“படுபயங்கர துணிச்சல்காரர்கள்”…

 தமிழகமே “கொந்தளித்துப்” போயிருந்த வேளையில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தேன்.ஒரு மனிதனது தூக்கம் அவனது முன்னேற்றத்திற்கும், வளர்ச்சிக்கும் தடையாக இருக்கும் என்பதற்கு ஏகப்பட்ட நீதிக்கதைகளும் , பல்லாயிரம் சினிமாப் பாடல்களும் இருக்கின்ற நிலையில்
நான் அப்படி தூங்கித் தொலைத்திருக்கக் கூடாதுதான்.

அதுவும் பகல் தூக்கம்.

“ஒருவேளை வெளிநாடு போய் வந்த களைப்பாக இருக்கும்”……

“அல்லது இரவு முழுக்க எழுத்துப் பணியாக இருந்திருக்கும்”……

என்றெல்லாம் அநாவசியத்துக்கு கற்பனைக் குதிரையை தட்டி விடவேண்டியதில்லை யாரும்.
சும்மாவே நினைத்த மாத்திரத்தில் தூங்கக் கூடியவன் நான். இந்தத் தூக்கம் எந்த அளவிற்கு எனக்குள் ஏற்பட இருந்த பதட்டத்தையும் எதிர்பார்ப்பையும்  தவிர்க்கத் துணை புரிந்திருக்கிறது என்பதை எண்ணும்போது…… எனது மாண்புமிகு தூக்கத்தை என்னால் பாராட்டாமல்
இருக்க முடியவில்லை.

தமிழக முதல்வர் சாரி……
தி.மு.க.தலைவர் மத்திய அரசை கிடுகிடுக்க வைக்க நடத்திய பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு  வேறுவழியின்றி அதிகாலையில் உண்ணாவிரதத்தில் குதித்ததும்……

இது மத்திய அரசை ஒரு குலுக்கு குலுக்கி……

மத்திய அரசு “இறையாண்மைக்” கவலைகளையும் மீறி சிங்கள அரசை ஒரு ஆட்டு ஆட்டி……

அய்ரோப்பிய நாடுகளும், ஐ.நாவும் அலறிய அலறலுக்கே செவி சாய்க்காத ராஜபக்சே கிடுகிடுத்துப் போய்…… திடீர் “போர் நிறுத்தம்” அறிவித்து……

அதை அடுத்து முதல்வரும் தனது உண்ணாவிரதத்தை விலக்கி……

என சகல சமாச்சாரங்களும் நடந்து முடிந்து விட்டது நான் தூங்கி எழுவதற்குள்.

இன்னும் இரண்டு மணிநேரம் தூங்கியிருந்தால் ஈழமே வாங்கித் தந்திருப்பார்களோ என்னவோ?

ஜெ.வின் ஈழப் பிரகடனம்……
காங்கிரஸ் அரசின் “நிதி உதவி”……
கலைஞரின் உண்ணாவிரதம்……
என எல்லாவற்றையும் பார்க்கும்போது……
ஈழத் தமிழர் படுகொலைகளுக்கு எதிராக இனி ராஜபக்சே உண்ணாவிரதம் இருப்பது ஒன்றுதான் பாக்கி போலிருக்கிறது.

 

                                             ***********

எனக்கென்னவோ நாற்பது தொகுதிகளையும் மொத்தமாக வாரிச் சுருட்டி……
நாளை நமதே……நாற்பதும் நமதே…… என்று “வெற்றிக் கொடி” நாட்டப்போவது நான்காவது அணிதான் என்று தோன்றுகிறது.

இதுதான் உண்மையான வெற்றிக் கூட்டணி.
அதாவது:
நா.ம.க + ச.ம.க + பா,ஜ.க + ஜ.க = நாடாளுமன்றம்.

கா……கா……கா……

ஏற்கெனவே திருமங்கலத்தில் போட்டியிட்டு லட்சக்கணக்கான வாக்குகளை “அள்ளிக் குவித்த” சரத்குமார்……
மைக்ராஸ்கோப் வைத்துத் தேடினாலும் கண்டுபிடிக்க முடியாத பி.ஜெ.பி……
தனது தொப்பியைக் கூட கைப்பற்ற முடியாத கார்த்திக்……
கவுன்சிலர் தேர்தலில் கூட கடைசியாக வரும் ஆளுக்கு அடுத்ததாக வரும் சுப்ரமண்யன் சாமி……
இவர்களெல்லாம் ஒன்று சேர்ந்து மடம் கட்டினால் எப்படி உருப்படும்?

தன்னம்பிக்கை தேவைதான். ஆனாலும் இந்த படு ஓவரான தன்னம்பிக்கையை என்னவென்று சொல்வது,?
வேண்டுமானால் ஒன்று செய்யலாம்…….
உலகிலேயே படுபயங்கர துணிச்சல்காரர்கள் என்கிற அடிப்படையில் இவர்களது பெயர்களை கின்னஸ் சாதனைப் பட்டியலுக்கு அனுப்பி வைக்கலாம்.
அவ்வளவுதான்.

                                            ***********

gallery_anitaheli

அபத்தத்தின் சிகரமான NDTV தொடங்கி உள்ளூர் உதவாக்கரை சேனல்கள் வரைக்கும்
ஈழப்போர் நிலவரம் குறித்து ஆளாளுக்கு ஒவ்வொன்றை அவிழ்த்து விட்டுக் கொண்டிருக்கும் நிலையில்……
“தி வீக்” வார இதழ் மட்டும் அனிதா பிரதாப்பின் அற்புதமான அலசல் ஒன்றை வெளியிட்டிருக்கிறது.

என்னவோ இங்கிருந்து உள்ளூர் தமாஸ் போலீஸ் இலங்கையில் போய் இறங்கி……
அப்படியே ஈழத்துக்குள் ஊடுருவி……
வட கிழக்கில் தேசியத் தலைவரை தேடிக்கண்டுபிடித்து……
“யூ ஆர் அண்டர் அரஸ்ட்……
ஐ மீன் நான் உங்களக் கைது செய்கிறேன்” என்று பழைய தமிழ் சினிமா நடிகர் கோபாலகிருஷ்ணன் பாணியில் வசனம் பேசி அழைத்து வரும் ரேஞ்சுக்கு அளந்து கொண்டிருக்கின்றன.

ஆனால் அனிதா பிரதாப்பின் வார்த்தைகளில் எதார்த்தமும் நேர்மையும் துளிர்விடுகிறது.
அதை அவரது வார்த்தைகளிலேயே சொல்வதானால்……
“பிரபாகரனை ஆதரித்ததால் தமிழ் மக்களுக்கு இந்தக் கதி வேண்டியதுதான் என்று சொல்பவர்கள் இதயமற்றவர்கள்.


தந்திரமான மதிப்பீடுகள் இல்லாத நிலையில், இதுதான் முடிவு ஆட்டம் என்றும், இதுதான் பிரபாகரனின் கடைசி நிலை என்றும் சிறீலங்கா அரசு கூறி வருவதையே பத்திரிக்கையாளர்களும் திருப்பிச் சொல்லி வருகிறார்கள்.

கடந்த கால அனுபவத்தை வைத்து மதிப்பிடும்போது, இதை நான் சந்தேகிக்கிறேன்.

பிரபாகரன் இதற்கு முன்பும் போர்களில் தோற்றிருக்கிறார். சொந்தப்படை, காவல்துறை, நீதிமன்றங்கள், வரி விதிப்பு முறை முதலியவற்றைக் கடந்த காலத்தில் ஒரு முறை அல்ல பலமுறை அவர் உருவாக்கி இருக்கிறார். அவை எல்லாம் அழித்து ஒழிக்கப்பட்டிருக்கின்றன.
எல்லாவற்றையும் மீண்டும் அவர் தொடங்கி உருவாக்கி இருக்கிறார்.”

என பொட்டில் அடித்தது மாதிரி சொல்லி இருக்கிறார் அனிதா பிரதாப்.

தமிழை தாய் மொழியாகக் கொள்ளாத அனிதா பிரதாப்புக்கு இருக்கிற
உண்மையும்……  உணர்வும்……
சூடு சொரணையும்……  கூட

தமிழை தாய் மொழியாகக் கொண்ட சில தறுதலைகளுக்கு இல்லை என்பதற்காக
வீழ்ந்துவிடவா போகிறது அந்த வீரஞ்செறிந்த விடுதலைப் போர்?