சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்?

போனமுறை புத்தகக் கண்காட்சியில் வாங்கிய புத்தகங்களையே புரட்டிக்கூட பார்க்காவிட்டாலும், இந்தமுறையும் போயிருந்தேன் புத்தகக் கண்காட்சிக்கு. எல்லாம் ஒரு அரிப்புதான். புத்தகக் கண்காட்சிக்குப் போகாவிட்டால் எங்கே நம்மை “அறிவுஜீவி இல்லை” என்று அறிவித்து விடுவார்களோ என்கிற பயத்திலேயே பலபேர் போகிறார்கள் போலிருக்கிறது.

இலவசக் கடலையோடு சில புத்தகங்களையும் இலவசமாக வாசலிலேயே கொடுத்துக் கொண்டிருந்தார்கள். திலகவதி புண்ணியத்தில் அடியேன் திருமுகத்துக்கும் ஒதுக்கீடு வழங்கியிருந்தார்கள் அம்ருதா பதிப்பகத்தினுடைய பேனரில்.

புத்தகக் கண்காட்சிக்கு வெளியே இருக்கிற கேண்டீனில் வயிறு புடைக்கத் தின்றது போதாதென்று உள்ளேயும் தர்ப்பூசினி…… வடை…… டீ…… என்று பலபேர் வெளுத்துக் கட்டிக் கொண்டு இருந்தார்கள். பல ஜென்மங்கள் சாப்பிடுவதற்காகவே வந்திருப்பது அப்பட்டமாகத் தெரிந்தது.

புத்தகக் கண்காட்சி உண்மையிலேயே உருப்பட வேண்டுமென்றால் அதைச் சுற்றி பத்து கிலோமீட்டர் பரப்பளவுக்கு ஓட்டல்களே இல்லாமல் இருப்பது நல்லது.

கீழைக்காற்று…… தமிழினி…… திராவிடன்…… உட்பட பல பதிப்பகங்களில் கையிலிருந்த காசுக்கு கொஞ்சம் புத்தகங்கள் வாங்கிவிட்டு வெளியில் வர…… எங்கோ

பராக்குப் பார்த்தபடி வந்த ஒருவர் ஆளை குப்புறத் தள்ளுகிற அளவுக்கு மோதி விட்டு…… “அட நீங்களா?” என்றார். ஏதோ பிக்பாக்கெட்டைப் பார்த்ததைப் போல. “ஆமாம்…… நானேதான்.” என்றேன்.

அடுத்து ஒரு பத்திரிக்கையின் பெயரைக் குறிப்பிட்டு “நீங்கள் ஏன் அதில் எழுதுவதேயில்லை?” என்றார். “அவங்க கேட்கல…… அதனால எழுதலீங்க” என்றேன். ஆசாமி

அத்தோடு விடுவதாயில்லை. இன்னொரு பத்திரிக்கையைக் குறிப்பிட்டு “இதில் ஏன் எழுதுனீங்க……?” என்றார். “எழுதச் சொன்னதால் எழுதினேன்” என்றேன். வேறென்ன சொல்ல?

இந்தக் குழப்பம் “நண்பர்கள்” சிலருக்கும் உண்டு. என்னைப் பொறுத்தவரை எதில் எழுதுகிறேன் என்பதை விடவும்…… என்ன எழுதுகிறேன் என்பதில்தான் எனது கூடுதல் கவனம் இருக்கும். எனது எந்தவொரு வார்த்தையோ…… வாக்கியமோ…… நான் நேசிக்கும் பெரியார் – அம்பேத்கரிய தத்துவங்களுக்கோ…… பொதுவுடமை சித்தாந்தங்களுக்கோ…… இம்மியளவு கூட குந்தகம் விளைவித்துவிடக் கூடாது என்கிற அக்கறையிலேயே பயணப்படும்.

நான் எழுதிக் கிழித்ததெல்லாம் கிடக்கட்டும் ஒருபுறம்…… ஆனால் என்னை எழுத வைப்பதற்குள் அந்தந்த பத்திரிகை நண்பர்கள் படும்பாடுதான் பெரும்பாடு. உலகமகா சோம்பேறிக்கான பட்டம் யாருக்காவது கொடுக்கலாம் என்றால்…… நிச்சயம் எனது பெயரைத்தான் பரிந்துரைப்பார்கள் பத்திரிகை உலக நண்பர்கள்.

எப்படித்தான் மற்றவர்கள் மூனே மாசத்தில் எட்டு புத்தகம்…… பத்து புத்தகம்…… என்று போட்டுத் தள்ளுகிறார்களோ……? அவர்களெல்லாம் எழுத்தாளர்களா? அல்லது ஏதாவது காபி போடும் மெஷினா? என்கிற சந்தேகம் அடிக்கடி வரும். அதுசரி…… சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்? நமக்குத்தான் மண்டையில் இருக்கவேண்டிய சமாச்சாரம் சுத்தமாய் இல்லையே…… என்று என்னை நானே சமாதானப்படுத்திக் கொள்வேன்.

கட்சிதாவலுக்கு பல அரசியல்வாதிகள் சொல்லும் பல சமாளிப்புகளைப் போல……

பத்திரிகை தாவலுக்கும்

 “சொந்த வீடு……”

“வாடகை வீடு……”

“ஒத்திக்கு எடுத்தது……” என்றெல்லாம் புலம்பித்தள்ளும் எழுத்தாளர்களும் உண்டு. என்னைப் பொறுத்தவரை எந்தப் பத்திரிகையோடும் எந்தப் பகையும் இல்லை. ஏனென்றால் உறவு இருந்தால்தானே பகையைப் பற்றி சிந்திக்க.

 வர்த்தக இதழ்களைத் தாண்டி சமூக மாற்றத்திற்காக தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்களது இதழ்களில் எழுத வேண்டும் என்கிற ஆசை அவ்வப்போது எழும். ஆனால் வெகுஜன தளத்தில் வெறுமனே ஜல்லியடித்துக் கொண்டிருக்கும் எனது எழுத்துக்களால் அந்த இதழ்களின் பக்கங்கள் விரையமாகிவிடக் கூடாதே என்கிற அக்கறையில் அந்த ஆசையை அப்போதே புதைத்து விடுவேன்.

“சண்டே இந்தியன்” பத்திரிகையின் அரிந்தம் செளத்ரி “ஈழக் கோரிக்கை சரியில்லை” என்கிறாரா……

அதிலேயே “ஈழம் காலத்தின் கட்டாயம்” என்றுதான் எழுதுவேன்.

அவ்வளவு ஏன்……? இதே தமிழக அரசியல் இதழில் “சீனியர்” “பொருளாதார ரீதியான இட ஒதுக்கீடுதான் சரியானது” என்கிறாரா……

அதற்கு நேரெதிரான கருத்துத்தான் என்னுடையது என்பதனை எழுதத் தயங்க மாட்டேன். “குமுதம்” தொடங்கி “தமிழக அரசியல்” வரைக்கும் அதனதன் ஆசிரியர்கள் சமூகநீதி…… சமயமறுப்பு உட்பட எனது பல்வேறு எண்ணங்களை அறிந்தேதான் எழுத அழைக்கிறார்கள்.

மாற்றுக் கருத்துக்களுக்கான இடம் என்பது இதழியலின் மிக முக்கியமான அங்கம் என்பதை உணர்பவர்களோடு தொடர்கிறது எனது எழுத்து. அது இல்லாத இடங்களில் “உனக்கொரு கும்பிடு…… உன் பத்திரிகைக்கு ஒரு கும்பிடு” என்று நடையைக் கட்டி விடுவேன்.

இந்தக் குழப்பங்களுக்கெல்லாம் முடிவு கட்ட வேண்டுமானால் ஒன்று செய்யலாம்……

“இந்த இதழில் வெளிவரும் எந்தவொரு கதையையோ, கட்டுரையையோ ஏற்கவோ, மறுக்கவோ, சுருக்கவோ, நீட்டவோ ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.” என பல பத்திரிகைகள் கட்டம் கட்டி கடைசி பக்கத்தில் வெளியிடுவதைப் போல……

எனது கட்டுரை இடம்பெறும் பத்திரிக்கைகளில்…… “ இந்த இதழின் பிற பக்கங்களில் இடம்பெறும் எந்தவொரு கதைக்கோ…… கட்டுரைக்கோ…… நான் எந்தவிதத்திலும் பொறுப்பல்ல. எனது பக்கங்களில் இடம்பெறும் எழுத்துக்களுக்கு நான் மட்டுமே பொறுப்பு.” என்று கட்டம் கட்டிப் போடச் சொல்லலாம்.

ஆக……

எழுதுகிற இதழ்களெல்லாம்

எனக்கானவையும் அல்ல.

எழுதாத இதழ்களெல்லாம்

எனது எண்ணங்களுக்கு எதிரானவையும் அல்ல.

நன்றி : தமிழக அரசியல் வார இதழ்.