலைஞரும்…….

பொதுச் செயலாளராக ராஜபக்சேவும்…….

பொருளாளராக சோனியாவும்…….

செயலராக ஜெயலலிதாவையும்…….

துணைச் செயலாளராக சுப்ரமண்யன்சாமியையும்…….

சேர்த்துப் போட்டிருக்கலாம்.

கிழிஞ்சது கிருஷ்ணகிரி.

கொஞ்ச காலம் முன்பு வட மாநிலத் தொலைக்காட்சி ஒன்று “கருணாநிதி” என்பதற்குப் பதிலாக “கருணா” என்று அழைத்ததைக் கண்டு கடும்கோபமும்……. எரிச்சலும் கொண்டேன்.

ஆனால்…….

நடந்து வரும் நாடகங்களயும்…….

நயவஞ்சகங்களையும்……. பார்க்கும்போது…….

ஈழத்துக் “கருணா”விடம் இருந்து மட்டுமில்லை…….

இந்தியக் “கருணா”க்களிடம் இருந்தும்

ஈழப்பிரச்சனையை மீட்டால்தான்

தன்னைத்தானே மாய்த்துக் கொண்ட

தம்பி முத்துக்குமாரின் கனவு நனவாகும்

என்பது மட்டும் உறுதி.

தம்பி பாலாக்களும்…… பாபாக்களும்……

ஸம்ஸ்கிருதம் என்பது பார்த்துப் பார்த்து ஸம்ஸ்காரம் பண்ணப்பட்ட…… அதாவது பழுதில்லாமல், வழுவில்லாமல் ரூபம் பண்னப்பட்ட பாஷை. ஆனாலும் முழுக்கவும் லோக ஷேமார்த்தமான ஸப்தங்களின்  மூலத்தைக் கொண்டே ஏற்பட்ட ஒரு பாஷை உண்டென்றால் அது வேத பாஷையான சந்தஸ்தான். லோகோபகாரமாக வந்த ஸப்தங்களை வைத்தே அதற்கு grammer முதலியவையும் இருப்பதாக ஸம்ஸ்காரம் செய்து, தேவ ஜாதியினர் ஸம்ஸ்கிருத பாஷையைப் பண்ணி அதில் பேசலானார்கள்.

– ஜகத்குரு சிறீ காஞ்சி காமகோடி சந்திரசேகேந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய ஸ்வாம்களின் “அருள்” உரை.

naan_kadavul_movie_photos-35  

ஆக அப்பேர்ப்பட்ட தேவஜாதியினர் கண்டெடுத்த ஸம்ஸ்கிருத சப் டைட்டிலோடு அதாகப்பட்டது “ அஹம் ப்ரம்மாஸ்மி ”  என்கிற துணைத் தலைப்போடு துவங்குகிறது “நான் கடவுள்”.

‘நந்தா’ ராமேஸ்வரத்தில் ஆரம்பித்தது என்றால் இது காசியில் ஆரம்பிக்கிறது. எந்த ஊரில் இறந்தாலும் இங்கு கொண்டு வந்து எரித்தால் நேரடி “மோட்சம்” என்பதால் பலநூறு பிணங்கள் குறுக்கும் நெடுக்குமாய் வந்து போகின்றன.

ஜோசியக்காரனின் பேச்சை நம்பி பதினாலு வருடம் முன்பு சாமியார்களிடம் விட்டுச் சென்ற மகனை கூட்டிப்போக வருகிறான் அப்பன்காரன். “ மிச்சம் சொச்சம் இருக்கிற பற்றுகளையெல்லாம் அறுத்தெறிந்து விட்டுத் திரும்பி வா” என்று ‘ஆசிர்வதித்து’ அனுப்புகிறார் ஒரு ஜடாமுடி சாமியார். ஊர் திரும்பிய மகனை வைத்து வீடும்…… நாடும் படும்பாடுதான் மீதிப்படம்.

காசியில் காட்டப்படும் காட்சிகளும், ஊரில் ஒரு வேளை சோற்றுக்குக்கூட வக்கற்று இரந்துண்டு வாழும் மனிதர்களது அவலமும் பாலாவின் உழைப்பைப் பறைசாற்றுகின்றன. அதிலும் பிச்சை எடுத்து வாழும் மனிதர்களைக்கூட ஊர்விட்டு ஊர் பட்டுவாடா செய்வதும்…… நல்ல உடல் நிலையில் உள்ள அவர்களது உடல் உறுப்புகளைக்கூட ஊனமாக்கி பிச்சை எடுக்கவிடும் கொடூரமும்…… தமிழ்த் திரைக்கு மிக மிகப் புதிதான களங்கள். ஆனால் பாலாவின் அத்தனை உழைப்பும் ஜெயமோகன் கதையின் ஒரு சில அபத்தமான உள்ளடக்கத்தால் வீணாகிப் போனதுதான் கொடுமையிலும் கொடுமை.. படத்தைப் பார்த்து சட்டையைக் கிழித்துக் கொள்ளாதது ஒன்றுதான் பாக்கி. படம் முழுக்க சமஸ்கிருத சுலோகங்கள். அந்தக் குறையைப் போக்கும் வகையில் படம் பார்க்க வருபவர்களுக்கு இலவசமாக சமஸ்கிருத அகராதி ஒன்றினையும் கையில் கொடுத்திருக்கலாம்.

பல நாள் தவமிருந்து பெற்ற பிள்ளை மொதல் மொதலா வாயைத் தொறந்ததாம்…… “நீ எப்பம்மா தாலியறுப்பே?”ன்னு…… அப்படி காசியிலிருந்து கூட்டி வந்த தவப்புதல்வன் “எதுக்குடி பெத்தே……?” என்கிறான். அடுத்து அப்பனிடம் ஒரு போட்டோவைக் காண்பித்து “அவனா செத்தானா? இல்ல நீ கொன்னுட்டியாடா?” என்கிறான் இந்த “முற்றும் துறந்த முனிவன்.” பொதுவாக நாம் பார்க்கும் படங்களில் எப்படா கதாநாயகன் வருவான்? என்று காத்திருப்பது வழக்கம். ஆனால் இதில் கதாநாயகன் வந்துவிடக் கூடாதே என்று பயந்து கொண்டே படம் பார்க்க வேண்டியிருக்கிறது. வாயைத் திறந்தாலேயே சரம் சரமாய் சமஸ்கிருத சுலோகம், (இந்தத் “தமிழ்” படம் முழுக்க தமிழில் சப் டைட்டில் போடுகிறார்கள் என்பது கொஞ்சம் ஆறுதலான விசயம்)

கதாநாயகன் ருத்ரனின் குரு சாதா சாமியாரல்ல. “அகோரி” சாமியார். அது சரி…… அதென்ன “அகோரி” என்கிறீர்களா? அவர்கள் பிணங்களைக் கூட சாப்பிடும் சாமியார்களாம். அதுவும் கிடைத்த பிணங்களையெல்லாம் அல்ல. யார் யாரெல்லாம் “சொர்க்கத்துக்குப்” போக வேண்டும் என்று வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறார்களோ அவர்கள்தான் இவர்கள் சாய்ஸ். வாழ்க்கை குறித்து இந்த அகோரியின் வார்த்தைகளில் சொல்வதானால்…… “வசதி” என்பதும் “ஏழ்மை” என்பதும் “பூர்வ ஜென்மப் பலன்”. அந்த அகோரியின் வழியில் வந்த வளர்ப்பு மகன் ருத்ரனோ “எங்க துயரத்துக்கு விடிவே இல்லையா சாமி” எனக் கதறும் கதாநாயகியை “மரணத்தின் மூலமாக வாழ்வைக் காட்ட…… அவளின் குரல்வளையைக் கடித்துக் குதறி “துயர் துடைக்கிறான்”. “இந்த மரணம் அவர்களுக்குக் கிடைத்த வரம்” என்று பிளாஷ்பேக்கில் அகோரியின் அசரீரி ஒலிக்க…… வழக்கம்போல் தமிழ் சப்டைட்டில்..

படம் பார்க்கப் பார்க்க சின்ன வயதில் எனது அம்மாவுடன் சிவராத்திரிக்கோ…… வைகுண்ட ஏகாதசிக்கோ…… இரவு 1.30 மணிக்குப் போகும் படங்களெல்லாம் நினைவுக்கு வந்தது.

போதாக்குறைக்கு “என் தலை நிமிர்ந்தது இந்தப் படத்தைப் பார்த்து” என்று ரஜினிகாந்த்தின் சர்டிபிகேட் வேறு.

சரிதான்.
ஒகேனக்கல் கூட்டம் என்றால் நிமிரும் தலை……
தன் படம் கர்நாடகாவில் ரிலீஸ் என்றால் தானாகக் குனியும்.

காவிரி நீர்ப் பங்கீட்டுக்கான தனி ஆவர்த்தனம் என்றால் நிமிரும் தலை……
தனது படத்திற்கு மட்டும் விதிவிலக்கு கேட்டு தானாகக் குனியும்.

ரஜினிக்கு எப்போது தலை நிமிரும்…… எப்போது தலை குனியும் என்பதெல்லாம் பாலாவை விட தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றாகத் தெரியும்.

எல்லாம் சரி
ஆனால் மராட்டியத்தில் பிறந்த ரஜினிகாந்த்திற்கு வேண்டுமானால் தெரியாதிருக்கலாம். ஆனால் இந்த மண்ணில் பிறந்து வளர்ந்த பாலாவுக்கும் சித்தர்களை முதன்மைப்படுத்த எப்படித் தெரியாமல் போயிற்று ?.

வடக்கத்திய சாமியார்களைப் போல
சொர்க்கம்…… நரகம்……
இம்மை…… மறுமை……
முன்வினை…… பின்வினை…… செய்வினை…… என்றெல்லாம் உளறிக்கொண்டு திரியாமல்

சமூக அழுக்குகளைச் சுத்தப்படுத்தும் மீன்களாய்……
சாதியை, சமயத்தைச் சாடி……

சமூக விடுதலையை நாடி நின்ற சித்தர்களை முழுமையாகத் தெரியாததன் விளைவுதான் பாலா அகோரிகளைத் தேடி ஓட வேண்டி வந்திருக்கிறது. (அம்மாவிடம் பேசும் ஓரிடத்தில் மட்டும் சித்தரின் பங்களிப்பு இருக்கிறது)

தாடிவளர்த்து சடை வளர்த்து நல்ல
சந்நியாசியென்றொரு வேடமிட்டு
ஓடித்திரிந்த புலையாட்டை யிங்கே
யெப்பவதாரடா ஞானப்பெண்ணே?

  என்ற ஞானக்கும்மியை……

காலனைவென்ற கருத்தறிவாளர்க்கும்
கோலங்களேதுக்கடி குதம்பாய்
கோலங்களேதுக்கடி
  என்ற குதம்பைச் சித்தரை

பறச்சியாவதேதடா பணத்தியாவதேதடா
இறைச்சி தோலெலும்பிலும்
இலக்கமிட்டிருக்குதோ?
  என்ற சிவவாக்கியர்களிடம் எல்லாம்  இல்லாத ஞானமா இந்த அகோரிகளிடமிருக்கிறது?

புரிகிறது……
பாலாவுக்கு ரஜினியைப் பிடிக்கும்.
ரஜினிக்கு பாபாவைப் பிடிக்கும்.
அப்புறம் பாலாவுக்கு பாபாவைப் பிடிக்காமலா இருக்கும்?

ஏறக்குறைய ஐம்பத்தி ஏழு ஆண்டுகளுக்கு முன்பு வந்த “பராசக்தி” படத்தில் பிச்சைக்காரர்களின் மறுவாழ்வுக்காக போராடுவார் ஞானசேகரனாக வரும் ஏஸ்.எஸ்.ராஜேந்திரன்……

பிச்சைக்காரர்களது மறுவாழ்வு இல்லங்களுக்காக குரல் கொடுத்தது 1952 இல் வந்த பராசக்தி……

ஆனால் 2009 இல் வந்த நான் கடவுளோ பிச்சைக்காரர்கள் தங்கள் துன்பத்திலிருந்து விடுதலை பெற மரணம்தான் வரம் என்கிறது,

நல்லவேளையாக ……
இந்த மானுடத்தின் விடுதலையை நேசித்த காரல் மார்க்சுக்கும், மாவோவுக்கும் இந்த அகோரிகளைப் பற்றி தெரியாமல் போயிற்று.

ஒருவேளை தெரிந்து தொலைத்திருந்தால்……
ஏழை மக்களின் விடிவுக்காக வழங்கிச் சென்ற பொதுவுடமைச் சித்தாந்தத்தை தந்ததற்கு பதிலாக ……
எதிரே நின்று அலறும் அபலைகளின் குரல் வளையைக் குதறி எடுத்து “மகத்தான விடுதலையை” வாரி வழங்கியிருப்பார்களோ என்னவோ?

மொன்னை நாத்திகம் பேசுவது வெகு எளிதானது.
ஆனால் சமத்துவத்தையும், சமூக விடுதலையையும் முன்நிபந்தனையாகக் கொண்ட நாத்திகமே முழுமையானது. வெறும் மொன்னை நாத்திகம் எவ்வளவு ஆபத்தானது என்பதற்கு இந்தப் படமும் ஒரு உதாரணம்.

ஏழ்மைக்கும், வறுமைக்கும் ஊற்றுக்கண் முதலாளித்துவம்.
ஏழ்மையை ஒழிக்க வேண்டுமென்றால் சாகடிக்கப்பட வேண்டியது முதலாளித்துவம்.
ஆனால் ஏழ்மையை ஒழிப்பதற்கு ஒரே வழி
ஏழையையே ஒழிப்பதுதான் என்கிற புதிய தத்துவத்தைத் தந்திருக்கிறார் பாலா.

rajni-watches-naan-kadavul01

“ அஹம் ப்ரம்மாஸ்மி ”