அரசியல் என்பது……

தி.மு.க.வை ஆதரித்தால்

அது இனப்படுகொலைக்கு துணை போகும் காங்கிரசை ஆதரிப்பதாக ஆகி விடும்……

தனியாக தி.மு.க.வை யும் வி.சிறுத்தைகளையும் ஆதரிக்கலாமா?

அல்லது இரண்டையும் சேர்ந்து எதிர்க்கலாமா?

 

வை.கோ.வை ஆதரித்தால் அது இதுவரை எதிராக இருந்த அம்மா தி,மு,க.வை ஆதரிப்பதாக ஆகி விடுமே……

தனியாக வலது “கம்யூனிஸ்ட்”டையும், வை.கோவை மட்டும் ஆதரிக்கலாமா?

அல்லது அந்த அணியையே எதிர்க்கலாமா?

என ஆளாளுக்கு ஒரு பக்கம் முடியைப் பிய்த்துக் கொண்டிருக்க…… மாணவர்கள் மட்டும் தெளிவாக இருக்கிறார்கள். தங்களை வரவேற்பதற்காக எழும்பூர் ரயில் நிலையம் வந்த வைகோ விற்கு “சிறப்பான” வரவேற்பு கொடுத்து அனுப்பியிருக்கிறார்கள். கூடவே “எங்களுக்கு திருமாவளவனும் வேண்டாம்…… ராமதாசும் வேண்டாம்” என ஓங்கிக் குரல் கொடுத்திருக்கிறார்கள். இவருக்கே இந்த “வரவேற்பு” என்றால் தி.மு.க. காங்கிரஸ் அண்ட் கோவுக்கு எத்தகைய “வரவேற்பை” கொடுத்திருப்பார்கள் என்பது உலகுக்கே வெட்ட வெளிச்சமாகத் தெரிந்த விசயம்.

போதாக்குறைக்கு வைகோ வேறு சும்மா இருக்காமல் “நான் அரசியல் என்கிற சட்டையைக் கழட்டி வைத்து விட்டு வந்திருக்கிறேன்” என்கிற முத்தையும் உதிர்த்துவிட்டு திரும்பியிருக்கிறார் வை.கோ.

இதற்கிடையே “கவிதாசரண்” என்கிற இலக்கியப் பத்திரிகையை வாசிக்க நேரிட்டது. அதில் தன் விலை மதிப்பற்ற உயிரைத் தந்து உலகை விழிக்க வைத்த தம்பி முத்துக்குமாரின் கவிதைகளை வாசிக்க நேரிட்டது. கவிதைகள் ஒவ்வொன்றும் பொட்டில் அடித்த மாதிரி கனல் கக்கும் வரிகளாய்…… இதயத்தை தொட்டது……இல்லையில்லை சுட்டது.

அதிலிருந்து ஒரு கவிதை:

ஒரு வீடு இரு திருடர்கள்

அது அவர்களுடைய தொழில்.

கொள்ளையடிப்பதும் கொலை செய்வதும்.

 நாய்களுக்கு சிறுநீரால் ஆன எல்லைக்கோடு போல

அவர்களுக்கு தொழில் தர்மம்.

ஒருவர் தொழிலில் மற்றவர் குறுக்கிட்டால்

குறுக்கிடும் தொழில் தர்மம்.

 

ஒரு வீட்டின் புறவாசல் வழியே ஒருவனும்,

கூரை வழியே ஒருவனும் தொழில் செய்யப் போனார்கள்.

அந்தோ பரிதாபம் குறுக்கிட்டது தொழில் தர்மம்.

யார் தொழில் செய்வது?

யார் பின்வாங்குவது?

முடிவு காண முடியவில்லை திருடர்களால்.

 

முதல் திருடன் சொன்னான்,

‘மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு’.

இரண்டாம் திருடன் சொன்னான்

‘திருடுவது நம் உரிமை

அதைத் தீர்மானிப்பது வீட்டுக்காரனின் கடமை’.

 

ஆகவே, எழுப்பப்பட்டான் அந்த வீட்டுக்காரன்.

அவன் முன் வாக்குப்பெட்டி.

யார் திருட வேண்டுமெனத் தீர்மானிக்கும்படி

வீட்டுக்காரன் வேண்டப்பட்டான்.

 

அவனுக்கு ஜனநாயக முறை பற்றிய

அறிவு புகட்டப்பட்டது.

இங்கு திருடர்களுக்கு வீட்டுக்காரனே எஜமானன்.

 

அவன் சொல்லும் நபரே திருட முடியும்.

கடைசியில் ஜனநாயகம் வென்றது.

 

ஆம்- வீட்டுக்காரனைப் புதைத்தார்கள்.

 

பின்குறிப்பு: கவிதையில் ‘திருடர்கள்’ என்கிற வார்த்தை

‘திருடர்கள்’ என்ற பொருளில் மட்டும்தான் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

அதை ‘அரசியல்வாதிகள்’ என்று யாராவது பொருள் கொண்டால்

அது நம் தவறல்ல.

 

இதுதான் அக்கவிதை.

இதன் பொருள் உணர்ந்த இளைஞர்களுக்கு எந்தத் தேர்தலிலும்

எந்த நிலை எடுப்பது என்பது தெளிவாகத் தெரியும்.

இதை தமிழகத்தின் சகல தலைவர்களும் எப்போது உணரப் போகிறார்களோ?

அவர்களுக்கே வெளிச்சம்.

ஆனால் இந்த நிஜம் மாணவர்களுக்குப் புரிந்திருப்பதால்தான்

எந்த அணியையும் நெருங்க விடாமல் நெருப்பாக நிற்கிறார்கள்.

 

ஆனால்……

அரசியல் என்பது போட்டிருக்கிற சட்டையல்ல.

கட்டியிருக்கிற கோவணம்.

வணக்கத்துடன் பாமரன்.

அன்பிற்குரிய “தமிழக அரசியல்” வார இதழின் ஆசிரியர் அவர்களுக்கு,

 

 

வணக்கத்துடன் பாமரன்.

 

தமிழகமும், தமிழக அரசியலும் நெஞ்சை விட்டு நீங்காமல்தான் இருக்கின்றன. கட்டுரை எழுத வேண்டும் என்கிற நினைவு இருந்தாலும் இங்கிலாந்திற்கும் தமிழகத்திற்கும் இடையிலுள்ள நேர மாற்றம் சட்டென்று நினைவுக்கு வராததால் இம்முறை எழுதுவது இயலாததாகி விட்டது. (தமிழகத்தில் இருந்தாலே சரியான நேரத்தை நாம் தொலைபேசியில் நினைவூட்டினால்தான் உண்டு. இந்த லட்சணத்தில் அயல் நாட்டிற்குப் போயா நீ நேரத்தைக் கடைபிடிக்கப் போகிறாய்? என நீங்கள் முணுமுணுப்பது கேட்கிறது.)

 

எங்கெங்கு காணினும் நம் தமிழர் கூட்டம். வேற்று மண்ணாகவே தெரியவில்லை. ஆனாலும் ஒவ்வொருவரும் உள்ளுக்குள் பெருத்த சோகங்களைச் சுமந்தபடி திரிகிறார்கள். நேற்று ஒரு இளைஞனை உணவு விடுதி ஒன்றில் சந்தித்தேன். “அம்மா வன்னீல இறந்துட்டாங்க. இப்பதான் தகவல் வந்துச்சு.” என்றார்.

 

தாய் “பயணப்பட்ட” தகவல் தெரிந்ததும் உடனே பஸ் பிடித்து ஊர் போய்ச் சேர இதென்ன நம்நாடா? இங்கு தட்டு கழுவியோ…. பெட்ரோல் பங்க்கில் வேலை பார்த்துக் கொண்டோ உயிர் பிழைத்துக் கொண்டு உலவும் கூட்டத்துக்கு அம்மா இறந்தாலும் சரி…. அப்பா இறந்தாலும் சரி…. ஊர் போக காசும்…. அப்படியே போய் சேர்ந்தாலும் போனவர் உயிரோடு திரும்பி வருவதற்கான உத்திரவாதத்தையும் யார் தரப் போகிறார்கள்?

 

லண்டனில் இங்கு எங்கு அப்பமும் தயிர் வடையும் கிடைக்கும்? என பயணக்கட்டுரை எழுதுவதற்கு இது இன்பச் சுற்றுலா அல்ல. இது சோகங்களை மட்டுமே சுமந்து வந்திருக்கும் நமது சொந்தங்களைக் கண்டு துக்கம் விசாரிப்பதற்கான பயணம். பச்சையாகச் சொன்னால் நான் இழவு வீட்டிற்கு வந்திருக்கிறேன்.

 

இங்கு எண்ணற்ற சந்திப்புகளும்….

ஒரு தொலைக் காட்சிக்கான நேர்காணலும்….

எனக்கென காத்துக் கொண்டிருப்பதால் இப்போதைக்கு விடைபெறுகிறேன்.

 

நமது வாசகர்களுக்கு எனது மனம் நிறைந்த அன்பைச் சொல்லுங்கள்.

 

 

 

தோழமையுடன்,

பாமரன்.

 

 

 

எழுதுவதெல்லாம் எழுத்தல்ல

முலாயம்சிங் கட்சியோடு சோனியா காங்கிரஸ் 

கூட்டணி வைத்துக் கொள்ளாததற்கு எது காரணம்?

நாட்டு நலன்தான்.

ஆனால் “இன்னமும் காத்திருக்கிறேன். கூட்டணி பற்றிய முடிவை கட்சியின் குறுந்தலைவர்களிடம் விடாமல் தலையாய தலைவராய் இருக்கிற சோனியாவே இறுதி முடிவை எடுக்க வேண்டும்” என்கிறார் முலாயம்சிங்.

அதற்கு எது காரணம்?

நாட்டு நலன்தான்.

“விஜயகாந்த் தேர்தல் புறக்கணிப்பையோ அல்லது தி.மு.க, அ.தி.மு.க.வோடு கூட்டு சேருவதை கைவிட்டு பா.ஜ.க.வோடு கூட்டு சேருவதுதான் நல்லது” என இல.கணேசன் கதறுகிறாரே… எதற்காக?

நாட்டு நலன்தான்.

சாலைப் பணியாளர் போராட்டம்……

விவசாயிகள் போராட்டம்……

நெசவாளிகள் போராட்டம்……

அரசு ஊழியர் போராட்டம்……

எனச் சகலரின் போராட்டத்துக்கும் ஆப்போ ஆப்பு வைத்த புர்ர்ர்ர்ர்சித் தலைவியோடு பல்லை இளித்துக் கொண்டு கூட்டு வைத்திருக்கிறார்களே

லெப்ட்டும்…… ரைட்டும்……

என்ன காரணத்திற்காக?

நாட்டு நலன்தான்.

ஒரு பக்கம் புறக்கணிப்புப் பெனாத்தால்…… 

மறுபக்கம் காங்கிரசுடன் மச்சான் மந்திரியாவதற்கான  பேரம்……

என அல்லும் பகலும் அலைமோதுகிறாரே

அலப்பரைகாந்த்……

எதற்காக?

நாட்டு நலன்தான்.

 

ஊரே காறி உமிழ்ந்து கொண்டிருக்கிற காங்கிரசோடு

உடும்புப்பிடி உறவு வைத்துக் கொண்டிருக்கிறாரே

உடன்பிறப்புகளின் தலைவர்……

அது எதற்காக?

நாட்டு நலன்தான்.

இந்தப் பக்கம் குதிக்கலாமா?

இல்லை அந்தப் பக்கம் குதிக்கலாமா?

இப்பவே குதிக்கலாமா?

அல்லது அப்புறமா குதிக்கலாமா? என தீவிர ஆலோசனை நடத்திக் கொண்டிருக்கிறாரே

தமிழ்க்குடி தாங்கி மருத்துவர் அய்யா ……

அந்த ஆலோசனைகள் எதன் பொருட்டு?

நாட்டு நலன்தான்.

 

அத்துமீறுவதாவது ……?

அடங்க மறுப்பதாவது ……?

அறிவாலயமே சரணம்!

என சத்தம் போடாமல் ஒதுங்க இடம் கிடைத்தால் போதும் இப்போதைக்கு

என ஓரம் கட்டுகிறதா சிறுத்தை?

என்ன காரணம்?

அதுவும் நாட்டு நலன்தான் வேறென்ன?

எல்லாம் சரிதான் …….
ஆனால் இவர்கள் எல்லோரும் சேர்ந்து கரடியாகக் கத்துகிறார்களே ……
நாட்டு நலன் ……
நாட்டு நலன் என்று ……
அது எந்த நாட்டின் நலன் என்பதை தேர்தலுக்கு முந்துன நாள் சொன்னாக் கூட தேவலை.

அந்த நாட்டு மக்களை ராவோட ராவா கூட்டியாந்து ஓட்டுப் போட வெச்சுரலாம்.

 நாங்க கையில, கால்ல கரும்புள்ளி …… செம்புள்ளி குத்திக்கறதுக்குள்ள சீக்கிரமா சொல்லுங்கப்பா ராசா …… உங்குளுக்கு கோடிப் புண்ணியமா போகும்.

 

**********

புத்தகம் படித்தல் என்பது இந்த நாட்டில் மிகப் பெரிய தேசத் துரோகக் குற்றம். இது சட்டப்படி அல்ல. நம்மவர்களே தங்களுக்குள் போட்டுக் கொண்ட எழுதப்படாத சட்டம். படிப்பது என்பதே தேர்வில் வெற்றி பெறுவதற்காகவோ …… பதவி உயர்வுக்காகவோ …… படிப்பது என்றாகி விட்டது.

“கடைசியாக என்ன படம் பார்த்தே?” என்று கேட்டுக் கொள்கிறார்களே ஒழிய ……  ஒரு போதும் “கடைசியா என்ன புத்தகம் படிச்சே?” எனக் கேட்பதேயில்லை பலரும். இதில்  தூக்கம் வருவதற்காகப் ‘படிக்கின்ற’ ஜாதியும் உண்டு. ஆனால் …… அதற்காகவே அச்சாகும் புத்தகங்களும் உண்டு என்பதனையும் மறுப்பதற்கில்லைதான்.

அன்மையில் சீனாவைச் செப்பனிட்ட மாமனிதர் மாவோவின் நூல் ஒன்றினை வாசிக்க நேரிட்டது. “கீழைக்காற்று” பதிப்பகம் வெளியிட்டுள்ள “மா சே துங் மேற்கோள்கள்” என்கிற நூல்தான் அது. வெகு எளிமையாகவும், சகலருக்கும் புரியும் விதத்திலும் மாவோவின் கருத்துக்களை அழகாக எடுத்து வைக்கிறது புத்தகம்.

“மக்களை ஒற்றுமைப்படுத்துவது எப்படி?

நமது சிந்தனை முறையும் வேலை முறையும் எப்படி இருக்க வேண்டும்?

அரசியல் என்பது  இரத்தம் சிந்தாத யுத்தம்.
யுத்தம் என்பது இரத்தம் சிந்தும் அரசியல்”  என எண்ணற்ற கருத்துக்களை நம்முள் விதைத்துக் கொண்டே போகிறது புத்தகம்.

பல பதிப்புகள் வந்து விட்ட இந்த நூலில் என்னைப் பாதித்தது மாவோவினது “படிப்பது” பற்றிய கருத்துக்கள்தான். அதை அவரது வரியிலேயே சொல்வதானால் ……
“சுய திருப்தி என்பது படிப்பின் விரோதி. இந்தச் சுய திருப்தி உணர்வை நம்மிடமிருந்து நீக்கினால் ஒழிய, நாம் ஒன்றையும் உண்மையாகக் கற்க முடியாது. நம்மைப் பொறுத்தவரையில் ‘படிப்பில் தெவிட்டாமை’ என்ற கண்ணோட்டத்தையும், பிறருக்குக் கற்றுக் கொடுப்பதில் சளையாமை’ என்ற கண்ணோட்டத்தையும் நாம் மேற்கொள்ள வேண்டும்.”

ஆனால் இங்கே பலருக்கு படித்ததே போதும் என்கிற தெவிட்டலும் இருக்கிறது. பிறருக்குக் கற்றுக் கொடுப்பதில் சலிப்பும் இருக்கிறது என்பதுதான் எதார்த்தம். அதை விடவும் மக்களுக்கான தலைவர் மாவோவினது ‘புரட்சி’ பற்றிய கருத்துக்களைப் படித்தபோது …… சிந்தனையை விட சிரிப்புதான் மேலிட்டது. அதற்குக் காரணம் நிச்சயம் மாவோ அல்ல. இந்த மகத்தான மண்தான். இங்குதான் எதை எதைத்தான் ‘புரட்சி’ என்பதற்கு விவஸ்தையே கிடையாதே ……

  “புரட்சி தலைவி”
  “புரட்சிப் புயல்”
  “புரட்சித் தளபதி”
  “புரட்சிப் கலைஞர்”
இத்தனையும் போதாதென்று செல்போன் விற்பவன் கூட இங்கே

‘புரட்சிகர சிம் கார்டு” என்றுதான் கூவுகிறான்.

ஆனால் புரட்சி என்பதற்கான அர்த்தமே மாவோவின் மொழியில் வேறானது.

வேறானதோ ……

மாறானதோ …… இருக்கட்டும் ……

அப்படி என்னதான் சொல்லியிருக்கிறார் அவர்? என நீங்கள் எரிச்சல்படும் முன் ……

மாவோவை உங்கள் முன்னர் நிறுத்திவிட்டு நான் எஸ்கேப் ஆவது நல்லது.paams

“புரட்சி என்பது ஒரு மாலை விருந்து அல்ல, அல்லது ஒரு கட்டுரை எழுதுவது அல்ல. ஒரு ஓவியம் தீட்டுவதோ அல்லது தையல் வேலை செய்வதோ அல்ல; அது அவ்வளவு பண்பானதாக இருக்காது; அவ்வளவு ஓய்வானதாகவோ, மிருதுவானதாகவோ இருக்காது. அவ்வளவு அமைதியானதாக, இரக்கமுடையதாக, மரியாதையானதாக இருக்காது. இன்னும் அடக்கமானதாகவோ, பெருந்தன்மை வாய்ந்ததாகவோ இருக்காது. புரட்சி என்பது ஒரு கிளர்ச்சி; ஒரு வர்க்கம் இன்னொரு வர்க்கத்தைத் தூக்கி எறியும் ஒரு பலாத்கார நடவடிக்கை.”

என்ன இந்த பதில் போதுமா?

இன்னும் கொஞ்சம் வேணுமா?.

ஆனால் இதைப் படித்த பிறகும்

எவராவது ……

எவரையாவது ……

“புரட்சிகரப் பீடிகை” போட்டு பிதற்றுவார்களெனில் அதற்கு நிர்வாகம் எந்த விதத்திலும் பொறுப்பாகாது.

**********

பெரும்பாலும் இந்தக் கல்யாணம் ……

காதுகுத்து ……

வளைகாப்பு ……

பூப்பு நன்னீராட்டு போன்றவைகள் பக்கம் போவதே கிடையாது. அதிலும் உறவினர்களுடைய வைபவங்கள் என்றால் அந்தத் தெரு பக்கம் கூட தலைவைத்துப் படுக்க மாட்டேன்.

 காரணம்:

என்னதான் சுற்றிச் சுற்றிப் பேசினாலும் கடைசியில் சாதியில்தான் வந்து நிற்பார்கள் என்பதுதான். 

தப்பித் தவறி எதிரில் தென்பட்டு விட்டாலும் சொந்த சித்தப்பனிடமே “சாரை எங்கியோ பார்த்த மாதிரிதான் இருக்கு …… ஆனா பேருதான் ……?” எனப் பெரிய போடாய் போட்டுவிடுவேன். அதற்கப்புறமும் என்னிடம் நின்று பேச அவர்களுக்கு என்ன பைத்தியமா பிடித்திருக்கிறது? எல்லாம் இந்த “சாதி” என்கிற சனியன் பிடிக்காததால் வந்த ‘வினை’.

 ஆனால் எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் …… பெரிய பெரிய கொள்கைப் பிரகடனங்கள் எல்லாம் செய்யாமல் நடந்த ஒரு அற்புதமான ம(ண)ன விழாவுக்கு நண்பர்களும் நானும் சென்றிருந்தோம். அண்ணன், தம்பி இருவரது மணவிழா வரவேற்பும் ஒரே மேடையில். அண்ணன் விஜியும்   ராணியும் சாதி மறுப்புத் திருமணம். கூடவே தம்பி சுரேசும்   ரேணுவும் சாதி மறுப்புத் திருமணம்.

அண்ணனுக்குப் பணி தன் தந்தை கிருஷ்ணனோடு இணைந்து இரு சக்கர வாகனங்களைப் பழுது பார்ப்பது. “ஒர்க்சாப் விஜி” என்றால் நண்பர்கள் வட்டத்துக்கு நல்ல பரிச்சயமான பெயர்.

கைகளும், உடைகளும் பணிகளின் நிமித்தம் அழுக்காகி இருப்பினும் ……

சாதி …… மதம் …… என்னும் அழுக்குகளை அகற்றியாக வேண்டும் என்கிற அக்கறை அந்த இளைஞனுக்குள் என்றோ முளைவிட்டிருக்கிறது. இதில் அவரோ அவரது குடும்பத்த்¢னரோ எந்தவித திராவிட இயக்கத் தொடர்போ …… பொதுவுடமை இயக்கத் தொடர்போ இல்லாதவர்கள் என்பதுதான் ஆச்சர்யப்படத்தக்க விசயம்.

இந்த இருவரது சாதி மறுப்புத் திருமணங்களையும் எந்தவித முகச்சுழிப்பும் இன்றி பெரும் மகிழ்வோடு முன்னின்று நடத்தியவர்கள் இருதரப்பினதும் பெற்றோர்கள்தான் என்பதுதான் மனதார பாராட்டப்பட வேண்டிய விசயம்.

“இப்ப எல்லாம் யாரு சார் ஜாதி பாக்குறா?” என நீட்டி முழக்கி விட்டு …… 

தனது வீட்டுத் திருமணங்களின் போது மட்டும் சத்தமில்லாமல் சொந்த சாதியில் ……
உட்பிரிவுகள் கூட சிக்கலாகாமல் ஆள் தேடும் அயோக்கியர்கள் மத்தியில் ….. 

நாற்பது ஆண்டுகளாய்  ஒர்க்சாப் உழைப்பால் மட்டுமே உயர்ந்து ……
தனது புதல்வர்கள் மனம் விரும்பிய இடத்தில் மணம் புரியத் துணை நின்ற கிருஷ்ணன்கள் மிக மிக மரியாதைக்குரியவர்கள்.

அவர்கள் பழுது நீக்கிக் கொண்டிருப்பது
வாகனங்களுக்கு மட்டுமில்லை.
சமூகத்திற்கும் சேர்த்துத்தான்.

 

நன்றி : “தமிழக அரசியல்” வார இதழ்.