எழுதுவதெல்லாம் எழுத்தல்ல

முலாயம்சிங் கட்சியோடு சோனியா காங்கிரஸ் 

கூட்டணி வைத்துக் கொள்ளாததற்கு எது காரணம்?

நாட்டு நலன்தான்.

ஆனால் “இன்னமும் காத்திருக்கிறேன். கூட்டணி பற்றிய முடிவை கட்சியின் குறுந்தலைவர்களிடம் விடாமல் தலையாய தலைவராய் இருக்கிற சோனியாவே இறுதி முடிவை எடுக்க வேண்டும்” என்கிறார் முலாயம்சிங்.

அதற்கு எது காரணம்?

நாட்டு நலன்தான்.

“விஜயகாந்த் தேர்தல் புறக்கணிப்பையோ அல்லது தி.மு.க, அ.தி.மு.க.வோடு கூட்டு சேருவதை கைவிட்டு பா.ஜ.க.வோடு கூட்டு சேருவதுதான் நல்லது” என இல.கணேசன் கதறுகிறாரே… எதற்காக?

நாட்டு நலன்தான்.

சாலைப் பணியாளர் போராட்டம்……

விவசாயிகள் போராட்டம்……

நெசவாளிகள் போராட்டம்……

அரசு ஊழியர் போராட்டம்……

எனச் சகலரின் போராட்டத்துக்கும் ஆப்போ ஆப்பு வைத்த புர்ர்ர்ர்ர்சித் தலைவியோடு பல்லை இளித்துக் கொண்டு கூட்டு வைத்திருக்கிறார்களே

லெப்ட்டும்…… ரைட்டும்……

என்ன காரணத்திற்காக?

நாட்டு நலன்தான்.

ஒரு பக்கம் புறக்கணிப்புப் பெனாத்தால்…… 

மறுபக்கம் காங்கிரசுடன் மச்சான் மந்திரியாவதற்கான  பேரம்……

என அல்லும் பகலும் அலைமோதுகிறாரே

அலப்பரைகாந்த்……

எதற்காக?

நாட்டு நலன்தான்.

 

ஊரே காறி உமிழ்ந்து கொண்டிருக்கிற காங்கிரசோடு

உடும்புப்பிடி உறவு வைத்துக் கொண்டிருக்கிறாரே

உடன்பிறப்புகளின் தலைவர்……

அது எதற்காக?

நாட்டு நலன்தான்.

இந்தப் பக்கம் குதிக்கலாமா?

இல்லை அந்தப் பக்கம் குதிக்கலாமா?

இப்பவே குதிக்கலாமா?

அல்லது அப்புறமா குதிக்கலாமா? என தீவிர ஆலோசனை நடத்திக் கொண்டிருக்கிறாரே

தமிழ்க்குடி தாங்கி மருத்துவர் அய்யா ……

அந்த ஆலோசனைகள் எதன் பொருட்டு?

நாட்டு நலன்தான்.

 

அத்துமீறுவதாவது ……?

அடங்க மறுப்பதாவது ……?

அறிவாலயமே சரணம்!

என சத்தம் போடாமல் ஒதுங்க இடம் கிடைத்தால் போதும் இப்போதைக்கு

என ஓரம் கட்டுகிறதா சிறுத்தை?

என்ன காரணம்?

அதுவும் நாட்டு நலன்தான் வேறென்ன?

எல்லாம் சரிதான் …….
ஆனால் இவர்கள் எல்லோரும் சேர்ந்து கரடியாகக் கத்துகிறார்களே ……
நாட்டு நலன் ……
நாட்டு நலன் என்று ……
அது எந்த நாட்டின் நலன் என்பதை தேர்தலுக்கு முந்துன நாள் சொன்னாக் கூட தேவலை.

அந்த நாட்டு மக்களை ராவோட ராவா கூட்டியாந்து ஓட்டுப் போட வெச்சுரலாம்.

 நாங்க கையில, கால்ல கரும்புள்ளி …… செம்புள்ளி குத்திக்கறதுக்குள்ள சீக்கிரமா சொல்லுங்கப்பா ராசா …… உங்குளுக்கு கோடிப் புண்ணியமா போகும்.

 

**********

புத்தகம் படித்தல் என்பது இந்த நாட்டில் மிகப் பெரிய தேசத் துரோகக் குற்றம். இது சட்டப்படி அல்ல. நம்மவர்களே தங்களுக்குள் போட்டுக் கொண்ட எழுதப்படாத சட்டம். படிப்பது என்பதே தேர்வில் வெற்றி பெறுவதற்காகவோ …… பதவி உயர்வுக்காகவோ …… படிப்பது என்றாகி விட்டது.

“கடைசியாக என்ன படம் பார்த்தே?” என்று கேட்டுக் கொள்கிறார்களே ஒழிய ……  ஒரு போதும் “கடைசியா என்ன புத்தகம் படிச்சே?” எனக் கேட்பதேயில்லை பலரும். இதில்  தூக்கம் வருவதற்காகப் ‘படிக்கின்ற’ ஜாதியும் உண்டு. ஆனால் …… அதற்காகவே அச்சாகும் புத்தகங்களும் உண்டு என்பதனையும் மறுப்பதற்கில்லைதான்.

அன்மையில் சீனாவைச் செப்பனிட்ட மாமனிதர் மாவோவின் நூல் ஒன்றினை வாசிக்க நேரிட்டது. “கீழைக்காற்று” பதிப்பகம் வெளியிட்டுள்ள “மா சே துங் மேற்கோள்கள்” என்கிற நூல்தான் அது. வெகு எளிமையாகவும், சகலருக்கும் புரியும் விதத்திலும் மாவோவின் கருத்துக்களை அழகாக எடுத்து வைக்கிறது புத்தகம்.

“மக்களை ஒற்றுமைப்படுத்துவது எப்படி?

நமது சிந்தனை முறையும் வேலை முறையும் எப்படி இருக்க வேண்டும்?

அரசியல் என்பது  இரத்தம் சிந்தாத யுத்தம்.
யுத்தம் என்பது இரத்தம் சிந்தும் அரசியல்”  என எண்ணற்ற கருத்துக்களை நம்முள் விதைத்துக் கொண்டே போகிறது புத்தகம்.

பல பதிப்புகள் வந்து விட்ட இந்த நூலில் என்னைப் பாதித்தது மாவோவினது “படிப்பது” பற்றிய கருத்துக்கள்தான். அதை அவரது வரியிலேயே சொல்வதானால் ……
“சுய திருப்தி என்பது படிப்பின் விரோதி. இந்தச் சுய திருப்தி உணர்வை நம்மிடமிருந்து நீக்கினால் ஒழிய, நாம் ஒன்றையும் உண்மையாகக் கற்க முடியாது. நம்மைப் பொறுத்தவரையில் ‘படிப்பில் தெவிட்டாமை’ என்ற கண்ணோட்டத்தையும், பிறருக்குக் கற்றுக் கொடுப்பதில் சளையாமை’ என்ற கண்ணோட்டத்தையும் நாம் மேற்கொள்ள வேண்டும்.”

ஆனால் இங்கே பலருக்கு படித்ததே போதும் என்கிற தெவிட்டலும் இருக்கிறது. பிறருக்குக் கற்றுக் கொடுப்பதில் சலிப்பும் இருக்கிறது என்பதுதான் எதார்த்தம். அதை விடவும் மக்களுக்கான தலைவர் மாவோவினது ‘புரட்சி’ பற்றிய கருத்துக்களைப் படித்தபோது …… சிந்தனையை விட சிரிப்புதான் மேலிட்டது. அதற்குக் காரணம் நிச்சயம் மாவோ அல்ல. இந்த மகத்தான மண்தான். இங்குதான் எதை எதைத்தான் ‘புரட்சி’ என்பதற்கு விவஸ்தையே கிடையாதே ……

  “புரட்சி தலைவி”
  “புரட்சிப் புயல்”
  “புரட்சித் தளபதி”
  “புரட்சிப் கலைஞர்”
இத்தனையும் போதாதென்று செல்போன் விற்பவன் கூட இங்கே

‘புரட்சிகர சிம் கார்டு” என்றுதான் கூவுகிறான்.

ஆனால் புரட்சி என்பதற்கான அர்த்தமே மாவோவின் மொழியில் வேறானது.

வேறானதோ ……

மாறானதோ …… இருக்கட்டும் ……

அப்படி என்னதான் சொல்லியிருக்கிறார் அவர்? என நீங்கள் எரிச்சல்படும் முன் ……

மாவோவை உங்கள் முன்னர் நிறுத்திவிட்டு நான் எஸ்கேப் ஆவது நல்லது.paams

“புரட்சி என்பது ஒரு மாலை விருந்து அல்ல, அல்லது ஒரு கட்டுரை எழுதுவது அல்ல. ஒரு ஓவியம் தீட்டுவதோ அல்லது தையல் வேலை செய்வதோ அல்ல; அது அவ்வளவு பண்பானதாக இருக்காது; அவ்வளவு ஓய்வானதாகவோ, மிருதுவானதாகவோ இருக்காது. அவ்வளவு அமைதியானதாக, இரக்கமுடையதாக, மரியாதையானதாக இருக்காது. இன்னும் அடக்கமானதாகவோ, பெருந்தன்மை வாய்ந்ததாகவோ இருக்காது. புரட்சி என்பது ஒரு கிளர்ச்சி; ஒரு வர்க்கம் இன்னொரு வர்க்கத்தைத் தூக்கி எறியும் ஒரு பலாத்கார நடவடிக்கை.”

என்ன இந்த பதில் போதுமா?

இன்னும் கொஞ்சம் வேணுமா?.

ஆனால் இதைப் படித்த பிறகும்

எவராவது ……

எவரையாவது ……

“புரட்சிகரப் பீடிகை” போட்டு பிதற்றுவார்களெனில் அதற்கு நிர்வாகம் எந்த விதத்திலும் பொறுப்பாகாது.

**********

பெரும்பாலும் இந்தக் கல்யாணம் ……

காதுகுத்து ……

வளைகாப்பு ……

பூப்பு நன்னீராட்டு போன்றவைகள் பக்கம் போவதே கிடையாது. அதிலும் உறவினர்களுடைய வைபவங்கள் என்றால் அந்தத் தெரு பக்கம் கூட தலைவைத்துப் படுக்க மாட்டேன்.

 காரணம்:

என்னதான் சுற்றிச் சுற்றிப் பேசினாலும் கடைசியில் சாதியில்தான் வந்து நிற்பார்கள் என்பதுதான். 

தப்பித் தவறி எதிரில் தென்பட்டு விட்டாலும் சொந்த சித்தப்பனிடமே “சாரை எங்கியோ பார்த்த மாதிரிதான் இருக்கு …… ஆனா பேருதான் ……?” எனப் பெரிய போடாய் போட்டுவிடுவேன். அதற்கப்புறமும் என்னிடம் நின்று பேச அவர்களுக்கு என்ன பைத்தியமா பிடித்திருக்கிறது? எல்லாம் இந்த “சாதி” என்கிற சனியன் பிடிக்காததால் வந்த ‘வினை’.

 ஆனால் எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் …… பெரிய பெரிய கொள்கைப் பிரகடனங்கள் எல்லாம் செய்யாமல் நடந்த ஒரு அற்புதமான ம(ண)ன விழாவுக்கு நண்பர்களும் நானும் சென்றிருந்தோம். அண்ணன், தம்பி இருவரது மணவிழா வரவேற்பும் ஒரே மேடையில். அண்ணன் விஜியும்   ராணியும் சாதி மறுப்புத் திருமணம். கூடவே தம்பி சுரேசும்   ரேணுவும் சாதி மறுப்புத் திருமணம்.

அண்ணனுக்குப் பணி தன் தந்தை கிருஷ்ணனோடு இணைந்து இரு சக்கர வாகனங்களைப் பழுது பார்ப்பது. “ஒர்க்சாப் விஜி” என்றால் நண்பர்கள் வட்டத்துக்கு நல்ல பரிச்சயமான பெயர்.

கைகளும், உடைகளும் பணிகளின் நிமித்தம் அழுக்காகி இருப்பினும் ……

சாதி …… மதம் …… என்னும் அழுக்குகளை அகற்றியாக வேண்டும் என்கிற அக்கறை அந்த இளைஞனுக்குள் என்றோ முளைவிட்டிருக்கிறது. இதில் அவரோ அவரது குடும்பத்த்¢னரோ எந்தவித திராவிட இயக்கத் தொடர்போ …… பொதுவுடமை இயக்கத் தொடர்போ இல்லாதவர்கள் என்பதுதான் ஆச்சர்யப்படத்தக்க விசயம்.

இந்த இருவரது சாதி மறுப்புத் திருமணங்களையும் எந்தவித முகச்சுழிப்பும் இன்றி பெரும் மகிழ்வோடு முன்னின்று நடத்தியவர்கள் இருதரப்பினதும் பெற்றோர்கள்தான் என்பதுதான் மனதார பாராட்டப்பட வேண்டிய விசயம்.

“இப்ப எல்லாம் யாரு சார் ஜாதி பாக்குறா?” என நீட்டி முழக்கி விட்டு …… 

தனது வீட்டுத் திருமணங்களின் போது மட்டும் சத்தமில்லாமல் சொந்த சாதியில் ……
உட்பிரிவுகள் கூட சிக்கலாகாமல் ஆள் தேடும் அயோக்கியர்கள் மத்தியில் ….. 

நாற்பது ஆண்டுகளாய்  ஒர்க்சாப் உழைப்பால் மட்டுமே உயர்ந்து ……
தனது புதல்வர்கள் மனம் விரும்பிய இடத்தில் மணம் புரியத் துணை நின்ற கிருஷ்ணன்கள் மிக மிக மரியாதைக்குரியவர்கள்.

அவர்கள் பழுது நீக்கிக் கொண்டிருப்பது
வாகனங்களுக்கு மட்டுமில்லை.
சமூகத்திற்கும் சேர்த்துத்தான்.

 

நன்றி : “தமிழக அரசியல்” வார இதழ்.

Advertisements

7 thoughts on “எழுதுவதெல்லாம் எழுத்தல்ல

 1. “…… உங்குளுக்கு கோடிப் புண்ணியமா போகும்.”

  – கோடிங்கறத மட்டும் படிச்சுட்டதவறாக புரிஞ்சிகிட்டு உண்மையை யாராவது உளறிட போறாங்க..

  “படிப்பில் தெவிட்டாமை’ என்ற கண்ணோட்டத்தையும், பிறருக்குக் கற்றுக் கொடுப்பதில் சளையாமை’ என்ற கண்ணோட்டத்தையும் நாம் மேற்கொள்ள வேண்டும்.””

  – இந்த வரிகளை படித்த போது “நவீன சிறைகளி”ல் நீங்கள் எழுதிய கீழ் வரும் வரிகள் தான் என் நினைவுக்கு வந்தது
  “‘உனக்குத் தெரியாததை ஆசிரியரிடம் கேள்… தெரிந்ததை சக மாணவர்களுக்குச் சொல்லிக் கொடு..’ ”

 2. ஆனால் இங்கே பலருக்கு படித்ததே போதும் என்கிற தெவிட்டலும் இருக்கிறது. பிறருக்குக் கற்றுக் கொடுப்பதில் சலிப்பும் இருக்கிறது என்பதுதான் எதார்த்தம்.

  இங்கு கற்று கொடுத்தல் ஒரு வியாபாரமாக இருக்கிறது
  தெளிவா சொல்லி கொடுத்தா நம்மள தூக்கி சாப்பிட்டுறுவானோ
  என்ற பயம் / தாழ்வு மனப்பாண்மை இருக்கு
  கற்று கொடுத்தால் தான் பண்டிதன் ஆகமுடியும் மறந்து போச்சாங்கிறது
  தெரியல
  தறிபோதைக்கு முனைவர் பட்டத்திற்க்கு மட்டும் கொஞ்சம் பேர்
  உதவுறாங்க

 3. //அவர்கள் பழுது நீக்கிக் கொண்டிருப்பது
  வாகனங்களுக்கு மட்டுமில்லை.
  சமூகத்திற்கும் சேர்த்துத்தான்.//

  சாதியை தூக்கி பிடித்து திரியும் அரசியல்வியாதிகளுக்கு தான் முதலில் இவர்களது சிகிச்சை வேண்டும் தலைவா!

 4. sar,am big fan of yours.am so much missed you in kumutham,any how am reading your artical in london nazihai.i want to buy your books but dont know how,please send me a e mail if you can,
  kind regards,
  mukilvannan

 5. பாமரன்,
  படிப்பில் தெவிட்டாமை என்பது கற்பதில் தெவிட்டாமை என்று இருக்க வேண்டும். அதுவும் எதைக் கற்பது எனபதில்.

  ஜெயகாந்தன்,ஜெயமோகன்,சுஜாதா…. வகையாறா புத்தகங்களையும் பல கதைப்புத்தகங்களையும் படிப்பவர்கள் நிறைய இருக்கிறார்கள். இந்த புத்தகங்கள் எல்லாம் பொழுது போவதற்குத்தான் (வாசிப்பனுபவம்).

  சுஜாதாவின் வாசக அன்பர்கள் எப்படி ஒரு பக்க கதை எழுதாலாம் என்று நினைப்பார்களேதவிர கண்டதேவிப் பிரச்சனைக்கு என்ன செய்யலாம் என்று யோசிக்கமாட்டார்கள். மாசே சொன்னது நிச்சயம் கதைப்புத்தகம்படி என்று இருக்காது என்று நம்புகிறேன். ஏன் என்றால் நாட்டு நலனுக்கு கதையும் , நாவலும் உதவாது. அதைத்தாண்டிய ஒரு தேடலும் அது குறித்து கற்கும் ஆர்வமும்தான் உதவும்.

 6. அன்பின் பாமரன்,
  வாசிப்புப் பழக்கத்தைப்பற்றிச் சொல்லியிருக்கிறீர்கள். நல்ல விடயம். நான் கனடாவில் டொரண்டோ நகரில் தற்காலிகமாக வசித்து வரும் ஈழத்தமிழன். இங்கே உள்ள நூலகங்களில் தமிழுக்கென்றும் பிரிவுகள் உள்ளன். அதற்குத் தேவையான புத்தகங்களை நம்மவர்கள் தான் தெரிவு செய்கிறார்கள். ஆனால் பிரச்சனை என்னவென்றால், அவை நாவல்களாக உள்ளன இல்லையெனில் ஆன்மீக நூல்களாக உள்ளன. நீங்கள் சொல்வது போல் மா சே துங் மேற்கோள்கள் போன்ற புத்தகங்களை நூலகத்தில் போட நான் நூல்கள் தெரிவு செய்யும் அதிகாரியாக மறவேண்டும். ஆனால் அந்தப்புத்தகங்களை எதிர்காலத்தில் யார் படிப்பார்களோ???

 7. நாடு என்பது பல வீடுகள் சேர்ந்த ஒரு பிரதேசம்.. நம்ம அரசியல்வாதிகலுக்கு எவ்வளவு ‘வீடுகள்’ இருக்கின்றன என்பது சரியான கணக்கு தெரியாததால்(படிச்சிருந்தா தானே தெரியும்) ஒட்டு மொத்தமாக “நாட்டு நலன்” என்ரு பொத்தாம் பொதுவாக சொல்ல்கிறார்கள் தோழர். அதை நீங்க நிஜமான நாட்டு நலன்னு நினைச்சீங்கன்னா அதுக்கு அவங்க என்ன பன்னுவாக பாவம்
  ——————————
  “புரட்சி என்பது ஒரு கிளர்ச்சி; ஒரு வர்க்கம் இன்னொரு வர்க்கத்தைத் தூக்கி எறியும் ஒரு பலாத்கார நடவடிக்கை.”

  அதிகார அரசியல் வர்க்கம் நம்ம வர்கத்தை பலவந்தமாக தூக்கி எறியிறாங்க இல்லை அதுனால தான் அவங்களுக்கு ‘புரட்சி’ அடைமொழியோ என்னவோ
  —————————–
  விஜிக்கும், சுரேஷுக்கும் என் வாழ்த்துகள்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s