அரசியல் என்பது……

தி.மு.க.வை ஆதரித்தால்

அது இனப்படுகொலைக்கு துணை போகும் காங்கிரசை ஆதரிப்பதாக ஆகி விடும்……

தனியாக தி.மு.க.வை யும் வி.சிறுத்தைகளையும் ஆதரிக்கலாமா?

அல்லது இரண்டையும் சேர்ந்து எதிர்க்கலாமா?

 

வை.கோ.வை ஆதரித்தால் அது இதுவரை எதிராக இருந்த அம்மா தி,மு,க.வை ஆதரிப்பதாக ஆகி விடுமே……

தனியாக வலது “கம்யூனிஸ்ட்”டையும், வை.கோவை மட்டும் ஆதரிக்கலாமா?

அல்லது அந்த அணியையே எதிர்க்கலாமா?

என ஆளாளுக்கு ஒரு பக்கம் முடியைப் பிய்த்துக் கொண்டிருக்க…… மாணவர்கள் மட்டும் தெளிவாக இருக்கிறார்கள். தங்களை வரவேற்பதற்காக எழும்பூர் ரயில் நிலையம் வந்த வைகோ விற்கு “சிறப்பான” வரவேற்பு கொடுத்து அனுப்பியிருக்கிறார்கள். கூடவே “எங்களுக்கு திருமாவளவனும் வேண்டாம்…… ராமதாசும் வேண்டாம்” என ஓங்கிக் குரல் கொடுத்திருக்கிறார்கள். இவருக்கே இந்த “வரவேற்பு” என்றால் தி.மு.க. காங்கிரஸ் அண்ட் கோவுக்கு எத்தகைய “வரவேற்பை” கொடுத்திருப்பார்கள் என்பது உலகுக்கே வெட்ட வெளிச்சமாகத் தெரிந்த விசயம்.

போதாக்குறைக்கு வைகோ வேறு சும்மா இருக்காமல் “நான் அரசியல் என்கிற சட்டையைக் கழட்டி வைத்து விட்டு வந்திருக்கிறேன்” என்கிற முத்தையும் உதிர்த்துவிட்டு திரும்பியிருக்கிறார் வை.கோ.

இதற்கிடையே “கவிதாசரண்” என்கிற இலக்கியப் பத்திரிகையை வாசிக்க நேரிட்டது. அதில் தன் விலை மதிப்பற்ற உயிரைத் தந்து உலகை விழிக்க வைத்த தம்பி முத்துக்குமாரின் கவிதைகளை வாசிக்க நேரிட்டது. கவிதைகள் ஒவ்வொன்றும் பொட்டில் அடித்த மாதிரி கனல் கக்கும் வரிகளாய்…… இதயத்தை தொட்டது……இல்லையில்லை சுட்டது.

அதிலிருந்து ஒரு கவிதை:

ஒரு வீடு இரு திருடர்கள்

அது அவர்களுடைய தொழில்.

கொள்ளையடிப்பதும் கொலை செய்வதும்.

 நாய்களுக்கு சிறுநீரால் ஆன எல்லைக்கோடு போல

அவர்களுக்கு தொழில் தர்மம்.

ஒருவர் தொழிலில் மற்றவர் குறுக்கிட்டால்

குறுக்கிடும் தொழில் தர்மம்.

 

ஒரு வீட்டின் புறவாசல் வழியே ஒருவனும்,

கூரை வழியே ஒருவனும் தொழில் செய்யப் போனார்கள்.

அந்தோ பரிதாபம் குறுக்கிட்டது தொழில் தர்மம்.

யார் தொழில் செய்வது?

யார் பின்வாங்குவது?

முடிவு காண முடியவில்லை திருடர்களால்.

 

முதல் திருடன் சொன்னான்,

‘மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு’.

இரண்டாம் திருடன் சொன்னான்

‘திருடுவது நம் உரிமை

அதைத் தீர்மானிப்பது வீட்டுக்காரனின் கடமை’.

 

ஆகவே, எழுப்பப்பட்டான் அந்த வீட்டுக்காரன்.

அவன் முன் வாக்குப்பெட்டி.

யார் திருட வேண்டுமெனத் தீர்மானிக்கும்படி

வீட்டுக்காரன் வேண்டப்பட்டான்.

 

அவனுக்கு ஜனநாயக முறை பற்றிய

அறிவு புகட்டப்பட்டது.

இங்கு திருடர்களுக்கு வீட்டுக்காரனே எஜமானன்.

 

அவன் சொல்லும் நபரே திருட முடியும்.

கடைசியில் ஜனநாயகம் வென்றது.

 

ஆம்- வீட்டுக்காரனைப் புதைத்தார்கள்.

 

பின்குறிப்பு: கவிதையில் ‘திருடர்கள்’ என்கிற வார்த்தை

‘திருடர்கள்’ என்ற பொருளில் மட்டும்தான் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

அதை ‘அரசியல்வாதிகள்’ என்று யாராவது பொருள் கொண்டால்

அது நம் தவறல்ல.

 

இதுதான் அக்கவிதை.

இதன் பொருள் உணர்ந்த இளைஞர்களுக்கு எந்தத் தேர்தலிலும்

எந்த நிலை எடுப்பது என்பது தெளிவாகத் தெரியும்.

இதை தமிழகத்தின் சகல தலைவர்களும் எப்போது உணரப் போகிறார்களோ?

அவர்களுக்கே வெளிச்சம்.

ஆனால் இந்த நிஜம் மாணவர்களுக்குப் புரிந்திருப்பதால்தான்

எந்த அணியையும் நெருங்க விடாமல் நெருப்பாக நிற்கிறார்கள்.

 

ஆனால்……

அரசியல் என்பது போட்டிருக்கிற சட்டையல்ல.

கட்டியிருக்கிற கோவணம்.

8 thoughts on “அரசியல் என்பது……

  1. கவிதை பொட்டில் அடிக்குது!

    இதில் ஒரே வருத்தம் திருடம் திருடி கொண்டே தான் இருப்பான் என ஓட்டு போடுபவனுக்கும் தெரியும்!

    இங்கே திருடன் என்பது திருடன் தான்!
    தோழர் பாமரன் சொன்னது போலவே!

  2. அண்ணா மாணவ சக்திகள் இன்று ஒரு தெளிவான நிலைப்பாட்டில் இருப்பதை தெரியவில்லை ,அடக்குமுறைக்கு அஞ்சி அவர்கள் சொந்த இனத்திற்கான போராட்டத்தை கைவிட்டு விட்டதாகவே தெரிகிறது

  3. ஆம்- வீட்டுக்காரனைப் புதைத்தார்கள்

    இப்படி வந்திருக்கவேண்டும்
    ஆம்- வீட்டுக்காரனை உயிரோடு புதைத்தார்கள்

  4. மாணவ சக்திகள் இன்று ஒரு தெளிவான நிலைப்பாட்டில் இருப்பதை தெரியவில்லை ,அடக்குமுறைக்கு அஞ்சி அவர்கள் சொந்த இனத்திற்கான போராட்டத்தை கைவிட்டு விட்டதாகவே தெரிகிறது
    karanam bayam

  5. அன்புள்ள பாமரன் அவர்களுக்கு, தமிழக எழுத்தாளர்களில் உங்களுடைய எழுத்துகள் எனக்குப் பிடிக்கும், என் மனைவிக்குப் பிடிக்கும், என் பிள்ளைகளுக்குப் பிடிக்கும், அப்புறம் என் பேரப் பிள்ளைகளுக்கும் பிடிக்கும். அதற்கு அப்புறம் மலேசியாவில் நிறைய பேருக்குப் பிடிக்கும். நானும் என் மனைவியும் மலேசிய எழுத்தாளர்கள். ஏன் உங்களுடைய வலைபதிவில் அக்கறைச் சீமையிலே என்று ஓர் அங்கத்தை உருவாக்கி வெளிநாட்டுத் தமிழர்களின் படைப்பிலக்கியங்களைச் சனனமாகச் சேர்க்கலாமே. இது தனிப்பட்ட கருத்து. முயற்சி செய்து பாருங்களேன். நீங்கள் ஒரு வித்தியாசமான மனிதர். இது மலேசியர்களின் கருத்து. என்னுடைய மின்னஞ்சல்:
    ksmuthukrishnan@gmail.com

    உங்களுடைய மின்னஞ்சலைக் கொடுத்து உதவினால், மலேசிய எழுத்தாளர்கள் பலரின் தொடர்பு கிடைக்கும். இதற்கும் எதையாவது எழுதி நையாண்டித்தனம் செய்ய வேண்டாம். நான் உங்களுக்கு ஒர் அண்ணன் வயதில் இருக்கிறேன். ஆக, பாமரன் அவர்களே உங்கள் எழுத்துகள் கடல் கடந்து வந்து இந்தப் படுகையில் பரிணமிக்கறது. வாழ்த்துகள். மீண்டும் சந்திப்போம்.

  6. ஒருவழியாக தமிழின தலைவர் பாதி அதிகாரத்தை தன மகனுக்கு அளித்து விட்டார். பதவி ஆசையினாலேயே உயிர் பிழைத்திருக்கும் அவரது இந்த செயலால் அவரது உயிருக்கு ஆபத்து நேராது என நம்பலாம். ஆனால் முழு அதிகாரத்தையும் மகனுக்கு தரும் பட்சத்தில் அவது உயிருக்கு ஆபத்து நேரும் என மருத்துவர்கள் அச்சப்பட வாய்ப்புண்டு…அதனால் அப்படி ஒரு அசம்பாவிதம் இப்போதைக்கு நிகழாது. ஆனாலும் தலைவர் அநியாயத்துக்கு தமிழனுக்காக உழைக்கிறார் பாவம்.

  7. ஓட்டு பொடாதீங்கன்னு ஊர் ஊரா பொய் கத்த தான் என்னால முடிஞ்சது.. எவனாவது கேட்டாதானே… வெக்கங்கட்ட சனங்க

Leave a reply to mahi Cancel reply